Archive

Posts Tagged ‘இருத்தல்’

ஆயிரம்….. மலர்களே…. மலருங்கள்ள்ள்

October 4, 2009 2 comments

01.

இருத்தலும் இல்லாதிருத்தலும் என்பதாய் எழுதுகையில் குமார் மூர்த்தியே கண் முன் வருகிறார். அப்போது, கணையாழி-கனடா சிறப்பிதழில்(?) ‘சப்பாத்து’ என்கிற அவரது சிறுகதை வெளிவந்திருந்தது. தன் பென்னம் பெரிய காலுக்கு அளவான சப்பாத்தைத் தேடிப் பிடிக்கிறதுக்கு முன்னம் ‘போதும் போதும் என்றாகி விடும்’ என கருவை அவரதான எள்ளலோட அதில் எழுதியிருப்பார். அதைப் படித்த பிறகான அவரைக் காணும் ஓர் இலக்கியக் கூட்டத்தில், அவர் எங்களுக்கு மிக அருகாமையில் இருக்கவும், எனது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ‘சப்பாத்த பாருங்க, அளவானதா எண்டு’ என்று எமக்குள் அவற்ற சப்பாத்தக் காட்டிக் காட்டிக் கதைக்க, புரிந்துகொண்ட புன்னகையுடன் அருகில் அவர் இருந்து கொண்டிருந்தார்.

சிவிக் சென்ரில் நடந்த அந்த இலக்கிய நிகழ்ச்சி முடிந்த பிறகும், எனது நண்பர்கள்; ராதா, சேனா, கோணேஸ் எனச் சில தேடக நண்பர்களுடன் கதைத்தவாறு நிற்க, “நேரம் போகுது.. டேய் போங்கடா” கூறிக் கொண்டு குமார் மூர்த்தி கடந்து போனார். சில வருடங்களின் பின் அதே சிவிக் சென்ரரில் குமார் மூர்த்தி நினைவு கூரப்பட்டார்; அப்போது, அங்கு சிவமும் இருந்தார்.


KumarMoorthy_july2006b
மீதி: சிவம் அவர்களின் நினைவுக் கூட்டமொன்றிலிருந்து தொடங்கும். அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு மனநிலை பின்னரும் இடையிடையே மனதுள் ஓடிக் கொண்டிருக்கிறது. தேடகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில், இலங்கையிலிருந்து, சிவத்தின் நினைவுப் பேருரையைச் செய்ய வந்திருந்த சிவசேகரம், ‘நிய வாழ்க்கையில் நான் அவரை அறிந்ததில்லை’ எனவே ஆரம்பித்தார் {அதனது பார்வையில், அப்போ தேடகம் ‘புலி’யாகிவிட்டதால், தேனீ அதற்கு நிறைய அர்த்தம் கற்பித்து எழுதியிருந்தது கிளைக்கதை).

நிய வாழ்க்கையில் – உயிரான மனிதராய் – நாங்கள் சிவத்தைக் கண்டிருக்கிறோம். சொல்லப் போனால், நான் முதன் முதலில் சென்றிருந்த இலக்கியக் கூட்டமான கவிதை பற்றிய உரையாடல் ஒன்றிலே சிவமும் இருந்திருந்தார். அவரது கரகரத்த குரல் கூறிக் கொண்டிருந்ததும் கூட மங்கலாய் நினைவில் உண்டு….

எம்மிடையே சிவம் போன்ற மனிதரது இருப்பும் இருப்பின் அரசியலும் அவரது பங்களிப்புகளினால் ஆன சமூக வரலாறும் ஒருபோதும் பேசவோ சொல்லவோ பட்டதில்லை. அவரது சொற்கள் ஏதேனும், பிரபல எழுத்தாளர்களது மேற்கோள்களுக்குள் வராதவரையில் அவர் பெறுமதியான நபராக மதிப்பீடுகளின் உலகில் இருத்தல் முடியாது.

குமார் மூர்த்தியானால் பறவாயில்லை. சில சிறுகதைகளையாவது விட்டுச் சென்றார். சொற்பமான அவை, தமிழ் கூறும் நல்லுகிற்குப் போதுமோ இல்லையோ.. என்னால் அவற்றை மறக்க முடியாது. ‘ஹனிபாவும் எருமைகளும்’ { ஞாபகத்திலிருந்து மேற்கோளிடப்படுகிறது } போன்ற சிறுகதைகள் மன இடுக்குகளுள் இன்னமும் மனிதம் நிறைந்த அவரது ஆன்மாவை அடையாளங் காட்டியவாறு இருக்கின்றன; நியாயமின்மைகள் மீதான மிகச் சிறிய முனகலாய் எனினும் அவை இருக்கின்றன.

அதில்:
எந்த கெடுவும் வைக்கப்படாது வெளியேறச் சொல்லப் படுகிறார் ஹனிபா. அவரது சொத்துக்களென பெரிதாய் எதுவுமில்லை, ஒரு எருமையைத் தவிர.. சிறு நிலத்தில் அவர் வளர்த்த காய்கறிகளும், குடிசையும், என்றென்றைக்குமான வறுமையும் அவர் அந்த இடத்திலிருந்து போவதையிட்டு வருந்துவதற்கு இல்லை. அந்த நிலத்தின் ஒரு மனிதரேனும் அவருக்காக வருந்தினரா தெரியாது. ஆனால்….. அவர் வளர்த்த எருமை அழுகிறது போல….

எனக்குத் தெரியாது அக் கதைகளது இலக்கியப் பெறுமதிகள். கொஞ்சக் காலம் முன் யாரோ ஒரு தமிழக ‘பெரிய’ எழுத்தாளர் {அவர்களது பெயர்களைக் கூறும் ஆர்வங் கூட இப்போது இல்லை} ‘குமார் மூர்த்தியினது கதைகள் பெரிய ‘நல்ல’ கதைகள் என்பதற்கு இல்லை’ என்றதாக யாரோ சொன்னார்கள். அப்போது எனக்குத் தோன்றியது – ஒரு கதை என்பது வெறுமனே சொற்களால் ஆனது மாத்திரமல்ல; எப்போதும் அது, தமிழகத்திலிருந்து ஒரு ‘பெரிய’ எழுத்தாளர் பிரதிபலிக்கிற ஒரு சமூகக் கூட்டம் படித்து, உணர்ந்து, மதிப்பிடுகிற ஒன்றும் அல்ல. எங்களது சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் எங்களது எங்களது அரசியல்கள் சேர்ந்து, கதையை பேரலையாய் எழச் செய்யும் பின்னணிகள் பலப் பல உண்டு. என்னிடம் பேரலையை எழுப்பவல்ல என்னுடையதான அரசியலை அப்படியல்லாத இன்னொரு பின்னணியைச் சேர்ந்த ஒருவரால் புரிந்து கொள்ளுதல் சிரமமே (அப்படியொன்றின் இருப்பினை, அனேகர் புரிந்து கொள்ள முனைவதே இல்லை என்பதே எக் காலங்களதும் அவலமாயும் இருக்கிறது). ‘பெரிய’/ ‘பெரும்பான்மை’ மனிதர்கள் எப்போதும் சின்னச் சின்ன சமூகங்கள்/மனிதர்கள் குறித்த தம் ‘அறியாமை’களை மதிப்பீடுகளாக முன் வைத்தபடியே தான் இருப்பார்கள்; தாம் அறியாத வாழ்வுகளின் அரசியலை தாங்கள் தீர்மானிக்கலாம் என தொடர்ந்தும் நம்ப வைத்துக் கொண்டு வேறு இருக்கிறார்கள்.

நானும் ஒரு சாதாரண கதையாகவே “ஹனிபாவும் எருமைகளும்” படித்துக் கொண்டிருப்பேன்.. பொழுது சாய்ந்து பொழுது புலருவது போன்ற வழமையுடன் ஒரு அலட்சியமாகப் படித்துக் கொண்டிருப்பேன். திடீரென அந்த எருமையின் கண்ணீர் என் கண்களுள் விழுகிற போது திடுக்கிடுவேன். கடவுளே… என்ன ஒரு அநீதி நிகழ்கிறது!

என்னையறியாது, என்னுள் நிகழ்ந்த அதிர்விற்கு என் சமூகம் சார்ந்த அரசியலும் அதுள் நடக்கும் நிகழ்வுகளுடனான தொடர்பும் காரணமெனில் அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவரால் அதை ஒரு இந்திய வாசகரைப் போல வாசித்தலும் சாத்தியமே. இது நடந்த கதைப் பரப்பு இலங்கையுள் இன்னொரு இனத்துக்குள் நடக்கின்ற ஒன்று. எப்போதும் எனது இனத்தின் வலி உயர்ந்ததாகவும், மற்றதின் தராசு என்னுடையதன் முன் தாழ்வாகவும் இருந்தால் தானே, என்னுடையதை உயர்த்துதல் முடியும்?

இங்கே: சமூகங்களுக்கு அல்லது அதனதன் மனிதர்களுக்கு வெளியில் இருந்து கொண்டு மதிப்பிடல் மட்டுமே நடக்கும், புரிதலல்ல. மகாபலிபுரத்தின் சிற்பிகளும் அலையடிக்கும் கடலுமான சூழலில் நடக்கையில் கல்கியின் நூல்கள் படித்திராத என்னால் அவ்விடம் மாபெரும் ‘காவிய உணர்வு’களை பெற்றிர முடியாது (அதிலொன்றும் வருத்தமில்லை; சக மனிதரின் வலியை உணராது போதல் தரக்கூடிய இழப்புணர்வு போன்ற ஒன்றை அது தந்து விட முடியாது). அவ் வுணர்வை உணராத நான் ‘அப்படியொன்றே உனக்கிருக்க முடியாது’ என அதை உணருகிற ஒருவரிடம் கூறுவது என்பது, அதிகாரமன்றில் வேறென்ன!


[….மேலும் வரும்]

Advertisements