Archive

Posts Tagged ‘fear of intimacy movie’

FEAR of intimacy – (01)

November 2, 2007 Leave a comment

film01

ஹொங்கொங்கில் அவளது முதலாவது நாள். “ஹொங்கொங் முன்புபோல இல்லை. மிக மோசம் பார். நீ இதற்குள் தொலைந்து போய் விடாதே” இப்படித்தான் விளையாட்டாய் அவளிடம் கூறுகின்றான் இளம் Fai. தொலைவில் கடல் ஆர்ப்பரித்திருக்க அவனது அருகாமையில் புன்னகைக்கிறாள் இளம் Bo.

ஓர் பத்திரிகைத்தொழில்சார் புகைப்படப்பிடிப்பாளனான அவன், பிறகு – தனது வேலைகளுள் – அவளை மறந்து விடுறான். வேலையிலிருந்து அழைப்பு வருகிறபோது அவசர அவசரமாய் கிளம்பிப் போவதும், வந்து அதே இயல்பில் உறவுகொள்வதும், அவளைத் தொழில்-நேர்முகத்திற்கு கொண்டு செல்ல வருவதாகக் கூறி அதை மறந்து விடுவதும், அதை ஈடுசெய்ய உணவகத்திற்குக் கூட்டிப் போகிற வழியில், அவள் அவனைக் ‘குறை சொல்ல’ நடுத் தெருவில் இறக்கி விட்டுப் போய் விடுவதுமென அவன் இருக்கிறான்… வேலைத்தலத்தில் தரப்படுகிற வேலைகளுள் வெறித்தனமாய் ஈடுபடுகிற அவனுக்குத் தன்னைத் தவிர ‘அவளுடைய நியாயங்கள்’ எதுவும் புலப்படுவதில்லை; எந்த முன்தயாரிப்புமின்றி அவளை, அவளை-அவனிடம் வரச் செய்த வாக்குறுதிகளை மறந்து போகிறான்.

Vincent Chui இயக்கிய இத் திரைப்படத்தின் பேசுபொருளாக/ள்களாக நவீன உறவுகளின் சிக்கல்கள், நெருங்குதலின் (intimacy), commitments + அதன் கடமைகள் மீதான பயங்கள் என்பன இருக்கின்றது/ன. பால் பேதங்களுக்கப்பால் – இந்த நவீன தலைமுறை தன்னைச் சுற்றியே இயங்குகிறது; வேலை, கணிணி, walkman அனைத்தும் தன்னுடனே உரையாடுகிறது. ஒரு உறவை ஏற்றுக்கொள்வது என்கிற commitment/responsiblity அச்சம் தருவதாக உள்ளதுடன், வாழ்வை ஒருவருடன் – அவருடைய எதிர்பார்ப்புகளுடன் – பகிர்வது என்பது இதுவரையில் பழகியிராத பெரும் சமரசமாய் மாறுகின்றது.

தொலைவிருந்து அவன்மீதான பிரியங் காரணமாக, இளமையின் துடிப்புடன் வந்த Bo, ‘வழமை’ பிசகாது தொடர்ந்து வந்த நாட்களில் ஒருநாள் அவனுடன் ‘இருந்த’ அந்த வீட்டிலிருந்து –எந்த விளக்கமோ பிரிவு வார்த்தைகளோ அற்று– காணாமற் போய் விடுகிறாள். அவள் தவிர இருந்தவை இருந்த இடத்திலேயே இருக்க அவளைக் காணாது நீண்ட நேரம் தவித்துவிடவில்லை அவன்; சீக்கிரமே வழமைக்குத் திரும்புகிறான்.

நவீன நகரங்களின் தற்கால உறவுகளை மைய்யமாய்ப் பேசுவதாலும், சமகாலத்தில் இந்தப் “பயம்” தனியே குறிப்பிட்ட பாலிற்குரியதல்ல என்பதாலும் – கதைசொல்லல்முறை அல்லது எதிலும் {எனக்கு}’சொல்லும்படியாய் ஏதும் கூற இல்லாத போதும்’ – இந்தப் படம் தொடர்ந்து யோசனையில் வந்துகொண்டிருந்தது. நகரத்தை மையப்படுத்திய, வேலைப்பளு, அழுத்தங்கள் நிறைந்த நகரவாழ் பின்புலத்தில் ‘கண்ணுக்குக் குளிர்ச்சியாய்’ ‘சொல்லும்படியாய்’ எதுதான் இருக்கும்?? இப்படத்திற் வருகிற சில நிமிடப் பாலுறவுக் காட்சிகளும் நகரத்தின் அழுத்தங்களையும் அவசரத்தையுமே பிரதிபலிக்கின்றன.

வருடங்கள் கழிய, Fai, இப்போது “சூடான செய்திகளிற்கான’ புகைப்படப்பிடிப்பாளனாக; கிளப்புகளில் அந்நிய ஆண்களைப் புணர்கிற, ‘ஒழுக்கமற்ற’ ‘பணக்கார’ மனைவிமாரைப் படமெடுத்துப்போட, துடிப்பான “புதிய” “இளம்” பெண் நிருபருடன் ஒரு கிளப்பிற்கு முன் காத்திருக்கையில் -என்றோ ஒருநாள் சொல்லாமற் கொள்ளாமல் காணாமற் போன- Bo-வைக் காண்கிறான். நிறையக் குடித்துவிட்டு, இவனுடைய nephewவுடன் அவள், காரில் ஏறிப் போவதைக் கண்டு ஆத்திரமுற்று, அவனைப் போய் அடித்து, விசாரித்து, அவளை அவர்களிருந்த அந்த கடற்கரை வீட்டிற்கு வர வைக்கிறான்.

அங்கு Anson-னைக் காண வருகிற Bo, இவனைக் கண்டதும் கோபமாய் கடலை நோக்கி நடக்கிறாள்.
***

“யாருக்காகவும் காத்திருக்காத வாழ்வே சிறந்ததும்” இப்படிச் சொன்னாள் நண்பியொருத்தி. அவனை விட்டுப் போய் அவள் ‘தேர்ந்தெடுத்த’ வாழ்வுமுறையில், எந்த வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும் மோசங்களும் இல்லை. ஹொங்கொங்கின் மோசமான உலகம் அவளை விழுங்கியிருக்கலாம். ஆனால் நேசத்தை உணராத அல்லது இருத்தல் கவனிக்கப்படாத சூழலைவிட மோசமல்ல அது. உடல் ஒழுக்கம் அல்லது உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் நோக்கின், அவளது வாழ்வை அவள் ‘அழிக்கிறவளாய்’ இருக்கலாம். ஆனால் தேவையானபோது இல்லாத யாரின் பொருட்டும், தான் ‘வாழாமல்’ அதை அழிக்கவில்லை. வாழ்க்கை ‘வாழப்பட்டு’ வீணாக்கப்படுகிறது. தனக்கான திட்டமற்ற ஒரு திசையில், அத் திட்டமற்ற தன்மையில், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவளிடமே இருக்கிறது. ஆகவே அது சிறந்ததே.

நவீன வாழ்வுமுறைக்கு உணர்ச்சிகள் எதிரானவையாக இருக்கின்றன. உணர்ச்சிகரமான ஒவ்வொரு (மரபான) சொல்லிலும், நிறைய உள் அர்தத்ங்கள் இணைக்கப்பட்டுள்ளன. “காதல்” “குடும்பம்” எனப்படுகிற நிறுவனங்கள், பதிலாய், {அவையவைக்கான} commitments, கடமைகள், நேர்மை என்பனவை வேண்டுகின்றன. அவற்றிற்குத் தகவாய், அன்பையும், தன் ‘இருப்பை’ உணர்தலையும் , ஒன்றாய் செலவிட (உரையாட) ‘நேரத்தை’யும் ஒருவனிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இளம் Bo ஏமாந்து போகிறாள். அவள் முன் இரண்டு தேர்வுகள்: (1) தொடர்ந்தும் (கவனிக்காத அவனிடமே) அவற்றை எதிர்பார்த்து, அவ் எதிர்பார்ப்புகள் நிவர்த்தியற்று, ஏமாற்றப்படுபவளாயே இருப்பது; (2) அவன் மீதான விருப்பத்தை மீறிக் கடந்து போவது.

தம் 30களின் பிறகு, Fai-உம் Bo-உம் சந்திக்கிற போதும், அதே கடற்கரை ஆர்ப்பரிப்புடன் இயங்குகிறது. ‘விளக்கம்’ கேட்கிற அவனிடம், “உன்னிடம் மீண்டும் திரும்பி வந்தாலும், ஒருநாள் நான் இப்படித்தான் ஓடிப் போவேன். உன்னில் நேசம் இருந்தாலுங்கூட. நீ குற்ற உணர்ச்சியடையாதே. நான் உன்னால ‘இப்படி’ ஆகவில்லை. இன்று: இந்த உலகத்திலேயே சந்தோசமா இருக்கிற பெண்களில் ஒருத்தியாய் நான் இல்லைத்தான். ஆனால் அது பறவாயில்லை {ஒன்றும் மோசங் கிடையாது}. நான் இப்போதும் உன்னிடம் -நிறைய எதிர்பார்ப்புகளுடனும் கனவுகளுடனும் – வந்த அந்த இளம் Bo கிடையாது, எனக்கு வயதாகிவிட்டது” என்கிறாள்.

அவளது திடீர் ‘தலைமறைவாலே’யே அவன் பிறகு வந்த உறவுகளில் ஈடுபாடற்றும், பட்டும் படாமலும்(!!), ஒருவருடனும் ஒட்டாதவனாக, ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டே, ‘புதிய’ நிருபரில் ஆர்வமுறுபவனாக, தனியே ‘ஒரு பெண்ணுடன், நேசமாக ‘நெருங்குவதற்கு’ அச்சத்துடன் இருக்கிறான் எனவுமும் படத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், அவளது ‘விளக்கத்திற்குப்’பிறகு பெரும் குற்றஉணர்ச்சியிலிருந்து விலகியவனாய் தனக்குப் பிடித்தமானவளிடம் திரும்புவதாகக் கதை தொடர்ந்தாலும், இளமையில் அவனிடமிருந்த நெருங்குதலுக்கான பயமே அவள் பிரியவும், அவளை அன்றைய தன் ஏராளம் வேலைகளுள் முக்கியப்படுத்தாதிருக்கவும் காரணமாய் இருந்திருக்கிறது. அதுவே நவீன நகரங்களில் உறவுகளின் மைய்யக் கூறும்.

ஆனால் அத்தகைய ‘பயம்’ நிரம்பியவர்களுள், தன்னுள் சேகரமான மரபான சொற்களூடாக சுமந்த ‘இனிய’ எதிர்பார்ப்புகளுடன் வருகிற Bo, தன்னை Rebound(மீள்சுழற்சி?)-இல், ஏமாற்றங்களை மட்டுமே தரும் தமது ஆண்(/பெண்)களிடம் மீள மீள செல்வதை மீறி, தெரியாத அந்நியர்களுடன் வாழ்வை ‘எதிர்பார்ப்புகளற்ற’ {மற்றவர்களின் கண்ணோட்டத்தில்} ‘சிதைதலிற்கு’ ஒப்புக் கொடுப்பது அர்த்தமுடையதாய்த் தெரிகிறது. அந்த வகையில், அவள் போன்ற ஒருத்தியை {”corporate chick”?}, பொம்மை ‘மனைவி’யாய் கொண்டு திரிய விரும்புகிற -இவளிற்கு அவனிடமோ அவனிற்கு இவளிடமோ எந்த எதிர்பார்ப்புமற்ற – ஒரு ‘பணக்கார கணவனின் தகுதி’க்கு பொருந்துகின்ற ‘அழகிய மனைவி’யாய், தன் பாத்திரத்தை செய்துகொண்டே தனதான உலகை நிர்ணயிக்கவும் முடிகிறது.

ஒருவகையில் இந்த மனிதர்கள் எவரது வாழ்வுமுறையிலும் எமது மதிப்பீடுகளை வைக்கத் தோன்றாததே இப் படத்தின் சிறந்த பண்பாகப் படுகின்றது. இதில்: Bo, Fai மட்டுமல்ல, நவீன யுகத்தின் யுவர்கள், யுவதிகள் சிறு பாத்திரங்களாக வந்து போகிறார்கள். Fai-இன் nephew, Anson ஒரு வீடு விற்பனை முகவன், அவனுக்கு வங்கியில் அதிகக் கடன் உள்ளதால் நிறைய வீடுகளை விற்க வேண்டியிருக்கிறது. சமயங்களில், வீடு வாங்க வரும் அவனிலும் இருமடங்கு வயதான பெண்கள் தம் பாலியற் தேவைக்கு இளம் Anson-ஐயும் (அவன் அவர்களையும்!) உபயோகித்துக் கொள்வதும், பாரில் ‘பணக்கார’ப் பெண்கள் இளம் யுவர்களை உபயோகிப்பதும் காட்டப்படுகிறது. இப்படத்தின் பின்னணியான, உயர், நடுத்தரவர்க்க சூழலில், குடும்பம், பெண் ஒழுக்கம்; நிறுவனங்களின் உடைவு யாருடைய மதிப்பீடுகளையும் வேண்டாமல் (பட்டிமன்ற முடிவுகள் பார்க்காமல்!!) நிகழ்ந்தபடியே இருக்கிறது. முகத்திற்குப் பூசும் கிறீம் முதற் கொண்டு பொருட்களிலிருந்து வானொலி நிலையங்கள் வரை “தேர்வுகளால்” (choices) நிறைந்திருக்கிறது அவர்களது உலகம். இறுதியில்: தமக்கு முன் கிடக்கிற எல்லையற்ற தேர்வுகளுள் எதை நோக்கித் தம்மைத் திசை திருப்புவது என்பதறியாத குழப்பமும் (அல்லது அத் தேர்வுகள் சகலத்தையும் அடைய விரும்பும் இடையறா விழைபின்) அயர்ச்சியும், மதுக் கோப்பைகள் கிடக்கிற மேசை மீது போதையில் கவிழ்ந்திருக்கிற தலைகளுடன் கூடவே கவிழ்ந்திருக்கின்றன.

****
Tsui tsong aan chin yen [Fear of Intimacy (2005)], ஹொங்கொங், Cantonese, 97 நிமிடங்கள் / மைய நடிகர்கள்: Bo (Mei Ching Lam). Fai (Tony Leung Ka Fai), Anson (Wing-Hong Cheung)

Advertisements