Home > இதழியல் > பட்டியலிடல்கள் புராணம்

பட்டியலிடல்கள் புராணம்

தமிழ் இலக்கியச் சூழலில் இடம்பெறுகிற –எப்போதும் மாறாத- சிலவற்றைக் குறித்த ஆட்சேப எண்ணத்தை எங்காவது எழுதவேண்டுமென நினைத்ததுண்டு. holding grudges என்று கூட சொல்லலாம்; இப்போது, நீண்ட காலம் சகித்து வைத்திருந்தவையுடன் மேலவும் விடயங்கள் கூடி ‘எங்க போய் முடியுமோ’ என்றிருக்கிறது.. எதிர்த்து எழுத நினைக்கிற விடயங்களும் ‘பட்டியலிடல்கள்’-இலிருந்தே ஆரம்பிக்கின்றன.

சக்கரவர்த்தியோட பழைய சிறுகதைகள் சிலவற்றில் உவமான(?)ச் சொல் மட்டும் மாறிக் கொண்டிருக்க வசனங்கள் வந்து போகும்: “தாலி சோக்கான சமாச்சாரம்” “கனவு சோக்கான சமாச்சாரம்” என்று… அதென்னமோ தெரியாது! ஆனா, பட்டியலிடுதல் என்பது நிறையப் பேருக்கு படு சோக்கான சமாச்சாரம். (இலங்கையில்) கைலாசபதியில “களை”கட்டின நோய், வழித் தொண்டர்களாற் தொடரப்பட்டு, -தொடர்ச்சியாய்- எல்லா இடங்களிலும் இதன் கூறுகள் தொடரும். ஒரே பெயர்களே திரும்பத் திரும்பக் கேட்டு, அரைச்ச மாவே அரைச்சு அரைச்சு… காது புளிச்சு, பட்டியலிடல் தொழில் அலுத்துப் போனது.

பட்டியலிடுதல் என்பது ஒரு பட்டியலிடுபவருடைய அறிவைத் தீர்மானிக்கிறது. அவர் ‘எத்தனை’ பேரை வாசிக்கிறார் என்பதையே அதுதான் தீர்மானிக்கிறது. இதனால் மிக உந்தப்படுகிற விமர்சகர்கள் தமக்குத் தெரிந்த ‘அத்தனை’ பெயர்களையும் போட நிற்பதில் விளைகிறது அனர்த்தம்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை-ஈழ எழுத்துக்களை தமிழக இலக்கிய கர்த்தாக்கள் *1கண்டுகொள்ளாதது/புறக்கணிப்பது பற்றின உரையாடல்களைக் கேட்டதுண்டு.
அதேபோல, தமிழக இலக்கியவாதிகள் இலங்கை எழுத்தாளர்களை ‘அங்கீகரிக்கிறபோது’(!) (அ.முத்துலிங்கம், சேரன்…) அதை யாரும் விமர்சிக்கையில், “உங்களுக்குச் சொன்னாலும் பிரச்சினை; சொல்லாட்டிலும் பிரச்சினை” என்ற மாதிரி ஒரு குரலைக் கேட்கக் கூடியதாய் இருக்கும். இதை எழுதிக் கொண்டிருக்கிற எனக்கு இரண்டுமே பிரச்சினை கிடையாது. எப்போதோ படித்து முடித்து, குப்பையை மூட்டை கட்டி அனுப்பிவிட்ட திருநாமங்களை பட்டியலிட்டபடி இருக்கிறவர்கள், இது எப்படி அர்த்தப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள, ரொறன்ரோவிற்கு வந்திருந்த லீனா மணிமேகலை தமிழக தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி கூறிய விடயமொன்று: ‘தற்சமயம் ஏறத்தாழ கணவனை இழந்த பெண்கள் வெள்ளைச் சேலை உடுத்துதல், பொட்டு வைக்காமை போன்ற சடங்குகள் நகர சமூகங்களில் இல்லாமலே போய்விட்டவை அல்லது கடுமையாக நடைமுறையில் இல்லாதவை; ஆனால் இந்தத் தொ.காட்சி நாடகங்களின் வருகை, இத்தகைய சடங்குகளை இன்னும் பூதாகரப்படுத்தி, அழுது குளறி அத்தகைய பின்னோக்கிய கருத்துக்களை/சடங்குகளை மக்களது மனங்களில் ‘சகிக்க முடியாதபடி’ மீளக் கொண்டு வருகிறது.’

அதேபோல, ஈழத்தைப் பொறுத்தவரை பல இலக்கியவாதிகளது பிம்பங்கள் உடைந்துவிட்டன; காலமே அவர்களது (தனிப்பட்ட/பொது அரசியல்) வாழ்வினது போலித்தனங்களை அடையாளங் காட்டிவிட்டது. அவர்களது படைப்புக்களும் ‘வல்லன வாழும் அல்லன தேயும்’ விதிக்கேற்ப தேய்ந்து போயாகிவிட்டன. நெருக்கடிமிகுந்த ஒரு காலம் மறைத்து வைத்திருந்த அவர்களது நார்சிசப் பிம்பம் காட்டிய கண்ணாடி உடைய, அத் துண்டுகளைத் தேடிப் பொறுக்கி எடுத்து, பதிப்பக (காலச்சுவடு இன்ன பிற) நிறுவனங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களும் அதைப் பிரசுரிக்கி/பதிப்பிக்கிறார்கள்ள; இது தரமான பிரதிகளை தேட விழையாத பதிப்பாளர்களின் (இலகுதானே!) மனோநிலை (’தரமான பிரதிகள்’ என்பதைவிட ‘ஈழத்து இலக்கியம் என brand பண்ணுற ஒரு பிரிவிற்கு நியாயம் வழங்கிற பிரதிகள்’ எனச் சொல்லலாம்). ஆனால் இந்த தொ.காட்சி நாடகங்கள் மீளக் கட்டியெழுப்பிற பிற்போக்குத்தனங்கள் போல போலிகள் என ‘உடைத்துப் போட்ட’ நபர்களது பிம்பங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டி ஈழத்தவர்களுக்கு நே(ர்)த்திக் கடனா இருக்கிறது? பெரும்பாலும் (பொருளாதாரத்திலும், பிரதேசரீதியாகவும்) மேல்வர்க்கத் தமிழர்களாக இருக்கிற இவர்களது எழுத்தைப் படித்து மற்றவர்கள் தமது சொற்ப ஓய்வுப் பொழுதை சிரமத்துக்குள்ளாக்க வேண்டுமா?

இப்படியான கேள்விகளின் பின்னாலுள்ள தார்மீகத்தை “உங்களுக்குச் சொன்னாலும் பிரச்சினைளூ சொல்லாட்டிலும் பிரச்சினை” என்கிற கேள்விகளை விசுக்குவதற்காகவே “சூர்யா” என்றோ வேறு ஆவிகளாகவோ இணையத்தில் அவதாரம் எடுத்து உலவக் கூடிய சாம்பவான்கள்/அவர்கள் சிஷ்யர்கள் உணரத் தலைப்படுவராக!

இவை பலருக்கும் பிரச்சினையற்றதாக இருக்கலாம். ஆனால் -விமர்சனங்களோ தேடல்களோ அல்ல- எந்த அடிப்படையுமற்ற -சில பெயர்கள்- ‘பட்டியலிடல்’களே சுலோகங்கள்போல கூறுவோர் நினைவிலிருந்து வரிசையாய்ச் சொல்லப்பட்டு வருகின்றன; அதிலும் சிலவேளைகளில், ஈழம், ஈழ எழுத்து என்று வருகிறபோது, வரிசைப்படுத்தப்படும் இந்தப் பெயர்கள் கூறுவோரின் குற்றவுணர்வு அல்லது மிகையுணர்வு சார்ந்து தூண்டப்படுதலின் விளைவாகவும் இருக்கிறது.

(பெப்.2006) தீராநதி இதழில் குட்டி ரேவதியின் நேர்காணலிலுள்ள (சந்திப்பு: தளவாய் சுந்திரம்) தொடர்பான கேள்வியும் பதிலும்:

கே:’தமிழ் பெண் கவிதையுலகில் பெண்ணிய தர்க்கம் தர்க்கமாகவே நின்றுவிடுகிறது. கவிதையாக உருமாற்றம் அடைவதில்லை. ஆனால் ஈழத்துப் பெண் கவிஞர்களிடம் தான், தனது காதல், தனது துயரம் என்பன போன்ற விஷயங்களைப் பற்றி எழுதும் போதுகூட, அவை தனிப்பட்ட ஆளுமையொன்றின் அனுபவங்களாக, அவதானிப்புகளாக மட்டும் வெளிப்படுவதில்லை. அவர்களது கவிதைகளில் சொந்தக் கதையை விரிவான தளத்திற்கு நகர்த்திச் செல்ல உதவும் அறிவார்ந்த தர்க்கம் இருக்கிறது’ என்று வ. கீதா எழுதியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்வீர்களா?:
குட்டி ரேவதி: இதனை முற்றிலும் நிராகரிக்கிறேன். அவர் குறிப்பிடும் கட்டத்தை இன்றைய பெண் கவிஞர்கள் கடந்துவிட்டார்கள். ஆனால் ஈழத்து பெண் கவிஞர்களின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை. பஹீமா ஜகான், சிவரமணி இவர்கள் இருவரையும் மிகப் பெரிய கவிஞர்களாக நான் கருதுகிறேன். போர் சூழலில் போராட்டத்துக்கு தங்களின் உடலையும் மனதையும் ஒப்புக்கொடுத்து, அங்கிருந்து தங்களது படைப்பியக்கத்தை இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் பெண் கவிதை என்று பேசும்போது, இவர்களைத்தான் நாம் முன்னிறுத்த வேண்டும்.

யாரும் யாரையும் ‘முன்னிறுத்துவதற்கு’ முன்னால், இங்கே குறிப்பிடப்படுகிற இந்த ‘பெரிய கவிஞர்கள்’ பற்றியும், மற்றும் இருவரையும் ஒரே இடத்தில் குறிப்பிடுவது தொடர்பாகவும் யோசனையாய் இருந்தது. இந்த இரு கவிஞைகளது எழுத்துக்களதும் வாசகியாய் *2கு.ரே.யின் இத்தகைய பதிலுக்குப் பின்னாலுள்ள மனோபாவத்தை இப்படித்தான் ஊகிக்க முடிந்தது:
1. மேலே குறிப்பிட்ட -ஈழம், ஈழ எழுத்து என்று வருகிறபோதான- உணர்ச்சிவசப்பட்ட நிலை (”உடலையும் மனதையும் யுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்து”) அல்லது/கூடவே;
2. நன்கு அறிந்திருக்கக் கூடியவராய் இருக்கக்கூடிய சிவரமணி என்கிற ஒரு பெயர்; அதைத் தனியே சொன்னால் “வேறு யாரையும் தெரியாது” என்றும் வாசிக்கலாம் என்பதாலோ இன்னொரு பெயர்: பஹீமா ஜகான். யார் இவர்? கு.ரே. ஆசிரியரான ‘பனிக்குடம்’ இதழில் கவிதைகள் பிரசுரமாகிய + ஈழத்தவர்.

ஆனால்!! ‘பனிக்குடம்’ இதழில் கவிதை எழுதிய காரணத்துக்காக ப.ஜகான் (சிவரமணியுடன் ஒப்பிடக்கூடிய) அல்லது சமகால ஈழத்தை வெளிப்படுத்துற -ஈழக் கவிஞர்கள் எல்லோரையும் படித்து தரம் பிரித்து, அவற்றுள் பெரிய கவிஞர் என முடிவு கட்டிய- ஒருவரல்ல (இது பா.ஜ.-ஐத் தரமிறக்க அல்ல). ஒரு ‘பெரிய’ கவிஞர் எனும்போது அது நாம் ”அறிந்த” எமது ”வாசிப்புக்கட்பட்ட” கவிஞர் அல்ல. ஆசிரியராய் இருக்கிற தனது இதழில்/சூழலுள் எழுதுகிற ஒரு கவிஞரே பெரிய கவிஞர் என அடையாளப் படுத்துவதற்கான தேடலின் வரையறை என்றால்?! என்ன செய்யலாம்? முதலில் (ஒரே காலத்தைப் பிரதிபலிக்காத) சிவரமணியையும் ப.ஜ.-ஐயும் சமகாலத்தவர்கள்போல எந்த விளக்கமும் அற்று ஒன்றாக சொல்வதே அவர்களை அணுக நியாயம் செய்யாதது. ஒவ்வொரு ஆண்டும் சடங்குபோல நினைவுகூரப் படும் இறப்பு மற்றும் தவறாமல் பட்டியலிடுதல் தவிர சிவரமணி என்கிற ஒருத்தி எவ்வளவு தூரம் ‘புரிந்து’கொள்ளப் பட்டார் என்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் சிவரமணி என்கிற 15 வருடங்களிற்கு முன் தற்கொலை செய்துகொண்ட, தனது 22 கவிதைகளை மட்டுமே எரிக்காமலும் யாரும் எடுத்துச் செல்லாமலும் விட்டுச் சென்ற ஒரு கவிஞையைத் தவிர (அவரையொத்த ஆளுமையுடன் தனது சமூக சூழலைப் பதிவு செய்ய விழைகிற) எந்தப் பெண் கவிஞையை நம் தமிழ் இலக்கியவாதிகள் அறிந்துள்ளனர்?

“பெண் வழிகள்” (காலச்சுவடு, டிசம்பர் 2005) எனுகிற 10 மலையாளக் கவிஞைகளின் மொழிபெயர்ப்பு நூலை (மொ-பெ:சுகுமாரன்) கடன் தந்த நண்பி அது –வழமையான இந்தியக் இலக்கிய சஞ்சிகைகளில் வருகிற தமிழ்க் கவிதைகளிலிருந்து மாறுபட்டிருந்தமை- பிடித்திருந்தது என்று சொன்னார். இன்றைக்கு நாம் படித்து வந்த *3ஈழத்துக் கவிஞைகளில் (கவிஞன்களிடத்தே போலவே) போதாமைகளை குறிப்பிட்டளவு எல்லைகளை (limits) உணர்ந்தாலும், அவர்களது படைப்புக்களை -இந்திய தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுபடுத்துவது- பலமோ பலவீனமாவோ இருக்கக்கூடியது –ஏற்கனவே அவதானிக்கப்பட்ட- அவற்றினது “வெளிப்படை”/”நேரடி”த் தன்மையே (காதல்/காமம் முதலிய எந்த உணர்ச்சிகள் சார்ந்தும், ஈழப் பெண் கவிகள் 80களின் இறுதியிலேயே முலைகள்,யோனி என உடல் உறுப்புகளை குறிப்பிட்டு எழுதியபோதும், அது இப்படி எழுதலாமா என ஒரு விவாதத்திற்கு உள்ளானதில்லை). இதற்கு அடக்குமுறைகளுக்கெதிராக ‘விளங்க’ எழுத வேண்டிய பின்னணி மாத்திரமே காரணமென்று தோன்றவில்லை; 80களிற்கு முந்தைய பல கவிஞர்களது கவிதைகளது பண்பாகவுங் கூட இந் நேரடித்தன்மை இருக்கிறது. முக்கியமாக மலையாளக் கவிதைகளில் தம் எல்லா உணர்ச்சிகளையும் (”என்ன பெரிய விசயம்” என்கிற அலட்சியத் தொனிபட) வெளிப்படுத்திற பாங்கு – ஈழத்துடன் தொடர்புடைய ஒன்று.

1990 களில் வந்த அஸ்வகோஸ், நட்சத்திரன் செவ்விந்தியன், பா.அகிலன் , மைதிலி (/கொற்றவை), என்.ஆத்மா, தேவ அபிரா, றஸ்மி – போன்ற கவிஞர்கள்; பிறகு, ஆகர்சியா, பெண்ணியா, ரேவதி (/கலா/சுந்தரி) சுல்பிகா போன்றவர்கள்ள; சரிநிகர் பத்திரிகை, “உயிர்வெளி” (2000) “தமிழீழப் பெண்களின் கவிதைகள்” (2002) போன்றவைகளில் எழுதியவர்கள்; வி.பு.அமைப்பிலிருந்து எழுதுகிறவர்களில் நெகிழ்ச்சியூட்டும் மலைமகள் போன்றவர்களின் கவிதைகள் – இவர்கள் தனிப்பட்டவொருவருடைய வாசிப்பு எல்லைக்குட்பட்டு நினைவு வருபவர்கள்.
சமகாலத்தில், பஹீமா ஜகானைவிடவும் அனார் (பனிக்குடத்தில் எழுதுவதில்லையே ஒழிய) பல இலக்கியச் சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதுகிறார்; இலங்கை அரசின் 2005? ம் வருட சாஹித்திய மண்டலப் பரிசு (பரிசுகளின் அரசியலை மறந்துவிடலாம்!) இவருக்கே கிடைத்தது. (’பெண்மை’க்குரியது எனப்படுகிற) மென்மையான (”கலகமற்ற”) வார்தைகளாலேயே உருவாகிற போதும், அவரது கவிதை தனது சாத்தியங்களை மீறவே முனைகிறது. அதைவிட, கடந்த 5-6 வருடங்களுள் தமிழகத்தில் வெளிவந்த தொகுப்புகளெனில் ஆழியாள் (உரத்துப் பேச), மைதிலி (இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்) போன்றனவைக் குறிப்பிடலாம் – இத் தொகுதிகளை குட்டி ரேவதி போன்றவர்கள் படித்தார்களா தெரியவில்லை. குறிப்பிட்ட கவிஞைகளிடம் “ஈழ இலக்கியம்” சார்ந்த கூறுகளும் தொடர்ச்சியும் உண்டே. எனினும், இத் தொகுப்புகளுங் கூட சமகாலத்தை சமகால ஈழப் பெண்ணின் குரலைக் கொண்டிருப்பவை அல்ல; அனாருக்கு அப்பால் மேற்குறிப்பிட்ட கவிஞர்களுக்கு அப்பால் ‘பட்டியலிட’ ‘பட்டியல்களில்’ பெண் கவிஞர்களது பங்களிப்பு தேடலுக்குரியதாய் இருக்கிறது. தமது வெளிப்படைத் தன்மையாலும் அடக்குமுறை எதிர்ப்பாலும் நிறைந்திருந்த அவர்களது கவிதைகளை சமகாலத்தில் கேட்க முடிகிறதா?
2002 யுத்த நிறுத்தத்திற்கு பின்னராக- அமரதாஸ், கருணாகரன், நிலாந்தன், தானா.விஸ்ணு, சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்), சிந்தாந்தன் போன்றவர்களின் கவிதை/நூல்கள் வருவதுபோல (கிழக்கு/வன்னிப்பிரதேச) ஈழத்திலிருந்து பெண்களின் கவிதை/நூல்கள் வருகின்றனவா?

*3இவை குறித்தெல்லாம் எமக்கு அக்கறையில்லை. ஆனால் 80களின் சிவரமணியும் எமது இதழில் எழுதிய பஹீமாவும் -சொல்லுவோம்!- ‘பெரிய’ கவிஞர்கள் – just like that! இன்னமும் தமிழக இ.சஞ்சிகைகளில் விமர்சகர்கள் செல்வி, ஒளவை, சங்கரி, ஊர்வசி ஈழத்தின் சிறந்த கவிஞைகள் என உருப்போட்ட வண்ணம் இருக்கின்றனர் (இவர்கள் அனைவருமே 80களில் எழுதியவர்கள்); ஏனெனில் நிர்ணயிக்கிற அதிகாரம் என்னிடமுள்ளது! நான் மெனக்கெட்டு எனது வாசிப்பின் எல்லையை சமகாலத்தை நோக்கி விஸ்தரிக்க வேண்டியது இல்லை!
குட்டி ரேவதி *4நே.காணலில் குறிப்பிடுகிற சமகால தமிழ் எழுத்தாளர்கள் பெயர் மட்டுமல்ல, அவர் குறிப்பிடுகிற, பாப்லோ நெருடா, சில்வியா பிளாத் என்போரும் மேற்கின் ‘சமகாலத்தை’ச் சேர்ந்தவர்கள் அல்லர். நேர்காணப்பட்டவர் யார் யாரைப் பட்டியலிடுவதென்பது அவரது உரிமைதான்’ பிரச்சினை, தனது தனிப்பட்ட விருப்பமாக அதை வெளிப்படுத்தாமல், தனது இருக்கையிலேயே எல்லாம் வந்து சேரும் அதிலிருந்துதான் (பார்வைக்கு வராத) ஏனைய சகலத்தையும் நிர்ணயிப்பர் என்கிற போக்குத்தான். தான் படித்ததை ஒத்துக் கொள்ளாத தான் படித்ததுள்ளிருந்து உலகைப் பாரக்கிற பெருந்தன்மை. இது ‘இன்றை’ இன்றுள்ளவர்களின் வெளியை, மறைத்து (வன்னியிலிருந்து கிழக்கிலிருந்து) எழுதுகிறவர்களது இருப்பை அசட்டையே செய்கின்ற காரியத்தையே செய்கின்றது. இப்போ இருந்துகொண்டிருப்பவர்களது குரலையும் இறந்த பிறகுதான் கேட்க விரும்புவார்களோ என்னவோ!!

தொடர்பான குறிப்புகள்:-
*1ஈழத்து இலக்கியம் குறித்த மற்றவரின் ‘புறக்கணிப்பை’ப் பேசுகிற ஈழத்தவர்கள் மலையக/கிழக்குப் பகுதி எனத் தம் கைக்கு வராத வாழ்க்கை/இலக்கியங்கள் குறித்த புறக்கணிப்பை நெடுங் காலம் செய்து வருகிறார்கள்.

*3பார்க்கிறபோது, சிவரமணி முதலாய ஈழத்துக் கவிஞைகளில் ‘சிறப்பாக எழுதிய’ ஒரு தலைமுறைதான் உண்டேயொழிய, அவர்களில் தனி நபர்களாய் பெரியளவு எண்ணிக்கையில் எழுதிய அல்லது தமது படைப்பாற்றலைப் பலவிதமான பரிசோதனைகளுக்குள் உட்படுத்திய படைப்பாளிகள் இல்லை. ஈழத்துக் கவிஞன்கள் போல பல நூறு கவிதைகளை அவர்களில் ஒருவரும் எழுதவும் இல்லை (சிவரமணியைவிட பல மடங்கில் உயிருடன் இருக்கிற ஊர்வசி போன்றவர்கள் எழுதவில்லை!).

*2சிலர் எழுதுவதுபோல, கு.ரேவதி சர்ச்சைகளால் அறியப்பட்டவர் என்பது தோன்றியதில்லை; முலைகள் க.தொகுப்பின் சர்ச்சைகளிற்கு முன்னாலேயே பூனையைப் போல் அலையும் வெளிச்சம் போன்ற நூல்களை நன்கு வாசிக்கிற நண்பர்கள் பிரேரிக்க கேட்டதுண்டு. இந் நேர்காணலிலும் – தனது கருத்துநிலைகளை தெளிவாக முன்வைத்து தொடர்ந்து உரையாடுகிற என்பதே- கவருகிற அம்சமாயிருக்கிறது.
தன்னை முன்நிறுத்திற, அதேநேரம் கவனத்திற்குரிய படைப்பாளராகவே அவர் தெரிகிறார்.

*4குறித்த (பெப். 2006) தீராநதியில் பா.செயப்பிரகாசம் “கு.ரேவதி என்ற மனுஷி பெண் குலத்தின் குறியீடு” என எழுதியிருந்தார்; அவரைக் குறித்த எஸ்.ரா.வின் -பெயரின் கீழ் வந்த!?- திரைப்பட வசனம், முழுக் குலத்தையும் அவமதித்த ஒன்றாகக் குறியீடாக்கப்படுவது பரிதாபகரமாகத் தெரிந்தது.

தீராநதி அடுத்த (மார்ச்) இதழ், குறித்த பேட்டிக்கான வினைகள், எதிர்வினைகளுடன் வந்திருக்கிற போதும் இப் பேட்டியில் முக்கியமாய் தெரிந்தது: இதுவரைகாலமும் “பட்டியலிடும்” தகுதி பெற்று ஆண்களே இருந்தார்கள்; பெண்கள் “சக ஆண் கவிஞர்களது எழுத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற அற்புதமான கேள்வியால் ஆசீர்வதிக்கப் படவில்லை. அனேகமாய் “நீங்கள் பெண்/பெண்ணிய எழுத்துக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்பது மட்டுமே கேட்கப்பட்டது – ஏதோ (சக) எழுத்தாளன்கள் எல்லாம் அற்முதமான சாதனைகளைச் செய்து கிழிப்பவர்கள் போல! அதிலும் தன்முனைப்பான, ஈகோ மிகு எழுதுகிற ஆண்களை, அவ் நடவடிக்கைகளை வித்துவ கர்வம் என்றும் என்னென்னவோ சொல்லி அவற்றில் தொங்கவில்லையா?
அப்படியொரு மேதாவித்தனமான தன்முனைப்பானவர்கள் பெண்களில் அவதரிப்பதும் நல்லதே.
ஆண்கள் விமர்சனங்களை எதிர்கொள்கிற விதம் எல்லாம் கு.ரேவதி மற்றும் மாலதி மைத்ரி போன்றவர்களிடம் தெரிகிறது. அந்தத் தோரணை ‘பெண்களிடம் இருப்பதால் ஏற்றுக் கொள்ளவேண்டும்’ என்கிற கடப்பாடு இல்லாததால், அதை அறிந்தபடியே அவர்களை எதிர்கொள்வது முடியுமாய் இருக்கிறது. அதே நேரம் குட்டி ரேவதியினது கருத்துக்கள் சர்ச்சைகளை வேண்டுவனவாகவும் சர்ச்சைகளால் அறியப்பட்டவர் என்பதிலுள்ள இரு பாலிற்குமான பாகுபாட்டையும் காண முடிகிறது.
—0—-

குட்டி ரேவதி:

 • சிபி.கொம் 2004? நேர்காணல்
 • பெப்ரவரி 2006 –தீராநதி நேர்காணல்
 • Advertisements
  Categories: இதழியல்
  1. peddai
   April 18, 2009 at 1:11 am

   18 Responses to “பட்டியலிடல்கள் புராணம்”

   1. karthikramas Says:
   March 31st, 2006 at 1:01 am

   நல்ல பதிவு அல்லது பட்டியல் 😛

   நீங்கள் சொல்வதைப்பார்த்தால் பட்டியலிடப்படாத விமர்சனங்கள் ஏற்கபடுகின்றனவா என்று ஒரு ஆராய்ச்சி செய்யனும் போல இருக்கு. பட்டியலிடுவது தனது தகுதியை முன்னால் வைத்து பின்னால் கருத்தை வைக்கும் போக்காக அவர்கள் நினைப்பதன் காரணமாகவிருக்கலாம். “பங்களிப்பை ஏற்கிறேன்”, “மறுக்கவில்லை” என்பதெல்லாம் கர்ணனோடு பிறந்த கவசகுண்டலங்கள் மாதிரியாக்கும். அது இல்லாமல் விமர்சனமேது?

   நீங்கள் சமகாலத்தில் வாழ்ந்தாரா? என்று சொல்லி பிரிப்பதை விட, ஒரே விடயத்தை இரு கவிஞைகளும் எவ்வாறு உள்வாங்கி வெளிப்படுத்துகின்றனர் என்று எதில் வீச்சு,கருத்தாழம்,ஒப்புமை அதிகம் என்பது போல சொல்லியிருந்தால் இன்னும் ஆணித்தரமாகவிருக்கும்.

   //பட்டியலிடுதல் என்பது ஒரு பட்டியலிடுபவருடைய அறிவைத் தீர்மானிக்கிறது. அவர் ‘எத்தனை’ பேரை வாசிக்கிறார் என்பதையே அதுதான் தீர்மானிக்கிறது. இதனால் மிக உந்தப்படுகிற விமர்சகர்கள் தமக்குத் தெரிந்த ‘அத்தனை’ பெயர்களையும் போட நிற்பதில் விளைகிறது அனர்த்தம்.
   //
   அவர் ‘எத்தனை’ பேரை வாசிக்கப் போகிறார் என்று? 🙂
   2. karthikramas Says:
   March 31st, 2006 at 1:04 am

   மற்றபடி,
   //ஏற்கனவே அவதானிக்கப்பட்ட- அவற்றினது “வெளிப்படை”/”நேரடி”த் தன்மையே (காதல்/காமம் முதலிய எந்த உணர்ச்சிகள் சார்ந்தும், ஈழப் பெண் கவிகள் 80களின் இறுதியிலேயே முலைகள்,யோனி என உடல் உறுப்புகளை குறிப்பிட்டு எழுதியபோதும், அது இப்படி எழுதலாமா என ஒரு விவாதத்திற்கு உள்ளானதில்லை).//

   இதற்கு ஒரு குறும்பட்டியல் உதவியிருக்கும். அல்லது சில வரிகளையாவது மேற்கோள்களில் கொடுத்திருக்கலாம்.
   3. DJ Says:
   March 31st, 2006 at 4:14 am

   /
   //ஏற்கனவே அவதானிக்கப்பட்ட- அவற்றினது “வெளிப்படை”/”நேரடி”த் தன்மையே (காதல்/காமம் முதலிய எந்த உணர்ச்சிகள் சார்ந்தும், ஈழப் பெண் கவிகள் 80களின் இறுதியிலேயே முலைகள்,யோனி என உடல் உறுப்புகளை குறிப்பிட்டு எழுதியபோதும், அது இப்படி எழுதலாமா என ஒரு விவாதத்திற்கு உள்ளானதில்லை).//

   இதற்கு ஒரு குறும்பட்டியல் உதவியிருக்கும். அல்லது சில வரிகளையாவது மேற்கோள்களில் கொடுத்திருக்கலாம்.
   /
   கார்த்திக் இதற்கு அவர்களின் கவிதைத் தொகுப்புக்கள்/கவிதைகள் என்பவற்றிலிருந்து எத்தனையோ உதாரணங்களை (பொடிச்சியும் தரக்கூடும்) தரலாம்….உடனடியாக தொகுப்புக்கள் அருகில்லாததால் பதிவு செய்ய முடியாவிட்டாலும், பதிவுகளில் சில வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு பதிவில் (ஒரு சுயவிளம்பரம் கூடத்தான் :-)) சில உதாரணங்களை வேண்டுமென்றால் பாருங்கள். நன்றி
   4. DJ Says:
   March 31st, 2006 at 4:25 am

   Oops forgot to mention one more thing…you may find their poems on those poets’ blog pages (Podichi already gave links to them above)
   5. karthikramas Says:
   March 31st, 2006 at 8:59 pm

   கோயிலில் கத்தினால் பக்திக்குரங்கு ஆகிவிடுமா? 🙂 அப்பரே எனக்காக கேட்கவில்லை; மேற்கோள் கொடுத்திருந்தால் இன்னும் ஆதாரப்பூர்வமாக கட்டுரை (பட்டியலுரை) ஆகியிருக்குமே , நல்லதுதானே என்று சொன்னேன்.
   6. பொடிச்சி Says:
   March 31st, 2006 at 9:18 pm

   நன்றி கார்த்திக், டீ.ஜே.
   ஒரு குறும்பட்டியல் உதவியிருக்கும்தான்; அப்புறம் எழுதுகிற என்னோட வாசிப்பு நிலை தெரிய வரலாம் என தவிரத்திருக்கலாம்???? 😉

   பொதுவா இங்க சொல்ல வந்தது:
   கு.ரேவதி/அவர் போன்றவர்கள் ஏதாவது ஒரு பெயரை சொல்வதே ‘பெரிய’ விசயமாக எடுத்துக்கொள்ளப்படுவது. பெயர்களை சொல்ல வேணுமென்று ஒரு அவசியமும் இல்லை
   தீராநதி அடுத்த இதழில கூட நிறைய எழுத்தாளன்கள் கு.ரேவதியின் -சமகால- வாசிப்பு நிலவரம் பற்றி ஆதங்கப்பட்டிருந்தார்கள்; ஈழம் போன்றவற்றில் இவரோட நிலை பரிச்சயமின்மை காரணமா அவர்களுக்குப் புரியாது..

   தன்னுடைய கவிதைக்குரிய/மொழி பாணியை, தனித்துவத்தை இன்னும் கண்டடைந்துவிடாத ஒருவரோடு ஏற்கனவே அறியப்பட்ட ஒருவர குறிப்பிடுவது இதில் பொருத்தமாக இருக்கவில்லை (அப்படி செய்யவே கூடாது எனவில்லை).

   வ.கீதா போன்றவர்களது வாசிப்பும் தேடலும் அவர்களுடைய முடிவுகள் குறித்த மதப்பைத் தருகிறது. அது ரேவதி போன்றவர்களிடம் இல்லை..
   7. பொடிச்சி Says:
   March 31st, 2006 at 9:45 pm

   sorry மதப்பை = மதிப்பை 🙂
   8. DJ Says:
   March 31st, 2006 at 10:13 pm

   கார்த்திக் விளங்கியது :-).
   ……
   /வ.கீதா போன்றவர்களது வாசிப்பும் தேடலும் அவர்களுடைய முடிவுகள் குறித்த மதிப்பைத் தருகிறது. அது ரேவதி போன்றவர்களிடம் இல்லை.. /
   வ.கீதா ஒரு தேர்ந்த விமர்சகராகவும், நல்லதொரு மொழிபெயர்ப்பாளராகவும் (in both ways) இருப்பதால் தெளிவான பார்வை வந்திருக்கலாம் :-).
   9. அதே Says:
   April 2nd, 2006 at 4:34 am

   இந்தப்பட்டியல் இடுகின்றவர்களைப் பற்றிய பட்டியலொன்றைத் தயாரிக்கவேண்டுமென்பது என் நெடுங்கால ஆகா அவா. முழுதாக பட்டியல் இடுகின்றவர்களை வாசித்தபின்னாலேயே முற்றுமுடிவான பட்டியலிடுவது என்ற திட்டமிருப்பதாலே சாத்தியமின்றிப் போய்க்கொண்டேயிருக்கின்றது 😦

   இப்போதைக்கு,

   1. கநாசு
   2. கைலாசபதி
   என்று தொடங்கலாம்

   ஆனால், எப்பட்டி(யல்) இடுகின்றவர்கள் வந்தாலுங்கூட,
   கம்பன் – வள்ளுவன் – இளங்கோ – பாரதிதாசன் பட்டி(யற்)காரரையும் சுவாமிநாதையர்-பாரதி-பிச்சமூர்த்தி-ஞானக்கூத்தன் – சுந்தரராமசாமி -ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- ஜெயமோகன் பட்டி(யற்)காரரையும் மிஞ்சமுடியாது. வையாபுரி – புதுமைப்பித்தன் – ஜெயகாந்தன் – …. என்று இன்னொரு பட்டியலும் போட்டிக்குண்டு 😉
   அதுபோல, மனுஷ்யபுத்திரன் – ரவிகுமார் போன்ற பட்டியலொன்றும் வருங்காலத்திலே போடவேண்டும்

   /காலமே அவர்களது (தனிப்பட்ட/பொது அரசியல்) வாழ்வினது போலித்தனங்களை அடையாளங் காட்டிவிட்டது./

   அநாவசியமாக, காலத்தினை இழுத்ததினை வன்மையாகக் கண்டிக்கிறோம் 😉
   10. பொடிச்சி Says:
   April 6th, 2006 at 1:18 am

   //அநாவசியமாக, காலத்தினை இழுத்ததினை வன்மையாகக் கண்டிக்கிறோம்//
   வரலாற்றை இழுத்திருக்க வேண்டும்…(?)!
   11. faheemajahan Says:
   April 14th, 2006 at 1:07 pm

   நான் “பனிக்குடம்” என்ற பெயரை இப்பொழுது தான் கேள்விப் பட்டேன்.நான் “பனிக்குடத்தில்” எழுதியதுமில்லை.படித்ததுமில்லை.
   யாரோ ஒருவர் எனது பெயரை தவராகச் சொல்லிவிட்டதற்காக நான் என்ன செய்ய முடியும்?
   12. selvanayaki Says:
   April 15th, 2006 at 1:38 pm

   பொடிச்சி,

   நெடுநாளின்பின் உங்கள் பதிவொன்றை வாசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. புதுப்பதிவிடம் அழகாக இருக்கிறது. தொடர்ந்து பதியுங்கள். உங்களின் பல பதிவுகள் எனக்குள் புதிய சிந்தனைகளைக் கிளப்பியிருக்கின்றன.
   13. பொடிச்சி Says:
   April 16th, 2006 at 10:48 pm

   நன்றி செல்வநாயகி, பஹீமா..
   பஹீமா: இங்க கூற வந்தது எழுத்தாளர்கள் தமது குறிப்பிட்ட (குறுகிய) வாசிப்பிற்குள் (வாசிக்காத)எல்லாவற்றையும் நிர்ணயிப்பது பற்றித்தான்.. உங்களைப் பற்றிய குறை இல்லை.. நன்றி!
   14. ஃபஹீமாஜஹான் Says:
   April 18th, 2006 at 10:13 pm

   நண்பர்கள் ஊடாகவே குட்டிரேவதி யின் நேர்காணலைப் படிக்க முடிந்தது.எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றின் பின்னரே பெட்டை பார்த்தேன்.உங்கள் கூற்று மிகச் சரியானதே.
   மிகவும் நன்றாகச் செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.பெட்டை யார் என்று இது வரையிலும் எனக்குத் தெரியாது.

   நான் எந்த இடத்திலும் என்னை முன்னிறுத்தப் போவதுமில்லை.எனது கவிதைகள் குறித்துப் பேசுவதுமில்லை.நான் வாழும் சூழல் கூட கவிதை பற்றிய எந்தக் கதைக்குமே இடமற்ற சூழல்.
   றஞ்சி கேட்டுக் கொண்டதன் பின்னரே “ஊடறு” வுக்கு எனது ஆக்கங்களை அனுப்பினேன்.”ஊடறு”வில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் பலருடைய கவிதைகளும் உள்ளன.குட்டி ரேவதி “ஊடறு”வில் எனது கவிதைகளைப் படித்திருக்கலாம்.(அப்படிப் படித்திருந்தாலும் கூட சுமார் 20 கவிதைகளே “ஊடறு”வில் உள்ளன)

   “பனிக்குட”த்திற்கும் எனக்கும் தொடர்பில்லை.
   பனிக்குடத்தில் எனது கவிதை இடப்பட்டிருந்ததா?

   குட்டி ரேவதியின் கூற்றை படித்து நான் சங்கடத்துடனேயே இருந்தேன்.சிவரமணி தப்பித்து விட்டாள்.நானும் இறந்தவர்களில்
   ஒருத்தி என்று நினைத்துக் கொண்டு அந்தக் கருத்து சொல்லப் பட்டதோ தெரியவில்லை.

   நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன்.வெளிவந்த கவிதைகளின் பிரதிகளை அழித்துவிடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”பெட்டை”யின் கருத்துக்கள் எனது முடிவு சரியென்பதை வலுப்படுத்துகிறது.
   அவற்றை விட்டு விடுதலையாக வேண்டும்.
   15. பொடிச்சி Says:
   April 19th, 2006 at 11:16 pm

   பஹீமா: கவிதைகளை “ஊடறு”வில் இருந்து எடுத்துப் போட்டிருக்க முடியுமா தெரியவில்லை. உங்களது கவிதைகளை யாத்ரா, தினமுரசு என பிரசுரமாகிய இடங்கள் போட்டு, மார்ச்- April 2004 பனிக்குடம் இதழில் வெளிவந்திருக்கின்றன. இந்த இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மறுபிரசுரம் என்பதான ஒரு விபரமும் இல்லாததால் எழுத்தாளர் அனுப்பியதாகவே கொள்ள முடிந்தது. அதில் தவறிருக்கலாம்- ஆனா இங்க கூற வந்தது ”உங்களது படைப்புகள்/அவற்றின் தரம்/நீங்கள எழுதக் கூடாது” என்பதெல்லாம் இல்லை.எழுத்தாளர்கள் தமது குறிப்பிட்ட (குறுகிய) வாசிப்பிற்குள் (வாசிக்காத)எல்லாவற்றையும் நிர்ணயிப்பது பற்றித்தான்..

   நானோ நீங்களோ எழுதுதல் தன்முனைப்போ இருக்கலாம், இல்லாம இருக்கலாம் – ஆனா அது ஒருவரது இருப்பு சார்ந்தது. அதனால் யாருமே எழுதக் கூடாது என்ற தோரணையில் எழுதுறதில்லை. தவறாய் தோன்றுகிவதை விமர்சிப்பது அடிப்படையில் அதை விமர்சனமாய் அவர்களவர்கள் எடுத்துக் கொள்ள என்று தான்.
   உங்களது எழுத்துக்களை 1994-95 அல்லது அதற்கு முன்னமும் தினமுரசில் படித்திருக்கிறேன்: + ஸர்மிளா இஸ்மாயில், ஆத்மராஜா றூத் சந்திரிக்கா என எழுதினார்க்ள. எழுத்துக்கள் தொடர்பான விமர்சனங்களிற்கு அப்பால் பெண்களின் கால மாற்றங்களுக்குள் எழுதுதல் அதன் தொடர்ச்சியைப் பேண முடிநதல் என்பதே முக்கியமானது. -நீண்ட காலத்திற்குப் பிறகு- உங்களது கவிதைகளை மூன்றாவது மனிதனில் படித்தபோதும் அதே உணர்வுதான். விமர்சனங்கள் எழுதுவதை நிறுத்திறதுக்கு இல்ல– ஃதொடர்ந்தும் எழுதுங்கள். முடிந்தால் மின்னஞ்சலிடுங்கள். நன்றி!
   16. ஃபஹீமாஜஹான் Says:
   April 20th, 2006 at 2:10 pm

   நன்றி.
   ஆத்மராஜா றூத் சந்திரிக்கா நன்றாக எழுதியவர்.மிக நீண்ட காலம் அவரது படைப்புக்களைக் காணவில்லை.எங்கே இருக்கிறார் எனவும் தெரியவில்லை.

   உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தர முடியுமா?
   jahan.faheema@gmail.com
   17. ranji Says:
   May 19th, 2006 at 2:47 pm

   குட்டி ரேவதி என்னுடன் பேசும் போது பகிமாவைப் பற்றி கூறியிருந்தார். குட்டி ரேவதி இலங்கை சென்றிருந்த போது யாத்ரா என்ற பத்திரிகையை பார்த்ததாகவும் அதில் பகிமாவின் கவிதைகள் வெளிவந்ததாகவும் அக்கவிதைகள் தன்னை பாதித்ததாகவும் என்னிடம் கூறி எனக்கும் அக்கவிதைகள் பற்றியும் பகிமாவைப் பற்றி அறிந்து கொள்ள தான் ஆவலாக உள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால் பனிக்குடம் வரு முன்னரே நான் பகிமாவுடன் தொடர்பு கொண்டு ஊடறுவுக்கு கவிதைகள் கேட்டுக் கொண்டேன் அதற்கு அனாரும் எனக்கு உதவி செய்திருந்தார். குட்டி ரேவதிக்கு பகிமாவைப் பற்றி வேறுஎந்த தகவலும் தெரியாது. அவரவர் வாசிப்புக்கு ஏற்பவே அவரவர் விமர்சனங்களை வைக்கிறார்கள் அல்லது தமக்கு தேவையானவர்களை தூக்கிப் பிடிப்பதும் மற்றவர்களை படு மோசமாக விமர்சிப்பதும் தான் இன்றைய இலக்கிய உலகம் கண்டு கொண்டுள்ளது. அதற்கு நான் பொடிச்சி நீங்கள் உட்பட எல்லோரும் விதிவிலக்கல்ல. பகிமா தயவு செய்து எழுதுவதை நிறுத்த வேண்டாம். விமர்சனங்கள் என்பது ஒரு நல்ல படைப்பாளியை உருவாக்க வேண்டுமே தவிர அழிக்க வேண்டுமென்பதற்கல்ல பொடிச்சியின் விமர்சனத்தில் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் இப்படியான விமர்சனங்களும் படைப்பாளிகளுக்கு தேவை அப்போது தான் நல்ல படைப்புக்களை படைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குட்டி ரேவதியின் ஈழ எழுத்தாளர்களின் வாசிப்பு பற்றி நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும். இப்படித்தான் பல எழுத்தாளர்கள் உள்ளார்கள். ஈழத்தில் எழுதும் பல நல்ல மலையக, மற்றும் வெண்ணிலா மலர்வியா போன்றவர்களும் உள்ளார்களே அவர்களை பற்றியெல்லாம் நாம் என்றுமே பேசியதுமில்லை.

   றஞ்சி
   18. ஃபஹீமாஜஹான் Says:
   May 19th, 2006 at 7:09 pm

   நன்றி றஞ்சி.காலம் நல்ல முடிவுகளைத் தரக்கூடும்.

  1. No trackbacks yet.

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

  %d bloggers like this: