*பிள்ளைகள்… பிள்ளைகள்…

pillai
வ்வொரு மாலையும் அருகாமையில் ஒரு நூலகத்தில் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வாசிக்கின்ற புத்தகங்களில் குண்டு போடாத வானங்கள் பற்றிய கற்பனைகளை நாங்கள் தருகிறோம். விண்மீன்கள் மின்னும் இரவுகளில் குண்டுகள் போடாத விமானங்கள் அவர்களது சுவர்களை அலங்கரித்திருக்கின்றன; பிள்ளைகளுக்கான எமது கதைகளில் கற்பனைகளும் பயணங்களும் இருத்தலின் அத்தனை மகிழ்ச்சிகளும் வந்து போகின்றன.

யுத்த புலத்தில் பிள்ளைப் பிராயத்திற்கான அத்தனை ஆசைகளும் உயிர்வாழ்தல் என்ற ஒன்றையே சுற்றுகின்றன. அதற்கு அப்புறம்தானே எல்லாமும்?
யுத்தத்தைப் பற்றி பேசினோம்.
யுத்தத்தால் பாதிக்கப்படுவது அதை முகங் கொடுத்திருக்கிற மக்களின் வாழ்வு என்றால், அதில் தமது பெற்றோர் உறவுகளை இழக்கிற பிள்ளைகளின் வாழ்வு எந்த உத்தரவாதமுமற்ற வெளியில் விடப்படுகிறது. அதிலும் “பாதுகாப்பானவை” என நம்பப்படுகின்ற குடும்பம், உறவுகள் இவற்றுக்குள்ளேயே பாதுகாப்பற்றவர்களாய், இலகுவில் ஏய்க்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களான சிறுவர்களை யுத்தம் தெருவில் விடுகிறது, எச் சிறு பாதுகாப்பும் இன்றி.

இந்த வார செய்திகளில், தென் சூடானில் (மேன்மைதாங்கிய உலகின் காவலர்களான) ஐ.நா.”அமைதிப் படையினர்” 12 வயதிற்குட்பட்டவர்கள் உட்பட சிறுவர்கள்மீது பாலியற் சுரண்டல்கள் -துஸ்பிரயோகங்கள் வன்முறைகள்- செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கினிமேல் விசாரணைகள் நடக்கும்; பிறகு, ”அமைதி” வழங்கப்போன இன்னொரு நாட்டில் அவர்களது மீறல்களிற்கான தீர்ப்பை ஐ.நாடுகளே பார்த்தும் கொள்ளும்.

இச் செய்திகளும், அதிகாரமும் உடற்பலமும் உடையவர்களான பெரியவர்களின் ராட்சத உலகின் முன், மிகச் சிறிய மனிதர்களான சிறுவர்களது நிராதரவுநிலையையே வெளிப்படுத்துகின்றன.

இன்று – யுத்த தேசங்களை எல்லாம் சமூக நிலையங்கள், அரசுசாரா (NGOs) மற்றும் பிற உதவி வழங்கும் நிறுவனங்கள் சூழ்ந்திருக்கின்றன. எதிர்காலமற்ற பிள்ளைகளின் வாழ்விற்கு அவை முழு உத்தரவாதம் தராதபோதும் உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவுவதற்கென இருக்கின்றன; அரசுசாரா நிறுவனங்கள் குறித்து பல விமர்சனங்கள் எங்களுக்கு இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை.

சில வருடங்களிற்கு முன், நண்பர்கள் ஊடாக “உதவி” பற்றிய அறிமுகம் கிடைத்தது. “உதவி” பற்றி வலைத் தளத்தில் பின்வருவாறு இருக்கிறது:

 • இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு, கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி- உருவாக்கப்பட்டுள்ளது.
  வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களில் சிலர் இன, மத, மொழி வேறுபாடுகள் கடந்து சமூக அக்கறை கொண்ட வேறும் பல நாட்டவர்களின் ஆதரவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதே உதவி- இணையம்.
 • சமூகசேவை என்று வரும் நபர்களே பின்னர் பிரமுகர்களாகிவிடுவதும், நபர்களுக்கூடாகவே செயற்பாடுகள் பார்க்கப்படுவதும், கூட்டு வேலை முறை சிதைந்து தனிநபர்கள் முக்கியத்துவம் பெறுவதும் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு உதவி- நபர்களைப் பின் தள்ளி செயலை முன்னிறுத்தியுள்ளது.
 • உதவி- ஒரு நிறுவனமோ, குழுவோ அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல் கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல; சமூக அக்கறை கொண்டு உதவ முன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும் சுயாதீனமான ஒரு வழி மட்டுமே.
  இலங்கை அரசினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.
 • உதவி-யுடனான தொடர்புகளில் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், மொழிபெயர்ப்பு, இணையத் தயாரிப்பு, நிதியுதவி, ஆலோசனை, கண்காணிப்பு என்றும் இன்னும் பல வழிகளிலும் உதவி-யில் பங்கெடுக்கின்ற பெயர் அறியாத அனைவரும் உதவி-யின் பொறுப்பாளர்களே.பரீட்சார்த்த முயற்சியாக, முகம் தெரியாமலே கூட்டு வேலைமுறையில் இயங்கும் உதவி-க்கு தலைவர், செயலாளரோ, அலுவலகங்கள், கிளைகளோ இல்லை.
 • கூட்டுவேலைமுறை என்பதும் உதவி ஒரு அரசுசாரா நிறுவனமோ, அமைப்போல அல்ல என்பதும், அதன் “பின்னால்” யார் யார் இருக்கிறார்கள், அவர்களது அரசியல் உள்நோக்கங்கள் என்ன – இந்த குளறுபடிகள் எல்லாம் இல்லாமல், ஒரு போதுநோக்கில் செயற்படுகிற தன்மையும், “உதவி”-யை வேறுபடுத்திக் காட்டியது. பணத்தை சேர்த்து சிறுவர் இல்லங்களுக்கு கொடுப்பது மாத்திரமே “உதவி” செய்கிறது. அது அங்கு போய்ச் சேருகிறதா என்பனவை பணம் தந்தவர்களே சரி பார்த்துக் கொள்ள முடியும். உதவி இணையத்தளம் உட்பட அதன் கட்டுரைகள், குறிப்புகள், சிறுவர்களது படைப்புகளது மொழிபெயர்ப்புகள், சகலமும் தன்னார்வமாக செயற்படுகிற உதவி நண்பர்களாலேயே நடத்தப்படுகிறது. இப்படியொரு சுதந்திரமான, பெயர் முக்கியமற்ற சில தனிநபர்களின் கூட்டுவேலை முறை பிடித்துப் போக, சிறுவர்களது படைப்புகளூடாக நுழைந்த உலகம் பலவிதமான உணர்வுகளை எடுத்து வந்தது.

  பூக்களோடும் வண்ணத்துப்பூச்சிகளோடும் திரிந்த நிலங்களில் அவர்கள்
  *”பூவே,
  எனது அப்பா, அம்மா
  எங்கே என்றும் சொல்வாயா?

  என்றும்-

  **”கதவைத் திறந்தால்
  வெளியே
  இறந்த உடல்கள்தான்.
  நான் காண விரும்பியதோ
  அழகான
  பூக்களைத்தான்.

  என்றும்-
  தமதான எளிய வார்த்தைகளோடு கடந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு பதில் கிடையாது. ஆனால் அனர்த்தங்களினூடும் எஞ்சியிருக்கும் சிறிதளவு நம்பிக்கையை, எல்லையற்ற கற்பனையைத் தானும் விரக்தி பறித்திரக் கூடாது என்கிற எண்ணத்தையே அவை தந்துகொண்டிருந்தன.

  யுத்த நிறுத்தத் காலப் பகுதியில் (2004) இக் கவிதைகள் இல்லச் சிறுவர்களால் எழுதப்பட்டிருந்தன. பல நண்பர்களும் இலங்கை போன போது, இல்லங்களை பார்வையிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவளித்து அங்குள்ள நிலமைகள் குறித்து, சிறுவர்களின் மேலதிக தேவைகள் குறித்து, -இணையத் தளத்தில்- எழுதியிருந்தார்கள். பிள்ளைகளிற்கு எழுதப்பட்ட கடிதங்கள், அவர்களது கவிதை,கட்டுரை ஆக்கங்கள் குறித்து உதவி-வாசகர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் அவர்களிடம் சேர்க்கப்பட்டிருந்தன (தங்கள் மீதான மனிதர்களின் கவனம் (attention) அவர்களை மிகுந்த மகிழ்ச்சிப் படுத்தியது).

  யுத்த நிறுத்த காலத்திலேயே உதவியால் சேர்க்கப்படுகிற நிதி குழந்தைகளது உணவுக்கு மாத்திரமே போதுமானதாய் இருந்தது.
  இப்போது யுத்தம் ஆரம்பித்து, பிரதான வீதி மூடுபட்ட பிற்பாடு பிள்ளைகளின் நிலமை மோசமாகியிருக்கிறது. உதவி நண்பர் ஒருவர் பிள்ளைகளின் தற்போதைய நிலவரம் குறித்து எழுதியது கீழே:
  பிள்ளைகளின் நிலமை கவலைக்கிடம். றோட்டெல்லாம் மூடியிருக்கிற படியா அனுப்பிற காசையே அவையள் எடுக்கிறது கஸ்ரமாயிருக்குது. சாப்பாட்டிச் சாமான்களும் இல்லை. கூடின விலை குடுத்து வேண்ட அவையிட்டை காசும் இல்லை. தை பள்ளிக்கூடம் தொடங்கேக்க பிள்ளையளுக்கு, கொப்பி புத்தகங்கள் வேண்டவே நிறையக் காசு வேணும். காசிருந்தாலும் வாங்கிற நிலமையிருக்க வேணும்.

  பிள்ளைகள் இப்ப கவிதையோ, கதையோ எழுதிற நிலமை இல்லை.

  uthawi

 • உதவி குறித்த மதி கந்தசாமியின் பதிவு
 • உதவி இணையத் தளம்
 • உதவி வலைப்பதிவு
 • உதவ: pay pal / வங்கி விபரம்
 • (மேலே எடுத்தாளப்பட்டுள்ள கவிதைகள் எழுதிய சிறுவர்கள்: *விஸ்ணுகாந்தன் **விஜிகலா)
  above photo

  Advertisements
  1. peddai
   April 18, 2009 at 12:33 am

   8 Responses to “*பிள்ளைகள்… பிள்ளைகள்…”

   1. தமிழ்நதி Says:
   January 7th, 2007 at 1:43 am

   வாசிக்க மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இப்படி ஒன்று இருப்பதைப் பற்றி நான் அறியாதிருப்பதும்கூட. ‘உதவி’க்கு என்னால் உதவமுடியுமா என்று யோசித்தேன்… உதவமுடியும் என்றுதான் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி.
   2. பொடிச்சி Says:
   January 7th, 2007 at 4:55 am

   நன்றி தமிழ்நதி..
   3. P.V.Sri Rangan Says:
   January 7th, 2007 at 5:45 am

   (இந்தக் கவிதையை
   ‘இதுவரை கொலையாகிய- இனிமேலும் கொலையாகப்போகும்’
   அனைத்து மனிதர்களுக்கும்
   என் இரங்கலாகச் சமர்ப்பிக்கிறேன்):

   அச்சமும்
   அவலமும் அவரவர்க்கு வந்தால்…

   அன்புக் குழந்தைகளே!
   நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
   என்னிடமில்லை,

   கவித்துவமற்ற மொழியூடு
   வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
   வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர

   நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
   ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
   எம்மிடம் எந்த மந்திரமுமில்லை

   இரண்டும் கெட்டான் பொழுதுகளை
   மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
   ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை

   நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
   முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
   தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்

   நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
   குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
   என் செவிகளினூடாகவும் கேட்கிறேன்

   கண்கள் விரிகிறது
   அவற்றைப் பார்த்துவிட,
   எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!

   ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்

   பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய ‘ச்சீ’ ஒலி
   இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
   அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி

   எப்படி இந்தக் குழந்தைப் பருவம்…
   கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
   வேறெதையும் என்னால் செய்ய முடியாது,

   அன்னையை இழந்த சேயும்,
   சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
   அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
   புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்தற்கான
   எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்

   எனது மெழுகு திரியோ
   மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
   ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்
   எனக்காகவும்,

   போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
   ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
   புதிய பொழுது மலாரது போய்விடுமோவென்ற
   நெஞ்சத்து ஏங்கலில் ,

   உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
   பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்…
   பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
   கௌரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்…

   மேகங்களுக்குப் பின்புறம்
   எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
   மண்டியிட்டுக் கிடக்க
   இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட
   அனைத்து நித்யங்களும் மௌனித்துக் கொள்கின்றன

   இனி எவரும் வரமாட்டார்கள்
   இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
   நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
   அறுவடை செய்வதற்கான முனைப்புடன்

   மேசைகளில்’மற்றவர்களினது தவறுகளாக’கொட்டி
   கடைவிரித்தவர்கள் இப்போ
   அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
   மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது

   என்றபோதும் ,
   குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
   நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.

   11.02.05
   வூப்பெற்றால், ஜேர்மனி.

   ப.வி.ஸ்ரீரங்கன்
   4. somee Says:
   January 7th, 2007 at 6:17 pm

   நல்ல பதிவு.
   போரில் அகபட்டுள்ள குழந்தைகளின் வசங்கல் நிசம் பதிவு செய்யப் பட வேண்டியது அவசியம்.
   5. பெட்டைக்குப் பட்டவை » Blog Archive » **நன்றி நண்பர்களே…. Says:
   January 7th, 2007 at 8:03 pm

   […] விடைபெறுவதற்கு முன்னர், ஈழத்தில், யுத்த புலத்தில் வாழ நேருகிற பெற்றோரை இழந்த சிறுவர்கள் குறித்த பதிவை குறிப்பிட விரும்புகிறேன். தமது அன்றாட வாழ்விற்கான போதிய நிதியுதவி பெறாத சிறுவர் இல்லங்களில் வசிக்கிற இந்தப் பிள்ளைகளிற்கு உங்களில் உதவ இயலுமானவர்கள் உதவலாம்! குறிப்பிட்ட பதிவிற்கான சுட்டி: பிள்ளைகள்… பிள்ளைகள்… […]
   6. பொடிச்சி Says:
   January 21st, 2007 at 4:20 pm

   http://aatputhan.blogspot.com/2007/01/blog-post.html

   will reply to this soon.
   7. பொடிச்சி Says:
   March 1st, 2007 at 3:40 pm

   //இவை எதுவுமே உங்களிடம் இல்லை.உங்களிடம் இருப்பது , போலித் தனமான் கரிசனை.பாசாங்கு.
   மக்களின் பெயரால் உங்களை முன் நிறுத்தும் ‘வலைப்பதியும்’ பொழுது போக்கு ஒன்று மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கிறது.வெறும் பகட்டுக்கு மேலைத் தேய கனவான்களைப் போல ஒன்று இரண்டு சில்லறைகளை வீசி எறிய ‘உதவி’ என்று சில ‘சரிடிகள்’ ,உங்களைப் பற்றிய விம்பத்தை உருவாக்க. இவை மக்களின் துயரிற்கான தீர்வாகுமா? உங்களை விளம்பரப்படுதத் தான் இவை உதவும்.//

   தீர்வுகளைக் கேட்கிற அற்புதனின் இந்தப் பதிவில் “உதவி” என குறிப்பிடப்பட்டிருப்பதால் இது -நட்சத்திர வாரத்தில் தொடர்ந்த விவாதத்தை முன்வைத்ததாய் – என் சார்ந்தது என புரிந்து கொண்டேன். முக்கியமாக உதவி-சரிடிகள் என்கிற குறிப்பால்…

   எனினும் -யாரை நோக்கிக் கேள்வி கேட்கப்படுகிறது என்கிற அடிப்படை பெயர்-கூறல் அற்று ‘கிசுகிசு’ போல விடயங்களை எழுதுகிறபோது அதற்கு பதிலளிக்கவோ, அது எழுதப்பட்டதோ சம்மந்தப்பட்டவரிற்குத் தெரியாமற் போகவே வாய்ப்புள்ளது. நேர்மையான, ‘பதிலை வேண்டுகிற’, அது தரப்பட்டால் -அதை எதிர்கொள்கிற “தைரியம்” உடைய ஒருவர் யாரிடம் கேள்வி கேட்கிறோமோ அவரை நோக்கியே தைரியமாக கேட்கலாம். அதுதான் எந்த விடைகளிற்கும் இட்டுச் செல்லும்.

   நான் இங்கே உதவி பற்றி மட்டுமே சிலதைக் குறிப்பிட விரும்புகிறேன். முக்கியமாக எனது மேற்குறிப்பிட்டுள்ள பதிவில் நான் எழுதியதில் நுணுக்கி நுணுக்கி எழுதியதோ அது ஒரு ‘வழமையான” சரிட்டி வகைப் பண்புகளைக் கொண்டிராதது என்பதே. றெட் குறோஸ் போலோ, அல்லது எங்களது புனர்வாழ்வுக்கழகம் போலோ சரிட்டிகள் சேர்க்கிற பணத்தில் 40% to more சேர்ப்பவர்களிற்கு செல்கிறது (-சேர்ப்பதற்குக் கூலியாய்- அதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்; இது மேற்கின் சரிட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை. இதற்கும் அதிகமாக ‘எடுத்துக்கொள்ளப்படுகிறபோது’ சரிட்டிகளின் ‘அறம்’ பற்றிய கேள்வியை எழுப்புவார்கள்).அப்படியல்ல்லாம் அல்லாது தனிநபர்கள் இணைந்து பிள்ளைகளிற்கு பணம் சேர்த்து அதை அப்படியே அனுப்புகிற முறையே ‘உதவி’. இதில் அரசியல் எங்க வந்தது?
   உதவியைப் பற்றி எழுதுவதில் என்ன பொழுதுபோக்கு இருக்கிறது?

   உதவியுடன் இந்த வலைப்பதிவு பதிந்த காலம் தொட்டே எனக்கு பரிச்சயம் இருந்துவருகிறது. அந்தப் பரிச்சயம் அதன் நோக்கம் சார்ந்ததே தவிர, அரசியல் சார்ந்தது அல்ல. ஆனால் அது பற்றி எழுத முடியாமைக்கு ‘இன்னொரு சரிட்டி’ என்கிற ரீதியில அது பற்றி எடுத்துக்கொள்ள முடியலாம் என்ற தயக்கமும், ‘ஒரு விளம்பரம் போல’ எதைப்பற்றியும் எழுதுவதிலுள்ள மனத்தடையுமே காரணம் (இப்போது யோசிக்கிறபோது சில பிள்ளைகளின் சாப்பாட்டிற்கு முன், எங்களது ‘பதிவும்’ ‘மனத்தடையும்’ மண்ணாங்கட்டி என்று தோன்றுகிறது). மற்றப்படி, அறிவைச் சுரண்டுகிற, கனதியான கல்விச்செலவை உடைய ஒரு கல்வி அமைப்பை உடைய கனடாவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிற மாணவியாகிய நான் ‘உதவி’ யொடு தொடர்புபடுவது அதிலுள்ள சில ஆக்கங்களை மொ – பெயரப்பதூடாக மட்டும்தான். இரண்டு மூன்று சில்லறைகளைக்கூட வீசி எறிவதில்லை (அதனாலும் அப்படி எறிபவர்கள் அதையாவது செய்கிறார்களே என்றெண்ணுவதாலும் அதையிட்டு ‘விமர்சிக்க’ தேவையிருப்பதாய் நினைக்கவில்லை). உதவி: முற்றுமுழுதாக போரில் சிக்குண்ட பிள்ளைகளிற்கு உதவ ‘எந்த அரசியலும தேவையில்லை’ என்ற தெளிவுடைய ‘எல்லாவற்றிலும் அரசியலை நுழைக்கத் தெரியாதவர்களால்’ நடத்தப்படுகிற ஒன்று. தளத்தைப் போய்ப் பார்த்தால் அது தெரியும்.
   ‘உதவி’-ஐ இந்த வலைப்பதிவில் நீங்களோ யாரோ புரிந்துவைத்திருக்கிற ‘என்னுடன்’ தொடர்புபடுத்தவேண்டாம் என்று கூறவே இந்த பின்னூட்டம்.
   மீண்டும் உதவ முடிகிறவர்கள் -paypal இல் இரண்டு மூன்று டொலர்கள் கூட போடலாம்- உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
   8. பெட்டைக்குப் பட்டவை » Blog Archive » சிறுவர் இல்லங்களிலிருந்து பிள்ளைகள் வெளியேற்றம் Says:
   March 12th, 2007 at 4:24 am

   […] அன்புடன் – ஜசிகரன் 11.03.2007 ~ உதவி பற்றிய எனது பதிவு உதவி தளம் Posted by பொடிச்சி Filed in பொது […]

  1. No trackbacks yet.

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

  %d bloggers like this: