Home > ஈழம்/தொடர்புடையன, தமிழ்மண நட்சத்திரம்2007 > *”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம்

*”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம்

////…இக் கதை தனியே யுத்தத்தை பற்றியது மாத்திரமல்ல; இது கணவர்கள் மனைவிகள் பற்றியது, பெற்றோர்கள் குழந்தைகள், ரயிலில் சந்திக்கிற அந்நியர்கள், …. மற்றும் இது மனிதர்கள் உச்சரிக்கின்ற சொற்களுக்கும் அவர்களது உணர்ச்சிகளுக்குமான மாபெரும் இடைவெளி பற்றியது.
.. கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் -அவர்களுக்கு பெயர் தரப்படாதபோதும்- தனித்து தெரிகிறார்கள். …இதில் வருகிறவர்கள், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கோ இடத்திற்கோ உரியவர்கள் அல்லர். [ஆனால்] அவர்களுடைய பெயர்களை நாம் அறிவோம்; அவை எங்களுடையவை. ” //

21 Great Stories (தொ – ர்: Abraham H.Lass, Norma L.Tasman, பதிப்பு: 1969) என்ற சிறுகதைத் தொகுப்பின் முதலாவது சிறுகதையான “போர்” பற்றிய தொகுப்பாளர்களின் குறிப்பு
maveerar.JPG
சிறு கிழவியொருத்தியின் பத்தோ என்னவோ மகன்களில் இளையவன், தனது 39-ஆவது வயதில், அகாலமாய் இறந்து போனான். யுத்தமல்ல, அது ஒரு அகால மரணம். இறக்கும் போது, மனைவி மற்றும் நாலோ ஐந்தோ பிள்ளைகள் கூட இருந்தன. லெளகீக வாழ்வின் இன்பங்களனைத்தையும் அனுபவித்தே போனது அவனது உடல். விட்டுச் சென்ற 28 வயதேயான ஒரு இள மனைவியின் உணர்ச்சிகள் சாகடிக்கபடும் நெடுந்தூரத் தனிமையும், மறுமணம் என்பதே சிந்திக்கப்படா குழந்தைகளின் எண்ணிக்கையும் சமூகமும் தவிர – காலம் மூடிவிடக் கூடியது அந்த மரணம். ஆனால் அந்த இள மனைவியின் துயரத்தை இளமையை அரித்துக் கொண்டு காலம் போன போக்கின் பின்னும், மேலும் ஒன்பது பிள்ளைகளை உடையவரான அந்தக் கிழவி, பல காலமாக குங்குமமும் சரிகைச் சேலையும் கட்டிக் கொண்டதில்லை. “மகனிறந்ததிலிருந்து” அப்படித்தானென்று சொல்லுவார்கள். எல்லாவற்றையும் அனுபவித்து மறைந்த ஒரு செல்வந்தப் பிள்ளையான அந்த 10 இல 1 மகனுக்காக!!
ஈழத்தில் 80களில் ஆரம்பித்த போராட்டத்துடன் “வீடு திரும்பாத மகன்”{ஒளவை} களதும் மகள்களதும் எண்ணிக்கைப் பெருகப் பெருக, பெற்றவர்கள் கொடியதொரு போருக்கு அதன் எண்ணற்ற எதிரிகளிற்கு தமது பிள்ளைகளை பறிகொடுக்க ஆரம்பித்தார்கள். ஊர்வசி போன்ற கவிஞர்களின் வரிகளில் வந்த, அந்த “புத்திரசோகத்தை” -இதுவரையிலும்- எந்தச் சொற்களாலும் தடவிக் தணிக்க முடியவில்லை. செத்த தனது மகனின் மகன் திருமணம் செய்கிற வயது வந்த பிறகும் கூட “ஐயிரண்டு திங்களாய்” என்ற பாடலை ஊர்ப் பெண்மணி ஒருவர் பாட, எனதந்தக் கிழவியின் ‘கிழண்டிய’ கண்களை தனது பிள்ளையின் இருப்பை வேண்டிய கண்ணீர் நிறைத்துக் கொண்டே இருந்தது; இன்று யுத்தம் தீண்டிய கிராமங்களில் எல்லாம் கண்ணீர்தான் நிறைந்துகொண்டிருக்கிறது

எங்களது இலக்கியப் பிரதிகளில் அவை மையமாய் இருந்திருக்கின்றன. வீரசாகச கதைகள் எனில் அவற்றில் அந்தந்தக் கொள்கைகளின் முலாம் பூசப்பட்டிருக்கலாம்; எந்த எந்த நியாயங்களோ, பொது இணைவாய், “சாகக் குடுத்த” தமது பிள்ளைகளை ஏதோ வழியில் அவை பின்தொடர்ந்தன.

‘எல்லாரும்தானே சாகக்குடுக்கினம்” என்று சொன்னார் உறவினர் ஒருவர்.
வன்னியின் கிராமங்களில் பிள்ளைகள் “பிடிக்கப்படுகிறார்கள்” என்கிறபோது “எல்லாரும்தானே”என்றார் ஐரோப்பாவிலிருந்து இன்னொருவர். தனதுது குழுந்தையின் செல்லக் குரலிற்கு பதிலளித்தவாறே அதைச் சொல்ல அவரால் முடிகிறது. ஆனால் தொலைதூர வன்னிக் கிராமங்களில்
அத்தைகள்
இள வயதுக்குரிய மச்சான்களை “பெண் பிள்ளைகள் போல”
நாங்கள் வளர்ந்தபோது -சிறுவர்களாய் இருக்கையில்- அவர்களது வீட்டு முற்றங்களில் சோறு போட்டுச் சாப்பிடலாம் என்று, எங்களது முற்றங்கள் ஒப்பிடப்பட்டு அவமதிக்கப் படுவதற்கு ஏதுவான, அந்த, தமது அம்மாவிற்கு சமைக்க காய்கறி வெட்டி, தேங்காயும் திரிவிக்குடுக்கிற மச்சான்கள்…. அவர்களிற்கு எந்த அரசியலும் தெரியாது. ஒரு பிரச்சாரமும் அவர்களது அம்மாவை விட்டுப் பிரிய போதுமானதில்லை. அவர்களுக்கு விடுதலை குறித்த அக்கறை கிடையாது. “உலகமயமாதலின்” பயனாய் -அமைதிக் காலத்தில் பரதுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள்- ஊடே மேலும் துளிர்த்த அவர்களது ஆசைகள், கனவுகளாலான அந்த இளைஞர்களுடைய இருப்பை பலவந்தமாய்ப் பறிக்க யுத்தம்…
வன்னியில் ஆட்சேர்ப்புக்கள் என்றால், ஈழத்தின் கிழக்கு வாகரைப் பிரதேசங்களில் கோரமான யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. சுனாமியின் பாதிப்புகளிலிருந்து சனங்கள் மீள முன்னம் (பலருக்கும் பாதுகாப்பான உறைவிடங்களே இல்லாத நிலையில்) மீண்டும் அழிவிற்கு முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். போரிடும் இரண்டு தரப்புக்குமிடையிலான மோதலில் கொல்லப்படும், பாதிப்புக்குள்ளாகும் மக்கள் குறித்து வழமைபோல எந்த பொருட்படுத்தல்களும் இல்லை. புத்தாண்டு தினத்தில், மன்னார் இலுப்பைக்கடவையில் பொதுமக்கள்மீதான வான் குண்டுவீச்சில்- ஆறு குழந்தைகள் உட்பட பதனான்குபேர் பலியாகியுள்ளபோதும் (அல்லது அதை “ஐ.நா. சொல்கிற போதும்”!) அதை இலங்கை இராணுவமும் அதன் தலைமையும் மறுத்திருக்கிறது. சமாதானப் பேச்சில் ஈடுபடுமாறு வலியுறுத்தப்படுற போதும் யுத்தம் தொடர்கிறது.

பரிசீலனைகள் ஏதுமற்ற உணர்ச்சிநிலையில் -யாரது நலன்களுக்காகவோ – ஆரம்பித்திருக்கிற இந்த யுத்தம், கள்ளத்தோணிகள், அரசியற் கொலைகள், இடப்பெயர்வுகள், எல்லை கடப்புகள் என, மரணங்களாலான 1990களை ஞாபகப் படுத்துகின்றன. சுனாமி முடிந்து (அதன் பேரில் நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட பணம் உரியவர்களிடம் சேர்க்கப்பட முன்னமே) இரு வருடத்தில் மீள யுத்தத்தை எதிர்கொள்கிற மக்கள் என்கிற வகையில் சர்வதேச ஊடகங்களில் சிறு குறிப்புகளாய் இடம்பெற்றிருக்கிறார்கள்.

வடகிழக்கில் யுத்தமென்றால், (பயங்கரவாத தடைச் சட்டம் இத்தியாதியின் கீழ்) நெருக்கடிக்கு உள்ளாகும் எமது நேசத்துக்குரிய உறவுகள், நண்பர்கள் என கொழும்பு மற்றும் இன்ன பிற இராணுவ கட்டுப்பாட்டு நகரங்களில் வசிக்கும் நண்பர்களின் பாதுகாப்பிற்காய்ச் “சுயநலமாய்ப்” பயப்படும் ஒரு மனத்துடன், “யுத்தமென்று வந்தால் இதெல்லாம் இப்படித்தானே” என்று களத்தில் கொல்லப்படும் எமதல்லாத பிள்ளைகள் தொடர்பாக மட்டும் சொல்லிக் கொள்ள முடிகிறது; ஒரு மெழுகுவர்த்தியும் பரத நாட்டிய ஆடல் பாடல்களும் அவர்கள் அனுபவிக்காத எல்லாவற்றையும் ஈடுசெய்துவிடுமென்று – கடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது.

10 இற்கு 1
300 இற்கு 40 என இலக்கங்களாய் மட்டும் ஒவ்வொரு தரப்பும் மரணங்களை பார்த்துப் பழகி நோயிற்றிருக்கிறது. கிரிக்கெட் ஸ்கோர் போல, அவற்றை கேட்க, அங்கு நெருக்கமான உறவுகள் அல்லாத -முற்றாய்த் தொடர்புகள் விடுபட்டிருக்கிற – ஒரு சூழலில் மட்டுமே முடியும். போரின் எந்தக் கோரத்தையும் “வாழாத” சூழலிருந்து
-பிள்ளைகள் பசியால் கஸ்ரப்படுதென்றால்,யுத்தமென்றால் அப்பிடி என்றும்
-பிள்ளைகள் பிடிக்கப்படுகிறார்கள் என்றால் எல்லாரையும்தானே என்றும் இலகுவாக சொல்ல முடியும். இவற்றை முகங்கொடுத்திருப்பது அங்கு வசிக்கிறவர்கள் மட்டும்தான்.

யுத்த புலத்தில் வாழாத உறவினர்களை ஒத்தவர்களிடமிருந்து வரக்கூடிய இந்த சொற்கள் நனவாய், இரக்கமற்ற கயமை மிகுந்த மனதிலிருந்து வருவதென்று சொல்ல வேண்டியதில்லை. தமதான அர்த்தங்களை இழந்த நிலையிலேயே சொற்களை எல்லோரும் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம். ஒன்றை எந்தக் கேள்வியுமின்றி நம்பிவிட்டபிறகான இயந்திரத்தன்மையில் அவற்றை உபயோகிப்பது பழகிவிட்டது.

இங்கே, தூரே, போரின் இரைச்சல்களற்ற பெயர்ந்த நிலங்களில் இருந்து – நாங்கள் – யுத்தத்தைப் பற்றிப் பேசலாம். அதன் நியாயத்தை நினைவுகூரல்களில் ஞாபகம் கொள்ளலாம். ஒரு மாறுதலாக, யுத்தத்திற்கான பரணிப் பாடலாகவோ உற்சாகமான வரவேற்பாயோ அன்றி, எங்களின் “சுய”நலத்தை ஒத்துக்கொண்டு, கொலையுண்டு போனவர்களுக்கான விழாக்களில், தோளில் காவிச் செல்லும் எங்களின் பிள்ளைகள் போலவே “அங்கும்” பிள்ளைகள் வாழ வேண்டும் என்பதை மனங்கொண்டு… அது தருகிற அத்தனை அழிவுகளையும் மறுத்து, இங்கு வந்திருந்து, நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற அத்தனை நியாயங்களையும் மறுபரிசீலிக்க வேண்டும்.
சர்வாதிகாரி முசோலினியுடனான அவரது தொடர்பு தொடர்ந்தும் விவாதங்களிற்குள்ளாகிற Luigi Pirandello-இனது, “போர்” சிறுகதை நாம் உச்சரிக்கிற சில சொற்களை எம் முன் எடுத்துப் போடுகிறது.

தேசம், தேசீயம், தியாகம், அர்ப்பணம், மாவீரம்
இந்தச் சொற்களெல்லாம் கலைகிறபோது -அவற்றில் நாம் நம்பிய அர்த்தம் அழிஞ்சுபோற போது – இறுதியில், என்னதான் எஞ்சுகிறது என்பதாய்க் கேட்கிறது. அக் கேள்வி எமது நிகழ்காலமெல்லாம் கொல்லப்பட்டவர்களின் நினைவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரு தசாப்தங்களில் ஈழத்தில் கிராமத்திற்குக் கிராமம் கூடியுள்ளதென்னவோ “மாவீரர் துயிலும் இல்லங்களே”. இக் கல்லறைகளில், தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட, EPDP போன்ற பிற இயக்கங்கள், மற்றும் அரச, அரசுசார் இராணுவங்களால் கொல்லப்பட்ட, அல்லது மாறி மாறி சுடப்பட்டதில் பலியான அப்பாவி உயிர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை; எல்லாவிடங்களிலும் தம் பிள்ளைகளுக்கான கண்ணீரைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
-புறநானூறு
-ஹொலிவூட் சாகசப் படங்கள்
-கவிஞர்களின் பரணிப் பாடல்கள்
வீரத்திற்காக சில எழுதப்பட்டதெனில் -சொற்கள் எல்லாம் கலைந்து போய்விட்ட பல பொழுதில்- மனித அழிவு கண்ணீரால் எழுதப்பட்டபடியே இருக்கும்.
“““““““““““““““““““

புகைப்படம்: கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. “மாவீரர் துயிலும் இல்லம்” 2002-இல்

Advertisements
  1. peddai
    April 18, 2009 at 1:32 am
    30 Responses to “*”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம்” 1. -/பெயரிலி. Says: January 5th, 2007 at 12:43 am / அது தருகிற அத்தனை அழிவுகளையும் மறுத்து, இங்கு வந்திருந்து, நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற அத்தனை நியாயங்களையும் மறுபரிசீலிக்க வேண்டும்./ /தேசம், தேசீயம், தியாகம், அர்ப்பணம், மாவீரம் இந்தச் சொற்களெல்லாம் கலைகிறபோது -அவற்றில் நாம் நம்பிய அர்த்தம் அழிஞ்சுபோற போது – இறுதியில், என்னதான் எஞ்சுகிறது என்பதாய்க் கேட்கிறது. / இவை முக்கியமானவை; ஆனால், இவற்றுக்கு மாற்றாக இப்போதிருப்பதிலும்விட மேலான வழியென்ன என்பதைத் தேடுகையிலே, ‘மொடேர்ன் ரைம்ஸ்’ல் சுழலும் இராட்சத இயந்திரத்தின் சக்கரப்பற்களிலே சார்லி சப்ளின் அவ்வியக்கத்துக்கு மாற்றாகச் செய்யப்போனதன் விளைவுதான் தெரிகிறது. வெறுமனே, தேசியம், மாவீரம் என்ற பதங்களை நிறுத்துவதாலேமட்டும் நல்ல விளைவு சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. மாவீரர்தினங்கள் வெறும் சடங்குகளே- ஆக மிஞ்சிமிஞ்சிப்போனால், புலம்பெயர்ந்தவர்களின் குற்றவுணர்வுகளுக்குக் கிடுகுவேலை போட்டுமூடிக் கொஞ்சகாலம் வைக்கவுதவும் சடங்குகள். அமெரிக்கப்போர்வீரர்களின் பெற்றோரின் செவ்விகளையும் ஈராக்கியபெற்றோரின் செவ்விகளையும் கேட்கையிலே இப்படியாகத்தான் “சீ” என்று போரிலும் தன்னிலும் வெறுப்பெனத் தோன்றுகிறது. ஆனால், அம்மேகம் கலைகையிலே இருக்கும் யதார்த்தம், இலகுவிலே ஒரு நூலை அறுத்துப் பொம்மலாட்டத்தை நிறுத்தக்கூடியதாகத் தெரியவில்லையே? 2. நாரதர் Says: January 5th, 2007 at 4:38 am யுத்தம் கொடியது என விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும்.தமிழ் மக்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தக் கொடிய யுத்தத்தை இல்லாது செய்ய உங்கள் மாற்று வழி தான் என்ன? பாதுகாப்பான புகலிடத்தில் இருந்து இவ்வாறு மகா புத்திசாலிகளைப் போல் ‘தீர்வு’ என்ன என்பதைப் பற்றிப் பேசாது ,செயற்படாது எழுதுவது கபடத் தனம் அன்றி வேறென்ன? உங்கள் கவலைகள்,கண்ணீர் என்பன போலியானவை இல்லையா? உங்களைப் போன்ற போலிகளை விட மக்களோடு மக்களாக இருந்து ஒரு தீர்வுக்காகாப் போராடுபவர்கள் மேலானவ்ர்கள்.போலியான எழுத்துக்கள் மக்களின் சோகத்திற்கு முடிவு கட்டி விடாது. போரை நிறுத்த அதனை எதிர்த்துப் போராடுவதை விட எமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? உங்களின் எழுத்துக்கள் இந்த நிதர்சனமான உண்மையை மறைக்கும் கபடத் தனமானவையாக இல்லையா? மக்கள்,கண்ணீர்,கவலை எங்கிற உங்கள் உணர்வு பொங்கும் சொற்களின் பின்னால் இருக்கும் வெறுமை கலைந்து போகிற போது என்ச்சி இருப்பது உங்களின் போலித்தனம் மட்டுமே. 3. somee Says: January 5th, 2007 at 1:27 pm //ஒரு மெழுகுவர்த்தியும் பரத நாட்டிய ஆடல் பாடல்களும் அவர்கள் அனுபவிக்காத எல்லாவற்றையும் ஈடுசெய்துவிடுமென்று – கடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது.// //வீரத்திற்காக சில எழுதப்பட்டதெனில் -சொற்கள் எல்லாம் கலைந்து போய்விட்ட பல பொழுதில்- மனித அழிவு கண்ணீரால் எழுதப்பட்டபடியே இருக்கும்.// //சுய”நலத்தை ஒத்துக்கொண்டு, கொலையுண்டு போனவர்களுக்கான விழாக்களில், தோளில் காவிச் செல்லும் எங்களின் பிள்ளைகள் போலவே “அங்கும்” பிள்ளைகள் வாழ வேண்டும் // ………..போர் பற்றிய கூக்குரல்களுக்கும் பூத்தூவல்களுக்கும் இடையில் மனிதர்களும் இருகிறார்கள். வலிகளை என்னால் வார்த்தையாக முடியவில்லை. இந்த வார ஆனந்த விகடனில் யாழ்ப்பாணம் பற்றி பதிவு செய்திருகிறேன் முடிந்தால் பார்க்கவும. 4. P.V.Sri Rangan Says: January 5th, 2007 at 2:55 pm பொடிச்சியின் மொழியைப் படித்த பின்பும் யுத்தத்தையும்,மக்களையும் பற்றி நாரதர் மழலை பேசுகிறார்! எனக்கோ ஒரு முது மொழிதாம் ஞாபகம் வருகிறது! “ஞானியோ நிலவைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க,சிஷ்யனோ ஞானியின் சுண்டு விரலை நோக்கினானாம்”இது நாரதருக்கு மட்டுமல்ல பொடிச்சியிடம் கேள்வி கேட்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும்! உருப்படியானவொரு பதிவு-நம் மக்களிடம் எஞ்சியிருக்கும் கண்ணீரின் தொகுப்பு இது. இதைப் புரிந்து கொள்ள முனைகிறேன். 5. selvanayaki Says: January 5th, 2007 at 4:07 pm பொடிச்சி, எதிர்பார்த்தது போலவே நல்ல பதிவுகள் உங்களிடமிருந்து. தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லவே இந்தப் பின்னூட்டம். 6. நாரதர் Says: January 5th, 2007 at 4:42 pm சிரி ரங்கன் , புரியாமல் எழுதுதல் தான் ஒருவரை ஞானி ஆக்கிறது என்பதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது.’மொழி’ என்பது எதற்காக என்று கொன்சம் யோசிச்சுப் பாரும்.உஙகளை நீங்களே ஞானிகளாக்க புரியாத மொழியில் எழுதுவது போல் இருக்கிறது.உங்களுக்கு நீங்களே புரியாமல் எழுதி ஆளை ஆள் மாறி மாறிப் பாராட்டிக் கொள்ளுங்கோ.யார் கண்டு கொள்ளப் போகிறார்கள். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அழிக்காமால் சொந்த அபிப்பிராயங்களை எழுதுவது எந்த கருத்தாடல்களுக்கும் நேர்மை ஆகாது. நிதர்சமான உண்மைகளும், நியாயமும் ,அறமும் உங்களை எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டு தான் இருக்கும்.மேலும் இதில் மேலும் எழுதி மற்றவர்களின் நேரத்தையும் பொடிச்சியின் பதிவையும் வீணாக்க விரும்பவில்லை. பொடியங்களின் பதிவில் உமது ஞானம் நன்றாகப் போகிறது.முடிந்தால் யாழ்க் களம் வாரும் கருத்தாடலைத் தொடரலாம். மீண்டும் கேட்கிறேன் மக்களின் கண்ணீருக்கான உங்கள் தீர்வு என்ன? அதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? 7. நாரதர் Says: January 5th, 2007 at 5:00 pm முரண்பட்ட சிந்தனைகளில் இருந்து பிறக்கும் குழப்பமான கருத்துக்கள், குழப்பமான மொழி நடையில் வெளி வருகிறது.தெளிவான சிந்தனை தெளிவான மொழியில் வரும்.’மொழி நடை’ தொடர்பாடலின் இலக்கு அல்ல, கருத்துப் பரிமாற்றமே தொடர்பாடலின் இலக்கு.தெளிவான கருத்துக்களைக் காவாத மொழி நடையால் யாருக்கு என்ன பயன்? சொந்தக் குழப்பங்களால், மற்றவர்களையும் குழப்பி விட்டேன் என்று தற்பெருமை பேசிக் கொள்ளலாம். 8. பொடிச்சி Says: January 5th, 2007 at 5:24 pm நன்றி பெயரிலி, நாரதர், சோமி,சிறீரங்கன், செல்வநாயகி… நாரதர்: உங்களது பின்னூட்டத்திற்கான எனது பதில் இதுதான்: கடந்த 24,25 வருடங்களிற்கு மேலாக இனப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்’ என்கிற அதே நிலமைதான் இத்தனை வருடங்களிற்குப்பிறகும் ‘நிதர்சனமாகவும்’ இருக்கிறது. இதில் ஈழத்தில் பிறந்த அனைத்து மக்களும் நடக்கின்ற யுத்தம் தொடர்பாக “தீர்வு” சொல்லவேண்டும், வேறெந்த கஸ்ரங்களையும் சொல்லக் கூடாது என்றால் அதற்கொரு (விதண்டாவாத) பதிலும் என்னிடம் இல்லை. அதேபோல, யுத்தம் கொடியது என எல்லோருக்கும் தெரியும் என்பதற்காக அமெரிக்காவில் ஈராக்/எந்த யுத்தத்திற்கெதிராக ஊர்வலம் போய் அதை மக்கள் எதிர்ப்பதற்கான தேவை இல்லை என்று சொல்ல முடியாது. (அல்லது அப்படிப் போய் என்ன பிரியோசனம் என்று கேட்கலாம், எல்லாவற்றையும் குறித்து கேட்கின்ற உரிமை எங்கள் எல்லோருக்கும் இருக்கவே இருக்கிறது). யுத்தம் பற்றிய எனது அபிப்பிராயம் கபடனத்தனமாக போலித்தனமாக உங்களுக்குத் தோன்றுவதற்கு உங்களுக்கான காரணங்கள் இருக்கின்றன என்பதற்காக,நடக்கின்ற நிகழ்வுகள் தொடர்பான எனது உணர்வுகளை எழுதாமல் இருக்க முடியாது. அதை எழுதுவது எனக்கு முக்கியம். நான் நேசிக்கிற, நேசித்த போரிட்ட, இனிமேலும் போரிடப் போகிற எல்லா மனிதர்களுடைய நினைவும் எஞ்சியிருக்கிற அவர்கள் உயிர்வாழ்தல்மீதான விருப்பமும் மட்டுமே என்னிடம் இருக்கிறது. அவற்றால் என்ன பயன் என்று கேட்கலாம். இந்த 25 வருடங்களாக நடந்தவை எல்லாம் பயனுள்ளவை என்றால் அதன் குழப்பமான, புரியாத எழுத்துநடையை உடைய, “யாருக்கும் புரியாத” அதன் பிறழ்வுகள் என இதை சகித்துக் கொள்ளுங்கள்! 9. நாரதர் Says: January 5th, 2007 at 6:07 pm முதலில் பொடிச்சி உங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி. மனித வரலாற்றில் யுத்தம் இல்லாத காலம் என்று எங்காவது உள்ளதா? வரலாற்றில் எவ்வகையிலும் தீர்க்க முடியாத முரண்கள் யுத்தங்களால் தான் தீர்க்கப் பட்டு வந்துள்ளன. மனித வரலாற்றில் இருந்து எங்களது அனுபவம் வேறு பட்டது அல்ல.எங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் யுத்தம் அவசியம் ஆகிறது.தீர்வு இல்லை என்றால் எமது சோகம் ஒரு தொடர் கதை தான். நீங்களும் யுத்தத்தின் சோகம் பற்றிப் பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பீர்கள் உங்கள் பிள்ளைகளும் புலத்தில் இருந்து எழுதுவார்கள். நான் கேட்க்கும் கேள்வி மிக அடிப்படையானது.யுத்தம் வேண்டாம் என்றால் இந்த முரணை எவ்வாறு தீர்க்கலாம் என்று நீங்கள் சொல்கீறீர்கள் என்பது தான். மேலும் யுத்தத்திற்கு எதிராக ஊர்வலம் போவது பற்றிக் கூறி உள்ளீர்கள், இதனால் என்ன பயன் கிடைத்துள்ளது? நாமும் பல ஆண்டுகளாக ஊர்வலம் போனவர்கள் தான்.இராக்கிலும்/ ஆப்கானிலும் முரண்கள் எதிர் யுத்தத்தினால் தானே எதிர்கொள்ளப்படுகின்றன? இந்த அரசுகள் எவை ஆவது ஊர்வலம் போவதால் முரண்களுக்கு தீர்வைக் கண்டுள்ளனவா? உங்கள் உணர்வுகள்,கவலைகள் எவருக்குமே தீர்வைத் தந்துவிடாது.அவை உங்கள் சொந்த மனதை ஆற்றலாம் ஆனால் மக்களின் துயரை நீக்காது.நீங்கள் பதிவிடுவது உங்களுக்காக இருக்கலாம், ஆனால் எனது கேள்விகளும் ,கரிசனையும் மக்கள் துயர் தீர வேண்டும் எங்கிற அவாவால் எழுவன.யுத்தம் பற்றி உங்கள் கவலையான பதிவுகள்,யுத்தங்களை 25 வருடங்களில் அல்ல எப்போதுமே நிற்பாட்டி விடாது. யுத்திற்கான காரணிகளை அகற்றுவதே யுத்ததிற்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.யுத்தத்தை அதன் காரண காரியங்களில் இருந்து அன்னியப் படுத்திப் பார்க்க முடியாது.உங்கள் பதிவுகள் உங்கள் சுய தேவைக்கானவை என்பதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது,தாராளமாக நீங்கள் பதிவிடலாம்.ஆனால் மக்களின் பெயரால் மக்களின் துயாரால் என்று பதிவிடுவது , போலியானது என்பதையே சுட்டிக் காட்டினேன்.இதனையே என்னால் சகித்திக் கொள்ள முடியாது உள்ளது. 10. P.V.Sri Rangan Says: January 5th, 2007 at 6:52 pm நாரதரே,நல்ல விளக்கம் சொன்னீர்! நான் சொன்ன மொழியென்பதன் அர்த்தம்-”கற்பிதங்களைக் கடந்த மானுட நேசிப்பின் உறுதியான பற்று”என்ற பொடிச்சியின் உணர்வைக் குறித்ததாகும்.நீங்களோ இயக்கவாத மாயைக்குள் காவிக்கொள்ளும் “போர்” குறித்தானதும்,மக்கள் குறித்தானதுமான கால் நூற்றாண்டுக்கும் மேலான அதிகாரத்துவ-ஆதிக்கப் பேச்சோடு கருத்தாட வந்துள்ளீர்கள்.இங்கே நீங்கள் பொது அப்பிப்பிரயத்தையோ அல்லது சமுதாயத்தின் மொத்தவுணர்வையோ பிரதி பலிப்பதாகப் பாசாங்கு செய்யும் கருத்தானது, இயக்கவாதக் குறுகிய நலன்களின் எல்லைக்குட்பட்டது என்பதை நீங்கள் கூறும்”முரண்பட்ட சிந்தனையில் இருந்து பிறக்கும் குழப்பமான கருத்துக்கள்…”என்ற பெரும் கண்டுபிடிப்பில் தொனிக்கிறது. மொழி நடையையோ அல்லது கருத்துப் பரிமாற்றம் குறித்தோ நாம் எதுவுமே கூறவில்லை! நீங்களாகக் கோணங்கித் தனமானக் கற்பனை செய்து,எம்மைத் தூற்றும் பரணியோடு”சிரி”ரங்கன் என்று வம்பளந்து கத்திக் கொள்கிறீர்கள்!நாம் நெடுகச் சிரித்தே இருக்கிறோம்-எமது போராட்டத்தின்,அரசியல் முன்னெடுப்பின் செல் நெறி கண்டு.கூடவே அழுதும் புலம்புகிறோம், அந்தச் செல் நெறி நமக்களித்துவரும் தொடர் துன்பங்கள் கண்டு!! “கருத்துக்களைக் காவாத மொழி நடையால் யாருக்கு என்ன பயன்?”இதையேதாம் நாமும் இப்படிக் கேட்கிறோம்:”மக்களைச் சாராத-மக்களின் அனைத்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காத,குடிசார்வுரிமைகளை மதிக்காத இராணுவ வாதப் போரால் என்ன பயன்?”மக்களின் நலனிலிருந்துதாம் தீர்வு எழுகிறதேயொழிய இயக்கத்தினதுதோ-கட்சியினதோ,தேசத்தினதோ அல்லது சில-பெரும் தலைவர்களினது நலனிலிருந்தோ தீர்வு எழுவதில்லை.அப்படி எழும் “தீர்வுகள்”குறிப்பிட்ட அமைப்பினது நலன்களையும் அவை சார்ந்திருக்கும் அல்லது அக்கட்சிக்குள்-இயக்கத்துக்குள் இருக்கும் ஆதிக்க சக்தியனது நலனோடு பின்னப்பட்டவையாகவே இருக்கும்.இதை உங்களது மொழியில் சொன்னால்:”சொந்தக் குறுகிய இயக்க நலனுக்காகத் தம்மையும் குழப்பி,தாம் அடக்கி வைத்திருக்கும் மக்களையும் குழப்பிப் போரிடுவதால் சாவதென்னவோ அப்பாவி மக்கள் தாம்!” “தீர்வு என்ன?” ஐயா நாரதரே!தீர்வு தெரியாமலா இவ்வளவு நாளும் போராடுகினம்? தமிழீழம்தாம் தீர்வென்கிறார்கள்! பிறகு, பேசித் தீர்ப்போமென்கிறார்கள். எதைப் பேசித் தீர்க்கப் போகிறீர்கள்? தமிழீழத்துக்கு எங்கெங்கே எல்லை அமைக்கலாமென்றா?அல்லது இந்தப் போர்களால் கொல்லப்பட்ட இலட்சம் மக்களினது உயிருக்கு எங்கே-எப்படி துயிலும் இல்லங்கள் அமைக்கலாமென்றா? இவைகளை நாங்கள் சொல்லவில்லை! நீங்களேதாம் கூறுகிறீர்கள். “நாம் பேச்சு வார்த்தையின் கதவை மூடவில்லை”.என்று. அப்புறம் ஏன் சாமி போர் தேவையாக இருக்கு-பேரத்துக்காகவா?,அப்போ பேரம் எதைப்பற்றி? சொன்னீர்களா? அதுக்காகப் போராளிகள்-மக்கள் மரணிக்கலாம்.யாருடைய நலனுக்கு,அதெல்லாம் மக்களின் நலனுக்காகவே!-அப்படித்தானே? அப்போது இன்று யுத்தத்தால் வாழ்விழந்து,உயிரிழந்து அகதியாகச் சொந்த மண்ணில் வாடும் மக்களுக்கு யாரு பட்டுணிப் பானை திறக்கிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் பட்டுணிச் சாவு நிலவுகிறதே இது என்ன இராஜ தந்திரத்தில் அவர்கள் முன் விடிந்துள்ளது? ஒரு பெரும் அமைப்பே முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறது.அந்த அமைப்பின் விசிலடிச்சான் நாரதர்கள் எம்மிடம் தீர்வு கேட்கிறீர்கள் கூடவே என்ன செய்தீர்கள் என்றும் வேறு கேட்கிறீர்கள்? இதுதாம் நடக்கும்! தமிழர் நலனுக்கான போராட்டம்,தமிழர்கள் குறித்தான அனைத்து முன்னெடுப்பும் புலிகளால் மட்டும்தாம் ஆற்றப்படுகிறது.மற்றவையெல்லோரும் “துரோகிகள்”என்ற வகுப்பெடுப்பில் வளர்ந்தவர்கள் இதையும் கேட்பீர்கள்-இன்னும் கேட்பீர்கள்! ஆனால் தலைவரோ புலம் பெயர்ந்தவர்கள் இன்னும் அதிகமாக உதவும்படி கோருகிறார்.லொஜீக் எங்கேயோ இடிக்கிறது! “தீர்வு” இப்போது நடைபெறும் போரால் தமிழீழம் பெற்று விடுவோமென்று உங்களால் நேர்மையோடு பதிலளிக்க முடியுமா? அல்லது புவிகோள-கேந்திர அரசியல்-மாற்றம்,உலக வற்புறுத்தல் எண்டபடி மீளவும் ரீல் தானோ? ஏதோ சொல்லுங்கோ. உங்களுக்குச் சரியானதாக இருப்பது மட்டுமேதாம் தேசத்தின் நலன்.மற்றெதல்லாம் மேல்மாடியற்ற மொக்குத் தனங்களே! யுத்தத்தால், முழு இலங்கையுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்களைத் தள்ளி,அவர்களைச் சாகடிக்கும் போது,அந்த மக்கள் தமது இருப்புக்காகவும்,தமது உழைப்பை நியாயமாகத் தமது நலனுக்கான தேசியப் பொருளாதாரத்தை கட்டியொழுப்புவதற்கும்,அதைப் பாதுகாக்கவும் ஆளும் சிங்கள-தமிழ் அந்நியக் கைக்கூலித் தரகு முதலாளிய வர்க்கத்துக்கெதிராகப் போராடித் தமது தேசத்தைக் கட்டியெழுப்புவதே தீர்வு.இதைவிட இலங்கைத் தேசத்தின் குடிகளுக்கு எந்த விமோசனமும் இல்லை!சிங்களவன் என்றும்,தமிழன் என்றும் அரசியல் நடாத்தும் கண்மணிகள் தமது நலன்களுக்காக ஒருவரையொருவர் அணைத்ததையும் நாம் அறிவோம்!அப்போது சிங்கள இராணுவத்தின் உலங்கு வானூர்திகள்கூட நமது தமிழ்ப்பாற்க் கொழுந்துகளைக் காவிச் செல்லும்.இதெல்லாம் இராஜ தந்திரமான விசயம்,இது புலிகளுக்குமட்டுமே புரிந்த இராஜ தந்திரம்! “பெடியன்களின் பதிவில் உமது ஞானம் நன்றாகப் போகிறது.”அப்படியா நாரதரே?பெடியன்களின் பதிவில்தாம் புலிகளின் மாணவர்கள் தம்மை எதிர்பவர்களின் கருத்தைக் கேலியாக்கிச் சிதைக்கலாமென்று கருதி,தம்மையே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதையே ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒன்றும் எவருக்கும் கஷ்டமில்லையே! அடுத்து எனக்கு மட்டுமா ஞானம் போகுது?முழுமொத்தச் சிங்கள மக்களுக்கே மேல்மாடியில் ஒன்றுமில்லையென்பவர்களின் விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு யாரூதான் ஞானமுடையவர்களாக இருப்பார்கள்?-ஒருவரைத் தவிர! யாழ்க் களத்தில் வதிபவருக்கே வாய் திறக்க முடியாதிருக்குஞ் சூழலில் நான் வந்து… யாழ்க் களத்தில் விவாதித்து…உங்கள் மேதமைக்குமுன் நாமெங்கே நாரதரே? 11. சதானந்தன் Says: January 5th, 2007 at 10:51 pm \\நமது நிகழ்காலமெல்லாம் கொல்லப்பட்டவர்களின் நினைவில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது\\ மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 12. த.அகிலன் Says: January 6th, 2007 at 3:36 am //-புறநானூறு -ஹொலிவூட் சாகசப் படங்கள் -கவிஞர்களின் பரணிப் பாடல்கள் வீரத்திற்காக சில எழுதப்பட்டதெனில் -சொற்கள் எல்லாம் கலைந்து போய்விட்ட பல பொழுதில்- மனித அழிவு கண்ணீரால் எழுதப்பட்டபடியே இருக்கும்.// ஒன்று போரின் கூச்சல்கள் அது தொடர்பான பரணிகள் மற்றது தியாகத்தின் பெயராலான குளிர்காய்தல்கள் இவற்றின் இடையில் நசிவுறும் ஒரு சராசரியின் வாழ்க்கை யாராலும் கவனிக்கப்படுவதே இல்லை. வேடிக்கை என்ன வென்றால் சராசரிகளால் தான் மேற்சொன்ன இரண்டுமே யாருக்கென்றாலும் சாத்தியமாகிறது. உலகின் மிகப்பெரும் கவனத்தை ஈர்க்கும் பயணத்தில் புறந்தள்ளிப்போகிற மனித உணர்வுகள் இவை என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் இருக்கிறது. அதைப்பேசியிருக்கிறீர்கள். 13. நாரதர் Says: January 6th, 2007 at 11:23 am பெடிச்சி முதலில் மன்னிக்கவும், என்னை நோக்கி பல கேள்விகள் சிரி ரங்கனால் ,எழுப்பப் பட்டுள்ளதால் இதை இங்கே எழுத வேண்டி இருக்கிறது. சிரி ரங்கன் , உமது புலம்பல்களில் எதுவுமே நான் கேட்ட ‘உமது தீர்வு’ பற்றி ஒன்றுமே இல்லையே? நான் புலிகள் என்ன செய்கிறார்கள் , அவர்களின் தீர்வு பற்றியா கேட்டேன்? உமது தீர்வு என்ன? அதற்காக நீர் என்னத்தை செய்துள்ளீர். நீர் டாக்குத்தர் கருணானந்தம் என்று ஏபிசிடி எழுதினதைப் பற்றியோ, என்னைக் கொல்லப் போறாங்கள் நான் இனிப் பதிவிட மாட்டன் என்று அனுதாபமும் ஆரவாரமும் செய்ததைப் பற்றி நான் கேட்கவில்லை.போர் வேண்டாம் புலிகள் வேண்டாம் என்றால் ஏன் நீங்கள் உங்கள் ‘தீர்வை’ முன் வைத்து ஒரு இயக்கத்தைக் கட்ட இயலாது? அப்படி நீங்கள் யுத்தம் அற்ற மக்களைப் பலி கொல்ளாத ஒரு தீர்வை மக்கள் முன் வைத்து , ஒரு அமைப்பை நிறுவி தமிழருக்கு ஒரு தீர்வை வழங்குவீர்கள் என்றால் மக்கள் உங்கள் பக்கம் தானே? மக்கள் சக்தி மிகப் பெரிய சக்தி அல்லவா? ஏன் உங்களால் பின் நூட்டக் கயமைகளுக்கு அப்பால் எவரையுமே ,உங்கள் கருதுக்களுக்கு ஏற்றதாக ஒன்று படுத்தி அமைப்பாக்க முடியவில்லை? ஏன் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாத்துக் கொண்டு உங்கள் சொந்த நலங்களைப் பார்த்துக்கொண்டு, கரீபயனுக்கு கொலிடே போய்க் கொண்டு ,பொழுதுபோக்குக்காக உங்கள் ஞானத் தனத்தை மட்டுமே முன் நிறுத்திக் காட்ட போலியான கவலைகளையும் உனர்வுகளையும் வெளிக்காட்டுகிறீர்கள்.இது ஒரு போலியானதாக உங்களுக்குப் படவில்லையா? போலியானவ்ர்களை நம்பி எவர் வருவார்? நீங்கள் முதலில் உங்கள் சொல்லிலும், செயலிலும் நேர்மையானவரா? யாழ்க் களத்தில் நீங்கள் கருத்துக்களை மட்டுறுத்த முடியாது.வேறு பெயர்களில் வந்து உங்களுக்கு நீங்களே பின்னூட்டம் இடமுடியாது.கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும். உமது கேள்விகளுக்கு ஒரே பதில் தமிழர்களுக்கான தீர்வை மக்கள் முன் வைத்து மக்களாதரவுடன் இயங்கும் ஒரே இயக்கம் விடுதலைப் புலிகளே.எவரும் எவ்வளவும் போலியாக எழுதலாம்,எவனொருவன் தான் முன் வைக்கும் தீர்வுக்காக தனது உயிரை வாழ்வை அர்ப்பணிக்கிறானோ அவனே உண்மையான மனித நேயன்.அவர்களுக்கே நான் எனது ஆதரவைக் கொடுக்கமுடியும்.தமிழ் மக்களும் அவ்வாறே.உண்மையும்,நீதியும்,அறமுமே ஈற்றில் வெல்லும்.போலிகளை நம்பி எவரும் பின் வரமாட்டார்கள்.போலித்தனமான உள்ளத்தை உருக்கும் வெற்று வார்த்தைகள் மக்கள் துயரை நீக்கா.தீர்வை முன் மொழிந்து அதன் பாற்பட்டு தம்மை அர்ப்பணித்து உழைப்பவர் பின்னாலையே மக்கள் அணிதிரள்வர்.வெற்று எழுதுக்களால், சோடனையான வார்த்தைகளால், சொற் சிலம்பங்களால் தம்மை முன் நிறுதுபவர்களை விட, தமது செய்கையால்,தியாகத்தால் மக்களின் துயர் தீர தம்மை அர்ப்பணிப்பவர்களே உண்மையான மனித உரிமைப் போராளிகள். 14. நாரதர் Says: January 6th, 2007 at 11:35 am //***யுத்தத்தால்****, முழு இலங்கையுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்களைத் தள்ளி,அவர்களைச் சாகடிக்கும் போது,அந்த மக்கள் தமது இருப்புக்காகவும்,தமது உழைப்பை நியாயமாகத் தமது நலனுக்கான தேசியப் பொருளாதாரத்தை கட்டியொழுப்புவதற்கும்,அதைப் பாதுகாக்கவும் ஆளும் சிங்கள-தமிழ் அந்நியக் கைக்கூலித் தரகு முதலாளிய வர்க்கத்துக்கெதிராகப் போராடித் தமது தேசத்தைக் கட்டியெழுப்புவதே ****தீர்வு*****.// ஆகவே ‘உமது தீர்வு’ என்று ஒன்றும் கிடையாது.மேல நீரே எழுதி இருப்பதின் படி ***யுத்தத்தால்*** தான் மக்களுக்குத் ****தீர்வு**** வரும்.பிறகென்ன நீரும், புலிகளும், நானும் சொல்வதைத் தானே கூறி உள்ளீர்.இதில் வேறு கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது? 15. தெய்வேந்திரன் Says: January 6th, 2007 at 12:37 pm உலகில் நடைபெறுகிற எந்த யுத்தமுமே-உலகின் வளங்களையெல்லாம் தாமே அபகரித்து பயன்அடைகிறவர்களின் கைகளில் அகப்பட்டுப் போவதே வரலாறு. இதற்கு ஈழப்போராட்டமும் விதிவிலக்கல்ல. பலஸ்தீனப் போராட்டமாக இருக்கட்டும் குர்திஸ் மக்களின் அவலங்களாக இருக்கட்டும் இதையே காட்டி நிர்க்கின்றன. 1985 இல் ‘திம்பு’வில் ஆரம்பித்த எங்கள் சமாதான பேச்சுவார்த்தைகள் “ஜெனிவா’(2006)வரை நாரதர் கருதுகிற தீர்வின்றியே தொடர்கிறது. 1988 தொடக்கம் 2006 வரை அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு இன்று பிரிக்கப்பட்டுள்ளது. நாளை வடக்குக்கிழக்கு இராணுவ ரீதியாகவும் பிரிக்கப்பட்டுவிடும். வன்னி மட்டுமே எங்கள் கையில் இருக்கக் கூடும். 90-2006 வரை இணைந்திருந்த எமது மண் 2007 இல் பிரிக்கப்பட்டிருக்கிற நிலையில் தான் தீர்வு இருக்கிறது. மகிழ்சியா நாரதரே? எங்களுளக்கு என்ன தீர்வு என்பதை நாங்கள் காணும் இந்த முடிவுகளே தெரியப்படுத்துகின்றன. ஆரம்பத்தில் இந்தியா அடுத்து சர்வதேசம் இன்று மீண்டும் இந்தியா.. கவனிக்க மாட்டாதா என்று காத்துக் கிடக்கிறோம். நாரதரே.. எமது மண்ணின் பிரச்சனையின் பின்னால்-உலகத்து வழங்களை எல்லாம் அநுபவிக்கத் துடிக்கும் சக்திகளின் சதுரங்கத்தில் நாங்களும் சிக்கிக் கிடக்கிறோம். இதன் மத்தியில்- வசதியினால் உலகெங்கும் பெயர்ந்து விட்ட நம்போன்றவரை விட-மற்றவர்களின் இரத்தமும் கண்ணீரும் தான் முடிவு. வன்னிமண் அநுதாபத்திற்குரிய மண், இனிப் பிடிப்பதற்கு அங்கு மட்டுமே உயிருள்ள பிராணிகள் இருக்கின்றன. முடிவு…பேச்சுவார்த்தை…பேச்சுவார்த்தை…பேச்சுவார்த்தை…பேச்சுவார்த்தை மீண்டும்…பேச்சுவார்த்தை…பேச்சுவார்த்தை…பேச்சுவார்த்தை 16. நாரதர் Says: January 6th, 2007 at 1:19 pm //நான் சொன்ன மொழியென்பதன் அர்த்தம்-”கற்பிதங்களைக் கடந்த மானுட நேசிப்பின் உறுதியான பற்று”என்ற பொடிச்சியின் உணர்வைக் குறித்ததாகும்.// இதுவும் ஒரு கற்பிதம் தானே 😉 17. பொறுக்கி Says: January 6th, 2007 at 4:23 pm நான் ஒரு உதிரி. என்னிடம் எந்த ஒரு அரசியற் திட்டமும் இல்லை. எந்த ஒரு தீர்வும் இல்லை. ஆனால் நான் உணர்வுகளுள்ள மனிதனாகவும், விடுதலைப் போராட்டம் என்பது உரிமைகளுடன் வாழ்வதற்கான போராட்டம் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாலும் யுத்தத்தின் கொடுமைகளைப் பற்றி கதைப்பேன், எழுதுவேன். ஒடுக்குமுறையை எதிர்த்துத்தான் போராட்டம். ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாக இலங்கையரசு தமிழர் மீது போரைத் திணித்தது. இதனை எதிர்த்து ஆரம்பித்தது ஈழவிடுதலைப் போர். காலப் போக்கில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிகாரமிக்க சக்திகளே தமது சொந்த மக்களையும் ஒடுக்கினர். ஒடுக்குமுறையை எதிர்ப்பது புரட்சிகரம்/போராட்டம் என்றால், ஒடுக்குறை எந்தப்பக்கத்திலிருந்து வந்தாலும் எதிர்க்கப்படும். இலங்கை அரசின் ஒடுக்குமுறையை/போரை எதிர்ப்பதற்கு தீர்வு ரெடியாக பொக்கற்றில் இருக்க வேண்டும் என்றால், அரசை எதிர்க்கும் மக்கள் போராட்டம் சாத்தியமேயில்லை. மக்கள் போராடாத எந்தப் போராட்டமும் வென்றதில்லை. விடுதலைப் போராட்டத்தில் யுத்தம் ஒரு வடிவமேயழிய அதுவே போராட்டமல்ல. ஈழப் போராட்டத்தில் யுத்தமே, யுத்தம் மட்டுமே விடுதலைப் போர் என்று காட்டப்படுகிறது. இதன் அடித்தளத்திலேயே போடுதல், தட்டுதல், ஒத்த கருத்தைக் கொண்டிராதவர்கள் எல்லாம் துரோகிகள் என்பவை விடுதலைப் போராகியுள்ளது. யுத்தத்ததில் போராளிகளுக்கு சற்றும் குறையாத தியாகத்தை மக்கள் செய்துள்ளார்கள். தொடர்ந்தும் செய்துகொண்டுள்ளார்கள். யுத்தத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்கள் அது குறித்து கேள்வி எழுப்புவார்கள். தம்மை ஒடுக்கும்போது அதற்கெதிராகக் குரல் கொடுப்பார்கள். தமது சோகங்களுக்காக அழுவார்கள். சொந்தப் பிரதேசங்களில் விடுதலையின் பேரால் இந்தக் குரல்கள் அடக்கப்படுமாயின் அது வேறிடங்களில் ஒலிக்கும். உலகம் பெரிது. யுத்தத்தை நேசிப்பவர்கள் யுத்தத்தை தவிர வேறுவழியில்லை என்றும், யுத்தத்தை எதிர்க்காமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கும்படியும் சொல்லலாம். ஆனால் கொக்கட்டிச்சோலை, குமுதினிப் படகு என்று தொடரும் இலங்கையரசின் இனவெறியிலும், போராளிகளாகவும், துரோகிகளாகவும் தம்மை அழித்துக் கொண்டும் இழந்துகொண்டும் இருப்பவர்கள் மக்கள். போராட்டங்கள் வாழ்வதற்கே, சாவதற்கல்ல. 18. நாரதர் Says: January 6th, 2007 at 5:00 pm ;-0 19. பொடிச்சி Says: January 6th, 2007 at 7:23 pm நாரதர்: உங்களுடைய பின்னூட்டங்கள் spam-இற்குள் போய்விட்டிருந்தன. (இரண்டுதானென நினைக்கிறேன்). தாமதமான கவனத்திற்கு மன்னிக்கவும். 20. பொடிச்சி Says: January 6th, 2007 at 7:31 pm மற்ற நண்பர்களும் நீங்கள் எழுதியது வெளியிடப்படாவிட்டால் தயவுசெய்து அறியத் தாருங்கள். 21. பொடிச்சி Says: January 7th, 2007 at 12:21 am //மேலும் யுத்தத்திற்கு எதிராக ஊர்வலம் போவது பற்றிக் கூறி உள்ளீர்கள், இதனால் என்ன பயன் கிடைத்துள்ளது? நாமும் பல ஆண்டுகளாக ஊர்வலம் போனவர்கள் தான்.இராக்கிலும்/ ஆப்கானிலும் முரண்கள் எதிர் யுத்தத்தினால் தானே எதிர்கொள்ளப்படுகின்றன? இந்த அரசுகள் எவை ஆவது ஊர்வலம் போவதால் முரண்களுக்கு தீர்வைக் கண்டுள்ளனவா?// //உங்கள் உணர்வுகள்,கவலைகள் எவருக்குமே தீர்வைத் தந்துவிடாது.அவை உங்கள் சொந்த மனதை ஆற்றலாம் ஆனால் மக்களின் துயரை நீக்காது.நீங்கள் பதிவிடுவது உங்களுக்காக இருக்கலாம், ஆனால் எனது கேள்விகளும் ,கரிசனையும் மக்கள் துயர் தீர வேண்டும் எங்கிற அவாவால் எழுவன.யுத்தம் பற்றி உங்கள் கவலையான பதிவுகள்,யுத்தங்களை 25 வருடங்களில் அல்ல எப்போதுமே நிற்பாட்டி விடாது.// அதாவது -முடிவாக – இந்தப் பதிவை எனது ‘சுய’ தேவைக்காக எழுதினதாயும் நீங்கள் மக்களின் துயரையும் முன்வைத்து பேசுவதாகச் சொல்கிறீர்கள்! ஆனால், எனது எழுத்து போலித்தனமாக இருப்பதற்கு உங்களுக்கான காரணங்கள் இருக்கின்றன என்று சொன்னேனே தவிர, அது தனிப்பட்டது, எனது சொந்தத் துயரம் என சொல்லவில்லை. அவற்றை எழுதக் கூடாதென்று இல்லை. போரில் பிள்ளையை இழந்த ‘விசரி’ தெருவில் திரிகிறதோ, யாழ்ப்பாணத்தில் சனம் தலையிலடித்துக்கொண்டு திரிகிறதோ, ‘தனிப்பட்ட’ துயரங்கள் என்றால் – எதுதான் “மக்கள்” துயரம்? தனது நாட்டு நிகழ்வுகள் குறித்து’மக்களின் பெயரால்’ ‘மக்களின் துயரால்’ அல்லது எதன் அடிப்படையில் ஒருவர் எழுதலாம் என்பதை, அல்லது எப்படி எழுதினால் உங்களைப் போன்ற ஒருவருக்கு “போலித்தனமற்றதாக” இருக்குமோ அப்படித்தான் எழுதவேண்டுமென்று எந்தக் கடப்பாடுகளும் கிடையாது.. உலகத்தில் யுத்தம் நடக்கும். அழிவுகள் நடக்கும். என் பிள்ளை, என் பிள்ளையின் பிள்ளை காலத்திலும் நடக்கும் என்று சொல்லிவிட்டு இருப்பவர்களால் அல்ல -சிறியதேனும்- மாற்றங்கள் நடந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற வெள்ளைஆதிக்க தேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் -ஊடகங்களின் பல்வேறுபட்ட பிரச்சாரங்களையும் தாண்டி- யுத்தத்தை எதிர்த்துப் போனார்கள் என்றால் அது பெரிய விடயம்தான். நெடுகிலும் சொல்ற மாதிரி வியட்னாமை உ-ம் காட்டலாம், மக்கள் எழுச்சியில் படை திரும்பியது என்று. படை திரும்பி வரும் வரையில் இழப்பு நடந்துதானே என்று பதிலுக்குக் கேட்கலாம், அதற்காக -யுத்தமென்றால் சகஜமென்று – ஒன்றும் செய்யாமல் இருந்து மேலும் கொலைகளை நடக்க விட முடியுமா? ஈராக்கில் அமெரிக்க உள்-நுழைவிற்குப் பிறகு அமெரிக்க இராணுவத்துடன் மட்டுமல்ல மோதல், தமக்குள் மதப்பிரிவுகளும் தான் சண்டை பிடித்து சாகின்றன. மட்டக்களப்பு-வன்னி பிளவில் இரண்டு புறமும் கொல்லுவது போல. இறந்தது என்னவோ பிள்ளைகள்தான். 25 வருடங்களாக, நீங்கள் நம்புகின்ற சொல்லுகின்ற விதமான “தீர்வில்” நடக்கிற யுத்தம் தந்தவை என்ன? இருதரப்பும் போரிட, அப் பிரதேசங்களை விட்டு இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் மக்களிடம் போய்க் கேளுங்கள் அவர்கள் விரும்பிற “தீர்வை”. யுத்தத்திற்கான காரணிகளை அகற்றுவது என்பது -எனது அகராதியில்- நிச்சயமாக யுத்தத்தைப் பற்றிய மக்களின் மனநிலைகளை புறக்கணிப்பது என்பதாக இல்லை. //மீண்டும் கேட்கிறேன் மக்களின் கண்ணீருக்கான உங்கள் தீர்வு என்ன? அதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?// நீங்கள் கை காட்டிக் கேட்கிறவர்களும் நீங்கள் செய்ததைத்தான் செய்திருக்கிறார்கள். அதாவது நாட்டைவிட்டு “இங்கு” (புலம்பெயர்ந்து) வந்து “இருக்கிறார்கள்.” 22. செழியன் Says: January 7th, 2007 at 3:59 am கடந்த சில நாட்களாக வலைபதிவில் தமிழ் வாசிப்பவன் நான். சத்தியமா மொடிச்சி எழுதினதினதில அரைவாசியொ..அல்லது பின்னினைப்பில மற்ற ஆக்கள் எழுதினதோ விழங்கிக்கொள்ளுரது கஸ்டம இருக்கு…( 11 வகுப்புவரை தமிழ்ழ படிச்சனான்.) நீங்கள் சொல்லுற விடயங்கள் சம்பவங்கள் விழங்குது..ஆனால்… நீங்கள் எழுதிற மொழிநடை..கம்பராமாயணத்தவிடை கஸ்டமை இருக்கேக்க..இதில இருக்கிற கொஞ்ச பேர விடை..வேர யாருக்கு விழங்க போகுது??? 23. பொடிச்சி Says: January 7th, 2007 at 4:59 am //( 11 வகுப்புவரை தமிழ்ழ படிச்சனான்.// செழியன்: இந்த உங்கட கஸ்ரத்திற்கு ஆறுதல் தாற மாதிரி ஒரே ஒரே விசயம் தான் சொல்ல முடியும், நான் வந்து 8ம் வகுப்பு வரை தமிழ்ழ பட
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: