Home > க(வி)தைசொல்லி > இரு ஆளுமைகளைச் சந்தித்தல்

இரு ஆளுமைகளைச் சந்தித்தல்

குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு, (ஜீலை-ஆகஸ்ட்) 2003 இலிருந்து, இருமாதமொருமொறை வந்த, பனிக்குடம் இதழ் 3 (மார்ச்-ஏப்ரல், 04) கிடைத்தது; சிறிய, கையடக்கமான, லேசான வாசிப்பிற்குரிய (Light reading!) இதழ்.
மொழிபெயர்ப்பு/கவிதைகள், கவிதை நூல்களிற்கான மதிப்புரைகள், கவிதை தொடர்பான கட்டுரைகள் என இதழ் கவிதைகளையும் அவை தொடர்பான உரையாடல்களில் பெண்ணிலைநோக்கையும் மையங் கொண்டிருக்கிறது.

படைப்புகளென்று பார்த்தால், இதில் இடம்பெற்றிருக்கிற பஹீமா ஜஹானின் கவிதைகளை `இலங்கைப் பெண் கவிஞர் கவிதைகள்’ என ஆசிரியர் குறிப்பில் குறிப்பிட்டுப் போடப் பட்டிருக்கிறது. கவிதைகளுக்கு அப்பால், ஒரு பழைய நண்பரைப் கண்ட மகிழ்ச்சி. தினமுரசு பத்திரிகை கொழும்பில் ஆரம்பித்ததில் இருந்து அதன் கவிதைப் பக்கத்தில் ஒவ்வொரு கிழமையும் தவறாமல் வீற்றிருக்கிற கவிதைகளுக்கு உரியவர் பஹீமா. யாரோ ஒரு தோழனுக்கான பிரிவாற்றாமையைப் பகிர்ந்துகொண்டிருந்தன அக் கவிதைகள் அப்போது. பிறகு, மூன்றாவது மனிதனில் 2000 இன் ஆரம்பங்களில் கண்டபோதில், அந்தத் தோழன் யுத்தத்திலோ காணாமல் போனவர்கள் பட்டியலிலோ இராணுவத்திலோ? சேர்ந்தவனாய் ஆகி, பிரிவாற்றாமை தொடர்ந்தபடியிருந்தது! இதில் பஹீமாவின் ஒன்பது சற்றே நீளமான கவிதைகள் கிடக்கின்றன; ‘கருமுகிலே!… வீசும் பவனமே…!’ எனவெல்லாம் சொற்கள் விழும், ஆச்சரியக் குறிகள் அதிகமிருக்கிற இந்தக் கவிதைகளில், `இலங்கைக்கான’ அடையாளத்தை (குறிப்பிட்டு, அப்படியாய்ப் போடுகையில்) த்தேடுகையில் காணவில்லை; ஆனால், இதே இதழிலுள்ள கமலா வாசுகியின் வரிகள், இந்த அடையாளங்கள் ஏதுமின்றி குஜராத் கலவரத்திற்கோ வேறெங்கும் இடம்பெறக்கூடிய பெண்கள் மீதான வன்முறைக்கோ பொருந்திப் போகிறது:

பெண்ணுக்கு ஒரு மணம்,
இரண்டாம் மணமோ கண்டனத்துக்குரியது
இரண்டாம் புணர்ச்சியோ
கடவுளுக்கெதிரானது, தண்டனைக்குரியது

ஆயின்,
குழந்தைகளை மார்புடன் அணைத்த
தத்தம் மனைவியர் வீட்டிலுறங்க,
கோடரி தூக்கிய ஆடவ வீரர்
கடவுளின் பெயரால் ஆயுதம் ஆவர்.

மதத்தின் பெயரால் குறிகள் விறைக்கும்
மதத்தில் பெயரால் தம் நிலை மறக்கும்,
மார்புடன் அணைந்த குழந்தைகள் எறிந்து
”வேற்று”ப் பெண்டிரைப் புணர்ந்து
தண்டிப்பர்.

…வாழிய கடவுளர், வளர்க மதங்கள்
மதங்களைக் காக்க, இனங்களைக் காக்க,
மனிதரைப் படைக்கும் பாவத்தைப்
புரிவதால்…
அழிந்தொழிக பெண்கள்!
-0-

இதை `இன மத இன்னோரன்ன காரணங்களுக்காகப் பாலியல் பழி தீர்க்கப்பட்ட உலக சகோதரிகளுக்காக’ என எழுதியிருக்கிறார் க.வாசுகி. இவ்வாறான பல பிரதிகள் ஈழத்தில் ஏலவே வந்துள்ளன, இதில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதையின் பாதிப்பும் உள்ளதுதான் எனினும் இங்கே இப் பிரதிக்கான `அடையாளங்கள்’ அவசியமற்றிருப்பது முக்கியமானது (கமலா வாசுகி, இவரும், ஈழத்தைச் சேர்ந்த ஓவியை என்றே நினைக்கிறேன்).

தவிர, இக் குறிப்பிட்ட இதழைப் பற்றி எழுதத் தோன்றுவதற்கான முக்கிய காரணம்: மிகப் பிடித்தமான இரு பெண்களோடான சந்திப்புகள் இதில் இடம்பெறுவதுதான். அதிலும், சிலகால இடைவெளிக்குப் பிறகு அவர்களை இங்கே (மீண்டும்) சந்திக்கிறேன் என்பதும்…

ஆளுமை 01:

1998இல் காலச்சுவடில் வந்த அம்பையின் நேர்காணல் என்னைப் பாதித்த நேர்காணல்களில் ஒன்று. உயிர்ப்பாக, இயல்பாக, பேச்சில் ஒருவர் தன்னை வெளிப்படுத்துவது –அவர் `உண்மையாய்’ வாழ்கிறாரா இல்லையா என்பதற்கு அப்பால்- பிடித்திருந்தது. (பேச்சில் மட்டும்) தவறு ஆகிரக்கூடாதென்கிற `கவனத்துடன்’ மிக நிதானமாக, வாக்குசாதுர்யத்துடன் பேசப்பட்டுத் தரப்படும் ஆட்களின் பேட்டிகள்/நேர்காணல்கள் அனேகம். அவற்றில் ஒரு ஆளுமையை அடையாளங் காணமுடிந்ததில்லை. அந்தவகையில் அம்பையிடத்தில் சொந்த வாழ்க்கையில் அவரது போலித்தனங்கள் பற்றிய கவனம் இன்றி பெண்ணியமோ எந்த ஒரு தத்துவத்தையும் `வரட்சி’யாக முன்வைக்காதது நேர்மறையான அம்சமாக இருந்தது.

இன்று, அம்பையின் புனைவுகள் தொய்ந்து, சில ஆண்டுகளிற்குப் பிறகு, இதில் மீளச் சந்திக்கிற அம்பையின் பேட்டியிலும் அவர் தமிழில் ஒரு நிராகரிக்க இயலாத ஆளுமையாக எழுகிறார். பெண்ணிய மொழியாடலில் சமகாலத்து மாற்றங்கள்வரை அறிந்திருக்கிற, தேடல் உள்ளதொருவளாய் கருத்தாடுகிறார். அவை சின்னச் சின்ன விடயங்கள்! புதிய தலைமுறை –கவனத்தில் எடுக்கவேண்டியவை- அம்பையால் இயல்பாக எடுத்துச் சொல்லப்படுகின்றன, தன்னுடன் ஒன்றிக் கலந்திருக்கிற கருத்துக்களாலேயே அது சாத்தியமாகும். தொடர் வாசிப்பும் அவசியமாயின் எதிர்வினையாற்றுவதும் பெண்ணிய உரையாடல்களில் இயல்பாக வருகிற சமத்துவத் தேடலும் அம்பையின் பலங்கள்; அம்பைக்கும் குட்டி ரேவதிக்குமிடையே இடம்பெற்ற இந்த உரையாடல் பனிக்குடத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

…காலம், சரித்திரம் இவை தொடப்படாத உடல் இல்லை, பெண் உடல். குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல், வயோதிக உடல். நோய்வாய்ப்பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக்கான இன்பங்களை அனுபவித்த உடல், அவற்றைத் தவிர்த்த உடல், சாதி அடையாளம் உள்ள உடல், பலாத்காரத்துக்கு உட்பட்ட உடல் என்று உடல்கள் பலதரப்பட்டவை. உடல் பற்றிய உணர்வுகளும் பலதரப்பட்டவை. எந்தவித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய்ப் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தை புறக்கணிக்கும் செயல். ஹெலன் ஸிஸ்யூ போன்றவர்கள் உடலில் ஊறும் ரசங்களால் எழுதுவது –பால், மாதவிடாய்க் குருதி போன்றவை- என்று கூறும்போது அதை ஓர்
எதிர்வினைச் செயலாகவே நோக்க வேண்டும். அதாவது, ~இது பெண் என்று நீ என்னைக் குறுக்கினால் அதையே ஒரு பிரும்மாண்டமாக்கிக் காட்டுகிறேன் பார் என்று கூறும் செயலாக அதைப் பார்க்கலாம். ஆனால் அதில் ஏற்கனவே கருப்பையை மையப்படுத்தி அடையாளப்படுத்திய பெண் உடலில் மீண்டும் புகுந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்தக் குறுக்கலை ஏற்கும் நிலை இருக்கிறது. அது மட்டுமில்லை. இதுதான் நான் என்று அடையாளப்படுத்திக்கொண்டு நிலைபட்டபின் அது இல்லாத மற்ற உடல்களை விலக்கும் உதாசீனம் இருக்கிறது. பால் இல்லாத, மாத விடாய்க் குருதி நின்றுபோன பெண்கள் எதைக் கொண்டு எழுதுவார்களாம்? இப்படிப் பெண்ணின் உடலைக் குறுக்குவது
இதுவரை இருந்த விளக்கங்களுக்கு உள்ளேயெ பெண்ணை இருத்தும் செயல்தான். ஒரு காலகட்டத்தில் பனிக்குடத்தை பிரதானப்படுததுவது தவறு அல்ல. ஆனால்
பனிக்குடமே
பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு.
புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம்.

(பக். 17, 19)

இன்று பெண்களது எழுத்து தொடர்பாய் `ஆண்களைப்போல எழுதுகிறார்கள்’ என்கிற அட்டவணையின் கீழ் நிறைய விமர்சனங்களும் தூற்றல்களும் வந்தாலும் அவற்றால் இத்தகைய அவதானங்களை முன்வைக்க முடிந்ததில்லை. மாறாக, அம்பை போன்றவர்களிடமிருந்தே இயல்பாக வரக்கூடிய இப் பதில்கள் மனதை நெகிழ்த்திவிடுகின்றன. பெண்கள் தம் கர்ப்பப்பையை கையகப்படுத்துவது தொடர்பான உரையாடல்களில் எல்லாம் கர்ப்பப்பை அற்ற நம்முடைய ஓலம் இருக்கிறது என்பாள் தோழரொருவர் (இதைப் பற்றி ஃப்ரீடாவை முன்வைத்து பிறிதொருபோது தொடரவேண்டும்).
பனிக்குடம் என்கிறபோது அதில் ‘சொல்லப்பட்ட’ பெண்மையின் குணாம்சங்களிற்கான அழகியல், கவித்துவம், சாந்தம், அமைதி என ஒரு பவித்திரமான உணர்வு வெளிப்படுகிறது (தமது வெளியீட்டிற்கும் ‘சூல் பெண்ணிலக்கிய வெளியீடு’ எனவே பெயரிட்டிருக்கிறார்கள்).

அம்பை தொடர்கிறார்:

…72 இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டபோது ”உங்களுக்கு வேறு முக்கியமான விஷயம் எதுவும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியத்துவம் இல்லாதது என்றே
கருதப்பட்டது; கருதப்படுகிறது. இப்போதும் நாங்கள் சில பெண்களைப் பேட்டி காணப்போகும்போது அவர்கள் வீட்டார் அல்லது சுற்றியுள்ளவர்கள் ”இவள் என்ன
செய்துவிட்டாள் என்று இவளைப் பேட்டி காண்கிறீர்கள்?” என்று கேட்பதுண்டு. அந்தப் பெண் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம் அல்லது நிலஉரிமைக்குப் போராடிய ஓர் ஆதிவாசியாக இருக்கலாம்; ஓர் எழுத்தாளராக இருக்கலாம். தொடர்ந்து நடக்கும் ஏய்ப்பு இது.

(பக். 18)

…பல ஆண்கள், பெண்களைச் சுவைக்கும் ஒன்றாகப் பார்த்தனர். உதடுகள் கோவைக்கனி, கண்கள் திராட்சைப் பழம், முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டுச் சமாசாரம்தான்! மணியம் ஒரு கதையில் திருமணமாகாத முதிர்கன்னியை ‘ஊசிப்போன பண்டம்’ என்று வர்ணிப்பார். பெண்கள் எழுத்தில் ஆண்களைச் சாப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அவர்களுக்கு விருந்து படைக்கும் வைபவம்தான்! ‘பின் தொடரும் நிழலி’ன் குரலில் ஒரு கதாபாத்திரம், தனியாக இருக்கும் பெண் பாலூட்டும் இரு முலைகளுடையவளாகவும் பல பெண்கள் கூடி இருக்கும்போது அவர்கள் பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் கூறுவார். ஊட்டும் தொழிலைத் துறந்து விட்டால் பெருச்சாளிகளாவதுதான் வழி போலும்!
(பக். 16, 17)

நன்றி
பின் தொடரும் நிழல் போன்ற நூல்களின்மீது பெண்ணினுடைய வாசிப்பே நிகழாத சூழலில் (சக்தி இதழில் ராஜினி என்பவர் எழுதிய ‘இயலாமையின் புகலிடம் தாய்மையா?’ என்கிற கட்டுரை பி.நி.குரல் மீதான நல்லதொரு விமர்சனம்), அத்தகைய எழுத்தாளர்களின் தந்திரமான மொழியின் ஊடே இவற்றை பகுத்தறிவதும், சனாதனவாதியாய் அவர் பெண்கள்மேல் -கட்டுரைகளிலும் பெரு நாவல்/புனைவுகளிலும்- வைக்கிற பார்வைகளை அடையாளங்காணுவதென்பதும் சிக்கலானது (உ-ம்: அதி நவீனக் கதையாடலில் பெண்ணை சக்தி என்று அவளது இயலுமைகளை (தான் விரும்பிய வண்ணம்) முன்வைத்து, மேல ஏற்றி, அவளைப் பிள்ளைபேற்றிற்காகவும் கட்டுப்பட்ட/தன்னை அச்சமூட்டாத காமத்திற்காகவும்- பரிந்துரைப்பது, அப்படி இருப்பவளே அற்புதமானவளென (புனிதத்திற்குப் பதில்சொல்லாய் ‘சக்தி’ என) முன்வைப்பது போன்றன); அம்பை அவற்றிற்கு இயல்பாக எதிர்வினையாற்றுகிறார்.

அம்பையைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறபோதே, மேலே, ‘உண்மையாய்’ இருத்தல் பற்றி எழுதியிருக்கிறேன். கு.ரேவதி அம்பையிடம், ‘இன்றைய தமிழ் சூழலில் பெண்களின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு உண்மையாக உள்ளன?’ என்று கேட்கிறார்:

உண்மையாக இருப்பது என்றால் என்ன குட்டி? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பது என்று நினைக்கிறாயா? போலி அல்லாத எழுத்து என்று நீ சொல்ல நினைக்கிறாய் என்றால் எது போலி, எது உண்மை என்பதைப் பாகுபடுத்தக் காலம்தான் உதவ முடியும். மேலும் சில சமயம் ஒரு வெளிப்பாட்டின் போலித்தனத்தை நம் நுண்ணுணர்வால் மட்டுமே நாம் உணர முடியும். ‘உண்மை’ என்று நீ நினைப்பது ‘சந்தையுடன் உடன்படாமை’ என்ற அர்த்தத்தில் நீ சொல்லி இருந்தால், இது பெண், ஆண் இருவர் எழுத்துக்கும் பொதவான அளவுகோல் இல்லையா? இந்த அளவுகோல் மிகவும் ஒழுக்க உணர்வை ஒட்டி இருக்கிறது. இதை நாம் வேறு மாதிரி பார்க்கலாம். இன்றைய சூழலில் பெண்களின் எழுத்தின் மொழியும், உள்ளடக்கமும் எவ்வளவு தூரம் அவர்கள் சுயதேர்வாக இருக்கிறது? விருதுக் கெடுபிடி, பிரசுரிப்பதற்கான கெடுபிடி, புகழுக்கான கெடுபிடி, இவை எல்லாம் இல்லாமல் வெளிப்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டுள்ளது என்று வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால் இதுவும் பால்தன்மை அற்ற ஓர் அளவுகோல்தான். ஏனென்றால் வாழ்க்கையில் உள்ள ‘உண்மைகளை’ப் பற்றியது
அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். மேலும் இந்த ‘உண்மை’யின் தன்மை மாறியபடியே இருக்கிறது, …
(பக். 14, 15)

உண்மை பற்றிய இவ் உரையாடல் சுவாரசியமானது; எப்போதும் ‘உண்மையாய்’ இருத்தல் என்பது உடலோடு –அதனால்- ஒழுக்கத்தோடு சம்மந்தப்பட்டதாயே ஒலிக்கிறது; அதை விசுவாசம்/நன்றியாய் இருத்தல் இப்படித்தான் வாசிக்கிறார்கள். உண்மையாய் இருத்தல் என்பதை பாசாங்கற்று இருத்தலாகப் பார்த்தால், தாம் நம்புகிற கருத்துகளிற்கு, சேருகிற துணைக்கு உண்மையாய்/நேர்மையாய் இருத்தல் என்பதை உடம்பு/மனம் எனப் பிரிக்க முடியாதென்றே தோன்றுகிறது.

…பல ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் வாழ்க்கை பற்றி, அவர்கள் உணர்வுகள் பற்றி சிறப்பாகவே எழுதி உள்ளார்கள். இதற்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. …ஒரு பிச்சைக்காரன் தன்னைப் பற்றி எழுதினால் தன் அழுக்குச் சால்வை, பரட்டைத் தலை, வளைந்த நகம் இவை பற்றி எழுத மாட்டான். அவை அவனுக்கு இயல்பானவை. அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை. ஆனால் அவன் வாழ்க்கை பற்றிய ‘உண்மை’யை எழுத விரும்புபவர்கள் இதை எழுதாமல் விட முடியாது.
(பக். 17)

பெண்கள் உரிமைகளைப் பற்றி எழுத விழைபவர்களுக்கு எவ்வளவோ விடயங்கள் உறுத்தலாம், அவர்கள் போடுகிற பர்தா, பின்னால் காவுகிற ஆண் பெயர், அவர்களிடம் இருக்கிற ஆணாதிக்கக் கருத்துக்கள் என்று… தேர்தல் சமயத்தில், கருணாநிதி ஜெயலலிதாவை ‘மலடி’ எனத் திட்டியதைப் பற்றி அம்பை (காலச்சுவடு 54, ஜீன் 2004)) எழுதியிருந்தார் (அம்பை மட்டும்தான் எழுதியவர் என நினைக்கிறேன்); அவருக்குப்போல, நிறையப் பேரை ‘இவை’ உறுத்தும்வரையில் அம்பை போன்றவர்களின் இருப்பு அவசியமானது.

———————————————

 • அம்பை நேர்காணல்: குட்டிரேவதி
 • ஹெலன் ஸிஸ்யூ – Hélène Cixous
 • மேற்கோள்களில் தடிப்பெழுத்து என்னோடது
Advertisements
 1. -/பெயரிலி.
  May 28, 2005 at 7:42 pm

  ஒரு பொடிச்சி,
  கொஞ்சக்காலத்துக்குப் பிறகு ஆழமாக எழுதியிருக்கின்றீர்கள்.

 2. டிசே தமிழன்
  May 28, 2005 at 8:22 pm

  பொடிச்சி, நல்லதொரு பதிவு.
  நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது, முக்கியமாய் பெண் உடல் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதிகாரம், அரசியல் போன்றவற்றை. அம்பை குறித்து தான்யாவும் நல்லதொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். உங்கள் இந்தப்பதிவை வாசிக்க சற்றுமுன்னர்தான், எஸ்.ரா, ஜி.நாகராஜானைக் குறிப்பிட்டெழுதிய கதாவிலாசத்தை விகடனில் வாசித்திருந்தேன். ஒரு விற்பனைப் பெண்ணை முன்வைத்து, பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வை பற்றி எழுதியிருக்கின்றார்….(எஸ்.ராவோ அல்லது வேறு யாராவதோ, அதை இயலுமென்றால் இங்கே வலைப்பதிவிலிட்டால் நல்லது). அதிலிருந்து ஒரு பகுதி…
  “சரித்திரம் முழுவதும் பெண்களின் உடல்மீது படிந்த ரத்தக்கறையைத்தான் காண் முடிகின்றது. இந்தியப்பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்களைவிடவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்தான் அதிகம். இதைவிடவும் மிகக் கொடுமையான, அப்படி வன்கொடுமையால் பாலியல் உறவு கொள்ளப்பட்ட பெண்கள் கர்ப்பமாகி, அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசே முகாம்களை நடத்தியது. ஒரே நாளில் இருபதாயிரம் பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்கள். சூறையாடப்பட்ட நகரங்களைவிடவும், சிதைக்கப்பட்ட பெண் உடல்கள் அதிகம். வன்முறையின் இலக்கு எப்போதுமே பெண் உடல்தான்!
  எத்தனையோ இரவுகளில் காரில் பயணம் செய்யும்போது நெடுஞ்சாலைகளின் ஒரங்களில் புளியமரங்களின் அடியில் நின்றபடி லாரிகளின் முகப்பு வெளிச்சத்துக்கு கண் கூசி நிற்கும் பெண்களைக் கண்டிருக்கின்றேன். வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை. அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது .

  வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, பின் தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பெண்களை நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவே இல்லை. பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் வன்முறையும் இல்லாத சமூகம் இருக்கின்றதா என்ன? குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு பெண்கள் மீது செலுத்தி வரும் வன்முறை குறித்து இன்று இலக்கியத்தில் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டே வருகின்றன.”

 3. Chandravathanaa
  May 28, 2005 at 9:16 pm

  பொடிச்சி
  நல்ல கனமான பதிவு.
  பனிக்குடம் இதழ் எங்கே வருகிறது? ஜேர்மனிப் பக்கமும் வருகிறதா?
  டி.சே.தமிழனின் குறிப்பும் நன்றாக உள்ளது.

 4. பத்மா அர்விந்த்
  May 29, 2005 at 12:53 am

  பொடிச்சி
  நல்ல கருத்தாழமிக்க பதிவு.பெண்களின் துயரங்களை இன்னும் பெண்களே முழுதாக புரிந்து கொள்ள வில்லை. இது துயரம் என்று அறியாமல் இருப்பதும் அது போல் நடிப்பதும் வாழ்க்கையை சுமை இல்லாததாக்கிவிடும் என்பதாலோ என்னவோ.
  டீசே: விற்பனை பெண்ணை முன் வைத்து எழுதியதை நானும் படித்தேன். முதன் முதலாய் விற்பனை பெண்களை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதியிருந்தது படித்ததும் பாரமாகிப்போனது.

 5. ஈழநாதன்(Eelanathan)
  May 29, 2005 at 12:55 pm

  பொடிச்சி நல்லதொரு பதிவு.
  மேலே தரப்பட்ட கவிதை சண்முகம் சிவலிங்கத்தின் எங்கள் புருவங்கள் தாழ்ந்தே உள்ளன இன் பாதிப்பாக அல்லது அதைப் போன்றதொன்றாகத் தான் படுகிறது.
  இரண்டு ஆளுமைகள் பற்றிய பதிவுகளும் பயனுள்ளவை.

  உண்மையாக வாழ்தல், மேலும் பேசப்படவேண்டியது

 6. ஒரு பொடிச்சி
  May 30, 2005 at 6:57 am

  நன்றி! பெயரிலி, டிசே தமிழன், சந்திரவதனா, தேன் துளி &
  ஈழநாதன்: அந்தக் கவிதையின் பாதிப்பென்றுதான் நினைக்கிறேன்…

  சந்திரவதனா!
  பனிக்குடம் தொடர்ந்து வருகிறதா தெரியவில்லை
  அவர்களது மின்னுஞ்சலை இங்கே பின்னர் பதிகிறேன்..

 7. ஒரு பொடிச்சி
  June 1, 2005 at 3:43 pm

  நன்றி டீ.ஜே இணையத்தில் இருக்கிற அம்பையின் சில கட்டுரைகளையும், குறிப்பிட்ட தான்யாவின் கட்டுரையையும் மேலே பின்னர் இணைத்துவிடுகிறேன்.

  பனிக்கடத்தின் தொடர்பு மின்னஞ்சல்:
  panikkudam@rediffmail.com

  மேலே குறிப்பிட்ட ராஜினியின் கட்டுரையை இங்கே இடுகிறேன். இது தொடர்பாக முடிந்தால் பிறகு எழுதுகிறேன். இப்போ ஒரு பதிவுக்காக இங்கே.

 8. லிவிங் ஸ்மைல்
  March 15, 2007 at 8:26 am

  சமீபத்தில் பனிக்குடம் என்ற வார்த்தை குறித்து கூகிளில் தேடிய போது தங்களின் பதிவு படிக்க நேர்ந்தது.

  நல்ல பதிவு

  // பனிக்குடமே
  பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு. புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம். //

  அப்படி ஒதுக்கப்படுபவர்களில் பெரும்பான்மை திருநங்கைகள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

  உதாரணமாக, பெண்ணாக மாற தேவையான அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும், செயற்கையாகவோ அல்லது இன்ஜெக்சன் மூலமாகவோ மார்பகங்கள் வைத்துக் கொண்டாலும் திருநங்கைகளாய் செருப்பால் அடிக்கும் தொனியில் முன்வைக்கப்படும் வாதம் “உன்னால் பிள்ள பெக்கமுடியுமா..?” என்பது தான்.

  பெண்ணுக்கான அடிப்படையாகவும், நீ(திருநங்கைகள்) பெண்ணில்லை என்பதற்கும் ஆதார ஆயுதமே பனிக்குடம் தான்.

  பெரியார் கற்பப்பையை கலைத்து கலகம் செய்யச்சொன்னதும் இதற்காகத்தான். விரும்பாவிட்டாலும் அத்தகைய கலகக்காரிகளாக உள்ள திருநங்கைகள் நிலையோ இதன்பொருட்டு ஒதுக்கப்படுவதாகவே உள்ளது.

  பனிக்குடம் (ஜனவரி-மார்ச் 2007) இதழில் எனது இரு கவிதைகள் வந்துள்ளன. அதில் ஒரு கவிதையில் இதே பனிக்குடத்தை கோயில் என்று உருவகித்து எழுதியிருப்பேன்.

 9. லிவிங் ஸ்மைல்
  March 15, 2007 at 8:28 am

  பனிக்குடம் தொடர்ந்து வருகிறது.

  மின்னஞல் panikkudam@gmail.com

 10. ஒரு பொடிச்சி
  March 15, 2007 at 5:43 pm

  சமீபத்தில் பனிக்குடம் என்ற வார்த்தை குறித்து கூகிளில் தேடிய போது தங்களின் பதிவு படிக்க நேர்ந்தது.

  நல்ல பதிவு

  // பனிக்குடமே
  பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு. புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம். //

  அப்படி ஒதுக்கப்படுபவர்களில் பெரும்பான்மை திருநங்கைகள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

  உதாரணமாக, பெண்ணாக மாற தேவையான அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும், செயற்கையாகவோ அல்லது இன்ஜெக்சன் மூலமாகவோ மார்பகங்கள் வைத்துக் கொண்டாலும் திருநங்கைகளாய் செருப்பால் அடிக்கும் தொனியில் முன்வைக்கப்படும் வாதம் “உன்னால் பிள்ள பெக்கமுடியுமா..?” என்பது தான்.

  பெண்ணுக்கான அடிப்படையாகவும், நீ(திருநங்கைகள்) பெண்ணில்லை என்பதற்கும் ஆதார ஆயுதமே பனிக்குடம் தான்.

  பெரியார் கற்பப்பையை கலைத்து கலகம் செய்யச்சொன்னதும் இதற்காகத்தான். விரும்பாவிட்டாலும் அத்தகைய கலகக்காரிகளாக உள்ள திருநங்கைகள் நிலையோ இதன்பொருட்டு ஒதுக்கப்படுவதாகவே உள்ளது.

  பனிக்குடம் (ஜனவரி-மார்ச் 2007) இதழில் எனது இரு கவிதைகள் வந்துள்ளன. அதில் ஒரு கவிதையில் இதே பனிக்குடத்தை கோயில் என்று உருவகித்து எழுதியிருப்பேன்.

 11. ஒரு பொடிச்சி
  March 15, 2007 at 5:45 pm

  மேலுள்ளது லிவ்விங் ஸ்மைல் வித்தியாவின் பின்னூட்டம். பிளொக்கர் ஜீமெயில் கேட்டு கழுத்தறுப்பதால், http://www.peddai.net இலையே கொமன்ற்-ஐ இடுகிறேன்.

  நன்றி வித்யா.

 12. ஒரு பொடிச்சி
  March 15, 2007 at 5:50 pm

  லிவிங் ஸ்மைல் has left a new comment on your post “இரு ஆளுமைகளைச் சந்தித்தல்”:

  பனிக்குடம் தொடர்ந்து வருகிறது.

  மின்னஞல் panikkudam@gmail.com

  Posted by லிவிங் ஸ்மைல் to பெட்டைக்குப் பட்டவை at 3/15/2007 12:28:02 AM

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: