Home > கவிதையியல் > ‘தழுவி’ எழுதுதல்

‘தழுவி’ எழுதுதல்

…‘கவிதைகள் எழுத வேண்டாம்’ என்றால் – அதை
‘யாருடைய மாதிரியும் எழுதவேண்டாம்’ என்றே வாசிக்கவேண்டும்.

சும்மா எழுதப்படுகிற கவிதைகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆங்கிலத்தில் கவிதைப் புத்தகங்களிற்கு மதிப்பில்லை என்பார்கள் (விற்பனையில்). தமிழிலோ கவிதை குறித்து நிறைய கிளர்ச்சி இருக்கிறது.
என்னுடைய வாசிப்புக்குட்பட்டளவில், நகுலன், பிரமிள், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன், ஆத்மாநாம், வண்ணநிலவன், வ.ஐ.ச. ஜெயபாலன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்யபுத்திரன், யூமா.வாசுகி, கருணாகரன், குட்டிரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, நட்சத்திரன் செவ்விந்தியன், சித்தார்த்த ‘சே’குவேரா பா.அகிலன், ஆழியாள், நிலாந்தன், என்.டி.ராஜ்குமார், முகுந்த் நாகராஜன், சுகிர்தராணி ஆகியவர்களது கவிதைப்பாணிகள் மற்றவர்களை பிரதிபண்ணாததாக தனித்து நிற்கின்றன (இதில் சில நல்ல கவிதைகளை எழுதிய கவிஞர்களைச் சேர்க்கவில்லை). சிலர் ஒரே பாணியைக் கொண்டிருந்தாலுங்கூட பேசுகிற பொருளால் கொண்டு செல்கிற கவிதை அனுபவம் வேறுபடுகிறது.
இப் பட்டியலோ தனிப்பட்ட ஒருவரது வாசிப்பின் எல்லைக்களிற்குள்ளிருந்து வருவது, தமிழில் வந்த அனைத்து தொகுதிகளையும் முன்வைத்து ஆராய்ந்தாலும் கவிஞர்களின் தொகைக்கு நியாயம் செய்யாத குறிப்பிட்டளவு கவிஞர்களே தேறலாம். மீதி எல்லாம் எழுதியவருக்குப் பிடித்தமான கவிஞரின் நகல்களே, அதிலும் ‘நவீன’ கவிதை ‘மாதிரி’யுள் அடங்குமாப்போல, இருண்மை/உள்வெளி என பாசாங்கும் அனாவசிய வார்த்தைகளும்கொண்டு சமகாலக் கவிதைகள் ‘உருவாக்கப்’படுகின்றன.
(இவற்றிலிருந்து மாறுபட்டு ஒலிக்கிற குரல்களை அது ஏற்றுக்கொள்வதாயும் இல்லை!)

இப்படி ‘உருவாக்கப்’படும் கவிதைகள் கதைகள் இதர வடிவங்களை, பாதிப்பில் எழுதுதல் அல்லது தழுவி எழுதுதல் என்பர்; தழுவுதலிலும் நிறைய விதங்கள் இருக்கின்றன. சும்மா தழுவுதல், ஆரத் தழுவுதல் என்று….. (இது best better worse மாதிரி போய்க்கொண்டே இருக்கும்)

1:

கிழக்கு ஆஸ்திரேலியச் சிறுநகர் ஒன்றில்

மதுக்கடை ஒன்றில்

குளிர்காலம் தொடங்குகிற ஒருநாள் மாலையில்

D. H. Lawrence பிலியட்ஸ் விளையாடக் கண்டேன்

நெடுங்கூரிய நாசி

செம்பட்டைத்தாடி

கன்னிகளின் விரக ஆன்மாவை ஊடுருவும்

அதே 19ம் நூற்றாண்டு கடலோடிகளின் கண்களுமாய்

நெடுவல் ஒல்லி மேனியன்

D. H. Lawrence பிலியட்ஸ் விளையாடக் கண்டேன்

தங்கள் தலைமுறையையே சூதாடும்

தன் வயதொத்த ஆண்களோடு

பிலியட்ஸ் பந்துகள் அடிபடுகிற படுக்கைக்கும்

மதுக்கிண்ணம் இருக்கிற மேசைக்குமாய்

நீண்ட கோலோடு போய்க்கொண்டிருக்கக் கண்டேன்

என் மதுக்கிண்ணம் காலியாகும்வரை

D. H. Lawrence பிலியட்ஸ் விளையாடக் கண்டேன்.


(
1997)

/நட்சத்திரன் செவ்விந்தியன்
( ‘எப்போதாவது ஒருநாள்’ கவிதைத் தொகுப்பு)

2:

பசியோடிருக்கும் மீனவன்காற்றில் அலைந்து திரிந்த போது
ஒருநாள்
பசியோடிருக்கும் மீனவனைக் கண்டேன்
சாதாழை எற்றுண்டு கிடந்த மணலில்
குந்தி இருந்தான்
கடலோரம் கவிழ்ந்திருந்தது சிறு தோணி
அதன் சுவட்டைக்
கடலில் தேடிக் கொண்டிருந்தான் அவன்
மழிக்கப்படாத அவன் முகத்தில்
உப்புக் காற்று மோதியது
இடுகாட்டின் கூக்குரல்களுக்கு நடுவே
அவனுடைய குடிசை இருந்த இடத்தை
யாரோ தோண்டிக் கொண்டிருந்தார்கள்
வலியில் முனகியது நிலம்.
கடலோடிகள் பறித்துச் சென்றது போக
எஞ்சிய வாழ்க்கையில்
உதிர நெடி.
பசியோடிருக்கும் மீனவனைக் கண்டேன்
எனது முகமும் எனது குரலும்
அவனிடம் இருந்தன.

(1999)

/சேரன்
( காலச்சுவடு 27)

3:

காலப் பெரு வெளியில்

கோடையிலோர் நாள்
குளிரூட்டியின் மூச்சுக் காற்றும் சுடுகின்ற அதிவெப்ப நடுப்பகல் வெய்யிலில்
டொன் பள்ளத்தாக்கிடை விரிந்த
பூங்கா மரக்குடை நீழலில் ஒதுங்கிய காலை
முதியதோர் காதல் இணையைக் கண்டேன்
ஒரு யுகத்தின் மூப்பொடு
கிளையொடுங்கிச் சுருங்கி
எலும்புந்தோலுமாய் நிழலுதிர்த்து நின்ற
பெருமரத்தடியில்
மூச்சிரைக்க ஓய்வுகண்டனர்
ஆண்டாண்டுகாலமாய் ஆழ வேர்பரப்பி
அகலக் கிளை விரித்த
முதுமருதின் கிளையொன்றில்
கூடும் குதூகலமுமாய் வாழ்வோச்சிய கால
செழிப்பின் சுவடும்பின்தொடர்ந்த பிரளய இழப்பிலும் பெயர்விலும்
கப்பிய துயரும்
இறக்கை முளைத்த குஞ்சுகள்
இணையுடன் சேர்ந்து
கொத்தித் துரத்திவிட்ட
நெடுஞ்சோகப் பெருமூச்சும் பறிய
அதைமறுத்து
உலர்ந்த புல்லுக் கீற்றொன்றை
கோதி அலகில் சுமந்து
புதிதாய்
கூடிணக்க விழையும் உலர்வலையக் குருவியின்
உற்சாகப்பெருக்கில்
தன் இணையை
கைலாகு கொடுத்து
தூக்கி
அணைத்து எட்டிநடந்தபடி
டொன் பள்ளத்தாக்கிடைப் பூங்காவில்
முதியதோர்
காதல் இணையைக் கண்டேன்(2000)

/திருமாவளவன்
(‘அஃதே இரவு அஃதே பகல்’ கவிதைத் தொகுப்பு)

இந்தக் கவிதைகளில் எழுதப்பட்ட ஆண்டுகள் எவரை எவர் தழுவியிருக்கலாம் என்பதை ஊகிக்க தரப்பட்டிருக்கிறது. முதலாவதை ‘அசல்’ என்ற வைத்துக்கொண்டு, அதனுடைய ‘சாயலில்’ உள்ள இரண்டாவதைப் பார்த்தால்… இது உண்மையில் சேரனுடைய நல்ல கவிதைகளில் ஒன்று. அப்போ முதலாவது கவிதையிலிருந்து இவர் பெற்றிருக்கக்கூடிய பாதிப்பை ‘ஆரோக்கியமான’ பாதிப்பென்று கொள்ளலாம். இது பாதிப்பாய் இருக்கவேண்டியதில்லை என்றுங்கூட வாதிடலாம். இங்கே பாதிப்பு இருக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதென்பதை உணர்ந்தாலே போதுமானது. அதற்கு முதலாமவர் உபயோகித்த கடலோடி போன்ற சொற்களை பின்னவரும் தொடர்ந்திருப்பதை ஆதாரமாகக் கொள்ளலாம்.
மூன்றாமவதைப் பார்த்தால், நிறைய பாசாங்குடன், தலைப்பிலேயே தத்துவார்த்தமாகத் தொடங்குவதால் ‘சுமார்’ வகைப்பாட்டுக்குள் அடங்குகிறது.

இவை மூன்றும் ‘தீவிர’ தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அதிலும் ஒரே புலத்தைச் சேர்ந்தவர்களால் (ஈழம்); மூவருமே அறியப்பட்ட கவிஞர்கள் வேறு! இங்கே இவற்றை வாசிப்புக்குட்படுத்துவதூடாக இவர்களுக்குள்ளேயே இது சாத்தியமென்றால் ஒருநாளில் ஒருவருடையதுபோலோ அல்லது பலருடையதைப்போல எத்தனை கவிதைகள் படைக்கப்படும் என யோசித்துப் பார்த்தலே நோக்கம். அவை இந்தக் கவிதைகள் அளவு தம்மளவில் தனித்தன்மையுடையனவாய் இருந்தால் அதில் குறையில்லை.


Advertisements
 1. Thangamani
  March 24, 2005 at 1:37 am

  நல்ல பதிவு!

 2. ஈழநாதன்(Eelanathan)
  March 24, 2005 at 4:00 am

  பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொக்குப்பினை வாசித்த போது ஒருவரின் தழுவலாக இன்னொருவரோ அல்லது அவரின் பாதிப்பு இவருக்கோ கொஞ்சமேனும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் நீங்கள் தந்தது வியப்பாயிருக்கிறது.

  கவிதை எழுதுவதை நிறுத்துங்கள் என்ற உங்கள் வேண்டுகோளுக்கு இவை பலம் சேர்க்கும்.அந்த வேண்டுகோள் பற்றி எனது கருத்துகளை எழுத முயன்றேன் உங்கள் பதிவு இடமளிக்கவில்லை விரைவில் பதிவாக இடுகிறேன்.

 3. raji
  March 25, 2005 at 4:03 am

  உங்கள் துணிவுக்கு என் தொப்பி களற்றி மரியாதை செய்கிறேன். ‘அறிவு சீவிகளின்’ முகத்திரையைக் கிழித்திருக்கிறீர்கள். இந்தச் சந்தர்பத்தில் உங்கள் கருத்து வங்கிக்கு பயன்படக்கூடிய சேரனைப் பற்றிய மேலுமொரு முக்கியமான செய்தியையும் வைப்புச் செய்கிறேன். விரல் விட்டு எண்ணக் கூடியளவில் சேரன் எழுதிய கவிதைகளில் ஒன்றான “அதிகாலையில் யாழ்நகர்மீது பனிபடர்கின்றது” என்;ற கவிதையானது பிரபல சீன கவிஞரும் செஞ்சேனையின் தலைவருமான மா.வோ.சேதுங் அவர்களால் எழுதபட்ட கவிதையை ஆரத்தழுவி அடிக்கப்பட்ட கார்பன் கொப்பியாகும்.
  மேலும் நீங்கள் முன்பு எழுதியிருந்தீர்கள் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது என்று. அதாவது உங்கள் கருத்தின்படி பெருமளவில் தமிழில் மொழிபெயற்புக் கவிதைகள் வரவில்லை என்று சொல்வீர்களானால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்ää வன்மையாக மறுக்கிறேன். ஏனென்றால் வேறு மொழிகள் தெரிந்த எங்கள் ‘அறிவு சீவிகளின்’ 90% மான கவிதைகள் மொழிபெயற்புக் கவிதைகளே. ஆனால் என்ன அவர்கள் அதன் கீழ் ‘மொழிபெயற்பு’ என்ற ஒரு சொல்லைச் சேர்க்காமல் விட்டு விடுகிறார்கள். தங்கள் பெயரைமட்டும் மறக்காமல் போட்டுவிடுகிறாரகள். ஆகவே பெட்டைää இனியாவது மொழிபெயர்பு கவிதைகள் தமிழில் வரவில்லை என்று தவறாக எழுதாதீர்கள். எனக்கு பொல்;ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலாத கோபம் வரும். ஓம்.

 4. ஒரு பொடிச்சி
  March 25, 2005 at 8:50 pm

  நன்றி தங்கமணி, ஈழநாதன், ராஜி..

  ஈழநாதன் நேரங்கிடைக்கும்போது இதுபற்றி எழுதுங்கள்.
  ராஜி,இதில் எனது’துணிவு’க்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. இது ஒரு அவதானம் மட்டுமே. கவிதைத் திரையைக் கிழித்ததென்றே சொல்ல முடியாது, இதில் முகத்திரையையா? எனது அவதானமும் நீங்கள் குறிப்பிட்டதுபோலவே ஒன்று மட்டும்தான். சேரன் கவிதை கார்பன் கொப்பியா என்ன என்பது பற்றி எனக்கு ஆதாரம் இல்லாததால் சொல்ல முடியவில்லை. உங்களிடம் இருப்பின் ஒரு தளம் அமைத்து அதனை எழுதுங்கள். அது மிக ‘துணிச்சலான’ செயலாய் இருக்கும். நன்றி.

 5. peddai
  April 18, 2009 at 3:34 am

  # வ.ஐ.ச.ஜயபாலன் Says:
  June 30th, 2007 at 2:35 pm

  உங்கள் சஞ்சிகை ஆர்வம் தருவதாக இருக்கிறது. ஒரு வட்டக் கவிதைகளை வெளியிடிருந்தீர்கள். நிச்சயமாக ஒன்றை ஒன்று தழுவியிருக்க வேண்டுமென்றில்லை. அவை ஒரு காலத்தின் மனநிலையைத் தழுவிய கவிதைகலாகவும் இருக்கலாமல்லவா. இளம் கவிதாயினிகளதும் கவிஞர்களதும் படைப்புகலை நான் தேடித் தேடி வாசிக்கிறேன் கவிதையை அல்ல மனநிலையைத் தழுவ.
  நன்றியுடன்
  வ.ஐ.ச.ஜெயபாலன் (visjayapalan@yahoo.com)

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: