Home > Uncategorized > குடும்பம் II

குடும்பம் II

நான் இப்படியாகிப் போனேன் என்கையில்

என் தோழிகள் அவர்களும்

தெரிவித்தார்கள். …

-சுகந்தி சுப்ரமணியம்

(தொகுப்பு: ‘மீண்டெழுதலின் ரகசியம்’)


ஒவ்வொருநாளும், சப்வேயில் 1 1/2 மணித்தியாலங்கள் பயணித்தே வீடு திரும்புகிறேன்; சக பயணிகளாய் கூடவருகிற, யாருக்கும், ஆண்களும் பெண்களும் தூங்கி வழிந்தபடி களைத்து விழுந்து வருகிற- யாருக்கும், வீடு திரும்புதலின் மகிழ்வும் விடுதலையுணர்வும் தெரிந்திருக்கும். அதற்கு ஈடென்ன! உடல்உழைப்பற்ற வேலையாட்கள் முதல் தொழிற்சாலை ஊழியர்கள்வரை, கோப்புகளினதும், இயந்திரங்களதும் சகவாசத்திலிருந்து வெளியேறி, எப்போதும் உடலும் மனமும், களைப்பாறலை எதிர்பார்த்தே திரும்புகிறது.

அந்த நிம்மதிக்கு களைப்பாறலுக்கும் வீட்டிலிருக்கிற பெண் செல்வதில்லை. ஒவ்வொரு நாளும்,

“…

எல்லோர்க்குமான உதயம்

தினசரி நிகழ்கிறது.

நாமதைக் காண்பதில்லை.”

என்பதாய் அல்லவோ கழிகிறது.

அம்பை ஒருமுறை சொன்னதாக ஞாபகம், குடும்பங்கள் உடைவதைப் பற்றி ‘அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்கப்பட்டபோதோ என்னவோ, ‘குடும்பம் என்ன சட்டியா பானையா போட்டு உடைக்க’ என்று!

குடும்பம் பற்றிய விமர்சனங்கள் நவீனத் தமிழ் எழுத்துலகில் காணலாம் (லௌகீக வாழ்வை எழுதிச் செல்லுகிற எந்த நாவலில்தான் குடும்பத்தின் இறுக்கங்களும் உளச்சிக்கல்களும் அறவே இல்லாமற் போகும்?). ஆனால் 90களிற்கு முன்புவரை அவற்றில் பெண்களின் பங்களிப்பு அரிதாகவே இருந்தது. அம்பை போன்ற அறிவுஜீவிப் பெண்ணது விமர்சனம் ‘சிறகுகள் முறியும்’ போன்ற சிறுகதைகளளவில்தான் இருந்தது. அப்பால், அவருடைய படைப்புக்கள் தனிப்பட்ட -சுதந்திரமான- பெண்ணின் அனுபவங்களின் வெளிப்பாடுகளாக அமைந்தன.

இன்றைக்கு, நகரத்தின் இறுக்கத்துள் மூச்சுமுட்டும் தம் வாழ்வைப் பகிர்கிற தமிழ் ஆண் எழுத்தாளர்கள் போலவே பெண்களும் தமதைக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பம் என்கிற ஒன்று ஒரு துடியான மகிழ்ச்சிகரமான மனித ஜீவியை கலைத்துவமற்ற ஒரு இயந்திரமாய், எப்படி மாற்றிப்போடுகிறது என்பதை இவர்கள் ஊடாகக் காண முடிகிறது.

உமா மகேஸ்வரியினுடைய கதைகளின் உலகு குடும்பத்தின் இறுக்கத்தை, பெண்ணிற்குத் தரப்பட்ட வெற்றிடத்தை, சுயஅழிப்பை, அவளின் அதற்குள்ளும் வாழும் முனைப்பையும் அயர்ச்சியையுமே வெளிப்படுத்துகின்றன. இதுவரையில் ஆணின் கண்ணோட்டத்தில் காட்டப்பட்ட குடும்பம் இன்றைக்கு அங்கேயே முழுநாளும் இருப்பவளாகிய பெண்ணின் பார்வையில் வெளிவருகிறது.

ஆண்கள் அச்சப்பட்ட காமத்தை மட்டுமன்று, இந்தக் குடும்ப அமைப்பு கொன்றுக்கொண்டிருக்கிற தனது தனித்துவத்தை, இயலுமைகளை தேடும் பிரதியாகவே சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பு அமைந்தது. உமா மகேஸ்வரி

‘என் குழந்தைத்தனங்கள் மாற முன்னமே

வந்து பிறந்தன குழந்தைகள்’

எனச் எழுதுவதும் தனது பக்குவமடையாமையை கவனங்கொள்ளாமல் தன்மேல் ஏற்றப்பட்ட/படும் பொறுப்புகள் பற்றியதே.

குடும்பங்களின் உட்சிக்கல்கள், கட்டுக்கள் பற்றியெல்லாம் பெண்கள் பேசத் தொடங்கிறபோது, குடும்பங்கள் உடைவதான ‘புரிதலுடன்’ அத்திவாரத்தின் உடைவு பற்றிய அச்சமும் காக்கும் துடிப்பும் பல(வி)ரிடத்தே எழுவதைக் காணலாம்.

குடும்பங்களின் உடைவு பற்றிய ஆழ்ந்த மனவருத்தங்களை மேற்கில், (விவாகரத்து) ஷோப் ஒப்பறாக்களில், ‘கூட்டுக் குடும்பங்களின்’ உடைவு பற்றிய சோகத்தன்மையை நமது நாடகங்களில்/படங்களில் காணலாம். ‘உன்னதமான’ ‘ஒற்றுமையான’ குடும்பங்களை/கூட்டுக் குடும்பங்களை படைப்பதூடாக ‘பழையன குறித்த’ ‘சிறப்பானவை’ என்ற பிம்பத்தை தவறாமல் உண்டு பண்ணி விடுகின்றன இவை.

சமீபத்தில் சுகந்தி சுப்ரமணியத்தின் அனைத்து கவிதைகளும் அடங்கிய ‘மீண்டெழுதலின் ரகசியம்’ என்கிற சிறிய கவிதைத் தொகுதியை சப்வேயில் வந்துகொண்டிருந்தபோது படித்தேன். 80களின் நடுப்பகுதியில், ‘பெண் எழுத்துக்கான பரப்பு பண்படாததாயும் நீட்சியற்றதாயும் இருந்த காலகட்டத்தில்; சுகந்தி வலிமையுடன் தன் இருப்பை நிறுவியதாக’ நூலுள்ளே சொல்லப்பட்டிருக்கிறது. சுகந்தி பற்றிய நல்ல அறிமுகக் குறிப்பிது.

வீட்டிற்குள்ளேயே வாழ(?) ‘நேர்ந்து’விட்ட ஒரு பெண்ணினது வெளிப்பாடுகளே இவையும்.

சல்மா, உமா.மகேஸ்வரி ஆகியோர் எழுத்துக்களும் சுகந்தியின் எழுத்தின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது… புத்தகத்தை விரிக்கும்போதே சுகந்தியின் ‘வாழ்வும் பார்வையும், “நானும் இந்த சமூகமும்/ எனக்கென என்ன வைத்திருக்கிறோம்?” போன்ற கேள்விகளும்” பேச ஆரம்பிக்கின்றன, மௌனமாக, யாருமற்ற தனிமையில், தமக்குள்ளாற பேசுவதுபோல… இனங்காணப்படாத வலியினால் சொற்கள் நெரிகின்றன.எனது பார்வை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.

என்றாலும்

மிக முக்கியமாய் நகரில் நடப்பவை எல்லாம்

விடுபட்டுத்தான் போகின்றன.

காலங்கடந்து தெரிந்தாலும் ஏனோ

எதுவுமே பாதிப்பதில்லை.

இதுதான் சரியென எல்லோரும் சொன்னாலும்

எனக்குள் எப்போதும் வருத்தமாய் இருந்தாலும்

நானும் ஆக்ரோஷமாய் தடிகளைச் சுழற்றியபடி

வேகமாய் ஒவ்வொருவரையும் தாக்குவதாய் நினைக்கிறேன்

…(பக். பக்32)

வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?

நான் கேட்டேன் அந்தப் பெண்களை.

இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.

எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்

வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.

ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.

வெள்ளிக் கிழமையும், வியாழனும்

விரதமிருக்கிறேன் அம்மனுக்கு;

தீரும் என் கவலைகள் என்றாள்

மற்றுமொருத்தி.

(பக். 30)

… உங்களுக்குத் தெய்வம்

அவருக்கு மார்க்சியம்

எனக்கு கவிதை

(பக். 122)

நானும் எனது தலைமுறையும்

ஏற்கனவே

அடகு வைக்கப்பட்டிருக்கிறோம்

(பக். 44)

நான் கற்ற கல்வி

என் மகளுக்கு டியூசன் எடுக்கமட்டும்

உதவியானது. …

(பக். 81)

… தோல்விகள் தொடர்கையில்

என்னுடனே நான் நட்புக் கொண்டேன்

(பக்.–)

…தவிரவும்

முக்கியமாய் எதுவமில்லை

என்னிடம்

தனிமை தவிர.

(பக்.56)

எதுவும் தேவையில்லை என

உதறித்தள்ள நானென்ன ஜடமா…

வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு

போட்டியாய் கிடந்து தவிக்கிறேன்.

எதுவாகவும் நானில்லை.

எனது நான்

வீட்டின் இருண்டமூலையில்

பதுங்கிக் கிடக்கிறது எலிகளோடு

(பக். 68)

முரண்பாடுகளே வாழ்க்கை என்றானபின்

எதுதான் சரி?

எதுதான் தவறு?

(பக். –)

… நான் ஏன் இப்படியாகிப் போனேன்?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்.

அது;

நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்.

(பக். 32)

இவை யாரை, எதை எதிர்க்கின்றன என்பதற்கு தனிஅடையாளமில்லை. அவனாக, சமூகமாக, தானாக அவை வடிவங்கொள்கின்றன. தனது ஊரிலுள்ள ஒரு நதியின் முடிவையே பார்க்காத தன் வாழ்வு, சூழலின் நெருக்கடி, ஒரே சுழல் – சுருங்கிய தன்(ம்) வாழ்வுகுறித்தனவே இக் கவிதைகள்.

இன்றுங்கூட குடும்பத்திற்கு மாற்றோ, அது குறித்து பேசுவதில் அக்கறையோ கொள்ளாதபோது, 80களில் பிற பெண்களே எழுதாதகாலம், இதைவிட சிறப்பாக தனது உலகத்தை யாரும் பதிந்திருக்க முடியாது.

‘அதிர்ச்சி’யூட்டும் எழுத்துக்களைப் பற்றி பேசுகிற விமர்சகர்கள் இத்தகைய ‘அதிர்ச்சி’யூட்டாத பிரதிகளை எப்படி தாண்டிச் சென்றார்கள்?

சுகந்தி இப்போது என்ன செய்கிறார்?

நூலின் பின்அட்டையிலுள்ள சிறிய புகைப்படம்தான் இவரின் முகமா? என்ன துரொகம் செய்கிறது! ஒரு மெழுகுபொம்பமைபோல, சலனமற்று வெறித்தபடி, நிற்கிறார், ‘புத்தகத்திலிருக்கிற நான் இப்ப வேறு யாரோ’ என்பதுபோல. யாரேனும் பயணிகள் வாசித்து அசை போடட்டும்/இரை மீட்கட்டும் என்றோ என்னவோ! கண்களூடாக ஊடறுத்து பக்கங்களெல்லாம் அவரது உலகம் விரிந்தண்டே போகிறது. இந்த பயணம் போய்க்கொண்டிருக்கிறது. கமலா தாஸின் கதைகளில் வருகிற துரோகங்கள் மனதை அடித்துப்போடுவதுபோலான உணர்வு ஒட்டிக்கொள்கிறது. சுகந்தியோடதும் துரொகம்தான், ஏதோ சொல்வார்களே, ‘வாழும் துரோகம்’.

குடும்ப அமைப்புள், அதன் இறுக்கத்திற்கெதிரான ஓயாத போரை புரிந்துகொள்ளாமல் பெண்களது படைப்புகள், வாழ்வு பற்றிய எத்தகைய புரிதலை அடையலாம் என்பது தெரியவில்லை.

-0-

(வேலைக்குப் போகாத, வீட்டை ‘நிர்வகிக்கிற’, மேற்கின் உயர் மத்தியதரவர்க்க மற்றும் எமது மத்தியதரவர்க்கப் பெண்கள் என வாசிக்கவேண்டும்)

Advertisements
Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: