Archive

Archive for the ‘திரை’ Category

மறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை:

February 24, 2010 1 comment

கலைரசனை, பகிர்வு, அதன் போதை-கள் தொடர்பில்….

01

அறிமுகம்:

யாழ்ப்பாணத்திலிருந்து இலக்கிய ஆர்வலர்களால் கொண்டுவரப்படுகிற கவிதைக்கான காலாண்டிதழ்: “மறுபாதி”. அதன், முதல் இரண்டு இதழ்கள் (ஆடி – புரட்டாதி 2009; ஐப்பசி – மார்கழி 2009) வாசிக்கக் கிடைத்தன.

தொடர்ந்தும், தொழில் இயந்திரங்களை உருவாக்கும் எமது கல்வித் திட்டத்தினுள் கலைகளும் கலை இரசனைகளும் வகிக்கின்ற இடம் எதுவாக இருக்கும்? இந்தக் கேள்விதான் ‘மறுபாதி’யின் மைய்யமாக இருக்கிறது.

முன்பொருமுறை, கலைஞர் கருணாநிதிக்காக எடுக்கப்பட்ட விழாவிலோ என்னவோ இயக்குநர் பாலுமகேந்திரா ‘சினிமா இரசனை’யை பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாய்க் கற்றுக் கொடுப்பது தொடர்பாய்ப் பேசியிருந்தார். அந்த வகையில், சினிமாகவிதைஇலக்கிய ரசனை மட்டுமல்ல ஒரு சமூகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய கூறுகள் அனேகம் உண்டு. எழுத்து, சமூக இயக்கம் என பிரக்ஞையுடன் எழுத வந்த வயதில் டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுன்டன்ற் என்கிறவை ‘தவிர்ந்த’ துறைகளில் ஆர்வமிருந்தது. ஆனால் பிற்காலங்களில் அனுபவங்கள்வழி உணர முடிந்தது சமூக பிரக்ஞையுடைய ஒரு வைத்தியரைப்போலவே ஒரு சமூகவியலாளரும் அரிதான நிகழ்வே என்பது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் careerist-கள் தான் நிரப்பப் பட்டிருக்கிறார்கள். இதில் தம் சார்ந்த கல்வி/தொழில்க் கூடங்களின் சட்டகங்களுக்கு ‘வெளியில்’ சிந்திப்பவர்களே சமூகரீதியான குறைபாடுகளை (அடையாளங்) ”காண” முடிகிறவர்களாய் – அதை கண்டுணர்ந்து மாற்றுக்களை சிந்தித்து – தமது சூழலுள் மாற்றங்களை வேண்டுபவராய்/உருவாக்குபவர்களாய் இருக்க முடியும் (‘காணாத’ ஒன்றை எப்படி மாற்றுவது?!). அத்தகைய சின்னச் சின்னச் சின்ன எனினும் மாற்றங்களை வேண்டுகின்ற இலக்கிய, சமூக ஆர்வமுள்ள ஆசிரியர்களின் இதழாகவே மறுபாதி சஞ்சிகையைப் பார்க்க முடிகிறது.  மாணவர்களது இளம் கற்பனைகளில்த் திறக்கிற பலப் பல கதவுகளை அடித்து பூட்டிவிட்டு ‘அப்படியே’  நேரடியாய் கவிதையை எடுத்துக் கொள்கிற – அதை ‘அனுபவிக்க’ அனுமதிக்காத – கல்வித் திட்டத்துடனான [ அக் கல்வித் திட்டத்துடன் முரண்பாடு ‘காண்கிற’ தனிநபர்களின் ] பொருதுதலை பக்கங்களில் உணர முடிகிறது.

பெரும்பான்மை ஆசிரியர்கள், கற்பிக்கும் இயந்திரங்களாய் இருக்க (பெரும்பான்மை வைத்தியர்கள் மருந்து தரும் இயந்திரங்களாய் இருத்தல் போல…) பெரும்பான்மை மாணவர்கள் கற்கைநெறிகளை கேள்வியற்றுப் பின்தொடருதலே அக் கல்வித் திட்டத்துள் சாத்தியமான ஒன்றாகும். அத் திட்டத்தினுள், அதனை மறுத்து, கேள்விகேட்டுக் கொண்டே, தொடர்ந்தும் அதிலே இயங்குவது என்பதை எப்படி சுவாரஸ்யமாக்குவது?

03

ஆசிரியர்களாய் இருத்தல் – அப்படியொரு இரசனையை பன்முகத்தன்மையை creativityஐப் பழக்குதல் என்பதை ஒரு கவிதையினது பலருடைய மொழிபெயர்ப்புகளை வாசித்தல் போன்ற கட்டுரைகளில் காண முடிகிறது. ஒரு கவிதையின் பல எளிய மொழிபெயர்ப்புகளை அதை மற்றவர் செய்ததுடன் ஒப்பிடல் என்பன பயனுள்ள பயிற்சி வழங்கல். எம் பெரும் இலக்கிய ஆசான்களிடம் செல்வதற்குப் பதிலாக, கவிதை-மொழிபெயர்ப்புப்  பட்டறைகளுக்குள் மாணவர்களைத் தூண்டுவது மொழிசார் புலமையை அவர்கள் வளர்த்துக்கொள்ளவும் உதவக் கூடியது.

02

இந்த இரசனை என்பதே ஒரு பயிற்சி தானே? வீடியோக் கடையில் “றெயின் கோட் [Raincoat] எண்டொரு படம். படம் தொடங்கி முடிய மட்டும் மழை. அதுதான் அப்பிடிப் பேர். ஹீஹீ..” என்கிறவரில் அந்தப் படத்தில் பல பரிமாணங்களை கண்ட நபருக்கு ‘கஸ்ரமாக’ இருக்கலாம். அந்த ‘ஞான’சூன்யத்தின் இரசனை ‘மட்டமாய்’த் தெரியலாம். ஆனால் பிடித்தமான ஒரு படத்தின் மீதான பகடிகள் (அறிவிலி எனப்படுகிற பாமர விமர்சனங்கள்) தன்னளவில் ஒரு சமூகத்தைப் பிரதிபலித்தபடி நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்டு தானிருக்கின்றன. கைதேர்ந்த நம் காலத்து விமர்சகர்கள் அந்தப் படத்தை எப்படி எப்படியெல்லாம் ‘அனுபவித்து’ எழுதுவார்கள் அல்லது அவர்கள் அனுபவித்ததாய் மாய்ந்து மாய்ந்து எழுதியவை படிக்கையில் எனக்கு நிச்சயம் வீடியோக்  கடையில் நின்ற அந்த பெடியனுடைய வரிகள் ஞாபகத்துக்கு வரும். அந்த இயக்குநர் அந்த வரிகளைக் கேட்டு சிரிக்கிறவராய் இருந்தால் அவரது சகிப்புணர்வும் தோழமையுணர்வும் ஒப்பிடவியலாதபடி மாண்பு நிறைந்தது. ‘இவனுக்கென்ன புரியும்’ என்றால் அதில் ஓர் உயர் மட்டத்துக்குரிய மதிப்பிடல் இல்லையா?

எமது கல்வித் திட்டத்தினுள் மட்டுமல்ல, எமது இலக்கிய அறிவுசார் உலகங்களுள் கூட உன்னதப்படுத்தலுக்கு எதிரான பகடிக்கும் எந்த நெகிழ்ச்சித் தன்மை- loosen up coolness- க்கும் இடமிருந்ததில்லை. அவர்கள் பின்தொடரும் கட்டுடைத்தல்கள் கட்டுடைத்துக் கட்டுடைத்து நக்கலடிக்கச் சொன்னது சகல கட்டுமானங்களையும், கூடவே அவர்களது எழுத்துப் பிரதிகளையும் கூடத் தான் என்பதில், அறிவுசீவிகள் எடுத்துக் கொண்டது மற்றவனை மற்றவன் பிரதியை ‘நக்கல் அடிப்பம்’ போன்ற மிக வசதியான ஒன்றைத் தான். இப்படியிருக்கும் ஒரு ‘அறிவுள்ள’ பக்கத்தை விட்டுவிட்டு எந்த இலக்கிய வாசிப்பும் அற்ற வேலைவாய்ப்பிற்கான கல்வியை வழங்குகிற கூடங்களின் இன்னொருவகையான -ஆனா ஒத்த-உளவியல்- ‘அறிவுள்ள’ மனிதர்களது புரிதலின் எல்லைகளை நொந்து கொள்ள முடியுமா?

05

புரியாத எழுத்து:

மறுபாதி இதழில் சிறுசிறு விசனங்கள் விமர்சனங்கள், பணத்தை கொண்டுவராத கலைக்கு மதிப்பளிக்காத ஒரு சமூகத்தின் மீதானதாக, இலக்கிய மட்டங்களின் “புரிகிற – புரியாத எழுத்து” பிரச்சினை தொடர்பானதாக பதியப்பட்டிருக்கின்றன. தமக்குப் ‘புரியாத எழுத்தை’ இலக்கிய சாம்பவான்தனத்துடன் ஒரு மோஸ்தராய் கீழாய்ப் பாக்கிற போக்கு பற்றியதாய் அவை உள்ளன.

இது இன்றைய எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல. எங்கும் (பெரும்பான்மையினது பார்வையில்) ‘பிரயோசனமற்ற’ செயற்பாடுகள் வீண் வேலையாகவே பார்க்கப் படுகின்றன. இந்தப் பிரியோசனம் என்பதன் விரிவாக்கம், அதால் மற்றவருக்கு என்பதைவிட அந்த வேலையைச் செய்வதால் தனிநபர் ஒருவருக்கு எவ்வித பயனும் இல்லாதபோது அது எதற்கு என்பதான ஒரு எண்ணமே. (செய்கிற தனிநபரது பெயரைக் காவிச் செல்லாத (ஆகவே பயனளிக்காத) விக்கிபீடியா உள்ளிட்ட இணைய வேலைகளில் இப்படியான மனங்கள் ஈடுபட முடியாது). இதன் அதி தீவிர வடிவமாய் எனது வகுப்பில் வெள்ளை மாணவன் ஒருவன் சொன்னதை சொல்லலாம்.  “கொலையாளிகளுக்கான சிறைச் சாலைகள் எதற்கு? எமது வரிப் பணம் வீண். கொலை குற்றம் செய்தவர்களை தூக்கில போட்டால் பிரச்சினை முடிகிறது. சிறைக்கான தேவையே இல்ல” என்றான் அவன். நோயுற்ற – தம் இருத்தலில் எவ்வித பயனையும் தராத – முதிய பெற்றோரையும் கூட நீ அவ்வாறு செய்வாயா என்ற கேள்வி என்னிடம் நெடு நாளாய் இருந்தது.

இது தனியே புரிகிற, புரியாத பிரச்சினையா? அல்லது ‘பிற’வுக்கான சகிப்புணர்வும், வாழ்விற்கான கொண்டாட்டங்களும் அற்றுப் போகும் வரண்ட, கொண்டாடுதல் வடிகட்டப்பட்ட ஒரு சமூக நோயா?

நெடுந்தீவில் அம்மம்மா குமரியாய் வாயாடித் திரிந்த பொழிப்புக் கதைகளும் இயற்கையும் ஆன ஒரு வாழ்வின் கூறுகளை (ருசிகளை) நகரங்கள் உறிஞ்சிக் கொண்டுவிட்டன. ரசமற்ற ஒரு வாழ்வில் இரசனைகளும் கற்பனைகளும் சந்தையில் விளைச்சலை விளைவிக்காத புதிய புதிய திட்டங்களும் “தேவையற்றவை” ‘பயனற்றவை” என்பதாகவே கொள்ளப்படும் (கர்ப்பம்தரிக்க முடியாத கருவறைகள் எதற்கு? கருக்கட்டாத விந்தணுக்கள் பயனற்றவை). இது எல்லா மட்டங்களுள்ளும் ஊடுருவியுள்ள சமூக நோயின் கூறு. இதைத் தனியாகப் ‘புரியாத – புரிகிற’ எழுத்துப் பிரச்சினையாகப் பார்ப்பது கூட ஒரு கவிதையை ‘நேரடியாய்ப் பார்ப்பது’ போல படவில்லையா?

04

ரொறன்ரோவில், தமிழர்கள் என்கிற இனக்குழுமத்தின் பண்பாடு மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை பல்கலைக்கழகத்தில் பாடமாக கற்றறிய தமிழியல் மாநாடு ( Toronto Tamil Studies conference ) ஆரம்பிக்கப்பட்டபோது எமது பெற்றோர்களது தலைமுறையிடமிருந்து வந்த மைய்யமான கேள்வி “மாணவர்களுக்க அதன் அவசியம் என்ன? அதைப் படிக்கிறதால என்ன லாபம்? சோறு போடுமா இது?” என்கிற வகையாகவே இருந்தது. அது பாடத்திட்டத்துள் வருவது சாத்தியப்படுமானால், தம் பிள்ளைகளது உயர்கல்வியில் மேலதிக credits + high averages-ஐ வழங்கும் என்பதன் பிறகே பல ‘படித்த’ ‘அறிவுள்ள’ பெற்றோர்கள் அதன் தேவையை அங்கீகரித்தார்கள். இங்கே, எமது அரசியலில்ப் போலவே:

பிரியோசனமானது X பிரியோசனமற்றது

ஒற்றைத் தன்மை X (அதற்கு) எதிர்பன்முகத்தன்மை

மரபோவியம் X நவீன ஓவியம்

poor class X HIGH society

இத்தகைய இரண்டு பக்கங்களில் ஒன்றே தேர்வாக, அல்லது தேர்வின்மையின் தேர்வாக உள்ளது.  தேர்வுகளை நிர்ணயிக்கிற புறச் சூழலாய் வர்க்க, ஜாதிய, இத்தியாதி பின்புலங்களும் உண்டு. இவற்றுள், இவ்விரண்டு தேர்வுகளைத் தவிர எதுவும் எங்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டவையாய் இல்லை.

மாறாய்: பன்முகத்தன்மை என்பது ஒருபோதும் எமக்கு பயிற்சிதரப்பட்டது அல்ல. சகிப்புத்தன்மை அதிகாரங்களிடம் (ஆயுதங்களிடம்) தானேயொழிய அதிகாரமற்ற அறிவிலிகளிடமும் சிறியவர்களிடமும் இல்லை. புரியாத எழுத்தை நக்கலடிக்கிற சாம்பவான்கள் மட்டுமல்ல, இதெனெதிர்ப்பறம் புரியாத எழுத்துக்களை காவிச் செல்கிறவர்கள் அதைப் புரியாதவர்கள் மற்றும் அத்தகைய பாணி (genre) எழுத்துக்களில் ஆர்வமற்றவர்கள் மீது அதிகாரமான தம் superiority complexஐ நிறுவிக் கொண்டு உலவுவதையும் இலக்கியச் சூழல்களில் காண முடியும். இரண்டு எதிர்நிலைகளுக்கும் இரசனை என்பதற்கு அப்பால் அதிகாரத்தை விரும்புகிற போது அவை கலைக்குரிய கொண்டாட்டத் தன்மையை இழக்கின்றன (ள்ளக் குடிச்சிற்று ட்டற்றுப் பாடுற கிழவி ‘சரியாப் பாடேல்ல’ எண்டு சொல்ல வர்றதில்ல தவறு, ‘நான் விரும்பிற போல சரியாப் பாடு பாப்பம்’ எண்டிறதிலதான் உண்டு வம்பு…!). இவ்விரண்டு துருவங்களும் தமக்கான அதிகாரங்களையே வேண்டி நிற்கின்றன. அவ்வாறான ‘ஒரு’ அதிகாரத்தை அன்றி கலையை / அன்பை / மனிதத் தன்மையை /வளர்க்கும் அறிவை, /அதன் பகிர்வை, /பகிர்வின் போதையைக் கற்றுத் தரும் சூழலை எப்படி உருவாக்குவது??

06

பயிற்சிக் கூடம் (சும்மா ஒரு உதாரணம்):

1.  raincoat படம் பாக்கிற போது உனக்கு என்ன தோணுகிறது (நேரடியான கோணம், பதில்)

2. raincoat படம் பாக்கிற போது உனக்கு என்ன நினைவு வருகிறது (தனிப்பட்ட அனுபவத்தைத் தொடுத்தல்)

3. இதை வேறு எப்படி எடுத்திருந்தால் உனக்குப் பிடிக்கும்?

இயந்திரத்தனமான கல்விப் பயிற்சிக்குப் பழக்கப்பட்டுப் போய் விட்ட மாணவர்களை எவ் வழியில் சென்று கலையின் போதையை அனுபவிக்க வைக்கலாம் என்பது எழுத்தை கவிதையை சினிமாவை இரசிக்கிற அதை இன்னொரு உலகத்தோடு பகிர விரும்புகிற ஒரு ஆசிரியரது creativenessஐப் பொறுத்ததும் அல்லவா? அது எம்மிடம் எவ்வளவு இருக்கிறது என பயிற்சித்துப் பார்க்கிற போதுதான் எம்மைச் சுற்றியிருக்கும் சூழல்  எங்களையும் இயந்திரத்தனமான ஆசியர்களது சுழலுள் இழுத்துக் கொண்டு விட்டதா இல்லையா என்பது புரியும்.

எனக்கு சோலைக்கிளி புரியாது. இரண்டாம் வாசிப்பினை ஒரு சோம்பேறி வாசகியாய் செய்யாது விடுவதும் உண்டு; முதல் வாசிப்பிலும் நான் நேரடியாய்த் தான் அவரைப் படிப்பேன்.

என் பிரியமுள்ள உனக்கு எனத் தலைப்புத் தொடங்கினால் அதை எனக்காக எடுத்துக் கொள்வேன்

பிடி, அந்தக் குருவியைப் பிடி எனுகையில் ஒரு குருவியைப் பிடிப்பது பற்றி…

என் நெஞ்சுக்குள் நுழை எனுகையில் என்னை பிரியமுள்ளவாய் நினைக்கிற யாரோவினது நெஞ்சுக்குள் நுழைவது பற்றி…

அவர்களைக் கண்டதும் எனக்குள் இருந்த

குருவிகள் செத்தன – எனுகையில் எனது குருவிகளும் செத்தன? அந்த

இரண்டு கையிலும் தங்கள் முகங்களைத்

தூக்கி வந்தவர் துயரை

அறிந்ததும் எனக்குள் ஆறுகள் வற்றின (வற்றின?)

மலை இடிந்து சரிந்தது (சரிந்தது?)

உடம்பெல்லாம் வெந்து புழுத்தது (புழுத்தது?) – நான்

நார் நாராய்க் கிழிந்தும் போனோன் (போனோன்?)

அவரது பல கவிதைகளை இப்படிப் படித்து, பிறகு அவர் சார்ந்த சூழலின் பின்னணியில் யோசித்து யோசித்து, புரியாத நிறங்களுள் மண்டை குழம்பிப் போகும். குருவிகள் செத்தன ஏன்? தமது முகங்களைத் தாமே தூக்க வேண்டிய கொடுமை நேர்ந்தது எவ்வாறு? எங்கு? புரிய மறுக்கும். ஆனால், அப் பிரதியை அணுஅணுவாய் புரிந்தவன்/ள் விபரிக்கிற போது அதன் போதையை அனுபவிக்க முடிகிறது. மகாவலிபுரத்தினுள் கல்கியின் நாவல்களைப் படிக்காத பெண்ணாய் நுழைகிறது போன்ற ஒரு விசயம் தான் அது. குறையுமில்லை நிறையுமில்லை. எனதொரு இன்பத்தை அவன்/ள் புரியாதபோது அதை புரிய வைக்க முடிகிற தன்மைதான் முக்கியமானதேயொழிய – தடைகளிலிருக்கிற போது – ஒன்றை புரிய முடியாமை அல்ல. கேந்திரக் கணிதத்தில் (Geometry) விண்ணனான அருண் அதன் கோணங்கள் சொல்கிற போது அது கிளர்த்துகிற கலைத்துவ அதிர்வுகளைச் சொல்கிறபோது எனது ஆசிரியர் என்னையும் அதைக் ‘காண’ செய்திருக்கலாம் என்பது தான் தோன்றுகிறது. அது அனுபவம் தொடர்பானது. அனுபவங்கள் ஏற்படுத்துகிற கிளர்ச்சி தொடர்பானது. வரட்டுத்தனமாய் இலக்கங்களை கற்றுத் தருகிற ஆசிரியர்கள் எப்போதும் அனுபவத்தைக் கோட்டை விடுகிறார்கள். அவர்களிடமிருந்துதான் இலக்கியவாதிகளும் வந்தார்கள், தாம் வெறுத்த தகப்பனிடமிருந்து அதே குணங்களைக் கைக் கொண்டு விடுவதைப் போல அதைக் கைக் கொண்டவர்களாய்.

08

சஞ்சிகையில் எனக்குப் பிடித்தமான மற்றொரு உள்ளடக்கம், ஜெய்சங்கர் மற்றும் கருணாகரன் முன்வைத்த கவிதை ஒலித்தல் அரங்கம் பற்றிய கட்டுரைகள்:

நான் வாசித்திராத கோணங்கி, பல பிரதிகளை வாசித்த பிறகு பின் தொடராத பிரேம்.ரமேஷ் போன்றவர்களது இருப்பை (கலை மக்களுக்கானது, புரிதலுக்கானது என்கிற ஒரு போக்கினூடாக) மறுதலிக்காவிட்டாலும் (பின்னவர் எழுப்பிய வாசிப்பின் இன்ப போதைகள் கிளர்ச்சியானவை தான் என்றாலும்), ஒரு மேடையில் நின்று மனிதர்களோடு மனிதர்களாக உரையாடும்… அல்ல! ‘கதைக்கத் தொடங்கும்’ கத்தத் தொடங்கும் குரல்களின் மீது அபரிமிதமான விருப்பு என்னிடம் உண்டு. ஏனெனில் தனித்த அறையினுள் யாராலும் விளங்கப்படாது மனதினுள்ளும் தனித்துப் போய் புத்தியையும் பேதலித்த சொற்களை விடவும் யாரும் பெரிதாய் ஏங்கவிட முடியாது சக மனிதர்களுடான தோழமைக்கும் அன்பினது சிறு தொடுகைக்கும்.

வாசிப்பின்பத்தை வழங்காத அநாதரவான அந்தச் சொற்கள் அரங்கத்திற்காகவே ஏங்குகின்றன. தம்மைப் புரிய வைக்க விரும்பும், தமக்கான நீதி வழங்கக்கூடிய, ஒரு வெளியைக் கனவு காண்கின்றன. அந்த வகையிற் தனித்துப் போயுள்ள, அல்லது ‘அறிவுள்ள’வர்களது பிள்ளையாய்த் தனித்துப் போயுள்ள நவீனக் கவிதையின் அடுத்த கட்டமாய் அரங்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் ஜெய்சங்கரும் கருணாகரனும்.

மனிதர்களுக்குள் (அவர்களது கவிதைகளுக்குள்த்) தனித்திருக்கும் அத்தகைய சொற்கள் தான், போரும் போர் சார்ந்த வாழ்வும் அதன் அதிர்வுகளை அடக்க அடக்க போர்க்கால மனங்களுக்ளுள் கொண்டு வந்து சேர்ந்தவை, இன்னும் இன்னும் சேர்ந்திருப்பவை. ஒரு அனர்த்தத்தின் பின் (சற்றே மிகைப்படுத்தக் கூறின்) counseling (உள – நல – ஆலோசனை ) எவ்வளவு அவசியமோ அது போல தம்மை வெளிப்படுத்திவிடும் ஒரு அரங்கத்துக்கான அவசியத்தை (அடுத்த-கட்டத்-தேவையாய்)  ஈழத்திலுள்ள கவிதைப் பிரதிகள் கொண்டிருக்கின்றன.

ஜெய்சங்கர், கருணாகரன் கூறுவதுபோல கவிதா நிகழ்வு என 80களிற் சமூகமயப் பட்டிருந்த அவற்றினது ஆயுள் குறுகிய காலத்தில் முடிவுற்றது. அவை வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. விலைமதிப்பற்ற அருமருந்தான உயிர்களைப் பறித்ததன்றி இந்தப் போர் எதைத்தான் வளர்த்தெடுத்தது? வாழ்விற்காய் உருவாக்கித் தந்தது? தமது தனித்தன்மையான கூத்து, நாடகம், கவிதா நிகழ்வு என்பதான பரிமாணங்கள் அடங்கி கவிதைகளும் தமக்குள் அடங்கியதாய் மாறின. அவற்றின் பேசுபொருட்கள் ஒரு குறிப்பிட்ட வாசிப்பு/அறிவு வர்க்கத்தினுள்ளே தான் சுற்றித் திரிவனவாயின. மாறாய், பகிர்தல் ஒன்றே மக்களுக்கானது. எதையும் தனக்குள் வைத்திருக்காமல், தனிநபர் சேகரமான புத்தகங்களை பொதுநூலகங்களுக்கு வழங்கிவிட்டு, ஆண்-அதிகாரம் கட்டமைத்த இந்த சமூக அமைப்பில், அதைத் துப்பரவாக்கத் தன் உடலைப் பகிருவதாய்க் கூறும் ஜமீலா போன்ற ஒரு பாலியல் தொழிலாளி போல, கலைகள் தமது உன்னதமான அல்லது பாவனை நிறைந்த கட்டுக்களை மீறி அரங்கத்துக்கு வரட்டும். அவை பேசிய கருத்தியல்களும் விழைபுறும் மாற்றங்களும் பார்வையாளர்கள்முன் வைபடட்டும்.

07

இந்த சஞ்சிகையில், தவிர்க்கக் கூடிய விசயமாய்ப் பட்டது, வழமையாய் பல பேர் குறிப்பிடுகிற ஒன்றுதான்:

— – அவன், வாசகன், மாணவன், இத்தியாதி என்று, கட்டுரைகளில் வருகிற பொதுப்பாலாய் இருப்பது ஆணுக்கான ‘ண்’ விகுதி .

அவள்களை

வாசகிகளை

மாணவிகளை

உள்ளடக்காத இந்த பொதுமொழி ஆசிரியன்களின் மேலாண்மையைத்தான் காட்டுகிறது. வாசகன் அல்லது வாசகி என எழுதுவதில் பக்கங்களை நீட்டிக்கும் அபாயம் இருப்பின் வாசகி என்றே எழுதலாம், ஏனெனில் எது குறைவாக பொது வழக்கில் உபயோகிக்கப்படுகிறதோ அதைப் பொதுவாக உபயோகிப்பதே மாற்றுக்களுக்கான முதல் மாதிரியாய் இருக்கும். இது தவிர: போருக்குப் பின்னான பெண் எழுத்துக்களது பங்களிப்பையும்  இனி வரும் இதழ்களில் எதிர்பார்க்கிறேன்.

இறுதியாய்: கலை இலக்கிய வெளிப்பாடு என்கிறதவிர போரிற்குப் பிந்தைய “இலங்கை”யுள் ஒரு பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற இந்த சஞ்சிகை அதன் காரணமாகவும் மிக முக்கியமானது.  இலக்கிய ஆர்வமுள்ள வாசகர்கள் ரொறன்ரோவில் மறுபாதி இதழ்களை பெற விரும்பின் தொடர்புகொள்ளலாம்:

சேனா – senavaraiyan@gmail.com – 416-559-7362 . தீபா – ktdeepa@gmail.com

—————————————–

மறுபாதி

கவிதைக்கான காலாண்டிதழ்

ஆசிரியர்: சிந்தாந்தன்

இணை ஆசிரியர்: மருதம் கேதீஸ், சி.ரமேஷ்

—————————————–

Advertisements

Lumumba Film Screening – லுமூம்பா படத் திரையிடல்

February 3, 2010 Leave a comment

Lumumba (2000); Length of the film: 114 minutes

If you interested in movies (especially the ones related to civil wars and similar struggles perpectuated by colonial countries for their self-interest) and in Scarborough, welcome this Saturday @ Scarborough Civic Centre @ 2 p.m. to watch “Lumumba” – based on the life of Congo’s first prime minister Patrice Lumumba in the last months.

No brutality, no agony, no torture has ever driven me to beg for mercy, for I would rather die with my head high, my faith unshaken, and a profound trust in the destiny of-my country, than live in subjection seeing principles that are sacred  to be laughed to scorn.  History will have it one day-Not the history they teach in Brussels, Paris, Washington or the United Nations, but the history taught in the countries set free from colonialism and it’s puppet rulers, Africa will write her own history, and both north and south of the Sahara.  It will be a history of  glory and dignity.
Do not weep, my love; I know that my country, which has suffered so much, will be able to defend it’s independence  and liberty.
Long live the Congo!
Long live Africa!
~ From The Last letter Lumumba wrote to his wife before his assassination.

லுமூம்பா Lumumba (2000)
இயக்குநர்: Raoul Peck

இத் திரைப்படம் 1960களில் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற கொங்கோவின் முதல் பிரதமர் பற்றீசியா லுமும்பாவின் இறுதி நாட்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. விடுதலை பெற்ற கொங்கோ, இரு மாதங்களுக்குள் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் துணையுடன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, லுமும்பா உள்ளிட்ட தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்கள்.

…வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா.விலோ வாசிங்டனிலோ பரிசிலோ bபிறஸல்சிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக, காலனி ஆதிக்கத்திடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆபிரிக்கா தனது சொந்த வரலாற்றைத் தானே எழுதும். அது சகானா பாலைவனத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதைச் சொல்லும் வரலாறாக இருக்கும்.
(லுமூம்பா தனது மனைவிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து)

“லுமூம்பா: இறுதி நாட்கள்” (மொழிபெயர்ப்பு: எஸ். பாலச்சந்திரன். விடியல் பதிப்பகம்)

*********************************************************************
இத்திரைப்படம் பெப்ரவரி 6, சனிக்கிழமை, 2:30இற்கு திரையிடப்படுகிறது. ஆர்வமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள்..
தொடர்புகளுக்கு: சேனா – 416 559 7362
*********************************************************************
For further info, contact: Sena (416) 559 7362 . senavaraiyan@gmail.com

1084 இன் அம்மா

December 18, 2009 1 comment

உண்மையைத் தேடி ஒரு பயணம்!

மணிதர்ஷா

பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் வலிகள், பின்னர் அவர்கள் இல்லாது போகும்போது அந்த வெறுமை கொடுக்கும் வலிகள், தவறான வழியில் போகும் பிள்ளைகள் கொடுக்கும் வலிகள், கணவனால் துன்புறுத்தலுக்குள்ளாகி அதிலிருந்து மீள முடியாத வலிகள், சிந்திக்கத் தெரிந்த பிள்ளைகள் யாரோ ஒரு முட்டாளின் கைகளில் சின்னாபின்னப் படும்போது ஏற்படும் வலிகள். இந்த எல்லா வலிகளுமே எமது தாய்மாருக்கு வலிந்து திணிக்கப் பட்டுள்ளது.

பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே போகிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்று எங்களில் எத்தனை தாய்மாருக்குத் தெரிந்திருக்கிறதெனச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு மூடப்பட்ட தங்களின் உலகங்களைத் தவிர வேறு ஒன்றுமே தெரிவதில்லை. அதற்காக எமது அம்மாக்கள் எல்லாம் முட்டாள்களல்ல. அவர்கள் முட்டாள்கள் ஆக்கப் பட்டிருக்கிறார்கள். தங்கள் கணவன்மாரால். எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் தமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு, குலங் கோத்திரங்களுக்கு ஏற்றவகையில் அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது எமது ஆண்நிலைப்பட்ட சமூகம்.

இந்த வகையில் கணவனின் மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வறட்டுக் கௌரவங்களுக்கும் ஆட்பட்ட உயர்நடுத்தர வர்க்கக் குடும்பத்திலுள்ள படித்த, வேலைசெய்யும் தாய். அந்த மூடச்சம்பிரதாயங்களையும், வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்தொதிக்கி ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்கான உலகத்தையும் சிருஷ்டிக்கும் கனவுகளுடன் போராடப் புறப்பட்ட மகன். இவர்களுக்கிடையிலான உறவும் பிணைப்பும், புரிதலும் புரியாமையும் தான் கோவிந்த் நிஹாலினியின் 1084இன் அம்மா என்கிற திரைப்படம்

(Mother of 1084).

கோவிந்த் நிஹாலினி 1940ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தார். 1947 இல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் வசித்து வருகிறார். 1962ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள ஸ்ரீ ஜெய சாம்றயேந்திரா உயர் கல்லூரியில் ஒளிப்படக்கலை சம்பந்தமாகப் பட்டம் பெற்றவர். இந்தியாவின் பிரபல இயக்குனரான ஷ்யாம் பெனகலின் ஆரம்பகாலப் படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது கிறிஷ் கர்னாட், சத்யஜித்ரே படங்களுக்கும், ஒஸ்கார் விருது பெற்ற றிச்சார்ட் அற்றென்பெறோவின் காந்தி படத்திற்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஹாலினியும், பெனகலும் பல சமூகப் பிரக்ஞையுள்ள படங்களை இயக்கியுள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்ட சமூகப் பிரக்ஞையுடைய திரைப்படங்களை கோவிந்த் நிஹாலினி இயக்கியுள்ளார். அந்தவகையில் பெண்ணியவாதி, சமூகசேவையாளர், எழுத்தாளர் என்று பல வகையிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மகாஸ்வேதாதேவியின் நாவலான Mother of 1084 என்கிற நாவலைத் திரைப்படமாக தந்துள்ளார் கோவிந்த் நிஹாலினி. இதற்கான திரைக்கதையையும் நிஹாலினியே எழுதியுள்ளார். இந்தத் திரைப்படம் 1998ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது


நாங்கள் இளைஞர்கள் அம்மா. இள ரத்தம். நாங்கள் இந்த நகரத்தைச் சிவப்பாக்க விரும்புகிறோம். பாதுகாப்பில்லாத இந்த நகரத்தை ரோஜா மாதிரி சிவப்பாக, புரட்சிச் சிவப்பாக, இரத்தச் சிவப்பாக நாங்கள் மாற்றப் போகிறோம்.”

நாங்கள் இந்த நகரத்தை அதன் பாதுகாப்பற்ற தன்மையிலிருந்தும் பயங்கரம் மற்றும் அச்சத்திலிருந்தும் விடுவிக்க விரும்புகிறோம். இத்தனை வருடங்களாக பயத்தினுள் எங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம்.”

நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலைமைகள், இந்தச் சமூகம் எல்லாவற்றையும். அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்.”

இருட்டினில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொண்டு வருவது பற்றி நான் கனவு காண்கிறேன். என்னுடன் உள்ள நண்பர்களுடன் நான் இந்தக் கனவைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய கனவுகளைப் புரட்சியினூடாக நிதர்சனமாக்க விரும்புகிறோம். நாங்கள் ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். சமத்துவம், சமாதானம், நீதி என்பவற்றை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு புதிய உலகமாக அது இருக்கும்.”

1970களில் கல்கத்தாவின் வீதியெங்கும் இந்தக் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். நக்சல்பாரி இயக்கம் இதற்கு தலைமை தாங்கி வழி நடத்தியது. இது பண்ணையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிரானதுமான விவசாயப் புரட்சியாக வெடித்தது. மார்க்ஸ், லெனின், மாஓ போன்ற மாபெரும் தலைவர்களது கொள்கைகளை அடியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் தமது கல்வியைத் துறந்து இணைந்து கொண்டிருந்தனர். இந்த இயக்கம் கல்கத்தாவில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாடு உட்பட பரவி வளர்ச்சி பெற்றது. இவ்வாறு இந்த இயக்கத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறி அன்றைய அரசாங்கம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டு உயிர் துறந்தனர். அவ்வாறு நக்கசல்பாரி இயக்கத்தில் இணைந்து பின்னர் சக நண்பனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்த ஊர்ப் பண்ணையாளர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பிரத்தி என்ற இளைஞனும், அவனது நண்பர்களும்.

படம் அதிகாலையில் வரும் ஒரு தொலைபேசி அழைப்புடன் ஆரம்பிக்கிறது. பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 1084 ஆம் இலக்க பிணத்தை அவளுடைய மகனுடையது தானா என அடையாளம் காட்ட வருமாறு பொலிஸிலிருந்து அழைக்கும் குரல். அவள் பிணவறைக்குச் சென்று பார்க்கிறாள். அவளுடைய மகன் பிரத்தி கொல்லப்பட்டு விட்டான். அந்தப் பிணத்தினுடைய எண்தான் 1084. தாயினால் அடையாளம் காட்டப்படும் பிரத்தியின் உடல் பெற்றவளிடம் ஒப்படைக்கப்படாமல் பொலிஸாராலேயே எரியூட்டப்படுகிறது.

ஆனால், பிரத்தியினுடைய தந்தைக்கோ சகோதரர்களுக்கோ அவன் கொல்லப்பட்டது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மாறாக அவனுடைய நக்சல்பாரிச் செயற்பாடுகள் பற்றி பத்திரிகைகளில் வந்து விடக் கூடாது. அதனால் தமது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுபவர்களாக வெறும் சுயநலமிகளாக இருக்கிறார்கள். பிரத்தி என்று ஒருவன் இருந்தான் என்பதையே அவர்கள் மறந்து போகிறார்கள். அவனைப் பற்றி நினைப்பதையே பாவக்கேடாகக் கருதுகிறார்கள்.

ஆனால் தாயால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் மகன் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறாள். அதுவரை தனது மகன் எங்கே போகிறான், எப்போது வருகிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறியாத தாய், மகனுடைய இறப்பின் பின்பே அவனைப் பற்றி இவ்வளவு காலமும் தான் அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்து வருந்துகிறாள். மகனைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவனுடைய நண்பர்களைத் தேடிப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை அது அவளுடைய மகனைப் பற்றி அறியும் பயணமாக மட்டுமல்லாது அது ஒரு புதிய உலகத்தையே அவளுக்குக் காட்டப் போகிறது என்று.

பிரத்தியுடன் படுகொலை செய்யப்பட்ட அவனுடைய நண்பனின் தாயைச் சந்திக்கிறாள். அந்தத் தாய் பிரத்தியைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தான் அறிந்து கொள்ளாத ஒரு உலகத்திற்கும் பிரத்திக்குமான உறவு அவளுக்குள் அதிர்வையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மகனின் மீதான அவளுடைய மதிப்பு உயர்கிறது.

பிரத்தியின் காதலியும் நக்சல்பாரி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான நந்தினி பிரத்தியைப் பற்றி இன்னொரு உலகத்தை அவளுக்குத் திறந்து காட்டுகிறாள். மகனைப் பற்றி மட்டுமல்லாது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் ஒரு பயணமாக அவளுடைய இந்தத் தேடல் அமைந்து விடுகிறது.

போராளி மகனைப் பற்றிய அவளுடைய தேடல் இதுவரை அவள் கண்டுகொள்ளாதிருந்த ஒரு உலகத்தை அவளுக்குத் திறந்து விடுகிறது. அன்றாட உணவுக்கே அல்லற்படும் மக்கள், பணக்கார ஆதிக்க சாதியினரால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஏழை விவசாயிகள், காலங்காலமாக அடிமைகள் போல உழைத்து ஓடாகிய மக்கள் கூட்டம். இவர்கள் எல்லாம் அவள் வாழ்கிற அதே கல்கத்தாவில் தான் வாழ்கிறார்கள். ஆனால் கல்கத்தாவில் இப்படி ஒரு நிலைமை இருந்தது தெரியாமலே அவள் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் அவளுடைய மகன் பிரத்தியினுடைய நண்பர்கள் வட்டம் இந்த ஒடுக்கப்பட்டவர்களினாலேயே சூழ்ந்துள்ளது. அவன் இவர்களில் ஒருவனாக வாழ்ந்திருக்கிறான். இவர்களுக்காக போராடியிருக்கிறான். அந்தப் போராட்டத்திலேயே அவன் மரணித்திருக்கிறான். இதன் பின்னர் இவ்வளவு நாளாக தன் மகனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என்ற ஆதங்கமும் கழிவிரக்கமும் மேலிட தனது வீட்டிலுள்ளவர்கள் மீதும், தனது உயர்குடி சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது. அந்த வெறுப்பு தனது கணவனைப் புறக்கணிக்க வைக்கிறது, மகளின் படாடோபமான திருமண வைபவத்தைக் கூடப் புறக்கணிக்க வைக்கிறது.

பிரத்தி, நீ இந்த அறையில் பல பொருட்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளாய். எனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. மணிக்கணக்கில் தனியாக இந்த அறையில் இருந்திருக்கிறாய. அதைக்கூட நான் பெரிதாக உணரவில்லை, சாதாரணமாக உன்னுடைய வயதில் இருப்பவர்களுக்கிருக்கும் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள், கனவுகளோடு இருக்கிறாய் என்றே நான் நினைத்தேன். ஆனால் நீ ஆபத்துக்களோடு இருந்திருக்கிறாய்? நான் உன்னுடைய அம்மா. ஆனால், எந்த மாதிரியான அம்மா? உன்னைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாத, அறிந்து கொள்ளாத அம்மா. உன்னுடைய முகத்தில் தெரிந்த புன் சிரிப்பையும், அமைதியையும் கண்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அம்மாஎன்று தன்னைத்தானே நொந்து கொள்கிறாள். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகளவு அன்பும், அக்கறையும் கொண்டு அவர்களுக்காகவே வாழ்ந்த தனது மகனைத் தான் விளங்கிக் கொள்ளாதற்கான தண்டனை தான் தன்னுடைய மகனுடைய இந்தப் பிரிவு என்று தேம்புகிறாள்.

மகனை தொடர்ந்த தாய் அவனது இலட்சியங்களைப் பின் தொடர்பவளாகிறாள். தன்னுடைய வங்கி வேலையை இராஜினாமா செய்யும் சுஜாதா, மனித உரிமைகளுக்கான ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி மனித உரிமைகளைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறாள். நந்தினியும் பழங்குடி மக்களின் உரிமைகளைக் காக்கும் போராளியாக தன் வாழ்வைத் தொடர்கிறாள்.

நந்தினி ஒரு போது பிரத்தியின் தாயிடம் சொல்கிறாள், “எதுவும் இன்னும் மாறிவிடவில்லை. சுரண்டலும் கயமையும் அயோக்கியத்தனமும் அதிகாரமும் தொடர்ந்து நிலவுகிறதுஎன்று.

அந்த வரிகள் எவ்வளவு உண்மையானது. அன்றிலிருந்து இன்றுவரை தமது சுய இலாபங்களுக்காக காட்டிக் கொடுப்பும், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. அதை நாங்கள் எமது கண்ணூடே பார்த்த வண்ணம் கையாலாகாத்தனமானவர்களாகத்தான் இருக்கிறோம்.இன்றும், தமது பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாத அம்மாக்கள் கயவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட, காணாமற்போன தமது பிள்ளைகளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கோவிந்த் நிஹாலினி அந்தத் தாயினுடைய பயணத்தூடாக எங்களையும் பயணிக்க வைக்கிறார். நாங்கள் அறிந்து கொள்ளாத, எமது ஊடகங்கள் எங்களுக்குக் காட்டாத, எமது சினிமா எங்களுக்கு மறைக்கிற ஒரு உலகத்திற்கு எங்களைப் பயணிக்க வைக்கிறார். அந்தப் பயணம் மறைக்கப்பட்ட உலகத்தை, மறைக்கப்பட்ட உண்மைகளை எங்களைத் தரிசிக்க வைக்கிறது. அந்த உலகத்தை எங்களுடன் நெருங்க வைக்கிறது. எங்களுடைய அறியாமை இருளின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.

0

செப் ஒக், 2007 (தாயகம் இலங்கை)

[இதன் திரையிடல் ரொறன்ரோவில் வரும் ஞாயிறு நடக்கவிருக்கிறது]

“பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +

December 17, 2009 5 comments

“பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் + இலங்கையிலிருந்து சில புத்தகங்கள் அறிமுகம்

__________________________________

“நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலைமைகள், இந்தச் சமூகம் எல்லாவற்றையும். அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்.”  “இருட்டினில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொண்டு வருவது பற்றி நான் கனவு காண்கிறேன். என்னுடன் உள்ள நண்பர்க ளுடன் நான் இந்தக் கனவைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய கனவுகளைப் புரட்சியினூடாக நிதர்சனமாக்க விரும்பு கிறோம். நாங்கள் ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். சமத்துவம், சமாதானம் நீதி, என்பவற்றை எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு புதிய உலகமாக அது இருக்கும்.”

1970களில் கல்கத்தாவின் வீதியெங்கும் இந்தக் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன.

இவ்வாறு இத் திரைப்படத்தை அறிமுகம் செய்திருந்தார் மணி தர்சா (2007 இலங்கை).

ஆம்.  1970களில் இந்திய அரசால் ஒடுக்கப்பட்ட வங்காள கிளர்ச்சியில் தன் அன்புக்குரிய மகனை இழந்த அம்மாவின் கதை இது.  30 வருடங்களுக்கு மேலாய் போரினில் தம் எண்ணற்ற பிள்ளைகளை இழந்த எமது நிலத்தின் தாய்மாரது குரலுக்கு நெருக்கமானதாய் ஒலிக்கிறது.  பிள்ளைகளை இழத்தலின் வலியை கூறும் இத் திரைப்படத்தின் கதாசிரியர் ஆச்சரியத்துக்கு இடமின்றி வங்காளத்தில் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த மஹாஸ்வேதா தேவி என்கிற பெண் மனிதஉரிமைப் போராளியே ஆவார். ஹிந்தியில் புகழ்பெற்ற கோவிந்த் நிஹ்லானியால் இயக்கப்பட்ட இத் திரைப்படத்தின் திரையிடல் மார்கழி 20 – வரும் ஞாயிறு 2:30 pm – Torontoவில் Scarborough Civic Centerஇல் இடம்பெறுகிறது.

FEAR of intimacy – (01)

November 2, 2007 Leave a comment

film01

ஹொங்கொங்கில் அவளது முதலாவது நாள். “ஹொங்கொங் முன்புபோல இல்லை. மிக மோசம் பார். நீ இதற்குள் தொலைந்து போய் விடாதே” இப்படித்தான் விளையாட்டாய் அவளிடம் கூறுகின்றான் இளம் Fai. தொலைவில் கடல் ஆர்ப்பரித்திருக்க அவனது அருகாமையில் புன்னகைக்கிறாள் இளம் Bo.

ஓர் பத்திரிகைத்தொழில்சார் புகைப்படப்பிடிப்பாளனான அவன், பிறகு – தனது வேலைகளுள் – அவளை மறந்து விடுறான். வேலையிலிருந்து அழைப்பு வருகிறபோது அவசர அவசரமாய் கிளம்பிப் போவதும், வந்து அதே இயல்பில் உறவுகொள்வதும், அவளைத் தொழில்-நேர்முகத்திற்கு கொண்டு செல்ல வருவதாகக் கூறி அதை மறந்து விடுவதும், அதை ஈடுசெய்ய உணவகத்திற்குக் கூட்டிப் போகிற வழியில், அவள் அவனைக் ‘குறை சொல்ல’ நடுத் தெருவில் இறக்கி விட்டுப் போய் விடுவதுமென அவன் இருக்கிறான்… வேலைத்தலத்தில் தரப்படுகிற வேலைகளுள் வெறித்தனமாய் ஈடுபடுகிற அவனுக்குத் தன்னைத் தவிர ‘அவளுடைய நியாயங்கள்’ எதுவும் புலப்படுவதில்லை; எந்த முன்தயாரிப்புமின்றி அவளை, அவளை-அவனிடம் வரச் செய்த வாக்குறுதிகளை மறந்து போகிறான்.

Vincent Chui இயக்கிய இத் திரைப்படத்தின் பேசுபொருளாக/ள்களாக நவீன உறவுகளின் சிக்கல்கள், நெருங்குதலின் (intimacy), commitments + அதன் கடமைகள் மீதான பயங்கள் என்பன இருக்கின்றது/ன. பால் பேதங்களுக்கப்பால் – இந்த நவீன தலைமுறை தன்னைச் சுற்றியே இயங்குகிறது; வேலை, கணிணி, walkman அனைத்தும் தன்னுடனே உரையாடுகிறது. ஒரு உறவை ஏற்றுக்கொள்வது என்கிற commitment/responsiblity அச்சம் தருவதாக உள்ளதுடன், வாழ்வை ஒருவருடன் – அவருடைய எதிர்பார்ப்புகளுடன் – பகிர்வது என்பது இதுவரையில் பழகியிராத பெரும் சமரசமாய் மாறுகின்றது.

தொலைவிருந்து அவன்மீதான பிரியங் காரணமாக, இளமையின் துடிப்புடன் வந்த Bo, ‘வழமை’ பிசகாது தொடர்ந்து வந்த நாட்களில் ஒருநாள் அவனுடன் ‘இருந்த’ அந்த வீட்டிலிருந்து –எந்த விளக்கமோ பிரிவு வார்த்தைகளோ அற்று– காணாமற் போய் விடுகிறாள். அவள் தவிர இருந்தவை இருந்த இடத்திலேயே இருக்க அவளைக் காணாது நீண்ட நேரம் தவித்துவிடவில்லை அவன்; சீக்கிரமே வழமைக்குத் திரும்புகிறான்.

நவீன நகரங்களின் தற்கால உறவுகளை மைய்யமாய்ப் பேசுவதாலும், சமகாலத்தில் இந்தப் “பயம்” தனியே குறிப்பிட்ட பாலிற்குரியதல்ல என்பதாலும் – கதைசொல்லல்முறை அல்லது எதிலும் {எனக்கு}’சொல்லும்படியாய் ஏதும் கூற இல்லாத போதும்’ – இந்தப் படம் தொடர்ந்து யோசனையில் வந்துகொண்டிருந்தது. நகரத்தை மையப்படுத்திய, வேலைப்பளு, அழுத்தங்கள் நிறைந்த நகரவாழ் பின்புலத்தில் ‘கண்ணுக்குக் குளிர்ச்சியாய்’ ‘சொல்லும்படியாய்’ எதுதான் இருக்கும்?? இப்படத்திற் வருகிற சில நிமிடப் பாலுறவுக் காட்சிகளும் நகரத்தின் அழுத்தங்களையும் அவசரத்தையுமே பிரதிபலிக்கின்றன.

வருடங்கள் கழிய, Fai, இப்போது “சூடான செய்திகளிற்கான’ புகைப்படப்பிடிப்பாளனாக; கிளப்புகளில் அந்நிய ஆண்களைப் புணர்கிற, ‘ஒழுக்கமற்ற’ ‘பணக்கார’ மனைவிமாரைப் படமெடுத்துப்போட, துடிப்பான “புதிய” “இளம்” பெண் நிருபருடன் ஒரு கிளப்பிற்கு முன் காத்திருக்கையில் -என்றோ ஒருநாள் சொல்லாமற் கொள்ளாமல் காணாமற் போன- Bo-வைக் காண்கிறான். நிறையக் குடித்துவிட்டு, இவனுடைய nephewவுடன் அவள், காரில் ஏறிப் போவதைக் கண்டு ஆத்திரமுற்று, அவனைப் போய் அடித்து, விசாரித்து, அவளை அவர்களிருந்த அந்த கடற்கரை வீட்டிற்கு வர வைக்கிறான்.

அங்கு Anson-னைக் காண வருகிற Bo, இவனைக் கண்டதும் கோபமாய் கடலை நோக்கி நடக்கிறாள்.
***

“யாருக்காகவும் காத்திருக்காத வாழ்வே சிறந்ததும்” இப்படிச் சொன்னாள் நண்பியொருத்தி. அவனை விட்டுப் போய் அவள் ‘தேர்ந்தெடுத்த’ வாழ்வுமுறையில், எந்த வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும் மோசங்களும் இல்லை. ஹொங்கொங்கின் மோசமான உலகம் அவளை விழுங்கியிருக்கலாம். ஆனால் நேசத்தை உணராத அல்லது இருத்தல் கவனிக்கப்படாத சூழலைவிட மோசமல்ல அது. உடல் ஒழுக்கம் அல்லது உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் நோக்கின், அவளது வாழ்வை அவள் ‘அழிக்கிறவளாய்’ இருக்கலாம். ஆனால் தேவையானபோது இல்லாத யாரின் பொருட்டும், தான் ‘வாழாமல்’ அதை அழிக்கவில்லை. வாழ்க்கை ‘வாழப்பட்டு’ வீணாக்கப்படுகிறது. தனக்கான திட்டமற்ற ஒரு திசையில், அத் திட்டமற்ற தன்மையில், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவளிடமே இருக்கிறது. ஆகவே அது சிறந்ததே.

நவீன வாழ்வுமுறைக்கு உணர்ச்சிகள் எதிரானவையாக இருக்கின்றன. உணர்ச்சிகரமான ஒவ்வொரு (மரபான) சொல்லிலும், நிறைய உள் அர்தத்ங்கள் இணைக்கப்பட்டுள்ளன. “காதல்” “குடும்பம்” எனப்படுகிற நிறுவனங்கள், பதிலாய், {அவையவைக்கான} commitments, கடமைகள், நேர்மை என்பனவை வேண்டுகின்றன. அவற்றிற்குத் தகவாய், அன்பையும், தன் ‘இருப்பை’ உணர்தலையும் , ஒன்றாய் செலவிட (உரையாட) ‘நேரத்தை’யும் ஒருவனிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இளம் Bo ஏமாந்து போகிறாள். அவள் முன் இரண்டு தேர்வுகள்: (1) தொடர்ந்தும் (கவனிக்காத அவனிடமே) அவற்றை எதிர்பார்த்து, அவ் எதிர்பார்ப்புகள் நிவர்த்தியற்று, ஏமாற்றப்படுபவளாயே இருப்பது; (2) அவன் மீதான விருப்பத்தை மீறிக் கடந்து போவது.

தம் 30களின் பிறகு, Fai-உம் Bo-உம் சந்திக்கிற போதும், அதே கடற்கரை ஆர்ப்பரிப்புடன் இயங்குகிறது. ‘விளக்கம்’ கேட்கிற அவனிடம், “உன்னிடம் மீண்டும் திரும்பி வந்தாலும், ஒருநாள் நான் இப்படித்தான் ஓடிப் போவேன். உன்னில் நேசம் இருந்தாலுங்கூட. நீ குற்ற உணர்ச்சியடையாதே. நான் உன்னால ‘இப்படி’ ஆகவில்லை. இன்று: இந்த உலகத்திலேயே சந்தோசமா இருக்கிற பெண்களில் ஒருத்தியாய் நான் இல்லைத்தான். ஆனால் அது பறவாயில்லை {ஒன்றும் மோசங் கிடையாது}. நான் இப்போதும் உன்னிடம் -நிறைய எதிர்பார்ப்புகளுடனும் கனவுகளுடனும் – வந்த அந்த இளம் Bo கிடையாது, எனக்கு வயதாகிவிட்டது” என்கிறாள்.

அவளது திடீர் ‘தலைமறைவாலே’யே அவன் பிறகு வந்த உறவுகளில் ஈடுபாடற்றும், பட்டும் படாமலும்(!!), ஒருவருடனும் ஒட்டாதவனாக, ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டே, ‘புதிய’ நிருபரில் ஆர்வமுறுபவனாக, தனியே ‘ஒரு பெண்ணுடன், நேசமாக ‘நெருங்குவதற்கு’ அச்சத்துடன் இருக்கிறான் எனவுமும் படத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், அவளது ‘விளக்கத்திற்குப்’பிறகு பெரும் குற்றஉணர்ச்சியிலிருந்து விலகியவனாய் தனக்குப் பிடித்தமானவளிடம் திரும்புவதாகக் கதை தொடர்ந்தாலும், இளமையில் அவனிடமிருந்த நெருங்குதலுக்கான பயமே அவள் பிரியவும், அவளை அன்றைய தன் ஏராளம் வேலைகளுள் முக்கியப்படுத்தாதிருக்கவும் காரணமாய் இருந்திருக்கிறது. அதுவே நவீன நகரங்களில் உறவுகளின் மைய்யக் கூறும்.

ஆனால் அத்தகைய ‘பயம்’ நிரம்பியவர்களுள், தன்னுள் சேகரமான மரபான சொற்களூடாக சுமந்த ‘இனிய’ எதிர்பார்ப்புகளுடன் வருகிற Bo, தன்னை Rebound(மீள்சுழற்சி?)-இல், ஏமாற்றங்களை மட்டுமே தரும் தமது ஆண்(/பெண்)களிடம் மீள மீள செல்வதை மீறி, தெரியாத அந்நியர்களுடன் வாழ்வை ‘எதிர்பார்ப்புகளற்ற’ {மற்றவர்களின் கண்ணோட்டத்தில்} ‘சிதைதலிற்கு’ ஒப்புக் கொடுப்பது அர்த்தமுடையதாய்த் தெரிகிறது. அந்த வகையில், அவள் போன்ற ஒருத்தியை {”corporate chick”?}, பொம்மை ‘மனைவி’யாய் கொண்டு திரிய விரும்புகிற -இவளிற்கு அவனிடமோ அவனிற்கு இவளிடமோ எந்த எதிர்பார்ப்புமற்ற – ஒரு ‘பணக்கார கணவனின் தகுதி’க்கு பொருந்துகின்ற ‘அழகிய மனைவி’யாய், தன் பாத்திரத்தை செய்துகொண்டே தனதான உலகை நிர்ணயிக்கவும் முடிகிறது.

ஒருவகையில் இந்த மனிதர்கள் எவரது வாழ்வுமுறையிலும் எமது மதிப்பீடுகளை வைக்கத் தோன்றாததே இப் படத்தின் சிறந்த பண்பாகப் படுகின்றது. இதில்: Bo, Fai மட்டுமல்ல, நவீன யுகத்தின் யுவர்கள், யுவதிகள் சிறு பாத்திரங்களாக வந்து போகிறார்கள். Fai-இன் nephew, Anson ஒரு வீடு விற்பனை முகவன், அவனுக்கு வங்கியில் அதிகக் கடன் உள்ளதால் நிறைய வீடுகளை விற்க வேண்டியிருக்கிறது. சமயங்களில், வீடு வாங்க வரும் அவனிலும் இருமடங்கு வயதான பெண்கள் தம் பாலியற் தேவைக்கு இளம் Anson-ஐயும் (அவன் அவர்களையும்!) உபயோகித்துக் கொள்வதும், பாரில் ‘பணக்கார’ப் பெண்கள் இளம் யுவர்களை உபயோகிப்பதும் காட்டப்படுகிறது. இப்படத்தின் பின்னணியான, உயர், நடுத்தரவர்க்க சூழலில், குடும்பம், பெண் ஒழுக்கம்; நிறுவனங்களின் உடைவு யாருடைய மதிப்பீடுகளையும் வேண்டாமல் (பட்டிமன்ற முடிவுகள் பார்க்காமல்!!) நிகழ்ந்தபடியே இருக்கிறது. முகத்திற்குப் பூசும் கிறீம் முதற் கொண்டு பொருட்களிலிருந்து வானொலி நிலையங்கள் வரை “தேர்வுகளால்” (choices) நிறைந்திருக்கிறது அவர்களது உலகம். இறுதியில்: தமக்கு முன் கிடக்கிற எல்லையற்ற தேர்வுகளுள் எதை நோக்கித் தம்மைத் திசை திருப்புவது என்பதறியாத குழப்பமும் (அல்லது அத் தேர்வுகள் சகலத்தையும் அடைய விரும்பும் இடையறா விழைபின்) அயர்ச்சியும், மதுக் கோப்பைகள் கிடக்கிற மேசை மீது போதையில் கவிழ்ந்திருக்கிற தலைகளுடன் கூடவே கவிழ்ந்திருக்கின்றன.

****
Tsui tsong aan chin yen [Fear of Intimacy (2005)], ஹொங்கொங், Cantonese, 97 நிமிடங்கள் / மைய நடிகர்கள்: Bo (Mei Ching Lam). Fai (Tony Leung Ka Fai), Anson (Wing-Hong Cheung)

Canada’s Genocide [Doc Film]

October 23, 2007 Leave a comment

கனடாவின் இனப் படுகொலை (ஆவணப் படம்); “UNREPENTANT”

http://video.google.ca/videoplay?docid=-6637396204037343133&q=unrepentant&total=124&start=0&num=10&so=0&type=search&plindex=0

மேலும் புரிதல்களுக்கு: வரலாற்றிலிருந்துமறைக்கப்பட்டவை

சீடாரின்மீது வெண்பனி விழுகிறது – ஜென் கவிதைகள்

June 21, 2005 20 comments

மலையின் ஆழ்சரிவுகளில்
காலடியில் க்ரிம்ஸன் இலைகள் நசுங்கத்
திரிந்தலையும் கலைமான் அழைக்கிறது.
அதன் தனிமைக்குரலை நான் செவியுறும்போது,
இந்த இலையுதிர் காலம்தான்
என்ன சோகம், என்ன சோகம்!
0

ஸாருமாரு
ஆண்.ஜப்பான்.9ஆம் நூற்றாண்டு

ப்பானைப்பற்றி நிறைய பிரேமை உண்டு; அத் தேசம், ‘பொம்மை’ போன்ற அழகிய பெண்கள், மென்மை, சாந்தம், அழகு + ‘ரஃப்’ ஆன ஆண்கள்! வன்கூவருக்கு வருமுன்னம் இந் நகரம் பற்றிய சித்திரத்துடன் இங்கு வசிக்கிற ஜப்பானியர்கள் பற்றியதும் கலந்திருந்தது. சிறு வயதுக் கதைப் புத்தகங்களில் நீண்ட மெல்லிய மீசையுடன் சிறிய மீன் கண்களுடன் பின்னாலே குடுமி வைத்திருந்த சீனத்து மற்றும் ஜப்பானிய ஆண்கள், பெண்கள், நெடிய மூங்கில் மரங்கள்…
மற்றும், பள்ளி ஓவிய வகுப்புகளில் தூரிகைகளை இலாவகமாய்க் கையாள்கிற ஜப்பான் மாணவர்கள், அவர்களது கலைத்துவமான எழுத்துக்கள் முதல் அவர்கள் குறித்து நிறைய பிம்பங்கள்; பிறகு, ஒரு நூதனமான உலகத்துள் அழைத்து செல்வதுபோல இருக்கும் படித்த ஸென் படைப்புகள். புதிர், தேடல், சரணடைதல் என அத் தத்துவம் உணர்வுத்தளங்களில் சென்று சலனப்படுத்தும்.
அவர்கள்சார் கலைத்துவமான திரைப்படங்களில், பின்னணியில் போகிற இசையே தன்னோடு எடுத்துச்செல்லும் பார்வையாளர்களை. (எல்லோருடையதும்போலவே) பாரம்பரியமிக்க அவர்களது கலாசாரம், வாழ்வியல் அழகியல்- இவற்றை எதிரொலிக்கும் கலைப் படைப்புகள், அவர்களது பாதிப்பில் விளைகிற எல்லாவற்றிலுமே இழைகிற நாதம் எங்கோ வெகுதூரங்களில் சாத்தியப்படுகிற மகா அமைதியை சாத்தியப்படுத்துகின்றன போலத் தோன்றும்…
ஒருவகையான சாய்வு மனோநிலையுடனே ஜப்பானிய படைப்புகளை அணுகிவருவது. சில வருடங்களிற்குமுன் வகுப்பறையில் நடந்த இனத்துவேச மற்றும் பெரும்பான்மை சமூகங்களால் அடக்கப்படுகிற சிறிய குழுமங்கள் பற்றிய உரையாடலின்போது, ஜப்பானியர்களை பின்னணியாகக்கொண்ட ஒரு படமும் Obasan என்கிற நாவலும் அறிமுகமாயின. இந்தப் பத்தி, 1994இல் வந்த David Guterson இன் நாவலின் படமாக்க வடிவமான Snow Falling on Cedars (1999) என்கிற, ஒரு, மிக மிக அழகான, படத்தைப் பற்றியது.
உண்மையில் அது ஒரு அழகான படம்! அழகான சீடர் மரங்கள் மேலே வெண்பனி விழுகிறது! படம்பூரா வியாபும் கவித்துவ அழகியலை இத் தலைப்பே சொல்லிவிடுகிறது. மரத்திலிருந்து ஒழுகிற நீர் வரை அழகியலின் ஈரம்பட எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதைப்பின்னணி, 1954 இல் வோஷிங்டனிற்குத் தொலைவே, ஒரு மீனவச் சிறு நகரில், மர்மமான முறையில் ஒரு வெள்ளை மீனவன் இறந்துபோவதில் ஆரம்பிக்கிறது. இச் சிறு நகர்ப்புற மக்களிடையே, இச் சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரிருந்திருக்கும், அமெரிக்க-ஜப்பானியர்கள் (Japanese American) மீதான அமெரிக்க மக்களின் அவநம்பிக்கையை மேலும் வலுக்கச் செய்கிறது. ஒரு ஜப்பானிய மீனவன் (இறந்தவனின் கூட்டாளி) சந்தேகத்தின்பெயரில் கைதாகிறான். அவனது மனைவி ஹற்சூ (Hatsue) இன் இளம்பிராயக் காதலன் இஸ்மேல் ((Ishmael) அந்த சிறுநகரின் பத்தரிகையாளன், அவன் அவள் தன்னை –இனப்பிரச்சினைகளின்பொருட்டு- ‘ஏமாற்றியது’ என்பதையும்மீறி அவளது கணவன் வெளியேவர உதவுவானா என்பதுதான் கதை. அதூடே, தொடரும் நீதிமன்ற விசாரணைகள், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, புலனடக்கத்திற்கு கலாசாரரீதியாகப் பழக்கப்படுத்தப்பட்ட கைதான ஜப்பானியனை, குளிர்வான, ஒரு –குற்றஉணர்ச்சியற்ற- கொலையாளியாக வெள்ளை மக்கள் பார்த்தல், ஒரு இனத்தின்மீதான ‘நம்பிக்கையின்மை’ ‘பாதுகாப்பின்மை’ (Insecure) ஆய் உணர்தல், ஒரு நிரபராதியை எப்படியெல்லாம் பார்க்க வைக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின், கனடாவிலும் அமெரிக்காவில் பலவிடங்களில்போல, வன்கூவரில் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, முகாம்களில் இட்டது கனேடிய அரசாங்கம் (இதை அடிப்படையாக கொண்டதே மேலே குறிப்பிட்ட Obasan என்கிற நாவல்). பிழைப்புத்தேடி வாழ வந்து, உழைத்து, நிலங்களை வாங்கி முன்னேறிய அந்த மக்கள் கல்வி மறுக்கப்பட்டு கடின உழைப்பிற்காக (hard labour) நிறுத்தப்பட்டார்கள். இதற்குக் காரணமான, 1941 வருடம், பேர்ள் துறைமுகம் தாக்கப்பட்டபிறகு, மாறிய அமெரிக்கச் சூழலால், ஒரு இடத்தில அன்பான இரண்டு காதலர்களோட வாழ்வு எப்படிப் மாறிப்போகுது…

அத் தாக்குதலுக்கு முந்தைய அமெரிக்காவில், தனது குடியிருப்பிற்குப் புதிதாய் வருகிற சிறுமி ஹற்சூவை வியப்புடன் கண்காணிக்கிறான் சிறுவன் இஸ்மேல். சிறிது சிறிதாக, அந்த வெள்ளைப் பையனுக்கும் சின்ன ஜப்பான் பெண்ணுக்கும் வருது காதல்… வசந்த காலங்களில் சீடர் மர மறைவுகளூடே அவர்கள் கூடித் திரிவதும், மரத்திலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருப்பதும்… அத்தகைய அவர்களுடைய வளரிளம் பருவத்து (Aadolescence) க்காதல் துறைமுகத் தாக்குதலிற்குப்பிறகு, அது அமெரிக்க-ஜப்பானியர்கள்மீது திருப்பப்பட்டு, அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முகாம்களிற்கு அனுப்பப்பட்டபோது பிரிந்துபோகிறது. இஸ்மேல் அமெரிக்க படைவீரனாய் போரிடுகிறபோது, ஹற்சூவினது கடிதம், அவர்கள் இணையமுடியாதெனவும் அவள் திருமணம் செய்துகொள்ளப்போவதையும் கூறுகிறது; போரிடலின்பின்னான, முகாமில், அதைப் படித்தபடி அழுகிறான்; அந்த யுத்தத்தில் அவனது கையை இழக்கிறான். ஹற்சூ ஜப்பானியனொருவனை (அவனும் அமெரிக்க இராணுவத்திலிருந்தவன்) மணமுடிக்கிறாள்; அவன், அவர்களது முதல் இரவில், அவளை ‘இது உன் முதல் தடவைதானே’ எனக் கேட்க அவள் ஓமென்பதும், தனது கை அகற்றப்படுகிறபோது இஸ்மேல் அவளை ‘ஜப்பானிய வேசை’ (Japs Bitch) என்று திட்டுவதும் ஆய் யதார்த்தமாய், ஒரு பயணம்போல, அந்தக் காதலில், உறவில், வாழ்வின் இயல்பில் நாமும் ஐக்கியப்பட்டிருப்பதுபோல கதை நகர்கிறது. யுத்தத்திலிருந்து ஒரு கையின்றித் திரும்பிவருகிற அவன், திருமணம் செய்துகொண்டுவிட்ட ஹற்சூவை மறித்துக் கேட்கிறான்: I know you’ll think this is crazy, but all I want to do is hold you, and I think that if you’ll let me do that just for a few seconds, I can walk away, and never speak to you again.
அவள் அது தன்னால் முடியாது என்றுவிட்டு நகர்வாள்.

பின்னர், நீதிமன்றத்தில் தனது கணவன் -மற்றும் தன்- ஜப்பானிய சமூகம் நடத்தப்படுகிற விதம் குறித்த ஹற்சூ (இஸ்மேலிடம்) சொல்லுவாள்: ”இது நியாயமே இல்லை.” ” it’s not fair”. அவன் சொல்லுவான்: it’s about all the unfair things we all do to each other. அந்த அவனது வசனம் -அவள் தன்னை திருமணம் செய்ய மறுத்ததை சுட்ட- மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்கிற அநியாயங்களூடே, ஜீவநாடியாய் காதலைவைத்து, அழகான ஒரு கதையை படம் பிடித்திருக்கிறார்கள்.
அமைதியாய் உட்காந்திருந்து, ஜப்பானியர்களின் ஜென் கவிதைகள் படிக்கிறபோதும், இந்தப் படம்தான் நினைவோடு வருகிறது. இஸ்மேலின் காதலின் ஏக்கம் கலந்த கண்கள், சொல்லிக்கொண்டேயிருக்கின்றன (மாமன்னர் கோக்கோ, ஆண்.ஜப்பான்.830-884):
வசந்த காலத்தில்
வயல்களில்
பச்சிலைகள் சேகரித்தவண்ணம்
உனக்காகத்தான் நடந்து செல்கிறேன்,
என் ஆடையின்தொங்கும் கைகளில்
வீழும் பனி
திட்டுத் திட்டாய்ப் படிய.
0

ப்படியான கலப்பான பல்வித வியித்திர உணர்வலைகளுடன் படித்தது: பெயரற்ற யாத்ரீகன் என்றொரு ஜென் கவிதைகள் தொகுதி (தமிழில்: யுவன் சந்திரசேகர்). தற்செயலாகத்தான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். யுவன் சந்திரசேகர், மோசமான புனைவாளாராக கவிஞராக பேச்சாளராக பலவிடங்களில் மனப்பாதிப்பு/பதிவு தந்தவர்.
1: சொல் புதிது இதழில் இவரும் செயமோகனும் பங்குகொண்டு பேசிக்கொண்ட கவிதை பற்றிய உரையாடல் (அதுவும் 10 இற்கும் மேற்பட்ட பக்கங்களில் என நினைவு) தந்த மனப்பாதிப்பு இன்னும் போகவில்லை. ஒலிப்பதிவுஇயந்திரத்தை போட்டிட்டு, தங்கட பாட்டுக்கு, அவர்கள் நடத்திய “கவிதை பற்றிய” உரையாடலில் வாசகர்களுக்கோ கவிதைகளுக்கோ ஏன் அவர்களுக்குத்தானும் பிரஜோயனம் உண்டா என்றால்……. தேரியவில்லை. அதைப் (முழுமையாக) படித்துவிட்டு, வாழ்க்கை வெறுத்துப்போய் இருந்தபோதுதான் என நினைக்கிறேன், இரண்டாவது ‘கொடுமை’ படித்தேன்.
2: ஆரண்யம் இதழில் யுவன் எழுதிய 22 காதற் கதைகள். கண்ணராவி, அதையெல்லாம் சேர்த்து காலச்சுவடு ‘ஒளி விலகல்‘ என்றொரு தொகுப்பாய், வெளியிட்டது. தமிழினி வெளியிட்ட இவரது குள்ளச் சித்தன் சரித்திரம் அபத்தம். இப்படி, இந்த யுவனே ஒரு அபத்தமாய்த்தான் மனப்பதிவு. பிடிக்கும் என்கிற எண்ணமே துளியுமற்று, சும்மா விரித்து படிக்க ஆரம்பித்த எதிர்பாராக்கணம் ரம்மியமா மனமெங்கும் நூல் வியாபித்தது. இப்போதுகூட இதை எழுதுகிறபோது புத்தகத்தின் 95 வீதமான கவிதைகளை இந்த பத்தியெங்கும் பரப்பத் தோன்றுகிறது, அப்படியொரு ரம்யமும் சாந்தமும்..
மொழிபெயர்ப்பென்று பார்த்தால், அது பெரிதாய் தொந்தரவு செய்யவில்லை. தொடர்ச்சியும் இடறலின்மையுமே முக்கியம். moss ஐ ஈரநிலச்செடி என்றும், Pine tree இற்கான தமிழ்ச் சொல்லாய் ஊசியிலை மரமென்றும் பைன் என்றுமும் உபயோகிக்கிறார். இரண்டும் பிடித்திருந்தது. Moss என்பதை பாசி என உபயோகித்தால் எளிமையாக, நன்றாக இருந்திருக்குமென்று பட்டது. இவைகள் சில கவனங்களே.
அடிப்படையில், அமைதியானதொருபோது வாசிக்கையில் மிகவும் ஏகாந்த உணர்வைத் தந்தது நூல். ஸோக்கா! ஸென்/ஜென் கவிதைகளை தாய்மொழியில் படிக்கையில் ஒருவித கிறுக்கும் மோக/னநிலையும் எழுந்தது. வாசிப்பை தடைசெய்யாத புத்தக வடிவமைப்பு. ஜென் கவிதை நேசகர்கள் அல்லாதோரும் கூட விரும்பக்கூடிய நூல்.

நூலிலுள்ள, சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்

1
எனது மங்கைக்காக நான்
ப்ளம் மரத்தின்
உச்சாணிப் பூக்களைப் பறித்தபோது
கீழ்க் கிளைகள்
பனித்துளிகள் சொட்டி
நனைத்தன என்னை
0

ஹிட்டோமாரோ
ஆண்.ஜப்பான். 8-ஆம் நூற்றாண்டு

2
எட்டங்குல நீளம் அது. உறுதியானது. என்
செல்லப்பொருள். இரவில்
தனித்திருக்கும்போது
முழுக்கத் தழுவிக்
கொள்கிறேன் அதை –
வெகுகாலமாயிற்று
அழகான பெண்ணொருத்தி அதைத்
தொட்டு. என் கோவணத்துக்குள்
இருக்கிறது ஒரு
முழுப் பிரபஞ்சம்!
0

இக்யு ஸோஜன்

3
எதிலும் முனைப்பின்றிச்
சோம்பலாய் இருக்கிறேன். தன்னைத்
தானே பார்த்துக்கொள்ளட்டுமென
விட்டுவிட்டேன் உலகத்தை.
பத்து நாட்களுக்கான அரிசி
என் பையில் இருக்கிறது.
கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.
எதற்குத் தொணதொணப்பு
மாயையையும் ஞானத்தையும் பற்றி?
கூரையில் வீழும்
இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி
வசதியாக அமர்ந்திருக்கிறேன்,
கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.
0

ட்டய்கு ரியோக்கன்

4
உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறந்து விடுகிறாய்
என்றால், மிக நல்லது!

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறக்காதிருக்கிறாய்
என்றால் – மிக மிக நல்லது!
0

ஸேங்காய் கிபன்

5
நான் பிறந்த இந்த உலகத்தை
இறக்கும்போது
விட்டுச் செல்கிறேன். ஓர்
ஆயிரம் நகரங்களுக்கு,
கணக்கற்ற இல்லங்களுக்கு
என்னைச் சுமந்து சென்றிருக்கின்றன
என் கால்கள் –
இவையெல்லாம் என்ன?
நீரில் பிரதிபலிக்கும் நிலா,
வானில் மிதக்கும் பூ,
ஹோ!
0

கிஸன் ஸென்ரை
ஆண். ஜப்பான். 1871-1878

6
எங்கே போனான் ஸோக்கன் என
எவராவது கேட்டால்,
இதை மட்டும் சொல்லுங்கள்.
“வேறொரு உலகத்தில்
கொஞ்சம்
வேலையிருந்தது அவனுக்கு.”
0

யாமஸாக்கி ஸோக்கன்
ஆண். ஜப்பான். ?-1540

7.
இரண்டு
அல்லது மூன்று
நூற்றாண்டுகள் வசிக்க
எண்ணியிருந்தேன். இருந்தும்,
இதோ என்னிடம்
வருகிறது மரணம், வெறும்
எண்பத்தைந்து வயதே நிரம்பிய
குழந்தையிடம்.
0

ஹனபுஸா இக்கீய்
ஆண். ஜப்பான். ? – 1843

8.
நிஹோன் எனோக்கியில் உள்ள
எனது கல்லறைக்கு
வந்து சேர்கிறேன்.
ஆனந்தமாயிருக்கிறது. இங்கே,
என் அருகில்,
நண்பர்கள் கிக்காக்குவும்,
இட்ச்சோவும் இருக்கிறார்கள்,
எனக்குப்
பேச்சுத் துணையாக.
0

க்கிட்டா ட்டக்கெக்கியோ
ஆண். ஜப்பான். ? – 1856

9.
என்ன வேடிக்கை!
அதோ, தியான அறையில்
தேநீர் விநியோகிக்கும் நடிகன்
நான்தான்
தான் என்று
நினைத்துக் கொள்கிறான்!
0

லூ ஹார்ட்மேன்
ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு

10.
எதிலும் நம்பிக்கையின்றி
சும்மா அமர்ந்திருக்கிறேன்,
என் சுவாசத்தைக் கவனித்தவாறு.
முப்பது வருடங்களுக்கு பிறகும்
அது
வெளியில் போகவும்
உள்ளே வரவுமாக
இருக்கிறது
0

ஆல்பர்ட் கோல்ஹோ
ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு

——————————————-
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள் (தமிழில: யுவன் சந்திரசேகர்)
உயிர்மை பதிப்பகம் (டிசம்பர் 2003)