Archive

Archive for the ‘பகடி’ Category

என்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!

April 30, 2007 1 comment

dali
ன்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!
ஏதாவது… ஒரு குறிப்பு, பட்டியலிடல்,
முன்னுரை, முக உரை, மதிப்புரை
இங்ஙனம் ஏதேனும்… ஏதாவது.

வளரும் எழுத்தாளர், வளர்ந்து விட்டவர்
வளர்ந்து கொண்டு வருபவர்
முக்கியமானவர்,
இப்படி ஏதாவது

குறிப்பெழுத சிரமமெனில்
நானே எழுதித் தருகிறேன்
பேட்டிக் கேள்விகளும் பதில்களும்
நானே தயாரித்து வழங்குவேன்
நீங்கள் எழுதுகிறபோதெல்லாம்
மகிழ்ந்து கொண்டிருப்பேன்,
இன்னும் நான் field இலே இருக்கிறேன் என!

என்னைப் போற்றி எழுதாத பேராசிரியர்கள்
பேராசிரியர்களே அல்ல.
என்னை ஏற்றி எழுதுபவர்களோ
எல்லாவற்றுக்கும் மேலே.

நான் அவர்களைக் காவித் திரிவேன்
தரப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
நானும் அவர்களைக் குறிப்பிடுவேன்,
பட்டியலிடுவேன்..
யாரோ எனக்கு குருவாவதும்
எனக்கு யாரோ சிஷ்யன் ஆவதும்
என் பாதிப்பில் பலரும் உலவுவதும்
என்றென்றும் என் இருப்பை
நிலைக்கும். ஆதலால்
எழுதுங்கள். தயவுசெய்து எழுதுங்கள்.
ஏதாவது… என்னைப் பற்றி.

(2003)
எழுதியவர்: ஆப்ஸ்ரஸ்க்கா ;-)
குறிப்பு:
வலைப்பதிய ஆரம்பித்தபோது அரைகுறையாய்ப் பதிந்த –இன்னும் முழுமையாய் வலையேற்றப்படாத– “கண்ணன்கள் – கவிஞன்கள் – நித்திய காதலன்கள்” விமர்சனத்தின் ஒரு பகுதியின் தேவை கருதி எழுதப்பட்டது இந்த “மாதிரி”க் கவிதை. போராளிக் கவிஞர் வானதி எழுதிய “எழுது நான் எழுதாது போகும் கவிதையை” என்பதான வரிகளை ‘மாதிரி’யாய் வைத்து எழுதப்பட்டது. இந்த வலைப்பதிவிலிருந்து தற்காலிகமாக நீங்கிப் போகுமுன், எங்கள் காலத்தில் -field இலே இருக்கிற – அத்தனை குருக்களிற்கும் அவர்தம் சிஷ்யன்களிற்கும் இதனை சமர்பிக்கிறேன். தொடர்ந்தும் ‘எழுதுங்கள்.’
Image: “Dali Atomicus” by Philippe Halsman

அரசியல் ரீதியாய்ச் சரியாய் இருத்தல்

July 12, 2006 1 comment

எழுதிய பழசு – இல.01 (edited)

அரசியல் ரீதியாய்ச் சரியாய் இருத்தல்

0
அரசியல்ரீதியாகச் சரியான மொழி (politically correct Language) ப் பாவனை சாத்தியமா? தலித் மொழி, பெண் மொழி எனவெல்லாம் எழுந்தபடி இருக்கும் -பாரபட்சமற்ற- மொழியாடலூடாக புத்தம் புது உலகம் ஒன்று -வார்த்தைகளிலே கூட வன்முறை அற்று – உருவாகுமா? உண்மையில் அதுவோர் உத்தியோப்பியா மட்டும்தானா?

மொழியின் போக்கில் காலத்துக் காலம் மாற்றங்களும் உருவாகிக் கொண்டே வந்திருக்கின்றன. நடைமுறைக்கு இந்த மாற்றங்கள் வர எவ்வளவு காலமெடுக்குமோ ஆனால் அறிவுலகம் இவற்றை கவனங் கொண்ட வண்ணமே உள்ளது (பிறகு அப்படியொன்று இருந்துதான் என்ன!). சொல்லப்படுகிற மொழியில், அர்த்தப்படுகிற ‘கடவுள்’ வேறு ‘ஆண்டவன்’ வேறுதான். ஆண்டவனுக்கு அல்லது இறைவனுக்கு பால் அடையளாம் உண்டே…!

கனடாவில், 1929 இல், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்த எமிலி மேர்பி (Emily Murphy) ஒரு சகாப்தம் நீண்ட போராட்டத்தினூடாகப் பெண்களும் சகல உரிமைகளையும் உடைய ‘நபர்கள்’ (persons) என்பதை, சட்டத்தின் முன் கொண்டு வந்தார். பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கனடிய பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் தலைவியுமான அவரே பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் முதலாவது பெண் நீதிபதி. “ஒரு மேட்டுக்குடி கனடிய வெள்ளைக்காரிதான்” – என்றபோதும், அவரரை ஒத்தவர்களின் பங்களிப்பு சமூக மாற்றங்களிற்கு இன்றியமையாதது.

00
நான் முதன் முதலாக படித்த அசியல்ரீதியாகச் சரியான சொல்லாடல் நிறைந்த, ஒரு parody வகை சிறுவர் கதைப் புத்தகம்: “தூங்கும் குரூபி” (Sleeping Ugly) அதாவது தூங்கும் அழகி (Sleeping Beauty) கதைக்கெதிரான -அதை பகடி பண்ணி எழுதிய- கதைப் புத்தகம்.
அப் புத்தகத்தை நூலகத்தில் தற்செயலாக படித்ததைத் தொடர்ந்து, பிராயங்களில் அறிமுகமான எல்லா (ஜனரஞ்சகமான) க் கதைப் புத்தகங்களது பெண் கதாபத்திரங்களை ஆண் கதாபாத்திரங்களாக எதிர்த் திசையில் இயக்கிவிட, நேர்ந்ததற்குப் பேர்தான் அனர்த்தம்! உதாரணமாக தமிழின் பெண் எழுத்தாளர்களில் லக்ஷ்மி முதல் ரமணிச்சந்திரன் வரையான இன்ன பிறரது ஆண் பாத்திர வார்ப்புக்கள் செய்தவற்றை பெண்கள் செய்தபோது அவனுக்கு பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை எல்லாம் எவ்வாறு அவளுக்கு ஏற்கப்படாது என்பதையே வலியுறுத்தின. நிறைய அனர்த்தங்களை உருவாக்கி ரசிக்க முடிந்தது. எழுத்தாளர்களில் பெண்களும் ஆண்களும் என பாகுபாடற்று, அவர்தம் எழுத்துக்களில் “எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவள் படுக்கையில் எப்படி இருப்பாள் என கற்பனை செய்துபார்ப்பேன்” என ஒரு (ஆண்) கதாபாத்திரம் சொல்கிறது; “பெண்களும் மதுவும் புத்தகங்களும் இருந்தால் போதும்” என்று ஒன்று சொல்கிறது; “எனக்கு ஒரு பெண்ணுடன் திருப்திவராது” என்று இன்னொன்று சொல்கிறது… ஒரு கதைப் போக்கையே தீர்மானிக்கிற கதாபாத்திரங்களை பால் மாற்றம் செய்து உலவவிடும் இந்த விளையாட்டை வேடிக்கைக்காக இன்றும் விளையாடுவதுண்டு.
முக்கியமாக பெண்களுடைய சிறுவயது காதல் மற்றும் அரசிளங்குமரன் பற்றிய கதைகளால் பின்னப் பட்டிருக்கும் ஒன்று. அவற்றுள் இருந்து வருகிற வாசமான இளம் உலகிலே -மீட்பர்களை வேண்டி நிற்கும்- அழகும் பணிவும் காலகாலத்துக்கும் பயிற்றப் பட்டுவருகிறது. அத்தகைய கதைகளின் பொதுப் போக்கை மீறி –சிறிதாகவே ஏனும் அசைத்து- ஒரு கதை சொல்லப்படுகிற போது, அவ் எதிர்வினை பொதுவில் உள்ள மொழியாடல் தொடர்பானது.

0
அறிந்துகொள்கிற சில நபர்கள், ஆளுமைகள் ஊடாக, சில அடிப்படையான கேள்விகள் எழுப்பப்பட்ட வண்ணம் இருக்கும். “எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்றால் “ஏன் அப்பா வளர்ப்பில் இல்லையா” என்றோ, “உனது பெயரின் பின்னால் உன்னை பெற்றவளின் பெயர் ஏன் இல்லை” என்றோ அளவில் மிகவும் சிறிய –எனினும் முக்கியமான- எதிர்வினைகளாய் இடையீடுகள் வந்த வண்ணம் இருக்கும். அந்த வகையில், தகப்பனார் சிலவேளை நகைச்சுவையாய்ச் சொல்கிற விசயம், “பலபெண் கூடின் ஆண் = கண்ணன், மன்மதன்; பெண்ணென்றால் வேசி!” அவ் யதார்த்தம் மிகத் தொந்தரவூட்டியதாலேயே, ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே நீச்சல் உடையில் அலையிறியே’ எனப் பெண்கள் -ஆண்களின் பலத்த கைதட்டுதல்களுக்கிடையில்- “பட்டி”மன்றங்களில் முழங்குகையில் ‘செந்தமிழ் நாட்டுத் தமிழனே யட்டி யோடு அலையிறியே’ என சிறு அதிர்ச்சி கொடுத்திருக்கிறோம்! (றோம் என்பது ஒரு மோறல் சப்போர்ட் இற்காக…). அது ஒரு இயல்பான எதிர்வினையாகத்தான் தோன்றுகிறது. tom boy view போல.

ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சூழல் மென்மையான ஒரு மொழியாடலை கொண்டிருந்தது – கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்கிறதுகூட கடுமையே என்கிற அளவிற்கு தீவிரமாக! கண் தெரியவாதவர்கள், காது கேளாதவர்கள் என்று சொல்லித்தான் பழக்கம். கண் தெரியாதோருக்கான அமைப்பொன்றில் ஒருமுறை ஒரு கண்தெரியாத நபர், “நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளில் ஒன்று எங்களின் முன் மற்றவர்கள கண்சார்ந்த விடயங்களைப் பேசத் தயங்குவது” அதாவது ஒரு வழமையான உரையாடலில் வருகிற “நீங்க பாத்திருப்பிங்க தானே” அல்லது “இதுக்கு இவ்வளவு கஸ்ரப்படத் தேவையில்ல சும்மாவே தெரியும் என” “அவர உங்களுக்குத் தெரியுமா” இப்படியான வசனங்களில் தெரிதல், பார்த்தல் என்பதைத் தவிர்த்து சக மனிதர்கள் பேசுவதாகவும் அதுதான் தமக்கு சங்கடம் தருவதாகவும் அவர் சொன்னார். “தெரியும் என்றால் நாங்கள் உடனே ‘எங்களுக்கு எப்படித் தெரியும்’ என்றோ, அல்லது தமிழ் சினிமா மாதிரி ‘என்னாலதான் பாக்கேலாதே’ என்றோ சொல்லுவோம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” இப்படியாக அவர் சொன்னார். அப்போதைய நான் வாசித்த கவிதைகளில் ‘உரத்துக் கத்துகிறேன், செவிட்டுக் காதுகளே உங்கள் காதில் விழவில்லையா’ என்றெல்லாம் கவிஞர்கள் சொல்லிக் கொண்டிருந்ததன் கடுமையை இந்த அனுபவத்தினூடாத்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது.

என்னுடைய சிநேகிதி ஒருத்தி, ஒரு அரசியல் ரீதியாகச் சரியான மொழிப் பாவினி. ஓரிருமுறை அவளுடன் கதைக்கும்போது, யாரையாவது திட்டும்போது “வலசு” என்று சொல்லியிருப்பேன். அவள் சொல்லுவாள்: ”என்னோட கதைக்கேக்குள்ள உனக்கு ஒண்டு தெரியோணும். இந்த வலசெண்டிறது, பொன்னையன் எண்டிறது, விசர் எண்டிறது, இப்பிடி சொல்றதுகள் எல்லாம் எனக்குப் பிடிக்காது. இதுகள நீ கதைக்கிறது எனக்குப் பிடிக்கேல்ல.” யாரையோ ‘வலது குறைந்ததா சொல்வதன்’ தவறு சத்தியமா அப்போ தெரிந்தில்லை.
எங்கள் திட்டல் அல்லது வசை மொழியில உள்ள அனைத்துச் சொல்லுமே அரசியல்ரீதியாகத் தவறான (politically Incorrect) சொற் பிரயோகங்கள்தான். விசர், பைத்தியம், முட்டாள் (“மொக்கு”), பொன்னையன், கேணையன் தொட்டு, பெண்ணை கீழிறைக்கிற என்றான (ஏனெனில் ஒன்றை தாங்களே உருவாக்கிவிட்டு அதையே வசையாக்குவது) வேசை, முண்டை முதல் பால்வேற்றுமையை கேவலப்படுத்திற பெட்டையன், கம்பி என்று, குறிப்பிட்ட இனத்தைச் சாதியை முன்னிறுத்திற பெயர்கள் வரை (‘கெட்ட’ வார்தைகளாக புழங்குகிறவை) யாவையும் “யாரோ” ஒரு சிறுபான்மையினரை, அல்லது பெரும்பான்மையினரால் கேவலப்படுத்தப்படுகிற ஒரு சாராரை அவமதிப்பனவாகவே உள்ளன. நானிருக்கிற வீட்டு வால்கள், பதின்மக்காரர் சக பாலாரைத் திட்டப் பயன்படுத்திற ஆங்கிலச் சொற்களான gay, fag (faggot), retarded, mentally-challenged, bitch, bastard எல்லாமே குறிப்பிட்ட சாரார்க்கு எதிரானவையாகவே அமைந்தவை. தமிழில் அந்த மகனே இந்த மகனே எனத் திட்டுவதுபோல. அவர்கள் bastard “அப்பா பேர் தெரியாதவன்” என வையும்போது அவன்களிடம், “(எப்படியோ) பெண்ணை ஏன் இழுக்கிறாய்” என சொல்வதுண்டு; ஆத்திரத்திற்கு ஏதாவது பதிலீடு சொல்லித்தா என்றும் அச் சொற்களைச் “சீரியஸாய்” எடுக்க வேண்டாமென்றும் அதை தாங்கள் mean பண்ணுவதில்லை என்றும் சொல்லுவார்கள்.
சமபாலுறவாளர்கள் குறித்த ஒரு உரையாடலில் – ஒரு பெண்மணி (பள்ளிக்கூட மாணவர்களுடன் இயங்குகிற ஒரு கவுன்சிலர்) சொன்னார், என்னவென்பதறியாமலே (mean பண்ணாமலே!!!) இன்றைய அமெரிக்கச் சிறுவர்களது விளையாட்டு மைதானங்களில் ‘‘you’re so gay’ என்கிற வழக்கு பேச்சில் பழக்கமாகிவிட்டது என்று. தான் அவர்களை நிறுத்தி “இப்படிச் சொல்லுவது தவறு, இது இன்னொருவரை மிகவும் ஆழமாகத் திட்டுதல்/தாக்குதல் போல காயப்படுத்தக் கூடிய விசயம்” என சொல்லுவதாக… ஆனால் எத்தனை பேரிடம் சொல்லுவது?

00
விநோதமாக, அவசியமற்ற ஒன்றாகக் கூட படலாம் (உலகமே வன்முறையால் சூழப் பெற்றிருக்கிறபோத மொழியில் மட்டும் வன்முறையை அகற்றுவது -இன்னொரு வகையில்- நல்ல முரண்நகைதான்). பலரும் “இத்தனை நூதனமாய் இருக்க வேண்டுமா” என்ற மாதிரித்தான் சொல்வார்கள். ஆனால் chair man, chair person ஆவதற்கும் house wife, house maker ஆவதற்கும் தேவை இருக்கவே செய்கிறது. அதிலும் ஒரு “விபச்சாரம்” (பாலியல் தொழில்) செய்கிற பெண்ணை குறித்த வசைச் சொற்களாய் புழங்கிற வேசை, தாசி, தேவடியாள் இவற்றுள் எவ்வித நிந்தனையுமின்றி, அல்லது “புகழ்பாடலும் இன்றி” பாலியல் தொழிலாளி என அவர்களைக் குறிப்பது மிகவும் முக்கியமானது. அதிலும் அவர்களை உயர்த்துவதாய் எண்ணி ஆண்கள் தருகிற புனைவுகள் வேறு! பாலியல் தொழிலாளிகளை “காதலைத் தருபவர்கள்” என ஒருமுறை (தமிழில்தான்) வலையில் படித்தேன். ‘அத்தகைய’ ‘உயர்ந்தவர்களை ‘தான்’ ‘மதித்து’ வேசி புராணம் என்று –“அவர்களை”க் கௌரவப் படுத்தவோ என்னவோ!- எழுதியிருந்தார் ஒருவர்; வேசி என்ற சொல் உறுத்தினாலும், தவிர்க்க முடியவில்லை, என வருத்தப்படல்வேறு! ஏனோ? (குறித்த இணைப்பிற்கு சுட்டி கண்டுபிடிக்க முடியவில்லை.)

மேற்கில் ‘வேசிகள்’ பாலியல் தொழிலாளிகள் தமது உதடுகளை-வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை. அது தமது காதலர்க்கானது பிரத்தியேகமானது என்கிற அர்த்தத்தில். “கீழைத்” தேய சிறுமிகளுக்கு அதற்கான வாய்ப்பேது; வாடிக்கையாளன்களிடம் ஆணுறை போடவே நிர்ப்பந்திக்கும் அடிப்படை உரிமையே இல்லாதபோது, அவர்களுடைய உறுப்புக்கள் எதனையும் தமது பிரத்தியேகமானவர்க்கென பிரத்தியேகமாக வைத்திருப்பதெப்படி? இந்த லட்சணத்தில், ‘காதலை’ அவர்கள் தருகிறார்கள் என்பதே அதை அவர்கள் தரவில்லை என்பதை நம்பவியலா ஒரு ஆண் மனோபாவம்தான். புராண காலத்தில்தான் குலமென்றொன்றமர்த்தி அரசர்கள் – ‘காதலைப்’ பெற்றார்கள். ஆயிரக்கணக்கான மனைவியருக்கிடையே ஒரு காதலுக்காக தாஜ்மஹாலெல்லாம் கட்டினார்கள். நியத்தில் புராணங்கள் தந்த ‘வெளிச்சத்திற்கு’ அப்பால் (ஒரே ஒருமுறை வன்/புணர்ந்த) அந்தப்புரப் பெண்களின் சோகம் தான் மறக்கடிக்கப் பட்டிருந்தது. இன்றைக்கு ‘வேசி’ புராணம் எழுதுபவர்கள் எல்லாம் அந்தக் கால இலகரியில் ஏதோ வகையில் ஆட்பட்டவர்களே.

0000

இந்தப் பாடலை சங்கீதம் தெரிந்தவர்கள் சுப்புலக்சுமி உருகி உருகி கண்ணன் பாட்டைப் பாடுவதுபோல பாடிக் கேட்க வேண்டும் என்பதே என் ஆசை (பாடுவது ஆணாக இருந்தால் இந்தப் பாடலுக்குப் பொருந்தும்!).

கண்ணா – என் விளையாட்டுப் பிள்ளை

கேதாரனம்-கண்டஜாதி-ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணா
தெருவிலே ஆண்களுக் கோயாத தொல்லை, (தீராத)

1.
தின்னப் பழங்கொண்டு தருவாள்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பாள்;
என்னம்மை என்னம்மா என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பாள். (தீராத)

2.
தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பாள்
மானொத்த ஆணடி என்பாள் – சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவாள் (தீராத)

3.
அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழ அழச் செய்துபின், “கண்ணை மூடிக்கொள்
காதிலே சூட்டுவேன்” என்பாள்- என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழன்க்கு வைப்பாள்
(தீராத)

4.
குடுமியை பின்னின் றிழுப்பாள்; – தலை
பின்னே திரும்பும்முன் னேசென்று மறைவாள்;
வெள்ளைப் புதுவேட்டி தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பாள் (தீராத)

5.
புல்லாங் குழல்கொண்டு வருவாள்! – அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பாள்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட்டிருப்போம். (தீராத)

6.
அங்காந் திருக்கும்வாய் தனிலே கண்ணா
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவாள்!
எங்காகிலும் பார்த்த துண்டோ? – கண்ணா
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ?
(தீராத)

7.
விளையாட வாவென் றழைப்பாள்; – வீட்டில்
வேலையென் றாலதைக்கேளா திழுப்பாள்:
இளையாரோ டாடித் குதிப்பாள்; – வீட்டில்
யாவர்க்கும் நல்லவள்போலே நடப்பாள். (தீராத)

8.
தந்தைக்கு நல்லவள் கண்டீர்! – தபுதார
மாமன்க்கும் நல்லவள் அம்மைக்கு மஃதே
எம்மைத் துயர் செய்யும் பெரியோர் – வீட்டில்
யாவர்க்கும் நல்லவள் போலே நடப்பாள். (தீராத)
9.
கோளுக்கு மிகவும் சமர்த்தள்; – பொய்மை
சூத்திரம் பழிசொல்க் கூசாச் சழக்கள்
ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
அத்தனை ஆண்களையும் ஆகா தடிப்பாள் (தீராத)
-0-

சுபம்.

[இறுதித் திருத்துகை 11.15.2005]

குசும்புக்காரன்கள்

June 14, 2005 7 comments


என்னைப் பற்றி
இவங்களுக்கென்ன தெரியும்?
நினைத்தாலே சிரிப்புத்தான்
என்ர வாழ்க்கையே மிகப்பெரிய நகைச்சுவையாய் இருந்தது
A dance that’s walked
A song that’s spoke
நான் ‘இருந்த இடத்துக்கு’ இவங்க சொன்ன பேர் ஒண்டு
இருந்த எனக்குத் தெரியாதா, என் னெண்டு?
சன்னலுக்குள்ளால பாத்தண்டுதான் இருந்தன்
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டாங்கள்!
அப்பிடி எண்டாங்கள் இப்பிடி எண்டாங்கள்
அதெண்டாங்கள் இதெண்டாங்கள்
அசந்தா
சடாரெண்டு இன்னொண்டக் காட்டினாங்கள்
அட! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!
என்னடா இப்ப வேற எண்டாலோ
அதுதான் இது எண்டாங்கள்!
விழுந்து கிடந்து சிரிப்பன்
வயிறு நோகச் சிரிப்பன்
ஒண்ட வெட்டினா இன்னொண்டத் தளைச்சு
வித்தியாசம் பார் எண்டாங்கள்
ஐயோ! கடவுளே! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!
நான் விழுந்து கிடந்து சிரிப்பன்
வயிறு வெடிக்கச் சிரிப்பன்
—என்ர வயிறுதானே…
ஆஹ்ஹாஹா அஹ்ஹாஹா!
0Who? வை ‘ஆரத்த்’ தழுவி

பெருந்தலைகளை உருட்டல் -4-

October 8, 2004 4 comments
கவிஞர்களைப் பற்றி பகரும்போது எனது உயர்பாடசாலை (high school) கால இறுதியாண்டு ஞாபகம் வருகிறது. நண்பர் வீடுகளிலிருந்து புத்தகம் வேண்டி இலக்கிய வாசிப்பு வேட்டை நடந்துகொண்டிருந்த சமயம்.

விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஏனோ எனக்கு கேலிக்குரியதாய்பட்டது. என்னாலும் அதை எழுத முடியும் இந்தாள் ஏன் இப்பிடி என்ன மினக்கெடுத்துது என்றொரு மிதப்பான நினைப்பு. அப்போது அவரது ‘மாதிரி’ க் கவிதை ஒன்றைத் தயாரித்தேன்.

விக்கிரமாதித்யன் மாதிரி 1

பூனை பானை

பாலை எடுக்கும்

காளி வாளி

மனசை அறுக்கும்

குரங்கு சிரங்கு

மூலம் அறியும்.

கோலம் சூலம்

இருவேறு வடிவம்.

வடிவம் படிமம்

சொல்வதை எழுது

கவிதை சமதை

நான் எழுதுவது மட்டும்

வாடா போடா

புண்ணாக்குத் தலையா

என் நாக்கு உன் நாக்கு

எதிலும் பாக்கு

நட்புக்கு போட்டி

மாட்டுக்குப் பட்டி

வட்டத்துள் வட்டம்

(காளி செயமாரிக்கு)

இந்த விளையாட்டு சுவாரசியமானதாகி திருவாளர் சேரன், செயபாலன் கவிதை என நீண்டது. அன்னார்கள் மானநஸ்ட வழக்குப் போடார்கள் என்ற நம்பிக்கையுடன் (ஆமா… போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். உண்மையில பார்த்தால் அவர்கள் எழுதுகிறதைவிட இது எவ்வளவோ நல்லா இருக்கு, அவங்களே இது தாங்கள்தான் எழுதின எண்டு உரிமை கொண்டாடாட்டாத்தான் ஆச்சர்யம்!):

வ. ஐ. ச சேயபாலன் மாதிரி 1

பாலியாற்றின் அடியில்

புதைந்துள்ளதடி என் மூதாதையரின் வேர்கள்

அங்கே

பாலியத்தில் கூடி மகிழ்ந்து

ஆடிக் களித்த நீ

எங்கேயடி இன்று

இன்று இரவல் புலத்தில்

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த

நிலத்தையும்

என் பாலியத்தின் பெட்டை

உன்னையும் நினைத்தபடி

0

சேரன் உ மாதிரி 1

அன்று:

சமாந்திரமான பாலம்:

நடந்தோம்

பாலத்தருகே

தாழம் பூ

செவ்வரத்தம் பூ

மரங்கள் நிற்கும்.

எமைத் தொடரும் விழிகளிடமிருந்து

வெகு துாரம் வந்தோம்

தனித்த வெளியில் – உன் முலை

நுனியில்

பனிக்கும் காதல் இரவு

கண்ணீர் சுக்கிலம்

இரவே சிறந்தது

கன்னி முலையில்

கிளர்வே சிறந்தது

0

அவரது மாதிரி (தொடர்ச்சி) 2

இன்று:

காலங்கள் கடந்தோம்/கடந்து

நாப்பது கடந்தும் துணை தேடி

கையில் பூவுடன்

காத்திருப்போ தொடர்கிறது

வாழ்வு நீள்கிறது

0

இவற்றோடு இலக்கிய கிசுகிசு என ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கும் எண்ணம் கூட அப்போது இருந்தது: அதில் நாம் சில இலக்கியப் பிரமுகர்களுக்கிட்டிருந்த ஒப்பற்ற நாமங்கள்: சே!RUN, Sucks.வர்த்தி, Rock.சுறா, சே!None, Che(f). indian,… etc. அப் ப/பிணி கைகூடாமல் இளங்காலக் கனாவாகவே போய்விட்டது.

பிற்குறிப்பு: இந்த “மாதிரி”க் கவிதைகள் குறித்து: தமிழ்நாட்டில், நவீன கவிதைகளாக உள்ள அனைத்தும் “மாதிரிகள்” தான். பசுவையா மாதிரி, மனுஸ்யபுத்திரன் மாதிரி, சல்மா மாதிரித்தான், அதுபோல புகலிட கவிதைகளும் வ.ஜ.ச மாதிரி, சேரன் மாதிரித்தான்! அத்தோடு பின்னவர்களது கவித்துவமும் மிக வரண்டு இலகுவில் “பிடித்துவிடக்கூடிய” பாணியை உடையவாகத்தான் உள்ளன. இந்தத் தளத்திலேயே அடிக்கடி இவர்கள் மாதிரிகளையும் இவர்களது மாதிரிகளையும் இடுவதாய் உள்ளேன்.