Home > "கனடா", ஈழம்/தொடர்புடையன, சிறுபான்மை அரசியல் > இனத்துவப் பிரதிநித்துவம் (?)

இனத்துவப் பிரதிநித்துவம் (?)

cityhall

…………………..ஆனால் உலகின் பல்வேறு நாடுகளும் ஒத்த வலிகளுடனே வாழ்கின்றன.

நவம்பர் 13 – ரொறன்ரோ பெரும்பாகத்திற்கான உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த தேர்தல்களில் போலவே, இம் முறையும், நகர்களின் பல வட்டாரங்களில் தமிழர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தார்கள்; தமிழ் ஊடகங்களில் இனத்துவப் பிரதிநிதித்துவம் என்ற சொல் அடிபட்டது. தமிழர்களது இரு தசாப்தங்களிற்கு மேலான யுத்தம், இழப்புகள், தொடரும் வன்முறைகள் இவற்றினை பொது (”கனடிய”)த்தளத்திற்கு “எடுத்துச் செல்ல” தமிழர்களுக்கான பிரதிநிதிகள் தேவை; அந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காகவே தமிழர் செறிந்து வாழும் ரொறன்ரோ பெரும்பாகத்தின் நகர வட்டாரங்களில் regional councillor, city councillor (நகர சபை), school trustee (கல்விச் சபை) போன்ற பதவிகளிற்காக தாம் போட்டியிடுவதாக வேட்பாளர்கள் சொல்லிக் கேட்க முடிந்தது; “இத்தனையாயிரம் தமிழர்கள் வாழுகிற கனடாவில், இது ஒரு மானப் பிரச்சினை” என்றுங் கூட சொன்னார்கள்.

கனடாவில் சுமார் 300,000 தமிழர்கள் உள்ளார்கள் (ரொறன்ரோப் பெரும்பாகத்தில் ஏறக்குறைய 120,000 பேர்). பிற பெரும்பான்மையான புலம்பெயர்ந்த அல்லது அகதி மக்கள் போலவே வறுமைக் கோட்டிற்கு கீழேயே பெரும்பான்மையோரின் வாழ்க்கைத்தரம் உள்ளது. இந்த அடிப்படையில் கனடியத் தேசீயக் கட்சிகளில் ஒப்பீட்டளவில் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் சிறுபான்மை நலன்களில் அக்கறைகாட்டும் கொள்கைகளை வைத்திருப்பது புதிய ஜனநாயகக் கட்சியே (New Democratic Party of canada). இதன் தலைவர் யாக் லேய்ற்றன் (Jack Layton) ரொறன்ரோவின் வறிய கறுப்பர்களின் குடியிருப்புகளிலிருந்து வரும், குழு வன்முறைகளை நிகழத்தும் இளைஞர்களைக் குறிப்பிடுகிறபோது, ஆளும் பழமைவாதக் கட்சியின் தலைவர் போலவே, scums (பேச்சுவழக்கு: உதவாக்கரைகள்) என சமீபத்தில் ஒருமுறை திட்டியதாகவும், “அது NDP-ஓ எந்தக் கட்சியின் யாராய் இருந்தாலும் கறுப்புத் தோல் குறித்த அபிப்பிராயம் இதுதான்” என்பதாக ஒரு கறுப்பின பேச்சாளர் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். பிரான்ஸில் அரசியல்வாதிகள் வறிய அரேபியர் குடியிருப்புகளின் இளைஞர்களை ஒத்த தொனியிலேயே திட்டியதாகட்டும், எங்கும், இந்த வெள்ளைத் தலைகளின் “மனோபாவம்” தனது நிற அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டாலும், (இருப்பதில்) தொழிலாளர் நலன்களை முன்னிறுத்துவது என்ற அளவில் இது ஒன்றே இருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் கட்சிகளின்றி சுயாதீனமாகப் போட்டியிடுகிறார்கள். எனினும், அவர்கள் எந்தக் கட்சியின் ஆதரவாளர்களாக செயற்படுகிறார்கள் என்பது தெரியும். கவுன்சிலருக்கோ பாடசாலை ட்றஸ்ரிக்கோ போட்டியிடுகிறவர்கள், உள்ளூர் அரசாங்கம், கல்வித்துறை மற்றும் சமூகம் சார்ந்து எத்தகைய சேவைகளை வழங்கும் வரிப்பணம் எப்படி செலவளிக்கப்படுகிறது போன்றனவை முடிவு செய்கிறவர்களாக [வெற்றி பெற்ற பிறகு] இவர்களது செயற்பாடு, உள்ளூரின் -குறிப்பிட்ட தமது- நகர மற்றும் வட்டார எல்லைகளுக்குள்ளேயே. என்றாலும், இவர்கள் குறித்து, தமிழர் என்பது தவிர -ஒரு வேட்பாளரின்- வேறு தகுதிகள் (”தகுதிகள்” என்றால் = கல்வித் தகுதி அல்ல) என்னென்ன? தமது சமூக மக்களுடன் அவர்களுடைய தொடர்பு மற்றும் அக்கறைகள் என்னவாக இருந்திருக்கின்றன? – இப்படியான கேள்விகள் தோன்றிக் கொண்டே இருந்தன.

மற்றபடி, வாக்குப் போடுவது தவிர தேர்தல் குறித்தெல்லாம் பெரிதாய் யோசிக்குமாறு மக்களின் வாழ்க்கைத் தரம் இல்லை. களைத்து வந்து விழும் ஒரு நாள வாக்குச்சாவடிக்குச் செல்வது என்பதே அவசியமற்ற அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்கிறது. வேலை-வீடு-வேலை என்கிற ஓட்டத்தில் சுழலுற யாரும் இதில் விதிவிலக்கு இல்லை. எந்த செயற்பாடுகளிலும் ஈடுபாடில்லாத ஒரு வெறும் தலைமுறையின் எச்சசொச்சங்களுடன் சென்று கொண்டிருந்தவர்களைப் பிடித்து, சமூகத்தோடு இணைந்து தொடர்ந்து செயற்பட்டு வருகிற ஒரு தோழர், பாக்டேலில், அகதிப் பின்புலத்திலிருந்து வந்த, “வெள்ளையரல்லாத” சமூகத்துடன் இணைந்து பல வேலைகள் செய்த பெண் ஒருவர் city councilor இற்குப் போட்டியிடுவதாய், போய் ஆதரவு வழங்க இயலுமா என்று கேட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் வீடு திரும்பிவிட்ட பின்நேரங்களில், அவர் குறிப்பிட்டவருடைய campaign office இருக்கிற டவுண்ரவுண் இற்கு, சப்வே எடுத்துப் போய் “ஆதரவு” வழங்க கனடிய அரசியல் அமைப்பு அதில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என எல்லாம் கனவுகள்/நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும், உள்ளிருக்கும் சமூகம் சார்ந்து இயங்கும் ஆர்வத்தில், நேரம் கிடைக்கிற நாட்களில் பிலிப்பைன்ஸ்-ஐப் பூர்வீகமாகக் கொண்ட இளம் (28) வேட்பாளரான றொவேனா சான்ரோஸிற்கு பேராதரவு வழங்கச் சென்றோம். றொவேனா பல சமூக சேவை நிலையங்களில் தொண்டராக அனுபவம் கொண்டவர் என்பதோடு, ‘பழம் வெள்ளையன்‘களால் ஆன நகரசபைக்கு துடிப்புமிகு இள ரத்தம் (இப்படித் தொடங்கி ————————————————– றொவேனா குறித்து சொல்லலாம். ஆனால் அவை யாவும் அவருடைய இணையத்தளத்திலேயே காணக் கிடைக்கும்: http://rowenasantos.ca/).
rowena
முடிவில் என்னதான் எங்களுடைய பேராதரவு இருந்தும் (அதனால்தானேயோ!!) றொவோனா வெற்றி பெறவில்லை. வெல்லாததற்கு முக்கிய காரணம்: அவர் போட்டியிட்ட பகுதியான பாக்டேல் (பாக்டேல்-ஹை பார்க், வட்டாரம் 14) மறுபடியும் ரொறன்ரோ நகரின் மேயராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிற டேவிட் மில்லரிற்கு (மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு) பெரும் ஆதரவை உடையது. புதிய குடிவரவாளர்களால் ஆன பாக்டேல் பகுதி ரொறன்ரோவின் வறிய பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. சிற்றி கவுன்சிலர் பதவிக்கு றொவேனா தவிர புதிய ஜனநாயகக் கட்சி அங்கத்தவர்களான பிற மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள், அதிலும் மேயர் டேவிட் மில்லராலேயே -அவரின் ஆதரவுடனே- நிறுத்தப்பட்டவர், தேர்தலில் வெற்றி பெற்ற (3816 வாக்குகள்) கோர்ட் பேர்க்ஸ் (Gord Perks) என்கிற வெள்ளையர். சன்ரோஸ் 2978 வாக்குகளுடன் இரண்டாவதாக நின்றிருந்தார்.

உள் அரசியல்களைவிட, சுவாரசியமான சம்பவங்கள் நிறைந்ததாக இருந்தது நீண்ட காலத்திற்குப் பிறகு தொடர்மாடிக் கட்டிடங்கள் ஒவ்வொன்றிலும் இருவர் இருவராக கதவுகளைத் தட்டித் தட்டி ஆட்களுடன் உரையாடியது…
சென்ற ஒரு தொடர்மாடியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் நிறைய இருந்தனர். வாஞ்சையான பிலிப்பீனோ முதியவர்கள் உரையாடலிற்கான ஏக்கத்துடன் பின் நிற்க சுவர்களுக்குள் வாழ்கை வெறுத்துப் போய் கதவு திறக்கும் கொஞ்சம் ஆங்கில் தெரிந்த அவர்களது மகள்கள், சில நடுத்தர வயது ஆண்கள், சிலர் விட்டால் ஊர்க்காரர்கள் மாதிரி கலியாணம் பேசி செய்து வைத்திருவார்கள் போல, ”றொவேனா கலியாணம் கட்டீற்றாளா” என்று கேட்ட வாகில், “தெரியாது” என்று சொன்னால் இது கூடத் தெரியாமலா வந்தாய் என்பார்களோ என்றஞ்சி, ”அவ பாட்னரோட இருக்கிறா” என்றால், மிச்ச எல்லாம் “விளங்கின” சிங்கர்கள் “என்ன?” என்று அதுக்கு விளக்கம் கேட்க, அயத்துப் போய் நிற்க வேண்டியும் இருந்தது. பிறகு கதையை மாத்தி, எப்படி வாக்குப் போடுவது என விளங்கப்படுத்தி பெருமூச்சுவிட வேண்டிய ரீதியில் “பரப்புரை” இடையிடை ஆனதால் “என்ன இந்த பிலிப்பீனோகாரர் எங்களப்போலவே இருக்கிறாங்களே” என்று சிரிப்புத்தான் வந்தது. அது போல பல முறை, றொவேனாவின் தராதரங்களை அடுக்கினால் மொழியின் எல்லைகளுள் அவர்களுக்கு புரியவில்லை என்று தெரிந்தபோது அவர்களிடம் “அவர் பிலிப்பீனோ பின்புலத்தைச் சேர்ந்தவர்” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்; (ஏனைய அவர் “செய்த” விடயங்களுடன் ஒப்பிடுகையில் சிறிய தகவலாய் மட்டுமே சொல்லத் தகுந்த ஒன்றாகவே அவ் அடையாளத்தை நினைத்திருந்த போதும்) அவர்களுக்கு “புரியும்” என “நானாய் நினைத்துக் கொண்ட”தன் அடிப்படையில் அவ்வாறு சொல்லிக் கொண்டேன். அது, “இனத்துவ அடையாளம்” என்பதிலேயே போய் நின்றது.
எங்களுடன் றொவெனாவின் காம்பெயினை ஒருங்கிணைக்கவும் செய்த, 55 வயதுகளுக்கு மேலே இருக்கக்கூடிய வினீ (Winnie Ng, Ontario Director of the Canadian Labour Congress) “இள ரத்தம்” என்பதற்கு எதிராய், ஒருநாள் வந்து தொடர்மாடிகளில் மிக உற்சாகமாய் ஏறி இறங்கினார்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்திலே தேர்தல் சமயம் வந்து கதவு தட்டும் ஒரு கசவாரப் பயலுகளுக்கும் வாக்கு போட்டதில்லை என்ற ரீதியில் கிழம்பிய வெள்ளைக் கிழவர் ஒருவர், துண்டுப் பிரசுரத்தில் சிரித்த றொவேனாவினுடைய பெயரின் வசீகரத்தன்மையாலும், சான்ரோஸ் என்பதன் ஸ்பானிய உச்சரிப்பிலும், மிக முக்கியமாக அவரின் hot-ஆன தோற்றத்தாலும் கணத்திற் கவரப்பட்டு, வாக்களிப்பதாகச் சொன்னார். இப்படியாய் வாக்குப் போடுவதற்கும் போடாததற்கும் அவர்களுக்கென்று காரணங்கள் இருந்தன.
வருடங்களிற்கு முன், உலகத்தமிழர் மாணவர் அமைப்பிற்காக போரால் பாதிப்படைந்த பிள்ளைகளது இல்லங்களிற்கு காசு சேர்க்க (என) ஒரு 20 மாடி தொடர்மாடிக் கட்டடத்தை தோழர்களுடன் உற்சாமாக சென்று தொடர்ச்சியாய் கதவுகளில் லொக்கு லொக்கு என்று தட்டியபோது மொளிகள் நொந்ததாய் நினைவில்லை! உலகத்தமிழர் போன்ற நிறுவனங்கள்சார் நம்பிக்கையைவிட நல்லது செய்வது தொடர்பாக இருந்த (சமூகம் சார்ந்து இருக்க வேண்டியதாக நினைக்கிற பொறுப்புணர்வு, “சேவை” என்ற அர்த்தத்தில் அல்ல) நம்பிக்கையே எல்லாவற்றையும் செலுத்துகின்ற ஒன்றாகிறது. அரசியல் சார்ந்த பரப்புரைகள் மற்றும் ஒரே விசயத்தை ஒவ்வொருவருக்காய் ஒப்புவிக்கிற தன்மைகள் (”ஒப்புவிக்கிற” எதுவும்) தனிப்பட்ட ஒருவராய் பிடிப்பதில்லை. எங்களைப் போன்றவர்கள், இத் தேர்தல்களில் ஆர்வப்படாது, தேர்வு செய்யும் பிரதிநிதிகள் தேர்தல் போக்குகள் இவை பற்றி அறிவூட்டி அல்லது அலட்டிக் கொள்ளாது, ஒரு சுழலில் சுற்றுயபடி இருக்கிறோம்; அப்படியிருந்துகொண்டு, நாளாந்த வாழ்க்கைத் தேவைகளிற்கே ஓடிக்கொண்டிருக்கிற, வாழும் நாட்டின் எப் போக்குக் குறித்தும் தம்மை அறிவூட்டிக்கொள்ள நேரமற்ற ஒரு தலைமுறையின் ஆர்வமின்மையை -அதை இலகுவாக யாரும் உபயோகித்துக் கொள்ள முடிவதை- குறை கூற இயலாது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதுவே இத்தகைய வேலைகளில் ஈடுபட ஆர்வந் தந்ததும். இங்கே, “எங்களைப் போன்றவர்கள்” என்பதாய் -பொருளாதார, கல்வி அடிப்படையில் அல்ல- இணையம், குறிப்பிட்ட மட்டத்திற்கு மொழிசார்ந்த மட்டுப்படுத்தல் அற்றிருக்கும் ஓர் வசதியை முன்வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன்.
இந்த வருட ஆரம்பத்தில், கனடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் பலரை, தமிழர்களது அமைப்பொன்று, வாகனம் ஒழுங்கு செய்து, ஏற்றிக்கொண்டே கொன்சவேட்டிவ் (=பழமை வாதக்) கட்சிக்கு வாக்களிக்க விட்டார்கள் என அறிந்தபோது, வழமைபோல ஆத்திரம் வந்தாலும், எங்கள் சார்ந்த சமூகம், அதில் எங்களது பொறுப்பு, இவை எல்லாம் புறந்தள்ளி, மேலிருந்து குதித்தவர்கள் போல “அறிவற்ற சனம்” என சொல்லி விலக்கி நிற்பதும் பிடிக்கவில்லை. தேர்தல்களில் தமக்குரிய கட்சியை தேர்கிற அவர்களின் உரிமையைக் கூட யாரேனும் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஈழ போராட்டத்தைப் போலவே, கிட்டத்தட்ட இரு தசாப்த கால கனடிய சீவியத்தில், பழம் தின்று கொட்டை போட்டிருக்கக் கூடிய எமது அமைப்புகள், தமது இத்தனை வருட கால அனுபவத்திலும் பெற்றிருக்கக்கூடிய அரசியல் பாடத்திலும் இப்படி ஒரு கட்சியை இங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் (சரி, “நல்லா” இருக்கிற எமது இனத்தின் “பெருமை” சொல்லுற தமிழர்கள் மன்னியுங்கள், உங்கள் குடும்பம் தொடர்ச்சியாய் டொக்ரர், இஞ்சினியர், கொம்பியூற்றர் இஞ்சினியர் இப்படி ஆட்களை உற்பத்தி செய்து வருகிறதுதான் என்றாலும்…பெரும்பான்மைத் தமிழர்களை அந்தக் கோட்டிற்குக் கீழ என்றுதான் கனடா சொல்கிறது…!) வாழுகிறதான ஒரு இனம் தேர்வு செய்ய பரிந்துரைப்பது என்பதை என்ன வகையில் சேர்ப்பது? தவிர, விடுதலைப் புலிகள் குறித்த நிலைப்பாட்டில் லிபரல் அஜண்டாவிலும் ஆளும் கட்சி போலவே பாரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. சொல்லப் போனால், கொன்சவேட்டிவ் கட்சி வந்து த.வி.புலிகளை தடை செய்தததாலும் பாதிக்கப்பட்டது அவர்களுடைய அமைப்புகளது செயல்பாடுகள் அல்ல. அது தடை செய்தது எமது உரிமைகளைப் பேசுவதற்கான வெளியைத்தான். எங்களுக்குள்ளேயே நிகழவேண்டியிருக்கிற கேள்விகள் விவாதங்கள் என்பனவற்றை. தொழிலகங்களில் நிறைய தொழிலாளர்கள், பாடசாலையில் மாணவர்கள் (தமிழ் /= புலி/ = பயங்கரவாதி என) சிக்கல்கள், நெருக்கடிகளிற்கு உள்ளானார்கள், உள்ளாகிறார்கள்.
A-9 பாதை திறப்பது த.வி.புலிகளின் பேச்சுவார்த்தையில் முதன்மையான வேண்டுகோள் என்றான பிறகு, போதிய உணவின்றிச் சிரமப்படுகிற மக்களிற்காக, வழமைபோல வானொலிகளில் கலந்துரையாடல்களில் உணர்ச்சிமிகவாய் ஒலித்த குரல்களைத் தாண்டி – அதற்கான ஒரு எதிர்ப்பை செய்யக்கூட -சட்டக்காரணங்களால் + உடனடியாக முத்திரை குத்தப்படும் அச்சங் காரணமாக- தயக்கங்கள் தெரிந்தன. நடக்கும் மக்கள் மீதான வன்முறைகள் குறித்த, அப்படியொரு எதிர்ப்பு நிகழ்த்தப்படுகிறபோது, அங்கே, –தமிழீழ விடுதலைப் புலிகள்சார் ஊடகங்கள் சொல்வதுபோல “திரண்டெழுந்த” மக்கள் வந்தார்களோ, அல்லது த.வி.புலிகளிற்கு எதிரானவர்கள் சொல்வதுபோல, சிறு திரளேதான் என்றாலும் கூட– பஸ் வேலைநிறுத்தம், தமது ஒரு வேலைநாள் என்பன தாண்டி “உரிமைக்குரல்” (மே 29, 2006) என ஒரு நிகழ்விற்காக கலந்துகொண்டிருந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் பற்றி கனடிய பொது ஊடகங்கள் அசட்டையே செய்திருந்தன (”மாவீரர் நாள்” தொடர்பான நிகழ்வுகள் குறித்து எப்படி எழுதப்படும் என வருகிற நாட்களில் பார்க்கலாம்). இதையொத்த பின்புலமுமே, “எமது குரல்” அசட்டை செய்யப்படாதிருக்கவேண்டுமானால் தேர்தலில் “தமிழர்” பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் போன்ற பொது எண்ணங்களிற்கான அடிப்படையாக் காரணமாக இருக்கிறது (”ஒரு தமிழன் வந்தால் சந்தோசம்தானே” வகையறாவும்தான்). தமிழ் என்றில்லை, கனடிய சட்ட சபையில் இருக்கின்ற வெள்ளை சீமான்கள் தாம் செய்கிற அரசியலில் –வாக்குகளைப் நிரப்பிக் கொள்வதற்காக வாக்குறுதிகள் தருவதைத் தவிர– ஆபிரிக்காவை ஆசியாவை மத்தியகிழக்கு நாடுகளை எந்தவிதத்திலும் பிரதிபலிக்கப் போவதில்லை. இங்கே, தமது இன அடையாளத்தை அதன் பிரதிநித்துவத்தைத் தேடும் சிறுபான்மைக் குழுக்கள் வேட்பாளர்கள் தொடர்பாக சில கேள்விகளை(யே) தம்மைக் கேட்டுக் கொள்ள முடியும்:
(1) “தமிழ்” “தமிழன்” என்கிற ஒரு அடையாளமே அந்த சமூகத்துடன் சாராத நபர்களை தேர்வு செய்ய போதுமானதா? அதைத் தவிரவும் அவர்களது சமூக செயற்பாடுகள் என்ன? (தகவல்: றியல் எஸ்ரேற் அல்லது காப்புறுதி முகவர், வானொலி அறிவிப்பாளர் போன்றன எமது வேட்பாளர்கள் சிலரது வேலைத் தகுதிகள்.)
(2) ஒரு change-இற்கு தமிழ் அரசியல்வாதிகள் வாய்ச்-சேவை (lip-service!!) ஒன்றுதானா -கனடிய வாழ்வில்- மிகவும் வேண்டி இருக்கிறது?
(3) இந்தத் “தமிழர்கள்” எம்மை பிரதிநித்துவப் படுத்துவது என்பது எவ்வாறு, எந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது? உ-ம்: தமிழ் முதலாளிகள் எம்மை எப்படி நடத்துகிறார்கள்? இயக்கத்திற்கு/நாட்டிற்கு “பணம்” தருகிற தமிழ் முதலாளிகள் என்றால் “சட்டப்படி” மணித்தியாலத்திற்கு (ஆகக் குறைந்த) $ 7.75 குடுக்க வேண்டிய நாட்டில், மணித்தியாலத்திற்கு $ 2, 3, என்று “குடுக்கிற” (அமெரிக்க ஏழை நாடுகள் இயற்கை அனர்த்தங்ளால் பாதிக்கப்படுகிறபோது போடுற stingy பிச்சை போன்ற) கசவாரித்தனத்தை(!!) கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? (அவர்கள் “அங்க” குடுத்தத “இங்க” பிடிக்க விடோணுமா? – விடோணுமென்றால், யாரை முன்னிறுத்தியது இந்த நலன்கள்?)

இங்கே, காட்டப்பட எதிர்பார்க்கப்படுகிற இன “ஒற்றுமை”யென்பது சில தனிநபர்களை வளர்க்கவே அவர்கள் நலன்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காக, என்னைக் கழுத்தறுக்காவிட்டால் பறவாயில்லை மற்றவன் கழுத்தறுக்கலாம் என்பதுபோல கட்சிகளைத் தேர முடியாது. அதிலும், கொன்சவேட்டிவ் கட்சி போன்ற, பழமைபேணும், பெண்கள், சமபாலுறவாளர்கள், தொழிலாளர்கள் என அடிப்படையான ஒட்டுமொத்த சிறுபான்மையினர் உரிமைகளிற்கும் எதிரானதான பின்னோக்கிய ஒரு அரசாங்கத்தை அதன் கட்சியை எந்த ஒரு காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்கவே முடியாது. அப்படியிருக்க, எமது தமிழ் அமைப்பொன்றே வாகனம் அனுப்பி அதற்கு வாக்களிக்கச் செய்வது இங்கு வசிக்கிற பிற சிறுபான்மை இன மக்களது தலையிலும் மண்ணள்ளிப் போடுற காரியம்; இது போன்ற பொறுப்பற்ற -அமைப்புகளது – செயல்பாடுகள், தமக்கென்று ஒரு கொள்கையை வைத்திராத, சந்தர்ப்பவாதமான போக்கையே காட்டுகின்றது. இதால் அவர்களைத் தவிர யாருக்கும் பயனில்லை.
சந்தர்ப்பவாதிகளின் அரசியலுக்குள் எங்களது மற்றும் இங்கு வாழப் போகின்ற பிள்ளைகளது அடிப்படை உரிமைகளையும் பறிக்கக் கூடாது. இன்ன பிற உரிமைகள் எல்லாம் முக்கியமற்றவை எனில், குறைந்த பட்சம்: இந்த இரு தசாப்த காலத்தில், இங்கு பிறந்தும் வளர்ந்தும், இந்த நிலத்திற்குரிய காலநிலைகளை சுவாசித்தும் வருகிற பிள்ளைகள், விடுமுறைக்குப் போவதற்காய் ஈழத்தில் எப்படி ஒரு நாடு வேண்டுமோ, அதுபோலவே வருடாவருடம் மாவீரர்களை நினைவு கூர்ந்து பரதநாட்டியம் மற்றும் இன்ன பிற நடனங்கள் ஆடுவதற்கான உரிமையாவது அவர்களுக்கு இங்கு இருக்க வேண்டும் (இதற்கும், ஒரு பழமைவாதக் கட்சியை தேர்வு செய்வது நல்ல அறிகுறி அல்ல).

இனத்துவ பிரதிநித்துவம் என்பதற்கெல்லாம் மேலாக, நாங்கள் வாழும் நாடு குறித்த அறிவைப் பெறுவதும், எமது நலன்களை சற்றேனும் கொண்டிருக்கிற கட்சிகளை ஆதரிப்பதும், வாக்குப் பலத்தை எமது ஆட்சேபங்களை குரலை ஒலிக்கச் செய்வதற்கான பலமாக மாற்றி, எமதும் எங்களைப் போன்ற பிற மக்களதும் தார்மீக பேச்சு உரிமையை அழுத்தத்துடன் வேண்டி நிற்பதும் மிகத் தேவையானவை. துரதிர்ஸ்டவசமாக(!) தனிநபர்களின் வெற்றியில் ஒரு இனம் எதையும் அடைந்து விடுவதில்லை (நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இரு (சிற்றி கவுன்சிலர், ஸ்கூல் ட்றஸ்ற்றி) தமிழர்களை முன்வைத்தும் இதையே கூற முடியும்). தனது நாட்டிலிருந்து வெளியேறிவிட்ட ஒரு சமூகத்தின் பங்கு பிறரது -ஒத்த- போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளுவதிலும் அவற்றிலிருந்து மேலும் மேலும் கற்றுக் கொள்வதிலும்தான் தன்னை பரிசீலிக்கவும் வளப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
செப்ரெம்பர் 11 இற்குப் பிறகான, முஸ்லிம்கள் மீதான ஊடக < அரசு கருத்துருவாக்க வன்முறைகள், அதற்கு முன்பிருந்து தொடர்ச்சியாய் சகல மக்கள் போராட்டங்களின் அத்தனை அடிப்படைக் காரணிகளையும் மனிதாபிமானம் பெருக்கெடுத்தோடும் அஹிம்சாபுரியான கனடா போன்ற நாடுகளின் மேற்கத்தைய காந்திகள் “வன்முறை” “பயங்கரவாதம்” என்கிற ஒற்றைச் சொற்களால் அடைத்தே வந்திருக்கிறார்கள். இதில், “கள்ளனோடு” கூட்டு சேர்ந்து (ஏதோ அவன் எங்களை சேத்திட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பான் போல) நாங்கள் – “நாங்க எங்கட எதிர்ப்புக் கூட்டங்களுக்கு முஸ்லிம் அவங்கள் இவங்களக் கூப்பிடக் கூடாது. அவங்களப் பற்றி இந்த நாட்டில ‘நல்ல’ அபிப்பிராயம் இல்ல. பிறகு நாங்களும் அவங்கள மாதிரி எண்டு நினைச்சிருவாங்கள்” – இப்படி எல்லாம் வாழும் இந்த நிலத்தில் -கூட்டுறவிற்குப் பதில்- மனிதர்களாய் இல்லாமல் “ராஜதந்திரங்களை” காட்ட வெளிக்கிட்டால், எஞ்சுவது, “நாமும் நமது உரிமைகளும்” மட்டும்தான். ஆகவே அதன் வலிகளையும் நாங்கள் “மட்டுமே” பேச முடியும்.
~

படம்: ரொறன்ரோ சிற்றி ஹோல்

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 12:39 am

  4 Responses to “இனத்துவப் பிரதிநித்துவம் (?)”

  1. DJ Says:
  November 27th, 2006 at 12:16 pm

  அவசியமானதொரு பதிவு பொடிச்சி. விரிவான தளத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. நன்றி.
  ….
  இயலுமாயின் இங்கு வரும் பத்திரிகைகளில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்ப முயற்சிக்கலாமே.
  2. Flying_Dragon Says:
  November 27th, 2006 at 6:39 pm

  காம்பெயினுக்கு (சமூக சேவைக்கு?) போக ஆசைப்பட்டு கடைசியில் இப்படி சேல்ஸ்வுமேன் ஆகிப் போயிட்டீங்களே 🙂
  “இனத்துவப் பிரதிநித்துவம் ” என்று ஆர‌ம்பித்து “ஆகவே அதன் வலிகளையும் நாங்கள் “மட்டுமே” பேச முடியும்.” என்று முடித்தால்
  இடையிலே என்ன‌த்தை எழுதுவ‌தாம் “நாங்க‌ள்”. 🙂

  ந‌ல்ல‌ ப‌திவுக்கு ந‌ன்றி.

  இப்ப‌டியே ‘ன்’ போல்ட் பண்ணி ப‌ண்ணி ந‌ட்டு’ம் போல்டு’மாகத்தான் மிஞ்ச‌ப்போகுது(குறிப்பு: இது விம‌ர்ச‌ன‌ம் எல்லாம் இல்லை)
  3. கில்லி – Gilli » Canada’s Toronto City council Election campaign experiences Says:
  November 30th, 2006 at 1:06 am

  […] ‘இது நம்ம ஆளு’ என்று கண்மூடித்தனமாக ஜனநாயகப் பங்களிப்பு செய்யாமல், பொருத்தமான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து களப்பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டவரின் அனுபவங்கள். […]
  4. கில்லி – Gilli » Reader’s Choice – Karthik Ramas Says:
  December 29th, 2006 at 8:23 am

  […] 6. “இனப் பிரதிநிதித்துவம்” பொடிச்சியின் என்ற இந்த இடுகை சமீபத்தில் வாசித்த கொஞ்ச சிந்திக்க வைக்ககூடிய பதிவு(கொஞ்சம் நீளம் காபி கையோடு உட்கார்ந்துடுங்க) […]

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: