Archive

Archive for December 29, 2005

மூன்றாவது மனிதனின்…

December 29, 2005 4 comments

ஆக்கபூர்வமான முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்!

நீண்டகால இடைவெளியின் பின், மீளவும் “மூன்றாவது மனிதன்” சஞ்சிகையை வெளிக்கொணர உத்தேசித்துள்ளோம்!

ஈழத்து தமிழ் கலை இலக்கிய சமூகத் தளங்களில், அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடுவதற்கான களம் இன்மைபற்றிய கவலையை நமது தமிழ்ச் சூழலில் அக்கறையுள்ள சக்திகளிடமிருந்து பல்வேறு தடவைகள் கேட்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய கவலையும் நிலைமையும், தனிமனிதர்களுடைய அங்கலாய்ப்பு மட்டுமன்று, ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இலக்கியத்தின் பின்னடைவு என்றே கொள்ளப்பட வேண்டியுள்ளது.

கலை இலக்கிய நண்பர்களுடனான உரையாடலின் பின், மூன்றாவது மனிதனை வெளிக்கொண்டு வருவதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவரவுள்ளது. ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் உயிர்வாழ்வும், அதன் காத்திரமும் அதன் பேசுபொருளிலேயே (படைப்புகள்) தங்கி உள்ளது என்பதை நாமறிவோம்!

படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், அக்கறை கொண்ட வாசகர்களின் ஒருமித்த பங்களிப்பே, நமது முயற்சியை சாத்தியப்படுத்தும். தொடர்ச்சியான உரையாடலும், விரைவான பிரசுர வருகையும் இன்று அவசியமாகி உள்ளது.

படைப்புகளை, கருத்துக்களை எமக்கு ஜனவரி 10ம் திகதிக்கு முன் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும் கீழ்வரும் குறிப்பு தங்களுக்குதவும்!

617, Awisawella Road,

Wellampitiya – Sri Lanka.

Tel: 077 3131627

Email: http://www.blogger.com/thirdmanpublication@yahoo.com

நன்றி: ஊடறு

———————————————————————————————-
லங்கையிலிருந்து வந்த காத்திரமான கலை-இலக்கிய (அரசியல்) சஞ்சிகை என்றவகையில் இதன் மீள்வருகை மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், ஏனைய தேசீய இனப்பிரிவுகளுள் மூன்றாவதாக உள்ள இனத்தினைக் குறிப்பதான “மூன்றாவது மனிதன்” என்ற அடையாளப் பெயரில்/குரலில் கொழும்பிலிருந்து வெளிவந்தது.
ஒவ்வொருமுறையும் மூ.ம. படிக்கக் கிடைக்கிறபோது, மூன்றாவது மனிதன்(இற்கு மட்டும்)தானா எனக் கேட்டுக்கொள்வதுண்டு.. ஒரு சமூகத்தில் அந்நியப்பட்டிருக்கிற எல்லாவகையான மூன்றாம் மனிதர்களிற்கும் பொருந்தக்கூடிய ஒன்றே இது. அந்த வகையில வன்னியிலிருந்தோ மட்டக்களப்பிலிருந்தோ எழுதுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை, அங்கிருந்தெழுதுகிற புதிய எழுத்தாளர்களை அனேகமாக மூன்றாவது மனிதனூடாகவே (எனக்குப்) படிக்கக் கிடைத்தது.

ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளுடைய நேர்காணல்கள், விவாதங்கள் என கனதியான உள்ளடக்கங்களுடன், பௌசரை ஆசிரியராய்க் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவருகிற “மூன்றாவது மனிதன்” புலம்பெயர் எழுத்தாளர்களை விட ஈழத்திலிருந்து வருகிற படைப்புகளையே முன்னிலைப்படுத்துவது குறிப்பிடப்படவேண்டிய அம்சம்.
வுழமையான இலக்கிய சஞ்சிகைகளிற்குரிய ‘இயல்பாய்’ தனிநபர்களது இயலுமைகளுக்குள்ளாலேயே அவை வெளிவரவேண்டி இருப்பதாலும், பொறுப்பீனங்களாலும் இதழ்கள் வெளிவருவதும் இடையில் நின்றுவிடுவதுமே இயல்பாக இருக்கிறது.
“மூன்றாவது மனிதன்” – ஈழத்து இலக்கியத்தில் ஆர்வமுடைய இந்திய மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியதொரு குரல்.
———————————————————————————————-