Home > Uncategorized > ‘விடுபடல்’களின் அரசியல்

‘விடுபடல்’களின் அரசியல்

கொங்குதேர் வாழ்க்கை தொகுதி 2
புதுக் கவிதைகளின் தொகுப்பு
93 கவிஞர்களின் 893 கவிதைகள்
யுனைடெட் ரைட்டர்ஸ் (2004)
தொகுப்பு: ராஜமார்த்தாண்டன்

பெப்ரவரி காலச்சுவடு இதழில், சித்தார்த்தன் என்பரால், இத்தொகுப்பில் ‘விடுபட்ட’ கவிஞர்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது (தி.சோ. வேணுகோபாலன், நாரணோ ஜெயராமன், பிரம்மராஜன், லஷ்மி மணிவண்ணன், என்.டி. ராஜ்குமார்)
“…நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிஞர்கள் உள்படச் சிலரை நான் சேர்க்கவில்லை. தி.சோ. வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின் அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்படவில்லை. பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன். … அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலைநாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்கத்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என்றானதாலும் திருகலான மொழி நடையினாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போன்ற உணர்வை, அந்நியத் தன்மையை இவரது கவிதைகள் தோற்றுவித்துவிடுகின்றன.”
“இன்றைய கவிஞர்களில் லஷ்மி மணிவண்ணனை ஏன் சேர்க்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். அவரது கவிதைகளை முழுமையாகப் படித்த பின்னர்தான் இத்தொகுப்பில் சேர்க்காமல் நிராகரித்துள்ளேன். இன்றைய கவிதைக்கான மொழிநடையும் உருவமும் அவரது கவிதைகளில் சாத்தியமாகவில்லை. இதேபோலத் தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப்படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவனையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தையும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.
தமிழில் வெளிவந்துள்ள
அனைத்துக் கவிதைத் தொகுதிகளையும் கவனமாகப் படித்துத்தான் தேர்வுசெய்துள்ளேன். இவ்விடுபடல்களில் எவ்வித அரசியலும் இல்லை.’’
என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து எழுத முன், சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும். இத் தொகுதியில் கடந்த காலங்கள் போலன்றி, ‘புறக்கணிப்புக்குள்ளாகிற’ அல்லது ‘தவிர்க்கப்படுகிற’ (19) ஈழத்துக் கவிஞர்கள், (10) பெண் கவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். அது அவர்களை தவிர்க்க முடியாத கால மாற்றத்தை காட்டுகிறது. இக் கவிஞர்கள் தமது வாழ்வை அடையாளப்படுத்தினார்களா என்பது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் தலித் அடையாளங்களை கொண்டதாய் எவ்வொரு படைப்பும் இதில் இல்லையென்பதை -அவர்களது படைப்புகள் புறக்கணிக்கப்படமுடியாதளவு வீர்யமாக வெளிப்படுகிற இந்தக் காலத்தில்- எப்படி எதிர்கொள்வது?

இன்றைய கவிதைகள் குறித்த ராஜமார்த்தாண்டனது -சுரா போன்றவர்களதை ஒத்த- நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. நவீனக் கவிதையின் ‘வரையறுப்பு’ ஒத்ததொனியிலான (monotonous) பரந்த அனுபவங்களைத் தராத கவிதைகளையே தந்துகொண்டிருக்கிறது. இந் நூலிலேயே ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்: “…நல்ல கவிஞன் மொழியிலிருந்து தனக்கேயானதொரு கவிதை மொழியை உருவாக்கிக்கொள்கிறான்.
…கவிதை என்றும் புதியதாக இருக்க வேண்டும். கவிஞ
னின் தனித்துவம், அவனுக்கேயான பார்வை, அவது சிறப்பான மொழியாளுமை, எல்லாவற்றுக்கும் மேலாக அவது அபூர்வமான கற்பனையாற்றல் காரணமாகக் கவிதையில் இந்தப் புதுமை சாத்தியமாகிறது.”

இவற்றினடிப்படையின்படி பார்த்தால், இதில் விடுபட்ட கவிஞர்கள்தான் இந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்பவர்களாக படுகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய எழுத்து இன்றைய ‘நவீனக் கவிதையின் வரையறுப்பைத்’ தாண்டியது. அதனால்தான், ராஜமார்த்தாண்டனது பிரம்மராஜன் மற்றும் ஏனையவர்கள் பற்றிய கருத்தோடு உடன்பட முடிகிறபோதும், என்.டி.ராஜ்குமாரை அந்த சட்டகத்துள் அடக்க முடியவில்லை.

என்.டி.ரா வுடன் இக் குறிப்பிட்ட நேர்காணலில் கேட்கப்படாத ‘விடுபட்ட’ இன்னொருவர்: வ..ஐ.ச.ஜெயபாலன்.

ஈழத்தின் ஆதிக்க சமூகமான யாழ்ப்பாணம் அல்லாத, பகுதிகளின் அடையாளம் வ.ஐ.ச.வின் கவிதைகள். அதுமட்டுமல்லாது, அவரது ‘நமக்கென்றொரு புல்வெளி’ யோ பிற பல அரசியற் கவிதைகளோ பாதிப்படையாத தமிழக தீவர வாசகர்கள் குறைவு. ஈழ எழுத்திலேயே, அவரது பாதிப்பிலே இன்னமும் ஒரு தலைமுறையே இருக்கிறது! அப்படி இருக்கிறதுபோது அவரது புத்தகத்திற்கு (நூலின் பெயர்: பெருந்தொகை?) மதிப்புரை எழுதியுள்ள ராஜமார்த்தாண்டன் அவரை இதில் தவிர்த்திருப்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை (பிற ஈழத்துக் கவிஞர்களது இதில் சேர்க்கத் தேர்நதெடுத்த கவிதைகளும் அவர்களது ‘சிறந்த’ கவிதைகளல்ல!).
வ.ஐ.ச.ஜெயபாலனின் பிம்பங்கள் உடைந்து வெறும் எழுத்துக்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற அதுவும் கேள்விக்குட்படுத்தப்படுகிற காலமிது. எனினும், ஈழத்துக் கவிதைகளை பற்றிப் பேசுகிறபோது அதன் அடையாளங்களை அதன் தடங்களைப் பதிய விழைகிறபோது அவர் இல்லாமல் அது சாத்தியமில்லை. அவரை நன்கே படைப்புகள் ஊடாக நேரிலும் அறிந்திருக்கக்கூடிய ஒருவர் அவரைத் தவிர்ப்பதில் அரசியல் இல்லையா?

மதிவண்ணனுடைய (நெரிந்து?) கவிதைத் தொகுதியும் ராஜமார்த்தாண்டன் கவனமாகப் படித்த கவிதைத் தொகுதிகளில் அடங்குமா என்பது தெரியவில்லை. அவருடைய ரசனையில், அவை ‘கவிதைகள்’ இல்லை என்றால்கூட, அந்த வாழ்வியல் ஒலிக்கவேண்டும் என்கிற தேவையின்படியேனும் அவைகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது, தனியே, தனிப்பட்டொருவரின் ரசனை சார்ந்த தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதையே ‘அரசியலற்று தேர்கிறேன்’ எனுகிறபோது அது பிரச்சினைக்குரியதாகிறது. Simply, அது சாத்தியமில்லை என்பதால்! உதாரணமாக, அவரைப்போலன்றி, பலருக்கு ராஜ்குமாரது கவிதைகள் ‘பிரமாதமாக’ எதையோ சொல்லத்தான் செய்கின்றன. அதேபோல, வாசகியாய், ‘எனக்கு’ பிரமாதமாய் எதையும் சொல்லாத/எந்த அனுபவத்தையும் தாராத கவிதைகள் இத் தொகுதியில் நிறைய இருக்கின்றன, ஈழக் கவிதைகள் உட்பட. அத்துடன், இந்தத் தொகுதியில் வந்த அனைவரும் ராஜமார்த்தாண்டனதே ‘பிடித்தமாய்’ இருப்பரென்றும் தோன்றவில்லை. அப்படியல்லாதபட்சத்தே என்.டி.ரா வையும் இன்ன பிறரையும் தன்னைப் ‘பிரமாதப்படுத்தாவிட்டாலும்’ வேறு சிலர் பிரமாதப்படுத்துவதாய் நினைக்கிறார்கள் என்கிற அடிப்படையில்கூட போட்டிருக்கவேண்டுமே!

ராஜமார்த்தாண்டனது, தேர்விலும் -எல்லோருடைய தேர்விலும்போலவே- அரசியல் இருக்கிறது. என்.டி.ரா அவரைப் பிரமாதப்படுத்தாததற்கும் அதுவே காரணம். இதை ‘திட்டமிட்டு’ வன்மத்துடன் ராஜமார்த்தாண்டன் செய்தார் என குற்றுஞ்சாட்டவில்லை. இவ் அரசியலை நடைமுறைப்படுத்த, வெளிப்படையான –அவருக்கே தெரியாத- அவரது இதுகால்வரை படித்த, ரசித்த, பழக்கப்பட்ட, ‘நல்ல கவிதை’ ‘பிரமாதமாய் சொல்கிற கவிதை’ குறித்த நிலைப்பாடுகளே போதுமானது. இந்த நிலைப்பாட்டில் பசுவய்யாவின் தத்துவ விசாரக் கவிதைகள் படிப்பதற்கும் ரசிப்பிற்கும் உகந்ததாய் பழக்கப்பட்டிருக்கும் (பசுவய்யாயின் பாதிப்பை ராஜமார்த்தாண்டனது கவிதைகளில் காணலாம், அவர் இத் தொகுதியில் தனது கவிதைகளை உள்ளடக்கவில்லை). பசுவய்யா கவிதைகளை ஒத்த தொனியே ‘நவீனக் கவிதை மாதிரி’ என நினைப்பதும் மற்றவைமீதான ஒவ்வாமையும் ரசனை சார்ந்ததே.

மற்றப்படி, இக் கவிஞர்களின் விடுபடல்கள் குறித்து வருத்தமில்லை! இத்தகைய விடுபடல்கள் இல்லாமல் தொகுப்பொன்று வருவதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது (என்னுடைய தேர்வுகளில் எனது அரசியல் இல்லாமல் போவதெப்படி? என்னை எதிர்க்கிற ஒன்றை தேர்கிற நான் எனது கருத்தை வலியுறுத்துகிற இன்னொன்றைப் போடாவிட்டால் எனது இருப்பை சமன்செய்ய/காக்க முடியுமா!?).

தவிர, வாசிப்பைப் பொறுத்தவரை, (நிறைய) எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை, பள்ளி மாணவர்களுக்கு இது கவிஞர்கள் பற்றிய சிறந்த அறிமுகமாக இருக்கும். இத்தொகுதியில் குறிப்பிட்ட இக் கவிஞர்கள் விடுபட்டுள்ளதால் மாணவர்களுக்குத்தானேயன்றி, கவிஞர்களுக்கு ஒரு இழப்புமில்லை. ஒரு படைப்பாளியுடைய இருப்பு இவற்றில் தங்குவதில்லை.

————————————–
எனக்குத் தெரிந்த தகவற் பிழை:
ஈழக் கவிஞை சிவரமணி தனது 23 ஆம் வயதில் மே 5 -1991 இல் தற்கொலை செயதுகொண்டார். இதில் அவர் 72ம் ஆண்டு பிறந்தவர் எனப் போடப்பட்டிருக்கிறது.

Advertisements
Categories: Uncategorized
 1. வசந்தன்(Vasanthan)
  March 8, 2005 at 12:05 am

  நீங்கள் ஆணைச்சுட்டும் ‘ன்’ வரிசை எழுத்துக்களைத் தடிப்பாக்கியுள்ளீர்கள். (என்ன தடிப்பு?). இது மொழியிலுள்ள கோளாறா அல்லது சொல்பவனிலுள்ள (அல்லது சொல்பவளிலுள்ள) கோளாறா? மேற்குறிப்பிட்ட பத்தியில் பொதுப்பாலை உணர்த்தக் கூடியதாகப் போடக்கூடிய சொற்கள் எவை. ‘ர்’ வரும்படி செய்தால் பொதுமைப்படுகிறதா? (கவிஞர், கவிஞருடைய, அவருடைய, அவரது. அவருக்கேயான) அதுகூட ஆணைச்சுட்டுவதற்காகவே பெரும்பாலும் மொழியில் பயன்படுத்தப்படுகிறதே. சில வேளை நீங்கள் தடிப்பாக்கியதன் காரணத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு சளாப்புகிறேனோ தெரியவில்லை.
  ஜெயபாலன் விடுபட்டது வருத்தமளிக்கிறது. ஈழ இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாதவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 2. ஒரு பொடிச்சி
  March 8, 2005 at 1:45 am

  தடிப்பு! குறித்து
  நீங்கள் புரிந்துகொண்டது சரியே.
  ‘ர்’ என்று போட்டாலும் ஆணைச் சுட்டுவதுபோல இருந்தாலும் அதை பொதுச் சொல்லாக பாவிக்கலாம் என்றே நினைக்கிறேன். மொழியில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதை -முடிந்தவரை- உள்வாங்கி, இவற்றை எழுதுகிறபோது ‘தடிப்பாக்குவதூடாக’ பாகுபாடில்லாத ஒரு மொழியை நாம எழுதும்போதாவது பயன்படுத்தும் ஆவல்தான்!

 3. selvanayaki
  March 10, 2005 at 11:03 pm

  நல்ல கருத்தாழமான பதிவு.

 4. சிறுவன்
  March 13, 2005 at 3:42 am

  பொடிச்சி, தங்களின் ‘ன்’ குறியீட்டு முறை என்னை மிகவும் கவர்ந்தது. புதிய முயற்சி, பாராட்டுக்கள்.

 5. ஒரு பொடிச்சி
  March 14, 2005 at 6:07 am

  நன்றி செல்வநாயகி!
  சிறுவன் உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

 6. Anonymous
 7. May 2, 2009 at 7:10 pm

  visjayapalan@gmail.com தங்கள் கட்டுரையும் எதிர் வினைகலும் படித்தேன். எந்த ஒரு நூலிலும் முழுவதையும் சொல்ல முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். எல்லோரது பட்டியலும் ஒன்றுபோல இருந்தால் விவாதமும் வளற்ச்சியும் இல்லை என்பதையும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். விமர்சிக்கிறவர்கள் அஞ்சாமல் அவர்கள் அவர்கள் முன்னுரிமையை பின்பற்றுவதுதானே அறம். துணிச்சலான அதுதானே ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். எழுத்தாளரல்ல நல்ல வாசகர்கள் தான் ஒரு நூலையோ கட்டுரையையோ முடித்து வைக்கிறார்கள். பெட்டைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: