Home > அதிகாரம்-மக்கள், சிறுபான்மை அரசியல் > அதிகாரங்கள் மற்றும் மக்கள்

அதிகாரங்கள் மற்றும் மக்கள்

{முற்றுப் பெறாதது}
மறுபடி மறுபடி வரலாறு திரும்புகிறது…

Government
By the People
Of the People
…Fuck the People
–பிரமிள் (”சாசனம்”)

warmongers
க வலைப்பதிவர் (நிவேதா) பின்னூட்டமொன்றில் கொழும்பில் ஒரு நாள் தான் கண்ட சம்வம் ஒன்றினை விபரித்திருந்தார் [கொழும்பு நகரத்துத் தெருக்களில் நேற்று மனம் அதிரவைக்கும் சம்பவமொன்றினைக் கண்ணுற நேர்ந்தது. இளைஞர்களும், மத்திய வயதுக்காரர்களுமாய் இருபது இருபத்தைந்து ஆண்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, கைகளை உயரத் தூக்கியவண்ணம் ஓட உத்தரவிடப்பட… பின்னே சில அதிரடிச் சட்டைக்காரர்கள் தமது ஆயுதங்களால் குறிபார்த்த வண்ணம் நின்றிருந்தனர். விக்கித்துப்போன உள்ளத்துடன் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவளை தரதரவென்று அப்பால் இழுத்துப் போனாள், தோழி. இன்றைய பொழுதில் வாழ்தல் இப்படித்தான் நகர்கின்றது.]. எமது அரசியற் சூழலிலும் இலக்கிய மற்றும் நேரடையாகக் கண்ட, கேட்ட, அறிந்தவர்களின் கதைகளிலும் வந்து போகும், தம்மை சல்லடையிடக் காத்திருக்கும் துப்பாக்கியின் முன், தமக்குத்தாமே புதைகுழி கிண்டும், ஏதோ ஒரு அதிகார வெறிக்கு இரையாகப் போகுதலை அறிந்தே நடமாடும் மனிதளது இருப்பு அந்நியமானதல்ல. வாசுதேவனின் “இறுதி நேரம்” கவிதை போல நெருக்கடிகளுள் வாழ நேர்கிற அதில் பலியாகிற எல்லோரையும் போன்ற எளிய மனிதர்களின் இருப்பு ஒற்றை நொடியில் இல்லாதொழிக்கப்பட்ட, இல்லாதொழிக்கப்படுகிற அனுபவங்களும், அதை அனுபவித்ததன், அனுபவிப்பதன் கனமும் கோபமுங் கூட உண்டு.

குறிப்பிட்ட பின்னூட்டம் வாசித்தபோது, அது, 1980களின் இறுதியில், ஈழத்தில் இன்னும் யுத்த களமாய் ஆகியிராத ஒரு கிராமத்தில் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தபோது தெருவில் கண்ட சம்பவமொன்றினை நினைவூட்டியது. நேரே வீட்ட கொண்டே விடும் அத் தெருவில், நடையில், வீட்டுக்கு வந்துகொண்டிருக்கையில் –வழமைக்கு மாறாய்– புழுதியைக் கிழப்பிக் கொண்டு, “பெரும்” நீள் வரிசையில் சைக்கிள்கள் போய்க் கொண்டிருந்தன. அந்த “ஒழுங்கு” உறுத்துகிற கண்களில் அந்தச் சைக்கிள்களில் ஒவ்வொரு ஹரியர்களிலும் கறுப்புத் துணியால்த் தலை மூடப்பட்டு இளைஞர்கள்.. மெல்லிய தேகங்களைத் தழுவியிருந்த சேர்ட்களும், குந்தியிருந்த அவர்களின் பதட்ட உடல் மொழியுமென.. மிக வேகமோ என்னவோ! சைக்கிள்களின் அச் சீரான செல்கை பதிந்து போய் விட்ட ஒரு காட்சி.

படுபயங்கர வெற்றி பெறுகிற காக்க(க்!) காக்க போன்ற திரைப்படங்களில், சாதாரணமாகக் காட்டப்படுகிற (நியாயப்படுத்தப்படுகிற) காவற்துறை(!) என்கவுன்ரர்ப் படுகொலைகளைப் போன்ற ஏராளம் ஹொலிவூட் மற்றும் பிற மொழிப் படங்களில் முகங்களற்ற அந்த உயிர்கள் “குற்றவாளிகள்” “பயங்கரவாதிகள்” ஆகவே = “பெறுமதியற்றவர்கள்” “முக்கியமற்றவர்கள்” என்பதாய் இயந்திரத் துப்பாக்கிகளின் விசைகளிற்கு விழுந்துகொண்டிருப்பார்கள். பயங்கரம் மட்டுமே வரையறுக்கிற அந்த மனிதர்களுக்கென அழுவதற்கு எந்த நேசம் மிகுந்த மனிதர்களையும் அவை அனுமதிப்பதில்லை!

இங்கு “குடியேறிய” ஐரோப்பியர்களால் கனடா என்று அழைக்கப்படுகிற இந்த நாட்டில் அதன் பூர்விகக் குடியினன், 1995 இல் ஐப்பர்வோஸ் என்ற மாகாணப் பூங்காவை பல பூர்விகக் குடி எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து “தமக்குரியது” என -அக் கனடிய அரசாங்க நிலத்தை- “ஆக்கிரமித்து” குந்தி “உரிமை: கொண்டாடிக் கொண்டிருந்தபோது, பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டான் – வழக்கு இன்னமும் முடியவில்லை! அப்போது ஒன்ராறியோ முதல்வராய் இருந்து மைக் ஹரிஸின் உத்தரவின்பேரிலேயே அதிலும் உடனடியாக அவர்களை அப் பூங்காவிலிருந்து அகற்றும்படி (பொலிஸ் அதிகாரியொருவரிடம் “I want the fucking Indians out of the park” என்றார் எம் பெரும் மேன்மை தாங்கிய முதல்வர் என்றும், அப்படியாய்) பொலிஸாருக்கு இவர் கொடுத்த அழுத்தத்திலேயே அப் பூர்வீகக் குடியினன் டட்லி ஜோர்ஜ்-இன் உயிரிழப்பு நிகழ்ந்தது என்றும் குற்றச்சாட்டு இருக்கிறது. அன்று ஒன்ராறியோ மாகாணத்தை ஆண்ட அவரது கொன்சவேர்ட்டிவ் கட்சியே இன்று ஆளும் கட்சி! (அந்த காலகட்டத்தில் ஒன்டாறியோ கன்சவேர்ட்டிவ் மாநில அரசு பிற சமூக நலத் திட்டங்களது நிதிகளை வெட்டி, Policing-இற்கு நிறைய நிதி ஒதுக்கியிருந்தது).

இந்த ஜீன் மாதம், ஆப்கானிலிருந்து கனடிய இராணுவத்தினரை அகற்றவில்லையெனில் பிரதமர் ஸ் ரீபன் ஹார்ப்பரின் சிரசை(!!) அரியவும், கனடியக் கேந்திர நிலையங்கள் சிலவற்றைக் குண்டுகளால்த் தகர்க்கவும் திட்டமிட்டார்கள் என்று 15 வயது முதல் 17, 20 என சிறுவர்)இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். தொடர்ந்து பிரான்ஸ், இலண்டன் என “பயங்கரவாதிகள்” கைதானார்கள் (டென்மார்க் ஏனைய நாடுகள் என கைதுகள் தொடர்கின்றன). ‘சந்தேகத்தின் பெயரில்’ என்பதற்கான எந்த அறமும் இன்றி, இவர்கள் உகங்களில் சித்தரிக்கப்பட்டு பொதுப் புத்திக்கு அச்சம் உருவாக்கப்பட்டது (உருவாக்கப்படுகிறது). சமீபத்தைய ‘இலங்கை’த் தமிழ் இளைஞர்களின் -விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்கினார்கள் என – கைதுகளும் பிறகான சித்தரிப்புகளும் இதே தொனியிலேயே இருந்தது. –உரிய ஆதாரங்கள் முன் வைக்கப்டாமல், பொதுப் பார்வைக்கு அப்பாலான, மறைமுகமான (அரசாங்கத்திற்கு மட்டுமே “தெரிகிற”) காரணங்களின் பெயரில் – கைது செய்யப்பட்ட, கைது செய்யப்படுகிற முஸ்லிம்கள் மற்றும் பிறர் போலவே இதையும் பார்க்க முடியும். “terrorizing” – பல்வேறு சிறுபான்மை சமூகங்களை பெரும்பான்மை அச்சத்துக்குட்படுத்துதல். [இடையீடு 1 – Maher arar வழக்கு]
இத்தகைய சந்தர்ப்பங்களில் – குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு “சந்தேகத்திற்கான வாய்ப்பு” மறுக்கப்பட்டு பொதுப் புத்தியைச் சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் நடந்திருக்கக் கூடும் என நம்பச் செய்கின்றன ஊடகங்கள். 15 வயதுப் பிள்ளையை தூக்கி உள்ளே போடுகிற, குழந்தைப் போராளிகள் குறித்து ‘அக்கறை’ப்படுகிற மேற்கின் கயமையான போலித்தனங்களே இவ்வாறானவை தான் என்ற போதும் – மறு புறத்தில், இவர்களின் இந்த நடவடிக்கைகளின் பின்னாலுள்ள, இத்தகைய கைதுகளின் அரசியலிற்கெதிரான ஒரு பெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குப் பதில், “(கைதான) இவர்களுக்கும் எமக்கும் ஒரு சம்பந்தமுமில்லை” என மத நிறுவனங்கள் போல இளைஞர் அமைப்புகள் அறிக்கைகள் வெளியிடுகின்றன. ஒரே வர்ணத்தை எம் எல்லோர் மீதும் பூச வேண்டாம் என வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. இத்தகைய சந்தர்ப்பவாதமான கைவிடுதல்களே பொது உலகில் நிகழும் குறைந்தபட்ச ஜனநாயக எதிர்ப்புக்களைக் கூட சாத்தியமற்றதாக்கி விடுகின்றன.

மறு புறம், தனிமைப்படுத்தப்பட்டுள்ள உலகில் யாராலும் கேட்கப்படாத அணுக முடியாத தொலைவிலிருக்கிறவர்களுடைய இருப்பு ஏதோ ஒரு வகையில் -அப்படி ஆகக் கூடிய ஆனாலும் ஆகாத – எம்முடைய இருப்பிற்கு அச்சம் ஊட்டுகிறது. தமது இறையாண்மைக்கு எதிராக உள்ளே போடுகிறபோது -மனிதாபிமான மிகுதியான கனடிய – பொலிஸ் எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் அப்படி முகத்தில் அறைகிற ஓர் அனுபவத்தினூடாகவே உணர்ந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் Racial-profiling-இல் தொடர்ச்சியாக கறுப்பின மக்கள் கார் ஓட்டிச் செல்கையில் மறிக்கப்படுவார்கள்; அந்த வரிசையில் இப்போ மண்ணிற ஆண்களும்.. (முஸ்லிம்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை). -எல்லாவற்றையும் அவநம்பிக்கையுடன் பார்க்கையில்- பரஸ்பர மனித நட்புறவுகள் சாத்தியமற்றதுபோல தென்படுகிற சூழலில், ஜனநாயக நாட்டில், சிறு சிறு மனித உரிமைக் குழுக்களால் ஒழுங்கமைக்கப்படும் எதிர்ப்பூர்வலங்களில் கலந்துகொள்கிற “குறிப்பிட்ட” இனங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் தெருவில் / சப் வே-யில் தமது அடையாளங்களை மறைக்காமல் நடமாடுகிற இனத்தவர்கள் ஒவ்வொருவரையும் காண்கையில் ஒருவிதப் பதட்டமே தோன்றுகிறது. நாடளாவிய அளவில் கனடாவின் தொழில் நகரங்களில் இடம்பெற்ற “no one is illegal” எதிர்ப்பூர்வலத்தில் -வேறு பிறருடன்- கைது செய்யப்பட்ட முஸ்லிம், பொலிஸ் தன்னைக் கைது செய்த “முறை”-யிலிருந்து வேறுபாட்டைக் கூறுகையில் அப் பதட்டமே வலுக்கிறது.

பயங்கரவாதிகளுக்கான தேடுகையில், (கிழக்கு) இலண்டனில் 23-வயது முஸ்லிம் இளைஞன் அப்துல் கஹார் கலாம் பொலிசாரினால் சுடப்பட்டு, தாக்கப்பட்டு, வெளியில் இழுத்துப் போடப்படும்வரை, தான் (மற்றும் சகோதரன்) திருடர்களால்த் தாக்கப்படுவதாயே எண்ணுகிறார். நெஞ்சில் காயப்பட்டு கீழே விழுந்து கிடந்து, சுவாசிக்க முடியாமல் இருப்பதைச் சொல்லி கெஞ்சவுமும், தொடர்ந்து முகத்தில் உதைந்தவாறு, “Shut the fuck up” என்றே காவற் துறை சொல்லிக் கொண்டிருந்திருக்கிறது.
இந்த இருவருமே பங்களாதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு இலண்டனில் பிறந்து வளர்ந்தவர்கள். பாகுபாட்டை ஒருபோதும் மறவாத (அல்லது அதையே அடித்தளமாய்க் கொண்டிருக்கிற) அரசியல் அமைப்பில் நீ இந்த நாட்டுச் சுதந்திர குடிமகன்/ள் என்பது என்ன ஒரு அபத்தம்!?

ஏலவே பிரேசிலைச் சேர்ந்த Jean Charles de Menezes ஓர் 27-வயது அப்பாவி அகதி உயிர் “பயங்கரவாதி” என “தவறுதலாக” லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் – அதற்குக் காரணமாய் அவன் -வெடிகுண்டுகளை மறைக்கக்கூடிய – பாரமான கோட் போட்டிருந்தான் அது இது என பொலிஸ் சோடித்த புனைவுகள் பிறகு பொய் எனத் தெரிய வந்த பிறகும், நடந்த -உயிரிழப்பில் முடிந்திருக்கக் கூடிய – இந்த அடாவடித்தனத்தையும் “(இது கஸ்ரமான விடயமாக இருந்தாலும்) இதை நான் 101 வீதம் ஆதரிக்கிறேன்” என பிளேயர் சொல்லியிருந்தார்; இத்தகைய நெருக்கடிமிகு நிலையில் இதெல்லாம் சாத்தியமே! [இடையீடு 2 – யுத்தத்தில் எல்லாம் சாத்தியமே?] பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் அவ்வாறு சொன்னது தன்னைப் பாதித்ததை, அவரது மகனது வயதுதானே தனக்கும் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டிருந்தார்.
— ஒரு தலைவருடைய பிள்ளையின் உயிரும் ஏனைய பிள்ளைகளின் உயிரும் எப்படிச் சமனாகும்? எந்த மகா துர்நிகழ்வை கூறுகின்றபோதும், இன்று இக்கணம் சுடப்படுகிறவர்களது துயர் பற்றிச் சொல்கிறபோது கூட -அவை ஏதும் பொருட்டற்று – “அந்தத் தலைவரைச் சுட்ட” என வரலாற்றைப் புரட்டி பின்னோக்கிப் பேசுமளவிற்கு பின்னவர்கள் குறித்து யாருக்கும் எதுவுமிருப்பதில்லை!
…………………..

புகைப்படம் நன்றி: peace-not-war.org

Advertisements
 1. peddai
  April 18, 2009 at 3:48 am

  5 Responses to “அதிகாரங்கள் மற்றும் மக்கள்”

  1. நிவேதா Says:
  October 2nd, 2006 at 3:53 pm

  சிந்திக்க வேண்டிய விடயங்கள்(மேற்குலகின் அபத்தங்களென்று சொல்லலாமா), பொடிச்சி!

  //15 வயதுப் பிள்ளையை தூக்கி உள்ளே போடுகிற, குழந்தைப் போராளிகள் குறித்து ‘அக்கறை’ப்படுகிற மேற்கின் கயமையான போலித்தனங்களே இவ்வாறானவை தான்//

  அப்பட்டமான உண்மை.. இன்னுமின்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் இவர்களின் போலித்தனங்களை. கொழும்பில் வெள்ளை வான் பீதி மீண்டும் தலைதூக்கியிருக்க, இத்தனை இறுக்கிய பாதுகாப்புக்களுக்கு மத்தியிலும் எப்படி இத்தகைய கடத்தல்களும், கொலைகளும் அரசிற்குத் தெரியாமல் நடைபெற முடியுமென சராசரி – அடிப்படைக் கல்வியறிவற்ற – மனிதனே வினவக்கூடிய நிலையில்.. இதற்கும் எமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை; குற்றவாளிகளைத் தண்டிக்க எம்மாலான முயற்சிகளைச் செய்வோமென ஜனாதிபதி அறிக்கை விட்டுக்கொண்டிருக்க, நகைக்கத் தோன்றுகிறது..

  ஊடகவியலாளர்/தொழிலதிபர்கள்/அறிவுஜீவிகள் கடத்தப்படல், கொலை.. இதெல்லாம் சர்வதேசத்தினரின் குருட்டுக் கண்களுக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. மேற்குநாட்டில் முஸ்லிம் இளைஞனொருவன் தவறுதலாய் தும்மினாலும் தூக்கி உள்ளே போடுவதை நிகர்த்ததுதான் இங்கே தமிழர்களின் மண்டையில் போடுவது. அதிகாரம் = சுயநலம்…
  2. koothaadi Says:
  October 2nd, 2006 at 8:01 pm

  நல்ல தொரு பதிவு ..

  அரசும் ஊடகமும் நினைத்து விட்டால் எல்லாரும் பயங்கரவாதிதான் ,கொல்லப்ப்டும் எல்லாருக்கும் நியாயம் கற்பிப்பர் ..

  அதிலும் பிளேயர் சரியான ஜால்ரா ..பிரேசில் சரியாக தம் எதிர்ப்பை பதிவு செய்ததாக ஞாபகம்

  //பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் அவ்வாறு சொன்னது தன்னைப் பாதித்ததை, அவரது மகனது வயதுதானே தனக்கும் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டிருந்தார்.
  — ஒரு தலைவருடைய பிள்ளையின் உயிரும் ஏனைய பிள்ளைகளின் உயிரும் எப்படிச் சமனாகும்? எந்த மகா துர்நிகழ்வை கூறுகின்றபோதும், இன்று இக்கணம் சுடப்படுகிறவர்களது துயர் பற்றிச் சொல்கிறபோது கூட -அவை ஏதும் பொருட்டற்று – “அந்தத் தலைவரைச் சுட்ட” என வரலாற்றைப் புரட்டி பின்னோக்கிப் பேசுமளவிற்கு பின்னவர்கள் குறித்து யாருக்கும் எதுவுமிருப்பதில்லை!
  //

  சரியானக் கேள்வி ..பதில் சொல்வார் யாருமில்லை
  3. பொடிச்சி Says:
  October 8th, 2006 at 12:45 am

  நன்றி நிவேதா, கூத்தாடி..
  எங்களுடைய சூழல்களில் நடக்கிற பாதிக்கிற விடயங்களை இப்படியாவது பதிந்துவைத்துக் கொள்ள என்று எழுதிக் கொள்வதுதான்.
  எழுகிற அனேகமான கேள்விகள் – பதில்கள் அற்ற, வெறும் பதிவுகளே. வெறுமனே எழுதவேண்டி இருக்கிறது.. எங்கட உளைச்சலைப் போக்க!

  இந்தப் பத்தியில் இன்னும் சில விடயங்கள் எழுத இருக்கு. maybe later.thanks
  4. பொடிச்சி Says:
  October 8th, 2006 at 12:55 am

  அரார் தொடர்பான மதியின்
  பதிவு: http://mathy.kandasamy.net/musings/2006/10/05/540

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: