Home > ஈழம்/தொடர்புடையன > வாழ்வழிதலின் வலி

வாழ்வழிதலின் வலி

{ வசந்தகாலத்தின் ஒரு சிறிய ஒன்றுகூடலில் எங்களுடன் இருந்துகொண்டிருந்த எஸ்போஸ் இற்கு… }

^
நீ என்னவாக இருந்தாய்..?
சத்தியமாக எனக்குத் தெரியாது…
நீ யாராகப் பார்க்கப் பட்டாய்?
உண்மையாகத் தெரியாது
ஆனால்,
பிணங்கள் கிடக்கும் என் நகரத் தெருக்களில்
நான் உணர்ந்தேன்
ஒரு கழுகின் இரையாய்
வலியறிந்து காத்திருக்கும்
உன் வார்த்தைகளை, உன் ஆன்மாவை


உனது பிணச்சாம்பல் படிந்த
இந்த வார்த்தையை அழிக்க முடியுமானால்
நான் நம்புவேன்.. நீ கொல்லப்பட்டதை

[ஏப்ரல் 17.2007] எஸ்போஸ் கொல்லப்பட்டதாக ‘ஊர்ஜிதப்படுத்தப்பட்ட‘ தகவலென நண்பரொருவர் மடல் அனுப்பியிருந்த பிறகும், சில இணையத் தளங்களில் ‘உடனடிச்’செய்திகளில் தேடிவிட்டு, இந்த செய்தி பொய்த்துப் போகலாம் என்ற சிறு சந்தோசத்தை விட்டு விட மனசின்றியே வகுப்புக்குப் போனேன். வகுப்பிலிருந்து வந்து பார்க்கிற போது இத் தகவல் ஒரு “வதந்தி” என்றாக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு பெறுமதியானது?

மரணம் ஒரு நிச்சயமான துரதிர்ஸ்டம்போல தனது சாத்தியத்தை முன்னிறுத்திக்கொண்டிருக்கையில் அதனுடன் ஒவ்வொரு நாளையும் கடக்கிறவர்களது நிலத்திலிருந்து எத்தகைய சிறு மகிழ்ச்சியையும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான்; எனினும் மரண செய்திகளின்போது அதைத் தவிர்க்க முடிவதில்லை. வகுப்பிலிருந்து திரும்பியபோது உண்மைக்கும் அவர் செத்துப் போயிருந்தார். உறங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாகச் சொன்ன செய்தி நிம்மதி தருகிறதென நண்பி சொன்னாள், கனவிலிருந்து ‘ஒழும்பியிருக்க’ வேண்டாம் (ஆனால் அருகில் படுத்திருந்த அவரது 7/8/? வயது மகன் சத்தத்தில் விழித்துவிட்டதாக.. செய்திகள் விபரித்திருந்தன).

கொல்லப்பட்ட பிறகு பெறுமதியாய் எதுவுமே இருப்பதில்லை.

இலங்கையில் வெவ்வேறு நகரங்களிலிருந்து தமது தெருக்களில் சந்தைக்கோ, சிலவேளை யாரையோ தொலைபேசியில் கூப்பிடவோ எது எதற்கோ போனவர்கள் “சுடப்பட்டு” விழும் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. விழுபவர்கள் பட்டியல் கூடிக் கொண்டிருக்கையில் -தம்மைப் பற்றி- எதையும் விட்டுச் செல்லாத எத்தனை பேரைத்தான் தொடருவது? மேலும் அத்தகைய செய்திகளிற்கு ‘வெளியில்’ இருப்பவர்களிற்கு அவர்களுடைய அன்பினது வாசனைகள் தெரியாதபோது எப்படித்தான் அவர்களை உணருதல் முடியும்?

கடந்த காலங்களிலிருந்து இதை எழுதுகின்ற இன்றுவரை, -ஆசியாவிலேயே நீண்ட காலம் நடக்கின்ற உள்நாட்டு யுத்தத்தில்- இலக்கங்களாகவன்றி, வரலாற்றில் பதியப் ‘பெயர்’ அற்றவர்கள் சமூகம் சார்ந்த பிரக்ஞையை செயற்பாட்டை வழங்கிய மனிதர்கள் பலர் காணாமற் போயும் கொடும் வதைகளுக்குள்ளாகியும் கொலையாகிக் கொண்டுமே இருக்கிறார்கள்.

இதுவே யதார்த்தமானதில், எல்லா மரணங்களின் போதும் – தெருக்களில் நினைவுகொண்டபடி போக – எம்மிடம் சில சொற்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, எப்போதும் தயாராக. ஓர் தயார்நிலையில் வெறும் இச் சொற்களை வைத்திருப்பதான தோற்றம் என்னிடம் களைப்பைத் தருகிறது. எஸ்போஸின் மரணம் அந்தப் புலங்களில் தொடர்ந்து வாழ நேருகிற நண்பர்களுடைய பாதுகாப்பு சார்ந்த பயத்தினை, செத்துவிட்ட பிறகே கேட்க நேரும் இருத்தலின் குரலை, காலம்தாழ்த்தி அதை அறிவதன் சங்கடங்களை ஏற்படுத்தி, உயிர்ப் பாதுகாப்புடன் இருக்கும் நிலத்திலிருந்து கேள்வியுறுகையில் ஏதும் செய்ய இயலாத குற்றஉணர்ச்சியிடம் விட்டுச் செல்கிறது.

வவுனியாவில் மாத்திரம் -எஸ்போஸ் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய- இரண்டு கிழமைகளில் 24 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக வவுனியா நீதவான் தெரிவித்திருந்தார் (எண்ணிக்கை தொடர்கிறது). அதில் ஓர் இலக்கமென மாலை நேரத்தில் வேலிகள் மறைக்கும் குறுக்கொழுங்கைகளால் வந்துகொண்டிருந்த எனது அம்மாவின் சின்னம்மாவும் பலியாகியிருந்தார். உற்சாகமாக ஓடித் திரியும் எனது சிறுபிராயத்து அம்மம்மா, அவரது மகளின் மடியிலேயே செத்துப் போயிருந்தார். இறப்பின் பின்னும்: வவுனியா ஆஸ்பத்திரியின் பிணவறையில் இடமில்லாததால் வன்னியிலிருந்து “பாஸ்” கிடைக்கக் காத்திருந்த உறவுகளின் வருகைகளுக்காய் அம்மம்மாவின் அழகிய முகம் கறுத்து சோபை இழந்து நாட்களாகக் காத்திருந்தது, குழந்தைகள் இருந்த வீட்டில்; சித்திரைப் புது வருடத்தை அங்கிருந்தவர்கள் அழுவதற்கு உறவுகளுக்கான காத்திருப்புடன் எதிர்கொண்டார்கள்.

தமது பெற்றவர்களின், துணைகளின் மரணங்களின் அதிர்வை ‘இருப்பவர்களே’ எதிர்கொள்கிறார்கள். எஸ்போஸ் தனது வீட்டில் தனது குழந்தைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரது மனைவி இரண்டாவது தடவையாக தனது துணையை ஆயுதங்களிற்குப் பலிகொடுத்திருக்கிறார். அவரது இல்லாமையின் வெற்றிடம் அவரது துணையிடமும் குழந்தைகளிடமுமே விட்டுச் செல்லப் படுகிறது. எஞ்சியுள்ளவர்களது -மனநிலையை, எதிர்காலத்தை அச்சுறுத்தும்- வாழ்வின் கெடுபிடிகளையும் சிரமங்களையும் நாங்கள் எழுதிச் செல்லுகிற இந்தக் குறிப்புகள் சீக்கிரம் மறந்துவிடும். அவர்களே இந்த வாழ்வை தொடர்ந்தும் -பிரியமானவர்களது இருத்தலின்றி – வாழ்ந்தாக வேண்டியவர்கள்.

அம்மம்மாவின், மகள்களுடைய வீட்டில், துயர்பகிரக் கூடியிருந்தவர்கள், துயரத்தில் பங்கெடுக்கச் செல்ல முடியாத சட்ட/பொருளாதார/அச்சவுணர்வு/இதர காரணங்களுள் குழறிக் கொண்டிருந்தவர்களுள் இருந்தபோது, அம்மம்மா சுடப்பட்ட அதே சம்பவத்தில் இறந்துபோயிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இள வயதான இருவர் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்… அவர்கள் அங்கும் இங்கும் என தம் காலங்களை திருப்பிப் போட்டுக் கொண்டிருந்த அம்மம்மாவின் செத்த வீட்டில், துயர்நிறைந்த முகங்களினிடையே ஏதோ ஒரு பொழுதில் வவுனியாவில்தான் எஸ்போஸ் இருக்கிறார் என்பதும் நினைவில் வந்து போனது. தன்னுடைய வாழ்வில் தன் சூழ்நிலைகளின் காயங்களை கேள்விகளை சுமந்து தரிகிற “எழுதுகிற”வுமான ஒருவராய் அந்தப் பிரதேசங்களில் நடக்கிற எழுத்தாளராய் அவரது மனநிலைகள் தாக்கங்கள் எத்தகையதாய் இருக்கும், அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொள்வார், என்றரீதியா யோசனை போய்க் கொண்டிருந்தது. சில நாட்களில் அவர் ஒரு செய்தியாக வந்து சேருவார் என எதிர்பார்த்திருக்கவேயில்லை; தன்னுள்ளே ஒடுங்கிவிடுவாள் போல இறுகியிருந்த -எங்களை வளர்த்த அன்ரி – ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டாள், அம்மா இப்படிப் போவாள் என்று.. “அநாமதேயமான” நபர்களது மட்டுமல்ல, நேசிக்கிற யாதொருவருடைய மரணங்களிற்காகவும் நாங்கள் காத்திருப்பதை விரும்ப மாட்டோம்.

15 வருடங்ளாய் தாயைக் கண்டிராத, இன்னும் “பேப்பர் கிடைத்திராத” அன்ரியோ -ஒரு மூலையில் – இறுதியாய் பிணமாய் ஏனும் காணமுடியாத தனது அம்மாவின் நினைவில் இறுகிப் போயிருந்தாள். இந்த அநியாய சாவுகளுக்கு காரணமான துவக்குகளிற்குச் சொந்தமானவர்கள் ‘தமிழ் பேசும் சகோதரர்களும்‘ என்பதும் அந்த இறுக்கத்தையே வளர்த்தது.

2002 அமைதிப் பிரகடனத்திற்குப் பிறகு, ஆரம்பித்துவிட்ட இந்த யுத்தத்திற்கு இடையிலும் இப்போதும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கற்றுப் போய் விட்டது. இலங்கையில், சிறுபான்மையினரை, அந்த/இந்த இராணுவங்கள் கொன்றது போக எமது தமிழ்ச் சகோதரர்களும் தமது பங்கிற்குக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்; நடக்கின்ற எல்லாவற்றினின்றும் கொடிதாக சகோதரர்களே சகோதரர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். சகோதரப் படுகொலைகள் இன்ன பிற கொடும் களையெடுப்புகள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாமறிந்ததுதான் என்றாலும், மட்டக்களப்பு – வவுனியா – யாழ்ப்பாணம் – திருகோணமலை என்று இத்துவக்குகளின் குறி நீளும் இலக்குகள் அப்பாவி மக்களாக, -கொலையாளிகள் யாரென்பது தெரியாததால், “ஆயுதங்களுடன் இருக்கிற” சகல தரப்பிடமிருந்தும் – திட்டமிட்ட இனவழிப்பாக இது உருவெடுத்திருக்கிறது. குறி நீட்டப்படுபவர்களிற்குப் பாதுகாப்பு எங்கிருந்தும் இல்லை; ஒருபோது “தோழர்களாய்” இருந்தவர்கள், பிரிந்த பிறகு “மிருகங்கள்” ஆனார்கள் என சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டே இருத்தலே செய்யக்கூடிய விடயமாய்ப் போய்விட்டது. கருணா பிளவின்போது, இரு தரப்பு மோதலில், மட்டக்களப்பில் கணக்கின்றி (”கேப்பார் இன்றி”) ஒவ்வொரு நாளும் விழுந்த -அனேகமாய் 20, 22 அதிலும் குறைந்த வயதிலான பிள்ளைகளின் செய்தியை, ஆன்மா குதறப்பட்ட உடலங்களை, புதர்களுள் எறியப்பட்டு உயிரின் கனவழிந்து கிடந்தவர்களை செய்திகளாய்க் காணுகையில் எழுந்த செய்வதறியா இயலாமையையே மீளவும் மீளவும் உணர முடிகிறது. கடந்த 24+ ஆண்டுகளிற்குப் பிறகும் ஆயுதங்களுடன் இருக்கிறவர்களிடம் மனித உயிர் குறித்த ஒரு சொட்டு கரிசனையும் காணக் கிடைக்கவில்லை; இங்கே:
எப்புறமும் துப்பாக்கிகளுடன் வருகிற எசமானர்களின் முன் பீதியடைந்த தன/மது வாழ்வின் இருப்பைக் குறித்து ‘கடைசியாய்’ எஸ்போஸ் போன்ற யாரும் எழுதிய, எழுதாத எந்தப் பிரதிகள் எம்மை அச்சுறுத்தக் காத்திருக்கின்றனவோ தெரியாது. எதுவுமே செய்ய முடியாதபோது ஆயுதங்களுடன் இருக்கும் எஜமானர்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளுக்காகக் பிரார்த்திப்போம்.

)(
[ஏப்ரல் 19.2007] இத்தகைய மனநிலையுடன் கனடிய – இலங்கைப் பெண்கள் நடவடிக்கை நிலையம் (The Canadian Sri Lankan Women’s Action Network) எனும் ரொறன்ரோவை மையப்படுத்தி இயங்கும் ஒரு சிறு குழு Toronto Women’s Bookstore-இல் ஒழுங்குபடுத்தியிருந்த “Unheard Voices” – a night of Sri Lankan women’s spoken word theatre and music” எனும் நிகழ்வுக்குப் போயிருந்தேன். Toronto Women’s Bookstore: அதனது சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை பால் இனங்களது குரலை எடுத்துச் செல்லும், சிறுபான்மை பால்/இனங்கள் தொடர்பான விவாதங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற ஒன்றாக பெரிதும் அறியப்பட்டது; பல்வேறான சிறுபான்மை உரிமைகளை மதிக்கக் கோரும்/வேண்டும் சிறுகுழுக்களைச் சேர்ந்த ஏராளம் செயற்பாட்டாளர்களின் ஊடாட்டுத் தளமென்றும் சொல்லலாம். குளிர்காலத்தின் புலம்பல்களிற்கு ஒரு சிறிய இடைவேளையைத் தருகிற வசந்த காலத்தின் ஒரு வேலை-நாள் பின்மாலை; அச் சிறிய புத்தகக் கடை கொள்ளக் கூடியளவு பேர் அங்கு கூடியிருந்தார்கள்.

LAL-இன் Rosina Kazi, இலங்கையில் தமிழ்-பறங்கிய அடியை உடைய கவிஞை Leah Lakshmi Piepzna-Samarasinha மற்றும் மாணவியான சத்யா ஆகியோரது பாடல், கவிதைகள் வாசிப்பு, The Canadian Sri Lankan Women’s Action Network குறித்த சிறிய அறிமுகமும் பார்வையாளர் கேள்விகளைத் தொடர்ந்த உரையாடலும் என்பனவை நிகழ்வு உள்ளடக்கியிருந்தது.

ஒரு CSLWAN உறுப்பினர், இலங்கையின் இன்றைய நிலவரங்கள் -தமது நிலத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து அகதியாகிப்போன இலட்சக்கணக்கான மக்கள் – மரணம் குறித்த அச்சத்துடன் வாழ வேண்டியிருத்தல் – கடத்தப்படுதல், காணாமற் போதல்கள் கொலைகள் – குறித்துச் சொன்னவர், இரு தினங்களிற்கு முன் தனது பிள்ளையின் அருகினில் கொல்லப்பட்டிருக்கிற எஸ்போஸைக் கூறி, உயிருடனிருக்கிற அந்தப் பிள்ளையிட மனநிலையின் தாக்கத்தினைக் கூறி, ‘இந்தக் குரல்கள் வெளியில் கேட்பதில்லை’ என்பதை அழுத்திச் சொன்னார். அந்த அறைக்குள்ளிருந்திருக்கக் கூடிய எஸ்போஸ் போன்ற ‘தமிழ் நவீன எழுத்தாளரை’ படித்திருக்கக் கூடிய ஒருவளாய் நெகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்தபோது, பலவித எண்ணங்கள் வந்து போயின. எங்களிடம் எந்த நியாயத்தையும் எழுப்பவியலா ஒரு மரணத்தின் பிறகு, பதட்டத்துடன் ‘எடுத்துப் போடுகிற’ அவர்கள் குறித்த வரிகளும் எங்களுடன் சேர்ந்து படபடத்துக் கொண்டிருக்கின்றன. -சுவர் அடுக்குகளை புத்தகங்கள் நிறைந்திருந்த- அந்த சிறிய அறையினுள்:
எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை

என்கிற எஸ்போஸின் குரலும் வந்திருந்தது. பெரும் கூச்சலுள் எழும்பவே எழும்பாத சிறு குரல் போல..

ஆனால் லியாவின் கவிதையில் வந்தது போல, “இலங்கை” என்கிற தேசத்தின் இருத்தலையே அறிந்திராதவர்களுள் அதன் எந்த வலியும் ஒலிப்பதில்லை. புலம்பெயர்ந்த அதன் மக்கள் இரு தசாப்தங்களுக்கு மேலாக இங்கு வாழ்ந்துகொண்டிருந்தாலும் ‘அந்நியர்கள் போலவே’ ஒவ்வொருமுறையும் செய்திகளில் வருவார்கள். வெளிநாட்டு அரசாங்கங்களின் “போலித்தனத்தை” எள்ளல் செய்த றோஸீனாவின் பாடல் குறிப்பிட்டது போல அகதிகளை வரவேற்றலும் அவர்களுக்கென எதையுமே ஏற்படுத்தாத அவர்களது ஆஜன்டாவாலும் பாதிக்கப்படுவது அகதிகளின் பாடுகளே. தமது நிலத்தின் குரலை எடுத்துச் செல்லும் வழிகளை அறியாதவர்களாய் அவற்றைத் தமக்குள் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். லியாவின் “சுனாமி பாடல்” கவிதை சொல்வதுபோல: 1956, ‘83 எல்லாவற்றினனதும் காயங்களை தாங்கிவந்த மக்கள் 2004 கிறிஸ்மஸ் தினத்திற்குப் பிறகான சுனாமி அழிவின்போதே உலகின் ‘வெளிச்சத்திற்குள்’ வந்தார்கள். இவ் விதிகளிற்கமையவே நகரும் கனடிய ஊடகங்களிலும்: “இலங்கை” அதன் பிரச்சினைகளின் “இருத்தல்” (existence) குறித்த -உலுக்கப்பட வேண்டியதான – தொடர் மெளனம் என சில இலங்கையர் மற்றும் கறுப்பு, சீன வெள்ளை மாணவர்கள் என ‘அறிய விரும்புகிற’ இளம் குழாமினுள் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது இத்தகைய உரையாடல்கள் ஏற்படுத்திற வெளிகளையும், ஒவ்வொரு இனங்களுக்குள்ளாகவும் (எங்களுக்குள்ளாகவும்) இருக்கிற அறியாமையின் வன்முறைகளை அழிக்கின்ற இத்தகைய முயற்சிகள், மேலும் வளர்த்து, பிற தளங்களிற்கு எடுத்துச் செல்லப் பட வேண்டியவை என்பதையும் உணர முடிந்தது.

பார்வையாளர்கள் கேள்வி நேரத்தில், நற்றாஸா என்கிற தமிழ் மாணவி, த. விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட பிறகான, பலதரப்பட்ட தமிழர்கள் மீதான “பயங்கரப்படுத்தலை” அடுத்து, உரையாடல்களிற்குத் தடையாய் -தான் கற்கிற- பல்கலைக்கழகத்தில் அரசியல்ரதீயாய் செயற்படுதீவிரம் உடைய தமிழ் இளைஞர்கள் கூட ‘அரசியலில்’ இருந்து விலகி இருப்பதையே விரும்புவதையும் இத்தகைய ‘தனிமைப்படுத்தல்களை’ எப்படி எதிர்கொள்ளலாம் என்று தெரியவில்லை என்றவர், CSLWAN இன் பின்னணி பற்றி கேட்டார். இதற்குப் பதிலளித்தபோது ‘இரண்டில்’ ஏதாவது ‘ஒரு பக்கத்தை’ பிரதிநித்துவப்படுத்தவேண்டிய எமது அரசியற் சூழலுள் சாதாரண மனுதர்களுடைய குரல்களையே தாம் முன்னிறுத்துவதாகக் கூறி, இவற்றை எல்லாம் உரையாடுகிற தளங்களை ஏற்படுத்தி நாங்கள் இவைக்கெதிராக செயற்பட வேண்டியிருத்தலின் தொடர் தேவையைக் குறிப்பிட்டார்கள்.

இந்த உலகத்தின் மாபெரும் காயங்கள், கோபங்கள் எல்லாமும் சகலவகையான ஒடுக்கமுறைகளாலும், இங்கே எந்த அடையாளமுமற்று, வாழப் பெறுமதியற்ற சிறு பூச்சிகளைப் போல நசுக்கப்படுவதிலும் உருப்பெறுகின்றன. அப்படியாகி வந்த நாங்கள் வந்த நிலங்களில் அதன் சகலவிதமான கேவல்களும் ஒலிப்பதற்கான வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அதன் தேவையை அடையாளங் காண முடிகிறது. எங்கும் ஒலிக்க முடியாமல், தனக்குள்ளாக ஒலிக்க வேண்டியிருத்தலின் வலி என்பது, இங்குள்ள தொழிற்சாலைகளில் ஒன்றில் மிகவும் நலிந்தவராய் கடினமான வேலைசெய்தபடி இருக்கிற -இன்னும் ‘இங்கு’ எடுக்கப் படாமல், களத்தில் ‘இழக்க’ப் பிள்ளைகள் இருக்கிற- அந்த முதிய தகப்பனின் வலி (’அவரை’ முன்வைத்து பிறிதொரு உரையாடலைத் தொடரலாம்). அவரையொத்த தகப்பன்களது வலியையும் விட்டோடி வந்த அவர்களது நிலத்தின் பிள்ளைகளின் பொருட்டும் இந்த ஊடகங்களின் தொடர் மெளனத்துள் -சிறிதாய் ஏனும் – அதை உடைக்கின்ற வேலையை உரையாடல்களை அமைத்துத் தரும் இது போன்ற செயற்பாடுகள் செய்கின்றன.
கனடிய அரசாங்கம் ஒருபுறமும், எமது, சரி அல்லது பிழை சார்புகளது “அரசியல் ஆண்கள்” மறுபுறமும் அறைந்து சாத்திய கதவுகளது கடுமையை மீறி, நசுக்கப்படுகிற அன்றாட மனுசர்களது குரலை வலியை உணர்ந்துகொள்ளவும் -அதை அப்படியே தனிமையில் பிறழ்வுற விடாது – அதைக் கேட்க மறுக்கிறவர்களிடம் எடுத்துச் செல்லுதலுமே இன்று வேண்டி இருக்கிறது. ஊடகங்களை -ஆர்வமுடைய – பல்வகைப்பட்ட சமூகர்களை, இத்தகைய உரையாடல்கள் தூண்டும் அறிவூட்டல் சென்றடையும். பார்வையாளர்களுடன் உரையாடலினிடையில், பிறிதொரு அங்கத்தவர் கூறியதில் “எங்களை இங்கு குழுவாய்க் கொண்டு வந்த அடிப்படைக் காரணமே காதல் தான்;” “no revolution is possible without love” “(மனுசருக்கான) நேசம் இன்றி எந்தப் புரட்சியும் சாத்தியமில்லை” என்கிற வசனம் எழுதுகிறபோது just இன்னொரு அழகான ‘டயலாக்’ போல தொனித்தாலும், அது சொல்லப்பட்டவிதத்தில் – நெகிழ்வூட்டுவதாயிருந்தது. வரலாற்றின் மறவர்குல ஆண்களது அரசியல் கதையாடல்களுள் “பெண்களுக்கென்றொரு இடம்” இருக்குமாயிருந்தால் இத்தகைய வசனங்கள் நிறைந்து, அவர்களுக்கெதிரானதாய் ஒலிக்கட்டும். பேரினவாதத்தின் கொடிய கைகளோடு, எங்களது இரத்தங்களிலும் கலந்துள்ள வன்மத்தையும் கொலைவெறியையும் புரிந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். மேலும் எந்தப் புரிதலையும் உரையாடல்களுக்கான ‘தடைகள்’ ஒருபோதும் ஏற்படுத்தப் போவதில்லை…

sutha-PAGE1-l1.jpg
^^
கொலையுண்டு போவதன் வலியை
ஒருகணம் உனக்குள் நிகழ்த்திப் பார்

வன்மம் பீறிடும் நெடிய கைகளுக்குள் நசுங்கி
ஓலமின்றி ஒடுங்கிக் கொள்கிற மரணத்தை
ஒருமொழி பேச விடு

அது கேட்கக்கூடும் உன்னிடம்:
‘உனது சகோதரனின் குருதியையும்
பருகி ருசிக்க எந்த நாளில் பழகிக் கொண்டாய்”
என்று.

இறுதியாய் ஒன்று சொல்கிறேன்

ஒருவன், ஒருத்தி அல்லது ஒன்று செத்துப் போவதைப் பற்றி
எனக்குக் கவலையில்லை –
அவன்/அவள்/அது எவராலும் கொல்லப்படாத வரை.

^^தவ. சஜிதரன், கவிதை: “வாழ்வழிதலின் வலி” (நன்றி: ஒளியின் மழலைகள், கவிதைத் தொகுப்பு (இலங்கை, யனவரி 2006))
^இத்தகைய சூழலில் வாழுகிற முரண்வெளியினரால் இடப்பட்டிருந்த ( 19/04/2007) கவிதையிலிருந்து..

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 1:26 am

  9 Responses to “வாழ்வழிதலின் வலி”

  1. Kana Praba Says:
  April 25th, 2007 at 9:07 pm

  எதுவுமே சொல்லமுடியவில்லை
  2. Kannan Says:
  April 25th, 2007 at 10:18 pm

  //இதுவே யதார்த்தமானதில், எல்லா மரணங்களின் போதும் – தெருக்களில் நினைவுகொண்டபடி போக – எம்மிடம் சில சொற்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, எப்போதும் தயாராக. ஓர் தயார்நிலையில் வெறும் இச் சொற்களை வைத்திருப்பதான தோற்றம் என்னிடம் களைப்பைத் தருகிறது.//

  உள்ளது!

  இப் பதிவிற்கான பின்னூட்டத்திற்கும் இதுவே பொருந்துகிறது 😦
  3. பொடிச்சி Says:
  April 25th, 2007 at 11:52 pm

  எஸ்போஸ் குடும்பத்தினர்க்கு உதவி…

  எஸ்போஸ் கொல்லப்பட்டார். அது ஒரு தகவல் மட்டுமாகவே போயிற்று!
  நாமும் சக வலைப்பதிவர்கள் சிலரும் அஞ்சலிகளை எழுதி அப்பால் சென்று விட்டோம்.
  இலங்கையின் பத்திரிகைகள், வானொலிகள் குறித்து எழுதத் தேவையில்லை.
  இனியென்ன?
  செல்வி, கோவிந்தன்.. என்று பெயர்ப்பட்டியலில் எஸ்போஸை சேர்த்து எதிர்ப்பு இலக்கியம் எழுதுவதா?
  தொகுப்பு வெளியிடுவதா?

  சற்று சிந்திப்போம்.
  நாம் எழுதுகிற அஞ்சலிக் குறிப்புகள், கவிதைகள், கண்டனங்கள் வெளியிடப் போகும் தொகுப்பு, எதிர்ப்பு இலக்கியம் எல்லாவற்றுக்கும் அப்பால், அப்பால் அந்த இளம் விதவையும் சிறு குழந்தைகளும் இருந்தபடியேதானே?
  எல்லாவற்றுக்கும் அப்பால் அந்த குடும்பத்தின் சிதைவு தடுக்கப்பட முடியாதது அல்லவா?
  அவர்களது எதிர்காலம்?
  அந்தப் பிள்ளைகள் இனி அவர்களது புழங்கு வெளிகளில் எதிர்கொள்ளப் போகிற சொற்கள்/பார்வைகள்?
  ‘ஏழு வயதுச் சிறுவனை சாட்சியாக இருக்கவிட்டு’ இந்த வரிகளுடன் முடிகிறது டிஜேயின் பதிவு. நாமோ அதைப் பற்றி பேசவேயில்லை. பொடிச்சி ஒரு கவிதையை பதிவிட்டு விட்டு அப்பால் செல்கிறார். அவ்வளவு தானா? எல்லாமே இத்தோடு முடிந்து போயிற்றா?
  அந்த சிறுவன் முன் அப்பாவை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். எப்படியிருந்திருக்கக் கூடும் அந்த அனுபவம்? அந்த இரவில் அந்த சிறுவன் அனுபவித்திருக்கக் கூடியவற்றை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?
  கொலையாளிகள் அச்சிறுவனை உறங்கும்படி கூறிச் சென்றார்கள். ஆனால், எமது அரச இயந்திரம் அச்சிறுவனை உறங்க விடாது. அவன் வாயிலிருந்து அந்த கொடூரமான இராத்திரியை பல தடவைகள் தவணை முறையில் மீட்டுப் பார்ப்பார்கள். நீதிபதி சலிப்புடன் இக்கொலை பற்றி சொன்ன வாக்கியங்களை தமிழ்நெற்றில் கண்டீர்கள் தானே?
  எஸ்போஸின் மனைவி இரண்டாவது தடவையும் விதவையாக்கப்பட்டிருக்கிறார். முன்னரும் அவர் தன் கணவனை வன்முறைக்கு பலிகொடுத்தவர்.
  எஸ்போஸ் உயிரோடு இருந்த காலத்தில் பணத்துக்கு அல்லாடிக் கொண்டிருந்தவர் என்கிறார்கள் அவரோடு நட்பாக இருந்த நண்பர்கள்.
  எஸ்போஸை அறிந்தவர்களால் கூட அங்கு சென்று ஆறுதல் சொல்ல முடியாத நிலை. தொலைபேசக் கூட பயப்படுகிறார்கள்.
  ஏதாவது செய்தாக வேண்டும் என்பது புரிகிறது.
  எமக்கோ எஸ்போஸுடன் எவ்வித தொடர்புகளும் இருந்தது இல்லை. நாமென்ன செய்ய?

  கொழும்பில் அல்லது இலங்கையின் பிற இடங்களில் இருப்பவர்களுக்கு எஸ்போஸ் குடும்பத்துக்காக பணம் திரட்டுவதில் சிக்கல்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
  தொலைபேசினாலோ, நேரில் சென்று கதைத்தாலோ வீண்சந்தேகங்கள் கிளம்பிவிடக்கூடும். அது நாளைக்கே உங்கள் உயிரைக் குடிக்கும் அளவுக்கு வளரவும் செய்யும்.

  எனவே தான், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் வதிகிறவர்களை நாம் வேண்டி நிற்கிறோம்.
  உங்களால் இயலுமானதை செய்யப் பாருங்கள்.

  எவ்வாறு தொடர்பு கொள்வது:
  எமக்குத் தெரியாது. எஸ்போஸின் தொடர்பு இலக்கங்களோ அல்லது முகவரியோ எம்மிடம் இல்லை. கொழும்பில் / வன்னியில் இருக்கும் இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் தொடர்புறுங்கள்…

  [இதை எழுதுகையில் ‘கவிஞர் எஸ்போஸ்’ தவிர்ந்து யாராகிலும் வேறொருவருக்கு இதை செய்கிறோமா? செய்ய முடிகிறதா? சாத்தியமா? அப்படியெனில் இது எவ்விதத்தில் நியாயம்? கவிஞர்கள்/புத்தி ஜீவிகளுக்கு முன்னுரிமையா? விளிம்புகள் எப்பவுமே அப்படியே தானா? என்ற கேள்விகள் தொந்தரவு செய்கின்றன. விடை தெரியவில்லை.]

  -முரண்வெளி-
  http://muranveli.net/?p=54
  4. பொடிச்சி Says:
  April 29th, 2007 at 7:35 pm

  சுயாதீன ஊடகவியலாளர் சுதாகரின் படுகொலை
  [29 – April – 2007]
  – வன்னியூரான் –

  கடந்த 16.04.2007 அன்று இரவு எட்டு மணியளவில் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வைத்து கோரமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சுயாதீன ஊடகவியலாளரும் கவிஞருமான சந்திரபோஸ் சுதாகரின் இழப்பு பேரிழப்பாகும்.

  எஸ். போஸ் என்ற புனை பெயரில் `சரிநிகரில்’ பல கவிதைகளை எழுதி வந்துள்ள இவர் நிலம் என்ற காலாண்டிதழ் ஒன்றினை நெருக்கடியான காலகட்டத்தில் கிளிநொச்சியிலிருந்தும் பின்னர் வவுனியாவிலிருந்தும் வெளியிட்டுள்ளார். நிலம் காலாண்டிதழ் தொடராக வெளிவரவில்லையென்றாலும் அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டவர் என்பது முக்கியமானதாகும்.

  செந்தணல் என்ற வாரப்பத்திரிகை வவுனியாவிலிருந்து வெளிவந்த போது தற்போது இந்த பத்திரிகை வெளிவருவதில்லை. அதன் ஆசிரியர் குழுவிலும் பணிபுரிந்த இவர் கொழும்பு இதழியல் கல்லூரியில் பத்திரிகைத் துறை டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பின்னர் சிறிது காலம் வீரகேசரியிலும் பணியாற்றியிருந்தார். அத்துடன், தமிழ் உலகம் (லண்டனில் இருந்து வெளியிடப்படுவது) எனும் இதழின் உதவி ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

  எழுத்தின் மூலம் புதிய விடயங்களை வெளிக் கொண்டுவர வேண்டுமென்ற அவாவுடையவராக துடிப்புடன் செயற்பட்டு வந்தவரை என்ன காரணத்திற்காக படுகொலை செய்தனரோ தெரியவில்லை.

  சமூக அக்கறையுடன் பல விடயங்களை உள்ளடக்கி பத்திரிகையொன்றை வெளியிட வேண்டும் என்ற பேரவாவில் சுதாகர் ஈடுபட்டிருந்ததை அவரின் நண்பர்கள் பலரும் கூறினார்கள். உயிர் நிழல் என்ற வாரப்பத்திரிகை ஒன்றை வெளியிடுவதற்காக அயராத முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

  அவரின் எண்ணம் எழுத்தோடு மட்டுமே பயணித்ததல்ல. படிப்பவர்களின் கரங்களில் நல்ல நூல்களைச் சேர்ப்பதிலும் தொடராக செயற்பட்டு வந்தவர். இவரை நூல்களுடன் தான் காணலாம்.

  நூல்களை விநியோகிக்கும் போது அதனால் பணப் பிரச்சினை கூட வந்துள்ளதை வேதனையுடன் பலரிடம் கூறியிருக்கின்றார். நூல்களை விநியோகம் செய்யும் தனிநபர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

  இவரின் உயிர் பறிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரும் மூன்றாவது மனிதன் சரிநிகர் போன்ற இதழ்களுடன் தான் நண்பர்களை சந்தித்துள்ளார். எழுத்தோடு மட்டுமல்லாமல் நல்ல விடயங்களை சுமந்து வரும் நூல்களையும் இதழ்களையும் , பத்திரிகைகளையும் விநியோகிக்க வேண்டு . படிக்கவைப்பதும் கடமை என்ற உணர்வு எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

  சுதாகர் சிறந்த பக்க வடிவமைப்பாளர். பல நூல்களின் பக்க வடிவமைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

  பல்கலைக்கழகம் கல்வியியல் கல்லூரிகளால் வெளியிடப்பட்ட இதழ்களின் பக்க வடிவமைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளதை நினைவூட்டத்தக்கது.

  தனது கருத்தை வெளிப்படுத்துவதிலும் இலக்கிய விமர்சனங்களை முன் வைப்பதிலும் கருத்துகளை செவிமடுப்பதிலும் விமர்சனங்களை ஏற்பதிலும் வித்தியாசமான போக்குடையவர். ஆனால், இலக்கிய வியாபாரியல்ல என்பதற்கு குடும்பத்தவரை நோக்கினால் எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

  இன்று யார் கவலைப்படுகின்றனரோ இல்லையோ குடும்பத்தினர் துயரப்பட்டு கண்ணீருடன் இருப்பர். இவர் படுகோரமாக தாக்கப்படும் போது இவரின் எட்டு வயது மகனும் வீட்டில் தான் இருந்துள்ளார். கொழும்பு செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் மனைவியை விட்டுவிட்டு வீட்டில் தந்தையும் மகனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது இரு முச்சக்கர வண்டியில் வந்த ஆறு பேர் இவரை பிக்கான் போன்ற கிணறு வெட்டும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். அயலில் உள்ளவர்களின் தகவலின் படி இவரும் கொலைகாரர்களை எதிர்த்துள்ளார். கன ரக துப்பாக்கிகளுடன் பலர் வந்து வீரம் காட்டும் போது எழுதுகோலை மட்டுமே ஆயுதமாகக் கொண்ட ஒருவர் என்ன தான் செய்ய முடியும்?

  இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். எட்டு வயது பிள்ளை இதற்கிடையில் கத்திக் கதறி அலைந்து திரிந்துள்ளான். அவலப்பட்டுள்ளான். அயலில் பயப்பீதி காரணமாக எவரும் வெளிவரவில்லை. யாரோ ஒருவரின் உதவியால் உறவினர்களுக்கும் கொழும்பு புறப்படவிருந்த மனைவிக்கும் தகவல் கொடுக்க முடிந்துள்ளது.

  எது எப்படியான போதும் சுதாகரின் இழப்பின் துயரில் அவரின் குடும்பத்தவரும் நண்பர்களும் கடும் துயரில் மூழ்கிப்போயுள்ளனர். இது போன்ற கொலைகள் அனைத்தையும் நிறுத்தாமல் இலங்கை தீவிற்குள் எவரும் நிம்மதியாக இருக்க முடியாது.
  http://www.thinakkural.com/news/2007/4/29/articles_page26290.htm
  5. பொடிச்சி Says:
  April 30th, 2007 at 12:34 am

  டிசே தமிழன்:
  துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்
  http://djthamilan.blogspot.com/2007/04/blog-post.html
  6. பொடிச்சி Says:
  April 30th, 2007 at 12:35 am

  http://mattavarkal.blogspot.com/2007/04/blog-post_26.html
  சுயம்
  1

  என்னைப் பேச விடுங்கள்
  உங்களின் கூக்குரல்களால்
  எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.
  எனது குரல் உங்களின் பாதச் சுவடுகளின் ஒலியில்
  அமுங்கிச் சிதைகிறது.
  வேண்டாம்,
  நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
  எப்போதும்.
  வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
  சிதறி உடைகின்றன,
  நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்.
  மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
  நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
  உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
  சில கணங்களோடும்
  யாருக்காவது அநுமதியளியுங்கள்,
  அவர்களின் தொண்டைக் குழியிலிருந்து அல்லது
  மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
  அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்

  2

  எனது உடைந்த குரலில்
  நானும் பாட விரும்புகிறேன்
  அன்பு நிறைந்த துயரப் பாடல்களை

  எஸ்.போஸ்
  7. பொடிச்சி Says:
  April 30th, 2007 at 12:49 am

  http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=597&Itemid=60
  கவிஞர் சந்திரபோசுக்கு அஞ்சலி
  எழுதியவர்: தளநெறியாளர்
  Friday, 27 April 2007

  கடந்த 16ம் திகதி இரவு (16-04-2007) எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.
  ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.
  வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.
  நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
  லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட ‘தமிழ் உலகம்’ என்ற இதழிற்கு ஆசிரியராக இருந்து கொழும்பில் வைத்து தயாரித்து வழங்கினார்.
  சந்திரபோஸ் சுதாகர் என்ற தன்னுடைய பெயரிலேயே ஆரம்பத்தில் எழுதிவந்தவர் பின்னாளில், எஸ்போஸ், போஸ்நிஹாலே என்ற பெயர்களிலும் எழுதினார்.
  இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரபோஸ் சுதாகர் பளையில் 1975 இல் பிறந்தார். பிறகு வன்னியில் அக்கராயன்குளத்தில் படித்தார். தந்தை பளை முகமாலையைச் சேர்ந்தவர். தாய் நெடுந்தீவில் பிறந்தவர். தாய் அக்கராயன் பொது மருத்துவ மனையில் தாதியாகப் பணியாற்றியபடியால் அங்கேயே குடும்பத்தினர் குடியேறியிருந்தனர். -கருணாகரன்

  அவரது இரண்டு கவிதைகள்:

  01.

  விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு

  நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
  உனது தோள்களில்
  தோட்டாக் கோர்வைகளும் பதவிப் பட்டிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன
  கண்மூடித்தனமாய்
  உன்னை நான் எப்படி வர்ணிப்பது
  என்னிலிருந்து அஞ்சித் தெறிக்கின்றன சொற்கள்
  மழிக்கப்பட்ட உனது முகத்தில்
  ஈ கூட உட்கார அஞ்சுகிறது
  உனது வரவைக் குறித்து
  யாரும் மதுக்கிண்ணங்களை உயர்த்தவில்லையாயினும்
  துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
  நீயே உனது வெற்றியைச் சொல்லியபடி

  இருண்ட காலத்தின் இதே குரலில் பாடிய
  துரதிர்ஷ்டம் மிக்க பாடல்களனைத்தையும்
  மணல் மூடிற்று… நேற்றிரவு அதன் கோரைப் புற்களின் மிகச் சிறிய
  முளைகளை நான் கண்டேன்
  நெஞ்சில் மிதித்தபடியாய் பீரங்கி வண்டிகள் நகர்கின்றன
  கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட்ட
  பழைய நகரங்களையும் நோக்கி
  எனது விரல்கள், எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்
  உனது விழியில் நடுங்குகின்றன
  நீயோ சொற்களாலும் துப்பாக்கியாலும்
  எனது மனிதர்களின் நெஞ்சுக் கூட்டில் ஓங்கி அடிக்கிறாய்
  என்னிடமோ
  உனது நெஞ்சு வெடித்துச் சிதறும்படியாய்
  அடித்துச் சாய்ப்பதற்கு எதுவுமேயில்லை
  எனினும்
  துடிக்கும் எனது கைகளால் ஓங்கியொரு அறை விடவே விரும்புறேன்
  உனது கன்னத்தில்
  விலங்கிடப்பட்ட எனது கணத்தில், நீ துப்பாக்கி இழுத்துக் கொண்டு
  நடந்து வருகிறாய்

  யாரோ சொன்னார்கள்
  அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி
  பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்
  சீருடையைக் கிழித்து வீசு
  ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக
  உழைக்கவும்
  தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்
  உன்னைப் போலவே மாற்று அவனை
  அல்லது நானுனக்குச் சொல்கிறேன்
  அவனது துப்பாக்கி உன்னை நோக்கியிருக்காத தருணத்தில்
  அந்தச் சனியனை
  கணத்தில், அவன் எதிர்பார்க்காத கணத்தில்
  அவனை நோக்கித் திருப்பு
  உனக்கு முன்னரே அவனது குடலிற் புதையும் அவனது உயிர்
  நீ அஞ்சாதே
  உன்னை அவர்கள் கொல்வார்கள்
  நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
  அப்பரிசு
  நிச்சயமற்ற உனது காலத்தில்
  எப்போதாவது உனக்குக் கிடைக்கத்தான் போகிறது
  வசத்தால், நீ தந்தையென்பதை அவர்கள் மறுத்ததைப்போலவே
  நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய் என்பதையும், அவள் உனக்காகவே
  வாழ்கிறாள் என்பதையும்
  அவர்கள் மறுத்ததைப் போலவே
  உனது தாயின் கண்ணீரை, அவர்கள் துப்பாக்கியின் நெருப்பில்
  காய்ச்சியதைப் போலவே
  நீயும் அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு, சாகும் தருணத்தில்
  நான் நினைக்கிறேன்
  இந்த யுகத்தின், சிறையில் இருப்பதும்
  செத்துப் போவதும் ஒன்றுதான்
  உழுத வயல்களே
  முளைக்கப் போடப்படாத தானியங்களே
  வாழ்வளித்த பன்னெடுங் காலத்தின் நிழலே
  சொல்
  துப்பாக்கியின் செதுக்கப்பட்ட சிற்பங்களை
  உன்னில் நட்டு வைத்தது யார்?
  நட்டு வைத்தது யார்?
  ஆவர்களை நோக்கி
  விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே
  மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில்
  யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க
  எங்களின் குதிரைகளைக் கொன்று
  அவர்களின் தேவதைகளைக் கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்

  அவர்களோ சிலுவைகளையும் முள் முடிகளையும் எறிந்தார்கள்
  நாங்கள் எழுதிய கவிதைகளில் தீப்பந்தங்களைச் செருகினார்கள்
  எமது விழிகள் வரைந்த ஓவியங்களோ
  இரவின் காட்சிகளாய் ஒளிமங்கிப் போயின
  அவர்கள் தமது குதிரைகளோடு
  எமது தேர்ப்பாதைகளெங்கும்
  வெறிபிடித்தலைந்தார்கள்
  கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை
  நாங்கள் இழந்தோம்

  தெருவின் இருளை இடறும் குடிகாரப் பெண்ணொருத்தியின்
  பேச்சில் கிறங்கி
  இன்னொரு கூட்டம்
  இதே தெருவில் துணியவிழக் கிடக்கிறது
  வெட்கித் தலைகுனியும் நீ
  போய்விடு
  புழுதியில் செத்த ஒளியின் சிறகுகளைத் தேடியாவது
  நீ போய்விடு

  போஸ் நிஹாலே.
  18.11.1999

  02.

  சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்

  உன்னை அவர்கள் கைது செய்து
  எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்
  எனது குழந்தைக்குப் பிடித்தமான
  உனது ‘சேட் கொலரின்’ மடமடப்புச் சத்தம்
  இன்னும் அவனது விரலிடுக்குகளில்
  கேட்டுக் கொண்டேயிருக்கிறது
  அவர்கள் வாகனங்களோடு
  நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்
  சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்
  கொண்டு வந்திருந்தார்கள்
  அது
  இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்
  எனது குழந்தையின் கண்களில்
  எங்களுடனேயே தங்கியிருக்கிறது
  அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்
  நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும்
  கொல்லவுங் கூட முடியும்
  அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை
  அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்
  சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்
  நிரூபித்து விட்டது…
  நிரூபித்து விட்டது…
  நம்பிக்கை கொள்
  நீ பேசாதிருக்கும் வரை
  உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை
  அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே
  சிறைக் கம்பியிடுக்குகளின் வழி
  ரோஜாப் பூக்களின் வாசனையும்
  வுண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்
  உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்
  நம்பிக்கை கொள்
  நீ பேசாதிருக்கும் வரை
  அவர்கள் தோற்றுப் போவார்கள்
  நிரந்தரமாகவே.

  போஸ்நிஹாலே
  8. பொடிச்சி Says:
  May 2nd, 2007 at 2:08 pm

  http://mattavarkal.blogspot.com/2007/04/blog-post_30.html
  அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்
  – கருணாகரன்.
  9. Global Voices Online » Sri Lanka: S. Bose(1975 – 2007), Poet, Editor & Writer Says:
  May 25th, 2007 at 9:42 am

  […] Peddai from Toronto, Canada who met S.Bose a few years ago in Sri Lanka writes in detail about the killings in Vavuniya. In the two weeks preceding S.Bose’s murder, 24 people had been killed in Vavuniya alone. One of the 24 people killed was her own grandmother. This old lady had been going about her ways in an alleyway with trees on either side. A stray bullet came out of nowhere and killed her. And she breathed her last on the lap of her daughter. And her suffering did not stop there. Since the morgue in the Vavuniya hospital was full, the innocent old lady’s body had to wait for the relatives to get traveling passes. And had lost all the charm and had become darkened. […]

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: