Archive

Posts Tagged ‘ஈழம்/தொடர்புடையன’

வாழ்வழிதலின் வலி

April 25, 2007 1 comment

{ வசந்தகாலத்தின் ஒரு சிறிய ஒன்றுகூடலில் எங்களுடன் இருந்துகொண்டிருந்த எஸ்போஸ் இற்கு… }

^
நீ என்னவாக இருந்தாய்..?
சத்தியமாக எனக்குத் தெரியாது…
நீ யாராகப் பார்க்கப் பட்டாய்?
உண்மையாகத் தெரியாது
ஆனால்,
பிணங்கள் கிடக்கும் என் நகரத் தெருக்களில்
நான் உணர்ந்தேன்
ஒரு கழுகின் இரையாய்
வலியறிந்து காத்திருக்கும்
உன் வார்த்தைகளை, உன் ஆன்மாவை


உனது பிணச்சாம்பல் படிந்த
இந்த வார்த்தையை அழிக்க முடியுமானால்
நான் நம்புவேன்.. நீ கொல்லப்பட்டதை

[ஏப்ரல் 17.2007] எஸ்போஸ் கொல்லப்பட்டதாக ‘ஊர்ஜிதப்படுத்தப்பட்ட‘ தகவலென நண்பரொருவர் மடல் அனுப்பியிருந்த பிறகும், சில இணையத் தளங்களில் ‘உடனடிச்’செய்திகளில் தேடிவிட்டு, இந்த செய்தி பொய்த்துப் போகலாம் என்ற சிறு சந்தோசத்தை விட்டு விட மனசின்றியே வகுப்புக்குப் போனேன். வகுப்பிலிருந்து வந்து பார்க்கிற போது இத் தகவல் ஒரு “வதந்தி” என்றாக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு பெறுமதியானது?

மரணம் ஒரு நிச்சயமான துரதிர்ஸ்டம்போல தனது சாத்தியத்தை முன்னிறுத்திக்கொண்டிருக்கையில் அதனுடன் ஒவ்வொரு நாளையும் கடக்கிறவர்களது நிலத்திலிருந்து எத்தகைய சிறு மகிழ்ச்சியையும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான்; எனினும் மரண செய்திகளின்போது அதைத் தவிர்க்க முடிவதில்லை. வகுப்பிலிருந்து திரும்பியபோது உண்மைக்கும் அவர் செத்துப் போயிருந்தார். உறங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாகச் சொன்ன செய்தி நிம்மதி தருகிறதென நண்பி சொன்னாள், கனவிலிருந்து ‘ஒழும்பியிருக்க’ வேண்டாம் (ஆனால் அருகில் படுத்திருந்த அவரது 7/8/? வயது மகன் சத்தத்தில் விழித்துவிட்டதாக.. செய்திகள் விபரித்திருந்தன).

கொல்லப்பட்ட பிறகு பெறுமதியாய் எதுவுமே இருப்பதில்லை.

இலங்கையில் வெவ்வேறு நகரங்களிலிருந்து தமது தெருக்களில் சந்தைக்கோ, சிலவேளை யாரையோ தொலைபேசியில் கூப்பிடவோ எது எதற்கோ போனவர்கள் “சுடப்பட்டு” விழும் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. விழுபவர்கள் பட்டியல் கூடிக் கொண்டிருக்கையில் -தம்மைப் பற்றி- எதையும் விட்டுச் செல்லாத எத்தனை பேரைத்தான் தொடருவது? மேலும் அத்தகைய செய்திகளிற்கு ‘வெளியில்’ இருப்பவர்களிற்கு அவர்களுடைய அன்பினது வாசனைகள் தெரியாதபோது எப்படித்தான் அவர்களை உணருதல் முடியும்?

கடந்த காலங்களிலிருந்து இதை எழுதுகின்ற இன்றுவரை, -ஆசியாவிலேயே நீண்ட காலம் நடக்கின்ற உள்நாட்டு யுத்தத்தில்- இலக்கங்களாகவன்றி, வரலாற்றில் பதியப் ‘பெயர்’ அற்றவர்கள் சமூகம் சார்ந்த பிரக்ஞையை செயற்பாட்டை வழங்கிய மனிதர்கள் பலர் காணாமற் போயும் கொடும் வதைகளுக்குள்ளாகியும் கொலையாகிக் கொண்டுமே இருக்கிறார்கள்.

இதுவே யதார்த்தமானதில், எல்லா மரணங்களின் போதும் – தெருக்களில் நினைவுகொண்டபடி போக – எம்மிடம் சில சொற்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, எப்போதும் தயாராக. ஓர் தயார்நிலையில் வெறும் இச் சொற்களை வைத்திருப்பதான தோற்றம் என்னிடம் களைப்பைத் தருகிறது. எஸ்போஸின் மரணம் அந்தப் புலங்களில் தொடர்ந்து வாழ நேருகிற நண்பர்களுடைய பாதுகாப்பு சார்ந்த பயத்தினை, செத்துவிட்ட பிறகே கேட்க நேரும் இருத்தலின் குரலை, காலம்தாழ்த்தி அதை அறிவதன் சங்கடங்களை ஏற்படுத்தி, உயிர்ப் பாதுகாப்புடன் இருக்கும் நிலத்திலிருந்து கேள்வியுறுகையில் ஏதும் செய்ய இயலாத குற்றஉணர்ச்சியிடம் விட்டுச் செல்கிறது.

வவுனியாவில் மாத்திரம் -எஸ்போஸ் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய- இரண்டு கிழமைகளில் 24 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக வவுனியா நீதவான் தெரிவித்திருந்தார் (எண்ணிக்கை தொடர்கிறது). அதில் ஓர் இலக்கமென மாலை நேரத்தில் வேலிகள் மறைக்கும் குறுக்கொழுங்கைகளால் வந்துகொண்டிருந்த எனது அம்மாவின் சின்னம்மாவும் பலியாகியிருந்தார். உற்சாகமாக ஓடித் திரியும் எனது சிறுபிராயத்து அம்மம்மா, அவரது மகளின் மடியிலேயே செத்துப் போயிருந்தார். இறப்பின் பின்னும்: வவுனியா ஆஸ்பத்திரியின் பிணவறையில் இடமில்லாததால் வன்னியிலிருந்து “பாஸ்” கிடைக்கக் காத்திருந்த உறவுகளின் வருகைகளுக்காய் அம்மம்மாவின் அழகிய முகம் கறுத்து சோபை இழந்து நாட்களாகக் காத்திருந்தது, குழந்தைகள் இருந்த வீட்டில்; சித்திரைப் புது வருடத்தை அங்கிருந்தவர்கள் அழுவதற்கு உறவுகளுக்கான காத்திருப்புடன் எதிர்கொண்டார்கள்.

தமது பெற்றவர்களின், துணைகளின் மரணங்களின் அதிர்வை ‘இருப்பவர்களே’ எதிர்கொள்கிறார்கள். எஸ்போஸ் தனது வீட்டில் தனது குழந்தைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரது மனைவி இரண்டாவது தடவையாக தனது துணையை ஆயுதங்களிற்குப் பலிகொடுத்திருக்கிறார். அவரது இல்லாமையின் வெற்றிடம் அவரது துணையிடமும் குழந்தைகளிடமுமே விட்டுச் செல்லப் படுகிறது. எஞ்சியுள்ளவர்களது -மனநிலையை, எதிர்காலத்தை அச்சுறுத்தும்- வாழ்வின் கெடுபிடிகளையும் சிரமங்களையும் நாங்கள் எழுதிச் செல்லுகிற இந்தக் குறிப்புகள் சீக்கிரம் மறந்துவிடும். அவர்களே இந்த வாழ்வை தொடர்ந்தும் -பிரியமானவர்களது இருத்தலின்றி – வாழ்ந்தாக வேண்டியவர்கள்.

அம்மம்மாவின், மகள்களுடைய வீட்டில், துயர்பகிரக் கூடியிருந்தவர்கள், துயரத்தில் பங்கெடுக்கச் செல்ல முடியாத சட்ட/பொருளாதார/அச்சவுணர்வு/இதர காரணங்களுள் குழறிக் கொண்டிருந்தவர்களுள் இருந்தபோது, அம்மம்மா சுடப்பட்ட அதே சம்பவத்தில் இறந்துபோயிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இள வயதான இருவர் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்… அவர்கள் அங்கும் இங்கும் என தம் காலங்களை திருப்பிப் போட்டுக் கொண்டிருந்த அம்மம்மாவின் செத்த வீட்டில், துயர்நிறைந்த முகங்களினிடையே ஏதோ ஒரு பொழுதில் வவுனியாவில்தான் எஸ்போஸ் இருக்கிறார் என்பதும் நினைவில் வந்து போனது. தன்னுடைய வாழ்வில் தன் சூழ்நிலைகளின் காயங்களை கேள்விகளை சுமந்து தரிகிற “எழுதுகிற”வுமான ஒருவராய் அந்தப் பிரதேசங்களில் நடக்கிற எழுத்தாளராய் அவரது மனநிலைகள் தாக்கங்கள் எத்தகையதாய் இருக்கும், அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொள்வார், என்றரீதியா யோசனை போய்க் கொண்டிருந்தது. சில நாட்களில் அவர் ஒரு செய்தியாக வந்து சேருவார் என எதிர்பார்த்திருக்கவேயில்லை; தன்னுள்ளே ஒடுங்கிவிடுவாள் போல இறுகியிருந்த -எங்களை வளர்த்த அன்ரி – ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டாள், அம்மா இப்படிப் போவாள் என்று.. “அநாமதேயமான” நபர்களது மட்டுமல்ல, நேசிக்கிற யாதொருவருடைய மரணங்களிற்காகவும் நாங்கள் காத்திருப்பதை விரும்ப மாட்டோம்.

15 வருடங்ளாய் தாயைக் கண்டிராத, இன்னும் “பேப்பர் கிடைத்திராத” அன்ரியோ -ஒரு மூலையில் – இறுதியாய் பிணமாய் ஏனும் காணமுடியாத தனது அம்மாவின் நினைவில் இறுகிப் போயிருந்தாள். இந்த அநியாய சாவுகளுக்கு காரணமான துவக்குகளிற்குச் சொந்தமானவர்கள் ‘தமிழ் பேசும் சகோதரர்களும்‘ என்பதும் அந்த இறுக்கத்தையே வளர்த்தது.

2002 அமைதிப் பிரகடனத்திற்குப் பிறகு, ஆரம்பித்துவிட்ட இந்த யுத்தத்திற்கு இடையிலும் இப்போதும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கற்றுப் போய் விட்டது. இலங்கையில், சிறுபான்மையினரை, அந்த/இந்த இராணுவங்கள் கொன்றது போக எமது தமிழ்ச் சகோதரர்களும் தமது பங்கிற்குக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்; நடக்கின்ற எல்லாவற்றினின்றும் கொடிதாக சகோதரர்களே சகோதரர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். சகோதரப் படுகொலைகள் இன்ன பிற கொடும் களையெடுப்புகள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாமறிந்ததுதான் என்றாலும், மட்டக்களப்பு – வவுனியா – யாழ்ப்பாணம் – திருகோணமலை என்று இத்துவக்குகளின் குறி நீளும் இலக்குகள் அப்பாவி மக்களாக, -கொலையாளிகள் யாரென்பது தெரியாததால், “ஆயுதங்களுடன் இருக்கிற” சகல தரப்பிடமிருந்தும் – திட்டமிட்ட இனவழிப்பாக இது உருவெடுத்திருக்கிறது. குறி நீட்டப்படுபவர்களிற்குப் பாதுகாப்பு எங்கிருந்தும் இல்லை; ஒருபோது “தோழர்களாய்” இருந்தவர்கள், பிரிந்த பிறகு “மிருகங்கள்” ஆனார்கள் என சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டே இருத்தலே செய்யக்கூடிய விடயமாய்ப் போய்விட்டது. கருணா பிளவின்போது, இரு தரப்பு மோதலில், மட்டக்களப்பில் கணக்கின்றி (”கேப்பார் இன்றி”) ஒவ்வொரு நாளும் விழுந்த -அனேகமாய் 20, 22 அதிலும் குறைந்த வயதிலான பிள்ளைகளின் செய்தியை, ஆன்மா குதறப்பட்ட உடலங்களை, புதர்களுள் எறியப்பட்டு உயிரின் கனவழிந்து கிடந்தவர்களை செய்திகளாய்க் காணுகையில் எழுந்த செய்வதறியா இயலாமையையே மீளவும் மீளவும் உணர முடிகிறது. கடந்த 24+ ஆண்டுகளிற்குப் பிறகும் ஆயுதங்களுடன் இருக்கிறவர்களிடம் மனித உயிர் குறித்த ஒரு சொட்டு கரிசனையும் காணக் கிடைக்கவில்லை; இங்கே:
எப்புறமும் துப்பாக்கிகளுடன் வருகிற எசமானர்களின் முன் பீதியடைந்த தன/மது வாழ்வின் இருப்பைக் குறித்து ‘கடைசியாய்’ எஸ்போஸ் போன்ற யாரும் எழுதிய, எழுதாத எந்தப் பிரதிகள் எம்மை அச்சுறுத்தக் காத்திருக்கின்றனவோ தெரியாது. எதுவுமே செய்ய முடியாதபோது ஆயுதங்களுடன் இருக்கும் எஜமானர்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளுக்காகக் பிரார்த்திப்போம்.

)(
[ஏப்ரல் 19.2007] இத்தகைய மனநிலையுடன் கனடிய – இலங்கைப் பெண்கள் நடவடிக்கை நிலையம் (The Canadian Sri Lankan Women’s Action Network) எனும் ரொறன்ரோவை மையப்படுத்தி இயங்கும் ஒரு சிறு குழு Toronto Women’s Bookstore-இல் ஒழுங்குபடுத்தியிருந்த “Unheard Voices” – a night of Sri Lankan women’s spoken word theatre and music” எனும் நிகழ்வுக்குப் போயிருந்தேன். Toronto Women’s Bookstore: அதனது சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை பால் இனங்களது குரலை எடுத்துச் செல்லும், சிறுபான்மை பால்/இனங்கள் தொடர்பான விவாதங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற ஒன்றாக பெரிதும் அறியப்பட்டது; பல்வேறான சிறுபான்மை உரிமைகளை மதிக்கக் கோரும்/வேண்டும் சிறுகுழுக்களைச் சேர்ந்த ஏராளம் செயற்பாட்டாளர்களின் ஊடாட்டுத் தளமென்றும் சொல்லலாம். குளிர்காலத்தின் புலம்பல்களிற்கு ஒரு சிறிய இடைவேளையைத் தருகிற வசந்த காலத்தின் ஒரு வேலை-நாள் பின்மாலை; அச் சிறிய புத்தகக் கடை கொள்ளக் கூடியளவு பேர் அங்கு கூடியிருந்தார்கள்.

LAL-இன் Rosina Kazi, இலங்கையில் தமிழ்-பறங்கிய அடியை உடைய கவிஞை Leah Lakshmi Piepzna-Samarasinha மற்றும் மாணவியான சத்யா ஆகியோரது பாடல், கவிதைகள் வாசிப்பு, The Canadian Sri Lankan Women’s Action Network குறித்த சிறிய அறிமுகமும் பார்வையாளர் கேள்விகளைத் தொடர்ந்த உரையாடலும் என்பனவை நிகழ்வு உள்ளடக்கியிருந்தது.

ஒரு CSLWAN உறுப்பினர், இலங்கையின் இன்றைய நிலவரங்கள் -தமது நிலத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து அகதியாகிப்போன இலட்சக்கணக்கான மக்கள் – மரணம் குறித்த அச்சத்துடன் வாழ வேண்டியிருத்தல் – கடத்தப்படுதல், காணாமற் போதல்கள் கொலைகள் – குறித்துச் சொன்னவர், இரு தினங்களிற்கு முன் தனது பிள்ளையின் அருகினில் கொல்லப்பட்டிருக்கிற எஸ்போஸைக் கூறி, உயிருடனிருக்கிற அந்தப் பிள்ளையிட மனநிலையின் தாக்கத்தினைக் கூறி, ‘இந்தக் குரல்கள் வெளியில் கேட்பதில்லை’ என்பதை அழுத்திச் சொன்னார். அந்த அறைக்குள்ளிருந்திருக்கக் கூடிய எஸ்போஸ் போன்ற ‘தமிழ் நவீன எழுத்தாளரை’ படித்திருக்கக் கூடிய ஒருவளாய் நெகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்தபோது, பலவித எண்ணங்கள் வந்து போயின. எங்களிடம் எந்த நியாயத்தையும் எழுப்பவியலா ஒரு மரணத்தின் பிறகு, பதட்டத்துடன் ‘எடுத்துப் போடுகிற’ அவர்கள் குறித்த வரிகளும் எங்களுடன் சேர்ந்து படபடத்துக் கொண்டிருக்கின்றன. -சுவர் அடுக்குகளை புத்தகங்கள் நிறைந்திருந்த- அந்த சிறிய அறையினுள்:
எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை

என்கிற எஸ்போஸின் குரலும் வந்திருந்தது. பெரும் கூச்சலுள் எழும்பவே எழும்பாத சிறு குரல் போல..

ஆனால் லியாவின் கவிதையில் வந்தது போல, “இலங்கை” என்கிற தேசத்தின் இருத்தலையே அறிந்திராதவர்களுள் அதன் எந்த வலியும் ஒலிப்பதில்லை. புலம்பெயர்ந்த அதன் மக்கள் இரு தசாப்தங்களுக்கு மேலாக இங்கு வாழ்ந்துகொண்டிருந்தாலும் ‘அந்நியர்கள் போலவே’ ஒவ்வொருமுறையும் செய்திகளில் வருவார்கள். வெளிநாட்டு அரசாங்கங்களின் “போலித்தனத்தை” எள்ளல் செய்த றோஸீனாவின் பாடல் குறிப்பிட்டது போல அகதிகளை வரவேற்றலும் அவர்களுக்கென எதையுமே ஏற்படுத்தாத அவர்களது ஆஜன்டாவாலும் பாதிக்கப்படுவது அகதிகளின் பாடுகளே. தமது நிலத்தின் குரலை எடுத்துச் செல்லும் வழிகளை அறியாதவர்களாய் அவற்றைத் தமக்குள் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். லியாவின் “சுனாமி பாடல்” கவிதை சொல்வதுபோல: 1956, ‘83 எல்லாவற்றினனதும் காயங்களை தாங்கிவந்த மக்கள் 2004 கிறிஸ்மஸ் தினத்திற்குப் பிறகான சுனாமி அழிவின்போதே உலகின் ‘வெளிச்சத்திற்குள்’ வந்தார்கள். இவ் விதிகளிற்கமையவே நகரும் கனடிய ஊடகங்களிலும்: “இலங்கை” அதன் பிரச்சினைகளின் “இருத்தல்” (existence) குறித்த -உலுக்கப்பட வேண்டியதான – தொடர் மெளனம் என சில இலங்கையர் மற்றும் கறுப்பு, சீன வெள்ளை மாணவர்கள் என ‘அறிய விரும்புகிற’ இளம் குழாமினுள் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது இத்தகைய உரையாடல்கள் ஏற்படுத்திற வெளிகளையும், ஒவ்வொரு இனங்களுக்குள்ளாகவும் (எங்களுக்குள்ளாகவும்) இருக்கிற அறியாமையின் வன்முறைகளை அழிக்கின்ற இத்தகைய முயற்சிகள், மேலும் வளர்த்து, பிற தளங்களிற்கு எடுத்துச் செல்லப் பட வேண்டியவை என்பதையும் உணர முடிந்தது.

பார்வையாளர்கள் கேள்வி நேரத்தில், நற்றாஸா என்கிற தமிழ் மாணவி, த. விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட பிறகான, பலதரப்பட்ட தமிழர்கள் மீதான “பயங்கரப்படுத்தலை” அடுத்து, உரையாடல்களிற்குத் தடையாய் -தான் கற்கிற- பல்கலைக்கழகத்தில் அரசியல்ரதீயாய் செயற்படுதீவிரம் உடைய தமிழ் இளைஞர்கள் கூட ‘அரசியலில்’ இருந்து விலகி இருப்பதையே விரும்புவதையும் இத்தகைய ‘தனிமைப்படுத்தல்களை’ எப்படி எதிர்கொள்ளலாம் என்று தெரியவில்லை என்றவர், CSLWAN இன் பின்னணி பற்றி கேட்டார். இதற்குப் பதிலளித்தபோது ‘இரண்டில்’ ஏதாவது ‘ஒரு பக்கத்தை’ பிரதிநித்துவப்படுத்தவேண்டிய எமது அரசியற் சூழலுள் சாதாரண மனுதர்களுடைய குரல்களையே தாம் முன்னிறுத்துவதாகக் கூறி, இவற்றை எல்லாம் உரையாடுகிற தளங்களை ஏற்படுத்தி நாங்கள் இவைக்கெதிராக செயற்பட வேண்டியிருத்தலின் தொடர் தேவையைக் குறிப்பிட்டார்கள்.

இந்த உலகத்தின் மாபெரும் காயங்கள், கோபங்கள் எல்லாமும் சகலவகையான ஒடுக்கமுறைகளாலும், இங்கே எந்த அடையாளமுமற்று, வாழப் பெறுமதியற்ற சிறு பூச்சிகளைப் போல நசுக்கப்படுவதிலும் உருப்பெறுகின்றன. அப்படியாகி வந்த நாங்கள் வந்த நிலங்களில் அதன் சகலவிதமான கேவல்களும் ஒலிப்பதற்கான வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அதன் தேவையை அடையாளங் காண முடிகிறது. எங்கும் ஒலிக்க முடியாமல், தனக்குள்ளாக ஒலிக்க வேண்டியிருத்தலின் வலி என்பது, இங்குள்ள தொழிற்சாலைகளில் ஒன்றில் மிகவும் நலிந்தவராய் கடினமான வேலைசெய்தபடி இருக்கிற -இன்னும் ‘இங்கு’ எடுக்கப் படாமல், களத்தில் ‘இழக்க’ப் பிள்ளைகள் இருக்கிற- அந்த முதிய தகப்பனின் வலி (’அவரை’ முன்வைத்து பிறிதொரு உரையாடலைத் தொடரலாம்). அவரையொத்த தகப்பன்களது வலியையும் விட்டோடி வந்த அவர்களது நிலத்தின் பிள்ளைகளின் பொருட்டும் இந்த ஊடகங்களின் தொடர் மெளனத்துள் -சிறிதாய் ஏனும் – அதை உடைக்கின்ற வேலையை உரையாடல்களை அமைத்துத் தரும் இது போன்ற செயற்பாடுகள் செய்கின்றன.
கனடிய அரசாங்கம் ஒருபுறமும், எமது, சரி அல்லது பிழை சார்புகளது “அரசியல் ஆண்கள்” மறுபுறமும் அறைந்து சாத்திய கதவுகளது கடுமையை மீறி, நசுக்கப்படுகிற அன்றாட மனுசர்களது குரலை வலியை உணர்ந்துகொள்ளவும் -அதை அப்படியே தனிமையில் பிறழ்வுற விடாது – அதைக் கேட்க மறுக்கிறவர்களிடம் எடுத்துச் செல்லுதலுமே இன்று வேண்டி இருக்கிறது. ஊடகங்களை -ஆர்வமுடைய – பல்வகைப்பட்ட சமூகர்களை, இத்தகைய உரையாடல்கள் தூண்டும் அறிவூட்டல் சென்றடையும். பார்வையாளர்களுடன் உரையாடலினிடையில், பிறிதொரு அங்கத்தவர் கூறியதில் “எங்களை இங்கு குழுவாய்க் கொண்டு வந்த அடிப்படைக் காரணமே காதல் தான்;” “no revolution is possible without love” “(மனுசருக்கான) நேசம் இன்றி எந்தப் புரட்சியும் சாத்தியமில்லை” என்கிற வசனம் எழுதுகிறபோது just இன்னொரு அழகான ‘டயலாக்’ போல தொனித்தாலும், அது சொல்லப்பட்டவிதத்தில் – நெகிழ்வூட்டுவதாயிருந்தது. வரலாற்றின் மறவர்குல ஆண்களது அரசியல் கதையாடல்களுள் “பெண்களுக்கென்றொரு இடம்” இருக்குமாயிருந்தால் இத்தகைய வசனங்கள் நிறைந்து, அவர்களுக்கெதிரானதாய் ஒலிக்கட்டும். பேரினவாதத்தின் கொடிய கைகளோடு, எங்களது இரத்தங்களிலும் கலந்துள்ள வன்மத்தையும் கொலைவெறியையும் புரிந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். மேலும் எந்தப் புரிதலையும் உரையாடல்களுக்கான ‘தடைகள்’ ஒருபோதும் ஏற்படுத்தப் போவதில்லை…

sutha-PAGE1-l1.jpg
^^
கொலையுண்டு போவதன் வலியை
ஒருகணம் உனக்குள் நிகழ்த்திப் பார்

வன்மம் பீறிடும் நெடிய கைகளுக்குள் நசுங்கி
ஓலமின்றி ஒடுங்கிக் கொள்கிற மரணத்தை
ஒருமொழி பேச விடு

அது கேட்கக்கூடும் உன்னிடம்:
‘உனது சகோதரனின் குருதியையும்
பருகி ருசிக்க எந்த நாளில் பழகிக் கொண்டாய்”
என்று.

இறுதியாய் ஒன்று சொல்கிறேன்

ஒருவன், ஒருத்தி அல்லது ஒன்று செத்துப் போவதைப் பற்றி
எனக்குக் கவலையில்லை –
அவன்/அவள்/அது எவராலும் கொல்லப்படாத வரை.

^^தவ. சஜிதரன், கவிதை: “வாழ்வழிதலின் வலி” (நன்றி: ஒளியின் மழலைகள், கவிதைத் தொகுப்பு (இலங்கை, யனவரி 2006))
^இத்தகைய சூழலில் வாழுகிற முரண்வெளியினரால் இடப்பட்டிருந்த ( 19/04/2007) கவிதையிலிருந்து..

Advertisements