Home > விளிம்பின் பிரதிநிதி > எழுத்தும் மயிரும்

எழுத்தும் மயிரும்

[ செயற்பாட்டு வெற்றிடம் ]

இதைப் படைக்கத் தேவைப்பட்ட ‘சாமான்கள்’:
1. மேற்கோள்: அறிவில்லையென்றாலும், ஒரு அறிவார்த்தமான பத்திக்கு இது மிகவுந்தான் அவசியம்! அதிலும், இதை வாசிக்கிறவர்கள், ஓர்ஃகன் வெலி என்கிற ‘பெயரை’ முன்னப் பின்ன அறிந்திராவிடில் மிச்சம் நல்லம். இவ்விதம், யாரும் அறிந்தே இராத (/அறிந்தே இருக்க முடியாத!) ஒரு பெயரைக் குறிப்பிடுகையிலே ஆகா.. நின் இன்ரலெக்சுவாலிற்றியின் எத்துணை கோதாரி இன்பம் புலப்’படுத்த’ப்படுகிறதிங்கே!
2. இடையீடுகள்: அடைப்புக்குறிகளுள்.
3 இறுதி வரிகளும் சமர்ப்பணமும்: (முக்கியம்: ‘மியூசியம்’ பற்றிய குறிப்பு).
4 புகைப்பட வாசகம்:உங்கட சில்லறையள வச்சுக் கொள்ளுங்க. எனக்கு தேவை மாற்றம்!

ந்த நாட்டிற்காக
நாங்கள் என்ன தான் செய்யவில்லை ?
சில பேர் செத்துப் போனோம்
பொதுமேடையில் சில பேர்
சொற்பொழிவுகள் ஆற்றினோம்!
– ஓர்ஃகன் வெலி (துருக்கி 1914 – 1950)

“(தமிழ்நாட்டில்) எழுதுவது ஒரு சொகுசாய் (Comfort) இருக்கிறது” என்றார் தமிழகத்தில் செயற்பாட்டாளரான பெண் ஒருவர். எழுதுகிறவர்களதான தமது எழுத்தின் ‘சர்வநிவாரண’ தோரணைகளைக் கடக்க நேர்கிற போதெல்லாம் அவரது அக் கூற்றே ஞாபகம் வருகிறது. இங்கே: எழுத்தாளர்களாய் இருப்பது எவ்வளவு சொகுசு! நீங்கள் சமூகத்திற்காய் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை; சொகுசாக உங்களது அறைகளுள் இருந்து உணர்ச்சி அருட்டுற ஒரு மகா கணத்தில் அதை எழுதினால் போதும்; நீங்கள் சமூகத்திற்காகக் குரல் கொடுக்கிறீர்கள்!
இதை, கலை கலைக்காக X கலை மக்களுக்காக என்கிற இரு பிரிவுகளிற்குள் நின்று எழுதவில்லை. மனிதரின் (கலை/கலை அல்லாத) வெளிப்பாடுகள் (தனிப்பட்ட, பொதுப்பட்ட) அனைத்தும் முக்கியமானவையே; அவை எதுவும் (இழிந்தவையிலும் இழிந்தவை எனப்படுகிறவை உட்பட) ‘தேவையற்றவை’ என்பதாக கூறவில்லை. ஆனால் ‘எழுதுவது’ என்பதைத் தவிர எதையும் செய்ய ஆர்வமற்றவர்கள் தம்மை மாபெரும் செயற்பாட்டாளர்களாக, விளிம்புகளை அறிந்தவர்களாகக் காட்ட ‘வெளிக்கிடுகிறபோது’ பல சமயங்களில் தாம் வாழ்ந்து பார்த்திராத அந்த உலகம் பற்றி அவர்களால் (நி/)பரப்பப்படும் ‘மாயைகள்’ பாரதூரமானவையாக அமைந்து விடுகின்றன. அதிலும், எழுத்தாளர்கள் ஆண்களாயும் இருந்து விட்டால், கொடுமையிலும் கொடுமை! (எ-காட்டாக) பெண்கள் படு பாடுகளைப் பற்றி எழுதுவதும், பெண் சார்ந்த ஒன்றாக தாம் நினைப்பதை ‘ஊக்குவிப்பதும்’ ஊக்குவிப்பதால் தன்னை உயர்த்திக் கொள்ளுதலும் (அந்த உயர்த்திக் கொள்ளல்களை, தாம், தம் ஆண்தன்மைகளை களைவதாய் எண்ணுவதும்!) என (புரிந்துகொள்ளாத மற்றவர்களில் இருந்து தான் மாறுபட்டதான ஒரு Superior தன்மையை உணர்ந்தவாறு) அவர்களது தன்னம்பிக்கையை (self esteem) மீற்றர் கணக்கில்((!!) வளர்த்துக் கொண்டிருப்பார்கள். அல்லாதுவிடிலும் அவர்கள்; தம்மைச் சார்ந்தவர்களுக்கு தம்மை நிரூபிப்பதற்கும், நான் ஒரு ‘ஆணை’ப் போல இல்லை; மாறாய், அப்படி இருப்பதற்கு ‘வெட்கப்படுகிற’ ‘நல்ல’ ‘மிகத் திறமான’ ஆள் என தம்மை எழுத்தாற் தட்டிக் கொடுத்தபடியும், வாசிப்பின்பம் போல ஒரு இன்பத்தில் கட்டுண்டும் கிடக்கலாம். ஆனால்! இந்த எழுத்தாளர்கள் அல்லது அவர்களது வாசிப்பு நூல்கள் நெருங்காத, ஆனால் இருக்கவே இருக்கிற உண்மையின் இடம் என்று ஒன்று உண்டு. அது: என்ன தான் கதறி அழுதாலும் – நீ எ ப் போ து ம் ஆண்குறியுள்ள ஓர் ஆணாகத்தான் இருக்கிறாய்!

அந்த உண்மையின் நிமித்தம்தான், இந்த சொகுசான எழுத்தாளர்களிலிடமிருந்து, அவர்கள் பிரதிபலிக்(க நினைக்)கிறதான உலகை எப்படி விடுவிப்பதென்ற பெருங் கவலை எழுகிறது; பெண்/விளிம்பிலுள்ள வாழ்வு குறித்த எந்தவொரு புரிதலையும் கொண்டிராத, எந்த ‘மாற்றத்திற்கும்’ உதவாத, பாசாங்கு எழுத்து (= குத்துமதிப்பான எழுத்து) எங்களது இருப்பையே மழுங்கடிப்பதை எழுதாதிருப்பது எப்படி? அத்தகையதொரு முயற்சியின் முதற் கல் இது (எறிய!)

ஒரு எழுத்தாளரிடமிருந்து “கனடா” என்றழைக்கப்படும் பெருநிலத்தைப் பற்றி நீங்கள் பலதையும் அறியலாம். உ-மாக; கனடாவில் வருடாவருடம் திரைப்பட விழாக்கள் நடக்கின்றன, வெளிவருகிற திரைப்படங்களை நீங்கள் உடனுக்குடன் பார்க்கலாம் [எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள், கனடியவாசிகள்!]; மிகவும் தோழமையான நாடு [நீங்கள் போயிருக்கிறீர்களா இளைஞர் சிறைகளுக்கோ; இவ் அமைப்பின், ஏனைய பொதுத் துறைகளில் ஏதாவது ஒன்றின் வாசலிற்கு – உ-மாக: அக்மார்க் கனடியர்களான இதய/நரம்பியல் மருத்துவ நிபுணரின் “சேவை”யை வேண்டித்- தானும்?]… அப்புறம், ஆம் ஆம் இலங்கையரான மைக்கல் ஒண்டாச்சி, சியாம் செல்வதுரை ஆகியோரது இலக்கியங்கள்; மேலும், குடிநீர் வசதிகள், பொதுத் துறைகளில் சிறந்த மருத்துவ சேவைகள்; (சிங்கப்பூர் இற்குப் பிறகு) உலகிலேயே இரண்டாவது சிறந்த நூலக வசதி உடைய நாடும் இதுவாகும் (குடிநீரைப் பற்றி பேசுகிறபோது, 2000ம் ஆண்டில் பெரும் சர்ச்சையைப் கிழப்பிய ‘வோக்கரொன் அவலம்’ பற்றியோ, அல்லது ஆண்டாண்டுகளாக பூர்விகக் குடிகளின் தனிக்குடியிருப்புகள் (reservations) எதிர்கொள்கிற பாரபட்சங்களையோ தவிர்த்து விடலாம்).

“கனடா” ‘தருகிற’ வசதிகள் சகலமும், ஒரு ‘படித்த’, காப்புறுதி மிகுந்த வாழ்வை வாழ்கிற — இன்றைய இளைஞர்களதை ஒத்த கேளிக்கைகள், பொழுதுபோக்குகளில் ஈடுபாடற்ற — தலைமுறையினருக்கு, அவர்கள்தம் சுய வளர்ச்சிக்கான தேடலுக்கு உதவலாம். அல்லாமல்; தொழிற்சாலைகளில் வேலை செய்கிற பெற்றோர்களது பிள்ளைகளிற்கும் பல்வேறு சமூக (தொழிற்சாலை, பொலிசார், அரச கட்டுமானத்துள்) பாரபட்சங்களை, பொருளாதாரச் சிக்கல்களை முகங்கொடுக்கிற மனிதர்களுக்கும், வெளிவருகிற படங்களை உடனுக்குடன் பார்ப்பதும்; நூலக வசதியைப் பயன்படுத்துவதும்; வீட்டில், இடைஞ்சல் இன்றி இருந்து புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பதும்; அத்தோடு “கனடா”வின் அத்தகைய ‘வசதி’களை சிலாகிப்பதும் சாத்தியமற்றதொன்றாகும். அத்துடன் மிக முக்கியமான விடயம்: நூலக வசதி மட்டுமல்ல, “கனடா” “தருகிற” ஏனைய வசதிகள் உடனடியாக புதியவர்களிற்கு அறிமுகமாவதில்லை (தொடர்புடையதாய் ஒரு நிகழ்ச்சி: கனடாவில் அவ்வப்போது தமிழ்ப் பெண்கள் ‘தற்கொலைகளாலும்’ கொலை முயற்சிகளாலும் வெளித் தெரிவார்கள். அப்போதொரு முறை, சமூக நலன் மிகுந்தவரென சொல்லிக் கொண்டிருக்கிற உயர்குடித் தமிழன் ஒருவர், “இவ்வ்வ்வளவு வசதிகள் இருக்க, இப்படியான முடிவுகளை எடுக்கிறார்களே” என்றார். ‘இவ்வ்வளவு வசதி’களின் நியமுகம் எத்தகையது என்பது ஒரு புறமிருக்க, அவரிடம் “இவ்வ்வளவு வசதிகள் இருக்குதெண்டு [பாதிக்கப்படுபவர்களுக்கு/அத்தகைய முடிவுகளை எடுப்பவர்களுக்கு] தெரியாட்டில், அது இல்லை எண்டுதானே அர்த்தம்?” என்று கேட்க, அவர் அப்படியொரு பக்கத்தை நினைத்தே பாத்திராதவராய் சொன்னார் “உண்மைதான் என?!”).

எழுத்தாளர்கள் ஏற்படுத்துகிற “மாயை’ போல “கனடா” ஏற்படுத்துகிற மாயைகளில் மையமானதொன்று, இது மிகவும் மனிதநேயமிக்க நாடென்பதாகும். ஏனெனில் இது அகதிகளை ‘அனுமதிக்கிறது’; இது ஒரு பல்கலாசார பூமி (multicultural land) [இந்த ஒரு ஹம்பக்-ஐ கேட்கிற போதெல்லாம் ‘மல்ரிகல்சரலிசமும் மயிரும்’ என்று ‘வாயில வருற’தைத் தவிர்க்க முடிவதில்லை!].
இன்றைக்கும், இங்கு வாழுகிற பூர்விகக் குடியினரது (Aboriginal People) வாழ்நிலையின் கொடூரத்தைப் பற்றியும், குடிவரவுத்துறை சார்ந்தும் – வெளித் தெரியாது – ‘உள்ளிருக்கும்’ சிக்கலான பிரச்சினைகளை அறிந்திராவிடில், இதுவே ‘உண்மை’யெனத் தோன்றும். ஒரு கலந்துரையாடலில், வேள்ளைப் பெண்ணான ஜெனி சொன்னாள் “கனடா தோழமையான, மனிதநேயமிக்க நாடு என்பது தொடர்ச்சியாய் சொல்லப்பட்டு வருகிற ஒரு தேசீய மாயை (National Myth)” என்று…
குறைந்த சனத்தொகையை உடைய நாடுகளில் ஒன்றான கனடா, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே குடிவரவாளர்களை வேண்டுகிறது; இங்கு தொழிற்சாலைகளில் உழைக்க “குறைந்த சம்பளத்துடன்” “குறைந்த சலுகைகளுடன்” ஆட்கள் தேவை.. அந்தத் தேவையையே இங்கு தப்பி வருகிற மக்கள் கூட்டம் பூர்த்தி செய்து வருகிறது; அவர்களே இந்த நாட்டிற்கு உதவுவதோடு, இவர்களது பாரபட்சமான நடத்துதலுக்கும் ஆளாகிறார்கள் (குடியுரிமை பெறாத வதிவாளர்கள் தொடர்பாய், கனடாவின் ‘பெருந்தன்மைகள்’ குறித்த, மாயைகளையும் உண்மைகளையும் இணையத்தில் “Questions and Answers About Non-Status Canadians” என்கிற பிரசுரமாய்ப் படிக்கலாம்). சமகாலம்: அடுத்த தலைமுறையான அவர்களது பிள்ளைகளையும் தொழிற்சாலைகளிற்காய் ‘தயார்படுத்தும்’ முயற்சியில் பாடத் திட்டத்தில் – உயர்பள்ளிகளிலேயே [high schools] ‘மக்கு மாணவர்களைத் தட்டி விடும்’ நோக்கில் – நிறைய மாற்றங்கள் உள்ளிடப்பட்டிருக்கின்றன.

கனடிய, பல்கலைக்கழகப் பட்டதாரிகளானாலும் சரி, பல்கலைக்கழக புத்திசீவிகளானாலும் சரி, அவர்கள் இங்குள்ள பாடத் திட்டத்திற்கு அந்நியமானவர்களாய் இருந்தாலும்; தொழிற்சாலைகளிலும் ஏனைய சமூக அடுக்குகளிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தொடர்பாய் ஏதேனும் தார்மீக அக்கறைகள் இவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறதா?? வாழ்நாளில் ஒருநாள்த் தானும் தொழிற்சாலையிலோ பிற -கீழ்நிலைகளில் நடத்தப்படுகிற -தொழிலகங்களிலோ (உணவகங்கள், இத்தியாதி) வேலை செய்திராத, புலம்பெயர்வாசிகள் ‘அகதி’யாயிருத்தலையும், அதன் வலிகளையும் பேசிக் கொண்டிருப்பதற்கும், வலி பகர நேரமற்றவன்/ள்களின் எழுதப்படாத துயர்களிற்கும் இடையே தான் எத்தனை வேறுபாடுகள்!

மனிதநேயத்திற்குப் பேர் போனதாகவும்,
அமெரிக்காவிற்குப் பக்கத்தில இருந்தாலும் ‘அமெரிக்கா(ஆ!) அளவிற்கு’ மோசமற்றதாயும் — நிறைய்யக் கனடிய இராணுவத்தினர் மத்திய கிழக்கில் சும்மா பகிடிக்கு “ஆதரவாய்” நின்றிருந்தாலும்; அமெரிக்கா முன்னெடுத்த மத்தியகிழக்குப் படையெடுப்பிற்கு ‘ஆதரவளிக்காததுமான’ — எங்களுக்கு வாழ்வை அளித்த நாடான கனடாவிலேதான்
100க்கு மேற்பட்ட (அல்லது அதற்குக் கிட்டவாய், பெருந் தொகை) வீடற்ற தமிழர்கள் (homeless Tamils) உள்ளார்கள். அவர்களது ‘இருத்தல்’ [existence] தொடர்பாய்ப் பட்டறிந்தவைகளும் செயற்பாட்டாளர்களுடன் எதிர்கொண்ட ‘போதாமைகளும்’ முன்னே நிற்கின்றன. அவ் உலகு எழுதப்படாது – இந்தியாவின் ஈழ அகதி முகாம்கள் முதற் கொண்டு – ‘உன்னத இலக்கிய, தத்துவ விசாரங்களுக்குள்’ கட்டுப்படாத கதைகள் உரையாடல்களற்றுத் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.
கொடும் போரிலிருந்து, எத்தகைய கற்பனைகளுடன், வாய்ப்புகளைத் தேடி மக்கள் வருகிறார்கள்? நம்பிக்கைகளுடன் புலம்பெயர்ந்த(!) நாட்டிலும் தெருவில் அவர்கள் வீடற்று அலைவார்கள் என்பது எவ்வ்வ்வளவு நினைத்துப் பார்க்கவியலாத துயரம்! நாங்கள் வசித்துக் கொண்டிருக்கும் இந் நிலத்தில், தெருவில் “இந்த அமைப்பால்” கைவிடப்பட்ட (தம் சொந்த நாட்டிலையே ‘வீடற்றவர்கள்’ ஆக்கப்பட்டுள்ள) பூர்விகர்கள் முதல் பாலியல் தொழிலாளிகளை ஒத்த ஏனைய விளிம்புகளாய், நாங்கள் அறியாமல், ‘எமது மனிதர்களது’ இருப்பும் அலைந்து கொண்டிருக்கிறது என்பதை காண நேருகையில், ‘மாற்றங்களை’ வேண்டுகிற எந்த மனிதராலும் -செயற்பாடுகள் இல்லாவிடினும், குறைந்தது எழுத்திலாவது – “கனடா”வின் புகழைப் பாடிக் கொண்டிருக்க முடியாது; மேலும், தாம் ‘படிக்க’ வேண்டிய புத்தகங்களின் தொகை கூடிக் கொண்டிருப்பதும் அவர்களது பெருங் கவலையாக இராது; சக மனிதர்களது வாழ்விற்கெதிரான “போதாமை”களை களைவது எப்படி என்பதான கேள்விகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பார்கள், சிறிதேனும் மாற்றங்களைத் தோற்றுவிக்க…
எமது எழுத்தாளர் பெருமக்களோ ‘பெரும்பான்மை’ பேசாத எதையும் பேச விரும்புவதில்லை; வெளிச்சம் புகாத இடங்களைத் தேடிப் போவதுமில்லை.
மாறாய்; எங்கேயோ ஒரு மனிதன் ஏற்கனவே சொல்லியதொன்று, தாங்கள் சொல்லுகிறபோதுதான் முதன்முதலின் சொல்லப்படுகிறது என்பது போலவும்;
எங்கேயோ ஒரு மனிசி ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை, தான் அறியாததால், ‘அப்படிச் செய்வதற்கான தேவை ஒன்று சமூகத்தில் உள்ளது’ எனவும்; விளிம்பிலுள்ளவர்களுடன் எவ்விதத் தொடர்புமற்று – ஆனால் அடம்பிடித்து ‘விளிம்புகள்’ குறித்தே ! – எழுதிக் குவிப்பார்கள் (இந் நேரத்தில், மேசையிற் தட்டிக் கேட்கலாம்: ஏன்? ஏன்?? ஏன்???)

காலச்சுவடு வெளியீடுகளில், கவிதைகளை/கவிஞர்களை ‘உற்பத்தி’ செய்வதுடாக “கவிதைகளை முன்னிறுத்திய சமூக செயற்பாடுகளிலிருந்து விலகிய ஒரு இளைஞர் குழுவை ‘உற்பத்தி’ செய்கிறது” என்பதான தொனியில் முன்பொருமுறை ரோசா வசந்த் எழுதியிருந்ததாக ஞாபகம். எந்த சமூக செயற்பாட்டுடனும் தம்மை இணைத்துக் கொள்ளாத, அத்தகைய செயற்பாடுகளில் கலந்துகொள்ளாத மிக இளையவர்களது கவிதைகளை, ஒரு பெரிய banner ஆன காலச்சுவடு வெளியிட்ட பிறகு; அக் கவிதையாளருக்கு அது தவிர வேறொரு இயக்கமும் வேண்டியிருப்பதில்லை (’கவிதைப் புத்தகங்களிற்குரிய’ சந்தை விருப்பை பயன்படுத்தி காசு சேர்ப்பது தவிர காலச்சுவடு போன்ற முதலாளிக்கும் வேறு நோக்கமிருப்பதில்லை). இந்தக் கொடுக்கல்-வாங்கல் முறை உறவு முடிவடைந்த பிறகு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், “மோசமான இந்த எமது சமூகத்தின் சாபக்கேடுகள் பற்றி” – தாங்கள் சமூக மாற்றத்திற்காக ‘செய்த’வற்றை மறந்து – இந்தக் கவிஞர்கள் ‘கவலைகள்’ தெரிவிக்கிறபோது; அவர்களது ‘மறதி’ படிக்கிற எமக்குப் பெரும் வியப்பாகி விடுகிறது ‘எப்பிடி இப்பிடி’ என்று!!

அத்தகையதொரு கட்டுரையை (மாசி 29, 2008) வைகறை பத்திரிகையில் பார்க்கக் கிடைத்தது. அதில் பெருந்துடியன் என்பவர் எழுதியவற்றை பார்த்துவிட்டுப் பேப்பர தூக்கி எறிந்து, எனது கலகத்தைக் நிலைநாட்டினால், “நீ வேற என்னதான் செய்வாய்” என அருகிலிருந்தவர்கள் சிரிப்பாய்ச் சிரித்தார்கள். வழமைபோல ஆண்களாலும், ‘அவங்கட’ அரசியல்களாலும் நிறைந்த ஊடகங்களிடம் எதிர்வினையாற்றுவதற்கான மனநிலை குறைந்து கொண்டே போகிறது; ‘என்னத்த எழுதி என்னத்த புடுங்கி’ என்ற மாதிரி… என்றாலும், பெருந்துடியனதை ஒத்த ‘பார்வை’யின் கோளாறுகளை அவ்வப்போதாவது எழுதியேனும் தீர்க்க வேண்டியிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட காலச்சுவடு கவிஞர்கள் குறித்த உதாரணம் போல, பெருந் துடியனும், ‘தமிழர் தகவல் சஞ்சிகை’யில் வந்த ‘இன அரசியலை’ முன்வைத்த ஒரு விளம்பரத்திற்கான எதிர்வினையாகவே தனது எழுத்தை முன்வைக்கிறார். அச் சஞ்சிகையில், தமிழர் புலம்பெயர் சூழலில் தமிழர் சனத்தொகை குறைந்து வருவதால், மூன்று குழந்தைகளைப் பெற்று, சனத்தொகையை பெருக்க வழி செய்கிற குடும்பங்களிற்கு தலா 5000 டொலர்கள் ஊக்குவிப்புப் பணம் தருவதாக தொடர்ந்தும் விளம்பரம் வெளிவருகிறது. அது, எழுத்தாளரை தூண்டிவிட்டதன் விளைவு “மூன்று குழந்தைகளுக்கு $5, 000 ஆகவே ஒன்றுக்கு…?” எனும் கட்டுரையாக வெடித்திருக்கிறது; பெ.து. எழுதுகிறார்:

…குறிப்பிட்ட காலப்பகுதியில் எந்தத் தமிழ் தம்பதியினராவது மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும். இரட்டைக் குழந்தைகளும் முட்டைக் குழந்தைகளும் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. இது விதி. போட்டி நடத்துபவர்கள் கலந்து கொள்ள முடியாது என்ற விதியை அவர்கள் சேர்த்துக் கொள்ளாமைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை (வயாகராவும் சியாலிசும் சிட்டுக்குருவி லேகியமும் இருக்கும்வரை எந்த வயதினருமே கலந்துகொள்ளலாம் என்பது போட்டி நடத்துபவர்களின் உட்கிடக்கையோ அல்லது உடன்படிக்கை/உடன்படுக்கையோ தெரியவில்லை).
பொறுப்புமிக்க தமிழ்க் கனவான்களும் தனவான்களும் தீர ஆலோசித்து எடுத்த முடிவு என்று இந்தக் குழந்தைப் பரிசுக்கு விளக்கம் தரப்படுகிறது. ஈழத் தமிழர்களின் சனத்தொகை நாளொரு மேனியும் பொருதொரு ஆவியுமாகக் குறைந்து வருகிறது என்பது உண்மைதான். போரும் புலப்பெயர்வும் நம்மவர்கள் நம்மவர்களையே ‘போட்டுத் தள்ளுவதும்’ மட்டுமின்றி இதற்கு வேறு காரணங்களும் உள்ளன.
ஒரு நாளைக்கு மூன்று வேளையென ஓயாமல்/ஒழியாமல்/ஒளியாமல் அலைந்து அலைந்து வேலை செய்கிற தமிழ்க் கணவன்மாருக்கு கட்டிலில் வேலை எடுக்கிற ஆர்வம் வெகுவாகவே குன்றிவிடுவதால், ஆயிரம் ஆயிரம் கோடி தமிழ் விந்தணுக்களும் அவமே சவமாகின்றன என center for addiction and mental health (CAMH) என்னும் டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளினி ஒருவர் தெரிவிக்கிறார்.
கனடா தமிழர்களுக்கு நீரழிவு, ரத்த அழுத்தம், இதயநோய், கொலஸ்ரோல் போன்ற வியாதிகள் மிகப் பெரும் அளவில் பீடித்திருப்பது இன்னுமொரு காரணம். இந்த நோய்கள் வாய்க்கப் பெறுபவர்களுக்கு இதயத்திற்கு மேலே மட்டும்தான் பிரச்சினை என்றில்லை. இடுப்புக்குக் கீழேயும் பெரிய பிரச்சினை உண்டு.
“ஆண்மை”, “வீரியம்” எல்லாம் சோம்பிப் போகிற ஒரு நிலை
தமிழர்களை வெகுவாகப் பீடித்து வருவதாக உளவியல், மனவியல் நிபுணர்கள் காதோடு காதாகக் கிசுகிசுக்கிறார்கள். …’

தான் மிகவும் கிண்டல் தொனிக்க எழுதுவதாக, தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டோ என்னவோ அப்பாலும் அவரது கற்பனை போகிறது ‘சீனாவில் உள்ள பண்டா வெள்ளைக் கரடிக்கு காமம் பிடிக்கவில்லை என போர்னோகிராபி போட்டுக் காட்டியதுபோல நமது வீரத் தமிழர்களுக்கும் விறைக்காத தமிழர்களுக்கும் உறைக்கக் கூடிய மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுத்துப் பார்க்கலாம்’ என்றும்
‘சிறந்த பொலிகாளைகளை இனப் பெருக்கத்துக்கென விலங்குப் பண்ணையாளர்கள் இறக்குமதி செய்வது போல நல்ல உருப்படியாக வேலை எடுக்கக் கூடிய திராவிடர்களையும் தமிழர்களையும் வேறு நாடுகளில் இருந்து இறக்கமதி செய்து கனடாவில் வாடகைக்கு விடலாம்’
என்றும் எழுதியவர்; ஈற்றில் பெண் உரிமை குறித்து சடின் பிரேக் அடித்து நிறுத்துகிறார்.

‘ஆனால் மிக முக்கியமான கேள்வி என்னவெனில் குழந்தைப் பேறு, தாய்மை தொடர்பான விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் தர்மமும் உரிமையும் பெண்களுக்க அல்லவா உள்ளது. அவர்களை யாராவது கேட்டார்களா? “கை, கால் முளைத்த கருவறையாகவே” பெண்களைப் பார்க்கிற ஒரு வக்கிரமான புத்தியின் விளைவல்லவா இந்த 5,000 டொலர் பரிசுத் திட்டம்?’

தமிழ்ப்படங்களில் நாயகனை 4 நடிகைகளுடன் ஆடவிட்டு, ‘கற்பழித்து’ (தமிழ் திரைப்படங்களில் இடம்பெறுவதை பாலியல் வன்வதை என்றால், அதைவிட அந்த வதையை நாங்கள் கேவலப்படுத்த முடியாது! ஆகவே அவர்களே கொடுத்த கற்புத்தானே, அழியட்டும்!), கொன்று, பழிவாங்கி, எல்லாம் முடிய, கடைசியில் எத்தகைய ‘தவறான’ பெண்களை அவன் ஏமாற்றினான் என ஒரு ‘நீதி’யுஞ் சொல்லி முடிப்பார்கள். அதையும் வென்று விடுகிறது, இந்த அங்கலாய்ப்பு!

தமிழர் தகவல் சஞ்சிகை எவ்வளவோ பறவாயில்லை; இனச் சனத்தொகையைக் கூட்டும் முயற்சியில் பிள்ளை பெறும் இயந்திரமா பெண் என்பதைத்தான் ‘நோக்காது’ விட்டிருந்தது. அதை நோக்கிக் கிண்டல் அடித்து எழுதப் போகிற பெருந்துடியனோ, அதற்காய், ஒவ்வோர் வீட்டிலும் அவர்கள் [பெண்கள்!] கணவர்களால் திருப்திப்படுத்தப் படுகிறார்களா (ஆகா.. என்ன ஒரு கரிசனை!) என்கிறளவுக்கு ‘யோசிக்கிறார்.’ ‘அவற்ற யோசனையின்ர வள்ளலில்’ இந்த ‘வார்த்தை விளையாட்டில்’; “ஓயாமல்/ஒழியாமல்/ஒளியாமல்-ஐத் தொடர்ந்து, ஓவன்னாவில் இன்னொரு வினைச் சொல்லையும் போட்டிருந்தால் வசனம் இன்னும் ‘மணியாய்’ இருந்திருக்குமே டியன், யோசிச்சிங்களா!” என்றுதான் கேட்கத் தோன்றும்! அதன் பின்னர், ஆறுதலாய், அவரொத்த விறைத்த மண்டைகளுக்கு உறைக்காத ஒரு கேள்விக்கு வரலாம். அதாவது; பெருந் து(/த?)டியர்களே, இந்த மூன்று வேளையும் அலைந்து அலைந்து வேலை செய்கிற கணவன்மார் என்பவர்கள் யார்?? அவர்கள் சர்வ நிச்சயமாக ‘நல்ல’ -தேவையானளவு ஊதியங் கொண்ட – வேலைகளில் உள்ள white collar வேலையாளர்கள் கிடையாது. [யாழ்ப்பாண, அல்லது கொழும்பு – ஆங்கில அறிவுடன் 1983 இனப்படுகொலைக்குப் பிறகும், முதலும் குடிபெயர்ந்த உயர்குடித் தமிழர்களே, கனடாவில், பொதுத்துறைகளில், இவ்வகை நிரந்திர வேலைகளில் உள்ளவர்கள்; அவர்களது சமூக பங்களிப்பு (என்று ஒன்று இருக்குமானால், அது) காலை 8 தொடக்கம் மாலை 4 வரையான வேலை முடிந்த, நேரங்கழித்து எப்பவாவது நடக்கிற ஒன்றே. தமிழர் சமூகத்தின், தேசீய / பிற எந்த ஊர்வலங்களும், நிகழ்ச்சிகளும் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் உழைக்கிற வர்க்கத்தைச் சேரந்தவர்களதும் பாடசாலை மாணவர்களதும் ஆட் பங்களிப்பிலேயே நடாத்தப்படுகிறது].
தொழிற்சாலைகளில், உணவகங்களில் ஏனைய ‘விளிம்பு’களில் -ஒரு வேலையில் தாக்குப்பிடிக்க முடியாதபடி – குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்பவர்களே பெருந்துடியன் சொல்கிறபடி மூன்று வேளை/லை ‘அலைபவர்களாய்’ இருக்கிறார்கள். முடிவற்ற பேராசையின் [Greed] நிமித்தமா அவர்கள் தம் உடலை வருத்தி வேலை செய்கிறார்கள்? வளரும் வாழ்வாதார நெருக்கடிகளிற்கு முகங்கொடுக்க பொருளாதாரத் தேவையினாலேயே அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பெருந்துடியன் ஒத்தவர்களது கரிசனைகள், மனிதரின்மேல் தொழிற்சாலைச் சூழல் ஏற்படுத்துகிற தாக்கங் குறித்து வெளிப்படுத்தப் படுவதில்லை. இன்றைக்கு கனடாவில் ஆண்-பெண் இருவருமே வேலைக்குப் போகிற சூழலில் ‘வெளியில் போகிற கணவன்’ X ‘வீட்டில் இருக்கிற மனைவி’ என்கிற தோற்றத்தை முன்வைக்கிற ஆதிக்க மனத்தினால், இரவு வேலைக்குப் போகிற மனைவிக்கு பகலில் வேலைக்குப் போகிற கணவனது பாலியல் தேவைகள் தொந்தரவாகக்கூட இருக்கக் கூடும் என்கிற ரீதியில் ‘யோசிக்க’ முடியாது. ஏனெனில்; கணவர்கள் வேலைக்கு போய் விடுவதும், தீர்க்கப்படாத காமத்துடன் மனைவிகள் வீட்டில் இருப்பதும், என்றென்றைக்குமே எழுதுகிறபோது சுவாரஸ்யம் ஊட்டக் கூடிய தோற்றம்!

பெண்ணினுடைய பாலியல் தொடர்பாய் பெண்ணைவிடவும் அக்கறை எழுதும் ஆண்களுக்கு இருக்கிறது [இதை மலினப்படுத்த எழுதவில்லை. ஆண்-பெண்-பிற பாலியல் உரையாடல்கள் தேவையானவையே; பாலியல் குறித்த ‘புரிதலை’ ஏற்படுத்த. ஆனால் பெருந்தடியனின் [மாதிரி] எழுத்துக்களிலுள்ள புரிதல் யாது? அது, சர்வசதாகாலமும் வேலைக்குப் போய், ‘பெண்ணைக் கவனியாது’ விட்ட “ஆண்மையற்று” “மலடாய்”ப் ஆகிவிட்ட ஆண்களை கிண்டலடித்து -பெண் குறித்த – தனது மேலான அக்கறையை நிலை’நாட்டு’கிறது. பெண்ணும் இரண்டு வேளை வேலைக்குப் போகிறவளாய் (பெருந்துடியனது நக்கலிற்கு உதவுமாப்போல) பாலியலில் ஈடுபாடின்றி இருந்தாலும், அவள் குறித்து அவர் இவ்வாறு எழுத மாட்டார்! ஏனெனில் பாலியல்ரீதியாகச் செயலாற்றுதல் (Sexual Act) என்பதும் அது குறித்த விருப்பு/வெறுப்பு என்பதும் பெண்ணுக்குரியதல்ல; அது ஆணுக்குரியது. செயலாற்றும்போது ஆணாகவும் செயலாற்றாதபோது ஆணற்றும், ஆண் என்பதன் பிரதான ‘பாகம்’ ‘இடுப்புக்குக் கீழே’ பிரச்சினையற்றிருப்பதிலேயே இருக்கிறது. பிரச்சினையற்றுச் செயலாற்ற வேண்டிய ஆண் செயல்இழந்து போதல் (=ஆண்மையிழப்பு =வீரியமிழப்பு =மலடாதல்) போன்றதான உவமைகளை – பெண் உடலை இயந்திரமாய்ப் பார்ப்பதற்கெதிராக எழுத வாறவர், எழுத நேர்வது முரண்நகை. உண்மையில் வீரியமிழக்காத ஆணின் ‘பெருமைகள்’ தானே அவனது வாரிசுகள் என்பன! இத்தனை ‘மரபான’ எண்ணங்களைச் சுமக்கிற மூளை, ‘தமிழர் சஞ்சிகை’யின் விளம்பரத்தின் ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்பது, மேலதிக நகைச்சுவை. சிரிப்பே வராத இந்த நகைச்சுவையால், பாலியல் ரீதியான புரிதலல்ல, அதை மலினப்படுத்துதலே நடக்கிறது]. ஆணினுடைய பாலியலிற்கான கருவியாக பெண் உடல் தெரிவதை விடவும் மோசமானதா, அவள் (அவனுடைய/+இனத்தின்) பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டும் தெரிவது?
ஆண்-பெண் உறவில் எப் புரிதலிற்கும் உதவாமல், எழுதிறதெல்லாம் எழுதீற்று, பிள்ளை பெறுதலில் பெண்களின் உரிமை பற்றியும் முடிவுரை வழங்கிவிடுவது வேடிக்கையன்றி வேறென்ன. பெருந்துடியனும் தளராமல் ‘தமிழர் தகவல் சஞ்சிகைக்காரர்களுக்கு’ பின்வருமாறு அறிவுரை கூறி கட்டுரையை முடிக்கிறார்: “தமிழர்களுக்கு ஒழுங்காக ஏதாவது செய்ய விரும்பினால், கொல்லப்படாமல் அல்லது தற்கொலை செய்யாமல் இன்னம் மிஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு ஆரோக்கியம், அறிவு, மனவளம், சிந்தனை வளத்தைத் தர முயலுங்கள். இந்த நாட்டில் வளரும் குழந்தைகளுக்கு ஒழுங்காகத் தமிழைப் படிப்பியுங்கள். நீங்களும் ஒழுங்காகத் தமிழைப் பேசுங்கள். அவ்வளவும் போதும்.”

தமிழர் தகவலிற்கு வழங்கப்படுகிற ஆலோசனைகளை பெருந்துடியனும் அவரொத்தவர்களும் தொடர்ந்தாலே போதும். வாழ்வின் அழுத்தம் தாங்காது தற்கொலை செய்பவர்களாயும், கொலையாளர்களாயும் மனைவிகள், குழந்தைகள் மீதும் வன்முறையை பிரயோகிப்பவர்களாயும் ஆணாதிக்கவாதிகளாயும் இருக்கிறவர்களது மனைவிகளுக்காய் ஆண்களை இறக்குமதி செய்யவேண்டும் என்று கூறி, அவர்களது மனவளத்தை, சிந்தனை வளமே அற்ற எழுத்தாளர்கள் ஏன் சூறையாட வேண்டும்?!

விளிம்புகளை: புத்தகங்களில்/திரைப்படங்களில் படித்து
எழுத வருகிற எழுத்தாளப் பெருந்தகைகள்/படிப்பாளிகள்/புத்திசீவிகள் அதை ‘வாழ்வது’ என்பதிலிருந்து தாங்கள் தொலைவில் இருப்பதை – வாழாத வாழ்வை எழுதுவதன் போதாமைகளை – அலட்சியப்படுத்துகிறார்கள். தொழில் ஆலைகள் மற்றும் ஏனைய பொதுத் துறைகளில் அழகியல் அற்ற, இயந்திரமயப்பட்ட பெரும் உற்பத்திக் கூடங்களில் விளிம்புகள் மீது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளை நேரடியாய் அறிந்திராத போதும், தங்களது எழுத்திற்குச் ‘சுவையூட்ட’ அவர்கள் குறித்த மாதிரி (stereotype) அபிப்பிராயங்களை எறிகிறார்கள். தொடர்-வேலைச் சங்கிலியுள் மாட்டுப்பட்டு, தொழிற்சாலைகளுள் அல்லது எங்கேனும் வந்த கடனுக்கும் வாழ்வின் தேவைகளுக்கும் மூன்று நான்கு வேலைகளில் ‘அடிக்க’ வேண்டியிருக்கிற இளைஞர்-யுவதிகளுக்கு; மனித ஸ்பரிசமோ அரிதிலும் அரிது; ஆகவே, எம் பெரும் எழுத்தாளர் பெருந்தகைகள் போல எத்தனையோ ஆவது தடவையாக தமக்கு நேர்ந்த ‘தமது உன்னதக் காதலின்’ (=தமது சுரண்டலின்) தோல்வியைப் புலம்பும் வழியிருப்பதில்லை; ஆதலால் ‘எழுதுபவர்களது சமூகப் பார்வையில்’ வக்கிரம் பிடித்தவர்களாயும், பேராசையில் ‘வாழத் தெரியாமல்’ கட்டிலில் ‘வேலை எடுக்காமல்’ ஓடுபவர்களாயும் தெரிகிறார்கள்.

பத்திரிகையின் அருமந்த பக்கங்களில், இத்தகைய ‘சமூக அக்கறை’களைக் கக்குவதற்கு, “எழுத்தாளன்கள்” என்பதவிர, ‘இவர்களிடம் இருக்கக் கூடிய ‘சிறப்புத் தகுதி’தான் என்ன?

‘எழுத்தாளக் குஞ்சுகள்’ தொடர், தொடரும்…
மேலும் வினாக்கள் வரும், வரும்….

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: