Home > கவிதையியல், திரை, ஸென் - Zen > சீடாரின்மீது வெண்பனி விழுகிறது – ஜென் கவிதைகள்

சீடாரின்மீது வெண்பனி விழுகிறது – ஜென் கவிதைகள்

மலையின் ஆழ்சரிவுகளில்
காலடியில் க்ரிம்ஸன் இலைகள் நசுங்கத்
திரிந்தலையும் கலைமான் அழைக்கிறது.
அதன் தனிமைக்குரலை நான் செவியுறும்போது,
இந்த இலையுதிர் காலம்தான்
என்ன சோகம், என்ன சோகம்!
0

ஸாருமாரு
ஆண்.ஜப்பான்.9ஆம் நூற்றாண்டு

ப்பானைப்பற்றி நிறைய பிரேமை உண்டு; அத் தேசம், ‘பொம்மை’ போன்ற அழகிய பெண்கள், மென்மை, சாந்தம், அழகு + ‘ரஃப்’ ஆன ஆண்கள்! வன்கூவருக்கு வருமுன்னம் இந் நகரம் பற்றிய சித்திரத்துடன் இங்கு வசிக்கிற ஜப்பானியர்கள் பற்றியதும் கலந்திருந்தது. சிறு வயதுக் கதைப் புத்தகங்களில் நீண்ட மெல்லிய மீசையுடன் சிறிய மீன் கண்களுடன் பின்னாலே குடுமி வைத்திருந்த சீனத்து மற்றும் ஜப்பானிய ஆண்கள், பெண்கள், நெடிய மூங்கில் மரங்கள்…
மற்றும், பள்ளி ஓவிய வகுப்புகளில் தூரிகைகளை இலாவகமாய்க் கையாள்கிற ஜப்பான் மாணவர்கள், அவர்களது கலைத்துவமான எழுத்துக்கள் முதல் அவர்கள் குறித்து நிறைய பிம்பங்கள்; பிறகு, ஒரு நூதனமான உலகத்துள் அழைத்து செல்வதுபோல இருக்கும் படித்த ஸென் படைப்புகள். புதிர், தேடல், சரணடைதல் என அத் தத்துவம் உணர்வுத்தளங்களில் சென்று சலனப்படுத்தும்.
அவர்கள்சார் கலைத்துவமான திரைப்படங்களில், பின்னணியில் போகிற இசையே தன்னோடு எடுத்துச்செல்லும் பார்வையாளர்களை. (எல்லோருடையதும்போலவே) பாரம்பரியமிக்க அவர்களது கலாசாரம், வாழ்வியல் அழகியல்- இவற்றை எதிரொலிக்கும் கலைப் படைப்புகள், அவர்களது பாதிப்பில் விளைகிற எல்லாவற்றிலுமே இழைகிற நாதம் எங்கோ வெகுதூரங்களில் சாத்தியப்படுகிற மகா அமைதியை சாத்தியப்படுத்துகின்றன போலத் தோன்றும்…
ஒருவகையான சாய்வு மனோநிலையுடனே ஜப்பானிய படைப்புகளை அணுகிவருவது. சில வருடங்களிற்குமுன் வகுப்பறையில் நடந்த இனத்துவேச மற்றும் பெரும்பான்மை சமூகங்களால் அடக்கப்படுகிற சிறிய குழுமங்கள் பற்றிய உரையாடலின்போது, ஜப்பானியர்களை பின்னணியாகக்கொண்ட ஒரு படமும் Obasan என்கிற நாவலும் அறிமுகமாயின. இந்தப் பத்தி, 1994இல் வந்த David Guterson இன் நாவலின் படமாக்க வடிவமான Snow Falling on Cedars (1999) என்கிற, ஒரு, மிக மிக அழகான, படத்தைப் பற்றியது.
உண்மையில் அது ஒரு அழகான படம்! அழகான சீடர் மரங்கள் மேலே வெண்பனி விழுகிறது! படம்பூரா வியாபும் கவித்துவ அழகியலை இத் தலைப்பே சொல்லிவிடுகிறது. மரத்திலிருந்து ஒழுகிற நீர் வரை அழகியலின் ஈரம்பட எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதைப்பின்னணி, 1954 இல் வோஷிங்டனிற்குத் தொலைவே, ஒரு மீனவச் சிறு நகரில், மர்மமான முறையில் ஒரு வெள்ளை மீனவன் இறந்துபோவதில் ஆரம்பிக்கிறது. இச் சிறு நகர்ப்புற மக்களிடையே, இச் சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரிருந்திருக்கும், அமெரிக்க-ஜப்பானியர்கள் (Japanese American) மீதான அமெரிக்க மக்களின் அவநம்பிக்கையை மேலும் வலுக்கச் செய்கிறது. ஒரு ஜப்பானிய மீனவன் (இறந்தவனின் கூட்டாளி) சந்தேகத்தின்பெயரில் கைதாகிறான். அவனது மனைவி ஹற்சூ (Hatsue) இன் இளம்பிராயக் காதலன் இஸ்மேல் ((Ishmael) அந்த சிறுநகரின் பத்தரிகையாளன், அவன் அவள் தன்னை –இனப்பிரச்சினைகளின்பொருட்டு- ‘ஏமாற்றியது’ என்பதையும்மீறி அவளது கணவன் வெளியேவர உதவுவானா என்பதுதான் கதை. அதூடே, தொடரும் நீதிமன்ற விசாரணைகள், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, புலனடக்கத்திற்கு கலாசாரரீதியாகப் பழக்கப்படுத்தப்பட்ட கைதான ஜப்பானியனை, குளிர்வான, ஒரு –குற்றஉணர்ச்சியற்ற- கொலையாளியாக வெள்ளை மக்கள் பார்த்தல், ஒரு இனத்தின்மீதான ‘நம்பிக்கையின்மை’ ‘பாதுகாப்பின்மை’ (Insecure) ஆய் உணர்தல், ஒரு நிரபராதியை எப்படியெல்லாம் பார்க்க வைக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின், கனடாவிலும் அமெரிக்காவில் பலவிடங்களில்போல, வன்கூவரில் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, முகாம்களில் இட்டது கனேடிய அரசாங்கம் (இதை அடிப்படையாக கொண்டதே மேலே குறிப்பிட்ட Obasan என்கிற நாவல்). பிழைப்புத்தேடி வாழ வந்து, உழைத்து, நிலங்களை வாங்கி முன்னேறிய அந்த மக்கள் கல்வி மறுக்கப்பட்டு கடின உழைப்பிற்காக (hard labour) நிறுத்தப்பட்டார்கள். இதற்குக் காரணமான, 1941 வருடம், பேர்ள் துறைமுகம் தாக்கப்பட்டபிறகு, மாறிய அமெரிக்கச் சூழலால், ஒரு இடத்தில அன்பான இரண்டு காதலர்களோட வாழ்வு எப்படிப் மாறிப்போகுது…

அத் தாக்குதலுக்கு முந்தைய அமெரிக்காவில், தனது குடியிருப்பிற்குப் புதிதாய் வருகிற சிறுமி ஹற்சூவை வியப்புடன் கண்காணிக்கிறான் சிறுவன் இஸ்மேல். சிறிது சிறிதாக, அந்த வெள்ளைப் பையனுக்கும் சின்ன ஜப்பான் பெண்ணுக்கும் வருது காதல்… வசந்த காலங்களில் சீடர் மர மறைவுகளூடே அவர்கள் கூடித் திரிவதும், மரத்திலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருப்பதும்… அத்தகைய அவர்களுடைய வளரிளம் பருவத்து (Aadolescence) க்காதல் துறைமுகத் தாக்குதலிற்குப்பிறகு, அது அமெரிக்க-ஜப்பானியர்கள்மீது திருப்பப்பட்டு, அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முகாம்களிற்கு அனுப்பப்பட்டபோது பிரிந்துபோகிறது. இஸ்மேல் அமெரிக்க படைவீரனாய் போரிடுகிறபோது, ஹற்சூவினது கடிதம், அவர்கள் இணையமுடியாதெனவும் அவள் திருமணம் செய்துகொள்ளப்போவதையும் கூறுகிறது; போரிடலின்பின்னான, முகாமில், அதைப் படித்தபடி அழுகிறான்; அந்த யுத்தத்தில் அவனது கையை இழக்கிறான். ஹற்சூ ஜப்பானியனொருவனை (அவனும் அமெரிக்க இராணுவத்திலிருந்தவன்) மணமுடிக்கிறாள்; அவன், அவர்களது முதல் இரவில், அவளை ‘இது உன் முதல் தடவைதானே’ எனக் கேட்க அவள் ஓமென்பதும், தனது கை அகற்றப்படுகிறபோது இஸ்மேல் அவளை ‘ஜப்பானிய வேசை’ (Japs Bitch) என்று திட்டுவதும் ஆய் யதார்த்தமாய், ஒரு பயணம்போல, அந்தக் காதலில், உறவில், வாழ்வின் இயல்பில் நாமும் ஐக்கியப்பட்டிருப்பதுபோல கதை நகர்கிறது. யுத்தத்திலிருந்து ஒரு கையின்றித் திரும்பிவருகிற அவன், திருமணம் செய்துகொண்டுவிட்ட ஹற்சூவை மறித்துக் கேட்கிறான்: I know you’ll think this is crazy, but all I want to do is hold you, and I think that if you’ll let me do that just for a few seconds, I can walk away, and never speak to you again.
அவள் அது தன்னால் முடியாது என்றுவிட்டு நகர்வாள்.

பின்னர், நீதிமன்றத்தில் தனது கணவன் -மற்றும் தன்- ஜப்பானிய சமூகம் நடத்தப்படுகிற விதம் குறித்த ஹற்சூ (இஸ்மேலிடம்) சொல்லுவாள்: ”இது நியாயமே இல்லை.” ” it’s not fair”. அவன் சொல்லுவான்: it’s about all the unfair things we all do to each other. அந்த அவனது வசனம் -அவள் தன்னை திருமணம் செய்ய மறுத்ததை சுட்ட- மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்கிற அநியாயங்களூடே, ஜீவநாடியாய் காதலைவைத்து, அழகான ஒரு கதையை படம் பிடித்திருக்கிறார்கள்.
அமைதியாய் உட்காந்திருந்து, ஜப்பானியர்களின் ஜென் கவிதைகள் படிக்கிறபோதும், இந்தப் படம்தான் நினைவோடு வருகிறது. இஸ்மேலின் காதலின் ஏக்கம் கலந்த கண்கள், சொல்லிக்கொண்டேயிருக்கின்றன (மாமன்னர் கோக்கோ, ஆண்.ஜப்பான்.830-884):
வசந்த காலத்தில்
வயல்களில்
பச்சிலைகள் சேகரித்தவண்ணம்
உனக்காகத்தான் நடந்து செல்கிறேன்,
என் ஆடையின்தொங்கும் கைகளில்
வீழும் பனி
திட்டுத் திட்டாய்ப் படிய.
0

ப்படியான கலப்பான பல்வித வியித்திர உணர்வலைகளுடன் படித்தது: பெயரற்ற யாத்ரீகன் என்றொரு ஜென் கவிதைகள் தொகுதி (தமிழில்: யுவன் சந்திரசேகர்). தற்செயலாகத்தான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். யுவன் சந்திரசேகர், மோசமான புனைவாளாராக கவிஞராக பேச்சாளராக பலவிடங்களில் மனப்பாதிப்பு/பதிவு தந்தவர்.
1: சொல் புதிது இதழில் இவரும் செயமோகனும் பங்குகொண்டு பேசிக்கொண்ட கவிதை பற்றிய உரையாடல் (அதுவும் 10 இற்கும் மேற்பட்ட பக்கங்களில் என நினைவு) தந்த மனப்பாதிப்பு இன்னும் போகவில்லை. ஒலிப்பதிவுஇயந்திரத்தை போட்டிட்டு, தங்கட பாட்டுக்கு, அவர்கள் நடத்திய “கவிதை பற்றிய” உரையாடலில் வாசகர்களுக்கோ கவிதைகளுக்கோ ஏன் அவர்களுக்குத்தானும் பிரஜோயனம் உண்டா என்றால்……. தேரியவில்லை. அதைப் (முழுமையாக) படித்துவிட்டு, வாழ்க்கை வெறுத்துப்போய் இருந்தபோதுதான் என நினைக்கிறேன், இரண்டாவது ‘கொடுமை’ படித்தேன்.
2: ஆரண்யம் இதழில் யுவன் எழுதிய 22 காதற் கதைகள். கண்ணராவி, அதையெல்லாம் சேர்த்து காலச்சுவடு ‘ஒளி விலகல்‘ என்றொரு தொகுப்பாய், வெளியிட்டது. தமிழினி வெளியிட்ட இவரது குள்ளச் சித்தன் சரித்திரம் அபத்தம். இப்படி, இந்த யுவனே ஒரு அபத்தமாய்த்தான் மனப்பதிவு. பிடிக்கும் என்கிற எண்ணமே துளியுமற்று, சும்மா விரித்து படிக்க ஆரம்பித்த எதிர்பாராக்கணம் ரம்மியமா மனமெங்கும் நூல் வியாபித்தது. இப்போதுகூட இதை எழுதுகிறபோது புத்தகத்தின் 95 வீதமான கவிதைகளை இந்த பத்தியெங்கும் பரப்பத் தோன்றுகிறது, அப்படியொரு ரம்யமும் சாந்தமும்..
மொழிபெயர்ப்பென்று பார்த்தால், அது பெரிதாய் தொந்தரவு செய்யவில்லை. தொடர்ச்சியும் இடறலின்மையுமே முக்கியம். moss ஐ ஈரநிலச்செடி என்றும், Pine tree இற்கான தமிழ்ச் சொல்லாய் ஊசியிலை மரமென்றும் பைன் என்றுமும் உபயோகிக்கிறார். இரண்டும் பிடித்திருந்தது. Moss என்பதை பாசி என உபயோகித்தால் எளிமையாக, நன்றாக இருந்திருக்குமென்று பட்டது. இவைகள் சில கவனங்களே.
அடிப்படையில், அமைதியானதொருபோது வாசிக்கையில் மிகவும் ஏகாந்த உணர்வைத் தந்தது நூல். ஸோக்கா! ஸென்/ஜென் கவிதைகளை தாய்மொழியில் படிக்கையில் ஒருவித கிறுக்கும் மோக/னநிலையும் எழுந்தது. வாசிப்பை தடைசெய்யாத புத்தக வடிவமைப்பு. ஜென் கவிதை நேசகர்கள் அல்லாதோரும் கூட விரும்பக்கூடிய நூல்.

நூலிலுள்ள, சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்

1
எனது மங்கைக்காக நான்
ப்ளம் மரத்தின்
உச்சாணிப் பூக்களைப் பறித்தபோது
கீழ்க் கிளைகள்
பனித்துளிகள் சொட்டி
நனைத்தன என்னை
0

ஹிட்டோமாரோ
ஆண்.ஜப்பான். 8-ஆம் நூற்றாண்டு

2
எட்டங்குல நீளம் அது. உறுதியானது. என்
செல்லப்பொருள். இரவில்
தனித்திருக்கும்போது
முழுக்கத் தழுவிக்
கொள்கிறேன் அதை –
வெகுகாலமாயிற்று
அழகான பெண்ணொருத்தி அதைத்
தொட்டு. என் கோவணத்துக்குள்
இருக்கிறது ஒரு
முழுப் பிரபஞ்சம்!
0

இக்யு ஸோஜன்

3
எதிலும் முனைப்பின்றிச்
சோம்பலாய் இருக்கிறேன். தன்னைத்
தானே பார்த்துக்கொள்ளட்டுமென
விட்டுவிட்டேன் உலகத்தை.
பத்து நாட்களுக்கான அரிசி
என் பையில் இருக்கிறது.
கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.
எதற்குத் தொணதொணப்பு
மாயையையும் ஞானத்தையும் பற்றி?
கூரையில் வீழும்
இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி
வசதியாக அமர்ந்திருக்கிறேன்,
கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.
0

ட்டய்கு ரியோக்கன்

4
உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறந்து விடுகிறாய்
என்றால், மிக நல்லது!

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறக்காதிருக்கிறாய்
என்றால் – மிக மிக நல்லது!
0

ஸேங்காய் கிபன்

5
நான் பிறந்த இந்த உலகத்தை
இறக்கும்போது
விட்டுச் செல்கிறேன். ஓர்
ஆயிரம் நகரங்களுக்கு,
கணக்கற்ற இல்லங்களுக்கு
என்னைச் சுமந்து சென்றிருக்கின்றன
என் கால்கள் –
இவையெல்லாம் என்ன?
நீரில் பிரதிபலிக்கும் நிலா,
வானில் மிதக்கும் பூ,
ஹோ!
0

கிஸன் ஸென்ரை
ஆண். ஜப்பான். 1871-1878

6
எங்கே போனான் ஸோக்கன் என
எவராவது கேட்டால்,
இதை மட்டும் சொல்லுங்கள்.
“வேறொரு உலகத்தில்
கொஞ்சம்
வேலையிருந்தது அவனுக்கு.”
0

யாமஸாக்கி ஸோக்கன்
ஆண். ஜப்பான். ?-1540

7.
இரண்டு
அல்லது மூன்று
நூற்றாண்டுகள் வசிக்க
எண்ணியிருந்தேன். இருந்தும்,
இதோ என்னிடம்
வருகிறது மரணம், வெறும்
எண்பத்தைந்து வயதே நிரம்பிய
குழந்தையிடம்.
0

ஹனபுஸா இக்கீய்
ஆண். ஜப்பான். ? – 1843

8.
நிஹோன் எனோக்கியில் உள்ள
எனது கல்லறைக்கு
வந்து சேர்கிறேன்.
ஆனந்தமாயிருக்கிறது. இங்கே,
என் அருகில்,
நண்பர்கள் கிக்காக்குவும்,
இட்ச்சோவும் இருக்கிறார்கள்,
எனக்குப்
பேச்சுத் துணையாக.
0

க்கிட்டா ட்டக்கெக்கியோ
ஆண். ஜப்பான். ? – 1856

9.
என்ன வேடிக்கை!
அதோ, தியான அறையில்
தேநீர் விநியோகிக்கும் நடிகன்
நான்தான்
தான் என்று
நினைத்துக் கொள்கிறான்!
0

லூ ஹார்ட்மேன்
ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு

10.
எதிலும் நம்பிக்கையின்றி
சும்மா அமர்ந்திருக்கிறேன்,
என் சுவாசத்தைக் கவனித்தவாறு.
முப்பது வருடங்களுக்கு பிறகும்
அது
வெளியில் போகவும்
உள்ளே வரவுமாக
இருக்கிறது
0

ஆல்பர்ட் கோல்ஹோ
ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு

——————————————-
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள் (தமிழில: யுவன் சந்திரசேகர்)
உயிர்மை பதிப்பகம் (டிசம்பர் 2003)

Advertisements
 1. Thangamani
  June 21, 2005 at 7:29 am

  நன்றிகள் பொடிச்சி. அருமையான பதிவு என்று சொல்வேன். எனக்கு இந்த ஜென் கோன்களும், கவிதைகளும் அவைகள் ஏற்படுத்துத்தும் வெற்றிடங்களுக்காக மிகவும் பிடிக்கும்.

  இந்தப்புத்தகத்தை சென்னையில் வாங்கி என் தோழியோடு சாலையோரமாகவே கொஞ்சம் படித்துவிட்டு அவளுக்குக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அவள் படித்தாளா என்று தெரியவில்லை. கேட்கவேண்டும்.

  அதிலும்

  //எங்கே போனான் ஸோக்கன் என
  எவராவது கேட்டால்,
  இதை மட்டும் சொல்லுங்கள்.
  “வேறொரு உலகத்தில்
  கொஞ்சம்
  வேலையிருந்தது அவனுக்கு.”//

  இந்தக்கவிதை இப்போதும் நினைவில் இருக்கிறது…

  நன்றிகள்.

 2. ROSAVASANTH
  June 21, 2005 at 10:06 am

  இப்போதுதான் ஒரு தண்டமான ஒரு பதிவை எழுதிவிட்டு, அந்த பாவத்திலிருந்து மீள இதை படித்தேன் நன்றி.

 3. சுந்தரவடிவேல்
  June 21, 2005 at 10:56 am

  சியாட்ல் நகரில் பனையோலைத் தொப்பிகளுடன் ஜப்பானியர்களைக் கண்டது நினைவுக்கு வந்தது. உங்க வான்கூவருக்கு இன்னும் வந்ததில்லை, அழகென்று கேள்வி.
  நல்ல குறிப்புகள்.
  மகன் தூங்கும்போது தூங்கிவிடாமல் இந்தப் படத்தையும் பார்த்துவிட்டால் மிகவும் நல்லது. தானும் விழுந்து தூங்கிவிட்டால் மிக மிக நல்லது :))

 4. மதி கந்தசாமி (Mathy)
  June 21, 2005 at 12:46 pm

  நல்லதொரு பதிவுக்கு நன்றி பொடிச்சி. பதிவைப்படித்து முடித்ததும் மனம் நிம்மதியாக, நீங்கள் எடுத்திட்ட கவிதைகளை நினைத்தபடி இருக்கிறது.

  இப்போதுதான் மீண்டும் வந்து பதில் போடுகிறேன்.

  ‘Snow falling on Cedars’ இந்தப் படத்தையும் யுவன் சந்திரசேகரின் புத்தகத்தையும் பார்க்க/வாசிக்க வேண்டும்.

  அறிமுகத்துக்கு நன்றி

  -மதி

 5. வசந்தன்(Vasanthan)
  June 21, 2005 at 12:49 pm

  பதிவுக்கு நன்றி பொடிச்சி.
  கவிதைகளைப் போலவே உங்கள் பதிவும் இதமாக இருந்தது.

 6. -/பெயரிலி.
  June 21, 2005 at 1:15 pm

  ஒரு பொடிச்சி
  இதமான பதிவு.
  ஸென் கவிதைகள்/கதைகள் என்பன வர வரப் பெயரளவிலே எனக்கு அலுப்பூட்டுகின்றனவாக இருக்கின்றன. இந்நிலைக்கு, அவற்றின்பெயரிலே வந்த படைப்புகளும் பெயர்ப்புகளும் காரணம். யுவன் சந்திரசேகரின் பெயர்ப்பு கிடக்கட்டும். உங்கள் பதிவு மிகவும் இதமாக இருக்கின்றது

 7. IIஒரு பொடியன்II
  June 21, 2005 at 3:39 pm

  மனதுக்கு இதமளிக்கும் பதிவு.நன்றி பொடிச்சி

 8. KARTHIKRAMAS
  June 21, 2005 at 4:10 pm

  ஒரு பொடிச்சி
  இதமான பதிவு.

 9. டிசே தமிழன்
  June 21, 2005 at 6:57 pm

  நல்லதொரு பதிவு பொடிச்சி. ஜென் கவிதைகள் நெகிழ்ச்சியாக இருந்தன.
  ஒரு சின்னக்குழப்பம். யுவனும், யுவன் சந்திரசேகரும் ஒருவரா? நானும் ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ அரைக்கிணறு தாண்டாமல் மூடி வைத்துவிட்டேன். அலுப்பூட்டும் எழுத்து நடையாக இருந்தது அது.

 10. aazhiyaal
  June 22, 2005 at 2:02 am

  ‘பெயரற்ற யாத்திரிகன்’ பற்றிய நல்ல பதிவு.யுவன் சந்திரசேகரின் நாவல் ‘பகடையாட்டம்’ எனக்குப் பிடித்திருந்தது. ‘ஏற்கனவே’ சிறுகதைத் தொகுதி வாங்கினேன். இன்னமும் முழுதாகப் படிக்கவில்லை.

  டிசே, பொடிச்சி இந்தப் பதிவில் யுவன் சந்திரசேகரைத்தான் யுவன் என்று சுருக்கமாகச் சொல்லுகிறா. நீங்கள் குறிப்பிடுவது போல எம்.யுவன் என்று ஒரு கவிஞரும் இருக்கிறார். இவர் வேறு, அவர் வேறு.

 11. டிசே தமிழன்
  June 22, 2005 at 4:38 am

  நன்றி ஆழியாள். இப்போது எனக்கும் இன்னும் குழப்பம் கூடிவிட்டது 😦
  // சொல் புதிது இதழில் இவரும் செயமோகனும் பங்குகொண்டு பேசிக்கொண்ட கவிதை பற்றிய உரையாடல் (அதுவும் 10 இற்கும் மேற்பட்ட பக்கங்களில் என நினைவு) தந்த மனப்பாதிப்பு இன்னும் போகவில்லை. ஒலிப்பதிவுஇயந்திரத்தை போட்டிட்டு, தங்கட பாட்டுக்கு, அவர்கள் நடத்திய “கவிதை பற்றிய” உரையாடலில்…//
  இப்படியான உரையாடல் எம்.யுவனோடுதான் நடந்ததாய்தான் சொல்புதிதுவில் வாசித்ததாய் நினைவு. பொடிச்சியோ அல்லது வேறு யாராவது இது சரியா தவறா என உறுதிப்படுத்த முடியுமா?

 12. aazhiyaal
  June 22, 2005 at 5:50 am

  ‘Snow falling on Cedars’பற்றி அறியத் தந்ததுக்கு நன்றி பொடிச்சி. பார்க்க முயற்சிக்கிறேன்.

  டிசே,பொடிச்சி குறிப்பிடும் அந்த சொல்புதிது உரையாடல் நான் வாசிக்கவில்லை.

 13. ஒரு பொடிச்சி
  June 22, 2005 at 5:01 pm

  நண்பர்களுக்கு நன்றி.
  ஒரு பொடியன்: நீங்கள் பொடியன்’கள்’ இல்லைத்தானே? வருகைக்கு நன்றி.

  சுந்தரவடிவேல்! வன்கூவரில் வீடுகள், மற்றும் சூழல் கேரளா மற்றும் ஈழத்து வீடுகளை ஒத்ததுபோல் இருப்பதாக இங்கு வருபவர்கள் கூறுவார்கள்.. முதன்முதலில் ஒரு விடுமுறையில் வந்திருக்கிறேன். அழகான பிரதேசம்.

  டீ.ஜே. எம்.யுவனின் கவிதைகள் ‘காலச்சுவடில்’ வந்தவை போன்றன தவிர்த்து படித்ததில்லை. நான் எழுதியது யுவன் சந்திரசேகரைப் பற்றித்தான் (இருவரும் ஒருவரா என்பது பற்றி தெரியாது). ஆரண்யம் இதழில் கதை எழுதியது யு.ச.சேகர். சொல்புதிது இதழில் (படமும் போட்டிருந்த நினைவு) வந்தவரும் அவர் என்றுதான் இப்போ இங்கே கேட்கப்படும் வரை நினைத்தேன். என்னிடமும் குறிப்பிட்ட சொல்புதிது இலலை, தேடிப் பாத்தபின் பதிகிறேன்.
  நன்றி!

  பாறைக்கருகில் நிற்கும்
  ஊசியிலை மரமும் தன்
  ஞாபகங்களைக் கொண்டிருக்கிறது போலும்;
  ஓர் ஆயிரம் வருடங்கள் கழிந்தும்
  அதன் கிளைகள்
  தரையை நோக்கி
  எப்படி வளைகின்றன பாரேன்
  0

  ஓனோ நோ கோமாச்சி
  பெண்.ஜப்பான்.834?-?

 14. பெடியன்கள்
  June 22, 2005 at 10:54 pm

  பெடியன்’கள் என்கிற எமது இயக்கத்தின் பெயரை அநாவசியமாகப் பயன்படுத்தி, எம் இயக்கத்தின் மீது களங்கத்தையும், உலகளாவிய ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களையும், மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் உங்கள் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மேலும் தொடர்ந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். எமது தலைமை விரைவில் இது சம்பந்தமாக தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும். உங்கள் தளம் மீதும் தாக்குதல் நடைபெறலாம்.

  – புதியோன்
  (ஊடுருவல் படையணி)

 15. ஒரு பொடிச்சி
  June 27, 2005 at 4:40 pm

  டீ.ஜே, ஆழியாள்,
  எம்.யுவனும் யுவன் சந்திரசேகரும் ஒருவரே. ‘கொங்குதேர் வாழ்க்கை 2’ இல் எம்.யுவனின் கவிதைகள் இருக்கின்றன. அவர் பற்றிய விபரமாய் குறிப்பிட்ட புனைவுகளும் (பகடையாட்டம், திரை விலகல், கு.சி.சரித்திரம் etc) கவிதைத் தொகுப்புகள் பற்றிய விபரங்களும் தரப்பட்டிருக்கின்றன.

  பொடியன்கள்!
  ‘சந்தேகமே’ படக் கூடாதா? அல்லது கேள்வியே கேட்கப்படாதா? 😉
  மிரட்டலென்றால், இத் தளத்தைப் பற்றி என்ன—
  நான் இருப்பது இலக்கியம்/ சந்தடி/ லொட்டு லொசுக்கு இல்லாத அமைதியான ஃ பாதுகாப்பான இடம்.

  அதனால் என் பங்கிற்கு மேலும்
  கொஞ்சம்:
  நிங்கள் ‘லண்டனில்’ தடை செய்யப் பட்டால், அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவுந்தானே பின்பலம்? அவர்களோடு கொஞ்சம் பாரமில்லாமல் (அதாவது ‘light’ ஆய்!) behave பண்ண வேணாமா?

  பெட்டை
  (ஊகிப்போர் படையணி)

 16. டிசே தமிழன்
  June 27, 2005 at 5:39 pm

  பொடிச்சி, எம்.யுவனும் யுவன் சந்திரசேகரும் ஒருவர் எனத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. நானும் சில தினங்களுக்கு முன் தான் நீங்கள் குறிப்பிட்ட சொல்புதிது(2001)இதழைத் தேடியெடுத்திருந்தேன். அதில் எம்.யுவுடன் கவிதை பற்றிய உரையாடல் என்று குறிப்பிடப்பட்டு அவரின் படமும் முன்னட்டையில் போடப்பட்டிருந்தது.

 17. Anonymous
  November 30, 2005 at 4:37 pm

  “snow falling on cedars” is a nice movie. i didn’t read obasan yet. thank you for this reviews.
  poems are nice and related to your topics

 18. மதுமிதா
  November 30, 2005 at 5:33 pm

  நன்றி பொடிச்சி
  இந்நூலை மூன்று முறை வாசித்தேன்.மறுபடி மறுபடி வாசிக்கச் செய்யும் மாயம் இதில் உள்ளது.
  இதைப்போன்றே இறையன்பு எழுதிய நூலும்.

 19. க.சதீஷ்குமார், கோவை
  November 21, 2007 at 10:30 am

  உங்கள் கவி ரசனை நன்று
  உங்கள் ஜிமெயில் முகவரி வேண்டும்
  என் கவிதை குழுவில் உங்களை சேர்க்க…

 20. ஒரு பொடிச்சி
  November 21, 2007 at 3:58 pm

  thanx satheesh.. buy iam not a fan of poetry. however,
  here u go:
  dsonador@gmail.com

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: