Home > பிறரது படைப்புகள், பொது > சுடர்: சன்னாசி

சுடர்: சன்னாசி

[சன்னாசியின் வலைத்தளத்தின் வழங்கி கடந்த சில நாட்களாகவே முழுதாக செயல்படாமல் இருப்பதால் அவரது ‘சுடர்’ இங்கு உள்ளிடப்படுகிறது…]

1. புனிதங்கள் பற்றி… (உ-ம்: எழுத்து/கவிதை உன்னதம்; வாசிப்பு தவம் etc) என்ன நினைக்கிறீர்கள்? {இதற்கு பதிலளித்துவிட்டு ஆக இறுதியிலுள்ள BONUS ONE-இன் உப கேள்விகளைப் பார்க்கவும்}

பாரிஸ் ஹில்டன் மார்புகளுக்கிடையில் இருந்துகொண்டு ஸ்ரீ டிங்கர்பெல் ஒரு அற்புதமான புத்தகம் எழுதியிருக்கிறார் என்ற காலகட்டத்தில் இருந்துகொண்டு ஏதோவொன்று/எழுத்து/கவிதை என்பது உன்னதம், வாசிப்பு என்பது தவம் என்றெல்லாம் மோஸ்தர்களை அடுக்கத் தயக்கமாகத்தான் இருக்கிறது ;-). சமீபத்தில் படித்த புத்தகமான The mysterious flame of queen Loanaவில் ஒரு சம்பவம் இருக்கும். பழுதான பழங்காலத்து ரேடியோ ஒன்றை பழுதுபார்க்க எடுத்துச்செல்லும் கதாபாத்திரத்திடம் பழுதுபார்க்கும் கடைக்காரன் கேட்கிறான் – இதை ரிப்பேர் செய்தால் ஐம்பது வருடத்துக்கு முந்தைய வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளைக் கேட்கமுடியும் என்ற நினைப்பா என்று. உன்னதம், தவம் போன்றவையும் குறைந்தபட்சம் என்னளவிலாவது, பழங்காலத்து ரேடியோக்கள் மாதிரிதான். திருப்பினால் கொரகொர என்று சத்தம்தான் வருகிறது. ஐநூறு வருடங்கள் கழிந்தாலும் புத்தகங்களில் பதிக்கப்பட்டவை அப்படியே இருக்கும் என்ற கோணத்தில் எழுதப்பட்ட இந்த வாக்கியங்களை, ஏன், தற்செயலாக ஒரு பாப்பா அந்தப் புத்தகத்தின் மேல் மூத்திரமடித்து எழுத்துக்கள் அழிந்துபோனால் குறிப்பிட்ட அறிவுக்கண்ணியொன்று அறுந்து போகாதா, அது அறுந்து போவதால் கிறிஸ்துவுக்கோ முகம்மதுக்கோ ஏதோவோர் இந்துக் கடவுளுக்கோ ஒரு doppelganger உருவாகாமல் போய்விட்டிருக்கச் சாத்தியமுள்ளதா, இல்லாமல் போய்விட்டதால் உலகச் சரித்திரம் எப்படி மாறிவிட்டது என்று நுட்பமாக இணைத்து இணைத்துப் பிரித்துக்கொண்டே போவதை ஒரு கார்ட்டூன் புத்தகத்திலிருந்து தலையணை சைஸ் நாவல் வரை எதுவும் சுவாரஸ்யமாகச் செய்துவிடக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ள உலகில், உன்னதம், தவம், அக விடுதலை, மனித மனத்தின் ஆழங்களில் நீச்சலடித்தல், இருப்புக்கும் இறைக்குமிடையில் ஸ்கேட்போர்டிங் செய்தல், தன்னை உணர்தல், ஆன்மீகப் பொந்துக்குள் அக எலியைத் தேடுதல் போன்ற தேய்பதங்கள் வெகுவாக அலுப்பூட்டுபவை. கலை என்ற தளத்தில் மட்டுமின்றி, அறிவியல், சினிமா போன்ற பல தளங்களிலும் பைத்தியக்கார விஞ்ஞானி (crazy scientist), எக்சென்ட்ரிக் நடிகர் போன்ற தேய்பதங்களும் சித்திர உருவாக்கங்களும் தற்போதைய காலகட்டத்தில் வேகமாகத் தம் அசல் உப்பலை இழந்து வருகின்றன என்பதை உள்ளதை உள்ளபடிப் பார்க்கத் தெரிந்த எவராலும் எளிதில் உணரமுடியும். மனோரீதியான சிக்கல் என்பது சாலையைக் கடக்கும் ஒரு வயோதிகருக்கு உதவுவதா இல்லையா என்ற அன்றாட விஷயத்திலிருந்துகூட தொடங்கக்கூடும் என்பதால், எழுத்தாளர்கள்/இன்னபிறர் சமூகத்தின் வழிகாட்டிகள், அக விடுதலைக்கான சுரங்கப்பாதைகள், அற ஒழுக்கத்தை/விடுதலையை/களிப்பை சாமானியனுக்குத் தருவதற்கான பெரும் சாத்தியப்பாடுகளில் தலையாயதொரு சாத்தியப்பாட்டின் வார்ப்பு என்ற ரீதியில் கட்டியெழுப்பப்படும் பிம்பங்கள், தகவல்தொடர்பு இவ்வளவு தூரம் முன்னேறியுள்ள காலகட்டத்தில் பொருள்மாறியவை. பொதுவான தளத்தில் இப்படிச் சொன்னாலும்கூட, இக் கண்ணோட்டம் முழுவதும், அன்றாட வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கொட்டிக் கொட்டி ஈயைக் குளவியாக்கிவிடுவதுபோலச் சீராகச் செயல்படுத்தப்படும் தொடர் வன்முறையால் சுயம் நொறுக்கப்பட்டிராத, ஒப்பீட்டளவில் வசதியான வாழ்க்கை வாழும் ஒருவனின் பார்வைக்குறைபாட்டுடனே இருக்கக்கூடும் என்பதையும் உணரமுடியாமலில்லை. இதற்கு நேர் எதிர்மறையான சூழலில் வாழும் ஒருவனின் புலனுணர் சாத்தியப்பாடுகள் வேறாய் இருக்கமுடிவதையும், சுயபிரக்ஞை அற்று இயந்திரம்போல வாழ்பவர்களின் (அல்லது அப்படி நாம் நினைப்பவர்களின்) இயக்கம் சுயபிரக்ஞை உள்ள நமது நுணுக்கங்களுக்கான வெளியை மலினமாகக் குலைத்துப்போடுவது போன்ற கற்பனைகளில் உழன்று மூளையைப் பிடித்து சுயமைதுனம் செய்துகொள்வதும் என்று ஒரு அல்லது ஒன்றரை நிமிடத்தில் அடுக்கி/பட்டியலிட்டு/அனுபவித்து/நிர்மாணித்துக் குலைத்து மறுபடி நிர்மாணித்துக்கொள்ளக்கூடிய மனித மனத்தின் அபாரமான வீச்சைக் குறுக்குவதுதான் இந்தப் புனிதங்களின் எல்லையில் நின்று இயங்கும் புனிதவன்முறையாளர்களின் நோக்கம் என்பதையும் அவற்றின் உக்கிரத்தையும் உணர பிரத்யேகத் திறமை ஏதும் தேவைப்படாததால், புனிதம்/தவம் போன்ற வெங்காயங்களைக் கேட்கும்போது எழுத்து/இறை/இதேபோன்று புனிதத்தை ஊசிவழிச் செலுத்திவிடக்கூடிய எந்தவொரு விஷயமானாலும் – தனிப்பட்ட இறுக்கந்தளர்த்தி (stress-reliever) மனோநிலைக்கோ தேவைப்பட்ட கூறுகளை உறிஞ்சியெடுத்துக்கொண்டு பிறவற்றை இரக்கமில்லாமல் துப்பியெறிவதுதான் எளிதான வழியாயிருக்கிறது. அசலில் பார்த்தால், ecological/social pyramid போல, இந்தப் புனிதங்கள் அனைத்தும் மனிதர்களால்/கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பெரும் ஊசி போலத்தான் இருக்கிறது – ஆனால் தலைகீழாக – அடியில் இருந்து உந்தித் தள்ளும் பிஸ்டனாக ஆட்டுமந்தைக் கும்பல்களும், அளவைக்குறிப்பான்களாக பிரசங்கிகளும், செலுத்தும் ஊசியாக புனிதப் பிம்பங்களும் செலுத்தப்படும் திரவமாக கருத்தாக்கங்களும் – கையை மடக்கிப் பிடித்து ஒரே ஏத்து – முடிந்தது கதை ;-). எனவே, ஹோதாவோடு வரும் எந்தவொரு புனிதமும், அதன் பிம்பமும் அதன் கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கும் நேரமொதுக்குவது பயனுள்ளதாகப் படவில்லை – சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஹோதா வரவழைக்காத மரியாதையை எழுத்துக்களுக்கு/தனிமனிதர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்று யோசிக்கமுயல்வது சிக்கலான விஷயம் – தான் ஒரு அத்வைதி என்று நகுலன் சொன்னால், அந்த வாக்கியம் யோசித்துப் பார்க்க எவ்வளவு சிக்கலான விஷயமாக இருக்குமோ அதேபோல்! வெறுமையை ஒரு மோஸ்தராக்க முயலும் கட்டத்தில், தொலைக்காட்சியில் ஒரு MTV மோன்டாஜிலோ சமையல் நிகழ்ச்சியில் தட்டில் அடுக்கப்பட்டிருக்கும் மாமிசத்தில் ஒரு கண் பொருந்தியிருப்பது போன்றதிலோ அல்லது தெருவில் போகையில் தனக்குத்தானே காற்றில் கணக்குப்போட்டுக்கொண்டு கிழிந்த கான்வாஸ் பைகளும் ஜீன்ஸும் போட்டுக்கொண்டு பதினைந்து நாள் தாடியுடன் நடக்கும் ஆசாமியின் அசைவுகளிலிருந்தோ ஏதோவொரு பிம்பம் கழன்று வந்து எச்சமாகத் தங்கிவிடுகிறது; இது அத்தனையையும் அறிவியல்பூர்வமாக ஆராயமுடியுமென்ற சாத்தியப்பாடு, இம்மாதிரி விஷயங்களில் மலிவான விலையில் செய்துவிடக்கூடிய aesthetic ratificationஐ மேலும் சிக்கலாக்குகிறது. ஆஹா ஒரு படிமம் கிடைத்தது, அதை இரண்டாக வகிர்ந்து நடுவில் சில நேரம் படுத்துக் கிடந்தால் கை இயங்கித் தன்னாலே எழுதித் தள்ளிவிடும் போன்ற கருத்தாக்கங்களை, எழுதுவதையெல்லாம் நியாயப்படுத்தியாகவேண்டிய காலகட்டத்திலே எவரும் செய்திருக்கக்கூடும் – இந்த நியாயப்படுத்தற் கட்டத்துக்கான தர்க்கத்தை சீராகக் கட்டமைத்து முன்வைக்கத் தான் அங்கீகரிப்பதாகத் தெரிவிக்கும் சாத்தியப்பாடுகளின் வரையறை ஒரு கட்டத்துக்குப்பின் சுய குறுக்கத்துக்கு இட்டுச்செல்வதை உயர்ந்து வீழும் எழுத்துக்களில், கடைசிவரை ஒரு ‘முயற்சி’யாகவே மட்டும் போய்விடும் எழுத்துக்களில் இருந்து, ‘அங்கீகரிக்கப்படாத மேதமை’ என்ற தேய்பதம் நெற்றியில் சார்த்தப்பட்ட பிரக்ருதிகள் வரை பார்க்கமுடியும். இந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட வாக்கியம்:

உலகமயமாக்கலின் விளைவாக மெக்கன்ரோவின் உருளைக்கிழங்கு சிப்ஸ், கோகோ கோலா, ராடோ வாட்ச், பவர் ஷூக்கள் என்று நவீனத் தமிழர் கட்டமைக்கப்பட்டிருப்பதன் இன்னொரு வெளிப்பாடுதான் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பற்றி இன்று ஏற்பட்டிருக்கும் பரவசங்களும் கொண்டாட்டங்களும்.

– எழுத்துப்பிழைகளை/உச்சரிப்புப்பிழைகளைக் கிண்டலடிக்கும் அதே வக்கிர தர்க்கத்தைப் பிரயோகிக்க லைசன்ஸ் அளித்தால், இக்கட்டுரையின் மொத்த சாரத்தையும், ப்யோர்ன், மனோலோ ப்ளானிக்கிலிருந்து ஃபெண்டி வரை என்று பவர் (Bavar ;-)) ஷூக்களைத் தாண்டி எங்கோ நகர்ந்துவிட்ட தமிழ் யுவ யுவதித் தலைமுறை, மெக்கன்ரோ எப்போது சிப்ஸ் விற்கப் போனார், டாட்டும் ஓ நீலையும் நடுவர்களையும் இல்லை போட்டு மிதித்துக்கொண்டிருந்தார் என்று மெக்டொனால்டையும் ஜான் மெக்கன்ரோவையும் போட்டுக் குழப்பும் இக் கட்டுரை எதைத்தான் விமர்சிக்கிறது என்று ஒரே அமுக்காகப் போட்டு அமுக்கிவிடாதா. சின்னக் கோழியை அமுக்கும் பெரிய கோழியை ஒரு சேவல் அமுக்கும், ஓடித் திரியும் நாட்டுச் சேவலின் தொடை வலுவாக ருசியாக இருக்கும் என்று கடைசியில் தட்டில் வரும். வாழ்வின் போக்கு இவையனைத்தையும் வெறும் வழித்துணைகளாக மட்டுமே உபயோகிக்கிறது என்று தனிப்பட்டவர்கள் உணரும்வரையில் இந்த மோஸ்தர்கள் இருந்துகொண்டேதான் இருக்கும் – அறிந்தோ அறியாமலோ நம்மிடம் கூட – இதை ஒன்றும் செய்ய முடியாது :-).

2. இணையத்தில் வலைப்பதிவுகளின் வரவு இந்த இந்த இலக்கிய இதழ்களுக்கு இந்த இந்த மாதிரி எழுதவேண்டும் என்கிற முன்எதிர்பார்ப்புகள் இன்றி -கட்டுப்பாடற்று – எழுதுகிற வெளியை உருவாக்கியிருக்கிறது. இலக்கிய “பீடங்களை” விமர்சித்த -சிற்றிதழ்களின் தன்மைகளிற்கு எதிராக – முக்கியமான எழுத்துக்களை இணையத்தில் காண முடியும். ஆனால், “இணைய எழுத்து, நம்பகத்தன்மையற்றது, பதில் (அல்லது எதிர் விமர்சனம்) தரும் அவசியமற்றது” என்பதாகவே ‘வசதியாக’ அவை அனேகமாய் சம்பந்தப்பட்டவர்களால் மெளனமாக எதிர்கொள்ள(!)ப்பட்டன இல்லையா? அது பற்றி + இந்த மெளன – வன்முறை(!!) அரசியலின் பொருட்டேனும் உங்களைப் போன்றவர்கள் எழுத்துக்களை ‘பதிப்பிக்கிற’ எண்ணம் உண்டா? அல்லது/+ எமது நாடுகளில் உள்ள போர்ச்சூழலில் வசிக்கிற வாசிப்பார்வர்கள், மற்றும் இணைய வசதி அற்றவர்களாய் இருக்கிற வாசகரின் பொருட்டு “இணையப் பிரதிகள்” இன்னமும் அச்சாக்கத்தை வேண்டி நிற்கின்றன. இவற்றின் அடிப்படையில் உங்களுடைய கருத்து?

வணிகப்பத்திரிகைகளின் வெற்று நீட்சியாக இணையம் இருப்பது எவ்வளவு வீணோ, அதேயளவு சிறுபத்திரிகைகளின் வெற்று நீட்சியாக இருப்பதும் வீண் தான். பீடங்களில் இருந்தவர்கள்/இருப்பவர்கள் அனைவரும், ஒரு சாமானியனை ஒப்பிடுகையில் தகவல்களைப் பெறும் சாத்தியப்பாடுகளை அதிகம் பெற்றவர்கள் – இதைத்தவிர சாமானியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இணைய எழுத்து நம்பிக்கையற்றது, பதில் சொல்லத் தேவையற்றது என்று சொல்வது அவரவர் கருத்து. எகஜ்க்ளூஜிவ்வாக (Egajgloojive என்று படிக்கவும் ;-)) இணையத்தில் எழுதுகிறவர்களேகூட பிறரது சில பதிவுகளை அசட்டெழுத்துக்கள் என்று சொல்லத் தயங்காதபோது பாவம் பப்ளிஸ்டு பரமசிவங்களையும் ப்ரிண்ட் மீடியா பெரியசாமிகளையும் ஏன் போட்டுத் தோண்டவேண்டும், பாவம் விடுங்கள். Invasion of the body snatchers மாதிரி இத்தனை பேர் எழுதுகிறேன் பேர்வழி என்று பொட்டியைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்களே என்ற விஷயமே தொடக்கத்தில் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும் – போகப்போகச் சரியாகிவிடும். அப்போது, ‘என் கருத்தை மறுபரிசீலனை செய்துகொண்டேன்’ என்று சொல்லி வைத்துவிடுவார்கள் – சரியாகப் போயிற்று. ஆங்கில இணையத்தில் வலைப்பதிவுகளின் நிலையும் இதே தானே – இதைத் தாண்டி வந்தவை தானே. அச்சுப்பதிப்பு மீதான வசீகரம் ஆங்கில வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது/பிற மொழிகளிலும் இருக்கத்தான் செய்யும் – தவறில்லை. மௌன-வன்முறை அரசியல் எனில், என்னய்யா வாயில் கொழுக்கட்டையா இருக்கிறது என்று கேட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

இணைய வசதி அற்றவர்களுக்கு மாற்றுக் கருத்துக்களும் போய்ச்சேரவேண்டியது அவசியம் – அனைத்தும் சேரவேண்டும் எனினும், புனைவுகள் போய்ச் சேர்வதைவிட பிற அறிவுத்துறைகளிலுள்ள மாற்றுக் கருத்துக்கள் போய்ச் சேரவேண்டியது அதைவிட அவசியம். வெகுஜன ஊடகங்களின் மூலம் அறிந்திராத பல விஷயங்களை/மாற்றுக் கண்ணோட்டங்களை தமிழ் வலைப்பதிவுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிவது போல, பரிணாமவியல் குறித்துக் கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படும்போது, Intelligent design குறித்த கருத்தாக்கங்களும், ‘இதுவும் இதைப் போன்றதும் குப்பை’ என்று சுட்டிக்காட்டப்படுவதற்காவது முன்வைக்கப்படவேண்டும். இது முழுதான பதில் இல்லை – நழுவலுக்கு மன்னிக்க.

எமது அடையாளம் முற்றாய் எமது எழுத்திலிருந்து (அதிலிருக்கிற “பேச்சுமொழியிலிருந்து”) பிரதிபலிக்காமல், இணையத்தில் ஒரு முழுமையான முகமூடியாய் இருக்க முடியும் என நம்புகிறீர்களா?

தொடர் கொலைகாரர்கள் பல வருடங்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்படும்போது அக்கம்பக்கத்தார் “இவனா/இவளா, நம்பவே முடியவில்லை” என்று ஆச்சரியப்படுவதைத் தொலைக்காட்சியில்/செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்/படித்திருப்பீர்கள் – அது சாத்தியம் எனில் இதுவும் சாத்தியம்தான் ;-). அடையாளத்தை எழுத்திலிருந்து பிரதிபலிக்க வைக்க யத்தனிப்பது அடையாளத்தை நேரடியாகத் தெரிவித்துப் பிரசங்கிப்பதைவிட அபத்தமான விஷயம் என்பது என் அபிப்ராயம் – என் அபிப்ராயம் மட்டுமே. அடையாளங்கள் என்று அளிக்கப்படுபவற்றை நிதானமாக compartmentalize செய்து வைத்தாலே போதுமானது – நமது தனிப்பட்ட அருங்காட்சியகத்தைத் தேவைப்பட்டபோது பார்த்து மகிழ்ச்சியடையலாம்!! நன்றாக அடிக்கும்போதெல்லாம் அடி நொறுக்கு என்று நரம்பு புடைக்கக் கூவி விமர்சனம் செய்யும் கிரிக்கெட் விமர்சக macho, நேரில் சட்டையைப் பிடித்து முழங்காலை மடக்கித் தொடையிடுக்கில் கொண்டுபோய் நிறுத்தினால் கிடுகிடு என்று நடுங்கும் சொங்கிப்பயலாகவும் இருக்கலாம் – இப்படியிருக்க, அடையாளங்கள் மீது ஒரு கட்டத்துக்கு மேலான பிரக்ஞைபூர்வமான கவனக்குவிப்பு வெறும் நேரவிரயம்.

அதுசரி, நீங்கள் எப்போது ‘எழுத’ப் போகிறீர்கள்?? (இதை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் ஒருவரிடம் “நீங்கள் எப்போது கவிதை எழுதப் போகிறீர்கள்” என ஒருவர் கேட்ட effect உடன் கேக்குமாறு உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் தோழர் ஒருவள் சொல்கிறாள்!!!).

மைசூரில் சாமராஜ உடையாரின் மாளிகைக்கு ஒரு தரம் போயிருந்தேன். ஒரு சிறு தருணத்தில் ஒரு பிரம்மாண்டமான படுக்கையறையில் தனியே நிற்க நேர்ந்தது – மிகத் துல்லியமான நிசப்தம். சட்டென அத் தருணம் கடந்துபோனது, சில நாட்கள் கழித்து வேறொரு சிறு கோயிலின் சுவரொன்றிலிருந்த மாடாக்குழியொன்றுக்குள் மணிக்கட்டு வரை முஷ்டியை மடக்கிப் பொருத்தமுடிந்தது. இந்த இரண்டு தருணங்களுக்கும் உள்ள தொடர்பு பிடிபட்டால் நேரத்துக்கேற்றவாறு அரைப் பக்கமோ ஏழெட்டு வரியோ அல்லது சில பக்கங்களோ எழுதலாம் – பெரும்பாலும் இந்த இரு தருணங்களின் பௌதீக இருப்பும் வர்ணனைகளும் இயக்கக் கூறுகளும் எழுதப்பட்டதில் எங்கும் இருக்காமல் போவதே பெரும்பாலும் நிகழ்வது – இதில் எதை எழுதினோம் எதை எழுதாமல் விட்டோம் என்று உள்நோக்கித் திரும்புவது பெரும் விபத்தில்தான் முடியுமென்ற உறுதியான கருத்திருப்பதால் அந்தப் பக்கம் போவதில்லை. அளவுக்கதிகமானவை சேர்ந்து போகையில் அனைத்தையும் உதிர்த்துவிட்டு, கையாள விருப்பமுள்ள ஒன்று வந்து சேர்வதற்காகப் பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது.

உங்களுடைய பதிவுகளிற்கு வருகிற பின்னூட்டங்களை நீங்கள் மட்டுநிறுத்துவதில்லை. நீங்களும்
{மட்டுநிறுத்துகிறபோதும்} பொறுக்கியும் இது தொடர்பாகப் போட்டிருக்கிற disclaimer கருத்து சுதந்திரம் பற்றி மட்டுமல்ல, இணையத்தோட மைய விசயமான உடனடி கருத்து மாற்றம், தணிக்கையின்மை பற்றி பேசுகின்றன. ஆனாலும், உங்கட பதிவு குறிப்பிட்ட நேரத்திற்குக் பிறகு காணமற் போவதால், பலருக்கும் படிக்க முடியாமற் போய் விடுகிறது. இதை மீள்பரீசிலிக்கக் கூடாதா? (பிடித்த பதிவர்களது இடுகைகளை சேகரிக்கக்கூடிய வழிகள் இணையத்தில் (blog lines etc) உண்டென்றாலும், அவற்றுடன் அறிமுகமற்றவர்களின் பொருட்டு).

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களைத் திரட்டுவதும் திரட்டாததும் நிர்வாகத்தினது விருப்பம். மட்டுறுத்துவதும் மட்டுறுத்தாததும் என் விருப்பம். வலைப்பதிவு தொடங்கியபோது பின்னூட்ட மட்டுறுத்தல் இருக்கவில்லை, இனிமேலும் மட்டுறுத்தப்போவதில்லை – மன்னிக்க. பதிவுகள் விரைவில் காணாமற் போவதற்கு, அதிகளவில் பதிவர்கள் எழுதுவதும் காரணமாக இருக்கலாம் – அப்படித்தான் எனில், அது வரவேற்கப்படவேண்டிய ஒன்றே. சமீபத்தில் தமிழ்மண நிர்வாகத்தினர், பின்னூட்டங்களை மட்டுறுத்தத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

உப கேள்விகள்
i. எந்தக் கணத்தில் நீங்கள் “எழுத” உட்காருவீர்கள்?
அ. மழை பெய்கிறபோதா? (மழையே இல்லையோ?)
ஆ. காற்று வீசும் போதா?
இ. காதல் கசியும்போதா (அது காயப்படும்போது இரத்தம் கசிவதுபோல இருக்குமா?)
ஈ. இனிய நினைவுகள் சூழும்போதா?
உ. அல்லது..?

மழை பெய்கிறபோது மழையை ரசிக்காவிட்டால், காற்று வீசும்போது காற்றை அனுபவிக்காவிட்டால், காதலோ ரத்தமோ கசியும்போது கோப்பையில் பிடித்துப் பருகாவிட்டால், இனிய நினைவுகள் சூழும்போது அவற்றிலேயே ஊறிக்கிடக்காவிட்டால் அந்தந்த அனுபவங்கள் வீண் என்பதால், எழுதியதில் புனைவுகள் எனில், பெரும்பாலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில்தான் எழுதமுடிந்திருக்கிறது – ஆசுவாசமான தருணங்கள் ஆசுவாசத்துக்கே :-).

எனது கேள்விகள்: வெங்கட்டுக்கு

1. உங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா?

2. நீங்கள் எழுதிய ஜாஸ் குறித்த தொடர் நான் விரும்பிப் படித்த ஒன்று. Take Five நிச்சயம் கேட்டிருப்பீர்களென்று நினைக்கிறேன் – தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்த இந்தத் துண்டு ;-) குறித்து உங்களுடைய உடனடிக் குறிப்புக்கள்… இல்லையெனில், டேவ் ப்ருபெக்கின் பிற எந்த ஒரு இசைத்துண்டு பற்றியும்…

3. மேலே நான் கொளுத்திப் போட்டதில் (The Redneck Grill: The Most Fun You Can Have with சுடர், Charcoal, and a Dead Animal) எவ்வளவு சதவீதம் உண்மையாக எழுதியது, எவ்வளவு சதவீதம் கேட்டதற்காக சும்மா அள்ளி விட்டது என்று நினைக்கிறீர்கள்? ;-) எது எவ்வளவு என்பதை தோன்றியபடி விளக்க முடியுமா?

4. சமீபத்திய வலைப்பதிவு விவாதங்களில் மரபியலிலிருந்து சகல அறிவியலையும் சமூகப் பிரச்னைகள் குறித்தான விவாதத்தில் துணைக்கழைப்பது நடந்து வருகிறது. இம்மாதிரியான வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்க வாய்ப்பு இருப்பின், அனைத்துத் தரப்பினரும் வெகுஜன அறிவியலை அடிப்படையாகக் கொண்டு fake extrapolations செய்து தனது தேவைக்கேற்ப சமூகத்தின் கழுத்தில் மாலை போடவோ கத்தியால் அறுக்கவோ முயல்கிறார்கள் என்று தோன்றியதுண்டா? அறிவியலாளர் என்ற கோணத்தில், அறிவியலை சமூகக் காரணிகளுள் பொருத்த முயல்வதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

5. லேசர் துப்பாக்கி, முடிச்சு, சமையலறை, இரண்டு கழுதைகள் – இவற்றைக்கொண்டு அருள்செல்வன் ஒரு கார்ட்டூன் போட்டார் எனில் அதற்கான உங்கள் பின்னூட்டம் என்னவாக இருக்கும்? கார்ட்டூனில் என்ன இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை – பின்னூட்டத்தை மட்டும் சொன்னால் போதும்!!

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: