Home > பொது, Uncategorized > சுடர்: பத்துமா பத்தாதா?

சுடர்: பத்துமா பத்தாதா?

HPIM0956.JPG
நெருப்புப்பெட்டியில் குச்சியால் நெருப்பைத் “தட்டவே” திவ்வியப் பிரயத்தனப்படுகிற :-) ஒருத்தியை – கலைவாணி தமிழ்நதிசுடரேத்த அழைத்திருக்கிறார். என்னை மாட்டி விட்டதற்கு அவருக்கு நன்றி கூறி, கீழே முடிந்தளவுக்கு கேள்விகளுக்குத் தோணுகிற எண்ணங்களைத் எழுத முயன்றிருக்கிறேன்….

1. வாசிக்கும் புத்தகங்கள் ஒரு மனிதரை (ஆண்-பெண்) அவர்தம் உணர்வுகளை, நடத்தையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஒருவர் ‘நல்லவராக’ ‘அறிவானவராக’ இருப்பதற்கும் அப்படி அல்லாதவராக இருப்பதற்கும் -அவர் படிக்கிற – புத்தகங்கள் உதவுகின்றன; பெரும் பங்கு வகிக்கின்றன இந்த கருத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வியென்றால், அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என்றுதான் சொல்லுவேன். ‘நல்லது’ என நாங்கள் சொல்கிற எல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சும் ஒருவரது உணர்வுகளை நடத்தையை அவை நெருங்காது போகலாம் (நெருங்கித்தான் என்ன செய்யிறது?!). மர்லின் மான்சன் போன்ற வெகுசன பாடகர்களது பாட்டைக் கேட்டுவிட்டு பதின்மர்கள் கொலைக்கு “தூண்டப்படுகிறார்கள்” என குற்றஞ் சாட்டப்படுகிறது. ஆனால் ‘கொலை எண்ணம்’ எமது வாழ்வின் எத்தனையோ பிறழ்வுகளுடன் தொடர்புடையதாகவே இருக்க முடியும். இதை ஒன்றில் போட்டு பிற எல்லாம்/எல்லாரும் தப்ப முடியாது. ஒரு நல்ல ‘ஒழுக்கமான’ ‘நல்நெறியுடைய’ அல்லது முற்போக்கான, மனித விடுதலையை அவாவகிற விடயங்களைக் கொண்ட ஒரு நூலைப் படித்துவிட்டும் ஒருவர் கொலை செய்யலாம் (கொலையை எழுத்திலும் செய்யலாம்; இனிய, கவித்துவமான எத்தனையோ பிரதிகள் சக மனிதர்களுக்கு எதிரான குரூரத்தைக் கொண்டுதானிருக்கின்றன). சமூகம் எல்லாவற்றிற்கும் எதிரானதாய் இருக்கிறபோது, புத்தகங்களின் நல்ல தன்மை x கெட்டதன்மை வாசிப்பவரை பெரியளவில் வடிவமைக்க முடியா – இப்பிடியெல்லாம் எதுவும் எதையும் யாரையும் உருவாக்குவதில் பங்காகும் என்று முடிவாய்க் கூற முடியவில்லை.

2.தமிழ்மணத்தில் இப்போது அதிகமான பெண் பதிவர்கள் இணைந்திருக்கிறார்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

தமிழ்மணம் 800+ பேர் வலைப்பதிவதாக கணக்கு காட்டுகிறது (பழைய கணக்கக் காட்டுறனோ?). இதில் 67 பேர் பெண்கள் என மதி பட்டியல் போட்டிருக்கிறார் (இதில் எத்தனை பேர் புனைபெயர் + சொந்தப் பெயர் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்). சனத்தொகையில் அரைக்கரைவாசி (கூடக் குறைய) பெண்கள் இருப்பார்கள் என நம்புகிறேன்! இன்னும் பெண்கள் ஆள்பற்றாக்குறையாக வரவில்லை என்றும் நம்புகிறேன் (பெண் சிசுக்களை அத இதக் குடுத்துக் கொன்றாலும்). இதிலே இப்போது அவர்கள் அதிகம் எழுதுகிறார்கள் என்றால், இந்த வெளியின் ‘பாதுகாப்பை’ (அதன் எல்லா அர்த்தத்திலும்) உணர்ந்து தம்மை வெளிப்படுத்த தொடங்குகிறார்கள் என்று கூறலாம். அது பல்கிப் பெருகி மனத்தடைகள் களையப்படுகிறபோது அவர்களிடமிருந்து நேர்மையான எழுத்துப் பிரதிகள் பலவும் கிடைக்கக் கூட செய்யலாம்!

3.ஒரு படைப்பை அதை எழுதுபவரின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் மனோநிலையானது எழுதுபவரைக் களைத்துப் போகச் செய்கிறது அல்லது பின்னடையத் தூண்டுகிறது என்பதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
சுயதணிக்கை என்பது மனிதரின் அன்றாட வாழ்வின் ஒரு பாகம். குழந்தைகள் போல போலித்தனமில்லாமல் கதைத்தால் கல்லடிதான். போலித்தனம் சமூகத்தில் பெரும் அங்கீகாரத்தை வழங்கும். நீங்கள் கேட்கிற கேள்வியிலுள்ள பிரச்சினையால தான், பெண்களது உலகம் எழுதப்படுவதில்லை. இப்போ பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள் என நம்பப்பட்டாலும், (காமம் என்றில்லை, எல்லா) தமது உணர்வுகள் பற்றியும் ‘படம் பார்ப்பதுபோல’ இயல்பாய் எழுதுகிற யாராவது ஆண் எழுத்தாளர்களது எழுத்தைப் படிக்கிறபோது அது பெண்களிடம் சாத்தியமில்லை என்பதே உணர்கிறேன். இதற்குக் காரணமான, பெண்களுடைய ‘அற உணர்ச்சி’ பற்றி நிறைய எழுதலாம் (உங்கட “அந்த எசமாடன் கேக்கட்டும்” என்கிற கதையில ‘கெட்ட வார்த்தைகள்’ வராதது குறித்து சுகுணா திவாகர் எழுதியிருந்தார், இல்லையா). பெண்கள் தம்மைப் பற்றி “ஆண்களுக்கு” அப்பறம் “சக பெண்களுக்கு” அப்புறம் “தங்களுக்கும்” காட்டிக் கொள்ள வேண்டிய துர்பாக்கியத்தால் பீடிக்கப்பட்டுள்ளோம். அது மூளைக்குள் வழிவழியாய் கடத்தல்ப்பட்டு வருவது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஆண்கள் -சகோதரர்கள் கூட- ஒன்றாய் இருந்து போர்னோ பார்ப்பார்கள் என்று சொல்வார்கள். பெண்களைப் பொறுத்தவரை நண்பிகளிடத்தில் கூட இது நடப்பது அபூர்வம், ஒரு curious இன் பொருட்டுக் கூட.

4.இணையத்தளங்களில் அண்மைய நாட்களில் விவாதங்கள் சூடுபிடித்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். விவாதங்கள் வழியாகச் சரியான திசையில் பயணித்து முடிந்த முடிபொன்றை அடையமுடியும் என்று கருதுகிறீர்களா? அல்லது எதிரெதிரான கருத்துக்கள் விவாதங்கள் வழியாக ஒரு புள்ளியில் சந்திப்பது சாத்தியமா?
‘அண்மைய நாட்களில்’ என்றில்லை. எப்போதுமே விவாதங்கள் ‘சரியான திசையில் பயணித்து முடிந்த முடிபொன்றை அடைய’ வேண்டும் என்று நான் கருதுவதில்லை. கருத்துமாற்றத்தின் ஊடகமாக இருக்கிற ஒரு சாமான நான் நினைக்கிற மாதிரி திசையில போக நினைக்கிறது அதிகாரமாயும், ஒழுங்கியல்வாதமும் தானே? அதனால் ‘எதிரெதிரான கருத்துக்கள் விவாதங்கள் வழியாக ஒரு புள்ளியில் சந்திப்பது’ சாத்தியப்படணும் என்கிற முன்அனுமானங்கள் கிடையாது.
ஊரில மாரிகாலம் குளம் “கலிங்கு” பாயேக்குள்ள, தண்ணி இந்த வயல்களுக்குள்ளதான் போகோணுமெண்டு வரம்ப வெட்டி பாத்திக்குள்ள விடுற சேட்டை எல்லாம் கிடையாது. சும்மா பொங்கிப் பொங்கி வரும்; குட்டி முதலைகூட இந்தக் காலத்தில கிணறுகளுக்குள்ள வந்திருமாம் எண்டு சொல்ல இப்ப பயமாத்தான் இருக்கு. ஆனா அதுதான் அது. கழிவுகள், மீன்கள், குட்டி முதலை எல்லாம் சேர்ந்தது. நான் துள்ளிக் குதிக்கிற மீன்களப் பாத்து இரசிப்பேனாம், கழிவுகள கண்டா அருவருப்படைவேனாம் என்றதின் அடிப்படையில் கலிங்கிடம் பேரம் பேச முடியாது. (எப்படியெல்லாம் உவமானங்கள் பிய்ச்சுக்கொண்டு வருது… ‘உன்னதமான கவிதைகள’ எழுத வேண்டிய ஆள், வீணாப் போனன். சா).

5.ஒரு படைப்பு பரவலான வாசகர்களைச் சென்றடையாது போவதென்பது அப்படைப்பின் தோல்வியா?
பரவலான வாசகர்களை சென்றடைவது படைப்பின் வெற்றியாகவும் இருக்கலாம். தோல்வியாகவும் இருக்கலாம்.
(இப்ப உங்களுக்குத் தலையால போகலாம்!)
சரி, இந்த மக்களிடம் சென்றடையாத படைப்பு, சென்றடைந்த படைப்பு பற்றின எனது ‘மேலான கருத்த’ விரிவா இன்னொரு நாள் எழுதிறன். இப்போதைக்கு சொல்ல வாறது, ‘பரந்த வாசகரை’ அது சென்றடையவேண்டுமென்று ஒருவர் எழுதினால் அங்கே அதற்கென ஒரு ‘நோக்கம்’ வருகிறது. நோக்கம் எல்லா நேரங்களிலும் தவறானது இல்லை. ஒருவர் சிறைச்சாலையிலிருந்து குறிப்புகளை எழுதுகிறார், அவர் சார்ந்த கட்சி/இயக்கம் சார்ந்த நோக்கத்திலிருந்தும் அது வரலாம்; அல்லது அவை கண்டுபிடிக்கப்பட்டால் ‘கட்சி சார்ந்த நண்பர்கள், விடயங்கள்’ அடையாளங் காணப்படாதிருக்கவேண்டும் என்கிற அடிப்படையில் சங்கேத வார்த்தைகளால் எழுதப்பட்டதாக இருக்கலாம். அதனால் அவரது வரலாற்றை அறியாத ஒருவருக்கு அது “புரியாததாகவும்” நிறைய அவருடைய இனத்துடன் தொடர்புள்ள கூறுகளைக் கொண்டதாகவும் ‘விளங்காமற்’ போகலாம். பாருங்கள், நாங்கள் சிறைச்சாலைகளில் இல்லாவிட்டாலும் மனிதர்களாய் ஒவ்வொருவரும் தனித்துவமான வெளிப்பாட்டு வெளிகளைக் கொண்டிருக்கிறோம். எமது மொழிக்குரிய ‘சங்கேதங்கள்’ எதைஎதை மறைத்து எழுதவேண்டும் என்பதான சமூகத்துக்குள் எழுதுவதிலிருந்தும் வரும்.
உ-மாக: மாலதி மைத்ரியின் “பிரபஞ்ச தியானம்” கவிதையின் இறுதி வரிகள் இப்படி முடியும்:
எனக்குள் இருந்த குமிழ்
இன்று
எல்லாம் நிறைந்த பிரபஞ்சம்

இந்தக் கவிதை ஒரு தாய் நீந்திக்கொண்டிருக்கும் மகளைப் பார்த்து நினைக்கிறதான மனஓட்டங்களாலானது. இந்த வரியை நான் சாதாரணமாகத்தான் கடந்தேன். ஆனால் எனது தாயைஒத்த ஒரு தோழி, தனது அனுபவத்தை விவரித்தபோது, இன்னொரு பார்வை கிடைத்தது. அந்தப் பார்வையின் அடிப்படையில், அது:
– “எல்லோருக்கும் புரியணும்” “போய்ச் சேரணும்” என்ற பொதுவான எதிர்பார்ப்புகளுக்கமைய,
எனக்குள் கருவாய் இருந்த பிள்ளை
இன்று வளர்ந்து, உலகம் முழுதும் நிறைந்தவளாய்

என்று எழுதினால் விளக்கமாய் இருக்கலாம், ஆனால் தனித்துவமான ஒரு மொழி வெளிப்பாடு என்பது அதில் காணாமற் போகலாம். இதில என்னை மாதிரி ஆக்களுக்கு அதுகூட புரியாத ஆபத்தும் உண்டு. அப்புறம் கவிதை எண்டிட்டு கதை எழுத முடியாது (சிலவேள ப/சில கவிதையளப் பாக்கேக்குள்ள கதை எழுதுங்க எண்டு சொல்லலாம்போல இருக்கும்தான், அத ஏனிப்ப பேசுவான்..)
அப்புறம் விளங்காததும் ஒன்றும் குற்றமில்லை. பயிற்சி சார்ந்தது. ஆர்வம் சார்ந்தது. அவ்வளவே. ஆகவே, “புரியாம” எழுதிறதையும் குற்றமாக்கி வேண்டுகோள்களை முன்வைப்பதற்கான மனநிலையையையும் இந்த அடிப்படையில் இருந்து யோசிக்கவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலே கேட்ட சில கேள்விகளிற்கு பதிலளித்தபோது, தொடர்புடையவராய் ஞாபகம் வந்தவர் சன்னாசி. அவரை அடுத்ததாக சுடரை ஏற்றமாறு கேட்டுக் கொள்கிறேன். வலைப்பதியும் சனங்கள் ‘இனி சுடர் நூருமா நூராதா‘ என பொறி கலங்க முன்னம், தயவுடன் எழுதியே தீருமாறு மிகவும் வேண்டிக் கொள்கிறேன்ன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. புனிதங்கள் பற்றி… (உ-ம்: எழுத்து/கவிதை உன்னதம்; வாசிப்பு தவம் etc) என்ன நினைக்கிறீர்கள்? {இதற்கு பதிலளித்துவிட்டு ஆக இறுதியிலுள்ள BONUS ONE-இன் உப கேள்விகளைப் பார்க்கவும்}
2. இணையத்தில் வலைப்பதிவுகளின் வரவு இந்த இந்த இலக்கிய இதழ்களுக்கு இந்த இந்த மாதிரி எழுதவேண்டும் என்கிற முன்எதிர்பார்ப்புகள் இன்றி -கட்டுப்பாடற்று – எழுதுகிற வெளியை உருவாக்கியிருக்கிறது. இலக்கிய “பீடங்களை” விமர்சித்த -சிற்றிதழ்களின் தன்மைகளிற்கு எதிராக – முக்கியமான எழுத்துக்களை இணையத்தில் காண முடியும். ஆனால், “இணைய எழுத்து, நம்பகத்தன்மையற்றது, பதில் (அல்லது எதிர் விமர்சனம்) தரும் அவசியமற்றது” என்பதாகவே ‘வசதியாக’ அவை அனேகமாய் சம்பந்தப்பட்டவர்களால் மெளனமாக எதிர்கொள்ள(!)ப்பட்டன இல்லையா? அது பற்றி + இந்த மெளன – வன்முறை(!!) அரசியலின் பொருட்டேனும் உங்களைப் போன்றவர்கள் எழுத்துக்களை ‘பதிப்பிக்கிற’ எண்ணம் உண்டா?
அல்லது/+
எமது நாடுகளில் உள்ள போர்ச்சூழலில் வசிக்கிற வாசிப்பார்வர்கள், மற்றும் இணைய வசதி அற்றவர்களாய் இருக்கிற வாசகரின் பொருட்டு “இணையப் பிரதிகள்” இன்னமும் அச்சாக்கத்தை வேண்டி நிற்கின்றன. இவற்றின் அடிப்படையில் உங்களுடைய கருத்து?
3. எமது அடையாளம் முற்றாய் எமது எழுத்திலிருந்து (அதிலிருக்கிற “பேச்சுமொழியிலிருந்து”) பிரதிபலிக்காமல், இணையத்தில் ஒரு முழுமையான முகமூடியாய் இருக்க முடியும் என நம்புகிறீர்களா?
4.அதுசரி, நீங்கள் எப்போது ‘எழுத’ப் போகிறீர்கள்?? (இதை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் ஒருவரிடம் “நீங்கள் எப்போது கவிதை எழுதப் போகிறீர்கள்” என ஒருவர் கேட்ட effect உடன் கேக்குமாறு உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் தோழர் ஒருவள் சொல்கிறாள்!!!).
***BONUS ONE:
உங்களுடைய பதிவுகளிற்கு வருகிற பின்னூட்டங்களை நீங்கள் மட்டுநிறுத்துவதில்லை. நீங்களும் {மட்டுநிறுத்துகிறபோதும்} பொறுக்கியும் இது தொடர்பாகப் போட்டிருக்கிற disclaimer கருத்து சுதந்திரம் பற்றி மட்டுமல்ல, இணையத்தோட மைய விசயமான உடனடி கருத்து மாற்றம், தணிக்கையின்மை பற்றி பேசுகின்றன. ஆனாலும், உங்கட பதிவு குறிப்பிட்ட நேரத்திற்குக் பிறகு காணமற் போவதால், பலருக்கும் படிக்க முடியாமற் போய் விடுகிறது. இதை மீள்பரீசிலிக்கக் கூடாதா? (பிடித்த பதிவர்களது இடுகைகளை சேகரிக்கக்கூடிய வழிகள் இணையத்தில் (blog lines etc) உண்டென்றாலும், அவற்றுடன் அறிமுகமற்றவர்களின் பொருட்டு).
உப கேள்விகள்
i. எந்தக் கணத்தில் நீங்கள் “எழுத” உட்காருவீர்கள்?

அ. மழை பெய்கிறபோதா? (மழையே இல்லையோ?)
ஆ. காற்று வீசும் போதா?
இ. காதல் கசியும்போதா (அது காயப்படும்போது இரத்தம் கசிவதுபோல இருக்குமா?)
ஈ. இனிய நினைவுகள் சூழும்போதா?
உ. அல்லது….?
ii. மேலுள்ளவைக்குப் பயந்து சுடரேத்த மறுத்திர மாட்டீர்கள்தானே?!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புகைப்படம்: சந்திரா “Sun rise in peterborough”

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 12:08 am

  14 Responses to “சுடர்: பத்துமா பத்தாதா?”

  1. பொன்ஸ் Says:
  March 12th, 2007 at 5:48 am

  ஏ யப்பா.. இவ்வ்வ்வளவு கேள்வியா? கன காலமா சன்னாசியைப் பழிவாங்கணும்னு ஒரு முடிவோட இருந்தீங்களா? :))

  நதியக்கா கேட்டவைகளுக்கு உங்க பதில்கள் அருமை..

  //குழந்தைகள் போல போலித்தனமில்லாமல் கதைத்தால் கல்லடிதான். போலித்தனம் சமூகத்தில் பெரும் அங்கீகாரத்தை வழங்கும்// என்று தொடங்கிய மூன்றாம் கேள்விக்கான பதிலும்,

  //கருத்துமாற்றத்தின் ஊடகமாக இருக்கிற ஒரு சாமான நான் நினைக்கிற மாதிரி திசையில போக நினைக்கிறது அதிகாரமாயும், ஒழுங்கியல்வாதமும் தானே? அதனால் ‘எதிரெதிரான கருத்துக்கள் விவாதங்கள் வழியாக ஒரு புள்ளியில் சந்திப்பது’ சாத்தியப்படணும் என்கிற முன்அனுமானங்கள் கிடையாது.//,
  என்னும் நான்காம் பதிலும் எனக்கு ரொம்ப பிடித்தது..

  கலிங்கு என்றால் என்ன? [பின்னாளில், உன்னதமான கவிதைகள் எழுதத் தொடங்கினால், எழுதி முடித்ததும் இது போன்ற சொற்களுக்கு விளக்கத்தோடு வெளியிடுமாறு இப்பவே கேட்டுக்கிறேன் :)]
  2. Sannasi Says:
  March 12th, 2007 at 9:34 am

  Podichchi,

  Thank you for the invitation. I will not truncate Sudar – am tied up with work, but will try to post something in the next couple of days.
  3. பொடிச்சி Says:
  March 12th, 2007 at 12:24 pm

  பொன்ஸ்: பின்ன! வாய்ப்புக் கிடைத்தா சும்மா விட்டிர ஏலுமா!?
  கலிங்கு பாய்தல்: மழைக்காலத்தில் குளத்தில் நீர் நிறைந்து வெளியே பாய்தல்; நீர் கட்டுப்பாடற்று வயல்கள், வீட்டு நிலங்கள் எங்கும் ஓடும்.

  சன்னாசி: நன்றி!
  4. prakash Says:
  March 12th, 2007 at 2:16 pm

  இது போலவெல்லாம் வாசிச்சு ரொம்ப நாளாச்சு. உங்களை ஆட்டத்திலே இழுத்துவிட்ட தமிழ்நதிக்கும், பதில் சொன்ன உங்களுக்கும், தொடர்கிறேன் என்று சொன்ன சன்னாசிக்கும் நன்றி.
  5. பொடிச்சி Says:
  March 12th, 2007 at 8:26 pm

  நன்றி பிரகாஷ்..
  6. தமிழ்நதி Says:
  March 12th, 2007 at 9:50 pm

  “பரவலான வாசகர்களை சென்றடைவது படைப்பின் வெற்றியாகவும் இருக்கலாம். தோல்வியாகவும் இருக்கலாம்.
  (இப்ப உங்களுக்குத் தலையால போகலாம்!)”

  இல்லை காதாலை போகுது,புகை. உண்மையான பதில்கள் என்று நான் சொன்னேன். பொடிச்சியின் பதில்களும் புரிந்துகொள்ளக் கடினமாகவா இருக்கவேண்டும் என்றொரு நண்பர் கேட்டார். படைப்பின் வெற்றியும் தோல்வியும் அவரவர் புரிந்துகொள்ளுந்திறனையும் வாசிப்பு அனுபவத்தையும் எதிர்பார்ப்புகளையும் பொறுத்தது அல்லவா…?
  7. பொடிச்சி Says:
  March 12th, 2007 at 10:15 pm

  த.ந.: சரிதான்,
  //உண்மையான பதில்கள் என்று நான் சொன்னேன். பொடிச்சியின் பதில்களும் புரிந்துகொள்ளக் கடினமாகவா இருக்கவேண்டும் என்றொரு நண்பர் கேட்டார்.//
  நானும் மப்பில்லாம நல்ல ‘தெளிவில’ எழுதின எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தன்… அட
  8. Mathy Kandasamy Says:
  March 13th, 2007 at 12:53 am

  முதல்ல படத்தைப்பற்றி..

  சே! என்ன படம் போடுறதெண்டே ஒரு விவஸ்தை இல்லையப்பா.

  //நெருப்புப்பெட்டியில் குச்சியால் நெருப்பைத் “தட்டவே” திவ்வியப் பிரயத்தனப்படுகிற ஒருத்தியை – கலைவாணி சுடரேத்த அழைத்திருக்கிறார்.//

  ஏனுங்கம்மிணி இந்த சிகரெட் லைட்டர்ல நீங்க வித்தை காட்டினதெல்லாம்.. 😀

  //இனி சுடர் நூருமா நூராதா‘//

  இந்த நூருமா நூராதா பற்றி ஒருத்தரும் கேக்கேல்லப்போல. ஆச்சரியமாத்தான் கிடக்கு.

  அணையுமா அணையாதான்னு மக்கள் யோசிப்பாங்கன்னு நீங்க எழுதி முடிக்கிறதுக்குள்ள சன்னாசி, சுடரைத் தொடருவதாகச் சொன்னதில் அமைதியாயிட்டாங்க போல.

  சீரியசாக, பதில்களைப்படித்துவிட்டு இன்னொரு பின்னூட்டம் போட்டுக்கிறேன்.

  -மதி
  9. Mathy Kandasamy Says:
  March 13th, 2007 at 1:01 am

  பொடிச்சி,

  பல பதில்களை உள்ளத்துக்கு அருகில் (felt close to heartக்கு என்னுடைய பெயர்ப்பு. 😉 ) உணர முடிந்தது. ஏறக்குறைய எல்லாவற்றிற்குமேதான். குறிப்பாக 1,3,4,5. விரிவாக எழுதலாம். ஆனால், உணருவதை எழுத்தில் வடிக்க பொடிச்சிமாதிரிச் சில ஆக்களாலதானே முடியுது. எங்களமாதிரிச் சிலபேர் அலம்புறதோட சரிதானே. 🙂

  அருமையான பதில்களுக்கு நன்றி பொடிச்சி.

  -மதி
  10. பொடிச்சி Says:
  March 13th, 2007 at 1:29 am

  //உணருவதை எழுத்தில் வடிக்க பொடிச்சிமாதிரிச் சில ஆக்களாலதானே முடியுது.//
  அப்பிடியெல்லாங்கூடவா நம்பிக்கை 😉

  //ஏனுங்கம்மிணி இந்த சிகரெட் லைட்டர்ல நீங்க வித்தை காட்டினதெல்லாம்..//
  என்ன, எங்க? எல்லாருக்குமே ‘மப்பு’த்தான் போல…
  11. மங்கை Says:
  March 13th, 2007 at 1:58 am

  இது வரை உங்க பதிவ நான் படிச்சதில்லை..இப்ப சுடரின் வெளிச்சத்தில் தான் உங்களை அடையாள காண முடிஞ்சது..

  கருத்துக்களை நாங்கள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்குடுத்த நதிக்கும் கொடுத்த உங்களுக்கும் நன்றிகள்..

  //இதிலே இப்போது அவர்கள் அதிகம் எழுதுகிறார்கள் என்றால், இந்த வெளியின் ‘பாதுகாப்பை’ (அதன் எல்லா அர்த்தத்திலும்) உணர்ந்து தம்மை வெளிப்படுத்த தொடங்குகிறார்கள் என்று கூறலாம். அது பல்கிப் பெருகி மனத்தடைகள் களையப்படுகிறபோது அவர்களிடமிருந்து நேர்மையான எழுத்துப் பிரதிகள் பலவும் கிடைக்கக் கூட செய்யலாம்!//

  உண்மை…

  //அப்புறம் விளங்காததும் ஒன்றும் குற்றமில்லை. பயிற்சி சார்ந்தது. ஆர்வம் சார்ந்தது. அவ்வளவே. ஆகவே, “புரியாம” எழுதிறதையும் குற்றமாக்கி வேண்டுகோள்களை முன்வைப்பதற்கான மனநிலையையையும் இந்த அடிப்படையில் இருந்து யோசிக்கவேண்டும்//

  வாஸ்தம் தோழி…நானும் இதை இப்பொழுது இதை உணர்கிறேன்…சில தலைப்புகளும், கருப்பொருளும் சில சமயம் ஈர்த்தாலும், நடை புரியாத போது தொடர முடியாமல் வேறு வேலையை பார்ப்பதுண்டு..ஆனால் ஆர்வம் உண்மையானால் படிப்போம் என்று படிக்க ஆரம்பித்த பிறகு, இன்று அந்த சலிப்பு இல்லை..

  மட்டுறுத்தல் பற்றிய கேள்விக்கான பதிலை காண ஆவல்..

  நன்றி பொடிச்சி
  12. பொடிச்சி Says:
  March 13th, 2007 at 2:17 am

  நன்றி மங்கை…
  13. ஈழநாதன் Says:
  March 13th, 2007 at 9:25 pm

  //(எப்படியெல்லாம் உவமானங்கள் பிய்ச்சுக்கொண்டு வருது… ‘உன்னதமான கவிதைகள’ எழுத வேண்டிய ஆள், வீணாப் போனன். சா).//

  இதை மிகவும் ரசித்தேன் மற்றும்படி எல்லாப் பதில்களும் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரியே வந்திருக்கின்றன.(பொடிச்சி ஸ்ரைலில்)
  14. பொடிச்சி Says:
  March 13th, 2007 at 10:00 pm

  ‘உ.கவிதைகள் எழுதாது வீணாய்ப் போனதால்’ இரசிக்க முடிந்தது 🙂 !!!

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: