Home > Uncategorized > வாழ்ந்து வருதலின் குரல்கள் I

வாழ்ந்து வருதலின் குரல்கள் I

—–(பாடல் கேட்க)——-
மாயா ஆஞ்ஜலோவின் பேட்டியொன்று படித்தபிறகு, அதில் அவர் குறிப்பிட்டிருந்த, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் துயர் பாடல்களொன்றின் வரி பதிந்துபோயிருந்தது – “நான் மிகவும் கீழவாய் இருந்தேன் ஆனால் எழுதல் என்பது என் சிந்தையோடு இருந்தது” – “I was down so low, gettin’ up stayed on my mind.” வாகனத்தில் வெளியில் போகிற சமயம் ஒருபோதெனிலும் கேட்காமல் வரமுடியாதபடிக்கு CHUM FM இல் மெலிஷாவின் புதிய ஹிற் பாடல்கள் போகின்றன. நான் குறிப்பிடுவது பாடகர் Tom Petty இன் Damn The Torpedoes (1979) ஆல்பத்தில் வந்த பாடலின் மீள்பாடல். சென்ற வருடம், தொலைக்காட்சியில் இடைச் செய்தியாய் மெலிஷா எத்திறிட்ஜிற்கு மார்புப் புற்றுநோய் எனத் தகவல், பிறகிவ் வருடம் cancer-free ஆய் ஒட்டவெட்டியமுடியுடன் அதே எழுச்சியுடன், தனது புதிய ஆல்பத்தில் பிரபலமான பாடல்களுடன்… சமீபத்தில் ஓப்றா வின்ஃபீறீ நிகழ்ச்சியில் கூட வந்து பாடியிருந்தார். மெலிஷாவை எதிர்கொள்கையில் எல்லாம் “நான் ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ படாத இடத்தில் இருந்தேன்” என்பதாக அவளே ஒலிப்பதாகத் தோன்றும். அவளொரு குரல்; காதல்வசப்படுவதற்குரிய குரல் (அதைத்தான் raspy rock voice என்கிறார்கள் போலும்!) அது ஊட்டுகிற உணர்வுகளைச் சொல்லி மாளாது – ஆனால் இது மெலிஷாவைப் பற்றியது அல்ல. இது வாழ்ந்து வருதல் பற்றியது. வாழ்ந்து வருதல். அனர்த்தங்களின் ஊடாக அர்த்தங்களைத் தேடிக்கொண்டும் மனுசர் வாழ்வது தொடர்பாக…

இந்தப் பாடல் ‘நாம் (இணைகள்) இறுக்கத்துள் வாழ வேண்டியதில்லை; ஒரு அகதியைப்போல…’ என்று தொடங்குகிறதா, இந்த Refugee என்ற சொல் வாகனத்துள் ஒவ்வொருமுறை கேட்கிறபோதும் அதிர்வுண்டாக்கிக் கொண்டிருந்தது (ரொறன்ரோ பல்கலாசார வானொலி ஒன்றின் ஆங்கில அறிவிப்பாளர், “உன்னுடைய இசையை நீ எந்த வகைப்பாட்டிற்குள் அடக்குவாய், Rap? Reggae அல்லது?” என்று கேட்டபோது மாயா அருட்பிரகாசர் “Refugee music” என்றபோதும் அதே துளைப்பு). Seek asylum/ political refugee /fled exile/ granted asylum– இப்படி நிறைய நிறைய உதிரிச் செய்திகளாய் பார்ப்போம் நாங்கள் தினசரிகளில், இணையத்தில், தொலைக்காட்சிச் செய்திகளில்… எவ்வொரு அர்த்தத்தையும் தராது -ஊடகங்களால் நாம் பழக்கப்பட்டுப்போன வன்முறைகள்போல- கடந்துசெல்கிற அச் சொற்களின் நிகழ்காலம் பெருநகரங்களின் விலக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத வீட்டின்/மனதின் மூலைகளில் தன்னை அழுத்திக்கொண்டிருக்கும்.

இப் பாடல் பல்வேறு தேச எல்லைகள் கடந்து வந்த மனிதர்கள், இடையில் குளிரிலும் பனியிலும் விறைத்து இறந்துபோனவர்கள், பயணமுகவர்கள் உளைச்சல் பாலியல் தொந்தரவுகள் கடந்து வந்து கணவன்களால் சந்தேகிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறவர்கள், கடந்துவந்த எல்லைகளில் எதிர்கொண்டவை குறித்த பிறழ்வுகளில் மனவதையுண்டவர்கள் பற்றிய -உள்ளே மறந்து தங்கிய- நினைவுகளிற்கு அழைத்துச் செல்கிறது. இது தனியொரு இனத்துக்கேயுரித்தானது அல்ல; போர் சூறையாடும் எல்லாத் தேசங்களிலிருந்தும் அப்புலங்களிற்குரிய மக்களின் குரலானது ஒலிக்கிறது.
தொழிற்சாலைகள்
சிறைச்சாலைகள்
எல்லை கடப்புகள்
மனநலமனைகள் – எங்கும்.
பொஸ்னிய அகதிகள். பாலஸ்தீனிய, ஈராக்கிய, ஆஃப்கான் அகதிகள், பாலியல் வன்புணரப்படட அகதிகள். அரசியல் அகதிகள்…
அப்போது எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி ரொறன்டோப் பெரும்பாக மருத்துவமனையொன்றில், பகுதிநேர வேலைசெய்துகொண்டிருந்தாள். மனநோயாளர் காப்பகப் பிரிவு அது. அங்கிருக்கிற வெள்ளைக் கிழவர்களையும் இளைஞர்களையும் பிற இனத்து பிள்ளைகளையும் கடக்க முடிகிற தன்னால், “அக்காட கலியாணம்” என்றோ “அவன்கள் வாறாங்கள்” “துரோகி” என்றோ உருக்கிற குரல்களைக் கடக்க முடிந்ததில்லை என்றும், அவர்களது மொழி தனக்கு மட்டும் புரிவதன் அநியாயத்தைச் சொன்னாள். அறைகளின் கம்பிகள் தாண்டி தனது கரங்களை எட்டிப் பிடிக்கிற இனத்து இளைஞர்களின் முகத்தைப் பார்க்க முடிந்ததில்லை என்று, எப்போது இந்த வேலையை மாற்றித் தருவார்கள் எனக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டு உரையாடல்களிடையே பிறழ்வுற்றவள் போல சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவர்களுடைய முகவரிகள்
அவர்களுடைய காதலர்கள், உறவுகள்…
யாருக்குமே தெரிவதில்லை; உரையாடுகிற ஒரே மொழியால் எந்த உதவியும் ஆவதில்லை.

எங்கோ எப்படியே யாரோ உன்னை துன்புறுத்தித் திரிந்திருக்கவேண்டும்
கைவிடப்படுதலில் போதையுற்றபடி
சொல்(லு) ஏன் நீ அங்கேயே கிடக்க விரும்பிறாய்
கேள்! அதொரு வித்தியாசத்தையும் எனக்கு தரப்போவதில்லை
எல்லோரும் தம் சுதந்திரத்திற்காய் போரிடத்தான் வேண்டும்…

பா.அ.ஜயகரனின் ‘எல்லாப் பக்கமும் வாசல்’ (1998) என்கிற நாடகம் அரங்கத்தில் விரிகிறது. ஒரு கோப்பிக் கடையில் சந்திக்கிற மூன்று, மூன்று பொருளாதாரத் தட்டுக்களில் உள்ள மனிதர்களை முன்வைத்து: அரங்கத்தில் ஒரு மனநோயாளி (பதி), ஒரு றியல் எஸ்டேட் ஏஜென்ட் (சாந்தன்), ஒரு அகதித் தொழிலாளி (குமார்). கோப்பி குடிக்க வருகிற சாந்தன், தனக்கு ‘ஊரில்’ தெரிந்தவனாக குமாரை அடையாளங்கண்டு பேசிக் கொண்டிருப்பான். குமார் மனநோயாளிக்கு சீகரட்டும், டொனட், கோப்பி போன்றன வாங்கிக் கொடுப்பதையும் கண்டிப்பான், ஒரு உயர்வர்க்கத்தினனாய், இவற்றை/இவர்களை ‘ஊக்குவிக்க’க் கூடாதென்றபடி. இந்த உரையாடல்களிடையே இடையிடையே பதி உச்சரிக்கிற சொற்கள், வசனங்கள் இவனுக்கு உறுத்துகின்றன. அவசரமாய் கிளம்பிப்போகிற அவன், மறுநாளும் வருவான், குமாருடன் பதியைப் பற்றி துருவித் துருவிக் கேட்ட போதும், குமாரோ தனக்கு ‘அவன் அங்க (அந்த மேசையடியில) இருக்கிறான் என்பதுதவிர எதுவும் தெரியாது’ என்பான்! இறுதியாய், தனது வீட்டுக்கருகாமையில் குடியியிருந்த, தனது வீட்டாரால் தமது வீட்டுக் ‘குழந்தை’போல கவனிக்கப்பட்ட பதியை அடையாளங் கண்டுகொள்கிறான். தனது தகப்பனிடமிருந்து பதி கனடாவுக்கு வருவதைக் கூறி அவனுக்கு உதவச் சொல்லி வந்த கடிதத்தை, அவன் அகதியாய் வாறது கௌரவக் குறைச்சலாயும், நிறையப் பேர் கனடா வாறது தனக்கு ‘போட்டி’யாவும் உணர்ந்த தான் பதிக்கு உதவாததை நினைவுகொள்கிறான். தான் உதவியிருந்தால் இப்படி நடந்திருக்காதென தனது குற்றஉணர்ச்சியாற்பட்டு, பதியுடன் உரையாட முயன்றுகொண்டே இருக்கிறான், அவனது மொழியோ பதிக்குப் பெயரவே/புரியவே இல்லை.

சாந்தன்: …நான் அப்ப உதவியிருந்தால் பதி இப்பிடி ஆகியிருக்கமாட்டான் நீ என்ன சொல்லுறாய்?
குமார்: இருக்கலாம்
சாந்தன்: இருக்கலாம் எண்டால்
கு: சிலவேளை, இன்னும் பாதிப்படைந்திருக்கலாம்.
சா: இல்லை. பதிக்கு உதவியிருந்தால், அவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.
கு: எனக்கு அதில நம்பிக்கையில்லை. இப்ப அவன் நோயாளி
சா: அதற்கு நான் காரணம்
கு: அப்படி இருக்கலாம். நிச்சயமாய் ஒன்றுக்கு மேற்பட்ட காரணம் இருந்திருக்கவேணும்.
சா: இல்லை. பதி நம்பிக்கையோடு வந்திருப்பான். நான் ஏமாத்தியிருக்கக்கூடும்
கு: அவனின்ட நம்பிக்கைகள் பற்றி எனக்கு தெரியாது
நிச்சயமாய் பல ஏமாற்றங்களை சந்திச்சிருப்பான்.
சா: பதிக்கு நான் உதிவியிருக்கவேணும். உதவியிருந்தால்,
இந்த நிலை வந்திருக்காது.
கு: நானும் அதைச் சொன்னால், உனக்கு ஆறுதலாய்
இருக்கும். ஆனால் உனக்கு எந்தவித தெளிவும் வராது.
(பக்.43, 44., நாடகப்பிரதி: எல்லாப் பக்கமும் வாசல், பா.அ.ஜயகரன்., வெளியீடு: தேடல் பதிப்பகம், கனடா)

உரையாடல்களில் மௌனியாய் தனது முகபாவங்களைச் சிறுவனைப்போல மாற்றிக்கொண்டிருக்கிற, கோப்பியும் டோனட்களும் வாங்க மட்டுமே எழுகிற, சாந்தனால் கேள்விகேட்கப்படுகிறபோது புதியவனால் அருண்டுபோய் ஒலி எழுப்பிற, பதி, சாந்தன் -கோப்பிக்கடையிலிருந்து- வெளியேறுகிற சமயங்களில், உச்சரிக்கிறான் வெளியேறுபவனின் பால்யத்திற்குரிய சொற்களை; அவனை அருட்டுமவை, பார்வையாளர்களை அவர்களது பால்யத்தின் சொற்களுள் இழுத்து, மனநோயாளியாகிய அவனுடனே உறைந்துபோயிருந்தார்கள் பார்வையாளர்கள்!
அந்த நாடக அரங்கு மீள மீள மனதுள்ளே கதையை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
என்றைக்காவது ஒருநாள் பேருந்திலோ இரயிலிலோ பயணிக்கையில் பெருநகரத் தெருக்களில் யுத்தகால எச்சங்களாய் எங்கெங்கிருந்தோ வந்த ஜீவன்கள் உங்களைப் புறக்கணித்து, தம்முடன் மட்டுமே எல்லையற்ற நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருந்ததை நீங்கள் கண்டிருக்கலாம். நெருங்கிப் போகையில் தாக்கவருபவனைக் கண்டவர்கள் போல நடுங்கி பின்னகர்கிற ‘வளர்ந்த’ சிறுவர்களைத் தெரிந்திருக்கலாம். கண் எதிர்க்க, கொடிய நினைவுகளின் எச்சத்தை சுமந்து திரிகிறவர்களை, அந் நபர்களின் முகங்களை நினைவுகூர்கையில், டவுண்ரவுண் ரொறன்டோ பெருந் தெருக்களில் பயணிக்கையில் எதிர்ப்படுகிற ‘வீடற்ற தமிழர்கள்’ துளைப்பதும், போர்முனையிலிருந்து வாழ்வு தேடி தப்பி வந்தவர்கள் இடைநடுவில் கைவிடப்பட்டு அவர்களது அடையாளமாய் ஏதோன்றும் கண்டுபிடிக்கப்படாமற் போவதும்…
மங்கலாக அந்த காட்சிகளை நினைவுறுகையில் தாண்டிச் செல்லச் சிரமமானதுண்டு.
மேற்குலகத்தில் -வேறொரு யுத்தத்தை முகங்கொடுக்கிறவர்களாய் இருந்தாலும்- எம்மிடம் தேர்வுகள் இருக்கின்றன, இப்படியாக எல்லாம் நாம் கஸ்ரப்படவேண்டியதில்லை. எமது ‘பயங்களை’ அரசாங்கங்கள் பாதுகாக்கின்றன. சொன்னதை ஒப்புவிக்கிற பாடத்திட்டத்தின் இடையில், தன் துணைக்கு பிற “தெரிவுகள்” “சுதந்திரம்” என்பனவை அனுமதிக்கிற ஒரு காதல் பாடலில் வருகிற – ஒரு சொல், Refugee – போன்ற ஒரு சொல், ‘நம்மளைக் கிழப்பற’ சொல் (பொப் பாடகர்கள் கர்மா போன்ற சொற்களில் கிளர்ச்சியுறுவதுபோல!). உலக மதங்கள் படிப்பித்த ஆசிரியை ‘இனியில்லை’ என்ற காதலுடன் ‘பறையா’ (PARIAH) என்ற சொல்லை உபயோகிப்பார்: ‘அவனொரு சமூக பறையா’ என்று. சமூகத்தில் அந்நியன், வெளியாள் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொற்களிலும் -ஒலிப்பில், உச்சரிப்பில்- அவருக்கு மிக வசீகரமூட்டும் இந்த அந்நியச் சொல்! இதன் அரசியலோ, வலிகளோ எமது சிந்தையில் இருப்பதே இல்லை. அந்தப் பின்புலத்தில்,
“…எம் இருவருக்கும் தெரியும்
நம்மிடையோ என்னவோ நடந்திருக்கிறதென்று
ஆம்.. இதொன்றும் மிகப் பெரிய ரகசியமும் இல்லைத்தான்,
எல்லாம் ஒரேமாதிரியானவையே..
நாங்கள் எப்படியோ இதைக் கடந்தே வருகிறோம்
கேள், எனக்கிதொரு பிரச்சினையில்லை அன்பே
நீ எதை நம்ப விரும்புகிறாயோ அதைத்தான் நம்புகிறாய்

யாருக்குத் தெரியும், சில வேளை நீ கடத்தப்பட்டிருக்கலாம்
கட்டப்பட்டு, எங்கோ கொண்டு சென்று
பணயக் கைதியாய் உன்னை வைத்திருந்திருக்கலாம்
அதொரு பொருட்டில்லை எனக்கு
எல்லோரும் தம் சுதந்திரத்திற்காய் போரிடத்தான் வேண்டும்
அறி, நீயோரு அகதியைப் போல வாழவேண்டியதில்லை…
நான் சொல்கிறேன்,
நீயோரு அகதியைப் போல வாழவேண்டியதில்லை…”
இப்படியாகப் பாட முடிகிறது, இது மிக இலகு என்பதாய். ஆனால் தேசத்தில், உறவில் ஒரு அகதியைப்போல வாழ யாரும் விரும்புவதில்லை.

—————————————-
முன்பொருமுறை, சக்கரவர்த்தியின் ‘பிசாசுகளின் வாக்குமூலம்’ ‘படுவான்கரை’ ‘எண்ட அல்லாஹ்’ போன்ற சிறுகதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததொருவர், அவற்றில் இடம்பெற்றிருந்து தமிழ் சகோதர இயக்கங்களின் வன்முறைகள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததாய்’ப் பார்க்கப்படலாம், ஆனால் அது குறிப்பிட்ட ஒரு –சக்கரவர்த்தி சார்ந்த- இயக்கம் செய்த ஒன்றே என்பதைச் சொன்னார். பின்னரும், ஒத்த உரையாடல்களில் ‘யாரோ’ செய்தவை த.வி.புலிகளில் விழுகிற ‘அபாயம்’ பற்றி ஒரு குறிப்பைக் காணக் கூடியதாக இருக்கும். ‘புதியதோர் உலகம்’ என்கிற நூலை பேச எடுத்துக்கொள்கிற த.வி.பு.ஆதரவாளர்கள் குறிப்பிட்ட இயக்கத்தின் வதைமுகாம்பற்றி உரையாடத் தயாரானவர்களாய் இருப்பார்கள்.
சக்கரவர்த்தியின் குறிப்பிட்ட கதைகளிலும் சரி, முக்கியமானவை; எதிர்கொள்ள வேண்டியவை, வன்முறையின் பொதுத்தன்மைதானேயொழிய, அதில், அவரது இயக்கம் பிறிதென்றோ -அவர் புலிகள் இலலையென்பதாலோ- மகிழமுடியாது. அப்படி மகிழ்வதானால் துணுக்காய் வதை முகாமும் அங்கு நம்மைப்போன்ற மனிதர்கள் நடத்தப்பட்ட விதத்தையும் எதனுடன் ஒப்பிட முடியும்? அரசியல் கைதிகளை பிற வல்லாதிக்க அரசுகள் நடத்துகிற முறைமையிலிருந்துதான் அங்கு நிலவரம் எவ்வாறு மாறுபட்டிருந்தது? அல்லது இன்னாரது வதைமுகாம்களைவிட அது எவ்வளவு மேம்பட்டிருந்தது? ஆளுயரக் கிடங்குகளில் மனிதர்களை விட்டு, முள்ளுக்கம்பிகளை மேலே போட்டு மழையிலும் வெயிலிலும் அவர்களை அங்கேயே வைத்திருந்து, பசித்தால், உங்கள் கழிவுகளையே உண்ணுங்கள் என்றதுவரை – அவற்றிற்கு என்ன சமாதானம் கூற முடியும்?
சக மனிதனை வதைக்கின்ற முறைகளில், சிங்கள இராணுவமோ இந்திய இராணுவமோ அமெரிக்க சிறைகள் போலவே – எல்லோரும் சேருகிற இடம் ஒன்றாய்த்தான் இருக்கிறது. அவர்களுடைய மொழியும் ஒன்றுதான். ஆகவே இந்தப் ‘பொதுப்படுத்தல்’ தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு வருத்தப்படக் காரணமில்லை.
சென்ற வருடங்களில், Guantanamo Bay, கியூபா- அமெரிக்க (Camp Delta) இராணுவச் சிறையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் ‘அரசியற் கைதி’களாக வைத்திருப்பதை ‘மனித’நேயமிக்க அமெரிக்க உளவு நிறுவனத்தார் அரசாங்கஞ்சாரா குழுக்களின் நெருக்குதலின் பிறகு ‘ஒத்து’க்கொண்டிருந்தார்கள். தமக்காக வாதாடவும், உறவுக்காரர்களுடன் தொடர்பில் இருக்கவும் சட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட அக் கைதிகளது ‘இருப்பு’த் தொடர்பாக, ‘இப்படி நடப்பது என்பதை’ ‘தாம் செய்வது’ தொடர்பாக எல்லாம் அவர்களாகவே ‘ஒத்து’க்கொள்ளுவார்கள் என பார்த்துக்கொண்டிருக்கிற (அமெரிக்க) தேசீயவாதீகளை ஒத்தவர்களே – பலரும். உண்மையில், அவன்கள் ஒத்துக்கொள்வதெல்லாம் ஒரு பிரச்சினையா, எப்படியோ இட்டுக்கட்டிவிட்டு அவர்கள் தொடர்ந்தும் ‘செய்வது’ என்ன என்பதுதான் பிரச்சினை.
இதில் மக்களைப் பொருட்டாக்காத அரசாங்கங்கள், எதிர் அல்லது ‘எங்களது’ இராணுவங்கள் – இவை கடந்து மனிதர்களது குரல்களைக் கேட்க முனைவதே சமகாலத்தில் செய்யக்கூடிய ஒன்றாக முன்னிருக்கிறது. அந்தக் குரல்களை புரிந்துகொள்ளவும் -என்னிடம் இருக்கக்கூடிய நியாயங்கள் அவர்களுக்கும் இருக்கிறது என்பதை உணரவும்- மையநீரோட்ட ஒத்தோடல்களை மீறிய பிரதிகள் உதவுகின்றன. அந்த வகையில் வாழ்ந்து வருபவர்களின் (மாற்றுக்) குரல்கள், உயிர்மை பேட்டியில் – இளங்கோவன் தான் இருக்கவிரும்புவது தொடர்பாக கூறியிருந்ததுபோல, அவை குரலற்றவர்களின் குரலாக இருக்கின்றன. அவற்றிலிருந்தே, சார்பு/சார்பின்மை என்கிற ஒற்றைத்தன்மைக்கு அப்பால் மக்களது வாழ்வை, அவற்றின் நியாயத்தை அல்லது நியாயமின்மையை வெறுமனே கோஷங்களைப் பின்தொடர்வதாய் அல்லாது பெற்றுக்கொள்ள முடிகிறது.
இன/தேசத் துரோகிகள் X இன/தேசப்பற்றாளர்கள் – இந்த இரண்டு எதிர்நிலைகளையே அனுமதிக்கிற ஒரு இனத்தின்/தேசத்தின் பெரும்பான்மைக்குள், எப்போதும் தமது தியாகம் சிறுமைசெய்யப்படக்கூடிய புலங்களில், வரலாறுகளில் ஆவணப்படுத்தப்படாத போராட்டங்களை, மனிதர்கள் சிலர் தமது குரலிற்காக வாழும் உரிமையின் நிமித்தம் முன்னெடுக்கிறார்கள். ‘தனது’ ‘தனது நலன்’ என்பதைத் தவிர பிறவில் சகிப்புத்தன்மையற்ற தலைமுறைகளிற்கு அவை வெறுமனே எதிர்ப்பிரதிகள் மட்டுமே.

Advertisements
Categories: Uncategorized
 1. Anonymous
  November 5, 2005 at 4:31 am

  YOU ARE LIKE EPLRF, ENDLF EPDP , ETC…. JUST ANTI LTTE
  PLEASE STOP YOUR BS HERE

  IF YOU DON’T LIKE LTTE GO FLYA KITE

  THANKS

 2. ஈழநாதன்(Eelanathan)
  November 5, 2005 at 5:43 am

  பல்வேறு சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும் பதிவு.நன்றி பொடிச்சி (துணுக்காய் பற்றிய குறிப்பும்).கூடவே இளங்கோவனின் குரலற்றவர்களின் குரல் எனும் கூற்று மிகப்பொருத்தமாய் உள்ளது.அவரது நாடகம் இன்று திரும்பவும் மேடையேற்கிறது பார்க்கப் போகவேண்டும்

 3. ஒரு பொடிச்சி
  November 5, 2005 at 6:13 pm

  நன்றி அநானிமஸ், ஈழநாதன்.

 4. ஒரு பொடிச்சி
  November 7, 2005 at 2:12 am

  Anonymous:
  இந்தப் பதிவில் எழுதப்பட்டிருக்கிற சிறியதோ பெரியவோ பல விடயங்களுள் உங்களிற்குத் ‘தெரிவது’ த.வி.புலிகளும் அவர்கள்மீது வைக்கப்படுகிற கருத்தும்தான்! மனித இழப்பு, அகதியாய் இருத்தல் – இவை எல்லாவற்றையும்விட உங்களை ஆள்வது இது மட்டும்தான். சிலவேளை உங்களுக்கு விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார்களா அவர்களது பக்கமிருக்கிறார்களா என்பது கூடத் தெரியிவல்லை. புலி – ஒரு எதிர்க் கருத்து (அதை விமர்சனம் என சொல்லுவார்கள்) என்றால் பின்னூட்டத்தில் போய் நீ = துரோகி என கூறிவிட்டு வருவது. இந்த மாதிரி செயல்பாடுகள்தான் இயக்கத்திற்கு செய்கிற வேலை என நினைக்கிறவர்களோடு/மனிதர்களது மரணத்தைப் பற்றிப் பேசிறபோது அவர்களிற்குத் ‘தெரிவது’ புலி மட்டும்தான் என்றால் – உரையாட ஒன்றுமில்லை. புலி எதிர்ப்பு X புலி ஆதரவு என்கிற சட்டகத்தின்கீழ் கதைக்க எனக்கும் ஒன்றுமில்லை.
  புலிகளை தங்கட தேசம்/தேசீயம் காரணமா எதிர்க்கிற, உள்அரசியல் தெரியாமலே கருத்துக்சொல்லுற, இந்திய/பிற தேசியவாதிகளுடனும், ‘ஆதரவு’ என்கிற பெயரில் எல்லாத்தையும் நியாயப்படுத்தியபடி திரிகிறவர்களுடன் மாறி மாறி சண்டை பிடிப்பதல்ல என் நோக்கம்.
  இரண்டு பக்கத்தையும் திருப்திப்படுத்த இணையத்தில்/வெளியில் நிறைய எழுத்துப் பிரதிகள் உண்டு.
  அவற்றை மீள ஒப்புவிப்பதில் என்ன இருக்கிறது?

  இந்த இரண்டு கொடியையும் தாங்கிக்கொண்டிருக்கிற/தாங்காத மனிதர்களது பிரச்சினைகளைப் பற்றி -நானும் ஒரு மனிதர் என்ற வகையில்- எழுதுவதுதான் முக்கியமாய் படுகிறது.
  ஆகவே நான் பட்டம் விடுவதா பதிவெழுதுவதா என்பதை நானே முடிவு செய்கிறேன்; உங்களுக்கு ‘நோ’த்தராத எழுத்தை இணையத்தின் பெரும்பாலான பக்கங்களில் நீங்கள் படித்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பிய அளவில் BULL SHIT அங்கிருக்கிறது. அதையெல்லாம் யாராலும் நிறுத்த முடியுமா என்ன?!
  நன்றி.

 5. Anonymous
  November 7, 2005 at 6:24 pm

  துணுக்காய் வதை முகாமில் தான் கோவிந்தன் போன்றவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது வருத்தமான விடயமே. ஒரு நிமிடம் வெலிக்கட முதல் துணுக்காய் வரையுள்ள ஆதிக்க முகாம்கள் நினைவில் வந்து போனது. நன்றி பதிவுக்கு.

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: