Home > இதழியல், க(வி)தைசொல்லி > பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

யிர்மை (பிப்ரவரி 2005) ‘பாப்லோ நெருதாவின் துரோகம்’ என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:

பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. … பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ என எவரும் தப்பவில்ல. இவ்வகையில் மிகவிரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கலைஞரது வாழ்வு பாப்லோ பிச்காசோவினுடயதாகும். பாப்லே பிச்சாசோவோடு உறவு கொண்டிருந்த பற்பல பெண்களின் புத்தகங்கள் தற்போது வெளியாகிவிட்டது. …ஆனால் பாப்லோ நெருதாவோடு உறவு கொண்டிருந்த பெண்களால் எழதப்பப்பட்ட அப்படியான நூல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நெருதாவுக்கும் பிக்காஸோவுக்கும் பல வகைகளில் ஒற்றமையுண்டு. தம்மோடு உறவு கொண்டிருந்த பெண்கள் குறித்து தமது படைப்புகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டவர்கள் அவர்கள். பெண்களின் மீதான தமது தீராத வேட்கையை வெளிப்படையாக முன்வைத்தவர்கள் அவர்கள். …முதல் மனவியரை அடுத்து அவரோடு உறவு கொண்டவர்கள் அனைவரும், இவர்களது முதல் மனைவியர் குறித்தும் இவர்கள பல பெண்களுடனான தொடர்பு குறித்தும் அறிந்தவர்கள்தான். அதனைத் தெரிந்து கொண்டே இவர்கள் தம்மை இந்த ஆளுமைகளோடு பிணைத்துக் கொள்கிறார்கள். வயது ரீதியில் ஒப்பிடுகிறபோது சமூக அங்கீகாரம், புகழ் போன்றவற்றறோடு, பற்பல அரசியல் சமூகக் காரணங்களாலேயே இத்தகைய மனிதர்களோடு வாழ அப்பெண்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் சம்பந்தப்பட்ட ஆணின் மீது மட்டுமே கடுமையான விமர்சனங்கள முன்வைப்பதிலுள்ள பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. பிரச்சினையின் ஒரு பக்கம் மட்டுமே மிகைப்படுத்துப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.

தஸ்லிமா நஸ்ருதின், ஃப்ரீடா உள்ளடங்கலாகப் பல பெண்ணியப் பிரதிகளை தமிழில் கொண்டந்தவர்களில் ஒருவரான திருவாளர் யமுனா ராஜேந்திரன் இவ்வளவு சுத்தி வளைத்து பலப் பல குறிப்பிடல்களூடாக இங்கே எழுதுகிற வரிகளின் சாரம் இதுதான்:

“பெண்களும் தெரிந்து/விரும்பித்தான் அவரிடம் போனார்கள். அவர்களை விட்டுவிட்டு அவரை மட்டும் குற்றம் கூறுவது பிழை.”

தமிழ் இலக்கிய உலக கர்த்தாக்களே! இத்தகையதொரு ‘அபிப்பிராயதை’க் கூற ஒரு மார்க்சியர்தானா வரவேண்டும்? எத்தகைய வரலாற்றுத் தரவுகளுடன் குறிப்பிடப்பட்டாலும் இத்தகைய தொனிகளில் இருக்கிற ஆதிக்க சிந்தனையை மூடி மறைக்க முடிவதில்லை. இதே வசனத்தை முன்வைத்துத்தான் ‘கண்ணன்கள்-கவிஞன்கள்-நித்தியகாதலன்கள்’ எழுத ஆரம்பித்து, அதற்காக அவ்வப்போது எழுதி வைத்த குறிப்புகள் என் கண்ணுக்கே தூர்ந்து, அந்நியமாகி, கொடுமை செய்யத் தொடங்க தள்ளிப்போட்டிருந்தேன். இப்போதுவரையில், நசுங்கி நசுங்கி நம் காலத்தின் ‘சொல்லப்பட்ட’ முற்போக்காளர்கள் கூறுகிற கருத்துக்களை/கூத்துக்களைக் கேட்டால் வட்டக் கிணற்றில் (கிணறு வட்டம்தானே!) தேங்காயை உடைப்பதுபோல மண்டையை உடைத்து சிதறடிக்கவேண்டும்போல இருக்கிறது.

1980களின் இடையில் ஈழத்திலிருந்து விடைபெற்றுப்போன புலம்பெயர்ந்தவர்களும், தமிழ்நாட்டு இலக்கியவாதிகளும் the good old days இல் வாழ்பவர்களாக, பா.நெருடா முதல் எந்த திருவுருவையும் சிறிது விமர்சித்தாலும் அனுங்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் அவரைப் பற்றி சிறு மறுப்பும் பலத்த உணர்ச்சிவசப்படல்களை உருவாக்குகிறது. இதில், தாம் காவுகிற உன்னதங்களை குறித்து சிறு களங்கமும் வேண்டாத –மறுபரிசீலனைக்கு தயாரில்லாத- ஒரு மரபு மனமே வெளிப்படுகிறது. பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் குறித்த தமது பயங்களை அடிப்படைவாதிகள்/மரபுவாதிகள் மதங்களால் பாதுகாத்துக்கொள்வதுபோலவே இத்தகையவர்களும். அதற்கு சிவப்பு முலாம் பூசிவிட்டால் எல்லா ஆதிக்கத்தனங்களையும் நியாயப்படுத்துவதற்கான தகுதி தமக்கு வந்துவிடுகிறதென நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களது இத்தகைய நடவடிக்கையானது மீளமீள அவர்களது அச்சப்படும் மரபுமனத்தையே அம்பலப்படுத்துகிறது. மக்களுக்கான அரசியல் தத்துவம் எதுவென்றாலும் சிறுபான்மையினரின் நலனிலிருந்து தன்னை மறுபரிசீலனை செய்ய அது தயாராக இருக்க வேண்டும். அதுவே மாற்றத்திற்கான/மாற்றத்தை வேண்டிற பண்பு. அல்லாதுவிடில் அதுவே கடுமையான விமர்சனத்துக்குமுரியது. `காலம்காலமாக’ யாரோ ஒரு பக்கத்தை யாரோ ஒரு பக்கம் பயன்படுத்தி வருவதற்காக யாரும் உண்மையை பேசாமல் விடுவதில்லை; அதை மூடி மறைத்து, ‘அவள்கள் மட்டும் என்ன யோக்கியம்’ என பதின்பருவ ஆண்களது மனோபாவத்தோடு உண்மையை அணுகுவதில்லை. அப்படி செய்தபடி, மிகவும் அறிவார்த்தமான விவாதத்தை நடத்திக்கொண்டிருப்பதாக மனப்பால் குடிப்பதில்லை. வரலாற்றில் எந்த கொம்பரும் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவன்(ள்) இல்லை என்பதை ய.ரா. இற்கு புதிதாக சொல்ல வேண்டியதுமில்லை.

இந்தக் கட்டுரையில், தான் சார்ந்த ஒரு மனிதரை ‘நியாயப்படுத்தும்’ பொருட்டு, தன்னை நன்கு அம்பலப்படுத்திக்கொண்டுள்ளார் திரு.யமுனா ராஜேந்திரன். அவர் மேலும் எழுதுகிறார்:
இலத்தீனமெரிக்க கலாச்சாரத்திலும், மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் ஆண் பெண் உறவு தொடர்பான பார்வை என்பது கிழக்கத்திய சமூகங்களின் பார்வை போன்றதல்ல. ஸார்த்தர் எனும் எழுத்தாளரதும் ரிவரோ எனும் ஓவியரதும், வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், திருமணம் மீறிய நிறைய உறவுகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். இவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஸீமன் தீ பூவாவும் பிரைடா கோலாவும் அதேகாலத்தில் பற்பல ஆண்பால் உறவுகளை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி, துரோகம், திருமணம் போன்ற கருத்தாக்கங்கள் இவர்களது வாழ்வில் எந்தவிதமன புனித அர்த்தமும் பெறுவதில்லை. இன்று இவ்வகையிலான விவாதங்களை கத்தோலிக்கக் கிறித்தவக் கருத்தியல் ஆதிக்கத்துக்குள்பட்ட அமெரிக்க இலக்கியவாதிகளும், பழமைவாதக் கருத்துருவப் பாதிப்பு அதிகமுமள்ள பிரித்தானிய இலக்கிய விமர்சகர்களுமே முன்னிலைப்படுத்கிறார்கள். வைதீக இந்திய மரபுகளில் ஊறிப்போனவர்களாக இருக்கும் இந்திய எழுத்தாளர்களும் இவ்வகையிலேயே இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். பாப்லோ பிகாஸோ போலவே, பாப்லோ நெருதா குறித்த பெண்நிலைவாத வாசிப்புகளும் அவரது கலைஆளுமையில் எந்தவிதமான புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சிவிடப் போவதில்லை. இரட்டை நிலைப்பாடும், சுரண்டலும், சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்ல. பிராங்காய்ஸ் ஜில்லெட்டினதும் பிரைடா கோலாவினதும் ஸீமன் தி புவாவின் வாழ்வுண்மைகளும் இதனையே தெளிவுபடுத்கின்றன. பாப்லோ பிக்காஸோவையும் நெருதாவையும் மார்க்ஸைப் போல, குவேராவைப் போல மனிதர்களாக விட்டுவிடுவதே நல்லது.

ய. ராஜேந்திரனின் விருப்பம் எதுவெனப் புரிகிறது. ‘இரட்டை நிலைப்பாடும் சுரண்டலும் சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்லை’ என்பதும் உடன்பாடானதே. ஆனால் இவையூடாக ய.ராஜேந்திரன் நிலைநாட்டியுள்ள ‘உண்மை’தான் முக்கியமானது. அதிலும், இலத்தீனமெரிக்க/மேற்கத்தியக் கலாச்சாரங் குறித்த இவரது பார்வை புல்லரிக்கிறது. இலத்தீனமெரிக்கர்களதும் மேற்கத்தயர்களதும் ஆண் பெண் உறவு தொடர்பான ‘பார்வை’ நம்மிலும் வேறு என்பதற்காக, ‘அவர்களை’ துரோகங்கள் ‘அவ்வளவாய்’ப் பாதிக்காது என நிறுவுவது அக் கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் இன்மையால்தான். அப்படியான ‘பரந்த கலாச்சாரத்தவர்’ என்றால் அவர்களிடம் ஷோப் ஒப்பறாக்களும் துரோக கவிதைகளும் இல்லவே இல்லையா?
கட்டிறுக்கமான, பாலியல்ரீதியாக ஒடுக்குகிற சமூகமாக இல்லையென்றால், துரோகங்கள் எமக்குப் போல ‘எந்த ஒரு புனித அர்த்தமும் பெறாததால்’ அதை இலகுவாக எடுப்பர் என அர்த்தங் கொள்ளலாமா?
திருமணம் என்கிற உறவும் காதல் என்கிற பன்ரஷியும் அந்த சமூகங்களில் இல்லையா? (சரி/தவறு விவாதங்களிற்கு அப்பால்) அறங்கள் அற்ற மனிதர்களா அவர்கள்?
பல பெண்களை/ஆண்களைக் கூடிய ஃபிரீடாவால் தீகோ தன் சகோதரியைப் புணர்ந்ததை –அந்த துரோகத்தை- இலகுவாக எடுத்துக்கொள்ள முடிந்ததா, எந்த புனித/அறத்தினதும் தலையீடும் இன்றி???? நெஞ்சிலறைந்த வலியின்றியா அவள் அதை எதிர்கொண்டாள்?

ஃபிரீடா பற்றி மொழிபெயர்த்தவர் மொழியை மட்டும் பெயர்த்ததால் வந்த புரிதல் இது. அதனாற்தான் ‘ஃபீரீடாவிற்கும் சிமோனிற்கும் பிற உறவுகள் இருந்தன ஆகவே…’ என வாதாடுகிறார். ஆனால் பாலியல் குறித்து ‘அவர்களிடம்’ குறுகிய எண்ணமில்லை ‘பரந்தது’ என்பதன் அர்த்தம்: அவர்கள் ‘பாய்ஸ்’ படம்போன்ற ‘வெளிப்படையான’ நடவடிக்கைகளில் அதிர்ந்தும் ‘திருடா திருடி’ வகையறாக்களை இயல்பாக எடுத்துக்கொள்வதுமான ‘பாசாங்கை’ விரும்புகிறவர்கள் இல்லை என்பதே. எமது நாடுகளது போல பாலியல் குறித்த இறுக்கம் இல்லை, திருமணம் வரையில் (அனேகமாக பெண்கள்) தமது பாலியல் தேவையை ஒடுக்கிற நிலைமை இல்லை என்பதே பொருள். ஆனால் அவற்றுக்கெல்லாம் எனது கணவன்/மனைவி இன்னொரு ஆ/பெண்ணைப் புணரலாம் துரோகிக்கலாம் என்றர்த்தமல்ல. குடும்பம், திருமணம் போன்ற நிறுவனங்கள் உள்ள எந்த கலாசாரங்களிலும் ஒரு ஆண் ஒரு பெண் என்கிற கருத்தாக்கம் மாறப் போவதில்லை. ய.ரா எடுத்துக் காட்டுகிற ‘பெண்ணீயவாதி’யான சிமோன்கூட பின்னர் சார்ற்ரேபோல ‘இலக்கங்களில்’ ஆர்வமற்றுப் போய்விடுவதையும், ‘உடமை’ உணர்ச்சி என்பது வரிக்குவரி தொனிக்க நெல்சனென்கிற அமெரிக்கக் காதலனிற்கு எழுதிய கடிதங்களும் என்ன சொல்கின்றன?
மனித உடல் சார்ந்த சிக்கல்களை கலாச்சாரங்களுள் ஒதுக்கி ய.ரா தன்னுடைய கருத்தை, தன்னுடைய கருத்து வழி மனிதனை ‘நியாயப்படுத்த’ இவ்வளவு மெனக்கெட்டால் குறுகிய, தனது மத, இன அடையாளத்தை விட்டுவராத சனாதன மனம் எவ்வளவை நியாயப்படுத்தும்? என்னென்ன காரணங்களை அடுக்கும்?
பெண் குறித்த புரிதலில் ஜெயமோகனோ இன்ன பிறரிலிருந்தோ ய.ரா பார்வை வேறுபடவில்லை; பிரிய எதிரிகள் இந்தப் புள்ளியில் ஆரத் தழுவிக் கொள்ளலாம்.

பாப்லோ நெருடா எத்தனை மனைவிகள் கண்டார், எத்தனை பெண்கள் சிநேகிதிகள் கொண்டார் என்பதல்ல பிரச்சினை. அவருடைய படைப்புகளூடாக வெளிப்படுகிற ஆணாதிக்கம், அவரது காதலிகளில் குறித்த எந்தப் பெண்கள் குறித்த அவரது பார்வை என்னவாக இருந்தது? அவர் எப்படி குறிப்பிட்ட அவர்களை ‘பார்த்திருக்கிறார்’ அப்புறம் அது ஏன் முக்கியமானது பொருட்படுத்தப்பட வேண்டியது என்பனவெல்லாம் அலசப்படவேண்டியன. அதிலும், புரட்சிகரமான ஒருவருடைய எண்ணங்களே மிக முக்கியமாகப் பொருட்படுத்தவேண்டியதும் ஏனெனில் சமூகம்/மக்கள்/பெண்கள்/சிறுபான்மையினர் பற்றின அக்கறையை முதலாளித்துவ தலைவர்களிடமோ அதைப் பிரேரிக்கிறவர்களிடமோ நாம் எதிர்பார்த்து நிற்கமுடியாது; அவர்களுடைய எண்ணங்கள் எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு வெளிப்படையானவை.

இங்கே பிரச்சினை: இந்த புகழ்வாய்ந்த கவிஞர்களைப்போல இவர்களோடு இணைகிற பெண்கள் கலைஞர்கள் அல்ல. அந்த வகையில் குரலற்றவர்கள். உலகம் கவிஞர்களது (சோடிக்கப்பட்ட) ஒரு பக்கத்தையே கேட்டு தன் முடிவுகளை எடுப்பதோடல்லாமல் ‘அவர்கள்’ விரும்பித்தான் போனார்கள் என்றும் சொல்கிறது. சார்த்தரைப் பற்றி சிமோனது எண்ணங்களோ, ஃபிரீடாவின் தீகோவின் துரோகம் பற்றியதோ அவர்களும் படைப்பாளிகள் அல்லாதுபோயின் எப்படி பொதுவிற்கு வந்திருத்தல் சாத்தியம்? யாரோ ஒரு மொடலின் (Model) சகோதரியை டீகோ புணர்ந்திருந்தால் அதுபற்றி பொதுவில் பெறுமதிதான் என்ன?

இது, இந்த ‘உன்னத’க் கலைஞர்களின் படுக்கையறையைத் துழாவி ஒரு இன்பம் பெறுவதற்காக அல்ல, தொழிலாளியைச் சுரண்டுவது பற்றிய பிரக்ஞைகொண்டவர்கள் சக தோழரின் உடலை சுரண்ட தமக்கு உரிமை இருப்பதாய் நினைக்கிற, அதுகுறித்து அக்கறைப்படாத உளவியலை விமர்சனத்துக்குள்ளாக வேண்டியே. அது மிகத் தேவையானதே (தேவையில்லை என்று பார்த்தால், எதுதான் தேவை?).
அந்தப் பிண்ணணியில் பா.நெருடா போன்றவர்கள் – கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ, ரோட்ஸ்கி போன்ற- ஏனையவர்களுடன் விமர்சனத்துக்குள்ளாகுகிறார்கள். அதை வலதுசாரிகள் ‘உபயோகிக்கிறார்கள்’ மார்க்சியத்தின் மானத்தை வாங்குகிறார்கள் என்பதற்காக அவர்களது ஆதிக்கத்தை கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அத்துடன் தத்துவங்களை அதைக் கொண்டு சென்ற மனிதர்களுடன் இணைத்து பார்ப்பதும் நிராகரிப்பதுமானவர்களின் பொருட்டு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்க முடியாது.

ய.ரா அத்தகையவர்களுக்கு பதிலுறுக்கிற வேகத்தில், தானும் மார்க்சியத்தை இந்த பிம்பங்கள் ஊடாகப் பார்க்க விரும்புவதையே வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய தவறுகளை எந்த வித்தியாசமும் இல்லாமல், பலரிடமிருந்தும் ஏலவே கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வகையிலையே நியாயப்படுத்துகிறார்:

…நெருதாவோ பிக்காஸோவோ யாரையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியிருந்தாலோ, அல்லது கள்ளங்கபடறியா சிறுமியரை அறியாமயத் தமது பாலியல் சுரண்டலுக்குப் பலியாக்கி இருந்தாலோதான், இன்று அவர்கள உறவுகள் மீதான தார்மீகக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியும். …

சரிதான். படைப்பாளியல்லாதவர்கள், வெகுசனத்தின் வெளிச்சத்துக்குள் இல்லாதவர்கள், வந்து தம்மை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கதைகளை சாட்சிகளுடன் இனிமேலைக்கு வாக்குமூலந்தந்தால்தான் உண்டு உய்வு. கலைஞர்கள் யாரை பாலியல் வன்முறை செய்கிறார்கள், யார் விரும்பிப் போகிறார்கள் என உளவாளிகளை நியமிக்க முடியாது. படைப்புகளும் சுயசரித ஒப்புதல் வாக்குமூலங்களிலும் ஊடாக, ‘ஆஹா கவிஞன் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறான்’ என அப்படியே பிரமித்துப்போய் மெய்சிலிர்த்து நின்றுவிடுவதால் எழுகிற கேள்விதான் மேலுள்ளது.

தம்மைச் சூழ்ந்துள்ள அரசியல்வாதிகளதும் கலை இலக்கியவாதிகளதும் படைப்புகள், நடவடிக்கைகள் குறித்த பெண்ணிலைவாத வாசிப்புக்களை தாம் வாழ நேர்நத சூழலில், மொழியில் துவங்கி வைப்பதுதான், நெருதா மீதான பெண்ணிய வாசிப்பைக் கோருகிறவர்கள், செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். அவ்வாறான வாசிப்புகள் மேற்கொள்ளப்படுகிறபோது மகத்தான படப்பாளிகளின் படைப்புகள் மற்றும் வாழ்வின் மீதான பெண்ணிலைவாத வாசிப்புகள் என்பது பொய்த்துப் போவதை இவர்கள் காணவியலும். ஏனெனில் மனித உறவுகள் கருத்தியல் வரையறைகளுக்கு அகப்படாமல் நழுவுவதை இவர்கள் அப்போது காணமுடியும்.
இரண்டாவது விமர்சனம் பாப்லோ நெருதா, ஹங்கேரி மீது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் படையெடுப்பைக் கண்டிக்கவில்லை என்பதோடு, ஸ்டாலின அத்மீறல்களை நெருதா வெளிப்படையாகக் கண்டிக்காதது மட்டுமல்ல, ஸ்டாலின் மரணத்தின் போது அவரை விதந்தோதி ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார் என்பதாக இருக்கிறது.

அவரைப் பற்றி ‘துவக்கி வைப்பதே பணி’ என்று சொல்லி அவரே ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார், அதாவது அவர் வந்த முடிவே அனைவரும் வருவர் என!

பாப்லோ நெருடாவின் சில கவிதைகள் ஊடாக, அவர் பற்றிய (வலதுசாரிகளின் அவதூறுகள் அல்லாத) வாசிப்புகள் ஊடாக ய.ரா சொல்கிற முடிவிற்கு வரமுடியவில்லை. அவருடைய எல்லாப் படைப்புகளையும் சுயசரிதத்தையும் முன்வைத்து ஒரு விமர்சனம் எழுமாயின் அஃதில் பா.நெருடாவின் இடமே இல்லாது போகலாம். இதில், பா.நெருடா மீதான ‘இன்னொரு’ விமர்சனமான ஸ்டாலினிற்கு அஞ்சலிக் கவிதை விதந்தோதி எழுதியது குறித்து பெரிதாய் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் ஒரு கவிஞனை இப்படி தூக்கிப் பிடித்துத் தாங்கோ தாங்கென்று தாங்க முடியுமெனில், அது ஒரு அல்ப விசயம். அது ஒரு வலு இயல்பான சின்ன விசயமுங்கூட. எங்காவது மரணக்குறிப்பில் “இந்த ஆண் இன்று இறந்து போனான். ஏலவே திருமணமான ஒரு பெண்துணையுடன் வாழ்ந்தான். சிறந்த மனிதாபிமானி. இவனது சக தோழரான ஒரு பெண்ணை வாக்குவாதத்தில் ‘வேசை’ என்று விளித்தான். இறக்கும்போது சில சொச்சம் வயதுதான். மிகவும் நல்லவன். ஒரு போது மதுஅருந்துகையில் வாழ்நாளில் ஒருபெண்ணினது கன்னிமையாவது தான் உடைக்கவேண்டுமென குறிப்பிட்டான். பாவம்! அது நடைபெற முன்னவே இறந்தான்” என்கிற ரீதியில் யாரும் ‘உண்மை’ எழுதுவார்களா. தான் சார்ந்த, தான் -ய.ரா போல- நியாயப்படுத்தின ஒரு கட்சி விசுவாசத்தில் ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதுவதெல்லாம் ஒரு விடயமா? எல்லாவிடயங்களையும் ‘முதலாளித்துவ அவதூறுகளையும்’ தாண்டி கிடைக்கக்கூடிய தகவல் யுகத்தில் இருந்துகொண்டு இன்னமும் அதே பழைய துருப்பிடித்த –பேரீச்சம் பழக் காரனுக்குப் போடவேண்டிய- மரபின் எச்சங்களுடன் நூற்றாண்டுக்கு முந்தையவனை ஒருவர் நியாயப்படுத்தும்போது, பா.நெருடா ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதியதை அவருக்கெதிராக நிறுத்தும் இந்த நாசங்கெட்ட வலதுசாரி, முதலாளித்துவ விமர்சகர்களைத்தான் என்ன செய்ய முடியும்?

…கிறித்தவ அறவியலால் உந்தப்பட்ட தாந்தேவின் கனவு ஒரு துரோகமாகும் எனில், சோவியத் யூனியனால், உந்தப்பட்ட நெருதாவின் புரட்சிகர அறவியல்சார் கனவும் ஒரு துரோகம்தான். நெருதாவின ஸ்டாலினிய ஈடுபாடும் சந்தேகமில்லாமல் ஒரு துரோகம்தான். ஆனால் நெருதா முன்வைத்த, சகல மானுடருக்கும் விடுதலையெனும் நெடுங்கனவில் அவருக்கு இருந்த ஈடுபாடும், ஒரு ஆத்மார்த்தமான கம்யூனிஸ்ட்டாக சுயவிமர்சனத்தில் நெருதாவுக்கு இருந்த ஈடுபாடும் அவரது துரோகத்தை வரலாற்றின் மீது சுமத்திவிட்டு தன் மீதான விலங்குகளை உதறிவிடுகிறது.

இறுதியாக, அந்த நெடுங்கனவில் (‘சகல மானுடருக்கும் விடுதலையெனும்’ என்பதற்குள்) பெண்கள் அடங்கமாட்டார்கள் என்பதோடு, யமுனா ராஜேந்திரன் -வசீகரமான, ஆத்மார்த்தம் கம்யூனிஸம், சுயவிமர்சனம் ஆகிய, சொற்களின் துணையுடன்- உதறப்பட்டுள்ளதாக சொல்வது வேறொன்றைத்தான் என்பதையும் இங்கு மிகவும் நாகரீகமாய் எழுதிக் கொள்கிறேன்.

மேலும், ஒரு சுற்றுலாப் பயணிபோல தஞ்சை பெருங்கோவில் செல்கிற யமுனா ராஜேந்திரன்களிற்கு அங்குள்ள சிற்பங்களின் ‘கலை’நேர்த்தி மட்டுந்தான் தெரியும். ஆனால், அரண்மனைகளது அந்தப்புரங்களது அழுகுரல்கள் அதைக் கடந்து சென்ற சிலருக்குத்தானும் கேட்டிருக்கவே செய்யும். உங்களை அவை அடைந்ததில்லை என்றால் உங்களுக்கு அதைக் கேட்கிற தன்மை/விழைவு கிடையாது என்றே அர்த்தம்.
0

Advertisements
 1. ROSAVASANTH
  July 15, 2005 at 7:12 am

  முக்கியமான பதிவு

 2. சுரேஷ் கண்ணன்
  July 15, 2005 at 12:42 pm

  Good Post.

  – Suresh Kannan

 3. டிசே தமிழன்
  July 15, 2005 at 2:17 pm

  பொடிச்சி, வலுவான ஆதாரஙகளுடன் நல்லதொரு உடைப்பைச் செய்திருகின்றீர்கள். காலச்சுவடில் பாப்லோ நெரூடா பற்றி இரவிக்குமார் எழுதும்போது, நெரூடாவின் பெண்பால் உறவுகள் குறித்து (பெண்ணியவாதிகள்) பெண்களின் பார்வையில் விமர்சனங்களை வைக்கவேண்டும் என்று எழுதியிருந்தது நினைவு. அதற்கான முதலடியை இந்தக் கட்டுரையில் பார்க்கின்றேன். நெரூடா கொழும்பில் நின்றபோது பஞ்சமப்பெண்ணுடன் கூடிய உறவைக் கூட ‘கொண்டாட்டமாய்த்தான்’ எழுதியிருகிறார் என்று வாசித்திருக்கின்றேன். பரஸ்பரப் புரிந்துணர்வில் வரும் உடல் உறவைக் கூட நியாயப்படுத்தலாம். ஆனால் மொழி புரியாது, சைகையினால் மட்டும் கட்டிலில் வீழ்த்திய ‘ஆண்மையை’ எப்படி ஒத்துக்கொள்வதாம்? இதற்கு கூட நமது மார்க்க்சிய், பின்நவீனத்துவக்காரர்கள் சிலவேளைகளில் அட நெரூடா சாதி/இன பேதமில்லாமல் உறவுவைத்திருக்கின்றார் என்று புளங்காகிதம் அடைகிறனரோ தெரியவில்லை :-(. ய.ரா கட்டுரையை வாசித்துக்கொண்டு போகும்போது, நெரூடா போன்றவர்கள் சாதாரண மனிதர்கள் ஆகவே பலவீனங்களுடந்தான் இருப்பார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு, இறுதியில் விமர்சனம் வைக்கக்கூடாது என்ற தொனியில் முடிக்கும்போதே நெரூடா திருஉரு ஆக்கப்பட்டிருக்கின்றார் என்பதைத் தவிர வேறென்னத்தைச் சொல்ல.
  ….
  கீழைத்தேய பெண்களுக்கு மட்டும்தான் உணர்ச்சிகள் உண்டு, மற்றவர்களுக்கு இல்லை என்ற புனைவுகளை நீங்கள் உடைத்துக்காட்டியதும் முக்கியமானது. போரைப் போலத்தான் உலகில் எந்தப்பகுதியில் என்றாலும் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற வன்முறையும் பொதுவானது. ஒடுக்கப்படுதல்/சுரண்டல் என்பது அளவில் சற்று குறைய/கூட இருக்கும் என்பதைத் தவிர
  …..
  //’இரட்டை நிலைப்பாடும் சுரண்டலும் சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்லை’ என்பதும் உடன்பாடானதே.//
  என்ற புரிதலின்படி ப்ரைடாவையும், சிமோ த பூவாவையும் அவர்கள் செய்தது சரியா/ பிழையா என்று விமர்சிக்கமுடியுமே தவிர, ஆண்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் இவர்களை சாட்சிக்கு அழைத்து நியாயப்படுத்துவது எந்தவகை விமர்சனம். மற்றும்படி, ப்ரைடாவும், சிமோ தீ பூவாவும் இப்படி இருந்தற்காய் விமர்சிக்கப்பட்ட அளவுக்கு நெரூடாவும், சர்த்தரும் அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் விமர்சிக்கப்பட்டிருப்பார்களோ தெரியாது. ஆணைப்போல எதிர்ப்பாலால் பெண் சுரண்டப்படாத ஒரு சூழல் கனியும்போது இப்படி பெண்களையும் ஒரே தராசில் முன்நிறுத்தி வாதிடலாம், இப்போதைக்கு அது சாத்தியமில்லை.

  பொடிச்சி இந்தப்பதிவுக்கு மீண்டும் நன்றி. நேரங்கிடைத்தால் இன்னும் இது குறித்து இங்கே எழுத ஆவல்.

 4. சன்னாசி
  July 15, 2005 at 5:54 pm

  மேற்கத்தியக் கலாச்சாரம் கிழக்கின் ‘புற அசுத்தத்தை’ அதற்கெதிரான ஒரு கருத்தாயுதமாகப் பயன்படுத்துவதும், கிழக்கத்தியக் கலாச்சாரம் மேற்கின் ‘அக அசுத்தத்தை’ பதில் கருத்தாயுதமாகப் பயன்படுத்துவதுமான விளையாட்டில் பொதுவாகக் கொள்ளப்படும் ஸ்டீரியோடைப்புகளாக அக்கட்டுரையில் இருக்கும் கருத்துக்களைப்பற்றிய உங்கள் விமர்சனம் நல்லதொன்று.

  //படைப்புகளும் சுயசரித ஒப்புதல் வாக்குமூலங்களிலும் ஊடாக, ‘ஆஹா கவிஞன் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறான்’ என அப்படியே பிரமித்துப்போய் மெய்சிலிர்த்து நின்றுவிடுவதால் எழுகிற கேள்விதான் மேலுள்ளது.//
  சரிதான். இதை கவிஞர்கள்/படைப்பாளிகள் என்று பார்ப்பதுடன் சேர்த்து, தொலைக்காட்சியில்/ஹாலிவுட் படங்களில் (IT’S MY JYAAAB!) பார்க்கும் குற்றவாளிகள் குறித்த விசாரணைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் இவற்றுடன் சேர்த்துப் ‘பாவமன்னிப்பு’ என்ற, ஓரளவு நமக்கு அந்நியமான கருத்தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும்போது மேற்கத்திய உலகின் ‘கடமைக்கான (கண்மூடித்தனமான என்று சேர்த்துக்கொள்ளவும்), ஒப்புக்கொள்ளலுக்கான பரிசளிப்பு’ என்ற அறவியல் carrot, தன் கட்டமைப்புக்குள் நிரப்பும் கருத்தாக்கங்கள் வழிந்து நம் பக்கம் வருகையில், வேறொரு பாத்திரத்தில் அதைப் பிடிக்க முயல்கையில் ஏற்படும் சாதாரணச் சிக்கல் போலொன்றானதுதான் இது என்று படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் ஜனங்களை “உறையவைத்த” BTK Killerன் வாக்குமூலம் மாதிரி என்றும் ஒருவகையில் பொருத்திப்பார்த்துக் கொள்ளலாம். காரண-விளைவுத் தளத்தைத் தாண்டியும் இதுகுறித்து மேலும் எழுதுவீர்களென நம்புகிறேன். நல்லதொரு பதிவு. நன்றி.

 5. ஒரு பொடிச்சி
  July 18, 2005 at 7:32 pm

  நன்றி ரோசாவசந்த், சுரேஷ்கண்ணன், டீ.ஜே, மாண்ட்றீஸர்.

  பாப்லோ நெரூதா கவிதைகளை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் உயிர்மை வெளியிட்டிருக்கிறது. அதை முன்வைத்தும், பா.நெ. குறித்த மனப்பதிவை –டீ.ஜே கூறின ரவிக்குமாரது விமர்சனத்தையும் குறிப்பிட்டு- எழுயதை பின்னர் இடுகிறேன்.

  அடிப்படையில் தவறாக கற்பித்துக் கொள்வதுதான் நடந்திருக்கிறது. எதிர் எதிரான இரண்டு கலாசாரங்கள் ஒன்றுமாறி ஒன்று வாசிக்கப்படுகையில் ஏற்படுகிற ‘சாதாரண சிக்கல்’ தான். ஆனால் வேறு பால்/இனம் என்று வருகையில் இந்த வாசிப்பின் அபத்தம் குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து இருக்கும். அதிலும் ய.ரா. போன்றவர்கள் -அலட்சியமாக ஒரு பொறுப்பின்றி
  மறுபரிசீலனை இன்றி- தாங்கள் சார்ந்த கருத்துக்களை நியாயப்படுத்துவதன் ஒரே நோக்கோடு- செய்கையில்தான்… எரிச்சலை தருகிறது.

  ய.ரா. வினது கட்டுரை என்றபடியால் பிரித்தறிய இலகுவாயிருந்தது. புனைவென்றால் மிக மிகச் சிக்கலாயிருக்கும் என்று நினைக்கிறேன். ஷோபா சக்தியின் ம் புனைவு பற்றிய வாசிப்பாக “இங்குள்ள பிள்ளைகள் சிறுவயதிலேயே (10,11) (பாலியல் பற்றி அறிந்தவர்கள்) பெரியவர்கள்தானே, அங்கு (இலங்கையிலு)ள்ளவர்கள் போலில்லைத்தானே, அப்போ இதைப் பெரிதாக எடுக்க முடியாது” என்றொன்றை ஒருவர் கூறியபோதான பதற்றத்தை என்ன செய்வதென யோசிக்கிறேன். மேற்கத்தையக் குழந்தைகள் தோற்றத்தில் பாலியல் அறிவில் ‘கீழைத்தேய’ குழந்தையிலும் மாறுபட்டவர் என்றால், தகப்பன் வயதுடை ஒருவனோடு பாலியல் தேர்வுக்குத் தயாரானவர்கள் எனலாமா? எமது உலகை உயர்த்திப் பிடித்தபடி, இது எவ்வளவு ஆபத்தான எண்ண ஓட்டம்? ம் ஐ முன்வைத்தும் இந்த எண்ணங்கள் குறித்தும் அவை வந்தடைகிற முடிவுகள் குறித்தும் விரிவாய் எழுதலாம்.

  பிற கலாசாரங்கள் பற்றிய பதிவுகள் உரையாடல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிற நமது சூழலில் அவர்கள் பற்றிய தவறான இந்தப் புரிதல்கள், இடைவெளிகள் குறைகையில், மாறிவிடும் என நம்பலாம்.

 6. Balaji-Paari
  July 18, 2005 at 10:38 pm

  நல்லதொரு பதிவு.
  நேர்மையான சில கருத்துக்களை கையாள மறைமுகமாகவோ அல்லது வெஞ்சினத்தாலோ எடுக்கப்படும் எந்த ஒரு வழிமுறையும் (ஆயுதமும்), விடுதலை குறித்த மரபு எண்ணத்தை உடைப்பது என்ற பெயரில் வெளிவந்தாலும், அதில் இருக்கும் ஆழமான அல்லது நுட்பமான மைய ஓட்டம் மிகவும் புழக்கத்திலிருக்கும் ஒரு (மரபு சார்ந்த பிற்போக்குத்தனமான) வழியாகவே இருக்கும் என நிரூபிக்கின்றது ய.ரா-வின் கட்டுரை. ய.ரா இந்த கட்டுரையை பால் பேதம் என்ற விசயத்தை ஏற்றுக் கொண்டு பேசுவதே இதை நிரூபிக்கின்றது. ஆகையால் இவர் இதை தாண்டி இதில் பேச முடியவில்லை.
  இதை சுட்டிய பொடிச்சிக்கு நன்றிகள்.

 7. Narain
  July 21, 2005 at 5:00 pm

  மிக முக்கியமான பதிவு. இதை இரண்டு மாதங்களுக்கு முன்பு படித்தப்போதே ஏதோ நெருடியது. ஆனால், நீங்கள் நெத்தியடியாய் போட்டு உடைத்திருக்கிறீர்கள். இப்பதிவினை அப்படியே காலச்சுவடிற்கு அனுப்புங்கள். மாற்று சிந்தனைகளோடு வரலாற்றினையும், பிற திருவுரு நிறுவுதல்களையும் இனி வரும் மக்கள் கவனமாக செய்தல் அவசியமென்று நினைக்கிறேன். மிக முக்கியமாக, ஒரு நிகழ்வினைப் பார்ப்பதிலும், அதனை அர்த்தப்படுத்துவதிலும், அதனை மீட்புருவாக்கம் செய்வதிலும் இனி கவனமோடு செயல்படவேண்டியதிருக்கும்.

 8. peddai
  April 18, 2009 at 6:07 am

  # selvanayaki Says:
  March 27th, 2007 at 3:03 am

  ஒரு சிறு மாலைத்தூக்கத்தின் விளைவாய்த் தொலைந்துபோன இரவு நித்திரையை வலிந்து வரவேற்றுக்கொண்டே வேறெதுவும் செய்யப்பிடிக்காமல் உங்களின் பதிவுகளை ஒரு மீள்வாசிப்புச் செய்துகொண்டிருந்தேன். முன்பெப்போதோ அவசரமாய் வாசிக்கையில் கைகளில் ஏந்திக்கொள்ளும் வண்ணம் ஓடிப்பிடிக்கத் திராணியற்றுத் தவறவிட்ட துளிகளையும் இப்போது சேமித்துக்கொள்ள முடிந்தது.
  # பொடிச்சி Says:
  March 27th, 2007 at 10:31 am

  மீள்வாசிப்பிற்கு நன்றி செல்வநாயகி.. சிலவேளை நாங்கள் எழுதியதை திருப்பிப் படிக்கையில் எங்களுக்கே வேறுமாதிரி ஒலிப்பதும் நடக்கும் 🙂

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: