*”விபச்சாரி”களைக் கொல்லுதல்

த்தார் விடுமுறை காலச் செய்திகளால் நிறைந்திருக்கிற ஊடகங்களுள், மாறுதலாயிருந்தது, கிழக்கு இங்கிலாந்தில் தொடர்ச்சியாய் ஐந்து ‘விபச்சாரிகள்’ கொல்லப்பட்டிருந்தது… எனினும், அமைதியாக ஆரம்பிக்கும் ஒரு ஹோலிவூட் திகில்ப் படத்தின் திரைகளில் கொட்டப்படுகிற கொலைக்குரியதான சிவப்பு நிறமாய் – இந்த செய்தி விடுமுறைக்கால விழாக் கோலங்களுள் திரைப் படங்களுக்குரிய ஒரு திறில்லையும் தராது போய் விட்டது. மேற்கு நாடுகளில், பதின்மர்கள் படிக்கிற திகில் கதைப் புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், prostitutes-serial killers-murders இச் சங்கிலி வெகு சகஜம்! ஆகவே, இச் செய்திகள் இன்னபிற சொற்களால் காவிவருவன, பார்த்துப் பார்த்துப் பழகிப்போன திரைப் படங்களில் வந்த கொலைகளாகவும், கொலையாளி பற்றிய சித்திரிப்பாகவும் கடந்து போய்விடுகின்றன.

விபச்சாரிகளைக் கொல்லுதல் தொடர்பான அனுதாப/எதிர்ப்பு வரிகளை எழுத இப் பத்தியை எழுதுவில்லை. விபச்சாரிகளை அல்லது நடத்தை கெட்டவர்களைக் கொல்லுதல் என்பது எமக்கொன்றும் புதிய செய்தியுமல்ல. ஒவ்வொரு மதமும் கொன்றது. உங்களில் எவன் ஒருவன் தவறு செய்ய வில்லையோ அவன் முதற் கல்லை எறியுங்கள் என்றதான குரலொன்றின் இடையீட்டைத் தவிர சலனம் ஒன்றும் இல்லை. மேற்கத்தேய நாடுகளில் ஹொலிவூட் படம் போன்ற எஃபக்ற் உடன் என்றால், மத அடிப்படைவாத நாடுகளில் கடவுளின் பெயரில், எமது நாடுகளில் தெருநாய்களைச் சுடுவதுபோல, இலங்கையில் யுத்தம் ஆரம்பித்த, நிறுத்தப்பட்ட தொடக்கம் முடிவுகளில், கொல்லப்பட்ட பாலியல் தொழிலாளிகள் எமது தேசீய ஏடுகளில், தேசீய மனங்களில் எந்த தொந்தரவையும் தருவதில்லை. கலாச்சார இயக்கங்களால் கொல்லப்பட்டவர்கள் பற்றி தனியே ஒரே ஒரு குழுவை பொறுப்பாக்க ஏதுவாய் போராட்ட வரலாறுகளோ, அதில் துவக்கையும் தூக்கிக் கொண்டு திரிகிற ஆண்களின் செயல்பாடுகளோ இல்லை.

சமூகத்தில் சிறு சலனமே ஏற்பட முடியாத இந்தக் கொலைகள் மதங்கள்/அரசியல்கள் வழிமொழிகிற ஒழுக்கத்தின் பெயரில் நடந்து முடிகின்றன. இந்த அற்ப நிகழ்வுகளைப் பற்றியன்றி, இதனுடன் தொடர்புடையதான “அற்ப” உணர்ச்சியொன்றைப் பற்றியே எழுத விழைகிறேன். ஒரு சமபாலுறவாளரான ஜேன் றூல் (Jane Rule) தனது கட்டுரையொன்றில் எழுதியிருந்தார்: “ஏன் சமபாலுறவை பெரும்பான்மை சமூகம் பயத்துடன் பார்க்கிறது? …இயல்பான நல்ல குணத்தை உடைய சிலரைக் கூட எமது பாலியல்பை ஏற்க சிரமப்படுத்துவது எது?
…அதற்கான பதிலாய் நான் அதிகம் நம்பவேண்டி வந்தது அவர்கள் அவர்களுடைய பாலியல்பையே இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.
…திருமணம் என்பது அவர்களுக்கு பெருமையாய்க் காட்டிக்கொள்ளும் ஒன்றல்ல. அது அவர்களது பாலியல்பைச் சட்டபூர்வாக்கும் ஒரு நிகழ்வே. அவர்கள் குழந்தைகளை தமது பாலியல்பின் கொண்டாட்டமாகப் பார்க்கவில்லை; அதன் பதில் விளைவாகவே பார்க்கிறார்கள். St.Paul சொன்னார்: “எரிவதைவிட திருமணம் செய்வது பறவாயில்லை.” எனினும் பாலியல்பிற்கு எதிரான தேவாலயத்திலே, இன்னமும் பிரம்மச்சரியம் இலட்சியமாக இருக்கிறது. இங்கே பாலியல்பு பற்றி எல்லாரும் வெட்கப்பட்டே ஆகவேண்டும்…
…அந்த வகையில், தமதான பாலியல் இயல்புகள் குறித்து, தமக்குள் “வெட்கப்பட்டுக்”கொள்ளும் பண்பு உடையவர்களாய் பெரும்பான்மையினரான அவர்கள் இருக்கும்போது, சிறுபான்மையினரான சமபாலுறவாளர்கள் தமது பாலியல் இயல்புகள் குறித்து “பெருமைப்பட” என்ன இருக்கிறது?! அவர்களும் தமக்குள்ளாக காமம் குறித்து வெட்கியும் குற்றஉணர்வுகளுடனும் திரிவதுதானே நியாயமாய் இருக்கும்? சமபாலுறவாளர்கள், வெளிப்படையாய் தமது பாலியல்பை அங்கீகரிக்க வேண்டுதல், தங்களுடைய காமத்தை அங்கீகரிக்காத ஒரு கூட்டத்திற்கு பயம் தரக் கூடிய ஒன்றுதானே?”

ஜேன் றூல், சமபாலுறவாளர்கள் பற்றிய பயத்திற்கு மட்டுமல்ல, அதிகமான போர்னோகிராஃபியின் தண்டனைக்குரிய வன்முறையினதும் வேர் எமது சமூகத்தின் எதிர்மறை ஒழுக்கவாதமே என்றெழுதினார். /the negative morality which pervades our society is the root not only of homophobia but of the punishing violence of much pornography./

சரிதான். போர்னோகிராஃபியை ஊடறு (ஐரோப்பா பெண்கள் சந்திப்பு) இதழில் யசோதா என்பவர் இழிகாம இலக்கியம் என்பதாய் மொழிபெயர்த்திருப்பார். ஜேனின் கூற்றைத் தொடரின் -எம்மைப் பொறுத்தவரையில்- காமமே இழிவுதான்.
நாங்கள் சமபாலுறவை (விபச்சாரத்தை) வெறுக்கவில்லை; நாங்கள் காமத்தையே வெறுக்கிறோம்.
எங்களது உட்பட யாரினது பாலியல்பையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது; அந்த வகையில், காமத்துடன் தொடர்பாடும் சகலருமே ஆண்களதும் பெண்களதும் வெறுப்புக்குரியவர்கள்தான். 2003-இல் அமெரிக்காவில் [சிறு பெண் பிள்ளைகளிற்கு -peer pressure-களிற்கு வழிகோலும்- ஒரு தவறான வழிகாட்டியாக இருக்கும்] பிரிட்னி ஸ்பியர்ஸை சுடும் சந்தர்ப்பம் கிடைத்தால், தான் சுடுவேன் என்று ஒரு அரசியல்வாதியின் துணைவியார் சொன்னது சர்ச்சையானது. அந்தப் பெண்மணி “சர்ச்சைக்காக” ஏதாவது சொல்லுபவர் என்று பேர் போனவராக இருந்தாலுங்கூட, இந்த வெறுப்பு மிக இயல்பானது. தாம் இன்பம் நுகருகிற உடல் குறித்து வெறுப்பையும் வசைகளையும் (அது குறித்த) கீழ்மையெண்ணத்தையும் உடையவர்களாக ஆண்களே இருக்கிறபோது பெண்களால் எப்படி சில்க் ஸ்மிதாவையும் பிரிட்னியையும் நேசிக்க முடியும், அவர்கள் பெண்ணிலைவாதிகளாக இருந்தாலுங் கூட? இலகுவாய், சில்க் சுமிதாவை, விபச்சாரிகளை பெண்ணிலைவாதிகள்கூட ஏன் வெறுக்கிறார்கள் என்று கேட்கிற யாராலும் அத்தகைய ஆழமான வெறுப்பின் மூலம் எங்கிருக்கிறதென யோசிக்க முடிவதில்லை.

புரட்சிகரமான கோட்பாடுகளை பின்தொடருபவர்களான (குறைந்தபட்சம் அப்படிச் சொல்லிக் கொள்கிற), “பெண்ணியவாதி”களுமான (குறைந்தபட்சம் அப்படிச் சொல்லிக் கொள்கிற) எழுதுகிற ஆண்கள், தமது சமூக அக்கறையை காட்டிக்கொண்டிருக்கும்போது, பெண்கள் குறித்த -ஆள ஊன்றிய – மரபான எண்ணங்களையும் வெளிக்காட்டுகின்றார்கள்.

ஒரு அடிப்படைவாத தமிழ் தேசீய ஏடான “முழக்கம்” பத்திரிக்கையில், (ரொறன்ரோ) கனடாவில் பரவி வருகிற இந்துக் கோயில்கள், சாதியம், என நல்ல ஒரு பேட்டி தருகிறார் எழுத்தாளர் சக்கரவர்த்தி (2000). என்னென்னத்திற்கு பூசை என்றெல்லாம் இல்லாது, பனி கொட்டாவிட்டால் அதற்கு “ஸ்னோ பகவானுக்கு யாகம் செய்வம்” என்பதான புலம்பெயர்ம மகாஜனங்களின் நடப்புகள் பற்றி விமர்சித்துக்கொண்டு போனவர், “இவற்றை தொடர்ந்து அனுமதித்தீர்களேயானால் வெல்ஃபெயார் (welfare) பகவான், வருமானவரி பகவான், கிறெச்சியான் (அப்போதைய கனடிய பிரதமர்) பகவான், பமீலா ஆண்டர்சன் அம்மன் (play boy model) என்று போய்க்கொண்டே இருப்பார்கள் மக்கள்” என்றரீதியில் எழுதியிருப்பார். இதில் சக்கரவர்த்தி சொல்ல வந்தது -மக்கள் வாழ்வில் பங்களிக்கிற எல்லாத் துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய- ஒரு விமர்சனம். ஆனால் யோசித்துப் பார்த்தால், சக மனிதர்களைச் சிறுமைப்படுத்துகிற, அவமதிக்கிற மதங்களும் சாதியமும் போல அதை ஆதரிக்கிற மோசமான கடவுள்களையும் விட, புலம்பெயர் வாழ்வில், பமீலா ஆண்டர்சன் அம்மனுக்கான பூசை செய்யக் கூடிய “தீமை” என்ன, முக்கியவமாக அதை சொல்ல விழைகிற ஆண்களுக்கு?!

இது ஒரு சிறிய உதாரணம் (அதிலும் சிறுகதைத் தொகுதி முதலாய சக்கரவர்த்தியின் எழுத்துக்களில் விரவி உள்ள ஆணீய கருத்தாடல்களுடன் ஒப்பிடுகையில் இதுவொரு அற்ப விடயம்). இதென்று இல்லை. அனேகமாக, தமது “சமூக அக்கறை”யை வெளிப்படுத்தும்போது, அதற்கு “வலு”ச்சேர்க்கு முகமாக இப்படி ஏதும் சொல்லப்படும். “கவிஞர்கள் பெண்களின் தொடைகளைப் பற்றி எழுதாமல் சமூகத்தில் நடக்கிற விடயங்களைப் பற்றி எழுத வேண்டும்” என்பார்கள். இந்த வேண்டுதல் விடப்படுவது கூட யாரிடம் என்றால் (கேவலம்?!) பெண்களின் தொடையைப் பற்றிக் கூட உருப்படியாய்/ஒழுங்காய் ஒன்றும் எழுதிவிடத் தெரியாத கவிஞர்ப் பெருந்ததொகைகளிடம்! இது ஒரு புறமிருக்க, இத்தகைய கூற்றுக்கள் கூறுவதும் “அற்ப” விடயங்களான, உடல்/உடற்கவர்ச்சி/காமத்தின்-எச்-சிறு – துண்டு பற்றியும் பேசுவதாய் இல்லாமல் “உயர்வான/உன்னதமான” விடயங்களைப் பற்றி பேச வேண்டும் என்பதையே.

ஆண்களால் எழுதுப்படுகிற பிரதிகளுள் -எந்த நிபந்தனையுமின்றி- “விபச்சாரிகள்” “நீலப் பட நடிகைகள்” “நடிகைகள்” கொண்டாடப் படுவதே நியாயமாக இருக்க முடியும்; ஆனால், பெண்கள் (அவர்கள் எந்த-ஈய-வாதிகளாய் இருந்தாலும்) அவர்களைக் கொண்டாடவேண்டும் என்பதற்கு ஒரு நியாயமும் இல்லை! பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்வின் பெரும் பகுதியே குடும்பம்-சமூகம்-ஊடகங்கள் என சகல தரப்பிடமிருந்து வரும் ஒப்பிடல்களாலும் அதை திருப்திப் படுத்துவதிலுமே கழிந்துவிடுகிறது. தெருக்களில் கூட சக பாலர் மீதான ஈர்ப்பை விட -தங்களுடன் ஒப்பிடப்படும்- பெண்களையே, ஆண்களின் கண்களூடாக பார்க்கிறார்கள். இந்த தலையிடிகள் கடந்த நிறைய முதிய பெண்மணிகள் கடைசிக் காலத்தில் கணவனைத் தனையர்களை விட்டு விட்டு முதியோர் இல்லங்களில் தப்பிப் போய் நிம்மதியாய் இருப்பதற்கான மகா காரணம் மூளையைக் கசக்கி யோசித்தும் உங்களிற்கு புலப்படாதது – ஒரு ஆச்சரியமல்ல! தமக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பெண் உடலை, தனக்குப் “பதிலாக” ஊரின் மூலைகளிலோ ஏதோ ஒரு கூப்பிடு தூரத்தில் இருக்கிற ஒரு வேசியை – பெண்கள் “வெறுப்பது,” அவர்களது நலன்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற, அப் பெண்களை ஆண்கள் வெறுப்பதைப் போல எள்ளளவும் நியாயமற்றது அல்ல!

காமம் அருவருப்பான ஒரு உணர்வு. அது குறித்த குற்றஉணர்ச்சிகள் சிறு பராயம் முதலாக ஊட்டப்பட்டிருக்கிறது. தமது உறுப்புகளை தொட்டபடி இருக்கும் சிறுவர்கள் பெரியவர்களின் கர்ணகொடூரமான குரலுடன் கூடிய தொடுகைக்கான தடையூடாக அக் கேவலமான பாகத்தின் கேவலமான அனைத்து உணர்ச்சிகள் குறித்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள். மதப் புத்தகங்கள், நெறிப்படுத்தல்கள் எதற்கும் செவிசாய்க்காமல் (செவிசாய்க்க விடாமல்) பாலியல்பை தூண்டியபடி இந்த உடல்கள், திரைப்படங்களில், குடியிருப்பின் ஓரங்களில், தெருவில் அவர்களிற்கு சவாலாய் அழைப்பாய் நின்றுகொண்டிருக்கின்றன. மஞ்சள் பத்திரிகைகளில் நீலப் படங்களில் வண்ணங்களான உலகில் இணைய வெளியில் இந்த வெறுப்பைத் தாண்டி, வாழவும் முடியவில்லை. இங்கே, பாலியல் தொழிலாளர்கள் எனது “பலவீனத்தின்” அடையாளம்; நினைவு படுத்தல். நீலப்பட நடிகைகள் எனது அற்ப எண்ணங்களின் உருவம். விபச்சாரிகள்: அவமரியாதைக்கு உரியவர்கள்; சித்திரவதைக்கு உரியவர்கள்; கீழ்மைப்படுத்த வேண்டியவர்கள்.

“றேப் பண்ணப்பட்ட ஒரு பெண்ணைத் திருமணம் (செய்தாலும்) செய்வேன்; நடிகையைக் கட்ட மாட்டன்” மிகுந்த விறைப்புடன் சொன்னான் ஒருவன். அதேபோல, நீலப்படங்களிற்கு ஒப்பாக, இளைஞர்களிற்கு காமத்தை தூண்டுற பிரிட்னி, யேஸிக்கா சிம்சன் போன்ற இளம் பாடகிகள் பற்றி, அவர்களுக்குப் பிடித்த பாடகர்கள் அவர்களா என்று கேட்டால், பதின்மப் பையன்கள் அனேகமாய் “இயோ நாஸ்ரி” என்றே சொல்லுவார்கள். அவர்களை அவர்களது திறமையின்மையை உடலை முன்னிறுத்துதலை சொல்லி BITCHES என்று முடிப்பார்கள். Once again, மாணவர்கள் இப்படி இருக்கிறபோது பெண்கள் வேறு எப்படி இருப்பார்கள்?
பாடகி கிறிஸ்-ரீனா அகிலறா ஒருமுறை சொன்னாள். றிக்கி மார்ட்டின் போன்ற ஆண்கள் முன்னிறுத்துகிற பாலியல்பை, உடல் அசைவுகளை, நிறையப் பெண்கள் கவர்ச்சியாய் அவர்களுடன் ஆடுவதை யாரும் விமர்சிப்பதில்லை; ஆனால் இவற்றைப் பாடகிகள் செய்கிறபோது (குறைய ஆடை, நிறைய ஆண்களுடன், பாலியல் உள்ளடக்கத்தில்) அது விமர்சிக்கப்படுதலின் வெகுசன இரட்டை-மதிப்பீட்டுப் பார்வை (double standard) பற்றி.

அந்த அமெரிக்க கவர்னரின் பாரியார் போல எந்த பெண்ணின் கணவனும் ரிக்கி மார்ட்டினினையோ வேறை யாரும் மோகமூட்டும் பாடகனையோ {இளைஞர்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருப்பதாய், அல்லது சிறு பையன்கிற்கு பள்ளியில் நிறைய peer pressure தருவதாய்} “சுட” வேண்டும் என்று சொல்வதில்லை. சர்ச்சைக்குள்ளான மேரீலான்ட் கவர்னரின் மனைவி Kendel S. Ehrlich (சொன்னதே “நல்ல காலம் நான் மகனை வளர்க்கிறேன். …இல்லாவிட்டால் இந்த [பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற] உடல் பிம்பங்களை கண்டு, peer pressure-களுடன் வளர்கிற மகளிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?” என்பதுதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆண் குழந்தைகள் இதால் பாதிக்கப்படுவதில்லை என்பதே, அவற்றை பார்ப்பதிருந்து அவனுள் பதிவாகிற பாலியல் குறித்த எண்ணங்கள் அவனது ஆண்மை சார்ந்த, அதனது பாதிப்பு அவனது ஆண்மையை மெருகேற்றுவதாக, பதிந்து போன வழிவழியான எண்ணங்களேயன்றி வேறென்ன.
எப்பொழுதும், ஆணாக இருத்தல் பற்றி இந்த ஊடகங்கள் கற்பிக்கின்றன. காமத்தின் மீதான வெறுப்பை மதங்கள் விதைக்கின்றன. இதிலிருந்து வருகிற ஆணின், பெண் உடல் மீதான வெறுப்பு அவனது குற்ற உணர்ச்சியிலிருந்து உருவாகிறது. அவனால் ஒழுங்கை நிலைநாட்டவோ, ஒழுக்கக் கேட்டிற்கான தண்டனையாகவோ பலியிடப்படும் இந்த உடல்கள் – ஆண்களின் (அவர்களே அதை கையப்படுத்தி வைத்திருப்பதால்) காமத்தின் மேலான வெறுப்பையே வலியுறுத்துகின்றன. அத்தகைய ஒரு வெறுப்புடன் ஒரு பிள்ளையை வளர்ப்பதும் பிரச்சினையானதே. ஜேன் கூறுவதே போல: எல்லா மனிதர்களும் தங்களது பாலியல் இயல்புகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும்வரையில்,
இந்த உலகத்தில் நாம் சுதந்திரமாக இயங்க முடியாது. அப்படி எதிர்கொள்ளுவதூடாக அவற்றை விளங்கிக்கொள்ளவும், பொறுப்பெடுத்துக் கொள்ளவும், அதனைக் கொண்டாடவும் முடியும். ஏனெனில், தனது பாலியல்புகள் குறித்து ஏமாற்றம்/வெட்கம்/அச்சம் உடைய ஒருவன்/ஒருவள் மற்றவர்களுடைய பாலியல்புகள் குறித்த சகிப்புணர்வு உடையவராய் இருக்க முடியாது. /…we wont’ move freely in the world until all ppl are required to confront their sexual natures in order to understand, take responsibility for and celebrate them, as we have had to. For no one who is disapointed or ashamed or frightened of his/her own sexuality is going to be easily toleratant of anyone else’s./

இணையத்தின் மூலைகளிலும், அந்தரங்க உரையாடல்களிலும் நாம் இரகசியமாயும் பொதுப்பேச்சிற்கு இடமற்றதாயும் வைத்திருக்கிற காமம் பொதுக் கழிப்பறைகளில் யாரும் பார்க்காத நேரத்து சுவர்க் கிறுக்கல்கள்போல வக்கிரங்களூடாகவே தன்னை விடுவிக்கிறது. ஆழமான வெறுப்பிலிருந்து பிரித்து அதைப் புரிந்து கொள்வது மத/ஆணீய/அரசியல் தளத்தில் மிக சவாலானது. ஆனால் குற்ற உணர்ச்சிகளற்று, சுரண்டல்களற்று அதனால் மட்டுமே ஆன “துரோகங்கள்” அற்று, பாலியல்புகள் கொண்டாடப்படுகிற ஒரு சூழலிலேயே எல்லா ஆண்களாலும் பெண்களாலும் நிகழ்த்தப்படுகிற இந்த இழிவுகள் நிறுத்தப்படலாம்.

ஜேன் றூலின் குறிப்பிட்ட கட்டுரையுள்ள நூல்:Hot-Eyed Moderate (1985)

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 3:44 am

  14 Responses to “*”விபச்சாரி”களைக் கொல்லுதல்”

  1. -/பெயரிலி. Says:
  January 1st, 2007 at 5:28 pm

  உங்கள் தலைப்புடன் தொடர்பான கருத்துகள் முழக்கத்தின் குரல்வரை புரிகிறன. அதற்குப் பிறகு மெய்யாகவே குழப்பமாகவிருக்கிறது. இரண்டு தடவைகள் வாசித்தேன். ஒரு கேள்வி, ஓர் ஆண் உடல் உளம் சார்ந்த வேறுபாட்டிலே எப்படியாகப் பெண்ணை நோக்கவேண்டும் என அவளின் இருப்பிலே ஒரு சின்னத்தட்டலும் விழாதமாதிரி பெண் எதிர்பார்க்கிறாள்? தனிப்பட்ட ஆண்-பெண்ணின் பண்புகள் எவ்வகையிலே மேற்கேட்ட எதிர்பார்ப்பிலே தாக்கம் ஏற்படுத்துமென நினைக்கின்றீர்கள்? பல தடவைகளிலே, பெண்ணை இவள் ஆண் அல்ல என்று நோக்கினாலே அது பெண்ணை அழுத்துதல் அவமதித்தல் என்பது போன்ற குரல் எழக்கண்டிருக்கிறேன். குறைந்தது ஒரு பெண்மீதோ அல்லது ஒரு ஆண்மீதோ பாலுணர்வு இல்லாமல் (’காமம்’ தோன்றாது) வாழ்க்கை ஓடுமா? உங்கள் கட்டுரையின் இறுதிப்பகுதி புரியவில்லை. சில வேளை நான் கேட்பதற்கு அதிலே பதிலிருக்கலாம். அல்லது நீங்கள் அதைப் பற்றியே பேசாதிருந்திருக்கலாம். இது குறித்து நீங்கள் கருத்து சொல்லவேண்டுமென எதிர்பார்க்கவில்லை (முன்னொரு இடுகையிலும் இது போன்றதொரு பின்னூட்டம் இட்டிருந்தேன்). விபச்சாரிகள் என்ற பதத்தினை ஆட்சேபிப்போம்; ஆனால், பாலியல் தொழிலாளிகள் கொல்லப்பட்டதை, அதுவும் பாலியற்றொழில் செய்வது காரணமாகக் கொல்லப்பட்டதை, வேறெந்த விதத்திலே செய்திகள் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? வேர்சஸ் புளோரிடாவிலே ஓர் ஆண்பாலியற்றொழிலாளியாலே கொல்லப்பட்டபோது, அவர் (ஆண்பாலுறவுள்ளவர் என்பதாலோ என்னவோ) அது பெரிதாகவே பேசப்பட்டது.சில சந்தர்ப்பங்களிலே, நாடாவை மீள்தகுநிலை தாண்டியும் அதிகம் இழுத்துவிடுகின்றோமா?
  2. பொடிச்சி Says:
  January 1st, 2007 at 7:09 pm

  நன்றி பெயரிலி இரண்டு தடவை வாசித்ததற்கு. பிற்பகுதியின் விளங்காமைக்கு எனது மொழி சார்ந்த குறைபாடுகளே காரணமாக இருக்கும்.

  இதில குறிப்பிடுவதூடாக அடிப்படையாக நானும் விளங்கிக்கொள்ள முனைந்ததும் உங்கட கேள்விகள் குறித்தும்:
  1. காமம் தோன்றாமல் எந்த பாலியல் உறவுகளும் இல்லை (ஆண் – பெண், பெண்-பெண், ஆண்-ஆண், queer இன்ன பிற); அப்படித் தோன்றாமல் வாழ்க்கை ஓடுமா என்பதைவிட, ஓடும் என்று சோன்னால் ஏற்படுத்தப்படுகிற பண்பாட்டுக் கூச்சல்கள் (அதன் உளவியல்)பற்றி
  2.காமத்திற்கான உடலை நிர்ணயிப்பது (குறிப்பிட்ட மட்டத்திற்கு ‘பெண்ணை இவள் ஆண் அல்ல’ என வைத்திருக்கிற imagesஉம்) ஊடகங்கள் (சினிமா, நீலப்படம், etc)தாற உருவங்கள்
  3. காமத்தின் மீதான வெறுப்பே பாலியல் தொழிலாளிகள் ஏனைய பாலியல் பிம்பங்கள் மீதான கொலைவன்முறைக்கு, வெறுப்பிற்கு காரணம் என்பது

  //விபச்சாரிகள் என்ற பதத்தினை ஆட்சேபிப்போம்; ஆனால், பாலியல் தொழிலாளிகள் கொல்லப்பட்டதை, அதுவும் பாலியற்றொழில் செய்வது காரணமாகக் கொல்லப்பட்டதை, வேறெந்த விதத்திலே செய்திகள் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? வேர்சஸ் புளோரிடாவிலே ஓர் ஆண்பாலியற்றொழிலாளியாலே கொல்லப்பட்டபோது, அவர் (ஆண்பாலுறவுள்ளவர் என்பதாலோ என்னவோ) அது பெரிதாகவே பேசப்பட்டது.சில சந்தர்ப்பங்களிலே, நாடாவை மீள்தகுநிலை தாண்டியும் அதிகம் இழுத்துவிடுகின்றோமா?//
  அதீத உணர்ச்சிகளுக்கமைய செய்திகள் எழுதுகிறவர்களிடம் எதையும் எதிர்பார்த்தில்லை.
  ஆண்பாலுறவாளர் என்பதால் அந்தச் செய்தி சென்சேஷனலாய் ஆகுவதுபோல இல்லாமல்
  காமத்தை அதன் குறைபாடுகளுடன் (அதன்மீதான விமர்சனங்களுடன்) அணுகுவது அது குறித்த புனைவுகளை இல்லாமல் செய்யும் என நினைக்கிறேன். இந்த மாதிரி கொலைகள் சமூகத்தின் செய்தி ஊடகங்களில் சென்சேஸனல் ஆக்கப்படும் ஏனைய வன்முறைகள் போல இல்லாமல் போவதற்கும் “அது கெட்ட/முறை தவறிய உடல்” என்பதே காரணமாக இருப்பதும் குறிப்பிடத் தோன்றுகிறது. இலங்கையில் ஒரு பெண் (பெயர் நிச்சயமில்லை; பெயர்களை மட்டும் ஒப்புவித்துக்கொண்டிருக்கிற சூழலில், அது அவசியமற்றதும்)பாலியல் வன்முறைக்குள்ளானபோது “அது பொய். உண்மை எதுஎனில் அவரொரு பாலியல் தொழிலாளி” என எதிலோ எழுதியிருந்தார்கள். ஒரு பாலியல் தொழிலாளிமீது பாலியல் வன்முறை நிகழ்த்தமுடியாதோ என்கிற கேள்வியோடு, என்ன ஆதிக்கத்தனமான வாதங்கள் இவை? அத்தோடு: ஒருவர் மீதான பாலியற் தொழில் செய்ததற்கான கொலையிலும் பாலியல் வன்முறையிலும் எந்த வன்முறை கொடியது என்பதை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறோம் என்ற கேள்வி வருகிறது.
  3. தமிழ்நதி Says:
  January 2nd, 2007 at 2:34 am

  தோழி,
  எப்போதும்போல ஆழ்ந்த வாசிப்பை வேண்டுகிற படைப்பு. காமம் என்பது பாவச்செயல் என்று கருதுகிற சமூகத்தில் எப்படி இத்தனை குழந்தைகள் நாளாந்தம் பிறந்துகொண்டிருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். பாலியல் தொழிலாளர்கள் மீது இத்தனை மென்மை காட்டாதீர்கள். குஷ்புவுக்கு அடிக்கவென விளக்குமாறு எடுத்த ‘கற்பின் காவலர்கள்’இன்னமும் இருப்பார்கள்.
  4. -/பெயரிலி. Says:
  January 2nd, 2007 at 7:18 pm

  ஒரு பொடிச்சி,
  பதிலுக்கு நன்றி. எனது வாசிப்பிலேயிருக்கும் தடங்கல்தான் புரிந்துகொள்ளமுடியாததற்குக் காரணமெனப் படுகிறது.

  நிற்க; நீங்கள் சொல்லும்
  /1. காமம் தோன்றாமல் எந்த பாலியல் உறவுகளும் இல்லை (ஆண் – பெண், பெண்-பெண், ஆண்-ஆண், queer இன்ன பிற); அப்படித் தோன்றாமல் வாழ்க்கை ஓடுமா என்பதைவிட, ஓடும் என்று சோன்னால் ஏற்படுத்தப்படுகிற பண்பாட்டுக் கூச்சல்கள் (அதன் உளவியல்)பற்றி
  2.காமத்திற்கான உடலை நிர்ணயிப்பது (குறிப்பிட்ட மட்டத்திற்கு ‘பெண்ணை இவள் ஆண் அல்ல’ என வைத்திருக்கிற imagesஉம்) ஊடகங்கள் (சினிமா, நீலப்படம், etc)தாற உருவங்கள்
  3. காமத்தின் மீதான வெறுப்பே பாலியல் தொழிலாளிகள் ஏனைய பாலியல் பிம்பங்கள் மீதான கொலைவன்முறைக்கு, வெறுப்பிற்கு காரணம் என்பது/
  என்பவை எனது கேள்விகளுக்கு விளக்கம் தருகிறன. நன்றி. நீலப்படங்கள் குறித்து சில மாறான கருத்துகளிருந்தபோதுங்கூட, உங்கள் மூன்று கருத்துகளுடனும் உடன்படுறேன்.

  /காமத்தை அதன் குறைபாடுகளுடன் (அதன்மீதான விமர்சனங்களுடன்) அணுகுவது அது குறித்த புனைவுகளை இல்லாமல் செய்யும் என நினைக்கிறேன்./
  மிகச்சரி.
  5. sooryakumar Says:
  January 2nd, 2007 at 8:43 pm

  அன்புத் தோழி
  ஏன் உங்கள் மொழிநடை இவளவு சிரமமாக இருக்கிறது?
  எளிய நடையில் எழுத முற்படுங்களேன்.
  உங்கள் நடையினால் நல்ல விடையங்களை நான் இழந்து போகிறேனோ என்ற அச்சம் வருகிறது.
  தமிழ் பிரச்சினையென்றால் ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்.
  எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவேண்டும்.
  It looks like a Phd thesis for a university.
  I couldnt follow you.
  இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
  நீங்கள் சொல்லவரும் கருத்து தெளிவான பின்னர், எனது பின்னூட்டத்தை சொல்கிறேன்.
  பெயரிலிகூட 2 முறை வாசிச்சாராம்.
  நான் 4 வது முறை வாசிச்சுக்கொண்டிருக்கிறேன்.
  6. sooryakumar Says:
  January 2nd, 2007 at 9:26 pm

  http://product.half.ebay.com/Eleven-Minutes_W0QQtgZinfoQQprZ30248456
  இந்த நூலில் விபச்சாரம் பற்றியும் காமம் பற்றியும் அழகாகவும் ஆழமாகவும் சொல்கிறார் ஒரு Brazil Novelist
  ஒரு தகவலுக்காக சொல்கிறேன். படித்துப் பாருங்கள்.
  உங்கள் பதிவுக்கு விரைவில் பின்னூட்டம் இடுகிறேன்.
  நன்றி.
  7. பொடிச்சி Says:
  January 3rd, 2007 at 3:09 am

  பெயரிலி: //நீலப்படங்கள் குறித்து சில மாறான கருத்துகளிருந்தபோதுங்கூட,//
  முடிந்தால் எழுதுங்கள், அறிய ஆவல்.

  சூரியகுமார்: உங்களுக்கும் சிரமமெடுத்துப் படிப்பதற்கு நன்றி; முடிந்தளவு எளிமையாய் எழுத முயல்கிறேன்..
  மொழிநடை சிக்கலாகுவதற்கு சில விடயங்களை யோசிக்கிற தோரணையிலேயே எழுதுவதும் காரணமா இருக்கலாம்.

  மற்றப்படி, Phd என்றால் இங்கே சிலர் Person Head Damaged என்பார்கள் 🙂 அந்த வகையில் என்றால் சரிதான்.
  8. பொடிச்சி Says:
  January 3rd, 2007 at 3:15 am

  நன்றி தமிழ்நதி..! (தன்னோடதோ மற்றவர்களதோ) காமம் தொடர்பாக முழு உலகமுமே தன்னால் முடிந்தவரை காவலராய் நின்றுகொண்டிருக்கிறது.

  sooryakumar: நீங்கள் குறிப்பிட்ட நாவலை முடிந்தால் படிக்க முயல்கிறேன். தகவலுக்கு நன்றி
  9. somee Says:
  January 3rd, 2007 at 6:25 am

  உங்கள் எழுத்து மிகவும் குழப்பம் நிறந்ததாக உள்ளது எழுதிய பின்னர் நீங்களும் சில தடவைகள் வாசித்து விட்டு பதிவிடுவது நல்லது.
  ஆழமான விசயத்தையும் குழப்பமில்லாது தமிழ்மணம் போன்ற வலையமைப்பில் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் படி கொடுபது நல்லது.

  நண்பர் ஆர்.பி.அமுதன்(தமிழகத்தில் உள்ள ஒரு சில முழு நேர ஆவணப்பட இயக்குனர்களூள் ஒருவர்) பெண் பாலியல் தொழிலாளிகள் பற்றிய ஆவணப் படம் ஒன்றை எடுக்கவுள்ளார். அதுபற்றி பேசுகிற போது அவர் தன்னிடமுள்ள புத்தகம் ஒன்றைக் கொடுத்து இலங்கை பற்றிய சில தகவல்களுக்கு விளக்கம் கேட்டார். தெற்காசியப் பகுதிகளின் பாலியல் தொழிளாளிகள் பற்றிய ஒரு ஆய்வுப் புத்த்கம் இது.
  இப்போது ஒரு தகவலுக்காக அந்த புத்தகத்தின் பெயர் விபரத்தையும் சிறுகுறிப்பையும் தருகிறேன்.

  Sexuality, Gender and Rights : Exploring Theory and Practice in South and Southeast Asia/edited by Geetanjali Misra and Radhika Chandiramani. New Delhi, Sage Pub., 2005, 313 p., ISBN 81-7829-553-9.

  “Attitudes towards sexuality and gender in South and Southeast Asia have begun to change in recent decades. However, diverse forces-such as the resurgence of religious fundamentalism, increased militarization, the spread of HIV and AIDS, and the continued preference for male children coupled with constrains on women’s power to control all aspects of their lives–continue to have negative consequences. This volume analyzes and documents the groundbreaking work done by many organizations to bring issues of sexuality and rights to public attention, to expand the freedoms of women and sexual minorities and to highlight the unfair distinctions faced by those not conforming to gender and sexual norms across a range of expressions, behaviours and identities in Asia.

  https://www.vedamsbooks.com/no42716.htm

  புத்தகத்தை முழுமையாக வாசிக்க எனக்கு அப்போது நேரமிருக்கவில்லை இலங்கை இந்திய பகுதிகளை படித்து விட்டு இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள பாலியல் தொளிலாளர்கள் பற்றி உரையாடினோம்.இது குறித்த ஒரு பதிவையும் பின்னர் எனது பக்கத்தில் பதிவு செய்கிறேன்
  10. செந்தழல் ரவி Says:
  January 3rd, 2007 at 8:07 am

  சின்ன பிள்ளைதானே என்று தள்ளமுடியாமல் அழுத்தமாக எழுதக்கற்று இருக்கிறீர்கள், சற்று நம்ப சிரமமாக உள்ளது !!!
  11. பொடிச்சி Says:
  January 4th, 2007 at 11:04 pm

  சோமி:
  அனேகமாக எனது எல்லாப் பதிவுகளையும் பல தடவை படித்து, எனக்குத் தெரிந்த இலக்கணப் பிழை எல்லாம் பார்த்து முடித்துத்தான் பதிவிடுகிறேன். //ஆழமான விசயத்தையும் குழப்பமில்லாது தமிழ்மணம் போன்ற வலையமைப்பில் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் படி கொடுபது நல்லது.//

  எந்த ஆழமான விசயத்தையும் குழப்பமில்லாமல் தெளிவாய் முன் வைப்பது நல்லதும், பயன்மிக்கதும்தான். ஆனால்,
  “தமிழ்மணம் போன்ற வலையமைப்பில் உள்ளவர்கள்” மட்டுமல்ல, யாரைக் குறித்தும், அவர்கள் இப்படி எழுதினால் புரிந்துகொள்வார்கள் இப்படி எழுதினால் புரிந்துகொள்ளமாட்டார்கள் என நானே ஓர் முடிவைச் செய்வது எனக்கு உடன்பாடான ஒன்றாய் இல்லை.
  அத்துடன் குழப்பமான, சிக்கலான உலகத்திலுள்ள எத்தனையோ விடயங்களுள் “எழுத்து” மட்டும் குழப்பமற்ற ஒன்றாக எப்படி இருக்க முடியும்?

  எனது எழுத்தையோ அல்லது குழப்பமாய் எழுதப்பட்ட பிற எழுத்தையோ படிப்பதிலுள்ளள சிரமத்தையோ -நீங்கள் எழுதிறபோது- புரிந்துகொள்கிறேன். அதே சமயம், இன்னொரு வகையில் (ஈழ எழுத்து/ஈழ பேச்சு வழக்கு, (ஆரம்பத்தில்) தலித் வழக்கு “விளங்குவதில்லை” என்கிற முறைப்பாடுகளுடன்) தங்களைப் போலவே உலகம் முழுதும் பேச வேண்டும் என நினைக்கிற தன்மையும் இருக்குத்தானே? அதில் உடன்பாடில்லை.

  ஆர்.பி.அமுதனின் ஆவணப் பட முயற்சி மற்றும் புத்தகம் (”Sexuality, Gender and Rights : Exploring Theory and Practice in South and Southeast Asia”) பற்றிய தகவல்களுக்கு நன்றி. அதைப் பற்றி கட்டாயம் எழுதுங்கள்.
  12. வசந்தன் Says:
  January 4th, 2007 at 11:37 pm

  மொழி விளங்காத விடயத்தில் பெயரிலிக்கு அடுத்ததாக நீங்கள்தான் சிக்கலை எதிர்கொள்கிறீர்கள் போலுள்ளது. (அவருக்கும் விளங்கேல எண்டது பெரிய முசுப்பாத்தி)

  என்வரையில், கைவந்த முறையிலேயே எழுதுவது சரியென்று படுகிறது.
  13. sinnakuddy Says:
  January 5th, 2007 at 1:29 am

  //மொழி விளங்காத விடயத்தில் பெயரிலிக்கு அடுத்ததாக நீங்கள்தான் சிக்கலை எதிர்கொள்கிறீர்கள் போலுள்ளது. (அவருக்கும் விளங்கேல எண்டது பெரிய முசுப்பாத்தி)

  என்வரையில், கைவந்த முறையிலேயே எழுதுவது சரியென்று படுகிறது//

  .குறை விளங்கபடாது பாருங்கோ…. உந்த விசயம் தெரிஞ்சாக்கள் என்று சொல்றவையின்ரை கதை. எழுத்து எனக்கு அவ்வளவு பிடிபடுறதில்லை.. அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரை றை பண்றன் தெரிஞ்சு கொள்ளுவம் என்று இந்த மரமண்டைக்கு விளங்குதில்லை… அல்லது உவைக்கு விளங்கபடுத்த தெரியில்லையோ… என்னவோ… உவை தங்களுக்குள்ளை ஒரு வட்டத்தை போட்டுட்டு விவாதிப்பினம் திட்டுவினம் குழுக்களாக சேருவினம் பிரிவினம்…. உவை. எனக்கென்னவோ சனத்துக்கு தேவையான விசயத்தைதான் பேசினம் என்று படுது. ஆனால் சராசரி சனத்துக்கு விளங்காத பாசையில் கதைக்கினம் எழுதிகினம் என்று. படுது..
  14. somee Says:
  January 5th, 2007 at 5:10 am

  பெட்டை அவர்களே பதிலுக்கு நன்றி.
  ஊடறு இதழிலும் நிறையப் பேர் நன்றாக எழுதியிந்தார்கள்.இந்த விடயங்கள் பேசப் படுவது மகிழ்ச்சி.

  என்னோடு வலைப்பதிவரன ஒரு தோழி உரையாடும் போது கேட்ட கேள்விக்கான பதில் உங்கள் பதிலில் இருகிறது.

  //எனது எழுத்தையோ அல்லது குழப்பமாய் எழுதப்பட்ட பிற எழுத்தையோ படிப்பதிலுள்ளள சிரமத்தையோ -நீங்கள் எழுதிறபோது- புரிந்துகொள்கிறேன்//
  //தங்களைப் போலவே உலகம் முழுதும் பேச வேண்டும் என நினைக்கிற தன்மையும் இருக்குத்தானே? அதில் உடன்பாடில்லை//
  எனக்கும் இதில் உடன்படலல

  இது போன்ற நல்ல பதிவுகளைத் தொடர்ந்து வழங்குங்கள்.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: