Home > அஞ்சலி, ஈழம்/தொடர்புடையன, சிறுபான்மை அரசியல் > “கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில்

“கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில்

Hrant Dink (1954-2007)
hrant
i.
துருக்கியில் வாழ்ந்த ஆர்மினியப் பத்திரிகையாளரான Hrant Dink, யனவரி.19.2007 அன்று அவரது பத்திரிகையாலயத்துக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். Rakel-இன் கணவரும் 3 பிள்ளைகளின் தகப்பனுமான, 53 வயதான அவர், துருக்கியில் அரசாங்கம் மறுத்துவருகிற 1915-17 ஆர்மினிய இனப்படுகொலைகள், பேச்சுச் சுதந்திரம் மற்றும் அத் தேசத்தின் ஏனைய சிறுபான்மைகளிற்காகவும் அந்த மண்ணிலேயே தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த ஒருவர். ஆர்மினியர்களுக்கும் துருக்கியர்களுக்குமிடையே உரையாடலை ஏற்படுத்த முயன்ற இருமொழிப் பத்திரிகையான Agos-இன் ஆசிரியர்.

“தெரிய வரும்” பாலியல் வன்முறைகளோ அல்லது இதுபோன்ற கொலைகளோ எந்த வன்முறைக்கும் ஒரு அடிமட்ட உறுப்பினனை “தண்டித்து”விட்டு விசயத்தை மூடிவிடுவதற்கு இணங்க – இந்தக் கொலைக்கும் பின்னிருந்து இயக்கியிருக்கக் கூடியவர்கள் (துருக்கிய தேசியவாதிகள், deep state (அரசின் நிழல் உலகம்?!)) தவிர்த்து- ஒரு 16-17 வயது இளைஞன் கைதாகியிருக்கிறார். இந்தக் கொலையைச் செய்திருப்பினுங் கூட யாரதோ பலியாடாகவே இருக்கக்கூடிய இந்த இளைஞர் -’செய்திகள் தெரிவிக்கிறபடி’- சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஓடியது security camera-வில் பதிவாயிருக்கிறது. உடனடியாக, துருக்கியில் பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் அதிர்ச்சி, கண்டனம் தெரிவிப்பு, எதிர்ப்பு, ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், Agos காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம், தலைப்புச் செய்திகள்: “Turkish-Armenian writer shot dead”, “It Was Turkey That Was Shot Dead”….. பொறுங்கள், எல்லாம் சீக்கிரம் ஓய்ந்துவிடும்.

ii.
(எனக்கு) பெரிதும் பரிச்சயமற்ற ஹிறான்ற் டிங்கின் மரணம் துப்பாக்கிமுனையில் வீழ்த்தப்பட்ட, வீழ்த்தப்படும் பல குரல்களையே நினைவூட்டிப் போனது; அதனால் மட்டுமே அதைக் கடந்து போகவும் முடியவில்லை. gunned down / shot down என்கிற சொல் சகல அதிகாரங்களின் முன் மிகச் சிறிய மனிதனாக (ஓர் அற்ப ஐந்துவாக) விழுத்தப்படுதலின் சொல்லாக, மிகப்பெரிய ஆயுதங்களின் முன் இயலாமைகளின் அடையாளமாக அர்த்தப்படுகிறது; தன்னைத் தாக்க வரும் ஒருவனிடமிருந்து தப்பத் தெரியாத சிறுவன்போல அச்சமூட்டுகிறது.

50களில் இருக்கிற தோழரொருவரும் அதே வயது அவரது ஆர்மினிய நண்பர் முராட் உம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தவளாகவே வரலாற்றில் ஆர்மினியர்கள் பற்றிய, ஆர்மினிய இனப்படுகொலைகள் பற்றிய, அதன் பிறகு புலம்பெயர் ஆர்மினியர்கள் (Diaspora Armenian) இருப்பு பற்றிய எனது அறிதலும் நிகழ்ந்தது. மதச் சடங்குகள் பற்றியதாகத் தொடங்கிய அந்த உரையாடலில், எனது தோழர் ‘இந்து மதம்-ஐயர்கள்-சமஸ்கிருத மந்திரம்-புரிதலின்மை-அர்த்தமற்றது’ என்பதாகக் கூற, முராட்டும் “ஆர்மினியர்களது தேவாலயச் சடங்குமும் அப்பிடித்தான். மிக மிகப் பழமையானது. சடங்கு மொழி புரியாது. வணங்குதல் நேரம் நீளமாய் வேறு இருக்கும். நாங்கள் வேறு வழியில்லாமல் போயிருந்திற்று வருவோம். மகள்மார் வரவே மாட்டார்கள்” எனவும், தோழரும் சுவாரசியம் மேலிட, “ஓ அப்பிடியா, அப்பிடியா” என்ற கேட்டுக் கொண்டிருந்தார். எங்கும், மனிதர்களுக்கு விளங்காத மொழிதான் கடவுளுக்கு விளங்கும்! அப்படியாகத்தான் மனிதர்களுடன் அவர் திறந்த உரையாடல்களுக்குத் தயாரானவராய் இருக்கிறார்!

இப்படியாய், ஆர்மினியா-கனடா, ஈழம்-கனடா என அவர்களது உரையாடல்களிடையே மாறி மாறிப் போய்க் கொண்டிருந்த பிறகு, ஒரு (புலம்பெயர்) ஆர்மினியனது வாக்குமூலமாகவே அவர், முதலாம் உலக யுத்த காலம் – தனது மாமா/சித்தப்பர் வயதுடைய இளைஞர்கள் ஒவ்வொருவராக “காணமல்போன கதை”யைக் கூறினார். பரிச்சய உணர்வுடன் கேட்டுக்கொண்டிருந்த தோழரிடம், ஒரு குறிப்பிட்ட வயது தலைமுறையே தங்கள் உறவு வட்டங்களில் இல்லாது போனதைக் குறிப்பிட்டார். ‘படுகொலைகளின் வரலாறு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருக்கிறது; நாம் அறிந்திராத இனமும் ஒத்த கதைகளுடனே திரிகிறது’ – இப்படியாய் அந்த உரையாடலின் சாரம் இருந்தது. பிறகு ஆர்மினியப் படுகொலைகள் பற்றித் தேடிப் படித்தபோது, சமகாலத்தில் எம்மைச் சூழ நடக்கிற வன்நிகழ்வுகளுள் (அல்லது “எனது துயரமே கொடியது” என்பதன் கீழ், சமகாலத்தில் எமது மக்கள் அனுபவிக்கிறவையின் முன்), இவர்கள் -ஏறத்தாள ஒன்பது தசாப்தங்களிற்கு முன்னார- 1915-17களில் நடந்த ஒன்றை தூக்கிப் பிடித்துத் திரிதல் முரண்டியது. ஆனால் “இலக்கங்களை” நேசிக்கப் பழக்கிய ஊடகங்களுள் இருந்து வந்தவளாய் “அன்று மில்லியன் கணக்கான ஆர்மினியர் கொல்லப்பட்டார்கள்” என்பது திருப்தியூட்டியது (நாம் வாழ்ந்திராத நிலத்தில் நிகழும் ஓர் குண்டுவெடிப்பில், போர்க்களத்தில் -எம்மிடம் அனுதாபம் பொங்கிவர – கொல்லப்பட்டவர்களின் கூட்டுத் தொகை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதுதானே?).
எனினும் – நிகழ்ந்த ஒன்றை மறுப்பது அதன் பேரான காயத்தை/கோபத்தை எப்போதும் ஆற விடாது மீளத் தாக்கும் ஒன்றாகவே இருக்க முடியும் என்பதுவரை எனக்குத் தெரிந்திருந்தது. பெண்களாய்-குழந்தைகளாய் மனிதர்கள் அனேகமானவர்கள் அறிவார்கள் தமக்குள் அடக்கி வைத்திருக்கவேண்டிய ஏதாவது ஒரு காயத்தை. பாலியல் வன்முறை போலவே, சிறுவர் பாலியல் ஒடுக்குமுறைகளும் குடும்பங்களில் மெளனம் ஊடாகவே அணுகப்பட்டிருக்கிறது. அந்த “துர்”சம்பவம் பற்றி பேசாதிருப்பது அதை மறக்கடிக்கும் என்றும், அல்லது அதனால் “தாங்களும்” பெற்றிருக்கக்கூடிய ”அவமானத்தை” ஆற்றும் என்றும் ‘பெரியவர்கள்’ நம்புகிறார்கள். அதைப் பேசாது விடுவதூடாக அதன் இருத்தலை (existence) இல்லாதொழிக்க முடியும் என்று, அவர்கள் தமது வசதிக்காய் அதனை மூடிவிட – ஒரு குழந்தையின் மனதுள் விசம்போல அவன(ள)து அத்தனை பருவங்களிலும் கூட வருகிறது அது. ஆகவே, யுத்தத்தை அறியாத ஒருவராய் இருப்பினுங் கூட, தம்மை ஒடுக்கிய நிகழ்ச்சிகளை பேச மறுக்கிற சூழலுள் வளர்ந்திருக்கக்கூடியவர்கள் அறிவார்கள், அது எப்படி தம்மை அழித்தது என்று. இன்றும், ஈழத்தில் இந்திய அமைதி(?)ப்படை செய்த மனித உரிமை மீறல்களை மறுக்கும் போக்கை (IPKF denials) இணையத்தில் காணலாம். தேசீய’வாதம்’ எத்தகைய வெறிமிக்க மனிதமற்ற ஈனக் குணம் என்பதை அதன்பேரில் சகலத்தையும நியாயப்படுத்தத் துணியும் பலரதும் போக்கைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இத்தகைய போக்குகளை -பாதிக்கப்படாதவர்கள் ‘வேடிக்கை’ பார்க்கும்,- ஒரு சைட் எடுத்துப் பேசும் பழக்கத்தின் நோய்க்கூறாக விளங்கிக் கொள்ள முடியுமாயினும், காயங்களுடன் இருக்கிறவர்களை முழுப் பைத்தியக்காரர் ஆக்குவது போல – “நடந்ததை மறுப்பது” நடக்கும்.

ஹிறான்ற் டிங்க், அது, துருக்கிய தேசீயவாதிகளால் மறுக்கப்பட்ட -அதற்காய் சட்டத்தின்முன் நிறுத்தப்படுகிற – சூழலிலும், எதிர்ப்பு சர்ச்சைக்குள்ளானபோதும் ஆர்மினியப் இனப் படுகொலை பற்றி தொடர்ந்து பேசி வந்தவர், ஒன்றின் இருப்பை உறுதி செய்வதூடாகவே அதன் பேரான வலிகளையும் இழப்புகளையும் ஆற்ற முடியும் என நம்பியவர். “இப்படியானதொரு கொடுமையை தாங்கள் செய்திருக்க முடியாது” என நம்புகிற இயல்பில் ‘நல்லவர்களான’ மக்களை அணுகியவர்; அமெரிக்கா, ஐரோப்போ போன்ற பெரும் சக்திகளின் அரசியல் ஆதாயங்கள், தலையீடுகளின்றி தங்களிடையேயான பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று, இரு இனங்களிற்கிடையான உரையாடலை வளர்க்குமுகமாக ஆர்மினிய, துருக்கிய இரு மொழிப் பத்திரிகையைக் கொண்டுவந்தவர்.

அவர்: புலம்பெயர் ஆர்மினியர்களை அக் கொடிய நாட்களின் வலியிலிருந்து வெளிவருமாறும் துருக்கியர்மீதான ஆத்திரம் ஆர்மினிய இரத்தத்தில் விசமாய் இருப்பதாகவும் கூறி, அடுத்த கட்டமாக, அவர்களை சுதந்திர ஆர்மினியாவில் கவனம் செலுத்துமாறு எழுதினார். சொன்னதில் உள்ளடக்கத்தை விட்டுவிட்டு சொன்னது தவிர மீதி “எல்லாவற்றையும்” திரித்து, விளங்கிக் கொள்கிறவர்களாய் தேசீயவாதிகள் “துருக்கிய இரத்தம் விசம்” என்றெழுதியதாக எடுத்துக்கொண்டு – “துருக்கித்தன்மைகளை” (Turkishness) அவமதித்ததாக (Article 301 Turkish penal code இன் கீழ்)- அவர்மீது வழக்குப் போட்டார்கள். அதனூடாக வழக்கறிஞர்களான தேசீய வெறியர்களால் கடும் கேள்விகள் கேட்கப்படுவதற்கு நிறுத்தப்பட்டார்.

இறுதியாய் டிங்க் சம்பந்தப்பட்ட பிற இரு வழக்குகள், துருக்கியில் பள்ளிக் குழந்தைகள் தினமும் எடுக்கிற சத்தியப்பிரமாணம் மற்றும் துருக்கிய தேசீய கீதத்திலுள்ள வரிகள் குறித்தது. “எனது சிறு வயதிலிருந்து உங்களுடன் சேர்ந்து நான் இந்த தேசீய கீதத்தை பாடினேன். சமீபத்தில், இதிலுள்ள ஒரு பகுதியை என்னால் தொடர்ந்து பாடவோ அமைதியாயிருக்கவோ முடியாது. நீங்கள் பாடுங்கள், நான் பிறகு இணைந்து கொள்கிறென். எனது வீர இனத்தில் நான் புன்னகைக்கிறேன்… இந்த இனத்தின் வீரம் எங்கிருக்கிறது? நாங்கள் பிரஜாவுரிமை குறித்த கருத்தியலை தேசீய ஐக்கியம், மற்றும் வீர இனத்தின்மேலாக உருவாக்க முயலுகிறோம். உதாரணத்திற்கு, கடின உழைப்பாளிகளான எனது மக்களை நோக்கி புன்னகைக்கிறேன் என்றிருந்தால்… உங்கள் எல்லோரையும்விட உரத்து நான் அதைப் பாடுவேன், ஆனால் அது அப்படியில்லை. “நான் துருக்கியன், நேர்மையானவன், கடின உழைப்பாளி” – இதில் நேர்மையும், கடின உழைப்பும் பிடித்திருக்கிறது, அதை உரத்து கத்துகிறேன். நான் துருக்கியன் என்ற வரியை புரிந்துகொள்ள முனைகிறேன், நான் துருக்கியை சேர்ந்தவன் என்பதாய்.{”Since my childhood, I have been singing the national anthem along with you. Recently, there is a section where I cannot sing any longer and remain silent. You sing it, I join you later. It is: Smile at my heroic race…. Where is the heroism of this race? We are trying to form the concept of citizenship on national unity and a heroic race. For example, if it were Smile at my hard-working people…, I would sing it louder than all of you, but it is not. Of the oath I am Turkish, honest and hard-working, I like the ‘honest and hard-working’ part and I shout it loudly. The I am Turkish part, I try to understand as I am from Turkey.” (hurriyet, துருக்கிய பத்திரிகை)}

இனம் என்பதில் தரப்படுகிற அழுத்தம் பாகுபாடின் ஒரு வடிவம், ஆகவே அத்தகைய வரிகளில் தனக்கு உடன்பாடில்லை என்று விமர்சித்திருந்தார். {கனடிய தேசீய கீதத்தைப் பகடி செய்யும் “o..canada! my home and on native land” “எனது நாடு பூர்விகக் குடிகளின் நிலத்தின் மீது” என்ற எதிர் வரிகளை குறிப்பிடத் தோன்றுகிறது. எந்த தேசீய கீதம்தான் பாகுபாடற்றது? -சங்கிலியன் கோட்டை, சோழர் ஆட்சி செய்த பூமி இத்தியாதிகளுடன்- எமது வரலாற்று இனத்தின் மீது மனம் கிறங்கிக் கிடக்கையில் இவற்றின் பின்னிருக்கும் வன்முறைகளின் இழிந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம். முக்கியமாக மதம் மாறிய குற்றத்திற்காக சங்கிலிய மன்னன் கொன்றொழித்த உயிர்கள்).

டிங்க் கொலைசெய்யப்படும்வரை இத்தகைய வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தார். வெறுப்பைக் கக்கும் கடிதங்களால், கொலை அச்சுறுத்தல்களால் நிறைந்த மின்னஞ்சல்களாலும், தொலைபேசியாலும் அவரும் அவரது குடும்ப அங்கத்தவர்களும் மனஅமைதியின்மைக்கு உள்ளானபோதும், அது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் அவை தொடர்பாய் -ஆச்சரியத்திற்கிடமின்றி- எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. CPJ-இற்கான பேட்டியில் கூட ‘துருக்கியிலுள்ள deep state, தன்னை அமைதியாய் வைத்திருக்கவே விரும்புகிறார்கள், தான் ஆர்மினியன் ஆகையால் தனக்கு பாடம் கற்பிக்க முயலுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். டிங்கின் கருத்தியல் -புலம்பெயர் ஆர்மினியர், ஆர்மினிய தேசத்தின் பிரஜைகள், துருக்கிய ஆர்மினியர்கள் மற்றும் துருக்கிய பிரஜைகள் ஆகியவர்களை உள்ளடக்கிய- “four way mirror”என்கிற நான்கு தளங்களில் இயங்கியதாகக் குறிப்பிடுகிறார்கள். சகல பக்கங்களினதும் எதிர்ப்பை பெறக் கூடிய டிங்கின் இவ் வேறுபட்ட அணுகுமுறைக்கு பழக்கப்படாத சூழலே அவரது முடிவினதும் காரணமாக அமைந்திருக்கிறது; தங்களை நோக்கிய நேர்மையான உரையாடலை நிறுத்துவதற்கு கொலை விசையை அழுத்துதல் மட்டுமே மிக இலகுவான காரியமாக இருக்கிறது.

iii.
எதையும் விவாதிக்கப் பயந்த அல்லது விமர்சனங்களை மட்டுமே “சந்தேகிக்கிற”
விவாதத்தின் ஆரம்பத்திலேயே அதன் முடிவையும் அறுதியான ‘ஒரு’ பதிலையும் கேட்கிற – யாரும்
சரி அல்லது பிழை
கறுப்பு அல்லது வெள்ளை
இதற்கு இடையில் வேறெதையும் பேச விரும்புவதில்லை (அப்படி பேசுபவர்கள் அந்த ‘ஒத்துக்கொள்ளப்பட்ட’ இரண்டு பக்கத்தினதும் சந்தேகத்திற்குள் வருவார்கள்!);
இதற்கு இடையில் எந்தக் குரல்களும் இல்லவே இல்லை, இருக்கவே முடியாது!
இருந்தாலும் அவை தவறானவை என்று ‘அடித்து’ச் சொல்கிற பெரும்பான்மைச் சூழலில்
-அப்படி ஒரு சூழலையே எனது மொழியிலும் பகிர்கிறவளாக – “I challenge the accepted version of history because I do not write about things in black and white. People here are used to black and white; that’s why they are astonished that there are other shades, too.” {வரலாற்றின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்தை நான் கேள்விக்குட்படுத்துகிறேன். ஏனெனில் வெள்ளை அல்லது கறுப்பு என்கிற ரீதியில் நான் விசயங்களை எழுதுவதில்லை. இங்குள்ளவர்கள் அதற்கே பழகிவிட்டிருக்கிறார்கள்; அதனால்தான், அவை தவிர வேறு நிறக் கலவைகளும் உண்டென்பது அவர்களிற்குத் திகைப்பூட்டுகிறது} என்ற டிங்கின் குரல் முக்கியமாகப் படுகிறது. உண்மையில் அத்தகைய குரல் ‘அர்த்தமற்றது’ எனில் [40-60 000 ஆர்மினியர் இருக்கிற துருக்கியில்] ஆகக் குறைந்த 6000 பிரதிகளே விற்ற ஒரு பத்திரிகையின் ஆசிரியரது இருப்பு ஏன் அதிகாரமையங்களை அச்சுறுத்தியது? பேசப்படுவதற்கு இலாயக்கற்ற என அவர்கள் கருதிய வரலாற்றை அவர் பேசிக் கொண்டே இருந்தார். அத்துடன் பேச்சுரிமை, பதிப்புச் சுதந்திரம் – இவற்றின் முக்கியத்துவத்தை அதன் முழு அர்த்தத்தோடு விளங்கிக் கொண்டவராக இருந்தார். ஆர்மினியர்களுக்கு சார்பாக, ஆர்மினியப் படுகொலைகளை யாரும் மறுப்பதை ஒரு ‘குற்றமாக’ ஆக்கும் பிரெஞ்சுப் பாராளுமன்ற மசோதாவைக்கூட எதிர்த்திருந்தார் (”If this draft becomes a law, I will be among the first who will travel to France to try to break it. And let Turkey and France compete over who’s going to throw me in jail first”). துருக்கியில் வெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுப்பவர்களும் பிரான்ஸில் மறுப்பவர்களும் ஒரே மனநிலையில் இருப்பதையே அது காட்டுவதாக அவர் விமர்சித்தபோது -அத்தகைய சந்தர்ப்பங்களில்- புலம்பெயர் ஆர்மினியர்களாலும் ‘தவறாகவே’ விளங்கப்பட்டிருந்தார்.

-உரையாடல்கள்/விவாதங்கள்/விமர்சனங்கள் இல்லாமல் மாற்றங்கள் கிடையாது
-அவற்றுக்கான தடை அதை விதிப்பவர்கள் தவிர்த்து யாருடைய நலனினதும் பெயரில் அல்ல
-குடும்ப, அரசியல், சகல தளங்களிலும் எதிர்/மாற்று/பிற/மற்றைய கருத்துக்களை அனுமதிக்கப்படவேண்டும்; -எந்த அனுமிக்காகவும்- மனித உரையாடல் காத்திருப்பதும் இல்லை. அந்த வெளி ஒரு கட்டாயம். ஒரு (அடிப்படைத்) தேவை.

இவற்றை வலியுறுத்துவது போல, தனது “இன” நலனின் பொருட்டு ஒரு சட்டம் கொண்டவரப்படுமாயினுங் கூட அதன் பிரதிபலன் (பேச்சுச் சுதந்திரத்திற்கு எதிரானதென்பதைக்) கருதி, அதை “விமர்சிக்க’த் தயங்காத ஒருவருக்கு எனது அஞ்சலிகள். யனவரி 23: இஸ்ரான்bபூலில் ஆயிரக் கணக்கான மக்கள், Agos காரியாலயத்திற்கு முன்னால் அவரது இறுதி ஊர்வலத்தில் துருக்கிய, குர்திஸ், ஆர்மினிய மொழிகளில் “நாங்கள் எல்லோரும் ஆர்மினியர்கள்” “நாங்கள் எல்லோரும் Hrant Dink” “301தான் கொலையாளி” போன்ற குரல்களைத் தாங்கியபடி குழுமியிருக்க, அவரது மனைவியும் மகள்களும் புறாக்களைப் பறக்க விட்டார்கள்.

வரலாற்றில் Hrant Dink: ஆக இன்னொரு பெயர்! அப்படியாகக் கொலைகளைப் பழகிப்போன வரலாறு மேலும் பெயர்களையே கூட்டிக்கொண்டு நகர்கிறது; கண்டனங்களும் எதிர்ப்பும் ஒவ்வொருவர் சார்புகளைப் பொறுத்து உடனடியாகவோ தாமதித்தோ பதியப்படலாம்; இறுதியில் பெயர்களே எஞ்சுகின்றன.

கொலை செய்யப்படுவதற்கு முன் வழங்கப்பட்ட செவ்வியொன்றில், “உங்களுடைய பத்திரிகையில் நீங்கள் சிறுபான்மை ஆர்மினியர்களுக்காக மட்டுமல்ல, துருக்கியிலுள்ள எல்லா சிறுபான்மைகளிற்காகவும் குரல் கொடுக்கிறீர்கள். உங்களுக்குப் பயமாய் இல்லையா?” எனக் கேட்கப்பட்டபோது டிங்க் கூறினார்: “நிச்சயமாக, இருக்குத்தான். உண்மையைச் சொன்னால், நாளும் பொழுதும் நான் அச்சுறுத்தலை உணர்கிறேன். புறாவைப் பார்த்திருக்கிறீர்களா? அது தொடர்ந்தும் தன் தலையைத் திருப்பிக் கொண்டிருக்கிறதைப் பாத்திருக்கிறிங்களா? ஒரு சிறு சத்தத்திற்கும் அருண்டு, எக் கணமும் பறந்து போகத் தயாராய் நிற்கும். அத ஒரு வாழ்க்கை என்று கூறுவீர்களா? வேறுபாடு என்னவெனில் என்னாற் பறந்து போக முடியாது.”

சரியாய் இரு தினங்களிற்குப் பிறகு, பட்டப் பகலில், தெருவில் சுட்டு வீழ்த்தப்பட்டுக் கிடக்கிற ஒரு தகப்பனின்/கணவனின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டுக் கிடந்தது. Dink was gunned down in broad daylight. அவ்வளவுதான்!

இப் பத்திக்கு உதவியவை:
(1) “Bad Blood in Turkey” கட்டுரை, spring – summer 2006, cpj[community to protect journalists] இதழ்
(2) செவ்வி: Hrant Dink: “I have the right to die in the country I was born in
(3) விக்கிபீடியா
(4) ஆர்மினியபீடியா
~~~~~~~~~~~~
(Hrant Dink கொலைசெய்யப்பட்டபோது எழுதியது, எனது கணிணியின் ஒத்துழைப்பின் காரணமாக இன்று ஒரு மாதத்திற்கும் மேலான பிறகு வலையேற்றப்படுகிறது, சில திருத்தங்களுடன்).


Advertisements
 1. peddai
  April 18, 2009 at 12:27 am

  4 Responses to ““கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில்”

  1. jimbo Says:
  February 26th, 2007 at 8:40 pm

  ஒரு பொடிச்சி
  இது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்கத்தொலைக்காட்சியிலே துருக்கிய-ஆர்மீனியப்பேராசிரியர்கள் மூவர் துருக்கி இனத்தவர் மூவரென விவாதம் மட்டுறுத்தி நடத்த முயன்றனர். ஒரு மணிநேரம் விளம்பரமேயில்லாத PBS; கடைசிவரை ஆளுக்காள் ‘நடந்தியது “இனவழிப்பா இல்லையா?” என்பது பற்றிப் பேசலாமா’ என்று பேசிக்கொண்டிருந்ததே.

  இரு வாரங்களின் முன்னால், (அமெரிக்காவிலே வாழும்)துருக்கியப்பெண் எழுத்தாளர் Elif Shafak அவருடைய The Bastard of Istanbul புதினம் பற்றிப் பேசுகையிலே இது பற்றி NPR வானொலியிலே பேசினார்.
  http://www.npr.org/templates/story/story.php?storyId=7388731
  இப்புதினம் ஆர்மீனியத்துருக்கியர் ஒருவரை மையப்படுத்தி எழுதப்பட்டதே.

  Atom Egoyan இனின் Ararat மிகவும் ஆர்மினியச்சார்பானதானாலுங்கூட, இப்பிரச்சனையைப் (அவரொரு ஆர்மீனிய வழிவந்தவரென்பதாலே) பேசும் படம்.
  2. Kannan Says:
  February 26th, 2007 at 11:54 pm

  //இவற்றை வலியுறுத்துவது போல, தனது “இன” நலனின் பொருட்டு ஒரு சட்டம் கொண்டவரப்படுமாயினுங் கூட அதன் பிரதிபலன் (பேச்சுச் சுதந்திரத்திற்கு எதிரானதென்பதைக்) கருதி, அதை “விமர்சிக்க’த் தயங்காத //

  மிகவும் நெகிழ்ந்தேன். அவருக்கு எனது அஞ்சலிகளும்…

  அப்புறம்,
  // நான் துருக்கியன் என்ற வரியை புரிந்துகொள்ள முனைகிறேன், நான் துருக்கியை சேர்ந்தவன் என்பதால்.//

  இந்த வரியின் முடிவு ” துருக்கியைச் சேர்ந்தவன் என்பதாய்” என்றிருக்கவேண்டுமோ?
  3. பொடிச்சி Says:
  March 1st, 2007 at 3:20 pm

  jimbo: பலவிடயங்களிலும் அடுத்த கட்டத்தைப் பேசாமல் -யாருக்கும் பயனளிக்காத, காயத்தை மட்டுமே மீளத் தாக்கக்கூடிய – பகுதிகளையே பேசிக்கொண்டிருப்பதாய் படுகிறது. சுட்டிக்கு நன்றி.
  Kannan: மொழி மயக்கம் 🙂
  மாற்றிவிடுகிறேன்.. நன்றி கண்ணன்.
  இப்படியானவர்களது இருப்பு நெகிழ்த்துகிற ஒன்றுதான். ஈழத்தில் ராஜினி என்றொரு பெண் இருந்தார். அவரது அர்ப்பணிப்பும் நேர்மையும் முடிவும் இவ்வாறே இருந்தது.

  இருவருக்கும் மீண்டும் நன்றி!
  4. தமிழ் வலைப்பதிவு » என்னைச்சுற்றி – 1 Says:
  March 14th, 2007 at 4:45 pm

  […] எழுத நினைத்த ஒருவரைப்பற்றிய இடுகை: கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில் […]

 2. peddai
  March 22, 2010 at 4:40 am
 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: