Archive

Archive for the ‘பால்-முரண்’ Category

FEAR of intimacy – (01)

November 2, 2007 Leave a comment

film01

ஹொங்கொங்கில் அவளது முதலாவது நாள். “ஹொங்கொங் முன்புபோல இல்லை. மிக மோசம் பார். நீ இதற்குள் தொலைந்து போய் விடாதே” இப்படித்தான் விளையாட்டாய் அவளிடம் கூறுகின்றான் இளம் Fai. தொலைவில் கடல் ஆர்ப்பரித்திருக்க அவனது அருகாமையில் புன்னகைக்கிறாள் இளம் Bo.

ஓர் பத்திரிகைத்தொழில்சார் புகைப்படப்பிடிப்பாளனான அவன், பிறகு – தனது வேலைகளுள் – அவளை மறந்து விடுறான். வேலையிலிருந்து அழைப்பு வருகிறபோது அவசர அவசரமாய் கிளம்பிப் போவதும், வந்து அதே இயல்பில் உறவுகொள்வதும், அவளைத் தொழில்-நேர்முகத்திற்கு கொண்டு செல்ல வருவதாகக் கூறி அதை மறந்து விடுவதும், அதை ஈடுசெய்ய உணவகத்திற்குக் கூட்டிப் போகிற வழியில், அவள் அவனைக் ‘குறை சொல்ல’ நடுத் தெருவில் இறக்கி விட்டுப் போய் விடுவதுமென அவன் இருக்கிறான்… வேலைத்தலத்தில் தரப்படுகிற வேலைகளுள் வெறித்தனமாய் ஈடுபடுகிற அவனுக்குத் தன்னைத் தவிர ‘அவளுடைய நியாயங்கள்’ எதுவும் புலப்படுவதில்லை; எந்த முன்தயாரிப்புமின்றி அவளை, அவளை-அவனிடம் வரச் செய்த வாக்குறுதிகளை மறந்து போகிறான்.

Vincent Chui இயக்கிய இத் திரைப்படத்தின் பேசுபொருளாக/ள்களாக நவீன உறவுகளின் சிக்கல்கள், நெருங்குதலின் (intimacy), commitments + அதன் கடமைகள் மீதான பயங்கள் என்பன இருக்கின்றது/ன. பால் பேதங்களுக்கப்பால் – இந்த நவீன தலைமுறை தன்னைச் சுற்றியே இயங்குகிறது; வேலை, கணிணி, walkman அனைத்தும் தன்னுடனே உரையாடுகிறது. ஒரு உறவை ஏற்றுக்கொள்வது என்கிற commitment/responsiblity அச்சம் தருவதாக உள்ளதுடன், வாழ்வை ஒருவருடன் – அவருடைய எதிர்பார்ப்புகளுடன் – பகிர்வது என்பது இதுவரையில் பழகியிராத பெரும் சமரசமாய் மாறுகின்றது.

தொலைவிருந்து அவன்மீதான பிரியங் காரணமாக, இளமையின் துடிப்புடன் வந்த Bo, ‘வழமை’ பிசகாது தொடர்ந்து வந்த நாட்களில் ஒருநாள் அவனுடன் ‘இருந்த’ அந்த வீட்டிலிருந்து –எந்த விளக்கமோ பிரிவு வார்த்தைகளோ அற்று– காணாமற் போய் விடுகிறாள். அவள் தவிர இருந்தவை இருந்த இடத்திலேயே இருக்க அவளைக் காணாது நீண்ட நேரம் தவித்துவிடவில்லை அவன்; சீக்கிரமே வழமைக்குத் திரும்புகிறான்.

நவீன நகரங்களின் தற்கால உறவுகளை மைய்யமாய்ப் பேசுவதாலும், சமகாலத்தில் இந்தப் “பயம்” தனியே குறிப்பிட்ட பாலிற்குரியதல்ல என்பதாலும் – கதைசொல்லல்முறை அல்லது எதிலும் {எனக்கு}’சொல்லும்படியாய் ஏதும் கூற இல்லாத போதும்’ – இந்தப் படம் தொடர்ந்து யோசனையில் வந்துகொண்டிருந்தது. நகரத்தை மையப்படுத்திய, வேலைப்பளு, அழுத்தங்கள் நிறைந்த நகரவாழ் பின்புலத்தில் ‘கண்ணுக்குக் குளிர்ச்சியாய்’ ‘சொல்லும்படியாய்’ எதுதான் இருக்கும்?? இப்படத்திற் வருகிற சில நிமிடப் பாலுறவுக் காட்சிகளும் நகரத்தின் அழுத்தங்களையும் அவசரத்தையுமே பிரதிபலிக்கின்றன.

வருடங்கள் கழிய, Fai, இப்போது “சூடான செய்திகளிற்கான’ புகைப்படப்பிடிப்பாளனாக; கிளப்புகளில் அந்நிய ஆண்களைப் புணர்கிற, ‘ஒழுக்கமற்ற’ ‘பணக்கார’ மனைவிமாரைப் படமெடுத்துப்போட, துடிப்பான “புதிய” “இளம்” பெண் நிருபருடன் ஒரு கிளப்பிற்கு முன் காத்திருக்கையில் -என்றோ ஒருநாள் சொல்லாமற் கொள்ளாமல் காணாமற் போன- Bo-வைக் காண்கிறான். நிறையக் குடித்துவிட்டு, இவனுடைய nephewவுடன் அவள், காரில் ஏறிப் போவதைக் கண்டு ஆத்திரமுற்று, அவனைப் போய் அடித்து, விசாரித்து, அவளை அவர்களிருந்த அந்த கடற்கரை வீட்டிற்கு வர வைக்கிறான்.

அங்கு Anson-னைக் காண வருகிற Bo, இவனைக் கண்டதும் கோபமாய் கடலை நோக்கி நடக்கிறாள்.
***

“யாருக்காகவும் காத்திருக்காத வாழ்வே சிறந்ததும்” இப்படிச் சொன்னாள் நண்பியொருத்தி. அவனை விட்டுப் போய் அவள் ‘தேர்ந்தெடுத்த’ வாழ்வுமுறையில், எந்த வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும் மோசங்களும் இல்லை. ஹொங்கொங்கின் மோசமான உலகம் அவளை விழுங்கியிருக்கலாம். ஆனால் நேசத்தை உணராத அல்லது இருத்தல் கவனிக்கப்படாத சூழலைவிட மோசமல்ல அது. உடல் ஒழுக்கம் அல்லது உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் நோக்கின், அவளது வாழ்வை அவள் ‘அழிக்கிறவளாய்’ இருக்கலாம். ஆனால் தேவையானபோது இல்லாத யாரின் பொருட்டும், தான் ‘வாழாமல்’ அதை அழிக்கவில்லை. வாழ்க்கை ‘வாழப்பட்டு’ வீணாக்கப்படுகிறது. தனக்கான திட்டமற்ற ஒரு திசையில், அத் திட்டமற்ற தன்மையில், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவளிடமே இருக்கிறது. ஆகவே அது சிறந்ததே.

நவீன வாழ்வுமுறைக்கு உணர்ச்சிகள் எதிரானவையாக இருக்கின்றன. உணர்ச்சிகரமான ஒவ்வொரு (மரபான) சொல்லிலும், நிறைய உள் அர்தத்ங்கள் இணைக்கப்பட்டுள்ளன. “காதல்” “குடும்பம்” எனப்படுகிற நிறுவனங்கள், பதிலாய், {அவையவைக்கான} commitments, கடமைகள், நேர்மை என்பனவை வேண்டுகின்றன. அவற்றிற்குத் தகவாய், அன்பையும், தன் ‘இருப்பை’ உணர்தலையும் , ஒன்றாய் செலவிட (உரையாட) ‘நேரத்தை’யும் ஒருவனிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இளம் Bo ஏமாந்து போகிறாள். அவள் முன் இரண்டு தேர்வுகள்: (1) தொடர்ந்தும் (கவனிக்காத அவனிடமே) அவற்றை எதிர்பார்த்து, அவ் எதிர்பார்ப்புகள் நிவர்த்தியற்று, ஏமாற்றப்படுபவளாயே இருப்பது; (2) அவன் மீதான விருப்பத்தை மீறிக் கடந்து போவது.

தம் 30களின் பிறகு, Fai-உம் Bo-உம் சந்திக்கிற போதும், அதே கடற்கரை ஆர்ப்பரிப்புடன் இயங்குகிறது. ‘விளக்கம்’ கேட்கிற அவனிடம், “உன்னிடம் மீண்டும் திரும்பி வந்தாலும், ஒருநாள் நான் இப்படித்தான் ஓடிப் போவேன். உன்னில் நேசம் இருந்தாலுங்கூட. நீ குற்ற உணர்ச்சியடையாதே. நான் உன்னால ‘இப்படி’ ஆகவில்லை. இன்று: இந்த உலகத்திலேயே சந்தோசமா இருக்கிற பெண்களில் ஒருத்தியாய் நான் இல்லைத்தான். ஆனால் அது பறவாயில்லை {ஒன்றும் மோசங் கிடையாது}. நான் இப்போதும் உன்னிடம் -நிறைய எதிர்பார்ப்புகளுடனும் கனவுகளுடனும் – வந்த அந்த இளம் Bo கிடையாது, எனக்கு வயதாகிவிட்டது” என்கிறாள்.

அவளது திடீர் ‘தலைமறைவாலே’யே அவன் பிறகு வந்த உறவுகளில் ஈடுபாடற்றும், பட்டும் படாமலும்(!!), ஒருவருடனும் ஒட்டாதவனாக, ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டே, ‘புதிய’ நிருபரில் ஆர்வமுறுபவனாக, தனியே ‘ஒரு பெண்ணுடன், நேசமாக ‘நெருங்குவதற்கு’ அச்சத்துடன் இருக்கிறான் எனவுமும் படத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், அவளது ‘விளக்கத்திற்குப்’பிறகு பெரும் குற்றஉணர்ச்சியிலிருந்து விலகியவனாய் தனக்குப் பிடித்தமானவளிடம் திரும்புவதாகக் கதை தொடர்ந்தாலும், இளமையில் அவனிடமிருந்த நெருங்குதலுக்கான பயமே அவள் பிரியவும், அவளை அன்றைய தன் ஏராளம் வேலைகளுள் முக்கியப்படுத்தாதிருக்கவும் காரணமாய் இருந்திருக்கிறது. அதுவே நவீன நகரங்களில் உறவுகளின் மைய்யக் கூறும்.

ஆனால் அத்தகைய ‘பயம்’ நிரம்பியவர்களுள், தன்னுள் சேகரமான மரபான சொற்களூடாக சுமந்த ‘இனிய’ எதிர்பார்ப்புகளுடன் வருகிற Bo, தன்னை Rebound(மீள்சுழற்சி?)-இல், ஏமாற்றங்களை மட்டுமே தரும் தமது ஆண்(/பெண்)களிடம் மீள மீள செல்வதை மீறி, தெரியாத அந்நியர்களுடன் வாழ்வை ‘எதிர்பார்ப்புகளற்ற’ {மற்றவர்களின் கண்ணோட்டத்தில்} ‘சிதைதலிற்கு’ ஒப்புக் கொடுப்பது அர்த்தமுடையதாய்த் தெரிகிறது. அந்த வகையில், அவள் போன்ற ஒருத்தியை {”corporate chick”?}, பொம்மை ‘மனைவி’யாய் கொண்டு திரிய விரும்புகிற -இவளிற்கு அவனிடமோ அவனிற்கு இவளிடமோ எந்த எதிர்பார்ப்புமற்ற – ஒரு ‘பணக்கார கணவனின் தகுதி’க்கு பொருந்துகின்ற ‘அழகிய மனைவி’யாய், தன் பாத்திரத்தை செய்துகொண்டே தனதான உலகை நிர்ணயிக்கவும் முடிகிறது.

ஒருவகையில் இந்த மனிதர்கள் எவரது வாழ்வுமுறையிலும் எமது மதிப்பீடுகளை வைக்கத் தோன்றாததே இப் படத்தின் சிறந்த பண்பாகப் படுகின்றது. இதில்: Bo, Fai மட்டுமல்ல, நவீன யுகத்தின் யுவர்கள், யுவதிகள் சிறு பாத்திரங்களாக வந்து போகிறார்கள். Fai-இன் nephew, Anson ஒரு வீடு விற்பனை முகவன், அவனுக்கு வங்கியில் அதிகக் கடன் உள்ளதால் நிறைய வீடுகளை விற்க வேண்டியிருக்கிறது. சமயங்களில், வீடு வாங்க வரும் அவனிலும் இருமடங்கு வயதான பெண்கள் தம் பாலியற் தேவைக்கு இளம் Anson-ஐயும் (அவன் அவர்களையும்!) உபயோகித்துக் கொள்வதும், பாரில் ‘பணக்கார’ப் பெண்கள் இளம் யுவர்களை உபயோகிப்பதும் காட்டப்படுகிறது. இப்படத்தின் பின்னணியான, உயர், நடுத்தரவர்க்க சூழலில், குடும்பம், பெண் ஒழுக்கம்; நிறுவனங்களின் உடைவு யாருடைய மதிப்பீடுகளையும் வேண்டாமல் (பட்டிமன்ற முடிவுகள் பார்க்காமல்!!) நிகழ்ந்தபடியே இருக்கிறது. முகத்திற்குப் பூசும் கிறீம் முதற் கொண்டு பொருட்களிலிருந்து வானொலி நிலையங்கள் வரை “தேர்வுகளால்” (choices) நிறைந்திருக்கிறது அவர்களது உலகம். இறுதியில்: தமக்கு முன் கிடக்கிற எல்லையற்ற தேர்வுகளுள் எதை நோக்கித் தம்மைத் திசை திருப்புவது என்பதறியாத குழப்பமும் (அல்லது அத் தேர்வுகள் சகலத்தையும் அடைய விரும்பும் இடையறா விழைபின்) அயர்ச்சியும், மதுக் கோப்பைகள் கிடக்கிற மேசை மீது போதையில் கவிழ்ந்திருக்கிற தலைகளுடன் கூடவே கவிழ்ந்திருக்கின்றன.

****
Tsui tsong aan chin yen [Fear of Intimacy (2005)], ஹொங்கொங், Cantonese, 97 நிமிடங்கள் / மைய நடிகர்கள்: Bo (Mei Ching Lam). Fai (Tony Leung Ka Fai), Anson (Wing-Hong Cheung)

Advertisements

*……………………….

January 6, 2007 Leave a comment

Picture 072.jpg

Picture 435.jpg
ரொறன்ரோ 401 மோர்னிங்சைட் பெருஞ்சாலையுள் தனது மூன்று வயது மகனுடன் முப்பது வயதான ஓர் “படித்த” இளம் தாய் தற்கொலை செய்திருந்தார்.. பின்னர் அந்தப் பாலத்தைக் கடந்து சென்றவர்கள் வைத்திருந்த பொம்மைகளும் பூக்களும் இவை.

புலம்பெயர் ஐரிஷ்-களின் இணைய தளங்களில் ஒன்றில், இது தொடர்பான விவாதக்கள கருத்துப் பரிமாற்றங்கள் இங்கே.
~
படப்பிடிப்பு: யாரோ

நீயும் ஒரு சிமோன் தி பூவா போல…..

February 2, 2006 4 comments
…ஒரு பெண்ணைப் பிடித்துள்ளதென்றால் அவளை நேரே படுக்க வாறியா என்று கேட்பதில் எந்தப் பிழையுமில்லை என்று ஒரு முற்போக்குவாதி சொன்ன ஞாபகம். ஆகவே நீங்கள் உங்கள்
பொண்டாட்டியைத் தவிர மற்ற எல்லாரிடமும் குறியை நீட்டிக் கொண்டு கேளுங்கள்.
தூஷணத்தால் கதையுங்கள். நாங்கள் என்ன உணர்வுகளற்ற ஜடங்கள் தானே.
உங்களைப் போன்ற மன்மதர்களுக்கு மாட்டேன் என்று சொல்வதே இந்த உலகத்தில் நாங்கள் செய்யும் பெரிய குற்றம் அல்லவா? இந்த உலகத்தில் அனுபவிப்பதற்காகவும் சிந்திப்பதற்காகவும் உள்ள ஒன்றே ஒன்று அதுதானே.
நீங்கள் எல்லாரும் என்னை ஒரு விபச்சாரியாக உருவாக்குவதற்கா ஆசைப்படுகிறீர்கள்.
உங்களால் விபச்சாரியாக உருவாக்கப்பட்டு நடுவீதியில் நிண்டு அபலையாய்ச் சிரிக்கும் அந்தப் பதினெட்டு வயதுப் பிள்ளையைப்
போல், நானும் நடுறோட்டில் நிண்டு உங்களைக் கைநீட்டி அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? ஆக மொத்தத்தில் இந்த உலகில் உள்ள ஆண்களாகிய நீங்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் என்ன? இந்த உடலை நிர்வாணமாக்கி நடுவீதியில் வைத்து உங்கள் எல்லோருக்குமாக பங்கிடப்படும் சுதந்திரத்தை வழங்குவதையா?
நீங்கள்தான் எவ்வளவு அற்புதமான மனிதர்கள். இங்கு என்னுணர்வு, என் விருப்பு, என் சுதந்திரம்… இவையெல்லாம் எதற்காக… ?

-சுந்தரி, சிறுகதை: “மூடுதிரை”, சரிநிகர், பெப்.25 – மார்ச் 10, 1999

-1-
றயாகரன் “இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்”
(18.01.2006) என்ற தலைப்பில் தமிழரங்கம் இணையத் தளத்தில் கட்டுரையொன்று எழுதியிருக்கிறார். அக் கட்டுரையின் சில பகுதிகளை முன்வைத்து, சில போக்குகள் குறித்து, உரையாடத் தோன்றுகிறது.

“நீயும் ஒரு சிமோன் தி பூவா போல…” – இத் தலைப்பிட்ட கதை, சக்தி சஞ்சிகையாற் தொகுக்கப்பட்ட, புகலிடப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பொன்றான புது உலகம் எமை நோக்கி (200?) இல் -தமிழ்நாட்டைச் சேர்ந்த காவேரி (லஷ்மி கண்ணன்) எழுதி- வெளியாகியிருந்தது.
தொகுப்பிலுள்ள குறிப்பிடத் தகுந்த கதைகளில் ஒன்று. அதனூடாக, எப் பகைப் புலத்திலோ, பெண்கள், பொதுச் சூழலுக்கு வருகிறபோது (இதில் ஒரு எழுத்தாளர்) அவர்களை வெளி சூழ் ஆணாதிகார உலகம் எப்படி வரவேற்கிறது – அதன் தந்திரங்கள், manipulations, இவை பற்றியதொரு தோற்றம் விரியும், எழுத்தில், சிந்தனையில், புத்தார்வத்துடன் வருகிற பெண்ணொருத்தியை அவளிலும் “பெரியவன்” “ஆண்” ‘நீயும் ஒரு சிமோன் போல’ என எதிர்கொண்டு அவளது உடலை மையங் கொள்வதைப் பற்றியதே கதை.
இப்படியாக, இலக்கிய/வாசிப்பு ஆர்வங்களை உடைய பெண்களால் –சிமோனோ அவரைப் போன்றதொருவரது பெயரோ இந்த வசனமோ– ஏதோ ஒரு வகையில் அவர்களைச் சூழ்ந்தவர்களிடமிருந்து எதிர்கொள்ளப் பட்டிருக்கும்.
தனிப்பட்டரீதியில், என்னை, பிரபலமான, பல பிற வாசகங்கள் போலவே, சிமோனினது -‘ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக ஆக்கப்படுகிறாள்’ போன்ற- வாசகங்களும் கடந்திருக்கின்றன. அதிலும், ‘மூன்றாமுலகத்தை’ச் சேர்ந்த, பாலியல் மட்டுமல்ல எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும் இருக்கிற இனமொன்றின் ஒரு பகுதியாய், இயல்பாகவே, சிமோன் என்கிற பெண் ஆகர்சித்ததில்லை (மனம் இணைய ஒத்த அலைகளோ அவருடன் பகிர ஒரு வரலாறோ இல்லை).
மாறாக, எத்தனை தடவைகள் படிக்கிறபோதும், மனித நேசிப்பால் ஆன்மாவை நிறைத்துப்போக என, நண்பருக்கான இறுதிக் கடிதத்தில், “
என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.” என்றெழுதிய ராஜனி போன்றதொரு பெண், அல்லது தன்னுடைய ‘மணிக்கரத்தால்’ “ஓ என் தேசமே- …வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணிந்துள்ளாய். நான் உனக்குக் கொடுப்பது என் உயிர் மட்டுமே” என்றெழுதிய சிவரமணியோ ஏற்படுத்திய கிளர்வை அறிவுஜீவிமட்ட பிரெஞ்சுப் பெண் ஒருவளான சிமோனிடம் உணர்ந்ததில்லை (அவரிடம் அதைத் தேடுவதே அவசியமற்றதும்தான்!).
படித்த
(A Transatlantic Love Affair: Letters to Nelson Algren – Simone de Beauvoir) அவரது ஒருபெரும் கட்டான(!) காதற் கடிதங்கள நூல் கோபத்தையே உண்டு பண்ணியது; ‘பெண்ணீயவாதி, இப்படி எழுதலாமா’ என்பதல்ல – அதூடாக மனம் ஒவ்வாமல் நுழைந்த அவரதான போலித்தனமும், பிற போலித்தனங்கள் தருகிற அருவருப்பையே தந்ததாலும். உலகளவிற் பல எழுத்தாளர்களும், சந்தர்ப்பம் வாய்க்கையில் சகல மனிதரும் செய்கிற/செய்யக்கூடியவற்றையே தமதுறவிலும் செய்து வந்த இரு நபர்களது உறவில், துரோகத்தின் வன்மம், பொறாமை, ஈகோ, போட்டி என சகலதும் இருந்தபோதும், அதெல்லாம் அற்ற, இலட்சியபூர்வமான உறவாக, மிதமானதாகப் புனைந்து கொண்டாடிக் கொண்டிருந்த மேற்கு, ஐரோப்பிய அறிவுஜீவிச் சமூகங்களும், இருவரது இறப்பின் பின்னும் வெளிவந்த கடிதங்களில் -அவர்களின் உறவுகளில் இருந்த- “தம்மதை ஒத்த” இயல்புகளைக் கண்டு அதிர்ந்துதான் போனார்கள். எல்லோரிற்கும் ஆர்வமேற்படுத்திறவகையானதொரு புதுமையான, ஒப்பந்தத்தில்/ஒப்பந்தமற்று, sartre-டன் இணைந்த வாழ்வுமுறையில், பலரும் கனவு காண்கிற சுதந்திர வாழ்வை வாழ்ந்த ஒரு பெண்ணாக அவர் வாழ்ந்தார். அப்படியே இருந்தும் இறந்தும் போனார். அவரைக் குறித்த மனப்பதிவுகளாய் அவரது இலக்கிய மற்றும் தத்துவத்திற்கான பங்களிப்புகளாகவே இருக்கின்றன.
தமது மண்ணில், தமது நிறத்தில், தமது சமூகத்தை பிரதிபலித்த, சமூகத்தை நேசித்து, சமத்துவ மிக்க விடியலைக் கனவுகண்ட பெண்களிடம் காணாத இயைபை இங்கு கண்டு சிமோனைப்போல ஆடைகளும், தலையலங்காரமும் என ஒரு கோலம் கொண்டு ‘
அடையாளங்களைக் காவுகிற’ வரிசையில் இணைகிற பெருங் கனவுகள் ஏதும் தம்மிடம் இல்லை என்று, தெட்டத் தெளிவாய் இருக்கிறவர்களிடமும், தம்போக்கில், “சிமோன் போல” “பெண்ணியம்” என ஒரு முத்திரையைக் குத்திவிட்டுப் போவார்கள். இங்கே, சிமோன் என்கிற ஐரோப்பிய திருஉரு பல் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஞாபகப் படுத்தப் படுவார்:
(1) (அனேகமாய்) அவரது பாலியற் தேர்வு;
open relationship – சிமோனாய் இரு என்பது அறிவார்த்தமான ஏதாவது செய்கிற சிமோன் அன்று, இவர்களைப் பெருஉவகைக்குட் தள்ளும், ~சுதந்திரமான வாழ்வை முன்னெடுத்திருக்கிற, பாலியல் சுதந்திரங்களை உடைய சிமோனாக இரு என்பதே செய்தி.
(2) (வாதத்திற்கென்று பார்த்தால்) சாதாரண சனங்களிற்குப் புரியாத -எளிமைப் படுத்தப்படாத- வரட்டு மொழியில், தமது ஆசா
ன்களின் வசனங்களை ஒப்புவித்துக்கொண்டிருப்பவர்கள், இவர்கள் முன்மாதிரியாய் (மட்டும்) வைத்திருக்கிற பிம்பங்கள்போலவே, சிமோன் போன்றதொருவளை முன்மாதிரியாய் வைத்திருக்கிற அவர்களை ஒத்த பெண்களிடம் “மேட்டுக்குடிப் பெண்ணியம் பேசாதே” –“படித்த, உயர் மட்டங்களில் பேசப்படுகிற, சிமோனெல்லாம் குப்பத்து முனியம்மாவிற்குப் புரியாது” என்று முடிப்பார்கள் (இதைக் கேட்கிறபோதெல்லாம் முனியம்மா என்ற பேரைக்கூட நீண்ட நெடுங் காலமாக -மாற்றமற்று- உபயோகித்துவருவதை நினைவுகூர்ந்து, கண்டனம் செய்ய மறக்கக்கூடாது!).

-2-
பாலியல் ஒடுக்குமறை என்பது ஒரு யதார்த்தமாகச் சூழ ‘இருக்கிற’போது, அதை மீறும் விழைபும் அந்த மீறலுக்கு துணையாகிற தந்திரங்கள், மோசடிகள், கயமைத்தனங்கள் என்பனவின் இருப்பும், யதார்த்தமானதே. ஆனால் எல்லாவிதமான ஒடுக்குமறைகளிற்கும் எதிரான குரல்களையும் மாற்றங்களையும் வரவேற்பதாய்ச் சொல்கிற, மனித உரிமைகளிற்கான குரல் கொடுப்பாளர்கள், “என்ற சொல்லப்படுகிற” முற்போக்காளர்கள், ‘இந்த’ விடயத்தில் மட்டும் “இரண்டு கை தட்டினால்தானே சத்தம்” என்கிற ரீதியான மகா கேவலமான புரிதலோடு தைரியமாய்(!) ‘நான்தான் முற்போக்காளன்’ ‘நான்தான் கலகக்காரன்’ ‘நான்தான் பெண்(ஈ)ணீயவாதி’ எனத் திரிவதாய் இருக்கிறார்கள், அன்றும் இன்றும் இனிமேலும் என, பெண்கள்தம் எதிர்காலத்தையெல்லாம் தம் ‘குப்பை’களைக் கூட்டி எரித்தபடி! ஆகவே றயாகரன் கட்டுரையெழுதக் காரணமான பின்னணிச் சம்பவமும் அதுடன் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பெயரும் இங்கே அவசியமற்றிருப்பதால் எடுத்தாழப் படவில்லை. ‘ஒரு பலாத்கார முயற்சி’ ‘பாலியல் அத்துமீறல்’ இப்படி ஒன்றிற்குக் கையெழுத்திட்டுக் கண்டனம் தெரிவிக்கிறபோதில், அதைச் செய்கிற புத்திசீவிகளான நபர்களது நியாயங்களும், ஜனநாயக உணர்வும், புரட்சிகர கருத்துகளும், இன்னொரு புறத்தில், எவ்வளவு அபத்தமானவையாய் இருக்கின்றன என்பதே குறிப்பிட விரும்புவது.

றயாகரனது கட்டுரையிலிருந்து:
…பாரிசில் நிதர்சினி என்ற குழந்தையை பாலியல் வன்முறைக்குட்படுத்தி கற்பழித்துக் கொன்ற போது கண்டித்தவர்கள் யார்? யாழில் தரிசினி பாலியல் வன்முறைக்குள்ளான கற்பழிக்கப்பட்ட போது கண்டித்தவர்கள் யார்? அனைவரும் ஆணாதிக்கவாதிகள் தான். அங்கும் கண்டனம். இங்கும் அதே கண்டனங்கள். இயல்பான ஆணாதிக்க சமூக அமைப்பில், இதை ஆணாதிக்கவாதிகளே கண்டிக்கின்றனர். இது ஒரு விசித்திரமானது தான். உலகின் இந்தியாவின் மலிவு வர்த்தக இதழ்களை வாசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை கண்டிக்கின்றனர். ஆனால் அந்த சஞ்சிகை ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்று உள்ளடகத்தில் வெளிவருகின்றது. இதுவே உலக இந்திய சினிமா. கண்டனங்கள் பொதுவான ஆணாதிக்க ஒட்டத்தில் அதன் போக்கில் வெளிவருகின்றன. …
… இலக்கியவாதிகளே இலக்கியம் மூலம் பாலியல் வதைகளில் ஈடுபட முடியாதோ? கையெழுத்திட்ட சிலர், அதையே தொழில் முறையாக கொண்டு, இலக்கியம் பேசி செய்கின்றனர். மானம் கெட்டவர்களே! முற்போக்கு பேசி இதைச் செய்ய முடியாதோ? உங்கள் இலக்கிய வரலாற்றில் சிலர் இதைச் செய்திருக்கின்றார்கள், செய்கிறார்கள். இலக்கியத்தின் பெயரிலும், உலகம் முழுக்க பெண்கள் மீதான வன்முறை பற்றி பல வரலாறுகள் உண்டு.
நீங்கள் தர்க்கித்து பாதுகாக்கும் மற்றொரு வாதம், பெண் தானாகவே இணங்கிப் போனால் எல்லாம் சரி என்கின்ற ஒரு வாதம். என்ன பெண்ணியம்! என்ன அரசியல்! என்ன முற்போக்கு!
பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது.
… இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான். இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில் இருந்து இணங்கிப் போவதில்லை. இப்படித் தான் இணங்கிப் போதல் என்பது, வாழ்வில் பல கோணத்தில் நிகழ்கின்றது.
சினிமாவில் நடிக்க இணங்கிப் போகும் நடிகைகள், வேலைக்காக உயர் அதிகாரியுடன் இணங்கிப் போகும் பெண்கள், வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இணங்கிப் போகும் அபலைகள், வீட்டில் பெரியவர்களுக்கு இணங்கிப் போகும் வீட்டில் உள்ள பெண்கள், சாமியாருக்கு இணங்கிப் போகும் பக்தியுள்ள பெண்கள், உயர்சாதிய நிலப்பிரவுக்கு இணங்கிப் போகும் தலித் தாழ்ந்த சாதிப் பெண்கள் அல்லது கூலிப் பெண்கள், காதலனுக்கு இணங்கிப் போன காதலித்து கைவிடப்பட்ட பெண், இலக்கியத்தின் பெயரில் இணங்கிப் போன பெண், இப்படி இணங்கிப் போகும் ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அபலைகளே. ஆணாதிக்கம் என்ற பலமான சமூக அமைப்பில், பலவீனமான பெண்கள் இணங்கிப் போனால் அல்லது இணங்க வைக்கப்பட்டால் அதற்கான சமூக காரணத்தை கேள்விக்குள்ளாக்காது நுகர விரும்புபவர்கள் தான், இந்த இலக்கியவாதிகள். உலகெங்கும் பலமுள்ளவர்கள் முன்னால், பெண்கள் இணங்கிப் போகின்றனர். இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைப்பில் இப்படித்தான் உள்ளது. கணிசமான திருமணங்கள் கூட இணங்கிப் போகும் வடிவத்தில் நிகழ்கின்றன. இணங்கிப் போதல் கூட, காலத்தால் பெண் வன்முறை சார்ந்ததாக உணர்வதை நாம் கண்டுகொள்ள மறுக்கின்றோம். இது எமது அற்பத்தனமாகும். குறித்த காலத்தில் தமது அறியாமை, மற்றும் தமது பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் தமது பாலியல் வக்கிரத்தை தீர்த்ததை பல பெண்கள் காலத்தால் உணருகின்றனர். புலம்பெயர் இலக்கியத்தில் அப்படி பல பெண்கள் உணர்ந்தனர். இங்கு எதிர்மறையிலும் கூட பெண்கள் உணர்ந்துள்ளனர். இலக்கியத்தின் பெயரில் அரசியல் பெயரில் தவறாக வழிநடத்தப்பட்டு, தமது பாலியல் தேவையை ஆண்கள் நுகர்ந்ததை, காலத்தால் பல பெண்கள் உணருகின்றனர். பெண்களை தவறாக வழிநடத்தி, பெண்ணை இணங்க வைப்பது அன்றாடம் நடக்கின்றது. பெண்கள் காலத்தால் அனுபவத்தால் இதை உணர்ந்து கொள்கின்றாள். இதை தன் மீதான வன்முறையாகவே அவள் கருதுகின்றாள். இணங்கவைத்து காதலித்து கைவிடப்படும் ஒவ்வொரு பெண்ணும் கூட, இதை தெளிவாக உணருகின்றாள். இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிக பாரதூரமானது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இலக்கியவாதிகள் தமது சொந்த சுயநலம் சார்ந்த கோட்பாட்டுக்கு இணங்க, கருத்தியல் ரீதியாக இணங்க வைக்கும் மோசடியான வன்முறையை ஆதரிக்கின்றனர்.
இணக்கம், இணங்கிப் போதல் போதையில், இசைவெறியில் கூட நிகழ்கின்றது. இதை டிஸ்கோவில் சாதாரணமாக காணமுடியும். இதுவே இலக்கியத்திலும் நடக்கின்றது. இதற்கு வெளியில் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் இணங்கி சேர்ந்து வாழும் போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. இது இன்றி மனிதன் இல்லை. பொதுவாக இலக்கியம் மற்றும் அரசியல் பேசும் சிலர் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி, பெண்களை நுகரும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். முரண்பாட்டின் ஒரு தொங்கலில் தொடங்கி பெண்ணை தமக்கு இணங்க வைக்கும் நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள் கொண்டு வந்து, தமது தேவைக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்குகின்றனர். இதைத் தான் சாமிமாரும் செய்கின்றனர். மனிதனின் பலவீனங்கள் மீதான உளவியல் ரீதியான சிதைவை, தமது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துவது, சமூக இயக்கத்தில் பொதுவாக காணப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் என்ற கோட்பாட்டைக் கொண்டு, இதைத் தர்க்கரீதியாக இலக்கியவாதிகள் தமக்கு சார்பாக பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் தாங்களாக இயங்கி இணங்கிப் போதல் என்பது கூட ஆணாதிக்க பாலியலையே நியாயப்படுத்துகின்றது. பெண்ணின் அறியாமையை, ஆணாதிக்க அமைப்பின் பாதிப்பால் ஏற்படும் துயரத்தையும், அவர்களின் பலவீனத்தை இணங்கவைத்து பாலியல் ரீதியாக நுகர்வது ஆணாதிக்கம் தான். இதற்குள் ஒரு வன்முறை உண்டு. இலக்கியத்தின் பெயரில், வாழ்வு சார்ந்த ஒழுக்கம் பற்றி கேள்விகள் ஊடாக, பெண்ணை இணங்க வைத்து பாலியல் ரீதியாக உறவு கொள்வதும் பாலியல் வன்முறை தான்.
இணங்கவைத்தல் என்பது இந்த சமூக அமைப்பில் மோசடிகளால், நேர்மையீனத்தால், நயவஞ்சகத்தால், பலத்தால், அதிகாரத்தால், சமூக ஆளுமையால் எப்போதும் அப்பாவிகள் மீது பெருமளவில் நிகழ்கின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள் அதிகளவில் இணங்க வைக்கும் இந்த வன்முறைக்குள் பாதிக்கப்படுகின்றனர். இது சந்தை முதல் பெண்ணின் உடலை நுகர்தல் வரை இதுவே இன்றைய எதார்த்தமாகும்.
ஒரு பெண் இணங்கிப் போதல் என்பது கவர்ச்சி, பின் தங்கிய அறிவியல், சமூகப் பார்வை இன்மை, பலவீனங்கள், சொந்த பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், நம்பிக்கை மோசடிகள் குறிப்பாக இதை தீர்மானிக்கின்றது. இதைச் சமூகம் பொதுவான நுகர்வு பண்பாடாக உருவாக்குகின்றது. திரும்பிய இடமெல்லாம் பாலியல் ஊடாகவே உலகம் காட்டப்படுகின்றது. பாலியலே முதன்மையான செய்தியாக, மனித இருத்தலின் மையக் கூறாக காட்டப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் இயல்பானதாக, நியாயமானதாக காட்டப்படுகின்றது. விளம்பரம் முதல் சினிமா வரை இதையே செய்தியாக காட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நுகர்வின் எல்லைக்குள் இணங்கி உறவு கொள்வதை, இந்த புலம பெயர் இலக்கிய குஞ்சுகள் பெண்ணியம் என்கின்றனர். ஒரு பெண் இணங்கி சேர்ந்து வாழ்தல் என்பது வேறனாது.
… இணங்க வைப்பதற்காக அன்றாடம் மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க ஆண்கள் சமூகம் தான் இது. தமிழ் மக்களை தேசியத்தின் பின் இணங்கவைக்க, எப்படி குறுந் தேசியம் முனைகின்றதோ, அப்படித்தான் இதுவும். இந்த முயற்சியில் பெண்கள் விழிப்புறும் போது, பலர் தோற்றுப் போகின்றனர்.
…. யார் இந்தக் கோட்பாடுகளை சொன்னாலும், தாம் தெரிவு செய்துகொண்டு ஆணுடன் இணங்கி வாழ்ந்தவர்கள் தவிர, இணங்க வைத்து நுகர்ந்த பெண்களின் குமுறல்களை இட்டு இதில் கையெழுத்திட்டவர்களுக்கு ஒரு துளி கூட அக்கறையிருப்பதில்லை. அங்கும் ஒரு மோசடி, கயமத்தனம், ஏமாற்றுதல் இருந்தது என்பதை, இந்த வன்முறை எதிர்ப்பாளருக்கு தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தையும் முதுகுக்குப் பின்னால், அரட்டை அடிப்பவர்கள் தான் நீங்கள்.

ந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில், ‘நிதர்சினி என்ற குழந்தை கற்பழிப்பு’ எனவெல்லாம், திரும்பத் திரும்ப எழுதப்படுவதைப் படிக்கையில்-
ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான விடுதலை என்கிற பதாகையைத் தூக்கியுள்ள ‘பழமை பேணாத’ கோட்பாடுகளைப் பேசுகிற நபர்கள், ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடக்கிற ‘வர்க்கங்கள்’ கிளர்ந்தெழ வேண்டுகிறவர்கள், கற்பு போன்ற கருத்தாக்கங்களை வளர்த்து வளர்த்து, பெண்ணை அடக்கிற ஆணாதிகார மொழியிலுள்ள ஒரு வார்த்தைக்குப் பதிலாய் பதில் வார்த்தை -ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டவை- யை உபயோகிக்க முடியாமல் இருக்கிற (மெத்?)தனம் – அயர்ச்சியையே தருகிறது (அதுபோலவே தாழ்ந்த சாதி என்பதை – தலித் என்றெழுதப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாததும்).
எனினும், இப்படியான விவாதங்களின்போது (மட்டும்), இக் கட்டுரை பேசுகிற பல விடயங்களை விவாதிக்க விரும்பாதவர்கள், இங்கே (மேலே) எடுத்தாழுகிற அவரது கருத்துக்களை அல்ல, கற்பு/கற்பழிப்பு இத்தகைய சொல்லாடல்களையே முன்னிறுத்தி, அவர் எழுப்பிற பிற கேள்விகளை எதிர்கொள்ளார்கள். இந்தச் சொற்களின் அரசியலில்தான் படு அக்கறையாய் இருப்பார்கள். அதனாற்தானோ என்னவோ, இந்த மாதிரி கேள்விகளை – அரசியல் ரீதியாகச் சரியாகச் சிந்திக்கிறதான (*’தமது குறிகளாலேயே சிந்திக்கிற’) நபர்களால் எழுப்ப முடிந்ததில்லை.
றயாகரனின் கட்டுரையிலிருந்து, மரபான சொல்லாடல்களை மீறி, அவரது பெண்ணிலைப்பட்ட வாதத்தை, அக்கறையைப் பிரித்தெடுத்துக் கொள்வது என்பது இலகுவாய் இருக்கிறது. புத்தம் ‘புது’மொழியில் வசீகரிக்கப் படுகிற, ஏதொரு இயக்கத்தால் கவரப்படுற ஒரு பருவத்து இளைஞர்போல, தற்கொலைப்/போராளிகள்போல, புதிய புரட்சிகர (மார்க்சிய) க்கட்சி கருத்துக்களால் கவரப்படுகிற பதின்மத்தின் மத்தியிலுள்ள பையன்கள் போல, “நாட்டுப்பற்று” கக்கும் படம் பார்த்து, “எதிரிகளால்” தம் நாட்டுக் கொடி எரிய மெய்சிலிர்ந்து கண்ணீர் மல்கி இராணுவத்தில் சேர்கிற “வீரர்கள்” போல – ஒத்த வயதில் பெண்கள், பெண் விடுதலை என்கிற கோட்பாட்டால் கவரப் படுவார்கள். மேற்குறிப்பிட்டவர்களை (“பெரிய அளவில்”) துஸ்பிரயோகம் செய்கிறதை ஒத்ததே –மிகவும் ஈர்க்கப்படக்கூடியராய் இருக்கும்- இவர்களை உபயோகித்தலும் ஆகும். சிறுவர்களைச் செய்கிற மூளைச் சலவைகள் பற்றி எல்லாம் அக்கறைப் படுகிற கொள்கையாளர்களால் நிறை இலக்கிய/எந்த சூழலிலும் இது பேசப்படுவதில்லை. ஏனெனில் கொள்கைகளைக் காவுகிறவர்கள் புறத் தோற்றத்தில் அதைக் காவ விழைகிற அளவிற்கு அகத்தில் மாற்றமடைய நினைப்பதில்லை (“தேவை” இல்லை!). அதனாலேயே ‘இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிகப் பாரதூரமானது‘ என்பது பொருட்டற்றதாகி விடுகிறது; அதைப் பேசாமல், பாலியல் வன்புணர்வை, பலாத்கார அத்துமீறலை மட்டுமே எதிர்ப்பது எளிதானதாயிருக்கிறது.

காவேரியின் குறிப்பிட்ட கதை வெளிவந்தபோது உடனடியாக அது ‘மாற்றுப் பத்திரிகையான’ சரிநிகரில் மறுபிரசுரமானது. றயாகரனது கட்டுரை கூறுகிறபடி சரிநிகரை ஒத்த இந்த நிறுவனங்களெல்லாம் குறிப்பிட்ட வகை அரசியலை உடையனரான ஆட்களை ‘தன் தரப்பில்’ கொண்டாடியபடியும், அப்படியிருக்கக் கனவுகாண்கிற ஒரு தலைமுறையை தன்னுடன் சேர்த்து உருவாக்கிக்கொண்டும் இருந்தபடியுமே! ஆனால் எப்போதெல்லாம் அவற்றுக்கெதிரான குரல்கள் பதிவாகிறபோதும் தவறாமல் அதையும் எடுத்து போட்டு பத்திரிகையின் பக்கங்களிடையே தங்களது முற்போக்குத்தனத்தையும் சரி பார்த்துக் கொள்ளுவார்கள். இப்படியாய் வன்முறைகளை எதிர்க்கிற நிறுவனங்கள் ஆணாதிக்க நிறுவனங்களே என்பது முரண்நகைதான்.
அத்தகைய நிறுவனமொன்றிற்கு உள்ளிருந்தே “சுந்தரி” என்கிற பெயரில் எழுதிய பெண்ணின் படைப்புக்கள் அத்தகைய சூழலைக் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்திருந்தன. அவரது கதைகள் பிரசுரமான அதே பத்திரிகையின் பக்கங்களில் எழுதியிருக்கக்கூடிய அத்தகைய பாசாங்காளர்களை நோக்கிய வசையா/பாடல்களாகவே அவை இருந்தன.

-3-
இத்தகைய விடயத்தைப் பேசுகிறபோது பெயர்களை வீசி விடுவது முக்கியமற்றது; –தாங்கள் யார் யார் எப்படிப் பாதிக்கப்பட்டோம் என- சம்பந்தப்பட்ட நபர்கள் வந்து வாக்குமூலங்கள் தரவேண்டி இருப்பது அவசியமே அற்றது. ஒருவரோ பலரோ பிரச்சினையின் பொதுத்தன்மை பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் உரையாடுவதற்கு , நபர்களோ பெயர்களோ அவசியங் கிடையாது. றயாகரன், சிக்கலானதொரு பிரச்சினையை பொதுவில் –அதரப் பழசான சொல்லாடல்களின் தொந்தரவையும் மீறி– தெளிவான விளக்கங்களுடன் முன்வைத்திருக்கிறார். இதைப் படிக்கையில் வருகிற -“உபயோகிக்கப்பட்ட” பெண்களின் பட்டியல்/பெயர்களைத் தந்தால்தான் நம்புவோம் என்றொரு- “ஆர்வத்திற்கு” (பிறகு தரப்பட்ட பெயரை உடைய பெண்ணைப் பற்றி வெவ்வேறு பெயர்களில் வந்து யோக்கியம் பேச!) யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இதில் பேசப்பட்டது ‘பெயர்கள்’ தந்து ‘நம்பவைக்கவேண்டிய’ தலையாயத் தேவை எதையும் கொண்டிராதது. மாறாக ஆண்கள் எவரையும் தொந்தரவூட்டாத கோட்பாடு தான், எதிர் நிறுத்தப்படுகிறது.
மேலும், இந்த மாதிரி விமர்சனங்களின் மையப் பிரச்சினை – அது ‘ஒழுக்க’வாதமாக வெளிப்பட்டு விடுகிற தன்மை இருக்கிறது. அந்தவகையில், கட்டுரையில் வருகிற, மரபான வார்த்தைப் பிரயோகங்கள் – ஒழுக்க ‘சீர்’ குலைவு, விபச்சாரம், சோரம்போதல், ஒழுக்கக்கேடு, சீரழிவு, காமம்-வக்கிரம், நீலப்படங்கள் – டிஸ்கோ; இவற்றின் உள்பொருளாக இருக்கிற, இவையற்ற ‘நேரான’ ‘ஒழுக்கமான’ உலகம் வேண்டி நிற்கிற மரபான விருப்பையும் பதிகிறது. ஆனால்: ஒழுக்கம் அல்ல, நேர்மை/உண்மை என்ற சொற்கள் கூட வேண்டாம்; ஆனால், “உபயோகப்படுத்தல்” (அல்லது உங்களுக்குப் பிடித்த சொல் ‘சுரண்டல்’ (exploitation) இருக்கிற இடத்தில் முற்போக்காளர்கள் புல்லரித்துப் போகிற “சமத்துவம்” சாத்தியமில்லை என்பதே விசயம்.

றயாகரன் உபயோகிக்கிற, பொறுக்கித்தனம் என்பதிற்கான மாற்று சொல்லாக (பாலியல்ரீதியாக) சுரண்டுபவர்கள் என்பதைப் போட்டுப் பார்த்தால், உடம்பு, அதன் சீரழிவு என்பதாய் ஒழுக்கமும், அதைத் துஸ்பிரயோகம் செய்வது ஏற்படுத்துகிற மனஉளைச்சலை அச் சுரண்டல் எடுக்கிற காலத்தை அந்தக் காலம் உறிஞ்சிற எல்லா வகையான சக்தி இழப்பை – உலகின் சமத்துவ விரும்பிகளாய் இருப்பதாய் நம்பித் திரிகிறவர் நலன்களை முன்னிறுத்தியபடி, “பொறுத்து”/”சகித்து”க்கொண்டு, அதைப் ‘பொருட்படுத்தாமல்’ இருக்க வேண்டும் என்பதா சமத்துவவிரும்பிகளின் எதிர்பார்ப்பு? தொழிலகங்களில், பொதுவிடங்களில் எதிர்கொள்கிற பாலியல் சொற் துன்புறுத்தல்கள்/தொந்தரவுகளைப் போல அடையாளப்படுத்தப் பட வேண்டிய வன்முறையே இதுவும்.

ற்றப்படி, – ஆண்கள் – “எல்லோரையும் அப்பிடி சொல்ல முடியாதுதான்.” அதுபோல, பெண்கள் – ‘எல்லோரையும்’ இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்போல ‘தொனி’ப்பட எழுதுவதில் சிலருக்குப் பிரச்சினையானதாய் இருக்கிறது. இங்கே சொல்ல வேண்டியது: இத்தகைய வன்முறை, ஒரே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தாலும் வன்முறை வன்முறையே. மேலும், அப்படிப் ‘பொது’ப்படுத்தி எழுதினால், புரட்சிகரமான சூழலை கொண்டிருப்பவர்களிற்கு அது ஏன் பிரச்சினை தர வேண்டும்?! அத் தொனி எதனை மையங் கொள்கிறது?
-0-

படம் நன்றி

பயம்

October 12, 2005 21 comments

(ரோசாவசந்தின் பதவிற்கெழுதிய பின்னூட்டம், நீளங் கருதி இங்கே உள்ளிடுகிறென்).

ம்மிடையே மார்க்சியர்கள்/இடது/முற்போக்காளர்கள் என தம்மைக் குறிப்பிட்டுக்கொள்பவர்கள் பலரும் தாங்கள் அப்படி ஒரு பட்டத்தைத் தமக்கு தந்திருப்பதாலேயே பெண்களது பிரச்சினை குறித்து, பிற தம்மால் ‘அனுபவித்தறிய’ இயலாத மனிதர்களின் பிரச்சினைகுறித்து ‘புரிந்துகொண்டேன் பேர்வழிகள்’ என (ஒரு –ஐயும் புரியாமல்) இருப்பதைக் காணலாம். இது புதிய ஒன்று அல்ல.
இங்கே குஷ்பு சார்ந்த, பதிவுகள் படித்தபோது, “நாங்கள் இன்னஇன்ன இயர்களாக (மார்ச்சியர், பெரியாரிய, வட் எவர்!) இருப்பதால், படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை காவுபவர்களாக இருக்கமாட்டோம்” எனகிற அசாத்திய நம்பிக்கையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இங்கே, ஒரு கட்சியாய் குறிப்பிட்ட கொள்கைகளின் கீழ் இணைந்திருக்கிறபோது, தனிநபர்களின் ‘உயரிய’ சிந்தனைகள் அடிபட்டுபோய்விடும்; ஆனா இங்க வந்து வலைப்பதியிற கட்சி சாராத அக் கொள்கைகள்சார் தனிநபர்கள், தான் இன்னஇயன் என என்ன யம்பிங் விட்டாலும், அது முடிய, என்ன சொல்கிறார்கள் என்பதே பொருட்டு என்பதை அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது.

திண்ணையில் படைக்கப்படுகிற சின்னக்கருப்பன் போன்றவர்களது பிற்போக்குத்தனங்களைவிட —அறிவியல்,நவீன இலக்கியம் என பரிச்சயமுடைய நபர்களின் மரபான பயத்தை (அதைத் தவிர வேறொன்றுமில்லை) த்தான் மிக ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது.

குஷ்புவினது பேட்டியைப் பார்த்து ‘இளம் யுவதிகள்’ (இளைஞர்கள அல்ல!) , ‘கெட்டு’ப்போய்விடுவார்கள் என்றும், குஸ்பு (திருமணத்திற்கு முன்பு வைத்திருக்கிறபோது) உரிய தற்காப்புகளுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்னதற்கு, ‘செய்த (செக்ஸ்) தவறிற்கான பின்விளைவை’ அனுபவிக்கத்தானே வேணும் என்கிறரீதியில் சொன்னது தனியே டோண்டு ராகவன் போன்றவர்கள் அல்ல. In fact, டோண்டு ராகவன் – அவர் நிச்சயம் அப்படிச் சொல்ல மாட்டார்! வேதங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைப் பேச மாட்டாரே தவிர பெண்கள் குறித்து அவர் வைத்திருக்கிற கருத்துக்கள் இங்கே/எங்கேயும் எழுதுகிற பல ‘சிவப்புக்கட்சி/பெரியார்’ சார்பு அறிவியலாளர்களை விட உயர்ந்ததே. அதை ‘அவர்’ சொல்வதால் ‘சந்தேகத்துடனும்’ ‘நேர்மையற்ற’தாகவும் ‘சந்தர்ப்பவசமான’தாகவும் பார்க்க விழைகிற பலருக்கு தமது பின்னோக்கிய, மரபார்ந்த பயத்தை, ஒத்துக்கொள்ளும் நேர்மை கிடையாது.
பிற்போக்கான மற்றவர்களைப் பார்த்து ‘சிரிப்பு வருகிறது’ என்று அத்தகையவர்களது நகைச்சுவையுணர்வில் புளகாங்கிதமும் தவறாது அடைந்து போகிறவர்கள், தம்மை மறுபரிசீலனை செய்யத் தயராய் இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் பலராகத்தான் அறிவுத்துறை ஆண்கள் எங்கயும் இருக்கிறார்கள்.
குஷ்பு வின் ‘அதீதமான’ கோபத்தையும் ‘அதிகமாகக் கூவியதை’யும் இந்த ‘அரசியல்’இற்கான காரணத்தைக்கூறி ”பெண்களே நீங்கள் இதை உங்களுக்கெதிரானதாக நினைக்கக்கூடாது” என்பவர்கள், பயத்துடன் பதிவுகளிற்கு மேல பதிவும் -குஷ்பு சொன்னதைப் படிக்க முன்னரேயே- , பத்திரிகைகளில் பரப்புரையும் செய்பவர்கள் அவர்களை ஒத்த ஆட்களே. எதற்காக பெண்கள் இதை ஒரு அரசியலென புரிந்துகொள்ளவேண்டும். தம்மை அவமதிக்கிற, உள்ளடக்காத ஒரு சாமானை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?

இந்தியா டுடெயில், குஷ்பு சொன்னதில் எதில் எதில் முரண்படுகிறார்கள் எல்லாரும்? குஷ்பு சொன்ன என்ன விடயம் “பிரச்சினைக்குரியது” “முரண்பாடானது” என்பதை வெளிநாட்டிலிருக்கிற முற்போக்காளர்கள் -குஷ்புவின் அந்த ஒரு பக்கக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டி- விளக்கிக் கூறலாம். அந்த ஒருபக்க விளம்பலில் இருந்து எடுத்துப் போடுவது சிரமமான காரியங் கிடையாது. அதை செய்தால் உங்களது பயங்களின் நிலவரம் எந்த மட்டில இருக்கிறதென்பது தெரிய வரலாம்.

குஷ்பு சொன்னதைப் படிக்காமலே ஒவ்வருவரும் எழுதிய கருத்துக்கள் + குஷ்புவினது அந்த சிறு கட்டுரையில், பாலியல் சுதந்திரம் போன்றன எங்கே பேசப்பட்டன என்பதையும் யோசிக்கிறேன்.
“இந்தியா டுடெயில் இப்படிச் சொல்லுகிறவர் தன்னை விபச்சாரி என்றதற்கு முதல் ஏன் கூவினார்” என்றும் சிலர் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். ‘விழுந்தடித்துக்கொண்டு’ பதிவதில் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு புரிகிறதா என்ன?!

குஸ்பு என்ன பெண்ணிலைவாதியா, அவர் ஏதும் செய்திருக்கிறாரா, என்கிறரீதியில் கேடகிறாகள்.

செக்ஸ் பற்றிக் கருத்து சொல்ல குஸ்பு ஏன் பெண்ணிலைவாதியாய் இருக்கவேண்டும்? அவர் குங்குமம், தாலி, மெட்டி போட்டிருந்தா என்ன? – தெரியவில்லை.

//படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்//

கட்டுரையிலிருந்து இந்த வரி (கட்டுரையிலில்லாத பல வரிகளைப்போலவே)நிறைய அர்த்தங்களைப் பலருக்கும் தந்துவிட்டது, நியோ என்பவர் எழுதிறார்:

1. * படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்
HUHHHHH!!!!!! இந்த வாசகத்திலே இருக்கிற sweeping nature எத்தனை விசயங்களை பிறழ முன்மொழிகிறது என்று சொல்லத் தேவையில்லை!
2. * இப்பொதெல்லாம் pre-marital sex கொள்லாத பெண்கள் இருக்கிறார்களா என்ன?
jeez! What the *%%&%^

யார் இவருக்கு இந்த அதிகாரமளித்தது – சமூகம் பற்றிய தன் கருத்தை இத்தனை பொறுப்பில்லாமல் சொல்வதற்கு?
இதுதான் என்னுடைய எதிர்வினை! அதாவது இந்த வார்த்தைகளை குஷ்பூ இதே விதமாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில்.

————————————————————————–
இதில பொறுப்பில்லாத தனம் என்ன இருக்கு? குஸ்பு எதே விதமாய் சொன்னார் என்பதே படிக்காமல், அப்படிக் கேள்விப்பட்ட உடனேயே ஒரு ஆண் பதறிப்போய் (அந்தத் தனது பதறலை ஒத்துக்கொள்ளாமல், அதை ‘சமூகம்’ பற்றிய கூற்றாக திரித்து), தன் பெண்களைப் பற்றி பயம் கொள்கிற ஒரு சமூகம் இல்லாதுபோனால் அத்தகைய வாசகங்களில் இருக்கிற sweeping nature இற்கு என்ன ஆகும்?
“திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ளாத பெண்கள் இருக்கிறார்களா என்ன” என்கிற கேள்வி குறித்த மேற்குறிப்பிட்ட எதிர்வினை, கற்பு என்கிற கருத்துருவாக்கத்தை இழக்க விரும்பாத ஒரு சமூக ஆண் தனிநபர(ர்கள)து குரலன்றி வேறென்ன? இங்கே இந்த விசயத்திற்கு துள்ள வேண்டிய அவசியம் என்ன? பெண்கள் pre-marital sex கொள்லாதவர்கள், இருக்கலாம், இல்லாமலிருக்கலாம், குஸ்பு, அதை இப்படிச் சொன்னால், அதனால் என்ன அழிந்துவிடும்?
உண்மையில் இவர் தனது கவலை சமூகத்தைப் பற்றி குஸ்பு சொல்கிற கருத்தென நம்புகிறார்.

தொடர்ந்தும் சப்பைக்கட்டுக்கட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு, -பயம் போன்றே-ஆண் என்கிற தனது இன/சாதி என்கிற அரசியற் காரணங்கள் இருக்கலாம். இங்கே குஷ்புவை அழ அழ மன்னிப்புக்கேட்கச் செய்த ஆதிக்க செயலை தங்கர்பச்சன் மன்னிப்புக் கேட்டதுபோல ஒன்று என நினைப்வர்கள் அதைத்தான் தெரிவிக்கிறார்கள்.. (இதில் ‘குஸ்பு மன்னிப்புக்கேட்டது தப்பு’; தன்ர கருத்தில ஸ்றோங்கா நின்றிருக்கணும் எனவெழுதுகிறவர்களையும் குறிப்பிடவேண்டும்.).

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் நவீன ‘அறிவூட்டப்பட்ட’ மூளையையுடையவர்களது பிற்போக்கு வாதங்களை சகித்துக்கொள்ளும்தன்மையை வளர்த்துகொள்ள முயலவேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பெண்களை தாம் இழிவாக்கி வைத்திருக்கிற சொல்லாடல்களால், தமது இழிவெண்ணங்களைக் கொட்டித் திட்டுபவர்களிடம் எல்லாம் ‘அரசியல் ரீதியாக’ மிகச் சரியாகவும், பொறுப்புடனும் பேசும் தன்மையை வளர்த்துக்கொள்ள இயலாது. (இது குறித்து குழலி ஒரு பதிவு போடலாம்; முற்போக்கான பெண்கள் எவ்வளவு கூவலாம், சாதாரண பெண்கள், ‘குடும்ப’ பெண்கள், நடிகைகள், இதர தொழில் வர்க்கப்பெண்கள் எவ்வளவு இத்தியாதி என ) …

கற்பு பற்றி ‘வெளிப்படையாய்’ பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும்
மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்,
அவர்களது அரசியல் தலைவர்கள், கொண்ட ஒரு சமூகத்தில் “காலாவதியாகும் கற்பு” என்றொரு தலைப்பில்,
அவங்ககளைப் போன்ற ஒரு ஆளை,
அவங்களுடைய அரசியல் கட்சியை/ அவங்களுடைய சாதியைச் சேர்ந்த ஆணை
நாலுபேருக்கு முன்னால மன்னிப்புக் கேட்கச் செய்தவள், “விபச்சாரி” என்று உன்ர அம்மாட்ட போய் சொல்லு என்றவள், பெண், அதுவும் (இயக்குநர்கள் டிஸ்கஸன் என்ற பெயரில் நடப்பது உலகிற்கே தெரியும் என்கிற ‘புரிதலுக்குரிய’)
ஒரு ‘நடிகை’ எழுதினது பெரும் பிரச்சினையே.. (என்ன எழுதினார் என்பதை முழுமையாப் படிக்காவிட்டாலுங் கூட!!!!!!)

ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’

June 1, 2005 17 comments

இயலாமையின் புகலிடம் தாய்மையா?

-ராஜினி

நன்றி

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்…… என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக…

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்… அதுவும் “பெண்களுக்கேயுரித்தான” தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்… அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை… அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை. துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
0

-ராஜினி
(நன்றி: சக்தி 2001 மே- இதழ்-26, நோர்வே)

எழுத்து வன்முறை

November 20, 2004 3 comments

நீங்கள் கதை, கவிதை, கட்டுரைகள் அனுப்பலாம். தயவுசெய்து முலைக் கவிதைகளையெல்லாம் அனுப்பி எங்கள் தாலி அறுக்க வேண்டாம். அதற்கென்றே காலச்சுவடு, உயிர்மை போன்ற ஸ்பெசல் பத்திகைகள் நடத்தப்படு கின்றன. “முலைகளே இல்லாத, அல்லது சிறிதாக இருக்கிற நம் பெண் கவிதாயினிகள் அதைப் பற்றி எழுதுகிறார்கள், உங்களுக்கென்ன இவ்வளவு கோபம்’ என்றார் நண்பர் ஒருவர்.

அது சரி, அதற்கு கவிதை எதற்கு எழுத வேண்டும். பேசாமல் நாயுடு ஹாலுக்குப்போய் ஒரு உருப்படியை வாங்கி மாட்டிக்கொண்டோ அல்லது தங்கள் பின்புறச்சதையை அறுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டோ ஒழிய வேண்டியதுதானே? என்றேன் நான்.

இன்னொரு நண்பர் சொன்னார், “போர்னோ எழுத்துகளைப் படிக்கும்போது என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறதோ அதே உணர்வுகள்தானே, பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்கிற ஹோதாவில் எழுதப்படுகின்ற இந்தவித முலைக்கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்படுகின்றது. அப்படியிருக்க இப்படிப்பட்ட கவிதைகளை எழுதிவிட்டு எப்படி இவர்கள் விரும்பும் பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களை உருவாக்குவார்கள்?’ என்று. எங்களுக்கும் இதே கேள்விகள்தான்? எனவே உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல இயலாதவர்களாயிருக்கிறோம். ஒருவேளை யாராவது பெண் கவிதாயினிகள் பதில் வைத்திருக்கலாம். அல்லது உலக வரைபடத்திலேயே இல்லாத ஒரு கற்பனையான நாட்டின் பெயரைச் சொல்லி அந்தநாட்டில் இந்த மாதி முலைக் கவிதைகள் எழுதிய பின்னர்தான் மிகப்பெரிய சமூகப் புரட்சி ஏற்பட்டு பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களெல்லாம் ஏற்பட்டதென்று சொல்லலாம்.

செப். 2004 கசடதபற இதழின் தலையங்கத்திலிருந்து

குட்டிரேவதி கவிதைகள் எனக்குப் பிடிக்காது (இதை சொல்வதே ஒரு தற்காப்புப்போல தொனிக்கிறது!). தேவதேவனுடையதைப்போல படிமங்களால் நெய்து கண்முன்னே படிமங்களே மிதக்கிற வெறும் சொற்சித்திரங்கள்; மனதுள் ஊடுருவாது எளிதில் அயர்ச்சியைத் தந்துவிடுபவை. இத்தகைய கவிதைகளை தொடர்ந்து ‘ஒரே மூச்சில்” படிக்க முடியாதிருப்பது அதற்குரிய தகமையா பலவீனமா தெரியவில்லை (போர்னோ எழுத்துக்களை ஆண்கள் யாரும் ‘வைத்து வைத்து’ படிப்பார்களா?) ‘முலைகள்’ வெளிவந்தபின்னான, ‘பலத்த’ சர்ச்சைகளிற்குப் பிறகு தொகுப்பை மீண்டும் படித்தேன், அதிகம் பிடித்திருந்தது. விமர்சகர்கள், இந்தப் புத்தகத்திற்க வைத்திருந்த விமர்சனமும் இதுதான். ‘கவனம் பெற’ அல்லது ‘தடாலடியாக’ அல்லது ‘CATCHY’ யான தலைப்பிட்டதால் இந்தப் புத்தகத்திற்கு ‘மற்றத் திறமையானவர்களுக்குக்’ கிடைக்கவேண்டிய கவனம், அங்கீகாரமெல்லாம் கிடைத்துவிட்டது! (கிடைக்கவேண்டிய ஆக்கள் பாவமென?!)

என்னோட எண்ணம் என்னெண்டா, கிடைச்சா என்ன? ஒரு சடங்கு போல, குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற வெகுசன இதழ்களை தொடர்ந்து எடுப்பதை வழக்கமாய்க் கொண்டுள்ளவர்கள் நாங்கள் (இப்போது காலச்சுவடு, உயிர்மைகூட அப்படித்தான் வந்துவிட்டது வேறு விடயம்). அதுகளத் தொடர்ந்து எடுப்பம், படிப்பம், எறிவம் – அது இயல்பென வந்துவிட்டது. அப்ப, ஒரு தீவிர இலக்கிய சூழலில வாற கவிதை நூல் ஒன்றை, அதன், ‘கவர்ந்திழுக்கிற’ தலையங்கத்திற்காக ஒருக்கா வேண்டினாத்தான் என்ன? அதால தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்ன நஸ்ரம்?

ஏதோ இருக்குத் தான் போல.

முந்தியொரு காலத்தில, வானொலியொன்றில விமர்சனம் ஒன்று செய்தபோது ஏற்பட்ட அனுபவம்தான் ஞாபகம் வருது. அதில், இந்தியாவில், பன்னாட்டு அழகுசாதன உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம், இந்தியாவிலேயே தொடர்ந்து உலக அழகிகள் தேர்வாகிறதற்கான உண்மையான காரணம் என்பனவற்றை உள்ளடக்கி ‘சிவப்பழகைப் பெற’ தமிழ்நாட்டின் நம்பர் ஒன் இதழ்கள் தருகிற ரிப்ஸ் இவற்றின் பின்புலம் என ஆராய முயன்றிருந்தேன். அப்போது படித்த இது பற்றிய கட்டுரையை ஒட்டி இருந்தது அந்த விமர்சனம்.

அந்தக் கட்டுரையில், சத்ய ஜித் ரே யின் திரைப்படம் ஒன்றில் வந்த ஒரு காட்சியை வர்ணித்திருந்தார்கள்: வறிய இந்தியக் கிராமமொன்றில், ஒரு ஏழைச் சிறுமி, கரித் துண்டினால் கண் மை இட்டுக் கொள்கிறாள் – ஆம் அதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்திய (ஆசிய)ப் பெண்களின் அழகு பற்றிய கனவு. அந்தக் கனவை வளர்ப்பதில்தான் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி விற்பனை தங்கியுள்ளது என சொல்ல முயன்றிருந்தேன்.

இது நடந்து, நீண்ட நாளைக்குப் பிறகு, என் அத்தைக்காரி ஒருத்தி என்னைச் சந்திக்கும்போது அவள் கேட்டாள், ‘அடியே, றேடியோ கேக்கிற மனுசி ஒண்டிட்ட நீ என்ர மருமகள்தான் எண்டு சொல்ல, அவ நீ கறுப்போ எண்டு கேட்டாடி, ஏனடி?” சிரிப்புத்தான் வந்தது, அட பாவமே!

அதன்பிறகு நான் ரொறன்ரோவில் நின்றிருந்தபோது முழக்கம் பத்திரிகைஇல் கவிஞர் சக்கரவர்த்தியின் பேட்டி ‘வெள்ளாளர்களுக்கு எதிராக,’ ‘பார்ப்பனர்களுக்கு எதிராக’ என அதிரடியாக வந்திருந்து. இதுபற்றி நண்பர் ஒருவர் சொன்னார், சக்கரவர்ததி ஒரு வசனத்தை அதில் சொல்லியிருந்தார், அது ஒரு முக்கியமான வசனம் என்று. அது “என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாம் சாதிமான்கள்தான். நான் இப்பிடி இதுவள எதிர்க்கிறது அவர்களுக்குப் பிடிப்பில்ல’ என்டிறாப்போல ஒண்டு. இதனூடே அவர் தனது சாதியை இன்வேர்ட்டக் கொமாக்குள்ள சொல்றார் என்றார் அந்த நண்பர்.

சக்கரவர்த்தியோ, அல்லது பிறரோ அதை நனவாக சொல்கிறார்கள் என்பது இல்லை, ஆனால் அப்படி ஒரு ஸ்ரேற்மன்ற் தேவையாத்தான் இருக்கிறது. அல்லது ஏலவே சொல்லப்படுபவற்றில் அப்படி ஒரு அர்த்தம் எப்படியோ வந்துவிடுகிறது.

அப்படி ஒன்றைச் சொல்லாதுவிட்டால், அந்த சொற்களுக்கு பெறுமதி இல்லையா, அந்த சொற்களுக்கப்பாலான ஆர்வம் ஏன் பிற விடயங்கள்மேலேயே வருகிறது?

தெரியாது.

ஆனா பொதுப்புத்தியில் (புத்திசீவிகள், சாதாரணமக்கள்) இதுதான் கேள்வி, ஒரு விமர்சனத்திற்கான பதில் விமர்சனம் இதுதான்.

வீட்டில் பிரச்சினை ஏதோ இருப்பதால் (மட்டுமே) பெண்கள் எழுதுகிறார்கள்; காமத்தில் திருப்தி இல்லாததால் காமத்தைப் பற்றி எழுதுகிறார்கள் அல்லது உடலுறவு தேவைப்படுகிறது அதனால் எழுதுகிறார்கள்; முலைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு முலைகளே இல்லை –அந்த வயிற்றெரிச்சலில்தான் முலைகளைப் பற்றி எழுதுகிறார்கள்-; சாதியை எதிர்க்கிறார் ஆகவே இவர் சாதி குறைவு (அல்லது சாதி குறைவென்றதாலதான் சாதியை எதிர்க்கிறார்)…

இந்த ஒப்பற்ற முடிவுளால் மிக மிக பிற்போக்கான ஒரு கருத்தைத்தான் நாம் கொண்டிருப்போம் என்பது எங்களுக்குப் புரிவதில்லை.

தலித் விடுதலை பற்றி எழுதுகிற தலித்தல்லாத ஒருவர் ‘நீங்கள் தலித்தோ” என்று கேட்கப்படுகிறபோது விழுந்தடித்துக்கொண்டு ‘சீச்சி இல்ல இல்ல” எனலாம்; அத்தையும் ஒரு பெரிய சீயோட அவள் அவ்வளவு கறுப்பில்ல எண்டு ‘ரோசத்தோட’ சொல்லலாம்.

ஆனால் “அப்படித்தான் இருக்கவேணும்’ என்பவர்களது எண்ணப்பாடும், ‘இல்லை’ என மறுப்பவர்களது எண்ணப்பாடும் என்னவாக இருக்கிறது?

அப்படித்தான் இருக்கிறபோது (தலித்தாக, கறுப்பாக) என்னவிதமான ‘திருப்தியை“ பொதுப்புத்தி உணருகிறது?

குட்டி ரேவதியினது கவிதைகளைவிட அவர்மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் முக்கியமானது. சல்மா, ‘’என்னுடைய நாவலுக்கு இப்படி ஏதாவது ஒரு தலைப்பை வைத்தால் அதிகமான கவனம் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். நான் எழுதியுள்ள விஷயங்களால் எனக்குக் கவனம் வந்தால் போதுமானது.”

எனச் சொல்லியிருந்தார். நல்லது. ஆனால் அதொரு ‘நான் தலித் இல்ல’ வகை பதில்தான். அது சல்மாவுடைய முடிவு, நிலைப்பாடு (இந்த நிலைப்பாட்டில், அடிப்படையில், எனக்கும் சம்மதம்தான், குட்டிரேவதியினுடையதைவிட லீனா மணிமேகலையின் கவிதைத் தொகுப்பில் முன் அட்டையில ஒரு நிர்வாணப் பெண்ணின் படம் இருந்தது. இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் இந்தப் புத்தகம் நிறையப் பெண்களால் சுதந்திரமாகப் படிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் உண்டெனில், நிறையப் பெண்களுக்கு, அவர்கள் வீடுகளில், முன்னட்டையில் நிர்வாணப் பெண் அவ்வளவு ‘வசதியான’ ஒன்றாக இராதெனவே நானும் நினைக்கிறேன்). குறிப்பிட்ட பேட்டியில் பேட்டியாளர் கேட்கிறபோது இத்தகைய பதில்களையே எதிர்பார்ப்பதுபோலவும் தோன்றுகிறது. அவ்விடத்தில் சல்மா போன்ற பெண்கள் அத்தகைய பதில்களைத் தவிர்க்கலாம். முலைகள் தொகுதியில் முன்னட்டை மிகவும் பழைய, ஆர்வத்தை தூண்டாத, டல் லான, வியாபார தந்திரமே அற்ற ஒரு sketch ஐக் கொண்டிருந்தது. (தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் போதுமானது என விமர்சகர்கள் நினைப்பதுபோல பதிப்பாளர்களும் நினைத்திருக்கலாமும்தான்!).

ஒரு கடையில் போய் ‘முலைகள் தொகுதி இருக்கிறதா’ எனக் கேட்பது உண்மையில் ஒரு தமிழ் ஆண்மகனைவிட, பெண்ணிற்கே சங்கடமான (விற்பனையாளர் ஆணாக இருக்கிற பட்சத்தில்) விடயமாக இருக்கும். ஆக, இது ஒரு பெண்களின் பிரச்சினை! அங்கே இதே விற்பனையாளர் பெண்ணாக இருந்தால் ஆண்களுக்கு அது ஒரு குறும்பாக, ஒரு அழகான சீண்டலாக, அன்றைய பொழுது முழுதும் நினைத்திருக்கக்கூடிய சம்பவங்களில் ஒன்றாகவே இருக்குமென தோன்றுகிறது (உதாரணம் கேள்வி: “முலைகள் இருக்கிறதா?”). ஆக, அவர்களுக்கு அது ஒரு கொண்டாட்டம். இது வந்த காலத்திலும் இதை ஒத்த நிறைய ‘நகைச்சுவைகள்’ அவர்களுக்குள் ஊடாடி இருக்கும் என்பதும் உறுதி. இருப்பினும், இத்தொகுதியால் சீண்டப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான்.

சுல்மாவினதும் எனதும் அபிப்பிராயத்தின்படிதான் ‘முலைகள்’ இருக்கவேண்டுமென்பதல்ல. கவர்ச்சியாக, போகப்பொருளாக, மேலதிக கவனத்துடன் நோக்கப்பட்ட ஒன்றை வெகு சாதாரணமாக ஒரு தொகுப்பிற்கு தலைப்பாகப் போடுவது ஒரு கலகமாகக் கூட இருக்கலாம். காலங்காலமாக அடக்கப்பட்ட சாதியினர் தம் சாதி அடையாளத்தையே எதிர்ப்பு சொல்லாக உபயோகிப்பதுபோல… மற்றது, தொகுப்பிலேயே சிறந்த கவிதையின் தலைப்பை தமது கவிதைத் தொகுப்பிற்கிடுவது ஒரு வழக்கம். அந்தவகையில் கு.ரேவதியின் கவிதைகளில் “முலைகள்’ சிறந்ததாய் இருக்கிறது, அந்த அடிப்படையில் அதைத் தலைப்பிட ஆட்சேபனை அவரிடம் இல்லாதபோது மற்றவர்கள் ஆட்சேபங் கொள்ள அங்கே என்ன இருக்கிறது?

ஆனால் விமர்சகர்கள் அப்படி எல்லாம் சாதாரணமாய் அதை எடுத்துக்கொள்ளத் தயாராய் இல்லை.

கவிஞர் சேரனை நித்திய காதலன் என கொண்டாடிய காலச்சுவடு இதழில் பிரம்மராஜன் குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுதியிருந்தார். அவரது ஒற்றைப் பக்க மதிப்புரையில், அப்படித் தலைப்பிட்டமை, அவரைக் குத்தவே செய்கிறது. மதிப்புரையை எழுதியவர்கள் வேறுவேறு என்றாலும் சேரனின் கவிதைகள் ‘கவனத்திற்காக’ ‘பெண்களை வசீகரிக்க ஒரு திரைப்பட நாயகன் போல் மாயைகளை உருவாக்கியபடி’ எழுதப்பட்டவை என பிரம்மராஜன் ஒருபோதும் எழுதப் போவதில்லை என்பதும் உறுதி.

அதென்னவோ, குருதி சுக்கிலம் செம்மது என ‘வலிந்துகட்டி’ சேரன் நகைச்சுவையான கவிதைகளை எழுதலாம், ஆனால் குட்டி ரேவதி ‘எனது பிரத்தியேக உறுப்புகளான ஜோனியும் முலைகளும்…’ என எழுதக்கூடாது, ஏனெனில் அதைத் தெரிந்தே அவர் எழுத (முலைகள் என ஒரு தொகுப்பு விட) வந்திருக்கிறார்! என்ன நியாயம்! ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது.

சேரன் என்பவர் ஒரு ஆண் சக அரசியல் ஈடுபாடுள்ள கவிஞர். குட்டி ரேவதியோ வெறும் கவனிப்புக்காக ஏங்கி எழுதும் ஒரு பெண்மணி. வாழ்வின் எண்ணற்ற முக்கியமான விடயங்களை (சேரனுக்குக் கிடைக்கப் பெற்ற போராட்டம், வாழ்நாள் முழவதுமான அரசியல் ஈடுபாடு) உப்புசப்பற்றதாக்கி ஆக செக்சைபற்றி அவர் எழுதிவிட்டார். அது உண்மையில் அவரைப்போன்ற கவிஞர்களின் பாரதூரமான தவறு, அவற்றை எழுத வேண்டியவர்கள் ஆண்கள்தான்.

செப். 2004 கசடற இதழில் வந்தது மேலே தரப்பட்டிருக்கிறது; பலவிதமான கேள்விகள் எழுகிறது.

முலைகள் இல்லாத தாய்கள் எதனால் தம் மகவுக்கு பால் ஊட்டுகிறார்கள்? முலைகள் இல்லை என்பது எந்தக் கண்ணோட்டத்தில்? முலைகள் இல்லாமல் பாலூட்ட முடியாது போன தாய்கள் உண்டா?

குட்டி ரேவதியின் தலைப்புக் கவிதையிலும் சரி பிறவிலும் சரி போர்னோ எழுத்து எங்கு வந்தென்று எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு விதண்டாவாதம், வன்மம் எதற்கானது?

இந்த விமர்சனத்தை –ஏனையவற்றைப்போலவே- படித்தபோது ஒன்று புரிந்தது. இதை ‘கண்டதும் கேட்டதும்’ பகுதியில் காலச்சவடு எடுத்துப் போட்டிருக்கிறது. காலச்சுவடில் பிரம்மராஜன் முலைகளை வெறும் வியர்வைச் சுரப்பி என எழுதினார். இந்த நண்பர்கள் பின்புறச் சதைகளை அறுத்து வைப்பதைப்பற்றியும். வேண்டி மாட்டுவதைப் பற்றியும் எழுதியுள்ளார்கள்! வெறும் வியர்வைச் சுரப்பி இல்லை என்கிற அக்கறையிலா இதை அவர்கள் சொல்கிறார்கள்! ஒரு பாலியல்ஈர்ப்பு மையம் இல்லை (இல்லை என்பதன் அர்த்தம் ‘பெரிதாக’ இல்லை) என்கிற தாழ்வுணர்ச்சியை அல்லவா ஊட்ட முனைகிறார்கள்?! பின்புறச் சதை இல்லாதவர்கள் பாவம் என்ன செய்வார்களோ எனவும் ஒரு கவலை பிறக்கிறது..

ஒரு இதழின் தலையங்கமே இப்படி இருந்தால்- இதுபோன்று

இக் கவிதைத் தொகுப்பிற்கு, விமர்சனம் என ‘அதற்கு தமக்கு தகுதி இருக்கிறது’ என எழுதிய பலரதும் நோக்கமும், வெளிப்பாடும்தான் கீழ்த்தரமானவையாக, அருவருக்கத்தக்க முறையில் இருக்கின்றன. இத்தகைய தொகுப்பை எழுதியதற்காக அவர் ‘வெட்கப்பட்டு” விடவேண்டுமென்கிற ஆண் மனமும், பெண்ணை தாக்க இடம் தேடும் கீழ்மையும்தான் தெரிகிறது. நடு வீதியில் எரிக்கப்படவேண்டியது இவர்களது இந்த சிந்தனை (ஐயோ, அதுதானா அதற்குப் பெயர்?) கள்தான்.

இப்படி எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற, ஒரு கூட்டம்தான் முற்போக்காளர்கள் என்றால் அந்த அறிவுலகத்தைக் கடவுள் காக்க!

கண்ணன்கள் – கவிஞன்கள் – நித்திய காதலன்கள்

October 29, 2004 6 comments
-ஒரு பெட்டை அலசல்

ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையில்

காத்திருக்குமாம் கொக்கு

-சொலவடை

(குளக்கரையில்) நீளக் காலூன்றி

ஒரு கொக்கு தவமிருக்கு

-சேரன் (கவிதை, ‘பிரிதல்’)

1.0 கண்ணன்கள்

கண்ணன் குழலூத ஆண்டாள்கள், மீராக்கள் (இருவரும் ஒன்றுதானா?) தம் கணவன்களையும் விட்டுவிட்டு அவனிடம் ஓடி வந்துவிடுவதாக,

அவனின் செம்பவள வாய் வேண்டி

“…மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே” – என்றெல்லாம் உருகி உருகி அவள் பாடி நின்றதாக தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது.

தம் காமத்தை பக்தியினூடாக வெளிப்படுத்தியவர்களாக இருந்த இப் பெண்டிரது கனவின் முழுமையான பிம்பம் ஆகிய கண்ணன் இன்றுவரையில் புனைவுகளில் ஆண்மையின், மயக்குதலின் நாயகனாகத் திகழ்கிறான். ஆண்மைக்கு அழகெனப் ‘படுகிற’ கார்மேக வண்ணம் தமிழ் சினிமாவிலும் ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ எனப் பாடல்களாய் ஒலிப்பதாகிறது. (தமிழர்கள் தம் திராவிடத்தின் கறுப்பை ஆண்களிடம் மட்டுமே விரும்பிக் கொண்டும் இருக்கிறார்கள்!)

அவ்வாறாய் கண்ணன் மிக முக்கியமான பிம்பம் ஆண்மையின் சின்னம்.

பெற்றவர்கள்/தாய்கள் தமது ஆண் குழந்தையை கண்ணா என்றழைத்து அவனது குறும்புகளை விளையாட்டுக்களை இரசிப்பர், புளகாங்கிதமடைவர்.

பாரதியின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஒரு eve-teasing ஐ -பெண் மீதான பெரிய வீட்டுப் பையனான கண்ணனின் அத்துமீறலை- பெற்றவரின் புளகாங்கிதத்துடன் பாடப்பட்டிருக்கிறது. அப் பிம்பத்தை ‘கண்ணா’ என்ற பெண்ணாக மாற்றி அனைத்தையும் அவளது குறுப்பாக மாற்றினால் அதுவே சகிக்க முடியாது அபத்தமாகி விடும். அதற்கு அவசியமற்று ஆண்களாகிய ‘அவன்’கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக பல காதலிகளை இயல்பெனக் கொண்ட கவிஞர்களாக நித்திய காதலர்களாக உருவாக்கப்பட்டுவிட்டார்கள்.

அவனது அகன்ற தோள்களும் உயரமும் ஆண்டாளை கணவனை விட்டு ஓடி வரச் செய்த வசம் செய்யும் கானங்களும் அவன் பற்றிய எண்ணற்ற புனைவுகளும் ஆய் கவிதைகளில், பாடல்களில் என்றென்றைக்குமாக கண்ணன் ஒரு காதல் பிம்பமாக முன் வைக்கப் பட்டுள்ளான்.

2.0 கவிஞன்கள்

…எந்த நிலப்பரப்பும் வாழ்வியல் அம்சமும் இல்லாமல்தான் இங்கே ஆண் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இருபத்திநான்கு மணிநேரமும் இவர்களுடன் படுத்துக் கொள்வதற்கான ஒரு பெண்ணைத்தான் இவர்கள் கவிதைகளில் தேடுகிறார்கள். இதுதான் ஒரு கவிஞனுடைய நோக்கமாக இருக்க முடியுமா?

-மாலதி மைத்ரி, (குமுதம்) தீராநதி அக்டோபர் 2003 இதழ் பேட்டியில்

கவிஞன்கள்! கவிஞன்கள் என்றதும் பலவிதமான பிம்பங்கள் மனதுள் எழும், புரட்சிகரமான மற்றும் மெல் இதயத்தை உடையவர்களாக, அவர்கள் எழுதிய கவிதைகளை விடவும், ‘கவிஞர்கள்’ குறித்ததே ஏராளம் பிரம்மைகள். அவர்களுக்கென ஒரு தேஜஸ், அங்கீகாரம், மேலதிக கவனம். அவர்கள் என்றும் இளமையானவர்கள் (அதிலும் என்றும் 16), இளமையான சிந்தனையை உடையவர்கள் எனப் பல மாயைகள்/அனுமானங்கள்@ அவை எல்லாவற்றினதும் பொதுஒற்றுமை அவர்களது இளமையும் காதலுணர்வும் காதலுறவுகளும் சார்ந்ததே.

சிற்றிதழ் ஒன்றில், யாரோ கவிஞர் கூறிய கருத்திற்கு விமர்சித்து எழுதுகையில் ஒரு வாசகர் எழுதுகிறார் ”இது கவிஞருக்கு அழகல்ல”. அவர் எழுதிய விடயம் சாதாரண மனிதர்களுக்கே ‘அழக’ற்ற விடயமாக இருப்பினுங்கூட கவிஞருக்கு இது அழகா என அவர் உணர்ச்சிவசப்படுகிறார். தொடர்ந்தும் இத்தகைய கூற்றுக்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது “இது கவிஞருடைய அணுகுமுறையே அல்ல” “கவிஞரே இப்படிக் கூறினால் எப்படி?” இத்தியாதி என்று. அவையூடாக கவிஞர் குறித்த ஒரு மயக்கம், காவிய எண்ணம் வெளிப்படுத்தப்படுகிறது.

”கவிதைகளும்” கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களில் ஏனைய ஒன்றே. ஏலவே கவிதைகள் எழுதுவதால் ”கவிஞன் என்பதால்” மட்டும் எப்பேர்ப்பட்டவர்களும் மேம்பட்ட மனிதனென்றோ ‘மேலான’ உணர்வுதளத்தை, உயர்ச்சியை உடையவனென்றோ கொள்ள முடியாது. ஆனால் 0என்றென்றும் கவிஞர்கள் குறித்த மாயைகளில் குளிர் காய்பவராகவே ஆண் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதொரு தப்பித்தல், அவர்களது வாழ்விற்கு வர்ணம் பூசும் மேலதிக சலுகை. ஓரு இலவச இணைப்பு!

ஆனால் பெண்கவிஞர்களுக்கு கவிஞனுக்குரிய சலுகைகளிற்கே இடமில்லை. மற்றெந்த புனைவுகள் போலன்றி, கவிதைகள் பொதுவாகவே நேரடியாகப்பேசுவதால் அது கவிஞரின் அனுபவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கவிதைகளிற்கும் கவிஞர்கட்குமான நேரடித்தன்மை காரணமாக -பெண் கவிஞர்கள்- தமதல்லாத அனுபவத்தை எழுத நேர்கையில் சங்கடமாக அமைந்துவிடுவதும் உண்டு. புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் என்றொரு நு{லை அன்னம் வெளியிட்டது. அதில் மொPனா ஸ்வெட்டேவா என்கிற ரஷ்யக் கவிஞையை அறிமுகம் செய்கையில் “…கவிஞர் அகமட்டோவா விடமிருந்து இவள் வேறுபடுகிறாள். இலக்கியவாதிகள் அம்மடோவாவைப் ‘பாதிப் பரத்தை; பாதித் துறவி” என்பர், ஸ்வெட்டேவாவை “முழுப் பரத்தை” என்பர்.” என்று தொகுப்பாளரால் முன்வைக்கப்ட்டிருந்தது. இத்தகைய வர்ணனை அதில் இடம்பெற்ற (பாப்லோ நெருடா உள்ளடங்கலாக) ஆண் கவிஞர்களுக்கு இல்லை! மாறாக, “உணர்ச்சிவசப்படும் கவிஞர்கள், காதலைப் பொறுத்தவரையில் எப்போதும் கட்டுப்பாடற்றவர்கள். சந்த வேறுபாடுகளும், சாயல் மயில் வேறுபாடுகளும் அவர்களால் தவிர்க்க முடியாதவை, பைரன், ஷெல்லி, கெதே, போதலேர், பாப்லோ நெருடா எல்லாரும் காதல் மன்னர்களே! மாயயகோவ்ஸ்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா? மாயகோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பூந்தோட்டங்கள்! குளிர் அருவிகள்! இளமரக்காடுகள்!”

பாடசாலைகளில் சில இளைஞன்களைச் பெண்கள் கூட்டம் சூழும். விளையாட்டு வீரர்களைச் சூழ்ந்திருப்பதுபோல,; பாடகன்கள் இன்ன பிற பிரபலமானவரைச் சுற்றி இச் சூழல் இருக்கும். போதுவாக ஸ்திரிலோலர்களாயப் பெண்டாளர்களாய் இருக்கிற இவர்களைப் ‘பொறுக்கி” என்று வைதாலும் ரகசியமாய் ஆண் மனோபாவத்தில் “மச்சக்காரன்” எனத்தான் பலரும் சொல்லுவதுண்டு. (இதில் மச்சத்துக்குக் காரணமானது பல பெண் உடல்களைக் கூடுகிற “யோகம்” தான்) இந்த நாடுகளில் “கவிஞன்” களுக்கான கிளர்ச்சியுறல் “கண்ணன்” இத்தியாதி பிம்பங்கள் இல்லாத காரணத்தினால் அவர்கள் “play boy” (தமிழ் – மன்மதர்) களாக பார்க்கப்படுகிறார்கள்; அவர்கள்மீதும் சகஇளைஞன்களுக்கு பொறாமை இருப்பதும் இயல்புதான் (பெண்களுக்கு பெண்கள் மீதும் இப்படியான உணர்வு உண்டே. அதிலும் உயர்பாடசாலை சூழலில் ஒரு popular crowd உம் அதில் சேர்த்தியற்ற இன்னொரு குழாமும் என்று). மேற்கின் ஹோலிவூட் நடிகர்களுக்கு ஒப்பாக அல்லது மேலாக பாடகன்கள் பெண்களின் தீராத காதலராக கனவில் சூழுவதுண்டு.

வேடிக்கை என்னவென்றால் அத்தகைய சொல்லுக்கு ஈடாய் “நித்திய காதலன்” என சேரன் கவிதை நூலுக்கான தனது காலச்சுவடு மதிப்பரையில் திரு சுந்தர ராமசாமி அவர்கள் சேரனைச் சுட்டியிருககிறார்.

0

(…இன்னும்

வரும்)