Archive

Archive for the ‘க(வி)தைசொல்லி’ Category

என். டி. ராஜ்குமார்: கவிதைகள்

September 28, 2005 7 comments

ருபோது, நெருக்கமான, ஒரு சகோதரனின் பிணைப்புப்போல தழுவின என்.டி.ரா வின் கவிதைகள். அவை ஊட்டிய உணர்வுகளை ஆணிடமிருந்து வந்த ‘தாய்மை’ நெகிழ்ச்சியை என, பழைய பதிவொன்றில் இவரது கவிதைகள் பற்றிய மனப்பதிவை எழுதவேண்டுமென எழுதியிருந்தாலும், எழுதிவைத்துள்ள குறிப்புகளைத் தேடி அதை எப்போதாவது பதியலாம். இப்போதைக்கு ‘ரத்த சந்தனப் பாவை’ தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.

ந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்
படிக்க நேரிடுமானால்
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்
வெப்புறாளம் வந்து கண்மயங்கும்
மூளை கலங்கும்
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
இப்போது
என் எழுத்துக்களில் நான் வாதைகளை
ஏவி விட்டிருக்கிறேன்.
~

முள்மூளையால் ஒளிந்து அடித்ததில்
புண்ணாகிப்போன என்னுள்
படமெடுத்தாடும் மூர்க்கம்
மூளையைச் சொறிந்து புண்ணைப் பெரிதாக்க

கொப்பளிக்கும் ரத்தத்தின் வெப்பம் தின்று
புடைத்து நிற்கும் நரம்புகளில்
பொலபொலவென முளைக்குமென் இரட்டைநாக்குகள்
நேரம் பார்த்து நிற்கும் தீயெனச் சுழன்று

கழிவிரக்கம்பேசி எவரின் அன்பையும்
பிச்சைவாங்க மனமின்றி

ஓலைத்தும்பின் நிழலுருவிலும்
உன்துடை நடுங்க வைக்குமென் ஞாபகம்

ஆனாலும் நீ கண்டுகொள்ள முடியாதபடி
உன்னையும் யென்னையும் சுற்றியிருக்கும்
ஏதெனுமொரு புற்றுக்குள்
பதுங்கியிருக்கும் சீற்றத்துடன்

அடி வாங்கிய நல்லபாம்பு.
~

டவுளை நான் கட்டவிழ்த்தபோது
அவனில் ஒட்டிக்கொண்டிருந்த
லட்சக்கணக்கான மனிதர்கள்
அம்மணத்தோடு ஓடிப்போய்
தற்கொலை செய்துகொண்டார்கள்
தப்பிவந்த சிலர் இந்த சாவுக்கு
யார் காரணமெனக் கேட்டபோது
எங்களைப் பார்த்து ஆள்காட்டியது விரல்
மல்லுக்கு வந்த மாமிசச்சாமியின்
வெட்டி எறியப்பட்ட விரல் இருந்த இடத்தில்
நவீன ஆயுதம் ஒன்று முளைத்திருந்தது
கடவுள் இருந்த இடம் லட்சணம் கெட்டிருந்தது

மாவிலையில் அகப்பை செய்து
ஊட்டித்தந்த கூவரகில்
கதை சொல்லும் மாயமரத்தை
நட்டுவைத்தாள் படுகிழவி
பூ உதிர்த்து வளர்ந்த பேனாவை
ஒருமுறை திறந்து பார்த்தபோது
அதற்குள் ஆழமாய் இறங்கியிருந்தது ஆணிவேர்
அதன்முனைகொண்டழுத்தி எழுத முனைந்தபோது
பாட்டியின் சேலையை உடுத்திக்கொண்டொரு
வாயாடித் தத்தை கொறித்துக்கொண்டிருந்தது
பழங்கனிகளை
அதன் விதைகளையெடுத்து
வரிவரியாய் நட்டுவைத்தேன்
அதுவழியாய் பன்முகம்கொண்டு நடக்கிறாளிந்த
பாசாங்கில்லா கிழவி

சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே

குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை

சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்

கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்

நெருப்பு மங்கை

ரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி

ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்
முனைவி

ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை
திட்டித்தீர்க்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி

ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி

அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து

எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது

எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்

மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு
கலவரமனம்.
~

ண்பனாக தோழனாக அண்ணனாகயிருந்த
இரவுநிலா ஏனிப்படி ஆனது

யாருக்கு வந்ததிந்த மனநோய் யாரிடமிருந்து தொற்றியது
இரவுநிலவே இரவுநிலவே ஏனிப்படி சதிக்கிறாய்?

நட்சத்திரங்களோடு பூக்களோடு இலைகளோடு
நீரோடு நிலத்தோடு மரத்தோடு என்னோடு

சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த இரவின் நிலவுவாயில்
எப்படி வந்ததிந்த கரை உடைந்த ரத்தவெள்ளம்

ரணம் எனக்குப் பயமில்லாத ஒன்று

பழைய இரவும் சுகமானதே

சுழிநேரம் என் காலைப் பிடித்திழுக்க
குருதி வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி

எனது வாழ்க்கையின் பாதி
பிணங்களாய் மிதக்கிறபோது

எனது இரவு மென்கரளை தின்னத் தயாராகிவிட்டது

மூதாதைகள் மறைந்திருக்கும்

கண்ணுக்குத் தெரியாத அந்த ஆல விருட்சத்திலிருந்து
பறந்துவந்த ஒரு கருங்காக்கை

எனது சுடலையின் தலைமாட்டில் வந்திருந்து
கரைந்து விளிக்கிறது

நான் புறப்படுகிறேன்
உனது இதயத்தில் வெளிச்சம் விழும்பரை
எனது பூக்களின் தலைகளைத் திருகி எறிந்து கொணடிரு நண்பா
~

நானொரு குழந்தையாகி செல்ல மனைவியின்
கர்ப்பக் கவிதைக்குள் உருண்டோடிக்கொண்டிருந்தேன்
மருத்துவச்சி சொன்னாள் படுசுட்டியென்று
குறித்தநேரத்திற்குமுன்பாகவே பனிக்குடத்தை
கால்கொண்டு மிதித்து
தலைகீழாக வந்து குதித்தேன்
உயிர்குளிர முலை தந்தாள்
ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்
சொல்ல முடியா என்னவோ ஒன்று
முடியவில்லை எழுதியது பாதியில் நிற்கிறது
பேனாவை புத்தகத்திற்குள் வைத்தபடி
குட்டிபோடு மயிலிறகேயென சொல்லிவிட்டு
வயிறு பசித்து முலைதேடும் குழந்தையின் சிறுவாயருகில்
பால் பொங்க நின்றேன் நானொரு முலையாய்.
~

சாகக்கிடந்தாள் அம்மா
மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை
எடுத்துவிடவேண்டுமென்று.

எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த
வேற்றுலக அதிர்ச்சி

எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி
ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று

இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில்
ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த
அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது.

மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள்
மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி.

மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன
நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன்.

பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில்
மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய

என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை
தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து

குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா
குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது

முPண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென
மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு.
~

ப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது
பழைய மழையா பெய்யிது

பேரு தெரியாத்த பூச்சிகளொக்க
புதுசு புதுசா மொளைக்குது

ஒலகம் போகுது இந்தப் போக்குல

இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்
எழுதிவச்சுட்டு செத்தானாம்

காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு
கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது
எல்லாத்தையும்

இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து
மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக

பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா
அவுத்துட்டு ஓடுங்குறானுக

படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்
உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக

எங்க குட்டிச்சாத்தானப்போல
உருண்டோடுகிற பழைய மேகமே

நீ விடுகிற இடிகளெல்லாம்
இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.
~

ங்களது முரட்டுத்தனமான பூமி
உங்களுக்குக் கரடுமுரடாக இருக்கலாம்

ஒரு நிம்மதி என்னவென்றால்
எங்களது உலகத்தில் நாங்களேயெல்லாமும்

ஒருநாள் ஒருநேரம் ஒருநொடிப்பொழுதில்
என்னவெல்லாமோ நடக்கிறதிங்கு

இரவுத்தொழில் செய்கிறோம்
அப்படியென்றால் பகலில் நாங்கள்
செய்யமாட்டோம் என்று பொருளல்ல

தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும்
கூட்டிவிடுவதிலிருந்து

பல் முளைக்காத குழந்தை பால் குடிக்க வருகையில்
முலை கொண்டழுத்தி மூச்சுத் திணறடித்து

கொல்வதுவரை.
~

ண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி

பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்

அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி

விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க

மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்

புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு

எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ

மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது
சூரியக் கம்புகள்.
~

ம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்

நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை
சாராயத்தைப்போல
ரசித்து ருசித்துத் தின்பாள்

மேலும்
எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்
கடன் வாங்கியேனும்
கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாவில்கூட
அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்

பிறகு
அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட
நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு

இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்

உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை
கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்

கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்
சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி

ஒரு குழந்தையைப்போல
வாங்கித்தாடவென
அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு

போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த
நூறுரூபாய் நோட்டை
சில்லறையாக்க மனமின்றி
தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்.

நோயுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன்

எல்லோரும் பயன்படுத்திப்போட்ட சொத்தையான சொல்லுக்கு
அடர்த்தியான வாக்கைப் பயன்படுத்துகிறேன்

அப்பனின் மருந்துப் பெட்டிக்கள் மூளையெனும் வார்த்தை
சிரச்சோறாக வந்து சமைகிறது

சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்கிளிகளாக மாறி
காட்டின் மௌனத்தினிடையே சிலம்பி மறைந்தொரு
தவத்தைப் பரப்புகிறது

நானும் ஒரு கண்தெரியாதவனைப்போல
மிக சூசகமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறேன்

எனது உயிரெழுத்தின் குறுக்கே யந்த காட்டாளனின் புராதன நதி
ஓடிக் கொண்டிருக்கிறது.
~

என்.டி.ரா. வின் வெளிவந்த தொகுதிகள்:
தெறி (????)
ஒடக்கு (1999) – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
காட்டாளன் (2003) – த.க.இ.பெ
ரத்த சந்தனப் பாவை (2001) – தமிழினி பதிப்பகம்
கல்விளக்குகள் (200?) (தேர்ந்தது/தொகுத்தது: ரவிக்குமார்) காலச்சுவடு பதிப்பகம்

Advertisements

பாப்லோ நெரூதா:

July 27, 2005 12 comments

-“நீ” என்னை ‘அரசி’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘மகிழ்ச்சியற்ற ஒருத்தி’ ஆக்கினாய்
-“நீ”என்னை ‘கடினமானபோது உன்னுடன் வருபவள்’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘காத்திருப்பவள்’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘தீயவள்’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘நிர்வாண அழகி’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘மறுபடி வரும்வரை உனக்காய் பாத்துக் கொண்டிருப்பவள்’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘ஒவ்வொருநாளும் “உன்னை” இழந்துகொண்டிருந்தவள்’ ஆக்கினாய்
-“நீ” எனக்காய் ‘மனைவி இழந்தவனின் டாங்கோ’ ஆக்கினாய்
-“நீ” என்னை ‘கைவிடப்பட்டவள்’ என்றாக்கினாய் ………………………..


‘நான்’ உன்னை
‘மாபெரும் மூத்திரக்குடுக்கை’ ஆக்கினேன்

பாப்லோ நெருடாவை ஒருவள் பெற்றுக்கொள்ளுதல் என்பது, அவருடைய ஆணாதிக்க/வயமூட்டும்/தன்னல + தன்னகங்காரமிக்க கருத்துக்களை காவி வருகிற எழுத்துக்களை, ஒரு ‘பெண்’ணாய் அக்கணம் தகவமைத்து பழக்கப்படுதல் என்பதுடன் இணைந்துதான் நிகழ்கிறது. அவரை ஒரு பெண் மொழிபெயர்ப்பது, அவரது ‘புகழ்பாடலால்’ (glorification) நெகிழ்ச்சிக்குண்டான மனோநிலையுடனேயே நிகழும். இதனால் ஒரு ஆண் அவரை உள்வாங்கி, அவரது உளத்தளத்தை –அரசியல், சமூக- பின்புலத்தை அடைந்து கவிதைகள் ஒருவனால் மொழிபெயர்க்கப்படுவது உகந்ததாய்ப் படுகிறது (அவரது அரசியலை/காதலை ஆண்கள்தான் தமிழில் பெயர்த்திருப்பார்கள்).

‘பாப்லோ நெரூதா கவிதைகள்’ தொகுதி (டிசம்பர் 2004) உயிர்மையால் – சுகுமாரனது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. வாசகர்/தமிழ்மொழி பற்றிய அலட்சியத்துடன் கவிதைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அவரது முன்குறிப்புகள் ஊடாக உணர முடிகிறது. சுகுமாரனது உழைப்பும் பா.நெ. மீதான அவரது ஈடுபாடும், கூடவே, தமிழில் நீண்ட கால வாசிப்பும் பரிச்சயமும், தானே ஒரு கவிஞராக இருப்பதும் அவருடைய மொழிஆளுமையும் இத் தொகுப்பிலுள்ள நீள் கவிதைகளை பெயர்த்தெழுதுவதற்கு நன்கு உதவியிருக்கின்றன.

இத்தகையதொரு தொகுப்பின் வரவு பல வகைகளில் முக்கியமானது, அதனால், மூலக் கவிதையின் அதி ஆழ உருக்கங்களை இப் பெயர்ப்புகள் இழந்திருக்குமாயின் மொழிபெயர்ப்பாளராய் மற்றும் பாப்லோ நெருடாவின் ‘…கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வத்தின் விளைவாக அவரது முக்கியமான நூல்களில் பெரும்பான்மையானவற்றை வாங்கிச் சேர்த்திருந்த(பக். 09)’ வாசகனாய் சுகுமாரனுக்கோ அவர் போன்ற வேறு யாருக்குமோ எழக்கக்கூடிய வருத்தங்கள் என்வரையில் சிறிதளவும் இல்லை; பா.நெருடாவே வந்து அந்த அற்புதக் கவிதைகளை தமிழில் மீள எழுதித் தருமாப்போல வேண்டுமென 0.0000000000…..1% அவா கூட இல்லை.

காதல் பற்றின கதையாடல்கள் சூழ் பதின்மத்தில் அருமையான சினிமாப் பாடல்களின் இடம்போன்ற ஒன்றை எடுத்த அவரது காதற் கவிதைகளிற்கு என்னால் செய்யக்கூடிய மரியாதை: அ.மார்க்ஸ் வாஸந்திக்கு மலம் துடைத்து அனுப்பியது போன்ற ஒன்றுதான். வாஸந்திக்கு அப்படி எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பாக அன்றைக்கு சரியாக என்ன உணர்ந்தேன் என்பது மறந்துவிட்டது; அதில், மலம் குறித்த அருவருப்பு, கட்டாயம் இருந்திருக்கும். இப்போதாயின், அதை நினைவுகூர்ந்து, அ.மார்க்ஸிற்கு எதிர் தளத்தில் இருப்பவர்களே ‘மலத்தை இழிவென எண்ணியதன் வெளிப்பாடு அல்லவா அது’ என வாதிக்கக் எழுதக் கூடும். அப்படியல்லாமல், மலம்தான் இழிவின் குறியீடு, அவமானப்படுத்தலின் குறியீடு என்றானால், பாப்லோ நெருடா நூற்றாண்டின் பொருட்டு அவரது இந்தப் பக்கங்களை உபயோகித்துச் செய்ய நினைப்பதும் அதையே தான். இது சுகுமாரனை அவமானப்படுத்த அல்ல. மாறாக, Pablo Neruda is, indeed, a piece of shit என்பது -‘குறைந்தபட்சம் சிலருக்கு’ என்றாவது- பலருக்கும் தெரியவேண்டும் என்பதால்.

காலனியாக்கத்தில், மூன்றாமுலக நாடுகளை ஆக்கிரமித்த ஆங்கிலேய கனவான்கள், தம் பெண்களைக் கதிரைகளில் இருத்தியும், மார்புகளை கொர்செற் போட்டிறுக்கிய -அவர்களுக்கு- உயர்-ரகவான அக்காலத்தைய ‘கண்ணியமான’ ஃபாஷன் ஆடைகளுடன் புகைப்படங்கள் எடுத்தும், தம் வழிகளில் தம் நிலங்களில் எத் திக்கும் சுதந்திரத்துடன் திரிந்த ‘மூன்றாமுலக’ பெண்களது நிர்வாணங்களை, கேட்பாரற்று, காட்டு விலங்குகளைப்போல ‘படம்’ பிடித்ததும் போலத்தான், இந்த பாப்லோ நெருடா என்கிற புரட்சியாளனின் மூன்றாமுலக பெண்கள்மீதான பார்வையும் இருந்தது. he shows no remorse, no remorse என மரணதண்டனைக் கைதிகளை எல்லாம் பதட்டத்துடன் பார்த்துப் பழகிய மக்கள் குழாம் நூற்றாண்டுகளாக இந்த மனிதர்(கள்) தனது சுயசரிதத்தில் தானும் அத்தகைய remorse ஐ தான்(ம்) ‘பாவித்த’வர்கள் குறித்துக் கொண்டிருந்தாரா என்பதை தேடிப் பார்த்ததில்லை. ஏதோ பாப்லோயியமே விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென்பதுபோல, ‘புரட்சி’ என்கிற சொல்லைப் படித்ததுடன் கிட்டும் இன்பத்துடன் பல் தேசங்களில் பா.நெருடாவின் வாலைப் பிடித்தபடி திரிகிறார்கள் முற்போக்கு இளைஞன்கள்; அலுக்காமல் சலிக்காமல் தூசுதட்டப் படுகிறார் அவர்.

காலச்சுவடில், பா.நெருடாவின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் தரவுடன், ரவிக்குமார், தனது சில அவதானங்களைக் குறித்து எழுதியிருந்தார்:

இலங்கையில் நெரூடாவுக்கு ஏராளமான பெண்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பெருபாலானோர்
“காலனியத்தின் விளைபொருட்கள்”. …இப்படிப் பெண்கள் சுலபமாகக் கிடைத்தாலும் நெரூடா
திருப்தி கொள்ளவில்லை. அவரது உடல் பெரு நெருப்பாக இரவு பகல் இடையறாது எரிந்து
கொண்டிருந்தது. பல பெண்கள் தாங்களாகவே விரும்பி அந்த நெருப்புக்குத் தமது உடல்களைத்
தந்து சென்றனர். போயர் பெண்கள், ஆங்கிலேயப் பெண்கள், திராவிட ரத்தம் ஓடும் பெண்கள்.

நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப் பெரியது. அதன்
கழிவறை வெளியே
தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது
நெரூடாவுக்குத் தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரிய வந்தது.
“இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு
தமிழ்ப் பெண், பறையர் சாதியைச் சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன் நிறமும் கொண்ட
மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின்
இருபுறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள்
மின்னிக்கொண்டிருந்தன. அவை
வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்
கொண்டிருந்தன.”

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார்.
எதற்கும் பலனில்லை. “ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப்
பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் ஒரு மொழியும் இல்லை. ஒரு சிறு புன்னகைகூட இன்றி
அவள் படுக்கையறைக்கு வந்தாள்.” ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட தென்னிந்தியச்
சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். “அவளைப் புணர்ந்தது ஒரு
சிலையைப் புணர்ந்ததுபோல இருந்தது. கடைசிவரை அவளது கண்கள்
திறந்தபடியே இருந்தன.
அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.”

பறையர் என நெரூடா
குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில்
ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது
ஏறத்தாழ நெரூடா அப் பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத்
தோன்றுகிறது.
(ரவிக்குமார், ஆகஸ்ட் 2004, காலச்சுவடு)

ஒருவருக்குத் தண்டனை தருவது, எச்சிலால், அனேகமாய் வசைச் சொற்களால் இடுப்புக்குக் கீழுள்ள உறுப்புகளைப் தொடர்புபடுத்தி -மலம், மூத்திரம்-, மிருக எச்சங்கள் (சாணியடித்தல் இத்தியாதி) இவை உடன்படக் கூடிய விடயங்கள் இல்லைத்தான். ஆனால் வெளிப்படையாக சொல்லப்படுகிற/அறியப்படுகிற ‘குற்றவியலுக்கு அடங்குகிற மனிதர்கள் மீது
மட்டும் தம் விமர்சனங்களை, குற்றவியல் சட்டத்தை பிரயோகித்தபடி, ‘பாப்லோ நெருடா’வை -மனிதனாக விட்டுவிடுமாறு கோரிக்கைகளோடு- நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது!
அப்படியாயின் அழகான வார்த்தைகளால் கவிதைகளால் “நாகரீகமாக” யாரையும் சுரண்டு அவமதி கீழ்நிலையில் வைத்திரு என்றுதான் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

சிலவேளை, நமது பொழுதுபோக்குப் படங்களில் பொதுமக்கள் ஒழுக்கம்/ஒழுங்கு கடைப்பிடிப்பதில் பின்னிற்பதே சமூகக் கேடுகள் எல்லாவற்றுக்குமான காரணமென்பதுபோல காட்டப்படுவதும், அவை ‘ஒழுங்கு’ படுத்தப்படுவதும், ‘ஒழுங்கற்ற’ அவர்கள் தண்டிக்கப்படுவதும், மூலகர்த்தாக்களான தலைவர்களும் அரசாங்கங்களும் நலமே
இருப்பதுமாய் எடுக்கப்படுகிறதன் உளவியல் நீட்சிதான் இந்த ‘பிம்பங்கள்’ மீதான மோகமும் என்று தோன்றுகிறது. கடவுளோ அரசாங்கமோ கேள்விக்குட்படுத்த(ப்படாமல்) முடியாமல் வீற்றிருக்க, பின்பற்றுவோர் தவற்றில்தான் சகல(ஒழுங்கு)மும் குலைவது என்பதான பிம்பத்தை ஏற்படுத்துவதும், கொண்டாடுவதற்கும் கேள்விகளற்று விசுவாசத்துடன்
இருக்கவும் அமைப்பு/கொள்கை/நபர்கள்/திருஉருக்கள் ஐ கொண்டலையும் மனித மனம், அதில், ‘பாதுகாப்பை’ உணருகிறது போலும்.

நெருடாவின் ‘நான் உன்னை அரசியாக்கினேன்’ எனும் வரி வருகிற குறிப்பிட்ட கவிதையை இப்போது எழுதினால், “நீ யாரடா நாயே என்னை
அரசி ஆக்குவது” எனத்தான் எகிற முடியும். ராஜாராணிக் கதைகளில் வருகிற மந்திரசக்தி உடைய கதாபாத்திரங்கள்போல, தமது மந்திரக் கோலை உபயோகித்து ஒருவளை உயர்ரக ஆடைகளுடன் அழகு நங்கையாக மாற்றிவிடுவதுபோல, நெருடா காதலனாக அப்படியான ஒரு சக்தி உடையவராகவே முன் வருகிறார். அது கவிஞன் (ஆண்) என்கிற உயர் ஆசனத்தில் உட்காருவது தருகிற போதையின் விளைவு, அதற்கு, மேலதிகமாக, ‘புரட்சி’ ‘மனிதநேயம்’ என பதாகைகளையும் தந்துவிட்டால்
சொல்ல வேண்டியதில்லை. இந்த 21ம் நூற்றாண்டில், நாங்கள் அந்த நாற்காலியை எடுத்துவிட விரும்புகிறோம், ஒரு நூற்றாண்டு முடிந்துள்ளது இல்லையா!

‘சொல்லப்படுகிற’ காதலின் உணர்ச்சிப் பெருக்கு அவருடைய கவிதைகளில் அற்புதமாக வந்திருக்கிறதுதான்; இன்றும் பேசப்படுகிற Twenty Love Poems and a Desperate Song நூல் அவரது இருபதாவது வயதில் வெளியானது (1924). இந்தக் காதல் கவிதைகளிற்கும் -இதைப் படித்திராத- வெகுசன ரசனையுடைய இளம்பெண் ஒருத்தியைப் பருவங்களிற் கவரக் கூடிய காதற் பாடல் வரிகளிற்கும் வித்தியாசம், முதலாவது, ஒரு புரட்சியாளரால் சொல்லப்பட்டதென்பதால் உள்ளதா என்றால் – இல்லை! இன்றும் தொலைபேசியின் அருகாமையில் தனது காதலனின் அழைப்புக்காக உட்கார்ந்திருக்கிற பதின்மக்காரிகளின் காத்திருப்பிற்கும் எங்கெங்கோ
தேசங்களில் எனக்காகக் காத்திரு என்று விட்டுவந்த இந்த காதலனின் காதலிகளின் காத்திருப்பிற்கும் -என்ன பாரிய- வேறுபாடுகளைக் கண்டுவிட முடியும்? சொல்லப் போனால், முன்னது, பின்னதைப் போல ஒருவளது காலத்தை -திரும்பியே போகப் போகாத ஒருவனால்- எடுக்கப்
போகின்றதல்ல என்கின்ற வகையில், உத்தமமானதுங்கூட.

எல்லாக் காதல்போலவும், எல்லாக் காதலர் போலவும், அற்புதமான கவிஞனால் (ஒரு ஆணால்) நீ நேசிக்கப்படுகிறாய் என்பதுதான் கவிதை மையம்; பின்னர் ஒரு புரட்சியாளனாய் ஆனபிற்பாடும், ‘புரட்சியில் ஈடுபடுகிற’ + காதலன் ஒருத்தன் வாறானே ஒழிய கவிதைப் பொருள், வழமையான எல்லாக் காதல்களதும் கருப்பொருள்தான்.

‘தெருக்களூடே நீ நடக்கையில் யாரும் உன்னை கண்டுகொள்வதில்லை’: “யாருமே பொருட்படுத்தாத உன்னை ”நான்” பொருட்படுத்துகிறேன்” என்பதான, ‘எல்லாப் பெண்களுக்குள்ளும் ‘நான்’ உன்னை தேர்ந்தெடுத்தேன்’: “அதற்காய் பெருமைப் படு” என்பதான காதல் வரிகள், அவர் புரட்சிகரப் போராட்டத்தில் இணைகிறபோது கீழுள்ளவாறான மாதிரியாக மாற்றம் பெறுகிறது:

‘எனது தேசத்தில் மலையிருக்கிறது
எனது தேசத்தில் நதி இருக்கிறது
என்னுடன் வா

போராட்டம்
கடினமாயிருக்கும்
வாழ்க்கை கடினமாயிருக்கும்
ஆனால் நீ என்னுடன் வருவாய்.’

(In my country there is a mountain./In my country there is a river./Come with me./…/the struggle will be hard,/life will be hard,/but you will come with me)
வருடைய காலம் (எச்சசொச்சங்கள் இன்றுவரை) நெருடா என்கிற
புரட்சியாளன் + கவிஞனின் வீட்டில் அவனுக்காய்க் காத்திருக்கிற, அவனை
ஏதிர்பார்த்திருக்கிற, (கஸ்ரத்தில்) துணைவருகிற பெண் வந்து போகிறாள், அதுவே அவளது பங்காக, கொடுப்பினையாக, பிறவிப் பெரும் பயனாக கவிதை கூறுகிறது. பெருவாரியாய், இத்தகு கவிதைகளில் உள்நாதமாய், கூடவே, பா.நெருடா என்கிற இப் பிம்பம், மாபெரும் பிம்பம், உயர்ந்த, புரட்சி நாயக பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு சுகுமாரன் குறிப்பிடுகிற காரணமொன்று: “…மானுட உறவுகளின் மாளாக் காதலர், இயற்கையின் தீவிர ஆராதகர், அயராத போராளி – இந்த மூன்று நிலைகளின் படைப்பியல் விரிவே அவரது கவிதை. ஆனால் தமிழில் அவர் அடையாளப்படுத்தப்பட்டது சிந்தாந்தச் சார்புடைய போராட்டக்காரராகவும் அரசியல் கவிதையாளராகவும்தான். அந்தக் காலத்தின் தேவை அதுவா இருந்தது. தவிர, புரட்சிகர அரசியல் என்ற கனவை பராமரிக்க நெரூதாவின் கற்பனைவாத ஆவேசம் உகந்ததாகவுமிருந்தது. …”(பக். 11).

ஆனால், அவர்கள்போல, ஒரு கவிஞனின் கவி-மேன்மையில் –அவரது புரிகிற ஆதிக்கக் கூறுகளுடன்- தங்கி, மேலும் அவற்றை உன்னதப்படுத்த முடியவில்லை.

ஈழப் போராட்ட ஆரம்ப இலக்கியக் பங்களிப்புகளிலும், ‘மரணத்துள்
வாழ்வோம்’ (விடியல்) தொகுதியிலேயே அந்த மூன்று பெண் கவிகள் முன்வகித்திருந்த யுத்தகால தமது பாத்திரமே “காத்திருக்கும்” மனைவி, தானும் (கணவனைப்போல) போராட முனையிற மனைவி, புத்திரசோகத்தில் தோயிற தாய் ஆகிய பங்குகள்தான். இராணுவத்தினர் கண்ணோக்கில் இருந்து அவர்களது மனைவிகளுக்குத் ‘திரும்பி வருதல்’ பற்றிய கடிதங்களையும், விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மனைவிக்கும் தோழிகளுக்கும் கடிதமே கவிதையாய் எழுதி தாம் போரட்டத்தில் ஈடுபடுகிற தீரத்தை விவரித்தார்கள் கவிஞன்கள்; பிற்பாடு, பெண் போராளிகளின் முன்னெடுப்பில் அந்த era பறந்தது;
“அன்புக் காதலியே,
யுத்தத்தில் இணைகிறேன்

– நம் மண்ணை மீட்க
முடிந்தால் புரட்சி பூமியில் வாழ்வோம்-
இப்போது விடை தா”

என்று “விடைபெற்ற” பாடல்களும் ஒரு முடிவுக்கு வந்தன!
யுத்தத்தில் பெண்கள் இணைந்தார்கள், காதலன்களால் ‘தூண்டப்பட்டு’ அல்ல, அக் ‘காலத்தால்’ தூண்டப்பட்டு. இந்த மாற்றத்தை உள்வாங்காமல், இடையில், ஈழத்திலிருந்து ‘புலம்பெயர்ந்த’ கவிஞர்கள் அந்தக் காலத்திலையே தங்கியதோடல்லாமல், தாம் இன்னொரு பா.நெருடா என role play செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
‘அவருக்கு’த் தெரிந்த இவர்கள் குறித்து, ‘ஈழத்துக் கவிஞர்கள்’ என பொதுப்படையாய் ராஜ்மார்த்தாண்டன் எழுதிய (காலச்சுவடு, நவ-டிச 2002, இதழ் 44) கருத்து: “ஈழத்துக் கவிஞர்கள் பலருக்கும் தாம் கவிஞர் என்ற தன்முனைப்பு அவர்களது கவிதைகளில் சற்றே தூக்கலாக வெளிப்படுவதுண்டு.” சற்றே என்ன? மானியாக் என்று சொல்லக்கூடிய அளவுக்கே உண்டுதான்.
சாமிவந்ததுபோல ‘நான் கவிஞன் நான் கவிஞன்’ என flow வாய்ப் போய்க்கொண்டிருக்கிற கவிதைக்கிடையில் ஒரு துள்ளுத் துள்ளி உறுதிப் படுத்தாமல் இருக்க முடிவதில்லை அவர்களால். பாலஸ்தீனக் கவிதைகள், பாப்லோ நெருடா போன்ற ‘புரட்சிக் கவிஞர்களின்’ கவிதைகளிடம் அவர்கள் nostalgic ஆய் சரணடைந்தார்கள்; துர/அதிர்ஷ்டவசமாக பா.நெருடாவின் ‘வாழ்க்கைமுறை’ வசீகரிக்கப்பட்ட அளவுக்கு கவிதைதான் வாய்க்கவில்லை. IT இன் பாடல்வரிகளிலுள்ள -always trying to copy But when they tried to use her vocab, they sounded sloppy- ‘அவளைப்போல இருக்க முயன்று தோற்றனர்’ என்பதான வரியாய்த்தான் ஆனது படைப்பிலக்கியத்தில் பா.நெருடா மாதிரிகளாக தங்களை மாற்றக் கண்ட ஈழத்து ஜாம்பவான்களின் பெருங்கனவு, நிலை. ஒன்றில் பழைய உன்னதங்களை மீள எழுத முயன்றபடி, அல்லது ‘காதல்’ என எழுதிவிட்டு, அதற்கு, பூக்கன்றுகளிற்குப் போலத் தண்ணியடித்து வித்தை காட்டிக்கொண்டு காதல் கவிதை என்றும் காதல் கவிஞர் என்றும் அறியப்படுவதைவிட, பிரச்சினைக்குரிய ‘அசலாக’ இருப்பது கௌரதை தான்.

இருபாலாரும் யுத்தத்தில் ஈடுபடுகிற ஈழத்திலுள்ள தலைமுறையோ, “டேய் பா.நெருடா புலுடா விடாதே” என்று கொடுப்புக்குள் சிரித்தபடி படிக்கத்தான் வாய்த்தன அவரது பிரேரிக்கப்படும் காதற் கவிதைகள். ஏனெனில், பின்னால் மனைவிகளும் காதலிகளும் போராட்டத்தின் பாரத்தை இறக்கி வைக்க இல்லாத ஏராளம் இளைஞர்கள் அதில் ஈடுபடத்தான் செய்தார்கள். அத்தகைய சூழல்களில், ஒருவகை ‘கவிஞர்காள் குசும்புகள்’ எனவே இவற்றை எண்ணியதுண்டு (கவிதைகளை இந்தப் புரிதல்களுடன் ரசிப்பது வேறு விடயம்). ஆனால் பா.நெருடா பற்றிய பதிவுகளையும் சிறு எதிர்வினைகளுக்கே எழும்புகிற வியாக்கியானங்களையும் பார்க்கும்போது, அந்த சகாப்தம் ஒரு நோய்போல பீடித்துள்ளதையே உணரமுடிகிறது. இங்கே, சுகுமாரன், “பெண் ஸ்பரிசங்களின் வளம் நிரம்பியது அவரது அந்தரங்கம். மூன்று மனைவியர். அநேக தோழியர். எண்ணிக்கையிலொடுங்காத படுக்கையறைப் பங்காளிகள். அயலிட வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் நுகர் பண்டமாக அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். …வெவ்வேறு காலகட்டங்களில் பாப்லோ நெரூதா உறவுகொண்டு விலகிய பெண்களின் எண்ணிக்கை ஏராளம். முகமற்ற இந்த அனேகக் காதலிகளின் எண்ணிக்கையை ஒரே பெயரில் ஒளித்துவைத்துக் கவிதைகளில் நினைவு கூரவும் செய்திருக்கிறார். மாபெரும் மனிதநேயரான நெரூதா இந்த வஞ்சனைகளால் மனம் கொந்தளித்திருந்தார் என்பதை அவரது கவிதை வரிகளுக்கிடையில் உலர்ந்து கிடக்கும் கண்ணீர்க் கோடுகளையும் உறைந்திருக்கும் இரத்தக் கசிவுகளையும் உணர முடிந்தால் அறியவும் முடியும்” (பக். 25, 26) என எழுதுகையில், ஏலவே ‘நெரூதா கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வம் குறித்து’ குறிப்பிட்டிருந்தார்தான் என்றாலும் கவிஞரின் கண்ணீர்க் கோடுகளை மட்டுமே அவரால்/பலரால் பார்க்க முடிவதையும், தான் மொ-பெயர்த்திருக்கிற இந்தக் கவிதைகளில்கூட -குறிப்பாகக் காதலில்- பா.நெருதாவின் கண்ணீர்க் கோடுகளை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பதும், முக்கியமாக காதலின் கண்ணீரால் -உலகத்தின் அ/சாதரண மகா ஜனங்கள் அனைத்தும் சிந்தும் ஒன்றை சிந்துகையில்- அவர் எப்படி மனித நேயராக ஆகிறார் என்பதும் மிகமிக ஆச்சரியமாய் இருப்பதையும் சொல்ல வேண்டும்.
பின் மட்டையில், ‘இருபதாம் நூற்றறாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்’ என்று Gabriel Garcia Marquez சொன்னது போடப்பட்டிருக்கிறது. உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒன்றைக் கூறமுன் தமக்கெத்தனை மொழிகளில் புலமையுண்டு என்பதையாவது எண்ணி பார்த்துப் படவேண்டும். மாச்சுபிச்சுவின் சிகரங்கள் போன்ற நீள் கவிதைகளில் அவர் எளிய ஆனால் நுட்பமான கவிஞராகத் தென்படுகிறார். அப்பால், பா.நெருடாவின் கவிதையில்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்:
உன்னைவிட உயராமானவர்கள் உள்ளார்கள், உயரமானவர்கள்

உன்னைவிட தூய்மையானவர்கள் உள்ளார்கள், தூய்மையானவர்கள்

உன்னைவிட அழகுமிகுந்தவர்கள் உள்ளார்கள், அழகு மிகுந்தவர்கள்

(…/there are taller ones than you, taller./theree are purer ones than you, purer./there are lovelier than you, lovelier.)

மிழர்கள் (பொதுமைப்படுத்தல்தான்- ‘மனிதர்கள்’ என்றும் வாசிக்கலாம்) ஆண்களைக் கட்டி அழுபவர்கள், கொண்டாடுபவர்கள் (பட்டியலிடுதல் போல கொண்டாடுதலும் ஒரு சமூக நோய்).
‘பழக்கப்பட்ட’ பட்டியலிடலாளர்கள். அதை குறைந்தபட்சம் காலத்துக் காலம் ஆள்மாற்றமாவது செய்யவேண்டும். நடிகைகள்தான் மாறுகிறார்கள். ஆண்களால் ஆசனம்போட்டு அமர்வதுதான் வேலை; அசைவதே இல்லை. தமிழிலக்கியம் சில பெயர்களைத்தான் தொடர்ந்து ஒப்புவிக்கிறது.
ஜெயகாந்தன், சு.ரா, புதிய பெயர்கள், ஈழத்துக் கவிஞர்களோ எனில் சேரன், ஜெயபாலன், சேரன், ஜெயபாலன் தான், ம்ஹீம், அப்பால் இல்லை!
(இவர்களை தள்ள ஆவது ‘எனக்குத் தெரிந்த’ பட்டியலைத் தருகிறேன்: (இலங்கையிலிருப்பவர்கள்: றஷ்மி, தேவஅபிரா, அஸ்வகோஸ், கருணாகரன், நிலாந்தன், பா. அகிலன், எஸ்.போஸ் (சந்திரபோஸ் சுதாகர்), அமரதாஸ், ஆகர்ஷியா, உவைஸ் கனி, தானா.விஷ்ணு…)
பட்டியல்கள், இலக்கங்கள்- இவற்றையே
நேசிப்பவர்களால் ஆன இத்தனை வருட ந….வீ…….ன இலக்கியப் பாரம்பரியத்தை விரித்துப் பாருங்கள்.
1, 2, 3, 4…
நான் கடைத் தெருவில் நின்றிருந்தேன்.
குடைபிடித்தபடி, வெள்ளை நிறப் பெண் வந்தபடி இருந்தாள். அவள் கை பூனை முடிகூட வெள்ளை.

என ஆரம்பிக்கிற கதைகள் முதல், யூமா.வாசுகி தெருப்பெண் முதல் கடை
விற்பனைப் பெண் வரை உள்ளடக்கி ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ (தமிழினி 2001) என கவிதை செய்கிறார். மகுடேசுவரன் சித்தி முதல் கிழவி வரை புணர்ச்சிக் குறிப்புகள் எழுதுகிறார். அப்புறம், 1, 2, 3, 4 என காதலை இலக்கமிட்டு எழுதுவார்கள். இலக்கங்கள் பட்டியலிடல்களில் தான் என்ன பிரியமோ!

கேள்வி: 2005 ஆம் ஆண்டு இத் திகதி வரையில் தமிழ் இலக்கியத்தில் எவளாவது காதலன் 1, 2, 3, 4 என இலக்கமிட்டு எழுதினாளா? ‘ஆபாசமாய்’ எழுதியவள்களில் யாரேனும்? தெருக்களில் கவர்ந்த ஆண்களைப் பற்றி ஒவ்வொவ்வொன்றாக குறிப்பிட்டு ஒவ்வொவ்வொருவருக்கும் கவி/தைகள் உண்டா?
முடிவாக, குழந்தையை/பெண்ணை/மனைவி(/களை)யை வன்புணர்பவர்கள் போன்றவர்களுக்குத் தருகிற ‘மரியாதை’யையே இந்த நாகரீகமான உபயோகிப்பாளர்களான இவர்களுக்கும் தரவேண்டும். அதனூடாக, உன்னுடையதல்லதாத ஒரு உடம்பை -அதற்குரிய காலத்தை- சுரண்டுதல் என்பதும், சொற்களாலான வன்முறையுமே மனித உரிமைகளிற்கு எதிரானதென்பது தொடர்ந்து வலியுறுத்த/பேசப்படவேண்டும். அப்படியாவது, இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு “காதல்” “புரட்சிகர காதல்” என்கிற வலு கலாதியான சோடிக்கப்பட் சொற்களூடே “காத்திருப்பு” என்கிற வன்முறையைப் போற்றிக் கொண்டு, பட்டியலிட்டபடி, அதால் பல
நலன்களைப் பெற்றபடி தம் சுரண்டலைத் தொடரப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். கவிதைகளை கவிஞரை விலக்கி வாசிப்பதும் ரசிப்பதுங்கூட பயிற்சிகளூடே சாத்தியப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், படு பயங்கர —தனமான ஆதிக்கத்தை நியாய்ப்படுத்துவதைத்தான் இங்கே எதிர்க்கப்படவேண்டியதாகிறது.
—————————
(பா.நெருடாவின் ஒரு கவிதை சுகுமாரனால் ‘மாபெரும் மூத்திரக்குடுக்கை’ என மொழிபெயர்க்கப்படக் காரணமாய் அவர் எழுதுவது: “…இந்த நூறு கவிதைகளில் ஒன்றுக்கு மட்டும் புதிய தலைப்பு இடப்பட்டிருக்கிறது. நெரூதாவின் மறைவுக்குப் பின் வெளியான கவிதைகளில் ஒன்றான ‘தி கிரேட் யூரினேட்டர்’ ‘மூத்திரக்குடுக்கை’ யாகியிருக்கிறது. ஆத்திரக்குடுக்கை என்ற பொதுவழக்கிலிருந்து உருவாக்கப்பட்ட சோற்சேர்க்கை அது.” நான் உபயோகிப்பது “பாப்லோ” = The Great Urinator என்கிற, அவரது சிந்தனை அவ்விடமே மையங் கொண்டிருப்பது என்கிற நேரடி அர்த்தத்திலேயே).
———————–
தொடர்புடையவை:

ரவிக்குமார்:இந்த உதடுகள் ஒன்றுகூடும்போது

Stephen Schwartz: Bad Poet, Bad Man

யமுனா ராஜேந்திரன்: பாப்லோ நெருடாவின் துரோகம்

எனது பதிவு: பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

July 15, 2005 8 comments

யிர்மை (பிப்ரவரி 2005) ‘பாப்லோ நெருதாவின் துரோகம்’ என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:

பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. … பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ என எவரும் தப்பவில்ல. இவ்வகையில் மிகவிரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கலைஞரது வாழ்வு பாப்லோ பிச்காசோவினுடயதாகும். பாப்லே பிச்சாசோவோடு உறவு கொண்டிருந்த பற்பல பெண்களின் புத்தகங்கள் தற்போது வெளியாகிவிட்டது. …ஆனால் பாப்லோ நெருதாவோடு உறவு கொண்டிருந்த பெண்களால் எழதப்பப்பட்ட அப்படியான நூல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நெருதாவுக்கும் பிக்காஸோவுக்கும் பல வகைகளில் ஒற்றமையுண்டு. தம்மோடு உறவு கொண்டிருந்த பெண்கள் குறித்து தமது படைப்புகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டவர்கள் அவர்கள். பெண்களின் மீதான தமது தீராத வேட்கையை வெளிப்படையாக முன்வைத்தவர்கள் அவர்கள். …முதல் மனவியரை அடுத்து அவரோடு உறவு கொண்டவர்கள் அனைவரும், இவர்களது முதல் மனைவியர் குறித்தும் இவர்கள பல பெண்களுடனான தொடர்பு குறித்தும் அறிந்தவர்கள்தான். அதனைத் தெரிந்து கொண்டே இவர்கள் தம்மை இந்த ஆளுமைகளோடு பிணைத்துக் கொள்கிறார்கள். வயது ரீதியில் ஒப்பிடுகிறபோது சமூக அங்கீகாரம், புகழ் போன்றவற்றறோடு, பற்பல அரசியல் சமூகக் காரணங்களாலேயே இத்தகைய மனிதர்களோடு வாழ அப்பெண்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் சம்பந்தப்பட்ட ஆணின் மீது மட்டுமே கடுமையான விமர்சனங்கள முன்வைப்பதிலுள்ள பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. பிரச்சினையின் ஒரு பக்கம் மட்டுமே மிகைப்படுத்துப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.

தஸ்லிமா நஸ்ருதின், ஃப்ரீடா உள்ளடங்கலாகப் பல பெண்ணியப் பிரதிகளை தமிழில் கொண்டந்தவர்களில் ஒருவரான திருவாளர் யமுனா ராஜேந்திரன் இவ்வளவு சுத்தி வளைத்து பலப் பல குறிப்பிடல்களூடாக இங்கே எழுதுகிற வரிகளின் சாரம் இதுதான்:

“பெண்களும் தெரிந்து/விரும்பித்தான் அவரிடம் போனார்கள். அவர்களை விட்டுவிட்டு அவரை மட்டும் குற்றம் கூறுவது பிழை.”

தமிழ் இலக்கிய உலக கர்த்தாக்களே! இத்தகையதொரு ‘அபிப்பிராயதை’க் கூற ஒரு மார்க்சியர்தானா வரவேண்டும்? எத்தகைய வரலாற்றுத் தரவுகளுடன் குறிப்பிடப்பட்டாலும் இத்தகைய தொனிகளில் இருக்கிற ஆதிக்க சிந்தனையை மூடி மறைக்க முடிவதில்லை. இதே வசனத்தை முன்வைத்துத்தான் ‘கண்ணன்கள்-கவிஞன்கள்-நித்தியகாதலன்கள்’ எழுத ஆரம்பித்து, அதற்காக அவ்வப்போது எழுதி வைத்த குறிப்புகள் என் கண்ணுக்கே தூர்ந்து, அந்நியமாகி, கொடுமை செய்யத் தொடங்க தள்ளிப்போட்டிருந்தேன். இப்போதுவரையில், நசுங்கி நசுங்கி நம் காலத்தின் ‘சொல்லப்பட்ட’ முற்போக்காளர்கள் கூறுகிற கருத்துக்களை/கூத்துக்களைக் கேட்டால் வட்டக் கிணற்றில் (கிணறு வட்டம்தானே!) தேங்காயை உடைப்பதுபோல மண்டையை உடைத்து சிதறடிக்கவேண்டும்போல இருக்கிறது.

1980களின் இடையில் ஈழத்திலிருந்து விடைபெற்றுப்போன புலம்பெயர்ந்தவர்களும், தமிழ்நாட்டு இலக்கியவாதிகளும் the good old days இல் வாழ்பவர்களாக, பா.நெருடா முதல் எந்த திருவுருவையும் சிறிது விமர்சித்தாலும் அனுங்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் அவரைப் பற்றி சிறு மறுப்பும் பலத்த உணர்ச்சிவசப்படல்களை உருவாக்குகிறது. இதில், தாம் காவுகிற உன்னதங்களை குறித்து சிறு களங்கமும் வேண்டாத –மறுபரிசீலனைக்கு தயாரில்லாத- ஒரு மரபு மனமே வெளிப்படுகிறது. பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் குறித்த தமது பயங்களை அடிப்படைவாதிகள்/மரபுவாதிகள் மதங்களால் பாதுகாத்துக்கொள்வதுபோலவே இத்தகையவர்களும். அதற்கு சிவப்பு முலாம் பூசிவிட்டால் எல்லா ஆதிக்கத்தனங்களையும் நியாயப்படுத்துவதற்கான தகுதி தமக்கு வந்துவிடுகிறதென நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களது இத்தகைய நடவடிக்கையானது மீளமீள அவர்களது அச்சப்படும் மரபுமனத்தையே அம்பலப்படுத்துகிறது. மக்களுக்கான அரசியல் தத்துவம் எதுவென்றாலும் சிறுபான்மையினரின் நலனிலிருந்து தன்னை மறுபரிசீலனை செய்ய அது தயாராக இருக்க வேண்டும். அதுவே மாற்றத்திற்கான/மாற்றத்தை வேண்டிற பண்பு. அல்லாதுவிடில் அதுவே கடுமையான விமர்சனத்துக்குமுரியது. `காலம்காலமாக’ யாரோ ஒரு பக்கத்தை யாரோ ஒரு பக்கம் பயன்படுத்தி வருவதற்காக யாரும் உண்மையை பேசாமல் விடுவதில்லை; அதை மூடி மறைத்து, ‘அவள்கள் மட்டும் என்ன யோக்கியம்’ என பதின்பருவ ஆண்களது மனோபாவத்தோடு உண்மையை அணுகுவதில்லை. அப்படி செய்தபடி, மிகவும் அறிவார்த்தமான விவாதத்தை நடத்திக்கொண்டிருப்பதாக மனப்பால் குடிப்பதில்லை. வரலாற்றில் எந்த கொம்பரும் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவன்(ள்) இல்லை என்பதை ய.ரா. இற்கு புதிதாக சொல்ல வேண்டியதுமில்லை.

இந்தக் கட்டுரையில், தான் சார்ந்த ஒரு மனிதரை ‘நியாயப்படுத்தும்’ பொருட்டு, தன்னை நன்கு அம்பலப்படுத்திக்கொண்டுள்ளார் திரு.யமுனா ராஜேந்திரன். அவர் மேலும் எழுதுகிறார்:
இலத்தீனமெரிக்க கலாச்சாரத்திலும், மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் ஆண் பெண் உறவு தொடர்பான பார்வை என்பது கிழக்கத்திய சமூகங்களின் பார்வை போன்றதல்ல. ஸார்த்தர் எனும் எழுத்தாளரதும் ரிவரோ எனும் ஓவியரதும், வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், திருமணம் மீறிய நிறைய உறவுகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். இவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஸீமன் தீ பூவாவும் பிரைடா கோலாவும் அதேகாலத்தில் பற்பல ஆண்பால் உறவுகளை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி, துரோகம், திருமணம் போன்ற கருத்தாக்கங்கள் இவர்களது வாழ்வில் எந்தவிதமன புனித அர்த்தமும் பெறுவதில்லை. இன்று இவ்வகையிலான விவாதங்களை கத்தோலிக்கக் கிறித்தவக் கருத்தியல் ஆதிக்கத்துக்குள்பட்ட அமெரிக்க இலக்கியவாதிகளும், பழமைவாதக் கருத்துருவப் பாதிப்பு அதிகமுமள்ள பிரித்தானிய இலக்கிய விமர்சகர்களுமே முன்னிலைப்படுத்கிறார்கள். வைதீக இந்திய மரபுகளில் ஊறிப்போனவர்களாக இருக்கும் இந்திய எழுத்தாளர்களும் இவ்வகையிலேயே இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். பாப்லோ பிகாஸோ போலவே, பாப்லோ நெருதா குறித்த பெண்நிலைவாத வாசிப்புகளும் அவரது கலைஆளுமையில் எந்தவிதமான புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சிவிடப் போவதில்லை. இரட்டை நிலைப்பாடும், சுரண்டலும், சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்ல. பிராங்காய்ஸ் ஜில்லெட்டினதும் பிரைடா கோலாவினதும் ஸீமன் தி புவாவின் வாழ்வுண்மைகளும் இதனையே தெளிவுபடுத்கின்றன. பாப்லோ பிக்காஸோவையும் நெருதாவையும் மார்க்ஸைப் போல, குவேராவைப் போல மனிதர்களாக விட்டுவிடுவதே நல்லது.

ய. ராஜேந்திரனின் விருப்பம் எதுவெனப் புரிகிறது. ‘இரட்டை நிலைப்பாடும் சுரண்டலும் சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்லை’ என்பதும் உடன்பாடானதே. ஆனால் இவையூடாக ய.ராஜேந்திரன் நிலைநாட்டியுள்ள ‘உண்மை’தான் முக்கியமானது. அதிலும், இலத்தீனமெரிக்க/மேற்கத்தியக் கலாச்சாரங் குறித்த இவரது பார்வை புல்லரிக்கிறது. இலத்தீனமெரிக்கர்களதும் மேற்கத்தயர்களதும் ஆண் பெண் உறவு தொடர்பான ‘பார்வை’ நம்மிலும் வேறு என்பதற்காக, ‘அவர்களை’ துரோகங்கள் ‘அவ்வளவாய்’ப் பாதிக்காது என நிறுவுவது அக் கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் இன்மையால்தான். அப்படியான ‘பரந்த கலாச்சாரத்தவர்’ என்றால் அவர்களிடம் ஷோப் ஒப்பறாக்களும் துரோக கவிதைகளும் இல்லவே இல்லையா?
கட்டிறுக்கமான, பாலியல்ரீதியாக ஒடுக்குகிற சமூகமாக இல்லையென்றால், துரோகங்கள் எமக்குப் போல ‘எந்த ஒரு புனித அர்த்தமும் பெறாததால்’ அதை இலகுவாக எடுப்பர் என அர்த்தங் கொள்ளலாமா?
திருமணம் என்கிற உறவும் காதல் என்கிற பன்ரஷியும் அந்த சமூகங்களில் இல்லையா? (சரி/தவறு விவாதங்களிற்கு அப்பால்) அறங்கள் அற்ற மனிதர்களா அவர்கள்?
பல பெண்களை/ஆண்களைக் கூடிய ஃபிரீடாவால் தீகோ தன் சகோதரியைப் புணர்ந்ததை –அந்த துரோகத்தை- இலகுவாக எடுத்துக்கொள்ள முடிந்ததா, எந்த புனித/அறத்தினதும் தலையீடும் இன்றி???? நெஞ்சிலறைந்த வலியின்றியா அவள் அதை எதிர்கொண்டாள்?

ஃபிரீடா பற்றி மொழிபெயர்த்தவர் மொழியை மட்டும் பெயர்த்ததால் வந்த புரிதல் இது. அதனாற்தான் ‘ஃபீரீடாவிற்கும் சிமோனிற்கும் பிற உறவுகள் இருந்தன ஆகவே…’ என வாதாடுகிறார். ஆனால் பாலியல் குறித்து ‘அவர்களிடம்’ குறுகிய எண்ணமில்லை ‘பரந்தது’ என்பதன் அர்த்தம்: அவர்கள் ‘பாய்ஸ்’ படம்போன்ற ‘வெளிப்படையான’ நடவடிக்கைகளில் அதிர்ந்தும் ‘திருடா திருடி’ வகையறாக்களை இயல்பாக எடுத்துக்கொள்வதுமான ‘பாசாங்கை’ விரும்புகிறவர்கள் இல்லை என்பதே. எமது நாடுகளது போல பாலியல் குறித்த இறுக்கம் இல்லை, திருமணம் வரையில் (அனேகமாக பெண்கள்) தமது பாலியல் தேவையை ஒடுக்கிற நிலைமை இல்லை என்பதே பொருள். ஆனால் அவற்றுக்கெல்லாம் எனது கணவன்/மனைவி இன்னொரு ஆ/பெண்ணைப் புணரலாம் துரோகிக்கலாம் என்றர்த்தமல்ல. குடும்பம், திருமணம் போன்ற நிறுவனங்கள் உள்ள எந்த கலாசாரங்களிலும் ஒரு ஆண் ஒரு பெண் என்கிற கருத்தாக்கம் மாறப் போவதில்லை. ய.ரா எடுத்துக் காட்டுகிற ‘பெண்ணீயவாதி’யான சிமோன்கூட பின்னர் சார்ற்ரேபோல ‘இலக்கங்களில்’ ஆர்வமற்றுப் போய்விடுவதையும், ‘உடமை’ உணர்ச்சி என்பது வரிக்குவரி தொனிக்க நெல்சனென்கிற அமெரிக்கக் காதலனிற்கு எழுதிய கடிதங்களும் என்ன சொல்கின்றன?
மனித உடல் சார்ந்த சிக்கல்களை கலாச்சாரங்களுள் ஒதுக்கி ய.ரா தன்னுடைய கருத்தை, தன்னுடைய கருத்து வழி மனிதனை ‘நியாயப்படுத்த’ இவ்வளவு மெனக்கெட்டால் குறுகிய, தனது மத, இன அடையாளத்தை விட்டுவராத சனாதன மனம் எவ்வளவை நியாயப்படுத்தும்? என்னென்ன காரணங்களை அடுக்கும்?
பெண் குறித்த புரிதலில் ஜெயமோகனோ இன்ன பிறரிலிருந்தோ ய.ரா பார்வை வேறுபடவில்லை; பிரிய எதிரிகள் இந்தப் புள்ளியில் ஆரத் தழுவிக் கொள்ளலாம்.

பாப்லோ நெருடா எத்தனை மனைவிகள் கண்டார், எத்தனை பெண்கள் சிநேகிதிகள் கொண்டார் என்பதல்ல பிரச்சினை. அவருடைய படைப்புகளூடாக வெளிப்படுகிற ஆணாதிக்கம், அவரது காதலிகளில் குறித்த எந்தப் பெண்கள் குறித்த அவரது பார்வை என்னவாக இருந்தது? அவர் எப்படி குறிப்பிட்ட அவர்களை ‘பார்த்திருக்கிறார்’ அப்புறம் அது ஏன் முக்கியமானது பொருட்படுத்தப்பட வேண்டியது என்பனவெல்லாம் அலசப்படவேண்டியன. அதிலும், புரட்சிகரமான ஒருவருடைய எண்ணங்களே மிக முக்கியமாகப் பொருட்படுத்தவேண்டியதும் ஏனெனில் சமூகம்/மக்கள்/பெண்கள்/சிறுபான்மையினர் பற்றின அக்கறையை முதலாளித்துவ தலைவர்களிடமோ அதைப் பிரேரிக்கிறவர்களிடமோ நாம் எதிர்பார்த்து நிற்கமுடியாது; அவர்களுடைய எண்ணங்கள் எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு வெளிப்படையானவை.

இங்கே பிரச்சினை: இந்த புகழ்வாய்ந்த கவிஞர்களைப்போல இவர்களோடு இணைகிற பெண்கள் கலைஞர்கள் அல்ல. அந்த வகையில் குரலற்றவர்கள். உலகம் கவிஞர்களது (சோடிக்கப்பட்ட) ஒரு பக்கத்தையே கேட்டு தன் முடிவுகளை எடுப்பதோடல்லாமல் ‘அவர்கள்’ விரும்பித்தான் போனார்கள் என்றும் சொல்கிறது. சார்த்தரைப் பற்றி சிமோனது எண்ணங்களோ, ஃபிரீடாவின் தீகோவின் துரோகம் பற்றியதோ அவர்களும் படைப்பாளிகள் அல்லாதுபோயின் எப்படி பொதுவிற்கு வந்திருத்தல் சாத்தியம்? யாரோ ஒரு மொடலின் (Model) சகோதரியை டீகோ புணர்ந்திருந்தால் அதுபற்றி பொதுவில் பெறுமதிதான் என்ன?

இது, இந்த ‘உன்னத’க் கலைஞர்களின் படுக்கையறையைத் துழாவி ஒரு இன்பம் பெறுவதற்காக அல்ல, தொழிலாளியைச் சுரண்டுவது பற்றிய பிரக்ஞைகொண்டவர்கள் சக தோழரின் உடலை சுரண்ட தமக்கு உரிமை இருப்பதாய் நினைக்கிற, அதுகுறித்து அக்கறைப்படாத உளவியலை விமர்சனத்துக்குள்ளாக வேண்டியே. அது மிகத் தேவையானதே (தேவையில்லை என்று பார்த்தால், எதுதான் தேவை?).
அந்தப் பிண்ணணியில் பா.நெருடா போன்றவர்கள் – கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ, ரோட்ஸ்கி போன்ற- ஏனையவர்களுடன் விமர்சனத்துக்குள்ளாகுகிறார்கள். அதை வலதுசாரிகள் ‘உபயோகிக்கிறார்கள்’ மார்க்சியத்தின் மானத்தை வாங்குகிறார்கள் என்பதற்காக அவர்களது ஆதிக்கத்தை கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அத்துடன் தத்துவங்களை அதைக் கொண்டு சென்ற மனிதர்களுடன் இணைத்து பார்ப்பதும் நிராகரிப்பதுமானவர்களின் பொருட்டு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்க முடியாது.

ய.ரா அத்தகையவர்களுக்கு பதிலுறுக்கிற வேகத்தில், தானும் மார்க்சியத்தை இந்த பிம்பங்கள் ஊடாகப் பார்க்க விரும்புவதையே வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய தவறுகளை எந்த வித்தியாசமும் இல்லாமல், பலரிடமிருந்தும் ஏலவே கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வகையிலையே நியாயப்படுத்துகிறார்:

…நெருதாவோ பிக்காஸோவோ யாரையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியிருந்தாலோ, அல்லது கள்ளங்கபடறியா சிறுமியரை அறியாமயத் தமது பாலியல் சுரண்டலுக்குப் பலியாக்கி இருந்தாலோதான், இன்று அவர்கள உறவுகள் மீதான தார்மீகக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியும். …

சரிதான். படைப்பாளியல்லாதவர்கள், வெகுசனத்தின் வெளிச்சத்துக்குள் இல்லாதவர்கள், வந்து தம்மை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கதைகளை சாட்சிகளுடன் இனிமேலைக்கு வாக்குமூலந்தந்தால்தான் உண்டு உய்வு. கலைஞர்கள் யாரை பாலியல் வன்முறை செய்கிறார்கள், யார் விரும்பிப் போகிறார்கள் என உளவாளிகளை நியமிக்க முடியாது. படைப்புகளும் சுயசரித ஒப்புதல் வாக்குமூலங்களிலும் ஊடாக, ‘ஆஹா கவிஞன் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறான்’ என அப்படியே பிரமித்துப்போய் மெய்சிலிர்த்து நின்றுவிடுவதால் எழுகிற கேள்விதான் மேலுள்ளது.

தம்மைச் சூழ்ந்துள்ள அரசியல்வாதிகளதும் கலை இலக்கியவாதிகளதும் படைப்புகள், நடவடிக்கைகள் குறித்த பெண்ணிலைவாத வாசிப்புக்களை தாம் வாழ நேர்நத சூழலில், மொழியில் துவங்கி வைப்பதுதான், நெருதா மீதான பெண்ணிய வாசிப்பைக் கோருகிறவர்கள், செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். அவ்வாறான வாசிப்புகள் மேற்கொள்ளப்படுகிறபோது மகத்தான படப்பாளிகளின் படைப்புகள் மற்றும் வாழ்வின் மீதான பெண்ணிலைவாத வாசிப்புகள் என்பது பொய்த்துப் போவதை இவர்கள் காணவியலும். ஏனெனில் மனித உறவுகள் கருத்தியல் வரையறைகளுக்கு அகப்படாமல் நழுவுவதை இவர்கள் அப்போது காணமுடியும்.
இரண்டாவது விமர்சனம் பாப்லோ நெருதா, ஹங்கேரி மீது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் படையெடுப்பைக் கண்டிக்கவில்லை என்பதோடு, ஸ்டாலின அத்மீறல்களை நெருதா வெளிப்படையாகக் கண்டிக்காதது மட்டுமல்ல, ஸ்டாலின் மரணத்தின் போது அவரை விதந்தோதி ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார் என்பதாக இருக்கிறது.

அவரைப் பற்றி ‘துவக்கி வைப்பதே பணி’ என்று சொல்லி அவரே ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார், அதாவது அவர் வந்த முடிவே அனைவரும் வருவர் என!

பாப்லோ நெருடாவின் சில கவிதைகள் ஊடாக, அவர் பற்றிய (வலதுசாரிகளின் அவதூறுகள் அல்லாத) வாசிப்புகள் ஊடாக ய.ரா சொல்கிற முடிவிற்கு வரமுடியவில்லை. அவருடைய எல்லாப் படைப்புகளையும் சுயசரிதத்தையும் முன்வைத்து ஒரு விமர்சனம் எழுமாயின் அஃதில் பா.நெருடாவின் இடமே இல்லாது போகலாம். இதில், பா.நெருடா மீதான ‘இன்னொரு’ விமர்சனமான ஸ்டாலினிற்கு அஞ்சலிக் கவிதை விதந்தோதி எழுதியது குறித்து பெரிதாய் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் ஒரு கவிஞனை இப்படி தூக்கிப் பிடித்துத் தாங்கோ தாங்கென்று தாங்க முடியுமெனில், அது ஒரு அல்ப விசயம். அது ஒரு வலு இயல்பான சின்ன விசயமுங்கூட. எங்காவது மரணக்குறிப்பில் “இந்த ஆண் இன்று இறந்து போனான். ஏலவே திருமணமான ஒரு பெண்துணையுடன் வாழ்ந்தான். சிறந்த மனிதாபிமானி. இவனது சக தோழரான ஒரு பெண்ணை வாக்குவாதத்தில் ‘வேசை’ என்று விளித்தான். இறக்கும்போது சில சொச்சம் வயதுதான். மிகவும் நல்லவன். ஒரு போது மதுஅருந்துகையில் வாழ்நாளில் ஒருபெண்ணினது கன்னிமையாவது தான் உடைக்கவேண்டுமென குறிப்பிட்டான். பாவம்! அது நடைபெற முன்னவே இறந்தான்” என்கிற ரீதியில் யாரும் ‘உண்மை’ எழுதுவார்களா. தான் சார்ந்த, தான் -ய.ரா போல- நியாயப்படுத்தின ஒரு கட்சி விசுவாசத்தில் ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதுவதெல்லாம் ஒரு விடயமா? எல்லாவிடயங்களையும் ‘முதலாளித்துவ அவதூறுகளையும்’ தாண்டி கிடைக்கக்கூடிய தகவல் யுகத்தில் இருந்துகொண்டு இன்னமும் அதே பழைய துருப்பிடித்த –பேரீச்சம் பழக் காரனுக்குப் போடவேண்டிய- மரபின் எச்சங்களுடன் நூற்றாண்டுக்கு முந்தையவனை ஒருவர் நியாயப்படுத்தும்போது, பா.நெருடா ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதியதை அவருக்கெதிராக நிறுத்தும் இந்த நாசங்கெட்ட வலதுசாரி, முதலாளித்துவ விமர்சகர்களைத்தான் என்ன செய்ய முடியும்?

…கிறித்தவ அறவியலால் உந்தப்பட்ட தாந்தேவின் கனவு ஒரு துரோகமாகும் எனில், சோவியத் யூனியனால், உந்தப்பட்ட நெருதாவின் புரட்சிகர அறவியல்சார் கனவும் ஒரு துரோகம்தான். நெருதாவின ஸ்டாலினிய ஈடுபாடும் சந்தேகமில்லாமல் ஒரு துரோகம்தான். ஆனால் நெருதா முன்வைத்த, சகல மானுடருக்கும் விடுதலையெனும் நெடுங்கனவில் அவருக்கு இருந்த ஈடுபாடும், ஒரு ஆத்மார்த்தமான கம்யூனிஸ்ட்டாக சுயவிமர்சனத்தில் நெருதாவுக்கு இருந்த ஈடுபாடும் அவரது துரோகத்தை வரலாற்றின் மீது சுமத்திவிட்டு தன் மீதான விலங்குகளை உதறிவிடுகிறது.

இறுதியாக, அந்த நெடுங்கனவில் (‘சகல மானுடருக்கும் விடுதலையெனும்’ என்பதற்குள்) பெண்கள் அடங்கமாட்டார்கள் என்பதோடு, யமுனா ராஜேந்திரன் -வசீகரமான, ஆத்மார்த்தம் கம்யூனிஸம், சுயவிமர்சனம் ஆகிய, சொற்களின் துணையுடன்- உதறப்பட்டுள்ளதாக சொல்வது வேறொன்றைத்தான் என்பதையும் இங்கு மிகவும் நாகரீகமாய் எழுதிக் கொள்கிறேன்.

மேலும், ஒரு சுற்றுலாப் பயணிபோல தஞ்சை பெருங்கோவில் செல்கிற யமுனா ராஜேந்திரன்களிற்கு அங்குள்ள சிற்பங்களின் ‘கலை’நேர்த்தி மட்டுந்தான் தெரியும். ஆனால், அரண்மனைகளது அந்தப்புரங்களது அழுகுரல்கள் அதைக் கடந்து சென்ற சிலருக்குத்தானும் கேட்டிருக்கவே செய்யும். உங்களை அவை அடைந்ததில்லை என்றால் உங்களுக்கு அதைக் கேட்கிற தன்மை/விழைவு கிடையாது என்றே அர்த்தம்.
0

ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’

June 1, 2005 17 comments

இயலாமையின் புகலிடம் தாய்மையா?

-ராஜினி

நன்றி

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்…… என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக…

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்… அதுவும் “பெண்களுக்கேயுரித்தான” தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்… அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை… அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை. துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
0

-ராஜினி
(நன்றி: சக்தி 2001 மே- இதழ்-26, நோர்வே)

இரு ஆளுமைகளைச் சந்தித்தல்: ஆளுமை 02

May 30, 2005 Leave a comment

முன்அனுமானங்கள், பரிந்துரைப்புகள் எதுவுமின்றி -ஒரு வெகுஜன இதழில்- படித்த சிறுகதையொன்றை எழுதியவராகவே கமலா தாஸ் (Kamala Das) அறிமுகமானார்.
அதுவரையில், கதையென்பதைத் தவிர சிறு சலனம், பதில்வினை எனவொரு அருட்டலையும் தந்திராத எத்தனையோ படைப்புகளை கடந்து சென்றதேயுண்டு; தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலா தாஸ் போல அடித்தவர்கள் யாரும் தெரியாது.
பொய்கள் என்கிற அந்தக் கதையில் வந்த கதாபாத்திரங்கள் குடும்பம், காதல், உறவு இவை தொடர்பாக வெளியுலகம் புனைந்தவற்றிற்கு எதிரானதாக இருந்தது.
பிள்ளையை தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?);, அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை; அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதை பிள்ளை தாயிடம் `தன்னுடைய மொழியில்` இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம், ‘பொய்’ சொல்வதாக வரவர அவன் பொய்கள் கூடுவதாக தகப்பன் சொல்லுவார், பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, ஏதேனும் கனவு கண்டடினியோடா என தடவிக் கொடுப்பாள். ‘உண்மையாத்தான்’ என அழுவான், கதையின் முடிவு வரை!

புரட்சிகரமான கண்ணோட்டத்தில் தென்பட்ட உலகிலே, ஒருபக்கம் அந்தக் கணவனை ‘ஆம்பிளை’ என நாலு வசனம் பேசி, இரண்டு சாத்து சாத்தி ஒரு புறமா தூக்கித் தொங்கவிட்டும், இன்னொரு பக்கம், அவனது ‘கள்ளக்காதலிற்கான’ சாப/பாப/பழி வார்த்தைகளை கதைபூரா இறைத்தும் வாசக (என்!) மனத்தைச் சாந்திப்படுத்தாமல், வாழ்வின் இயல்பாய், வலு சாந்தமாய், ஒரு கதையை அத்தகைய கருவில் படித்தது அதுதான் -போதாக்குறைக்கு- முதல் முறை. நெடுநாள் ‘அந்தப் புள்ள எப்ப தாயிட்ட சொல்லீ… தாய் நம்பீ… (பிறகாவது என் மனச்சாந்திப்படும் ‘உலுக்கல்கள்’ நடக்காதா?)’ எண்டு அருட்டிக்கொண்டே இருந்தது அது.
கதையைப் புரிந்துகொள்வது, தனியே தகப்பனோட பொய்கள்/களவு என்பதாக அல்ல; அந்தச் சிறுவன் வளர்ந்து, விபரம் புரிந்து, ‘உண்மை’யைச் சொல்கையில் (காலம் தாமதமாகிவிடும்) அந்த உண்மை’க்கு பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதும், அப்படியானபோது, அதன்மேல் சாபங்களோ ‘ஒழுங்காக்கும் தேவையோ’ இல்லை என்பதும். அப்போ, குடும்பம், உறவுகள் இவைகளுPடாக உலகம் காவுற உண்மை என்ன அது எவ்வளவு போலியானது?

இந்தக் கேள்விகளாக, `உண்மை`யை/`உண்மை`யான எழுத்தைப் பற்றியதான உரையாடலில் கமலா தாஸ் வருகிறார். அம்பையின் கட்டுரைகள் மற்றும் சில படைப்புகள் எவ்வளவு கவர்ந்தனவோ, ஒப்பிடவியலா அளவில் மிகவாய்ப் பிடித்தது கமலா தாஸை, ‘மலபாரில் பிறந்த பழுப்பு நிற இந்தியப் பெண்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய கிறுக்குத்தனங்கள் நிறைந்த அவர், இயல்பு மிகுந்த மனிதர்களை நேசிக்கிற எல்லோருக்கும் பிடிக்கக்கூடியவராகவே இருப்பார். அதிலும் தம்முடைய கிறுக்குத்தனங்களை சமூகத்தின் பாசாங்குகளோடு ஒத்திசைந்து மறைக்க முனையாமல் வெளிப்படுத்துகிறபோது அது அந்த எழுத்தாளர்களை சுவாரசியமானவர்களாக நம்மை ஒத்தவர்களாக உணர வைக்கிறது. -விபரம் தெரியாத வயதுகளில் குளியலறை சொற்களை சொல்லி ‘பெரியவர்களை’ குழந்தைகள் அதிர்ச்சி ஊட்டுமாப்போல- பாசாங்கான உலகத்தின் மீது, தமது கிறுக்குத்தனங்களால் அதிர்ச்சி தருகிறார் இவர். பலவந்தமாய் தமக்கு ஒவ்வாத கருத்துகளுக்குள் தம்மை அடைத்துவைத்துக்கொண்டு தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குகிற எழுத்தாளர்கள் போரடிக்கக்கூடியவர்கள், தன்னை (சரியோ தவறோ) அத்தகைய அதிர்ச்சியூட்டல்களூடாக வெளிக்காட்டி வருபவர், தன் அறிமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார் (கவிதை: ஒரு முன்னுரை):

… நான் குழந்தையாயிருந்தேன்,
பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
நான் வளர்ந்து விட்டதாக –
நான் உயரமானதால், கைகால்கள் பருத்ததால்,
ஓரிரண்டு இடங்கள் ரோமம் துளிர்த்ததால்.நான் காதலைக் கேட்டேன், வேறெதுவும் கேட்கத் தெரியாததால்.
பதினாறு வயது இளமையை அவன்
படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று மூடினான் கதவை.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் சோகமான என் பெண்ணுடல் அடிபட்டதாய் உணர்ந்தது.
என் மார்பகங்களின், கருப்பையின் பாரம்
என்னை நசுக்கியது.
பரிதாபமாக சுருங்கினேன் நான்.

பிறகு… ஒரு சட்டையும்
என் சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்,
என் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டேன்,
என் பெண்மையை நிராகரித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்:
சேலை உடுத்து, பெண்ணாயிரு, மனைவியாகு.
பூத்தையல் வேலை செய், சமையல்காரியாகு,
வேலைக்காரிகளோடு சண்டையிடு.
பொருந்து, சமூகத்தோடு இணைந்துகொள்
என மனிதர்களை வகைப்படுத்துபவர்கள் கத்தினார்கள்:
”சுவர்களின் மீது உட்காராதே
திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் ஊடே நோட்டமிடாதே,
ஆமியாக அல்லது கமலாவாக இரு.
*மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது.
ஒரு பெயரை, ஒரு வாழ்க்கைப் பங்கைத்
தோந்தெடுக்கவேண்டிய நேரமிது.
பாசாங்கு விளையாட்டுகளில் ஈடுபடாதே.
மனநோயாளி மாதிரி நடந்துகொள்ளாதே,
காமம் நிரம்பியவளாக இருக்காதே.
காதலில் மோசம் போகும்போது
சங்கடம் தரும்படி அழாதே. “


விமர்சகர்களே, நண்பர்களே,
வீட்டிற்கு வரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளே
என் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்கக் கூடாதா?


நான் பாவி
நான் புனிதமானவள்
அன்பிற்குரியவள் நான்
வஞ்சிக்கப்பட்டவள் நான்
உங்களுக்கில்லாத இன்பங்கள் எனக்கில்லை
உங்களுக்கில்லாத துன்பங்கள் எனக்கில்லை

-0-

நீங்கள் தவறான பால்த்தன்மையுடன் பிறந்துவிட்டதாகக் கூறினார்கள். ஆணாக இருந்திருந்தால் எழுத்தாளராக இருப்பது எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம், நிச்சயமாக. எனது மாமா நாலப்பாட் நாராயண மேனன் எல்லோரும் அறிந்த ஓர் எழுத்தாளராக இருந்தார். காலையிலிருந்து இரவு முடிய அவர் எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். எழுதுவதைத் தவிர வேறெதையும் அவர் செய்யவேண்டியதில்லை. அது ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று நினைக்கிறேன்.
(பக். 31, பனிக்குடம், ஜீலை-ஆகஸ்ட் 2003)

பனிக்குடம், 1996 இல் Rediff இணையத்தளத்தில் ஷோபா வாரியர் (Shobha Warrier) கமலா தாஸைக் கண்ட நேர்காணலின் சில பகுதிகளது மொ-பெயர்ப்பைப் போட்டிருக்கிறது (இதழில் நேர்காணப்பட்ட ஆண்டு 1996 என்பது போடப்படவில்லை).
படைப்புகளில் மனசிலறையும் வலியை உண்டுபண்ணுபவர், நேர்காணல்களில் சிரிப்பையும் உண்டுபண்ணுவார். அம்பையிலும்விட, இந்த மனுசியிடமிருக்கிற நிறைய கிறுக்குத்தனங்கள் அவ்வாறு சிரிப்பைத் தூண்டும், கணவர், தன்னை ‘கவிதை எழுதுவதைப் பற்றி யோசிப்பதை நிறுத்தச் சொன்னது’ பற்றி…… இயல்பெனவே இவர் சொல்லுகிறவை ‘…என்னுள் கவிதை செத்துவிட்டது. ஏனெனில் நான் நேரத்தை வீணடிக்கிறேன் என்ற குற்றவுணர்வின்றியும் அது என்னுடைய கணவருக்கு உதவப்போவதில்லை என்ற உணர்வோடும் என்னால் சிந்திக்க முடியாது’ என்றும், ‘காதலன் கிடைத்தால் அவனிடமே போய்விடுவேன்’ என்கிற, ‘உன்னை நான் காணும்வரை/கவிதை எழுதினேன், ஓவியம் தீட்டினேன்;/தோழிகளுடன்/உலவி வந்தேன்./இப்போது, நான் உன்னைக் காதலிக்கிறேன்./என்வாழ்க்கை ஒரு நாயைப்போல/ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறது/உன்னில் மனநிறைவைக் கண்டு’ என கவிதை எழுதிற, கமலாவைப் படிக்கையில் -வரட்டுத்தனம் அற்ற- அங்கதத்திற்கு இடமிருக்கும், அவருடைய வாசகமான “ஆண்கள் தந்திரசாலிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கின்றனர்; பெண்களோ திறந்த புத்தகங்களாக இருக்கின்றனர்“ (அதை நான் நம்பவில்லையென்ற போதும்!) போல ‘அவர்’ இருப்பதாய்ப் படும்; அத்தகைய பண்புகளாலேயே, அவரது, எனது கதை என்கிற சுயசரிதம் வந்தபோது ஒழுக்கமற்றவராகவும் nymphomaniac ஆயும் பார்க்க/விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

எமது இடங்களில் Womanizer என்கிறபதம்கூட ஆண்களை நோக்கி சொல்லப்படுவதில்லை. இங்கே, ஆண்கள், பெண்டாளுதலும் பல உறவுகள் ‘வைத்திருப்பதும்’ அவனுடைய பண்பாக ‘ஏற்கப்பட்டும்’, பெண்கள் உறவுகளில் ‘வீழ்வதையும்’ அவ் உறவுகளை முன்வைத்து ‘துரோகத்தை’ப் பற்றி பேசுவது சலனமூட்டக்கூடியதாய் இருப்பதும், ஆச்சரியமானதல்ல. இங்கே பெண்கள் விடயத்தில் ஆண் கொஞ்சம் பலவீனனாகவும், பெண்ணோ காம நோய் பிடித்தவளாயும் நிறுவப்படுகிறாள்.
இவற்றில் பொருட்டின்றி, கமலா தாஸ், காதல், கருணை, துரோகம், சரணடைதல், பழகுதல் என மனிதப் பொதுக் குணங்களின் முன்னால் தன்னை மறைப்பின்றி முன்வைக்கிறார். அந்த முன்வைப்பு, அதன் நேர்மை, எதிர்கொள்ள முடியாததாய் இருக்கிறது, ஏனென்றால் எல்லோருமே பாதுகாப்பான வளையங்களில் வளைய வந்துகொண்டிருக்கவே விரும்புகிறார்கள்/றோம். உண்மையை நெருங்குதல் முன்வைத்தல் என்பதானது பாதுகாப்பான வளையங்களை அகற்றுவது என்றாகிறது; அவற்றை என்ன காரணங்களுக்காக (”புகழுக்காக” “பணத்துக்காக”) இவர்கள் அகற்றினாலும், அதில் பிறக்கிற இலக்கியப் பிரதிகள் முக்கியமானவை.

இந்த இரண்டு சுவாரசியமான பெண்களுக்குமிடையேயான இன்னொரு பொது ஒற்றுமை: இவர்கள் இருவருமே ஆதிக்க ஜாதிப் பின்னணியை உடையவர்கள் என்பது. பொருளாதாரரீதியாக கீழ் மட்டங்களில் ஒடுக்கப்படுகிற ஜாதிப் பின்னணியில் இருந்தெழுதுகிற பெண்களால் இவர்களது காலத்தில் -இவர்களை விமர்சனங்களுடனும் வாழ விட்ட இச் சமூகத்திலையே- இவர்கள் பேசிய விடயங்களை பேசியிருந்திக்க முடியுமா என்கிற கேள்வியும் உண்டு.

இவை தவிர்ந்து, அம்பையின் நேர்காணல் படித்துவிட்டு அம்பையைப் பார்க்க மும்பாய் செல்ல நினைத்திருந்திருந்திருக்கிறேன்; தத்துவங்கள் எல்லாவற்றையும் கோஷமாகவே சுருக்கிய நபர்களுள் அதை வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக தன்னுடன் இணைந்ததாக அவர் பேசியதாக உணர்ந்ததால்.

கமலா தாஸின் சிறுகதைகளின் ஈரத்தில் கேரளத்தில் அந்த அவரது வீட்டுப் படலையைத் திறந்து –hope fully- காவல் நாய்கள் இல்லாததான அவரது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் (மொ-பெ: கே.வி.ஷைலஜா, காவ்யா பதிப்பகம்) நூலில் அவர் எழுதிய, ”..அவளுடைய கதைகள் எனக்கு துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும், வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின்விசிறியில் அடிபட்டு துடிக்கும், அந்த சிட்டுக் குருவியின் ரத்தம் தெரிந்த கறை இப்போதும் என் இதயத்துள் ஒட்டிக் கிடக்கிறது” என்கிற அதே, அதே எண்ணத்தோடு.

இன்றைக்கு அவ்வாறான சந்திப்புகளில் ஆர்வம் போய்விட்டது; அப் பாதிப்புகளிலே நெடுநாள் தங்க முடிந்ததுமில்லை (தங்கித்தான் என்ன செய்வது?!). ஆனால் இப்போது சந்திக்கையிலும், விமர்சனங்களுக்கு அப்பால், இந்தப் பெண்கள் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறார்கள். தம்முடன் இயல்பென இவர்கள் கொண்டிருக்கிற அவைதான் அவர்களுடைய ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது.

நீங்கள் என் கதை எழுதியபோது ஏன் மக்கள்
அதிர்ச்சியடைந்தார்கள்?

இல்லை, அவர்கள் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்ததைப்போல் பாசாங்கு செய்தார்கள். மற்றவர்களிடம் தாங்கள் அறியாமை நிறைந்தவர்கள் என்றும் புனிதமான திருமணத்தின்பின் கட்டுப்பாடுகளை ஒருபோழுதும் மீறியதில்லை என்றும் நிரூபிப்பதற்குத்தான். எவருமே அதிர்ச்சியடையவில்லை. இம்மாதிரியான விஷயங்கள் வருடவருடங்களாக நடந்துகொண்டேயிருந்திருக்கின்றன. நான் நிலப்பண்ணை உரிமை சார்ந்த ஒரு பின்புலத்திலிருந்து வந்தவள். இரவில் ஆண்கள் எப்படித் திரிவார்கள். ஏழைகளின் வீட்டிற்கள் நுழைந்து அவர்களது பெண்களை எப்படிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்கள் என்றும் நன்கு அறிவேன். அவர்கள் கர்ப்பமுற்றால் மூழ்கடிக்கப்படுவார்கள் இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றை நாங்கள் அறிந்தவர்களாயிருந்தோம் ஆனால் இது இரவில் மட்டும்தான் நிகழும். நான் எப்பொழுதுமே அன்பொன்றையே விரும்பினேன். உங்களது வீட்டில் அன்பு கிடைக்கவில்லையென்றால் கொஞ்சம் கவனிப்பாரற்ற குழந்தையாக வெளியே திரிவீர்கள்.
(பக். 34, பனிக்குடம்)

  • *கமலா தாஸின் புனைபெயர்
  • கமலாதாஸ் சந்திப்பு மொழியாக்கம்: மாலினி
  • கவிதை தமிழாக்கம் எழுத்தாளர் ஆர். சிவக்குமார் (ஒழுங்கு மாற்றிப் போடப்பட்டுள்ளது)·
  • காதல், கவிதை பனிக்குடம், பக்.21, கமலா தாஸ், மொ-பெ:வேணுமாதவன்
  • தடிப்பெழுத்து என்னோடது

————————————————————————–

இரு ஆளுமைகளைச் சந்தித்தல்

May 28, 2005 12 comments

குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு, (ஜீலை-ஆகஸ்ட்) 2003 இலிருந்து, இருமாதமொருமொறை வந்த, பனிக்குடம் இதழ் 3 (மார்ச்-ஏப்ரல், 04) கிடைத்தது; சிறிய, கையடக்கமான, லேசான வாசிப்பிற்குரிய (Light reading!) இதழ்.
மொழிபெயர்ப்பு/கவிதைகள், கவிதை நூல்களிற்கான மதிப்புரைகள், கவிதை தொடர்பான கட்டுரைகள் என இதழ் கவிதைகளையும் அவை தொடர்பான உரையாடல்களில் பெண்ணிலைநோக்கையும் மையங் கொண்டிருக்கிறது.

படைப்புகளென்று பார்த்தால், இதில் இடம்பெற்றிருக்கிற பஹீமா ஜஹானின் கவிதைகளை `இலங்கைப் பெண் கவிஞர் கவிதைகள்’ என ஆசிரியர் குறிப்பில் குறிப்பிட்டுப் போடப் பட்டிருக்கிறது. கவிதைகளுக்கு அப்பால், ஒரு பழைய நண்பரைப் கண்ட மகிழ்ச்சி. தினமுரசு பத்திரிகை கொழும்பில் ஆரம்பித்ததில் இருந்து அதன் கவிதைப் பக்கத்தில் ஒவ்வொரு கிழமையும் தவறாமல் வீற்றிருக்கிற கவிதைகளுக்கு உரியவர் பஹீமா. யாரோ ஒரு தோழனுக்கான பிரிவாற்றாமையைப் பகிர்ந்துகொண்டிருந்தன அக் கவிதைகள் அப்போது. பிறகு, மூன்றாவது மனிதனில் 2000 இன் ஆரம்பங்களில் கண்டபோதில், அந்தத் தோழன் யுத்தத்திலோ காணாமல் போனவர்கள் பட்டியலிலோ இராணுவத்திலோ? சேர்ந்தவனாய் ஆகி, பிரிவாற்றாமை தொடர்ந்தபடியிருந்தது! இதில் பஹீமாவின் ஒன்பது சற்றே நீளமான கவிதைகள் கிடக்கின்றன; ‘கருமுகிலே!… வீசும் பவனமே…!’ எனவெல்லாம் சொற்கள் விழும், ஆச்சரியக் குறிகள் அதிகமிருக்கிற இந்தக் கவிதைகளில், `இலங்கைக்கான’ அடையாளத்தை (குறிப்பிட்டு, அப்படியாய்ப் போடுகையில்) த்தேடுகையில் காணவில்லை; ஆனால், இதே இதழிலுள்ள கமலா வாசுகியின் வரிகள், இந்த அடையாளங்கள் ஏதுமின்றி குஜராத் கலவரத்திற்கோ வேறெங்கும் இடம்பெறக்கூடிய பெண்கள் மீதான வன்முறைக்கோ பொருந்திப் போகிறது:

பெண்ணுக்கு ஒரு மணம்,
இரண்டாம் மணமோ கண்டனத்துக்குரியது
இரண்டாம் புணர்ச்சியோ
கடவுளுக்கெதிரானது, தண்டனைக்குரியது

ஆயின்,
குழந்தைகளை மார்புடன் அணைத்த
தத்தம் மனைவியர் வீட்டிலுறங்க,
கோடரி தூக்கிய ஆடவ வீரர்
கடவுளின் பெயரால் ஆயுதம் ஆவர்.

மதத்தின் பெயரால் குறிகள் விறைக்கும்
மதத்தில் பெயரால் தம் நிலை மறக்கும்,
மார்புடன் அணைந்த குழந்தைகள் எறிந்து
”வேற்று”ப் பெண்டிரைப் புணர்ந்து
தண்டிப்பர்.

…வாழிய கடவுளர், வளர்க மதங்கள்
மதங்களைக் காக்க, இனங்களைக் காக்க,
மனிதரைப் படைக்கும் பாவத்தைப்
புரிவதால்…
அழிந்தொழிக பெண்கள்!
-0-

இதை `இன மத இன்னோரன்ன காரணங்களுக்காகப் பாலியல் பழி தீர்க்கப்பட்ட உலக சகோதரிகளுக்காக’ என எழுதியிருக்கிறார் க.வாசுகி. இவ்வாறான பல பிரதிகள் ஈழத்தில் ஏலவே வந்துள்ளன, இதில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதையின் பாதிப்பும் உள்ளதுதான் எனினும் இங்கே இப் பிரதிக்கான `அடையாளங்கள்’ அவசியமற்றிருப்பது முக்கியமானது (கமலா வாசுகி, இவரும், ஈழத்தைச் சேர்ந்த ஓவியை என்றே நினைக்கிறேன்).

தவிர, இக் குறிப்பிட்ட இதழைப் பற்றி எழுதத் தோன்றுவதற்கான முக்கிய காரணம்: மிகப் பிடித்தமான இரு பெண்களோடான சந்திப்புகள் இதில் இடம்பெறுவதுதான். அதிலும், சிலகால இடைவெளிக்குப் பிறகு அவர்களை இங்கே (மீண்டும்) சந்திக்கிறேன் என்பதும்…

ஆளுமை 01:

1998இல் காலச்சுவடில் வந்த அம்பையின் நேர்காணல் என்னைப் பாதித்த நேர்காணல்களில் ஒன்று. உயிர்ப்பாக, இயல்பாக, பேச்சில் ஒருவர் தன்னை வெளிப்படுத்துவது –அவர் `உண்மையாய்’ வாழ்கிறாரா இல்லையா என்பதற்கு அப்பால்- பிடித்திருந்தது. (பேச்சில் மட்டும்) தவறு ஆகிரக்கூடாதென்கிற `கவனத்துடன்’ மிக நிதானமாக, வாக்குசாதுர்யத்துடன் பேசப்பட்டுத் தரப்படும் ஆட்களின் பேட்டிகள்/நேர்காணல்கள் அனேகம். அவற்றில் ஒரு ஆளுமையை அடையாளங் காணமுடிந்ததில்லை. அந்தவகையில் அம்பையிடத்தில் சொந்த வாழ்க்கையில் அவரது போலித்தனங்கள் பற்றிய கவனம் இன்றி பெண்ணியமோ எந்த ஒரு தத்துவத்தையும் `வரட்சி’யாக முன்வைக்காதது நேர்மறையான அம்சமாக இருந்தது.

இன்று, அம்பையின் புனைவுகள் தொய்ந்து, சில ஆண்டுகளிற்குப் பிறகு, இதில் மீளச் சந்திக்கிற அம்பையின் பேட்டியிலும் அவர் தமிழில் ஒரு நிராகரிக்க இயலாத ஆளுமையாக எழுகிறார். பெண்ணிய மொழியாடலில் சமகாலத்து மாற்றங்கள்வரை அறிந்திருக்கிற, தேடல் உள்ளதொருவளாய் கருத்தாடுகிறார். அவை சின்னச் சின்ன விடயங்கள்! புதிய தலைமுறை –கவனத்தில் எடுக்கவேண்டியவை- அம்பையால் இயல்பாக எடுத்துச் சொல்லப்படுகின்றன, தன்னுடன் ஒன்றிக் கலந்திருக்கிற கருத்துக்களாலேயே அது சாத்தியமாகும். தொடர் வாசிப்பும் அவசியமாயின் எதிர்வினையாற்றுவதும் பெண்ணிய உரையாடல்களில் இயல்பாக வருகிற சமத்துவத் தேடலும் அம்பையின் பலங்கள்; அம்பைக்கும் குட்டி ரேவதிக்குமிடையே இடம்பெற்ற இந்த உரையாடல் பனிக்குடத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

…காலம், சரித்திரம் இவை தொடப்படாத உடல் இல்லை, பெண் உடல். குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல், வயோதிக உடல். நோய்வாய்ப்பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக்கான இன்பங்களை அனுபவித்த உடல், அவற்றைத் தவிர்த்த உடல், சாதி அடையாளம் உள்ள உடல், பலாத்காரத்துக்கு உட்பட்ட உடல் என்று உடல்கள் பலதரப்பட்டவை. உடல் பற்றிய உணர்வுகளும் பலதரப்பட்டவை. எந்தவித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய்ப் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தை புறக்கணிக்கும் செயல். ஹெலன் ஸிஸ்யூ போன்றவர்கள் உடலில் ஊறும் ரசங்களால் எழுதுவது –பால், மாதவிடாய்க் குருதி போன்றவை- என்று கூறும்போது அதை ஓர்
எதிர்வினைச் செயலாகவே நோக்க வேண்டும். அதாவது, ~இது பெண் என்று நீ என்னைக் குறுக்கினால் அதையே ஒரு பிரும்மாண்டமாக்கிக் காட்டுகிறேன் பார் என்று கூறும் செயலாக அதைப் பார்க்கலாம். ஆனால் அதில் ஏற்கனவே கருப்பையை மையப்படுத்தி அடையாளப்படுத்திய பெண் உடலில் மீண்டும் புகுந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்தக் குறுக்கலை ஏற்கும் நிலை இருக்கிறது. அது மட்டுமில்லை. இதுதான் நான் என்று அடையாளப்படுத்திக்கொண்டு நிலைபட்டபின் அது இல்லாத மற்ற உடல்களை விலக்கும் உதாசீனம் இருக்கிறது. பால் இல்லாத, மாத விடாய்க் குருதி நின்றுபோன பெண்கள் எதைக் கொண்டு எழுதுவார்களாம்? இப்படிப் பெண்ணின் உடலைக் குறுக்குவது
இதுவரை இருந்த விளக்கங்களுக்கு உள்ளேயெ பெண்ணை இருத்தும் செயல்தான். ஒரு காலகட்டத்தில் பனிக்குடத்தை பிரதானப்படுததுவது தவறு அல்ல. ஆனால்
பனிக்குடமே
பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு.
புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம்.

(பக். 17, 19)

இன்று பெண்களது எழுத்து தொடர்பாய் `ஆண்களைப்போல எழுதுகிறார்கள்’ என்கிற அட்டவணையின் கீழ் நிறைய விமர்சனங்களும் தூற்றல்களும் வந்தாலும் அவற்றால் இத்தகைய அவதானங்களை முன்வைக்க முடிந்ததில்லை. மாறாக, அம்பை போன்றவர்களிடமிருந்தே இயல்பாக வரக்கூடிய இப் பதில்கள் மனதை நெகிழ்த்திவிடுகின்றன. பெண்கள் தம் கர்ப்பப்பையை கையகப்படுத்துவது தொடர்பான உரையாடல்களில் எல்லாம் கர்ப்பப்பை அற்ற நம்முடைய ஓலம் இருக்கிறது என்பாள் தோழரொருவர் (இதைப் பற்றி ஃப்ரீடாவை முன்வைத்து பிறிதொருபோது தொடரவேண்டும்).
பனிக்குடம் என்கிறபோது அதில் ‘சொல்லப்பட்ட’ பெண்மையின் குணாம்சங்களிற்கான அழகியல், கவித்துவம், சாந்தம், அமைதி என ஒரு பவித்திரமான உணர்வு வெளிப்படுகிறது (தமது வெளியீட்டிற்கும் ‘சூல் பெண்ணிலக்கிய வெளியீடு’ எனவே பெயரிட்டிருக்கிறார்கள்).

அம்பை தொடர்கிறார்:

…72 இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டபோது ”உங்களுக்கு வேறு முக்கியமான விஷயம் எதுவும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியத்துவம் இல்லாதது என்றே
கருதப்பட்டது; கருதப்படுகிறது. இப்போதும் நாங்கள் சில பெண்களைப் பேட்டி காணப்போகும்போது அவர்கள் வீட்டார் அல்லது சுற்றியுள்ளவர்கள் ”இவள் என்ன
செய்துவிட்டாள் என்று இவளைப் பேட்டி காண்கிறீர்கள்?” என்று கேட்பதுண்டு. அந்தப் பெண் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம் அல்லது நிலஉரிமைக்குப் போராடிய ஓர் ஆதிவாசியாக இருக்கலாம்; ஓர் எழுத்தாளராக இருக்கலாம். தொடர்ந்து நடக்கும் ஏய்ப்பு இது.

(பக். 18)

…பல ஆண்கள், பெண்களைச் சுவைக்கும் ஒன்றாகப் பார்த்தனர். உதடுகள் கோவைக்கனி, கண்கள் திராட்சைப் பழம், முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டுச் சமாசாரம்தான்! மணியம் ஒரு கதையில் திருமணமாகாத முதிர்கன்னியை ‘ஊசிப்போன பண்டம்’ என்று வர்ணிப்பார். பெண்கள் எழுத்தில் ஆண்களைச் சாப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அவர்களுக்கு விருந்து படைக்கும் வைபவம்தான்! ‘பின் தொடரும் நிழலி’ன் குரலில் ஒரு கதாபாத்திரம், தனியாக இருக்கும் பெண் பாலூட்டும் இரு முலைகளுடையவளாகவும் பல பெண்கள் கூடி இருக்கும்போது அவர்கள் பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் கூறுவார். ஊட்டும் தொழிலைத் துறந்து விட்டால் பெருச்சாளிகளாவதுதான் வழி போலும்!
(பக். 16, 17)

நன்றி
பின் தொடரும் நிழல் போன்ற நூல்களின்மீது பெண்ணினுடைய வாசிப்பே நிகழாத சூழலில் (சக்தி இதழில் ராஜினி என்பவர் எழுதிய ‘இயலாமையின் புகலிடம் தாய்மையா?’ என்கிற கட்டுரை பி.நி.குரல் மீதான நல்லதொரு விமர்சனம்), அத்தகைய எழுத்தாளர்களின் தந்திரமான மொழியின் ஊடே இவற்றை பகுத்தறிவதும், சனாதனவாதியாய் அவர் பெண்கள்மேல் -கட்டுரைகளிலும் பெரு நாவல்/புனைவுகளிலும்- வைக்கிற பார்வைகளை அடையாளங்காணுவதென்பதும் சிக்கலானது (உ-ம்: அதி நவீனக் கதையாடலில் பெண்ணை சக்தி என்று அவளது இயலுமைகளை (தான் விரும்பிய வண்ணம்) முன்வைத்து, மேல ஏற்றி, அவளைப் பிள்ளைபேற்றிற்காகவும் கட்டுப்பட்ட/தன்னை அச்சமூட்டாத காமத்திற்காகவும்- பரிந்துரைப்பது, அப்படி இருப்பவளே அற்புதமானவளென (புனிதத்திற்குப் பதில்சொல்லாய் ‘சக்தி’ என) முன்வைப்பது போன்றன); அம்பை அவற்றிற்கு இயல்பாக எதிர்வினையாற்றுகிறார்.

அம்பையைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறபோதே, மேலே, ‘உண்மையாய்’ இருத்தல் பற்றி எழுதியிருக்கிறேன். கு.ரேவதி அம்பையிடம், ‘இன்றைய தமிழ் சூழலில் பெண்களின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு உண்மையாக உள்ளன?’ என்று கேட்கிறார்:

உண்மையாக இருப்பது என்றால் என்ன குட்டி? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பது என்று நினைக்கிறாயா? போலி அல்லாத எழுத்து என்று நீ சொல்ல நினைக்கிறாய் என்றால் எது போலி, எது உண்மை என்பதைப் பாகுபடுத்தக் காலம்தான் உதவ முடியும். மேலும் சில சமயம் ஒரு வெளிப்பாட்டின் போலித்தனத்தை நம் நுண்ணுணர்வால் மட்டுமே நாம் உணர முடியும். ‘உண்மை’ என்று நீ நினைப்பது ‘சந்தையுடன் உடன்படாமை’ என்ற அர்த்தத்தில் நீ சொல்லி இருந்தால், இது பெண், ஆண் இருவர் எழுத்துக்கும் பொதவான அளவுகோல் இல்லையா? இந்த அளவுகோல் மிகவும் ஒழுக்க உணர்வை ஒட்டி இருக்கிறது. இதை நாம் வேறு மாதிரி பார்க்கலாம். இன்றைய சூழலில் பெண்களின் எழுத்தின் மொழியும், உள்ளடக்கமும் எவ்வளவு தூரம் அவர்கள் சுயதேர்வாக இருக்கிறது? விருதுக் கெடுபிடி, பிரசுரிப்பதற்கான கெடுபிடி, புகழுக்கான கெடுபிடி, இவை எல்லாம் இல்லாமல் வெளிப்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டுள்ளது என்று வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால் இதுவும் பால்தன்மை அற்ற ஓர் அளவுகோல்தான். ஏனென்றால் வாழ்க்கையில் உள்ள ‘உண்மைகளை’ப் பற்றியது
அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். மேலும் இந்த ‘உண்மை’யின் தன்மை மாறியபடியே இருக்கிறது, …
(பக். 14, 15)

உண்மை பற்றிய இவ் உரையாடல் சுவாரசியமானது; எப்போதும் ‘உண்மையாய்’ இருத்தல் என்பது உடலோடு –அதனால்- ஒழுக்கத்தோடு சம்மந்தப்பட்டதாயே ஒலிக்கிறது; அதை விசுவாசம்/நன்றியாய் இருத்தல் இப்படித்தான் வாசிக்கிறார்கள். உண்மையாய் இருத்தல் என்பதை பாசாங்கற்று இருத்தலாகப் பார்த்தால், தாம் நம்புகிற கருத்துகளிற்கு, சேருகிற துணைக்கு உண்மையாய்/நேர்மையாய் இருத்தல் என்பதை உடம்பு/மனம் எனப் பிரிக்க முடியாதென்றே தோன்றுகிறது.

…பல ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் வாழ்க்கை பற்றி, அவர்கள் உணர்வுகள் பற்றி சிறப்பாகவே எழுதி உள்ளார்கள். இதற்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. …ஒரு பிச்சைக்காரன் தன்னைப் பற்றி எழுதினால் தன் அழுக்குச் சால்வை, பரட்டைத் தலை, வளைந்த நகம் இவை பற்றி எழுத மாட்டான். அவை அவனுக்கு இயல்பானவை. அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை. ஆனால் அவன் வாழ்க்கை பற்றிய ‘உண்மை’யை எழுத விரும்புபவர்கள் இதை எழுதாமல் விட முடியாது.
(பக். 17)

பெண்கள் உரிமைகளைப் பற்றி எழுத விழைபவர்களுக்கு எவ்வளவோ விடயங்கள் உறுத்தலாம், அவர்கள் போடுகிற பர்தா, பின்னால் காவுகிற ஆண் பெயர், அவர்களிடம் இருக்கிற ஆணாதிக்கக் கருத்துக்கள் என்று… தேர்தல் சமயத்தில், கருணாநிதி ஜெயலலிதாவை ‘மலடி’ எனத் திட்டியதைப் பற்றி அம்பை (காலச்சுவடு 54, ஜீன் 2004)) எழுதியிருந்தார் (அம்பை மட்டும்தான் எழுதியவர் என நினைக்கிறேன்); அவருக்குப்போல, நிறையப் பேரை ‘இவை’ உறுத்தும்வரையில் அம்பை போன்றவர்களின் இருப்பு அவசியமானது.

———————————————

  • அம்பை நேர்காணல்: குட்டிரேவதி
  • ஹெலன் ஸிஸ்யூ – Hélène Cixous
  • மேற்கோள்களில் தடிப்பெழுத்து என்னோடது

ஊழி

May 18, 2005 7 comments

– சேரன்

Riders of the Apocalypse
ங்களுடைய காலத்தில்தான்
ஊழி நிகழ்ந்தது.
ஆவிக் கூத்தில் நிலம் நடுங்கிப்
பேய் மழையில் உடல் பிளந்து
உள்ளும் வெளியும் தீ மூள
இருளின் அலறல்.
குழந்தைகளை, மனிதர்களை
வெள்ளம் இழுத்து வந்து
தீயில் எறிகிறது.

அகாலத்தில் கொலையுண்டோம்
சூழவரப் பார்த்து நின்றவர்களின்
நிராதரவின்மீது
ஒரு உயிரற்ற கடைக்கண் வீச்சை
எறிந்துவிட்டு
புகைந்து புகைந்து முகிலாக
மேற் கிளம்பினோம்

காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்
தீயிலிட வாய்க்கவில்லை
ஆனால் சிவரமணி எரித்து விட்டாள்
அந்தர வெளியில் கவிதை அழிகிறது
மற்றவர்களுடைய புனைவுகள்
உயிர் பெற மறுக்கின்றன.

எல்லோரும் போய் விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை.
0

( ஊழி, பக். 201, ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’)