Home > இசை, இதழியல் > செம்ரெம்பர் வரும்; bully-களும்…

செம்ரெம்பர் வரும்; bully-களும்…

*நேற்று நான் அசுத்தமாக இருந்தேன்
அழகாக இருக்க விரும்பினேன்
இப்போ நான் என்றென்றைக்குமான அசுத்ததத்தில்
என்பது தெரியும்

Yesterday I was dirty
Wanted to be pretty
I know now that Im forever dirt


நாங்கள் தான் யாரு மல்லாதவர்கள்
நாங்கள் யாரோபோல இருக்க விரும்புகிறோம்
நாம் செத்தால் தெரியும் – அவர்களுக்கு
நாங்கள் யார் என்று

We are the nobodies
We wanna be somebodies
When were dead,
Theyll know just who we are


மற்றொரு நாள் சில குழந்தைகள் இறந்தன
நாம் இயந்திரங்களிற்குப் பசி தீர்த்துவிட்டு பிறகு வணங்கிக் கொண்டோம்
ஆரோக்கியமற்ற நம்பிக்கையில் மேலும் கீழும் வாந்தி எடுத்தோம்
அன்றைய தினம் ratings-ஐ பாத்திருக்க வேண்டும் நீங்கள்

Some children died the other day
We fed machines and then we prayed
Puked up and down in morbid faith
You should have seen the ratings that day

–மர்லின் மான்சனின் Nobodies பாடலின் வரிகள்

பள்ளிக்காலங்களில் கட்டுரை எழுதப் பரிந்துரைக்கப்படும் உசாத்துணை பத்திரிகைகளில் இந்த இந்தப் பத்திரிகைகளை வேண்டாம் என வகுப்பில் விபரமாக, சப்வேயில் ஜாலினோ ஜிம்கானா என்று படித்துக் கொண்டு போகும் Metro-வோ, ரொறன்ரோவின் (தற்போதைய) 24hrs வார நாள் தினசரியையோ உபயோகிக்க வேண்டாம் என்று, தடிப்பெழுத்தில், அடிக்கோடிட்டுத் தரப்பட்டிருக்கும். ரொறன்ரோ ஸ்ரார் போன்ற “தரமான” “அடர்த்தியான” மொழியாடலே academic request.
கனடாவைப் பொறுத்தவரையில் (யிலும்!) பெரும்பான்மையானோர் (அதிலும் குறிப்பிட்ட வர்க்கத்தினர்) உயர்பாடசாலைப் படிப்பை இடைவிட்டவர்கள் (drop-outs) தான். எமது “மேன்மையான” யாழ்ப்பாண மனோபாவ “படித்த” தமிழர்களது பரந்த பார்வையிலும், “படித்த” ஏனைய இனத்தவர்கள் போல, படிப்பை இடைவிட்டு, தொழிற்சாலைகளில் அடிக்கும் “ஒரே இடத்தில்” “வாழ்க்கையில் மாற்றமின்றி” தங்கிப் போகிறவர்களாகவே இந்த drop-outs மாணவர்கள் படுவார்கள்; “மொக்குகள்” சமூகத்துடன் பழகத் தெரியாதவர்கள் (”anti-social”) இத்தியாதி என்றே இந்த சமூக பொருளாதார யதார்த்தத்தை “புரிந்து” கிழித்திருக்கிறார்கள், ‘படித்தவர்கள்’!

வெற்றி என்பது ஒரு கல்வித் தகமை (கல்வி அல்லது கற்றல் என்பது பல்கலைக்கழக Degree); ஒரு காப்புறுதிமிக்க வேலை; அதுவரையில் வாழ்க்கை குறித்த (காதல் குறித்த) புலம்பல்கள்; பிறகு அதன் தீரல்கள்.. என்ற இந்த தீராச் சுழற்சியுள் அமையப்பெற்றது இந்த வாழ்க்கை.

இத்தகையதொரு சூழலில், பள்ளிப் பாடத்திட்டத்திற்கேற்ப கட்டுரைகள் எழுதாத, வேலை-வீடு – வேலை என்ற சுழற்சியில் திரிந்துகொண்டிருந்த போது, Metro அல்லது தொடர்மாடிக் கட்டடத்தின் தபால்பெட்டிகளிற்கருகாமையில் குந்தியிருக்கும் 24hrs-இலோ நாட்டு நடப்புகளைத் ஒரு துரித கதியில் தட்டி (நிச்சயமாக சினிமா பக்கம் 5இலோ 6இலோ செலவளிக்கிற நேரத்தின் பெரும் நேரத்தை ஒதுக்கி!) போகிற ஒரு போதில், அந்த “மொழி” பழகிப் போய், “என்ன பிழை இருக்கு அதில” என்றே தோன்றத் தொடங்கியதும், ரொறன்றோ ஸ்ரார் போன்ற பெரும் பத்திரிகை ஒன்றை படிக்க வேண்டிய X-மாணவியாய், அதற்கான (அந்த மொழிக்கான அல்லது “கனதியான” வாசிப்பிற்கான) பொறுமையை இழந்துவிட்டிருந்தது புரிந்தது. அது கூட பறவாயில்லை, ஆனால் படு கேவலமான, “கீழ்”த்தரமான அதாவது இனத்துவேசமும் சிறுபான்மையினருக்கு எதிரானதுமான ஒரு வெள்ளை ஆதிக்கப் பத்திரிகையான ரொறன்ரோ சன் போன்றனவை தயாரிக்கும் Sun Media Corporation -இன் சிறு பிரசுரமாகிய 24hrs- போன்ற ஒரு தினசரியை மட்டுமே நம்பி எனது “புத்திசீவித” மகாஎதிர்காலமே நொறுங்கிப் போனதன் துயரத்தை எண்ணி எண்ணி மறுகாதிருக்க முடியவில்லை. எப்படியோ, ஒரு பொன்னான நாளில் எனது (சரீ! எனது நண்பியின்) மிச்ச சொச்சம் எக்கச் சக்கம் இருந்த கடனட்டையில் ஒரு பெரும் அங்காடியில் ஏதேதோ டீல்-களுடன் ரொறன்ரோ ஸ்டாரிற்கு சந்தா கட்ட நின்ற முகவரிடம் அதற்கு சந்தாக்காரி ஆகி, ?!@#$%^&*()repeat@#$%^&*()repeat@#$%^&*()repeat@#$%^&*(repeat infinteX) ஒரு manners-உம் இல்லாம உந்த பத்திரிகைக்காரர்கள் எழுதித் தள்ளிற அளவை (பேப்பர்க் கட்டுக்கள்) ப் பார்த்து ஏங்கி, அந்த ஏக்கம் அவர்கள் வார இறுதியில போடுற நகைச்சுவைத் துணுக்குகளுக்கே சிரிக்காத அளவுக்குப் போய்விட்டது (இல்லாட்டி மட்டும் அந்த நகைச்சுவைகள் விளங்கித் தள்ளீரும்???).

இந்த செப்ரெம்பர் மாதம் “It feels like New Year’s” என்கிற தலைப்பின் கீழ் அன்பர் (!!) டேவிட் கிறஹாம் வாழ்க்கை section-இல் எழுதியிருக்கிறார், எப்படி அனேகமான அமெரிக்கர்களுக்கு செப்ரெம்பர் புது வருடம் போல தொனிக்கிறதென்றும்.. செம்ரெம்பர் மாதம் மணிரத்தினம் சொல்ற மாதிரியில்ல, மாறா, இன்பம் மிகக் கலந்த மாதமென்றும்… இப்படி இவர் புகழப் புகழ whatever என்றே தோன்றியது. செம்ரெம்பர் புது வருடம் போல தான் என்றாலும் – புதுவருடம் எல்லோருக்கும் மகிழ்ச்சிக் குரியதா என்ன? அது வாழ்க்கையின் ரிதத்திற்கான எம் வருடாந்த திரும்புதல் (..our yearly return to the rhythm of life); பகல்கள் வெயிலாவும், மாலைகள் “கூல்”ஆவும் .. ஆக்கள் தெளிவாக யோசிக்கவும் நேரம் எடுத்துக் கொள்கிற (அங்க ஒண்டுமில்ல) மாதமாம். ஆனா ஒரு “அறிவான, பக்கஞ்சாரலில் ‘சமன்பாடான’ மொழியாடலைக் கடைப்பிடிக்கிற” கண்ணியமான தினசரியொன்றின் பத்திரிக்கையாளர் சும்மா மேலோட்டமா செப்ரெம்பர் மக்களுக்க இன்பமும் தெளிபும் அளிக்கக் கூடிய மாதம் என எழுதுவரா என்ன? ஆகவே, சமூகவெளியாள்களுக்கு (social-outcasts)ம் நோஞ்சான் பிள்ளைகளிற்கும், கோடையில் மறந்திருந்த, பள்ளி bully-களினதும், கோவக்கார ஆசிரியர்களதும் கொடிய அச்சறுத்தல்-ஆக அது இருக்கலாம் என்பதையும் எழுதுகிறார். அவர்களது பள்ளி ஆண்டு அனர்த்தங்களிலிருந்து மனப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றி வைத்திருக்கும் கோடை விடுமுறையின் பிறகு, பழைய பாதுப்பீனங்களை செப்ரெம்பர் திறந்துவிடும். மேலும் மறுபுறத்தில் செப்ரெம்பரில் வளர்ந்தவர்களும் விடுமுறை கடந்து செல்கிற பள்ளிக்கூட மாணவர்களது மனோநிலையிலேயே இருக்கிறார்கள். பள்ளியில் மோசமான ஆசிரியர்களும் கொடுமைக்கார மாணவர்களும் ஏற்படுத்திய இடத்தை வளர்ந்த பிறகு மோசமான முதலாளிகளும் முகாமையாளர்களும் எடுத்துக்கொள்கிறார்கள்! [Supervisors & bosses play the role once occupied by teacher.]
படித்த எல்லா நகைச்சுவைத் துணுக்குளையும் விட நல்லா இருந்தது; உண்மைத் திருவாக்கியம்.

***
மொன்றியலில்: 25 வயது இளைஞன் பெற்றோருடைய வீட்டில், நிலவறையில் வசித்தவன், திடீரென்று தனக்குச் சிறிதும் சம்மந்தமற்ற கல்லூரி ஒன்றுக்குச் சென்று மாணவர்களை நோக்கிச் சுடுகிறான். “9/11″ “பயங்கரவாதிகள்” போன்ற பீதிகள் நிறைந்த சமகால மேற்கின் உளவியலுள், இந்த அனர்த்தத்தை இயக்கிய இளைஞன் ஒரு முஸ்லிம் ஆக இருந்திரக் கூடாது என நினைத்தது தவிர, இந்த “சூடான” செய்திகளில் ஆர்வமற்று இருந்தது. ஆனால், அவன் உயர் பாடசாலையில் bully செய்யப் பட்டானா, சமூகத்துடனான அவனது உறவு எப்படியிருந்தது, அவனுக்கு இருந்த பெண் நண்பிகள் எத்தனை (இருந்தனரா), அப்படியாய், அவன் ஒருத்தியுடன் போன date-இன் கடைசி date என்ன என்பது வரை அலசி விட்டன தொடர்பூடகங்கள்.

சந்தாக்காரியான எனது வீட்டுக்கு மரியாதையாய் போட்டுச் செல்லும் பேப்பரில் அவர்கள் சொன்ன ஏராளம் சித்திரிப்புகளிற்கு அமைய நோக்கச் சொன்னாலும் என்னால் 25-வயதுப் பையனை அந்தச் சித்தரிப்புகளுள் அடக்க முடியவில்லை; அதிலும், அன்பி றோஸீ டீமானோ (”Kimweer Gill is no Victim“) எழுதுமாப்போல (மேசையில் நீதிவான் சுட்டியலால்த் தட்டுவதுபோல கையால் குத்திக் கொள்ளுங்கள்), “நாங்கள் இங்க ஞாபகம் வச்சிருக்க வேண்டியது, இந்த சம்பவத்தில “பாதிக்கப்பட்டவர்” [சுட்ட Kimweer Gill அல்ல.] இனிய இந்த 18 வயதுப் பெண் பிள்ளையும் காயமும் அச்சமும் அடைந்த மனிதர்களும்தான்” என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்படிச் சொல்லுவதூடாக, நிச்சயமாக, இந்த ஊடகங்கள் சொல்லுமாப்போல பலரையும் சுட்டு, ஒரு பிள்ளையைக் கொன்றுவிட்டு, தானும் கொல்லப்பட்ட இளைஞன் குறித்து ஹீரோயிக் கருத்துக்களை முன்வைக்க அல்ல, மிக இலகுவாக நன்மை X தீமை என ஒரு பக்கத்துள் பலவந்தமாய் தள்ளுவது போலவும் “திரும்பத் திரும்ப” நாங்கள் எந்தப் பக்கத்தைத் தேர வேண்டுமென்பதைச் சொல்வது போலவும் இவை தொனிப்பதையே – அந்த தொனியின் ஆதிக்கத்தையே- குறிப்பிடத் தோன்றுகிறது.

மேலும், (பாதித்தவராயும், பாதிப்பை ஏற்படுத்தியவராயும், அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாயும் இல்லாத) மூன்றாம் மனிதராய் வன்முறை குறித்த அதைத் தூண்டும் அக, புறக் காரணிகள் குறித்த புரிதலை நோக்கிய ஒரு தேடலையே (ஒரு சிறிய யோசனையாய் ஏனும்) எம்மால் மேற்கொள்ள முடியாமற் போவது என்பது சரியாகத் தோன்றவில்லை. அது முடியாமற் போவதற்கான இடைமறிப்பை சமூகத்தின் எல்லாத் தளங்களும் (”கீழ்” “மேல்” தரங்களும்) செய்கின்றன.

தாய் ‘நல்ல மகன்” என்றும், அயலவர்கள் “நட்புணர்வற்றர்” “சிரிக்காதவர்” (இது ஒரு தப்பா?!) என்றும், நண்பர்கள் பெண் தோழிகளற்ற தனிமைப்பட்டிருந்த (அந்நியப்பட்டிருந்த) இளைஞர் என்கிற இந்த இளைஞருடைய முகம் குறித்த சித்தரிப்புகளோ, “நட்பு”த்தன்மை குறித்தனவோ என் சார்ந்த சகோதர்களிடமோ உறவுக்காரப் பையன்களிடமோ இல்லாத ஒன்றில்லை. அவர்களிடமும் வன்முறைக்கான சகல குணாம்சங்களும் (வரிசைப்படுத்திவிட முடியுமெனில்) நிறைந்தே இருக்கின்றன. அவர்களும் விளையாட்டுத் துவக்குகளுடனும் இன்ன பிற வன்ஆயுதங்களுடனும் படம் எடுத்தே மகிழ்கிறார்கள். பல வகைகளில், வீரம், சாகசம், ஆண்மைக்குரிய அடையாளங்கள்.

ஒரு சாதாரண இளைஞனுக்குக் கிடைக்கக் கூடியதாய் இருக்கிற “துவக்குகள்” பற்றிய மிக முக்கியமான (தேவையான) விவாதமும் இன்னொரு புறம் நடக்கிறது. . அதே போல, இந்த வன்முறையைத் தூண்டும் அல்லது வன்எண்ணத்தை வளர்க்கும் வீடியோ கேம்-கள் பற்றிய கருத்துகள். முக்கியமாக 1999-இல் கொலம்பைன் உயர்பள்ளிக்கூட சுடுபாட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலவே இந்த மாணவனும் குறிப்பிட்ட வீடியோ கேம்-விளையாட்டை விரும்பியவர்களாய் இருந்தது. ரொறன்ரோவில் சென்ற ஆண்டு டிசம்பர் boxing day “Gang” சுடுபடலில் அப்பாவி 16வயது மாணவி ஒருவர் கொல்லப்பட்டதும், ஹார்பர் முதலாய அரசியல்வாதிகள் gun control laws, gun registry control எனக் கதைத்துக் கொண்டிருந்தாலும் இந்த மாபெரும் அமெரிக்கக் கண்டத்தில் பிறந்ததிலிருந்தே வன்எண்ணம் அதன் சாகசம் குறித்த கனவு வளர்க்கப்பட்ட சாதாரண அமெரிக்க பிள்ளைகளுக்காய் ஆயுதங்களிற்கான சந்தை திறந்தே இருக்கிறது

Natural born killers போன்ற படங்கள் போலவே இந்த இளைஞர் மர்லின் மான்சன் இன் பாடல்களால் ஈர்க்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிட்ட கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. மார்லின் மான்சன்-ஐ இணையத்தில் ஒன்றுமாறி மற்றொன்று என பாடல்வரிகளும் வீடீயோவுமாகப் பார்த்த அனுபவத்தில் – அந்தப் பாடல்களைக் கேட்டு யாரையும் கொலை செய்து விடுவோமோ என்ற பயத்துடன் (வீடியோவில் தடைசெய்யப்பட்ட தடைசெய்யப்படாத இரண்டு version-இல் தடைசெய்யாததைக் கேட்டு அடுத்து என்ன செய்வமோ என பெரும் அச்சம் வெடிக்க) சற்றே வெலவெலத்துப் போனதும் உண்மை. ஆனால் அவரே பேட்டியொன்றில் சொல்வதுபோல, அவரது பாடலைக் கேட்டு மக்கள் கொலை செய்கிறார்கள் தற்கொலை செய்கிறார்கள் என்றால், அது அவருடைய கலைத்துவ வெளிப்பாட்டைப் பாதிக்க விட முடியாது, (”..அப்படிச் செய்ய வெளிக்கிட்டால்,பிறகு உங்களது எண்ணங்களைத் தணிக்கைக்குட்படுத்துவீர்கள்; உங்களது எண்ணங்களிற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடாது. அத்துடன் கலை அதாகவே இருக்க வேண்டும் – //…if you start to do that, then, you start to censor your thoughts. you shouldn’t punish for your thoughts and art should be able to be what it is.) அப்படித் தணிக்கைக்குட்படுத்தினால் ஒரு கலைஞன்/கலைஞை சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்பதும் வெளிப்பாட்டு சுதந்திரமும் அவரது பக்கத்தில் தேவையான அம்சங்களே.
ஆனால் ம.மான்சன் கூறுவதுபோல ஒரு பாடலை/படத்தைப் பார்க்கிற சுதந்திரத்தை உடைய ஒருவர்தான் தனது செயற்பாடுகளுக்கு பொறுப்பாகிறாரா – என்பது முடிவாய்த் தெரியவில்லை. ஆனால், எமது வாழ்விலுள்ள எந்த ஒரு வெற்றிடத்தையோ அல்லது ஏக்கத்தையோதான் எந்த இழிகாம (porno) அல்லது கலைப் படைப்பும் நிரப்புகின்றன எனவே அவ் வெற்றிடத்திற்கான ஏக்கத்திற்கான பொறுப்பு அவ் வெற்றிடத்தை/ஏக்கத்தை அல்லது அது போன்ற ஒன்றை ஏற்படுத்திய சமூக அமைப்பிடமே இருக்கிறது – என்றே (என்னால்) சொல்லத் தோன்றுகிறது.

சில திரைப்படங்கள் சில நாவல்களது கொலைக்கான தூண்டுதல்களாகின்றன எனினும் கொலைக்கான தூண்டுகை மர்லின் மான்சன் இன் பாடல்வரிகள், வன்முறை அரங்க மற்றும் வீடியோ அறிக்கைகளைப் பார்த்து மட்டுமே வருகிற ஒன்றல்ல. அது: வாழ்வின், அது [வாழ்தல்] நிகழ்கிற உலகு விளைவிக்கிற என்னவிதமான வன்மத்தாலும் தூண்டப்படுவது. எமது மனச் சாந்திக்காய் வேணுமானால் , எமினெம்-இன் இரசிகன், அவனது ஒரு பாடலில் போலவே, தனது காதலியை கொன்றுவிடும் செய்தியைப் படிக்கையில் நமக்குத் தெரிந்த தோழிகளிடம் பார்த்துக்கொள் உனது நண்பன் Eminem இரசிகனா என்று எச்சரிக்கை செய்து வைக்கலாம். ஆனால், கொலைக்குத் தூண்டப்படுதல் எளிய காதற் கதைகளூடாய்க் கூட நிகழலாம்.

வீட்டில் “The Bugs Bunny & Tweety Show.” (http://looney.goldenagecartoons.com/tv/bugstweety/)இன் யாபரையும் வென்ற ஒற்றை இரசிகையான எனக்கு, “அதைப் பார்த்து வந்தவர்கள் [பார்க்காத ஏனையவர்களைவிட] வன்எண்ணம் மிக்கவர்கள் என்று புது ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது” என்று படித்தபோது – ஆச்சரியமாய் இருந்தது(?!). உண்மையில் அந்தக் கார்ட்டூனில் பிடித்தமான காட்சியே தன்னைப் பிடிக்க திரியும் எதிரிகளிற்கு தனது ‘ட்ரிக்ஸ்’களால் டிமிக்கி கொடுத்துவிட்டு, அவர்களை வலையில் விழச் செய்து, அவர்கள் பிடிக்க முடியாத இடத்தில் நின்றுகொண்டு, base ball மட்டையாலோ என்னவோ அவர்கள் மண்டையில் திருவாளர் Bugs Bunny மொங்கு மொங்கென்ற மொங்குகிற அற்புதக் காட்சிதான்! எது எப்படி என்ற போதும் – அத்தகைய தொ.காட்சி நிகழ்ச்சிகளால் ஊன்றப்பட்ட வன்முறையை பிரயோகிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காது போனதால், வருங் காலங்களில் எங்கள் ஹார்ப்பர் மகாராசன் இருக்கிறதையும் நாறடிக்கப் போகிற கனடியச் சட்டத்தின் முன் தலைகுனிந்து நிற்க முடிகிறது. ஆனால் இணையத்தில் பேச்சு உரிமைக்கும் கொஞ்சமும் குறைச்சலில்லாத –அதை காட்ட வழி தேடித் திரியும்– உங்களில் யாராவது எழுத்தில் காணும் வன்முறையைச் சுட்டினாலும், துரதிர்ஸ்டவசமாக ரொறன்ரோ மாநகரில் ரத்தகளரியை ஏற்படுத்தாத பெருந்தன்மைக்கு நன்றியை தெரிவிக்க வேண்டுமென்றே சொல்லுவேன்!
~0~


*ஆரம்பித்தில் வருகிற Nobodies பாடல் தொடர்பாக: கோத் (Goth) பாணிப் பாடல்கள் – இப் பெயர்ப்புப் போல ஒழுங்கு சம்பந்தப்பட்டது அல்ல; மதம் போன்ற ஒன்றையே உடைக்கிறளவு ஒழுங்கிற்கு எதிரான மொழி. எப்படிக் கறுப்பர்களது இசை ஆசிய இளைஞர்களை ஆகர்சிக்கிறதோ அதேபோல அனேகமாக anti-christ, Goth culture – எதிர்ப்பெண்ணம் உடைய வெள்ளை மாணவர்களுக்குரியது என்பதே எனது அபிப்பிராயமாக இருக்கிறது. இதில் ஆகர்சமான ஆசியப் பின்னணியை உடையவராய் இருக்கிறார். இணையத்தில் http://vampirefreaks.com/ என்ற தளத்தில் (மனித இரத்தத்தைக் குடிக்கிற வாம்பெயர் போன்றவை எனக்கு ஹலோவீன் காலங்களில் மட்டுமே மனதில் பதிபவை) தனது வெறுப்புகளை எழுதியுமிருக்கிறார்.
இது வெகுவாய்ப் பரிச்சயமற்ற இசை/மொழி என்பதால் அதற்குரிய தகர்க்கும் தன்மைக்கமைய மொழிபெயர்க்கத் தெரியவில்லை; வரிகள் இதனுடன் தொடர்புடையதாய் இருப்பதாய் மாத்திரம் இங்கே உபயோகிக்கப்படுகிறது.

  1. peddai
    April 18, 2009 at 1:09 am

    One Response to “செம்ரெம்பர் வரும்; bully-களும்…”

    1. kavitha Says:
    September 21st, 2006 at 12:25 am

    முக்கியமான பதிவு

  1. No trackbacks yet.

Leave a comment