Archive

Archive for the ‘மொழி(பெயர்ப்பு)/Translation’ Category

*போர் (மொழிபெயர்ப்பு சிறுகதை)

January 4, 2007 1 comment

~Luigi Pirandello (1867-1936)

ரவு இரயிலில் ரோமை விட்டு வெளிக்கிட்ட பயணிகள் -பிரதான வழி சுல்மொனாவில் போய் இணைகிற அந்த சிறிய பழைய பாணியிலான இரயிலில்- தமது பயணத்தைத் தொடர சிறிய புகையிரத நிலையமான ஃபாபிறிக்கானோவில் காலைவரை நிற்கவேண்டி இருந்தது.
விடியலில், அன்றைய இரவை ஐந்து பயணிகள் ஏலவே கழித்துவிட்டிருந்த அந்த நெருக்கடிமிகு, புகைச்சலான இரண்டாம் வகுப்புப் பெட்டியினுள், ஆழ்ந்த துக்கத்தில் -சற்றேறக்குறைய ஓர் உருவமற்ற சுருள் போன்ற- பருமனான பெண் நுழைந்தாள். அவளிற்குப் பின்னால், புகைத்தபடியும் துக்கத்திலும், மெல்லிய பலகீனமான சிறிய மனிதர்- அவளது கணவர்- பின்தொடர்ந்தார்; அவரது முகம் கடும்வெளுப்பாயும், அவரது சிறிய பிரகாசமான கண்கள் கூச்சமாயும் அந்தரமாயும் காணப்பட்டன.
ஒருபடியாய் இருக்கையில் அமர்ந்து கொண்டவர், பண்புடன், அவரது மனைவிக்கு உதவி இடம் ஒதுக்கிக் கொடுத்த பயணிகளிற்கு நன்றி கூறினார். பின் தன் குளிராடையின் கொலரைக் கீழே இழுக்க முயன்றுகொண்டிருந்த பெண்ணிடம் திரும்பி பண்பாய் வினாவினார்:
“எல்லாம் சரியாயிற்றா, அம்மா?”
பதிலுறுப்பதற்குப் பதில், மனைவி, கொலரை கண்களுக்கு மேலே உயர்த்திவிட்டாள், முகத்தை மறைப்பது போல.
துயரமான புன்னகையோடு கணவர் முணுமுணுத்தார் “மோசமான உலகம்.”
அப்படியே அவர் ‘அந்த பாவப்பெட்ட பெண் பரிதாபப்படவேண்டியவள், அவளது ஒரே மகனை அவளிடமிருந்து யுத்தம் எடுத்துப் போகிறது, தாங்கள் இருவரும் தமது முழு வாழ்வையும அர்ப்பணித்த ஓர் இருபது வயது மகன், றோமிற்கு அவன் மாணவனாய்ப் போனபோது சுல்மோனாவிலிருக்கிற அவர்களது வீட்டைக் கூட விட்டுவிட்டு ரோமிற்கு அவனுடன் செல்லுவதற்குக் காரணமானவன்… பிறகு குறைந்தது ஓர் ஆறுமாதத்திற்காவது அவனைப் போர்முனைக்கு அனுப்பக் கூடாதென்ற உறுதியுடன் அவனை யுத்தத்தில் தொண்டனாய் இணைய அனுமதித்ததும், இப்போ, திடீரென மூன்று நாள் அவகாசத்தில் அவன் போகப் போகிறான் என்றும், அவன் போவதை சென்று பார்க்குமாறு தந்தி வந்திருப்பதையும்… ‘ துணையாய் வருகிற சக பயணிகளிடம் விளக்க வேண்டியதைத் தனது கடமையாய் உணர்ந்தார்.
முறுக்கிக் கொண்டும் நெளிந்து கொண்டும் சில தடவைகளில் காட்டு மிருகம் போல சீறிக்கொண்டும் பெரிய கோட்டினுள் இருந்தவளுக்கு -அனேகமாக அவளையொத்த நிலமையிலேயே இருக்கிற அந்த மனிதர்களிடம்- அவரது எந்த விளக்கங்களும் சிறிதளவு அனுதாபத்தைக் கூட தூண்டியிருக்காது என்பது நிச்சயமாக இருந்தது. அவர்களில் நுணுக்கமான கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார்:
“உங்கட மகன் களத்துக்கு இப்பதான் போறான் எண்டிறதுக்கு நீங்கள் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லோணும். என்ர மகன் போர் தொடங்கின முதல் நாளே அனுப்பப் பட்டிட்டான். ஏற்கனவே இரண்டு தடவை காயப்பட்டு வந்து, இப்ப திரும்பவும் களத்துக்கு அனுப்பப் பட்டிட்டான்.”
“எனக்கு மட்டும் என்னவாம்? என்ர இரண்டு மகன்களும் மூன்று மருமகன்களும் களத்தில நிக்கிறார்கள்” என்றார் இன்னொருவர்.
“இருக்கலாம், ஆனா எங்கட விசயத்தில இது எங்கட ஒரே மகன்” வாதாடினார் அந்தக் கணவர்.
“அது என்ன வித்தியாசத்த(த்) தந்திரும்? அளவுக்கு மீறிய கவனிப்புகளால நீங்க உங்கட ஒரே பிள்ளையை கெடுக்கலாம். ஆனா உங்களுக்கு வேற பிள்ளையள் இருந்தா மற்ற எல்லாப் பிள்ளையளையும் விட அதிகமா ஒருவன நேசிச்சிர முடியாது. பெத்தவர்களிட அன்பு எண்டிறது பாணை மாதிரி துண்டு துண்டா வெட்டி சமனான பங்காப் பிள்ளையளுக்குப் பிரிச்சுத் தரக் கூடிய ஒண்டில்ல. ஒரு தகப்பன் தன்ர முழு அன்பையும் தன்ர ஒவ்வொரு பிள்ளைக்கும் -அது ஒண்டோ பத்தோ – பாரபட்சமில்லாமத்தான் குடுப்பான். இப்ப நான் என்ர இரண்டு பிள்ளைகளுக்காகவும் வருந்திறனெண்டா நான் ஒவ்வொருதருக்காகவும் அரைஅரைவாசியா இல்ல வருந்திறது, மாறா இரண்டு மடங்காத் தான்..”
“உண்மைதான், உண்மைதான்” வெட்கியவராய்ப் பெருமூச்செறிந்தார் கணவர், “இப்பிடி ஒருக்காலும் உங்களுக்கு நடந்திரக் கூடாது – ஆனா இப்படிப் பார்ப்பமே,- இப்ப களத்தில ரெண்டு மகன்களை உடைய ஒரு தகப்பன், அவர்களில ஒருவன இழந்தா, அவரத் தேற்றுறதுக்கு இன்னும் ஒரு பிள்ளை மிஞ்சி இருப்பான்… ஆனா…”
கோபமேறியவராய் பதிலுறுத்தார் மற்றவர் “ஓம். தேற்றுறதுக்கு ஒரு மகன் மிஞ்சி இருப்பான். அதே நேரம் மிஞ்சியிருக்கிற அந்த மகனுக்காக அவர் உயிர் வாழ்ந்தே ஆகோணும். ஒரே மகனையுடைய தகப்பனின்ற விசயத்தில, மகன் செத்த பிறகு தன்ர வேதனைக்கு ஒரு முடிவு கட்டி, அந்தத் தகப்பனும் சாகலாம். இதில எந்த நிலமை மோசம்? என்னுடைய நிலமை உங்களைவிட எவ்வளவு மோசமெண்டு தெரியேல்லையா?”
“அர்த்தமில்லாத கதை,” இடையிட்டார் இன்னொரு பயணி. வெளிறிய சாம்பலில் இரத்தச் சிவப்பேறிய கண்களையுடைய, பருமனான, சிவந்த ஒருவர். அவர் மூச்சிரைந்து கொண்டிருந்தார். வீங்கிய அவரது கண்கள், -அவரது பலவீனமான உடல் கொண்டிருக்கக் கடினமான – கட்டுப்படுத்தவியலா உள்வீரியத்தின் வன்முறையை வெளித்தள்ளப்போவன போல தென்பட்டன.
“அர்த்தமில்லாத கதை” இல்லாத இரண்டு முன்பற்களையும் மறைப்பவரைப் போல வாயைக் கையால் மூடியபடி, அவர் மீண்டும் சொன்னார். . “அர்த்தமில்லாத கதை. எங்கட சொந்த நலனிற்காகவா எங்கட பிள்ளையளுக்கு நாங்க உயிர் கொடுத்தம்”
ஏனைய பயணிகள் கவலையாய் அவரை நோக்கினார்கள். போர் ஆரம்பித்த முதலாவது நாளே களத்தில் மகனிருந்தவரான மனிதர் பெருமூச்சு விட்டார்: “நீங்க சொல்றது சரிதான். எங்கட பிள்ளையள் எங்களுக்குச் சொந்தமானவர்கள் இல்ல; அவர்கள் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.”
“ச்சே” மறுத்தார் அந்த உடம்பான பயணி. “பிள்ளைகளைப் பெறும்போது நாங்க நாட்டைப் பற்றி யோசிச்சமா? எங்கட பிள்ளைகள் பிறந்தார்கள்.. ஏனெனில்.. அவர்கள் பிறக்கத்தான் வேணும் என்பதால. அப்பிடி உயிராய்ப் பிறக்கிறபோது அவர்கள் எங்கட உயிரையும் தங்களோட எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் உண்மை. நாங்கள் அவர்களுக்குச் சொந்தமானவர்களாய் இருக்கிறோம் ஆனால் அவர்கள் ஒருபோதும் எமக்குச் சொந்தமானவர்களாய் இல்லை. அவர்களுக்கு இருபது வயதாகும்போது நாங்கள் அந்த வயசில இருந்த அதே மாதிரியே அவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்குத் தாய் தகப்பன் இருந்தார்கள்.. வேற நிறைய விடயங்களும் இருந்தன… பெண்கள், சிகரட், பிம்பங்கள், புதிய பிடிப்புகள்.. அத்தோட, கட்டாயம், “நாடு” -அதின்ர குரலுக்கு – அம்மாவும் அப்பாவும் வேண்டாம் என்றிருந்தாலும் கூட- நாங்களும் பதிலளிச்சிருப்பம் எங்கட இருபதுகளில. இப்ப, எங்கட இந்த வயசில, நாட்டின் மீதான நேசம் உயர்வானதுதான், ஆனா அத விட பலமானது எங்கட பிள்ளைகள் மீதான நேசம். இங்க இருக்கிற ஆக்களில யாரேனும் ஒராள் உங்கட பிள்ளைக்குப் பதிலா களத்துக்கு போகேலுமெண்டா சந்தோசமா போறதுக்கு மறுப்பிங்களா?”
சூழவும் முழுமையான அமைதி, எல்லோரும் ஏற்றுக்கொண்டவராய் தலையசைத்தனர்.
“பின்னர் ஏன்” தொடர்ந்தார் அவ் உடம்பான மனிதர், “20களில இருக்கிற எங்களிட பிள்ளைகளின்ர உணர்ச்சிகள நாங்க யோசிக்கக் கூடாது? அவர்களிட அந்த வயசில அவர்கள் -எங்களுக்கான நேசத்தைவிட – தங்கட நாடு மீதான நேசத்தைத்தான் நினைப்பார்கள் என்பது இயற்கையானதல்லவா? (நான் இதில சொல்றது ஒழுங்கான பிள்ளையளப் பற்றித்தான்) . எங்களை, நடமாட முடியாத, வீட்டில் வைத்துப் பார்க்கவேண்டிய வயது போனவர்களாய் அவர்கள் நினைப்பதும், இயற்கைதானே? நாடும் நாங்கள் எல்லாரும் பசியால் இறந்துபோகாச் சாப்பிடக் கட்டாயம் தேவையான அரிசி போன்ற இயற்கைத் தேவை என்றால், அதைக் காக்க யாரோ போகத்தான் வேணும். இருபது வயதாய் இருக்கிறபோது எங்கட மகன்கள் போகிறார்கள்; அவர்கள் வேண்டுவது கண்ணீரை அல்ல. ஏனென்றால் அவர்கள் இறக்கிறபோது கிளர்வுடனும் சந்தோசமாகவும் இறக்கிறார்கள் (நான் இதில சொல்றது ஒழுங்கான பிள்ளையளப் பற்றித்தான்). இப்ப வந்து, ஒருவன் -வாழ்வின்ர அசிங்கமான பக்கங்கள் அதின்ர அலுப்பூட்டும் தன்மைகள், சின்னத்தனங்கள், மாயைகள் கலைவதன் கசப்புகள்- எதையும் காணாமல், — இளமையாயும் சந்தோசமாயும் செத்துப் போறானெண்டா.. அவனுக்காக வேறென்ன அதிகமாக நாங்கள் கேட்டிர இயலும்? எல்லாரும் அழுறத நிறுத்தோணும்; எல்லாரும் என்னை மாதிரிச் சிரிக்கோணும்.. அல்லது குறைந்தது என்னைப் போல கடவுளுக்கு நன்றி சொல்லலாம் — ஏனென்டா என்ர மகன், தன் வாழ்வை, தான் வேண்டிக்கொண்ட மாதிரி சிறப்பான முறையில முடிச்சுக் கொண்டது தொடர்பா, தான் திருப்தியாச் சாகிறதா, சாக முதல் எனக்கொரு கடிதம் அனுப்பினான். அதனாலதான் உங்களுக்கு பார்த்தால் தெரியும். நான் துயர(கறுப்பு) உடுப்புக் கூட போடேல்ல”
அதைக் காட்டுவதுபோல தனது இளமஞ்சள்நிற ஆடையை அசைத்தார்; விழுந்த பற்களுக்கு மேலே அவரது கன்றிய உதடு நடுங்கியது, அவரது கண்கள் நீர்நிறைந்தும், அசைவற்றும் இருந்தன. அவர் பேச்சை முடித்தது ஒரு பெரும் சிரிப்போடு – அது ஒரு விசும்பலாகக் கூட இருந்திருக்கலாம்.
“சரிதான் சரிதான்” அனைவரும் ஆமோதித்தனர்.
மூலையில், குளிராடையுள் சுருண்டிருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண் – கடந்த மூன்று மாதங்களாக – தனது கணவரதும் நண்பர்களதும் சொற்களிலிருந்து ஆழமான தனது துக்கத்திற்கு ஆறுதலளிக்கும் ஏதோ ஒன்றை -மரணத்திற்கு மட்டுமல்ல, வாழ்வில் சாத்தியமான வேறெந்த அபாயத்திற்கும்கூட தனது மகனை அனுப்ப, ஒரு தாய், தன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதைக் காட்டும் அந்த ஏதோ ஒன்றைத் – தேடிக் கொண்டிருந்தாள். பல சொற்களுள் இதுவரை ஒரு சொல் தானும் அவள் தேடியதைச் சொல்லவில்லை. யோசிக்கையில், தனது உணர்வுகளை ஒருவர் தானும் பகிரவில்லை எனக் கண்ட போது, அவளது துயரம் அதிகமானது. ஆனால் இப்போது பயணியின் சொற்கள் அவளை ஆச்சரியவும் திகைப்புறவும் செய்தன. அவள் அப்போதுதான், தன்னைப் புரிந்து கொள்ளாததோ தவறுகளோ மற்றவர்களது இல்லை, அது, -தமது மகன்களின் பிரிவிலிருந்து மட்டுமல்ல மரணத்திலிருந்தும் -அழாமல்- தங்களை விடுவித்துக்கொள்ளத் தயாராயிருக்கிற அந்த தந்தைமாரினதும் தாய்மாரினதும் உயரத்திற்கு தானும் எழுந்துகொள்ளாத – தனது தவறுதான் என்பதை உணர்ந்தாள்.

அவள் தனது தலையை உயர்த்தி, தானிருந்த மூலையிலிருந்து, அந்த மனிதர் சக பயணிகளிற்கு, தனது மகன் அவனது அரசனிற்காகவும், நாட்டிற்காகவும் மகழ்ச்சியாயும் விசனங்களற்றும் ஓர் வீரனாய் விழுந்தது பற்றி, தந்துகொண்டிருந்த விவரங்களைக் அதி கவனத்துடன் கேட்பதற்காய்க் குனிந்தாள். அது -அவளுக்கு இதுவரை தெரிந்திராத ஓர் உலகத்துள் – ஒருபோதும் கனவு கண்டிராத ஒரு உலகத்துள் இடறி விழுந்ததுபோல, தோன்றியது. தனது பிள்ளையின் மரணத்தைப் பற்றி மிக சுகதுக்கமற்றுப் பேசக் கூடிய அந்த வீரத் தகப்பனைப் பாராட்ட எல்லோரும் இணைந்துகொண்டதும் அவளுக்கு நல்ல திருப்தியாய் இருந்தது.
பிறகு திடுமென, அதுவரைக் கூறப்பட்ட எதையும் கேட்டிராதவள்போலவும் ஒரு கனவிலிருந்து விழிப்பவளாயும், அந்த முதியவரிடம் திரும்பிக் கேட்டாள்:
“அப்ப… உங்கட மகன் உண்மையாவே செத்திட்டானா?”
அனைவரும் அவளைப் பார்த்தனர். அந்த முதியவரும் தான், அவளைப் நோக்கத் திரும்பினார், வீங்கியும் பயங்கரமாய் நீர்நிறைந்தும் இருந்த தனது பெரிய கண்களை, அவளது முகத்தின் ஆழத்துள் செலுத்தியபடி. சிறிது நேரமாக அவளுக்குப் பதிலுறுக்க முயன்றார் அவர், ஆனால் சொற்கள் அவரைத் தோற்கடித்தன. அவர் அவளைப் பார்த்தார், பார்த்துக் கொண்டே இருந்தார், அப்போது, அந்த மடத்தனமான, பொருத்தமற்ற கேள்வியின்போது தான், அவர் கடைசியில் தனது மகன் உண்மையாவே இறந்து போய் விட்டான் என்றென்றைக்குமாக -என்றென்றைக்குமாக போய் விட்டான்-, என்பதை உணர்ந்துகொண்டவராக. அவரது முகம் சிறுத்து, பயங்கரமாய் மாறியது. அவசரமாய் தனது பொக்கற்றினுள்ளிருந்து கைக்குட்டையை எடுத்தவர், எல்லோருடைய வியப்பிற்குமாக, பெரும் வேதனை தருகிற, இதயத்தை உடைக்கும், கட்டுப்படுத்த முடியாத விம்மல்களுடன் அழுதார்.
~~~~~~~~~~

மூலக்கதை: “War”

Advertisements