Archive

Archive for the ‘திரை’ Category

மறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை:

February 24, 2010 1 comment

கலைரசனை, பகிர்வு, அதன் போதை-கள் தொடர்பில்….

01

அறிமுகம்:

யாழ்ப்பாணத்திலிருந்து இலக்கிய ஆர்வலர்களால் கொண்டுவரப்படுகிற கவிதைக்கான காலாண்டிதழ்: “மறுபாதி”. அதன், முதல் இரண்டு இதழ்கள் (ஆடி – புரட்டாதி 2009; ஐப்பசி – மார்கழி 2009) வாசிக்கக் கிடைத்தன.

தொடர்ந்தும், தொழில் இயந்திரங்களை உருவாக்கும் எமது கல்வித் திட்டத்தினுள் கலைகளும் கலை இரசனைகளும் வகிக்கின்ற இடம் எதுவாக இருக்கும்? இந்தக் கேள்விதான் ‘மறுபாதி’யின் மைய்யமாக இருக்கிறது.

முன்பொருமுறை, கலைஞர் கருணாநிதிக்காக எடுக்கப்பட்ட விழாவிலோ என்னவோ இயக்குநர் பாலுமகேந்திரா ‘சினிமா இரசனை’யை பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாய்க் கற்றுக் கொடுப்பது தொடர்பாய்ப் பேசியிருந்தார். அந்த வகையில், சினிமாகவிதைஇலக்கிய ரசனை மட்டுமல்ல ஒரு சமூகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய கூறுகள் அனேகம் உண்டு. எழுத்து, சமூக இயக்கம் என பிரக்ஞையுடன் எழுத வந்த வயதில் டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுன்டன்ற் என்கிறவை ‘தவிர்ந்த’ துறைகளில் ஆர்வமிருந்தது. ஆனால் பிற்காலங்களில் அனுபவங்கள்வழி உணர முடிந்தது சமூக பிரக்ஞையுடைய ஒரு வைத்தியரைப்போலவே ஒரு சமூகவியலாளரும் அரிதான நிகழ்வே என்பது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் careerist-கள் தான் நிரப்பப் பட்டிருக்கிறார்கள். இதில் தம் சார்ந்த கல்வி/தொழில்க் கூடங்களின் சட்டகங்களுக்கு ‘வெளியில்’ சிந்திப்பவர்களே சமூகரீதியான குறைபாடுகளை (அடையாளங்) ”காண” முடிகிறவர்களாய் – அதை கண்டுணர்ந்து மாற்றுக்களை சிந்தித்து – தமது சூழலுள் மாற்றங்களை வேண்டுபவராய்/உருவாக்குபவர்களாய் இருக்க முடியும் (‘காணாத’ ஒன்றை எப்படி மாற்றுவது?!). அத்தகைய சின்னச் சின்னச் சின்ன எனினும் மாற்றங்களை வேண்டுகின்ற இலக்கிய, சமூக ஆர்வமுள்ள ஆசிரியர்களின் இதழாகவே மறுபாதி சஞ்சிகையைப் பார்க்க முடிகிறது.  மாணவர்களது இளம் கற்பனைகளில்த் திறக்கிற பலப் பல கதவுகளை அடித்து பூட்டிவிட்டு ‘அப்படியே’  நேரடியாய் கவிதையை எடுத்துக் கொள்கிற – அதை ‘அனுபவிக்க’ அனுமதிக்காத – கல்வித் திட்டத்துடனான [ அக் கல்வித் திட்டத்துடன் முரண்பாடு ‘காண்கிற’ தனிநபர்களின் ] பொருதுதலை பக்கங்களில் உணர முடிகிறது.

பெரும்பான்மை ஆசிரியர்கள், கற்பிக்கும் இயந்திரங்களாய் இருக்க (பெரும்பான்மை வைத்தியர்கள் மருந்து தரும் இயந்திரங்களாய் இருத்தல் போல…) பெரும்பான்மை மாணவர்கள் கற்கைநெறிகளை கேள்வியற்றுப் பின்தொடருதலே அக் கல்வித் திட்டத்துள் சாத்தியமான ஒன்றாகும். அத் திட்டத்தினுள், அதனை மறுத்து, கேள்விகேட்டுக் கொண்டே, தொடர்ந்தும் அதிலே இயங்குவது என்பதை எப்படி சுவாரஸ்யமாக்குவது?

03

ஆசிரியர்களாய் இருத்தல் – அப்படியொரு இரசனையை பன்முகத்தன்மையை creativityஐப் பழக்குதல் என்பதை ஒரு கவிதையினது பலருடைய மொழிபெயர்ப்புகளை வாசித்தல் போன்ற கட்டுரைகளில் காண முடிகிறது. ஒரு கவிதையின் பல எளிய மொழிபெயர்ப்புகளை அதை மற்றவர் செய்ததுடன் ஒப்பிடல் என்பன பயனுள்ள பயிற்சி வழங்கல். எம் பெரும் இலக்கிய ஆசான்களிடம் செல்வதற்குப் பதிலாக, கவிதை-மொழிபெயர்ப்புப்  பட்டறைகளுக்குள் மாணவர்களைத் தூண்டுவது மொழிசார் புலமையை அவர்கள் வளர்த்துக்கொள்ளவும் உதவக் கூடியது.

02

இந்த இரசனை என்பதே ஒரு பயிற்சி தானே? வீடியோக் கடையில் “றெயின் கோட் [Raincoat] எண்டொரு படம். படம் தொடங்கி முடிய மட்டும் மழை. அதுதான் அப்பிடிப் பேர். ஹீஹீ..” என்கிறவரில் அந்தப் படத்தில் பல பரிமாணங்களை கண்ட நபருக்கு ‘கஸ்ரமாக’ இருக்கலாம். அந்த ‘ஞான’சூன்யத்தின் இரசனை ‘மட்டமாய்’த் தெரியலாம். ஆனால் பிடித்தமான ஒரு படத்தின் மீதான பகடிகள் (அறிவிலி எனப்படுகிற பாமர விமர்சனங்கள்) தன்னளவில் ஒரு சமூகத்தைப் பிரதிபலித்தபடி நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்டு தானிருக்கின்றன. கைதேர்ந்த நம் காலத்து விமர்சகர்கள் அந்தப் படத்தை எப்படி எப்படியெல்லாம் ‘அனுபவித்து’ எழுதுவார்கள் அல்லது அவர்கள் அனுபவித்ததாய் மாய்ந்து மாய்ந்து எழுதியவை படிக்கையில் எனக்கு நிச்சயம் வீடியோக்  கடையில் நின்ற அந்த பெடியனுடைய வரிகள் ஞாபகத்துக்கு வரும். அந்த இயக்குநர் அந்த வரிகளைக் கேட்டு சிரிக்கிறவராய் இருந்தால் அவரது சகிப்புணர்வும் தோழமையுணர்வும் ஒப்பிடவியலாதபடி மாண்பு நிறைந்தது. ‘இவனுக்கென்ன புரியும்’ என்றால் அதில் ஓர் உயர் மட்டத்துக்குரிய மதிப்பிடல் இல்லையா?

எமது கல்வித் திட்டத்தினுள் மட்டுமல்ல, எமது இலக்கிய அறிவுசார் உலகங்களுள் கூட உன்னதப்படுத்தலுக்கு எதிரான பகடிக்கும் எந்த நெகிழ்ச்சித் தன்மை- loosen up coolness- க்கும் இடமிருந்ததில்லை. அவர்கள் பின்தொடரும் கட்டுடைத்தல்கள் கட்டுடைத்துக் கட்டுடைத்து நக்கலடிக்கச் சொன்னது சகல கட்டுமானங்களையும், கூடவே அவர்களது எழுத்துப் பிரதிகளையும் கூடத் தான் என்பதில், அறிவுசீவிகள் எடுத்துக் கொண்டது மற்றவனை மற்றவன் பிரதியை ‘நக்கல் அடிப்பம்’ போன்ற மிக வசதியான ஒன்றைத் தான். இப்படியிருக்கும் ஒரு ‘அறிவுள்ள’ பக்கத்தை விட்டுவிட்டு எந்த இலக்கிய வாசிப்பும் அற்ற வேலைவாய்ப்பிற்கான கல்வியை வழங்குகிற கூடங்களின் இன்னொருவகையான -ஆனா ஒத்த-உளவியல்- ‘அறிவுள்ள’ மனிதர்களது புரிதலின் எல்லைகளை நொந்து கொள்ள முடியுமா?

05

புரியாத எழுத்து:

மறுபாதி இதழில் சிறுசிறு விசனங்கள் விமர்சனங்கள், பணத்தை கொண்டுவராத கலைக்கு மதிப்பளிக்காத ஒரு சமூகத்தின் மீதானதாக, இலக்கிய மட்டங்களின் “புரிகிற – புரியாத எழுத்து” பிரச்சினை தொடர்பானதாக பதியப்பட்டிருக்கின்றன. தமக்குப் ‘புரியாத எழுத்தை’ இலக்கிய சாம்பவான்தனத்துடன் ஒரு மோஸ்தராய் கீழாய்ப் பாக்கிற போக்கு பற்றியதாய் அவை உள்ளன.

இது இன்றைய எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல. எங்கும் (பெரும்பான்மையினது பார்வையில்) ‘பிரயோசனமற்ற’ செயற்பாடுகள் வீண் வேலையாகவே பார்க்கப் படுகின்றன. இந்தப் பிரியோசனம் என்பதன் விரிவாக்கம், அதால் மற்றவருக்கு என்பதைவிட அந்த வேலையைச் செய்வதால் தனிநபர் ஒருவருக்கு எவ்வித பயனும் இல்லாதபோது அது எதற்கு என்பதான ஒரு எண்ணமே. (செய்கிற தனிநபரது பெயரைக் காவிச் செல்லாத (ஆகவே பயனளிக்காத) விக்கிபீடியா உள்ளிட்ட இணைய வேலைகளில் இப்படியான மனங்கள் ஈடுபட முடியாது). இதன் அதி தீவிர வடிவமாய் எனது வகுப்பில் வெள்ளை மாணவன் ஒருவன் சொன்னதை சொல்லலாம்.  “கொலையாளிகளுக்கான சிறைச் சாலைகள் எதற்கு? எமது வரிப் பணம் வீண். கொலை குற்றம் செய்தவர்களை தூக்கில போட்டால் பிரச்சினை முடிகிறது. சிறைக்கான தேவையே இல்ல” என்றான் அவன். நோயுற்ற – தம் இருத்தலில் எவ்வித பயனையும் தராத – முதிய பெற்றோரையும் கூட நீ அவ்வாறு செய்வாயா என்ற கேள்வி என்னிடம் நெடு நாளாய் இருந்தது.

இது தனியே புரிகிற, புரியாத பிரச்சினையா? அல்லது ‘பிற’வுக்கான சகிப்புணர்வும், வாழ்விற்கான கொண்டாட்டங்களும் அற்றுப் போகும் வரண்ட, கொண்டாடுதல் வடிகட்டப்பட்ட ஒரு சமூக நோயா?

நெடுந்தீவில் அம்மம்மா குமரியாய் வாயாடித் திரிந்த பொழிப்புக் கதைகளும் இயற்கையும் ஆன ஒரு வாழ்வின் கூறுகளை (ருசிகளை) நகரங்கள் உறிஞ்சிக் கொண்டுவிட்டன. ரசமற்ற ஒரு வாழ்வில் இரசனைகளும் கற்பனைகளும் சந்தையில் விளைச்சலை விளைவிக்காத புதிய புதிய திட்டங்களும் “தேவையற்றவை” ‘பயனற்றவை” என்பதாகவே கொள்ளப்படும் (கர்ப்பம்தரிக்க முடியாத கருவறைகள் எதற்கு? கருக்கட்டாத விந்தணுக்கள் பயனற்றவை). இது எல்லா மட்டங்களுள்ளும் ஊடுருவியுள்ள சமூக நோயின் கூறு. இதைத் தனியாகப் ‘புரியாத – புரிகிற’ எழுத்துப் பிரச்சினையாகப் பார்ப்பது கூட ஒரு கவிதையை ‘நேரடியாய்ப் பார்ப்பது’ போல படவில்லையா?

04

ரொறன்ரோவில், தமிழர்கள் என்கிற இனக்குழுமத்தின் பண்பாடு மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை பல்கலைக்கழகத்தில் பாடமாக கற்றறிய தமிழியல் மாநாடு ( Toronto Tamil Studies conference ) ஆரம்பிக்கப்பட்டபோது எமது பெற்றோர்களது தலைமுறையிடமிருந்து வந்த மைய்யமான கேள்வி “மாணவர்களுக்க அதன் அவசியம் என்ன? அதைப் படிக்கிறதால என்ன லாபம்? சோறு போடுமா இது?” என்கிற வகையாகவே இருந்தது. அது பாடத்திட்டத்துள் வருவது சாத்தியப்படுமானால், தம் பிள்ளைகளது உயர்கல்வியில் மேலதிக credits + high averages-ஐ வழங்கும் என்பதன் பிறகே பல ‘படித்த’ ‘அறிவுள்ள’ பெற்றோர்கள் அதன் தேவையை அங்கீகரித்தார்கள். இங்கே, எமது அரசியலில்ப் போலவே:

பிரியோசனமானது X பிரியோசனமற்றது

ஒற்றைத் தன்மை X (அதற்கு) எதிர்பன்முகத்தன்மை

மரபோவியம் X நவீன ஓவியம்

poor class X HIGH society

இத்தகைய இரண்டு பக்கங்களில் ஒன்றே தேர்வாக, அல்லது தேர்வின்மையின் தேர்வாக உள்ளது.  தேர்வுகளை நிர்ணயிக்கிற புறச் சூழலாய் வர்க்க, ஜாதிய, இத்தியாதி பின்புலங்களும் உண்டு. இவற்றுள், இவ்விரண்டு தேர்வுகளைத் தவிர எதுவும் எங்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டவையாய் இல்லை.

மாறாய்: பன்முகத்தன்மை என்பது ஒருபோதும் எமக்கு பயிற்சிதரப்பட்டது அல்ல. சகிப்புத்தன்மை அதிகாரங்களிடம் (ஆயுதங்களிடம்) தானேயொழிய அதிகாரமற்ற அறிவிலிகளிடமும் சிறியவர்களிடமும் இல்லை. புரியாத எழுத்தை நக்கலடிக்கிற சாம்பவான்கள் மட்டுமல்ல, இதெனெதிர்ப்பறம் புரியாத எழுத்துக்களை காவிச் செல்கிறவர்கள் அதைப் புரியாதவர்கள் மற்றும் அத்தகைய பாணி (genre) எழுத்துக்களில் ஆர்வமற்றவர்கள் மீது அதிகாரமான தம் superiority complexஐ நிறுவிக் கொண்டு உலவுவதையும் இலக்கியச் சூழல்களில் காண முடியும். இரண்டு எதிர்நிலைகளுக்கும் இரசனை என்பதற்கு அப்பால் அதிகாரத்தை விரும்புகிற போது அவை கலைக்குரிய கொண்டாட்டத் தன்மையை இழக்கின்றன (ள்ளக் குடிச்சிற்று ட்டற்றுப் பாடுற கிழவி ‘சரியாப் பாடேல்ல’ எண்டு சொல்ல வர்றதில்ல தவறு, ‘நான் விரும்பிற போல சரியாப் பாடு பாப்பம்’ எண்டிறதிலதான் உண்டு வம்பு…!). இவ்விரண்டு துருவங்களும் தமக்கான அதிகாரங்களையே வேண்டி நிற்கின்றன. அவ்வாறான ‘ஒரு’ அதிகாரத்தை அன்றி கலையை / அன்பை / மனிதத் தன்மையை /வளர்க்கும் அறிவை, /அதன் பகிர்வை, /பகிர்வின் போதையைக் கற்றுத் தரும் சூழலை எப்படி உருவாக்குவது??

06

பயிற்சிக் கூடம் (சும்மா ஒரு உதாரணம்):

1.  raincoat படம் பாக்கிற போது உனக்கு என்ன தோணுகிறது (நேரடியான கோணம், பதில்)

2. raincoat படம் பாக்கிற போது உனக்கு என்ன நினைவு வருகிறது (தனிப்பட்ட அனுபவத்தைத் தொடுத்தல்)

3. இதை வேறு எப்படி எடுத்திருந்தால் உனக்குப் பிடிக்கும்?

இயந்திரத்தனமான கல்விப் பயிற்சிக்குப் பழக்கப்பட்டுப் போய் விட்ட மாணவர்களை எவ் வழியில் சென்று கலையின் போதையை அனுபவிக்க வைக்கலாம் என்பது எழுத்தை கவிதையை சினிமாவை இரசிக்கிற அதை இன்னொரு உலகத்தோடு பகிர விரும்புகிற ஒரு ஆசிரியரது creativenessஐப் பொறுத்ததும் அல்லவா? அது எம்மிடம் எவ்வளவு இருக்கிறது என பயிற்சித்துப் பார்க்கிற போதுதான் எம்மைச் சுற்றியிருக்கும் சூழல்  எங்களையும் இயந்திரத்தனமான ஆசியர்களது சுழலுள் இழுத்துக் கொண்டு விட்டதா இல்லையா என்பது புரியும்.

எனக்கு சோலைக்கிளி புரியாது. இரண்டாம் வாசிப்பினை ஒரு சோம்பேறி வாசகியாய் செய்யாது விடுவதும் உண்டு; முதல் வாசிப்பிலும் நான் நேரடியாய்த் தான் அவரைப் படிப்பேன்.

என் பிரியமுள்ள உனக்கு எனத் தலைப்புத் தொடங்கினால் அதை எனக்காக எடுத்துக் கொள்வேன்

பிடி, அந்தக் குருவியைப் பிடி எனுகையில் ஒரு குருவியைப் பிடிப்பது பற்றி…

என் நெஞ்சுக்குள் நுழை எனுகையில் என்னை பிரியமுள்ளவாய் நினைக்கிற யாரோவினது நெஞ்சுக்குள் நுழைவது பற்றி…

அவர்களைக் கண்டதும் எனக்குள் இருந்த

குருவிகள் செத்தன – எனுகையில் எனது குருவிகளும் செத்தன? அந்த

இரண்டு கையிலும் தங்கள் முகங்களைத்

தூக்கி வந்தவர் துயரை

அறிந்ததும் எனக்குள் ஆறுகள் வற்றின (வற்றின?)

மலை இடிந்து சரிந்தது (சரிந்தது?)

உடம்பெல்லாம் வெந்து புழுத்தது (புழுத்தது?) – நான்

நார் நாராய்க் கிழிந்தும் போனோன் (போனோன்?)

அவரது பல கவிதைகளை இப்படிப் படித்து, பிறகு அவர் சார்ந்த சூழலின் பின்னணியில் யோசித்து யோசித்து, புரியாத நிறங்களுள் மண்டை குழம்பிப் போகும். குருவிகள் செத்தன ஏன்? தமது முகங்களைத் தாமே தூக்க வேண்டிய கொடுமை நேர்ந்தது எவ்வாறு? எங்கு? புரிய மறுக்கும். ஆனால், அப் பிரதியை அணுஅணுவாய் புரிந்தவன்/ள் விபரிக்கிற போது அதன் போதையை அனுபவிக்க முடிகிறது. மகாவலிபுரத்தினுள் கல்கியின் நாவல்களைப் படிக்காத பெண்ணாய் நுழைகிறது போன்ற ஒரு விசயம் தான் அது. குறையுமில்லை நிறையுமில்லை. எனதொரு இன்பத்தை அவன்/ள் புரியாதபோது அதை புரிய வைக்க முடிகிற தன்மைதான் முக்கியமானதேயொழிய – தடைகளிலிருக்கிற போது – ஒன்றை புரிய முடியாமை அல்ல. கேந்திரக் கணிதத்தில் (Geometry) விண்ணனான அருண் அதன் கோணங்கள் சொல்கிற போது அது கிளர்த்துகிற கலைத்துவ அதிர்வுகளைச் சொல்கிறபோது எனது ஆசிரியர் என்னையும் அதைக் ‘காண’ செய்திருக்கலாம் என்பது தான் தோன்றுகிறது. அது அனுபவம் தொடர்பானது. அனுபவங்கள் ஏற்படுத்துகிற கிளர்ச்சி தொடர்பானது. வரட்டுத்தனமாய் இலக்கங்களை கற்றுத் தருகிற ஆசிரியர்கள் எப்போதும் அனுபவத்தைக் கோட்டை விடுகிறார்கள். அவர்களிடமிருந்துதான் இலக்கியவாதிகளும் வந்தார்கள், தாம் வெறுத்த தகப்பனிடமிருந்து அதே குணங்களைக் கைக் கொண்டு விடுவதைப் போல அதைக் கைக் கொண்டவர்களாய்.

08

சஞ்சிகையில் எனக்குப் பிடித்தமான மற்றொரு உள்ளடக்கம், ஜெய்சங்கர் மற்றும் கருணாகரன் முன்வைத்த கவிதை ஒலித்தல் அரங்கம் பற்றிய கட்டுரைகள்:

நான் வாசித்திராத கோணங்கி, பல பிரதிகளை வாசித்த பிறகு பின் தொடராத பிரேம்.ரமேஷ் போன்றவர்களது இருப்பை (கலை மக்களுக்கானது, புரிதலுக்கானது என்கிற ஒரு போக்கினூடாக) மறுதலிக்காவிட்டாலும் (பின்னவர் எழுப்பிய வாசிப்பின் இன்ப போதைகள் கிளர்ச்சியானவை தான் என்றாலும்), ஒரு மேடையில் நின்று மனிதர்களோடு மனிதர்களாக உரையாடும்… அல்ல! ‘கதைக்கத் தொடங்கும்’ கத்தத் தொடங்கும் குரல்களின் மீது அபரிமிதமான விருப்பு என்னிடம் உண்டு. ஏனெனில் தனித்த அறையினுள் யாராலும் விளங்கப்படாது மனதினுள்ளும் தனித்துப் போய் புத்தியையும் பேதலித்த சொற்களை விடவும் யாரும் பெரிதாய் ஏங்கவிட முடியாது சக மனிதர்களுடான தோழமைக்கும் அன்பினது சிறு தொடுகைக்கும்.

வாசிப்பின்பத்தை வழங்காத அநாதரவான அந்தச் சொற்கள் அரங்கத்திற்காகவே ஏங்குகின்றன. தம்மைப் புரிய வைக்க விரும்பும், தமக்கான நீதி வழங்கக்கூடிய, ஒரு வெளியைக் கனவு காண்கின்றன. அந்த வகையிற் தனித்துப் போயுள்ள, அல்லது ‘அறிவுள்ள’வர்களது பிள்ளையாய்த் தனித்துப் போயுள்ள நவீனக் கவிதையின் அடுத்த கட்டமாய் அரங்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் ஜெய்சங்கரும் கருணாகரனும்.

மனிதர்களுக்குள் (அவர்களது கவிதைகளுக்குள்த்) தனித்திருக்கும் அத்தகைய சொற்கள் தான், போரும் போர் சார்ந்த வாழ்வும் அதன் அதிர்வுகளை அடக்க அடக்க போர்க்கால மனங்களுக்ளுள் கொண்டு வந்து சேர்ந்தவை, இன்னும் இன்னும் சேர்ந்திருப்பவை. ஒரு அனர்த்தத்தின் பின் (சற்றே மிகைப்படுத்தக் கூறின்) counseling (உள – நல – ஆலோசனை ) எவ்வளவு அவசியமோ அது போல தம்மை வெளிப்படுத்திவிடும் ஒரு அரங்கத்துக்கான அவசியத்தை (அடுத்த-கட்டத்-தேவையாய்)  ஈழத்திலுள்ள கவிதைப் பிரதிகள் கொண்டிருக்கின்றன.

ஜெய்சங்கர், கருணாகரன் கூறுவதுபோல கவிதா நிகழ்வு என 80களிற் சமூகமயப் பட்டிருந்த அவற்றினது ஆயுள் குறுகிய காலத்தில் முடிவுற்றது. அவை வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. விலைமதிப்பற்ற அருமருந்தான உயிர்களைப் பறித்ததன்றி இந்தப் போர் எதைத்தான் வளர்த்தெடுத்தது? வாழ்விற்காய் உருவாக்கித் தந்தது? தமது தனித்தன்மையான கூத்து, நாடகம், கவிதா நிகழ்வு என்பதான பரிமாணங்கள் அடங்கி கவிதைகளும் தமக்குள் அடங்கியதாய் மாறின. அவற்றின் பேசுபொருட்கள் ஒரு குறிப்பிட்ட வாசிப்பு/அறிவு வர்க்கத்தினுள்ளே தான் சுற்றித் திரிவனவாயின. மாறாய், பகிர்தல் ஒன்றே மக்களுக்கானது. எதையும் தனக்குள் வைத்திருக்காமல், தனிநபர் சேகரமான புத்தகங்களை பொதுநூலகங்களுக்கு வழங்கிவிட்டு, ஆண்-அதிகாரம் கட்டமைத்த இந்த சமூக அமைப்பில், அதைத் துப்பரவாக்கத் தன் உடலைப் பகிருவதாய்க் கூறும் ஜமீலா போன்ற ஒரு பாலியல் தொழிலாளி போல, கலைகள் தமது உன்னதமான அல்லது பாவனை நிறைந்த கட்டுக்களை மீறி அரங்கத்துக்கு வரட்டும். அவை பேசிய கருத்தியல்களும் விழைபுறும் மாற்றங்களும் பார்வையாளர்கள்முன் வைபடட்டும்.

07

இந்த சஞ்சிகையில், தவிர்க்கக் கூடிய விசயமாய்ப் பட்டது, வழமையாய் பல பேர் குறிப்பிடுகிற ஒன்றுதான்:

— – அவன், வாசகன், மாணவன், இத்தியாதி என்று, கட்டுரைகளில் வருகிற பொதுப்பாலாய் இருப்பது ஆணுக்கான ‘ண்’ விகுதி .

அவள்களை

வாசகிகளை

மாணவிகளை

உள்ளடக்காத இந்த பொதுமொழி ஆசிரியன்களின் மேலாண்மையைத்தான் காட்டுகிறது. வாசகன் அல்லது வாசகி என எழுதுவதில் பக்கங்களை நீட்டிக்கும் அபாயம் இருப்பின் வாசகி என்றே எழுதலாம், ஏனெனில் எது குறைவாக பொது வழக்கில் உபயோகிக்கப்படுகிறதோ அதைப் பொதுவாக உபயோகிப்பதே மாற்றுக்களுக்கான முதல் மாதிரியாய் இருக்கும். இது தவிர: போருக்குப் பின்னான பெண் எழுத்துக்களது பங்களிப்பையும்  இனி வரும் இதழ்களில் எதிர்பார்க்கிறேன்.

இறுதியாய்: கலை இலக்கிய வெளிப்பாடு என்கிறதவிர போரிற்குப் பிந்தைய “இலங்கை”யுள் ஒரு பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற இந்த சஞ்சிகை அதன் காரணமாகவும் மிக முக்கியமானது.  இலக்கிய ஆர்வமுள்ள வாசகர்கள் ரொறன்ரோவில் மறுபாதி இதழ்களை பெற விரும்பின் தொடர்புகொள்ளலாம்:

சேனா – senavaraiyan@gmail.com – 416-559-7362 . தீபா – ktdeepa@gmail.com

—————————————–

மறுபாதி

கவிதைக்கான காலாண்டிதழ்

ஆசிரியர்: சிந்தாந்தன்

இணை ஆசிரியர்: மருதம் கேதீஸ், சி.ரமேஷ்

—————————————–