Home > சிறுபான்மை அரசியல், பால்-முரண் > நீயும் ஒரு சிமோன் தி பூவா போல…..

நீயும் ஒரு சிமோன் தி பூவா போல…..

…ஒரு பெண்ணைப் பிடித்துள்ளதென்றால் அவளை நேரே படுக்க வாறியா என்று கேட்பதில் எந்தப் பிழையுமில்லை என்று ஒரு முற்போக்குவாதி சொன்ன ஞாபகம். ஆகவே நீங்கள் உங்கள்
பொண்டாட்டியைத் தவிர மற்ற எல்லாரிடமும் குறியை நீட்டிக் கொண்டு கேளுங்கள்.
தூஷணத்தால் கதையுங்கள். நாங்கள் என்ன உணர்வுகளற்ற ஜடங்கள் தானே.
உங்களைப் போன்ற மன்மதர்களுக்கு மாட்டேன் என்று சொல்வதே இந்த உலகத்தில் நாங்கள் செய்யும் பெரிய குற்றம் அல்லவா? இந்த உலகத்தில் அனுபவிப்பதற்காகவும் சிந்திப்பதற்காகவும் உள்ள ஒன்றே ஒன்று அதுதானே.
நீங்கள் எல்லாரும் என்னை ஒரு விபச்சாரியாக உருவாக்குவதற்கா ஆசைப்படுகிறீர்கள்.
உங்களால் விபச்சாரியாக உருவாக்கப்பட்டு நடுவீதியில் நிண்டு அபலையாய்ச் சிரிக்கும் அந்தப் பதினெட்டு வயதுப் பிள்ளையைப்
போல், நானும் நடுறோட்டில் நிண்டு உங்களைக் கைநீட்டி அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? ஆக மொத்தத்தில் இந்த உலகில் உள்ள ஆண்களாகிய நீங்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் என்ன? இந்த உடலை நிர்வாணமாக்கி நடுவீதியில் வைத்து உங்கள் எல்லோருக்குமாக பங்கிடப்படும் சுதந்திரத்தை வழங்குவதையா?
நீங்கள்தான் எவ்வளவு அற்புதமான மனிதர்கள். இங்கு என்னுணர்வு, என் விருப்பு, என் சுதந்திரம்… இவையெல்லாம் எதற்காக… ?

-சுந்தரி, சிறுகதை: “மூடுதிரை”, சரிநிகர், பெப்.25 – மார்ச் 10, 1999

-1-
றயாகரன் “இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்”
(18.01.2006) என்ற தலைப்பில் தமிழரங்கம் இணையத் தளத்தில் கட்டுரையொன்று எழுதியிருக்கிறார். அக் கட்டுரையின் சில பகுதிகளை முன்வைத்து, சில போக்குகள் குறித்து, உரையாடத் தோன்றுகிறது.

“நீயும் ஒரு சிமோன் தி பூவா போல…” – இத் தலைப்பிட்ட கதை, சக்தி சஞ்சிகையாற் தொகுக்கப்பட்ட, புகலிடப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பொன்றான புது உலகம் எமை நோக்கி (200?) இல் -தமிழ்நாட்டைச் சேர்ந்த காவேரி (லஷ்மி கண்ணன்) எழுதி- வெளியாகியிருந்தது.
தொகுப்பிலுள்ள குறிப்பிடத் தகுந்த கதைகளில் ஒன்று. அதனூடாக, எப் பகைப் புலத்திலோ, பெண்கள், பொதுச் சூழலுக்கு வருகிறபோது (இதில் ஒரு எழுத்தாளர்) அவர்களை வெளி சூழ் ஆணாதிகார உலகம் எப்படி வரவேற்கிறது – அதன் தந்திரங்கள், manipulations, இவை பற்றியதொரு தோற்றம் விரியும், எழுத்தில், சிந்தனையில், புத்தார்வத்துடன் வருகிற பெண்ணொருத்தியை அவளிலும் “பெரியவன்” “ஆண்” ‘நீயும் ஒரு சிமோன் போல’ என எதிர்கொண்டு அவளது உடலை மையங் கொள்வதைப் பற்றியதே கதை.
இப்படியாக, இலக்கிய/வாசிப்பு ஆர்வங்களை உடைய பெண்களால் –சிமோனோ அவரைப் போன்றதொருவரது பெயரோ இந்த வசனமோ– ஏதோ ஒரு வகையில் அவர்களைச் சூழ்ந்தவர்களிடமிருந்து எதிர்கொள்ளப் பட்டிருக்கும்.
தனிப்பட்டரீதியில், என்னை, பிரபலமான, பல பிற வாசகங்கள் போலவே, சிமோனினது -‘ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக ஆக்கப்படுகிறாள்’ போன்ற- வாசகங்களும் கடந்திருக்கின்றன. அதிலும், ‘மூன்றாமுலகத்தை’ச் சேர்ந்த, பாலியல் மட்டுமல்ல எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும் இருக்கிற இனமொன்றின் ஒரு பகுதியாய், இயல்பாகவே, சிமோன் என்கிற பெண் ஆகர்சித்ததில்லை (மனம் இணைய ஒத்த அலைகளோ அவருடன் பகிர ஒரு வரலாறோ இல்லை).
மாறாக, எத்தனை தடவைகள் படிக்கிறபோதும், மனித நேசிப்பால் ஆன்மாவை நிறைத்துப்போக என, நண்பருக்கான இறுதிக் கடிதத்தில், “
என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.” என்றெழுதிய ராஜனி போன்றதொரு பெண், அல்லது தன்னுடைய ‘மணிக்கரத்தால்’ “ஓ என் தேசமே- …வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணிந்துள்ளாய். நான் உனக்குக் கொடுப்பது என் உயிர் மட்டுமே” என்றெழுதிய சிவரமணியோ ஏற்படுத்திய கிளர்வை அறிவுஜீவிமட்ட பிரெஞ்சுப் பெண் ஒருவளான சிமோனிடம் உணர்ந்ததில்லை (அவரிடம் அதைத் தேடுவதே அவசியமற்றதும்தான்!).
படித்த
(A Transatlantic Love Affair: Letters to Nelson Algren – Simone de Beauvoir) அவரது ஒருபெரும் கட்டான(!) காதற் கடிதங்கள நூல் கோபத்தையே உண்டு பண்ணியது; ‘பெண்ணீயவாதி, இப்படி எழுதலாமா’ என்பதல்ல – அதூடாக மனம் ஒவ்வாமல் நுழைந்த அவரதான போலித்தனமும், பிற போலித்தனங்கள் தருகிற அருவருப்பையே தந்ததாலும். உலகளவிற் பல எழுத்தாளர்களும், சந்தர்ப்பம் வாய்க்கையில் சகல மனிதரும் செய்கிற/செய்யக்கூடியவற்றையே தமதுறவிலும் செய்து வந்த இரு நபர்களது உறவில், துரோகத்தின் வன்மம், பொறாமை, ஈகோ, போட்டி என சகலதும் இருந்தபோதும், அதெல்லாம் அற்ற, இலட்சியபூர்வமான உறவாக, மிதமானதாகப் புனைந்து கொண்டாடிக் கொண்டிருந்த மேற்கு, ஐரோப்பிய அறிவுஜீவிச் சமூகங்களும், இருவரது இறப்பின் பின்னும் வெளிவந்த கடிதங்களில் -அவர்களின் உறவுகளில் இருந்த- “தம்மதை ஒத்த” இயல்புகளைக் கண்டு அதிர்ந்துதான் போனார்கள். எல்லோரிற்கும் ஆர்வமேற்படுத்திறவகையானதொரு புதுமையான, ஒப்பந்தத்தில்/ஒப்பந்தமற்று, sartre-டன் இணைந்த வாழ்வுமுறையில், பலரும் கனவு காண்கிற சுதந்திர வாழ்வை வாழ்ந்த ஒரு பெண்ணாக அவர் வாழ்ந்தார். அப்படியே இருந்தும் இறந்தும் போனார். அவரைக் குறித்த மனப்பதிவுகளாய் அவரது இலக்கிய மற்றும் தத்துவத்திற்கான பங்களிப்புகளாகவே இருக்கின்றன.
தமது மண்ணில், தமது நிறத்தில், தமது சமூகத்தை பிரதிபலித்த, சமூகத்தை நேசித்து, சமத்துவ மிக்க விடியலைக் கனவுகண்ட பெண்களிடம் காணாத இயைபை இங்கு கண்டு சிமோனைப்போல ஆடைகளும், தலையலங்காரமும் என ஒரு கோலம் கொண்டு ‘
அடையாளங்களைக் காவுகிற’ வரிசையில் இணைகிற பெருங் கனவுகள் ஏதும் தம்மிடம் இல்லை என்று, தெட்டத் தெளிவாய் இருக்கிறவர்களிடமும், தம்போக்கில், “சிமோன் போல” “பெண்ணியம்” என ஒரு முத்திரையைக் குத்திவிட்டுப் போவார்கள். இங்கே, சிமோன் என்கிற ஐரோப்பிய திருஉரு பல் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஞாபகப் படுத்தப் படுவார்:
(1) (அனேகமாய்) அவரது பாலியற் தேர்வு;
open relationship – சிமோனாய் இரு என்பது அறிவார்த்தமான ஏதாவது செய்கிற சிமோன் அன்று, இவர்களைப் பெருஉவகைக்குட் தள்ளும், ~சுதந்திரமான வாழ்வை முன்னெடுத்திருக்கிற, பாலியல் சுதந்திரங்களை உடைய சிமோனாக இரு என்பதே செய்தி.
(2) (வாதத்திற்கென்று பார்த்தால்) சாதாரண சனங்களிற்குப் புரியாத -எளிமைப் படுத்தப்படாத- வரட்டு மொழியில், தமது ஆசா
ன்களின் வசனங்களை ஒப்புவித்துக்கொண்டிருப்பவர்கள், இவர்கள் முன்மாதிரியாய் (மட்டும்) வைத்திருக்கிற பிம்பங்கள்போலவே, சிமோன் போன்றதொருவளை முன்மாதிரியாய் வைத்திருக்கிற அவர்களை ஒத்த பெண்களிடம் “மேட்டுக்குடிப் பெண்ணியம் பேசாதே” –“படித்த, உயர் மட்டங்களில் பேசப்படுகிற, சிமோனெல்லாம் குப்பத்து முனியம்மாவிற்குப் புரியாது” என்று முடிப்பார்கள் (இதைக் கேட்கிறபோதெல்லாம் முனியம்மா என்ற பேரைக்கூட நீண்ட நெடுங் காலமாக -மாற்றமற்று- உபயோகித்துவருவதை நினைவுகூர்ந்து, கண்டனம் செய்ய மறக்கக்கூடாது!).

-2-
பாலியல் ஒடுக்குமறை என்பது ஒரு யதார்த்தமாகச் சூழ ‘இருக்கிற’போது, அதை மீறும் விழைபும் அந்த மீறலுக்கு துணையாகிற தந்திரங்கள், மோசடிகள், கயமைத்தனங்கள் என்பனவின் இருப்பும், யதார்த்தமானதே. ஆனால் எல்லாவிதமான ஒடுக்குமறைகளிற்கும் எதிரான குரல்களையும் மாற்றங்களையும் வரவேற்பதாய்ச் சொல்கிற, மனித உரிமைகளிற்கான குரல் கொடுப்பாளர்கள், “என்ற சொல்லப்படுகிற” முற்போக்காளர்கள், ‘இந்த’ விடயத்தில் மட்டும் “இரண்டு கை தட்டினால்தானே சத்தம்” என்கிற ரீதியான மகா கேவலமான புரிதலோடு தைரியமாய்(!) ‘நான்தான் முற்போக்காளன்’ ‘நான்தான் கலகக்காரன்’ ‘நான்தான் பெண்(ஈ)ணீயவாதி’ எனத் திரிவதாய் இருக்கிறார்கள், அன்றும் இன்றும் இனிமேலும் என, பெண்கள்தம் எதிர்காலத்தையெல்லாம் தம் ‘குப்பை’களைக் கூட்டி எரித்தபடி! ஆகவே றயாகரன் கட்டுரையெழுதக் காரணமான பின்னணிச் சம்பவமும் அதுடன் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பெயரும் இங்கே அவசியமற்றிருப்பதால் எடுத்தாழப் படவில்லை. ‘ஒரு பலாத்கார முயற்சி’ ‘பாலியல் அத்துமீறல்’ இப்படி ஒன்றிற்குக் கையெழுத்திட்டுக் கண்டனம் தெரிவிக்கிறபோதில், அதைச் செய்கிற புத்திசீவிகளான நபர்களது நியாயங்களும், ஜனநாயக உணர்வும், புரட்சிகர கருத்துகளும், இன்னொரு புறத்தில், எவ்வளவு அபத்தமானவையாய் இருக்கின்றன என்பதே குறிப்பிட விரும்புவது.

றயாகரனது கட்டுரையிலிருந்து:
…பாரிசில் நிதர்சினி என்ற குழந்தையை பாலியல் வன்முறைக்குட்படுத்தி கற்பழித்துக் கொன்ற போது கண்டித்தவர்கள் யார்? யாழில் தரிசினி பாலியல் வன்முறைக்குள்ளான கற்பழிக்கப்பட்ட போது கண்டித்தவர்கள் யார்? அனைவரும் ஆணாதிக்கவாதிகள் தான். அங்கும் கண்டனம். இங்கும் அதே கண்டனங்கள். இயல்பான ஆணாதிக்க சமூக அமைப்பில், இதை ஆணாதிக்கவாதிகளே கண்டிக்கின்றனர். இது ஒரு விசித்திரமானது தான். உலகின் இந்தியாவின் மலிவு வர்த்தக இதழ்களை வாசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை கண்டிக்கின்றனர். ஆனால் அந்த சஞ்சிகை ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்று உள்ளடகத்தில் வெளிவருகின்றது. இதுவே உலக இந்திய சினிமா. கண்டனங்கள் பொதுவான ஆணாதிக்க ஒட்டத்தில் அதன் போக்கில் வெளிவருகின்றன. …
… இலக்கியவாதிகளே இலக்கியம் மூலம் பாலியல் வதைகளில் ஈடுபட முடியாதோ? கையெழுத்திட்ட சிலர், அதையே தொழில் முறையாக கொண்டு, இலக்கியம் பேசி செய்கின்றனர். மானம் கெட்டவர்களே! முற்போக்கு பேசி இதைச் செய்ய முடியாதோ? உங்கள் இலக்கிய வரலாற்றில் சிலர் இதைச் செய்திருக்கின்றார்கள், செய்கிறார்கள். இலக்கியத்தின் பெயரிலும், உலகம் முழுக்க பெண்கள் மீதான வன்முறை பற்றி பல வரலாறுகள் உண்டு.
நீங்கள் தர்க்கித்து பாதுகாக்கும் மற்றொரு வாதம், பெண் தானாகவே இணங்கிப் போனால் எல்லாம் சரி என்கின்ற ஒரு வாதம். என்ன பெண்ணியம்! என்ன அரசியல்! என்ன முற்போக்கு!
பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது.
… இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான். இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில் இருந்து இணங்கிப் போவதில்லை. இப்படித் தான் இணங்கிப் போதல் என்பது, வாழ்வில் பல கோணத்தில் நிகழ்கின்றது.
சினிமாவில் நடிக்க இணங்கிப் போகும் நடிகைகள், வேலைக்காக உயர் அதிகாரியுடன் இணங்கிப் போகும் பெண்கள், வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இணங்கிப் போகும் அபலைகள், வீட்டில் பெரியவர்களுக்கு இணங்கிப் போகும் வீட்டில் உள்ள பெண்கள், சாமியாருக்கு இணங்கிப் போகும் பக்தியுள்ள பெண்கள், உயர்சாதிய நிலப்பிரவுக்கு இணங்கிப் போகும் தலித் தாழ்ந்த சாதிப் பெண்கள் அல்லது கூலிப் பெண்கள், காதலனுக்கு இணங்கிப் போன காதலித்து கைவிடப்பட்ட பெண், இலக்கியத்தின் பெயரில் இணங்கிப் போன பெண், இப்படி இணங்கிப் போகும் ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அபலைகளே. ஆணாதிக்கம் என்ற பலமான சமூக அமைப்பில், பலவீனமான பெண்கள் இணங்கிப் போனால் அல்லது இணங்க வைக்கப்பட்டால் அதற்கான சமூக காரணத்தை கேள்விக்குள்ளாக்காது நுகர விரும்புபவர்கள் தான், இந்த இலக்கியவாதிகள். உலகெங்கும் பலமுள்ளவர்கள் முன்னால், பெண்கள் இணங்கிப் போகின்றனர். இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைப்பில் இப்படித்தான் உள்ளது. கணிசமான திருமணங்கள் கூட இணங்கிப் போகும் வடிவத்தில் நிகழ்கின்றன. இணங்கிப் போதல் கூட, காலத்தால் பெண் வன்முறை சார்ந்ததாக உணர்வதை நாம் கண்டுகொள்ள மறுக்கின்றோம். இது எமது அற்பத்தனமாகும். குறித்த காலத்தில் தமது அறியாமை, மற்றும் தமது பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் தமது பாலியல் வக்கிரத்தை தீர்த்ததை பல பெண்கள் காலத்தால் உணருகின்றனர். புலம்பெயர் இலக்கியத்தில் அப்படி பல பெண்கள் உணர்ந்தனர். இங்கு எதிர்மறையிலும் கூட பெண்கள் உணர்ந்துள்ளனர். இலக்கியத்தின் பெயரில் அரசியல் பெயரில் தவறாக வழிநடத்தப்பட்டு, தமது பாலியல் தேவையை ஆண்கள் நுகர்ந்ததை, காலத்தால் பல பெண்கள் உணருகின்றனர். பெண்களை தவறாக வழிநடத்தி, பெண்ணை இணங்க வைப்பது அன்றாடம் நடக்கின்றது. பெண்கள் காலத்தால் அனுபவத்தால் இதை உணர்ந்து கொள்கின்றாள். இதை தன் மீதான வன்முறையாகவே அவள் கருதுகின்றாள். இணங்கவைத்து காதலித்து கைவிடப்படும் ஒவ்வொரு பெண்ணும் கூட, இதை தெளிவாக உணருகின்றாள். இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிக பாரதூரமானது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இலக்கியவாதிகள் தமது சொந்த சுயநலம் சார்ந்த கோட்பாட்டுக்கு இணங்க, கருத்தியல் ரீதியாக இணங்க வைக்கும் மோசடியான வன்முறையை ஆதரிக்கின்றனர்.
இணக்கம், இணங்கிப் போதல் போதையில், இசைவெறியில் கூட நிகழ்கின்றது. இதை டிஸ்கோவில் சாதாரணமாக காணமுடியும். இதுவே இலக்கியத்திலும் நடக்கின்றது. இதற்கு வெளியில் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் இணங்கி சேர்ந்து வாழும் போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. இது இன்றி மனிதன் இல்லை. பொதுவாக இலக்கியம் மற்றும் அரசியல் பேசும் சிலர் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி, பெண்களை நுகரும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். முரண்பாட்டின் ஒரு தொங்கலில் தொடங்கி பெண்ணை தமக்கு இணங்க வைக்கும் நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள் கொண்டு வந்து, தமது தேவைக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்குகின்றனர். இதைத் தான் சாமிமாரும் செய்கின்றனர். மனிதனின் பலவீனங்கள் மீதான உளவியல் ரீதியான சிதைவை, தமது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துவது, சமூக இயக்கத்தில் பொதுவாக காணப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் என்ற கோட்பாட்டைக் கொண்டு, இதைத் தர்க்கரீதியாக இலக்கியவாதிகள் தமக்கு சார்பாக பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் தாங்களாக இயங்கி இணங்கிப் போதல் என்பது கூட ஆணாதிக்க பாலியலையே நியாயப்படுத்துகின்றது. பெண்ணின் அறியாமையை, ஆணாதிக்க அமைப்பின் பாதிப்பால் ஏற்படும் துயரத்தையும், அவர்களின் பலவீனத்தை இணங்கவைத்து பாலியல் ரீதியாக நுகர்வது ஆணாதிக்கம் தான். இதற்குள் ஒரு வன்முறை உண்டு. இலக்கியத்தின் பெயரில், வாழ்வு சார்ந்த ஒழுக்கம் பற்றி கேள்விகள் ஊடாக, பெண்ணை இணங்க வைத்து பாலியல் ரீதியாக உறவு கொள்வதும் பாலியல் வன்முறை தான்.
இணங்கவைத்தல் என்பது இந்த சமூக அமைப்பில் மோசடிகளால், நேர்மையீனத்தால், நயவஞ்சகத்தால், பலத்தால், அதிகாரத்தால், சமூக ஆளுமையால் எப்போதும் அப்பாவிகள் மீது பெருமளவில் நிகழ்கின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள் அதிகளவில் இணங்க வைக்கும் இந்த வன்முறைக்குள் பாதிக்கப்படுகின்றனர். இது சந்தை முதல் பெண்ணின் உடலை நுகர்தல் வரை இதுவே இன்றைய எதார்த்தமாகும்.
ஒரு பெண் இணங்கிப் போதல் என்பது கவர்ச்சி, பின் தங்கிய அறிவியல், சமூகப் பார்வை இன்மை, பலவீனங்கள், சொந்த பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், நம்பிக்கை மோசடிகள் குறிப்பாக இதை தீர்மானிக்கின்றது. இதைச் சமூகம் பொதுவான நுகர்வு பண்பாடாக உருவாக்குகின்றது. திரும்பிய இடமெல்லாம் பாலியல் ஊடாகவே உலகம் காட்டப்படுகின்றது. பாலியலே முதன்மையான செய்தியாக, மனித இருத்தலின் மையக் கூறாக காட்டப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் இயல்பானதாக, நியாயமானதாக காட்டப்படுகின்றது. விளம்பரம் முதல் சினிமா வரை இதையே செய்தியாக காட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நுகர்வின் எல்லைக்குள் இணங்கி உறவு கொள்வதை, இந்த புலம பெயர் இலக்கிய குஞ்சுகள் பெண்ணியம் என்கின்றனர். ஒரு பெண் இணங்கி சேர்ந்து வாழ்தல் என்பது வேறனாது.
… இணங்க வைப்பதற்காக அன்றாடம் மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க ஆண்கள் சமூகம் தான் இது. தமிழ் மக்களை தேசியத்தின் பின் இணங்கவைக்க, எப்படி குறுந் தேசியம் முனைகின்றதோ, அப்படித்தான் இதுவும். இந்த முயற்சியில் பெண்கள் விழிப்புறும் போது, பலர் தோற்றுப் போகின்றனர்.
…. யார் இந்தக் கோட்பாடுகளை சொன்னாலும், தாம் தெரிவு செய்துகொண்டு ஆணுடன் இணங்கி வாழ்ந்தவர்கள் தவிர, இணங்க வைத்து நுகர்ந்த பெண்களின் குமுறல்களை இட்டு இதில் கையெழுத்திட்டவர்களுக்கு ஒரு துளி கூட அக்கறையிருப்பதில்லை. அங்கும் ஒரு மோசடி, கயமத்தனம், ஏமாற்றுதல் இருந்தது என்பதை, இந்த வன்முறை எதிர்ப்பாளருக்கு தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தையும் முதுகுக்குப் பின்னால், அரட்டை அடிப்பவர்கள் தான் நீங்கள்.

ந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில், ‘நிதர்சினி என்ற குழந்தை கற்பழிப்பு’ எனவெல்லாம், திரும்பத் திரும்ப எழுதப்படுவதைப் படிக்கையில்-
ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான விடுதலை என்கிற பதாகையைத் தூக்கியுள்ள ‘பழமை பேணாத’ கோட்பாடுகளைப் பேசுகிற நபர்கள், ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடக்கிற ‘வர்க்கங்கள்’ கிளர்ந்தெழ வேண்டுகிறவர்கள், கற்பு போன்ற கருத்தாக்கங்களை வளர்த்து வளர்த்து, பெண்ணை அடக்கிற ஆணாதிகார மொழியிலுள்ள ஒரு வார்த்தைக்குப் பதிலாய் பதில் வார்த்தை -ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டவை- யை உபயோகிக்க முடியாமல் இருக்கிற (மெத்?)தனம் – அயர்ச்சியையே தருகிறது (அதுபோலவே தாழ்ந்த சாதி என்பதை – தலித் என்றெழுதப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாததும்).
எனினும், இப்படியான விவாதங்களின்போது (மட்டும்), இக் கட்டுரை பேசுகிற பல விடயங்களை விவாதிக்க விரும்பாதவர்கள், இங்கே (மேலே) எடுத்தாழுகிற அவரது கருத்துக்களை அல்ல, கற்பு/கற்பழிப்பு இத்தகைய சொல்லாடல்களையே முன்னிறுத்தி, அவர் எழுப்பிற பிற கேள்விகளை எதிர்கொள்ளார்கள். இந்தச் சொற்களின் அரசியலில்தான் படு அக்கறையாய் இருப்பார்கள். அதனாற்தானோ என்னவோ, இந்த மாதிரி கேள்விகளை – அரசியல் ரீதியாகச் சரியாகச் சிந்திக்கிறதான (*’தமது குறிகளாலேயே சிந்திக்கிற’) நபர்களால் எழுப்ப முடிந்ததில்லை.
றயாகரனின் கட்டுரையிலிருந்து, மரபான சொல்லாடல்களை மீறி, அவரது பெண்ணிலைப்பட்ட வாதத்தை, அக்கறையைப் பிரித்தெடுத்துக் கொள்வது என்பது இலகுவாய் இருக்கிறது. புத்தம் ‘புது’மொழியில் வசீகரிக்கப் படுகிற, ஏதொரு இயக்கத்தால் கவரப்படுற ஒரு பருவத்து இளைஞர்போல, தற்கொலைப்/போராளிகள்போல, புதிய புரட்சிகர (மார்க்சிய) க்கட்சி கருத்துக்களால் கவரப்படுகிற பதின்மத்தின் மத்தியிலுள்ள பையன்கள் போல, “நாட்டுப்பற்று” கக்கும் படம் பார்த்து, “எதிரிகளால்” தம் நாட்டுக் கொடி எரிய மெய்சிலிர்ந்து கண்ணீர் மல்கி இராணுவத்தில் சேர்கிற “வீரர்கள்” போல – ஒத்த வயதில் பெண்கள், பெண் விடுதலை என்கிற கோட்பாட்டால் கவரப் படுவார்கள். மேற்குறிப்பிட்டவர்களை (“பெரிய அளவில்”) துஸ்பிரயோகம் செய்கிறதை ஒத்ததே –மிகவும் ஈர்க்கப்படக்கூடியராய் இருக்கும்- இவர்களை உபயோகித்தலும் ஆகும். சிறுவர்களைச் செய்கிற மூளைச் சலவைகள் பற்றி எல்லாம் அக்கறைப் படுகிற கொள்கையாளர்களால் நிறை இலக்கிய/எந்த சூழலிலும் இது பேசப்படுவதில்லை. ஏனெனில் கொள்கைகளைக் காவுகிறவர்கள் புறத் தோற்றத்தில் அதைக் காவ விழைகிற அளவிற்கு அகத்தில் மாற்றமடைய நினைப்பதில்லை (“தேவை” இல்லை!). அதனாலேயே ‘இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிகப் பாரதூரமானது‘ என்பது பொருட்டற்றதாகி விடுகிறது; அதைப் பேசாமல், பாலியல் வன்புணர்வை, பலாத்கார அத்துமீறலை மட்டுமே எதிர்ப்பது எளிதானதாயிருக்கிறது.

காவேரியின் குறிப்பிட்ட கதை வெளிவந்தபோது உடனடியாக அது ‘மாற்றுப் பத்திரிகையான’ சரிநிகரில் மறுபிரசுரமானது. றயாகரனது கட்டுரை கூறுகிறபடி சரிநிகரை ஒத்த இந்த நிறுவனங்களெல்லாம் குறிப்பிட்ட வகை அரசியலை உடையனரான ஆட்களை ‘தன் தரப்பில்’ கொண்டாடியபடியும், அப்படியிருக்கக் கனவுகாண்கிற ஒரு தலைமுறையை தன்னுடன் சேர்த்து உருவாக்கிக்கொண்டும் இருந்தபடியுமே! ஆனால் எப்போதெல்லாம் அவற்றுக்கெதிரான குரல்கள் பதிவாகிறபோதும் தவறாமல் அதையும் எடுத்து போட்டு பத்திரிகையின் பக்கங்களிடையே தங்களது முற்போக்குத்தனத்தையும் சரி பார்த்துக் கொள்ளுவார்கள். இப்படியாய் வன்முறைகளை எதிர்க்கிற நிறுவனங்கள் ஆணாதிக்க நிறுவனங்களே என்பது முரண்நகைதான்.
அத்தகைய நிறுவனமொன்றிற்கு உள்ளிருந்தே “சுந்தரி” என்கிற பெயரில் எழுதிய பெண்ணின் படைப்புக்கள் அத்தகைய சூழலைக் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்திருந்தன. அவரது கதைகள் பிரசுரமான அதே பத்திரிகையின் பக்கங்களில் எழுதியிருக்கக்கூடிய அத்தகைய பாசாங்காளர்களை நோக்கிய வசையா/பாடல்களாகவே அவை இருந்தன.

-3-
இத்தகைய விடயத்தைப் பேசுகிறபோது பெயர்களை வீசி விடுவது முக்கியமற்றது; –தாங்கள் யார் யார் எப்படிப் பாதிக்கப்பட்டோம் என- சம்பந்தப்பட்ட நபர்கள் வந்து வாக்குமூலங்கள் தரவேண்டி இருப்பது அவசியமே அற்றது. ஒருவரோ பலரோ பிரச்சினையின் பொதுத்தன்மை பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் உரையாடுவதற்கு , நபர்களோ பெயர்களோ அவசியங் கிடையாது. றயாகரன், சிக்கலானதொரு பிரச்சினையை பொதுவில் –அதரப் பழசான சொல்லாடல்களின் தொந்தரவையும் மீறி– தெளிவான விளக்கங்களுடன் முன்வைத்திருக்கிறார். இதைப் படிக்கையில் வருகிற -“உபயோகிக்கப்பட்ட” பெண்களின் பட்டியல்/பெயர்களைத் தந்தால்தான் நம்புவோம் என்றொரு- “ஆர்வத்திற்கு” (பிறகு தரப்பட்ட பெயரை உடைய பெண்ணைப் பற்றி வெவ்வேறு பெயர்களில் வந்து யோக்கியம் பேச!) யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இதில் பேசப்பட்டது ‘பெயர்கள்’ தந்து ‘நம்பவைக்கவேண்டிய’ தலையாயத் தேவை எதையும் கொண்டிராதது. மாறாக ஆண்கள் எவரையும் தொந்தரவூட்டாத கோட்பாடு தான், எதிர் நிறுத்தப்படுகிறது.
மேலும், இந்த மாதிரி விமர்சனங்களின் மையப் பிரச்சினை – அது ‘ஒழுக்க’வாதமாக வெளிப்பட்டு விடுகிற தன்மை இருக்கிறது. அந்தவகையில், கட்டுரையில் வருகிற, மரபான வார்த்தைப் பிரயோகங்கள் – ஒழுக்க ‘சீர்’ குலைவு, விபச்சாரம், சோரம்போதல், ஒழுக்கக்கேடு, சீரழிவு, காமம்-வக்கிரம், நீலப்படங்கள் – டிஸ்கோ; இவற்றின் உள்பொருளாக இருக்கிற, இவையற்ற ‘நேரான’ ‘ஒழுக்கமான’ உலகம் வேண்டி நிற்கிற மரபான விருப்பையும் பதிகிறது. ஆனால்: ஒழுக்கம் அல்ல, நேர்மை/உண்மை என்ற சொற்கள் கூட வேண்டாம்; ஆனால், “உபயோகப்படுத்தல்” (அல்லது உங்களுக்குப் பிடித்த சொல் ‘சுரண்டல்’ (exploitation) இருக்கிற இடத்தில் முற்போக்காளர்கள் புல்லரித்துப் போகிற “சமத்துவம்” சாத்தியமில்லை என்பதே விசயம்.

றயாகரன் உபயோகிக்கிற, பொறுக்கித்தனம் என்பதிற்கான மாற்று சொல்லாக (பாலியல்ரீதியாக) சுரண்டுபவர்கள் என்பதைப் போட்டுப் பார்த்தால், உடம்பு, அதன் சீரழிவு என்பதாய் ஒழுக்கமும், அதைத் துஸ்பிரயோகம் செய்வது ஏற்படுத்துகிற மனஉளைச்சலை அச் சுரண்டல் எடுக்கிற காலத்தை அந்தக் காலம் உறிஞ்சிற எல்லா வகையான சக்தி இழப்பை – உலகின் சமத்துவ விரும்பிகளாய் இருப்பதாய் நம்பித் திரிகிறவர் நலன்களை முன்னிறுத்தியபடி, “பொறுத்து”/”சகித்து”க்கொண்டு, அதைப் ‘பொருட்படுத்தாமல்’ இருக்க வேண்டும் என்பதா சமத்துவவிரும்பிகளின் எதிர்பார்ப்பு? தொழிலகங்களில், பொதுவிடங்களில் எதிர்கொள்கிற பாலியல் சொற் துன்புறுத்தல்கள்/தொந்தரவுகளைப் போல அடையாளப்படுத்தப் பட வேண்டிய வன்முறையே இதுவும்.

ற்றப்படி, – ஆண்கள் – “எல்லோரையும் அப்பிடி சொல்ல முடியாதுதான்.” அதுபோல, பெண்கள் – ‘எல்லோரையும்’ இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்போல ‘தொனி’ப்பட எழுதுவதில் சிலருக்குப் பிரச்சினையானதாய் இருக்கிறது. இங்கே சொல்ல வேண்டியது: இத்தகைய வன்முறை, ஒரே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தாலும் வன்முறை வன்முறையே. மேலும், அப்படிப் ‘பொது’ப்படுத்தி எழுதினால், புரட்சிகரமான சூழலை கொண்டிருப்பவர்களிற்கு அது ஏன் பிரச்சினை தர வேண்டும்?! அத் தொனி எதனை மையங் கொள்கிறது?
-0-

படம் நன்றி

Advertisements
 1. Anonymous
  February 3, 2006 at 1:34 am

  well said

 2. தமி..
  February 4, 2006 at 2:22 pm

  அருமை பொடிச்சி..

 3. Tamil Circle
 4. peddai
  April 18, 2009 at 3:56 am

  # மதி கந்தசாமி Says:
  February 23rd, 2006 at 11:46 pm

  மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி பொடிச்சி.

  பத்தி பிரித்தலைக் கொஞ்சம் கவனியுங்கள் ப்ளீஸ். அதே போல இந்த இடுகையின் தொடக்கத்தில் மேற்கோளிட்ட பத்தியையும் கொஞ்சம் பார்த்து format செய்தால் நன்றாக இருக்கும்.

  எல்லாம் சின்னச்சின்ன விதயங்கள்தாம். படிப்பனுபவத்திற்குத் தடையில்லைதான். ஆனாலும் மெருகேற்றும் விதயம்.

  நன்றி.

  -மதி
  # DISPASSIONATED DJ – » ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் Says:
  March 6th, 2006 at 11:52 am

  […] பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளை பதிவு செய்ய முயல்கின்றவர்கள் என்றளவில் கறுப்பி, பத்மா (தேன்துளி), பொடிச்சி, நிரூபா போன்றவர்களைக் குறிப்பிடவேண்டும். கறுப்பியின் சில கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும், எதற்கும் பயப்பிடாமல் பல விடயங்களை -முக்கியமாய்- புலம்பெயர் வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பத்மாவின் துறைசார்ந்த அக்கறையும் தேர்வும் இவை குறித்த விடயங்களில் இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு எழுதியது மட்டுமில்லாது, தனது நோக்கில் தீர்வுகளையும் முன்வைக்கின்றார். அதேபோன்று பொடிச்சி, இதுவரை நாம் பீடங்களில் அமர்த்தி ‘அழகு’ பார்த்துக்கொண்டிருந்த இலக்கியமேதாவிகளை பெண்களின் பார்வையில் கேள்விப்படுத்தியிருக்கின்றார். அவர் கடைசியாக எழுதிய ஒரு பதிவு -சற்று நீண்டதாக இருந்தாலும்- மிக முக்கியமானது. நிரூபாவின் கதைகளில் பல குழந்தைகள் மீது நமது சமூகம் நடத்துகின்ற வன்முறையைப் பற்றிக்கூறுகின்றன. ‘சுணைக்கிது’ என்கின்ற அவரது அணமைய வெளியீடான தொகுப்புக்கூட குழந்தைகள் மீதான வன்முறையை உள்ளடக்கிய கதைகளைத்தான் அடக்கியிருக்கின்றன என்று கேள்விப்படுகின்றேன். […]
  # easwary Says:
  March 6th, 2006 at 9:53 pm

  well done .
  # கில்லி – Gilli » Simone de Beauvoir – Podichi Says:
  April 8th, 2006 at 5:30 am

  […] மேலே வாசிக்க… […]
  # DISPASSIONATED DJ » Blog Archive » ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் Says:
  September 21st, 2006 at 10:30 am

  […] பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளை பதிவு செய்ய முயல்கின்றவர்கள் என்றளவில் கறுப்பி, பத்மா (தேன்துளி), பொடிச்சி, நிரூபா போன்றவர்களைக் குறிப்பிடவேண்டும். கறுப்பியின் சில கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும், எதற்கும் பயப்பிடாமல் பல விடயங்களை -முக்கியமாய்- புலம்பெயர் வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பத்மாவின் துறைசார்ந்த அக்கறையும் தேர்வும் இவை குறித்த விடயங்களில் இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு எழுதியது மட்டுமில்லாது, தனது நோக்கில் தீர்வுகளையும் முன்வைக்கின்றார். அதேபோன்று பொடிச்சி, இதுவரை நாம் பீடங்களில் அமர்த்தி ‘அழகு’ பார்த்துக்கொண்டிருந்த இலக்கியமேதாவிகளை பெண்களின் பார்வையில் கேள்விப்படுத்துகின்றார். அவர் கடைசியாக எழுதிய ஒரு பதிவு -சற்று நீண்டதாக இருந்தாலும்- மிக முக்கியமானது. நிரூபாவின் கதைகளில் பல குழந்தைகள் மீது நமது சமூகம் நடத்துகின்ற வன்முறையைப் பற்றிக்கூறுகின்றன. ‘சுணைக்கிது’ என்கின்ற அவரது அணமைய வெளியீடான தொகுப்புக்கூட குழந்தைகள் மீதான வன்முறையை உள்ளடக்கிய கதைகளைத்தான் அதிகம் அடக்கியிருக்கின்றது என்று கேள்விப்படுகின்றேன். […]

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: