Home > அஞ்சலி, ஈழம்/தொடர்புடையன > நரகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறவர் தொடர்பாக…

நரகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறவர் தொடர்பாக…

இன்று மிக, மிகத் துயரமான நாள். நான் பிறந்த கணம்முதல் அரபாத்தை எனக்குத் தெரியும்.

பலஸ்தீனியர்களது எல்லாச் சாதனைகளும், அவர் அவர்களுக்காகச் செய்து தந்தவை. அவரது வாழ்நாள் பூராவும் பாலஸ்தீனத்திற்காகவும் எமது விடுதலைக்காகவும் போராடினவர் அவர்.

அவரில்லாமல் ஒரு எதிர்காலத்தையும் என்னால் காணமுடியவில்லை- அது … மிக மிகக் கடினமானதாயும் இருக்கும்.

இகாப் ஜோஆன் (Ihab Joaan), 22 வயது பலஸ்தீனியன், வாகன ஓட்டி

நன்றி: BBC இணையத்தளம்

வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்த ஒருநாள், வாகன முன் இருக்கையில் கிடந்தது அன்றைய தினசரி. சக்கரநாற்காலியில் இருந்தபடி ஒரு வெளிர்நீல நோயாளி உடையில், முதியவர்களுக்குரிய அப்பாவம் பூசிய சிரிப்புடன் யசீர் அரபாத் – 40 ஆண்டுகளுக்கு மேலாய் உலகில் உள்ள விடுதலை இயக்கங்களின் போராளிகளதெல்லாம் ஆகர்ஸம். மிகவும் உற்றுப் பார்த்து எதையோ அறிய விரும்புவது போல வெறித்துக்கொண்டிருந்தேன். பயணத்தினூடே மேலோட்டமாக –பாரிஸ், சிகிச்சைக்காக, அவருக்கு உடல்நலக்கேடு என- வாசிப்பு முடிந்தது.

வகுப்புக்குச் சென்றபின்னும், தரப்பட்ட இடைவேளையின்போது, ஏதோ அருட்டலுடன், எடுத்துப் பார்த்தது அந்தப் படத்தைத்தான் (வழமையாக ஹோலிவூட் நடிகர்களைப் பற்றிய பக்கத்தைப் படிப்பேன்).

யசீர் அரபாத் மரணமெய்திவிட்ட செய்தியறிந்தபோது, (நவம்பர் 11) உலகப் போர்களில் மரணமெய்திய கனேடிய இராணுவ வீரர்கள் நினைவாக ‘Remembrance Day’ (நினைவுகூரும் நாள்) மரியாதை அணிவகுப்புகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல நகர்ப்புற மையங்களில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். முதலாம், இரண்டாம் உலகப் போர்களிலும்; கொரிய யுத்தத்திலும் மரித்தவர்களை நினைவுகூர இவ் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.

எனக்கு ஞாபகம் இருக்கிறது – ஒவ்வொரு ஆண்டும், இந்த குறிப்பிட்ட நாளில், தரம் 5 இல் ஆரம்பித்து தரம் 10 வரையேனும் John McCrae இன் புகழ்பெற்ற In Flanders Fields என்ற கவிதையை ஆசிரியர்கள் வகுப்பறைகளில் விநியோகிப்பார்கள். இங்கு படிக்கிற ஒவ்வொரு மாணவர்களுக்கும் அக் கவிதை ஏறத்தாள பாடமாயிருக்கும். அதை வாசித்தலும் ‘காலை அறிவித்தலில்” நினைவுகூரல் பற்றிய சிறு குறிப்புடனோ, அல்லது ஒரு அசெம்பிளியைக் கூட்டி, மேடையில் பழைய ‘வீரர்களை’ கொண்டுவந்து பேசவிட்டோ அன்றைய நாள் முடிவடையும். இந்தப் பரிவாரங்களின் துணையுடன், இதை ஒரு சம்பிரதாயமாக ஒவ்வோர் ஆண்டும் செய்துவருகிறார்கள், சோர்வின்றி.

வயது முதிர்ந்த அந்த இராணுவ வீரர்கள் பேசுகையில், அவர்கள் நீட்டி முழக்கி, இன்னும் அதிகமாகப் பேசினால் நல்லம் என மாணவ மனம் அவாவும், ஏனெனில் அப்பத்தான் அடுத்த பாட நேரம் சுருக்கப்படும்!

பிள்ளைகளிற்கும் தமக்குமான இடைவெளி தெரியாமல் அந்த ‘ஒருகால” வீரர்கள் பேசி ஓய்வர். அவர்கள் போட்டுவந்த பழைய இராணுவ உடையும், இடதுபுற(வலதுபுற?)த் தோளிலே குத்தியுள்ள நட்சத்திரங்களுமாய் ‘ஜம்’ என்றிருந்தாலும், இறுதியில், நடுங்கிய குரலில், வந்தவர்கள் யாரேனும், ‘யுத்தம் நீங்கள் நினைப்பதுபோல அல்ல” சொல்லாமல் போகார்கள். சரிதான், ‘அப்படியே.. அப்படியே இன்னுங் கொஞ்சம், கொஞ்சம்! பேசுங்கள்” என்பதுபோல உட்கார்ந்திருப்போம் நாம்.

உணர்வுரீதியான உறவற்றுப்போனால் நாட்கள், நினைவுகூரல்கள் எல்லாமே யந்திரக்கதிதான். யூதர்களது இங்குள்ள தளையெடுக்கிற தலைமுறைகள் ‘யூதப்படுகொலை’யை மறந்துவருவதால், அதை அவர்கள் நினைவு வைத்திருக்க பெரும் பிரயத்தனப்படுகிறார்கள் பழைய தலைமுறையினர் இங்கே. ‘வரலாறை மறந்தாலும் பறவாயில்லை ஏனெனில் அது திரும்பவும் திரும்பவும் வரும்’ என்று வரலாற்றாசிரியர் படிப்பித்தார். உண்மைதான். கொலைகள் தருகிற வன்மத்தை யூத இளம் தலைமுறையைவிட அதிகமாக –நிகழ்வாக, நேரடையாக, பலஸ்தீனிய இளந் தலைமுறையினர் அறிவார்கள்.

எனக்கோ அன்றைக்கு தினசரியில் பார்த்த அரபாத்தான் கண்முன் நிக்கிறார். சிவப்பு ‘பொப்பி’ (poppy) களை சட்டையில் குத்திக்கொண்டு தொலைகாட்சியில் செய்திகள் வாசிக்கிறார்கள்; “மகா யுத்தங்களில் இறந்தவர்களை மட்டுமல்ல சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ‘அமைதிகாப்பு பணி’ யில் மரித்தவர்களையும் நினைவுகூருங்கள்” என வேண்டுகிறார்கள். “யுத்தம் மிகக் கொடூரமானது. நீங்கள் நினைப்பதுபோல அல்ல” ஏதோ சொல்லத் தொடங்குகிற பழைய ‘வீரர்’ தலையை ஆட்டிவிட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொள்கிறார். தொலைக்காட்சியில் சிலவற்றைச் சொல்லக்கூடாது (முக்கியமாக உண்மைகளை!).

அன்றைய தினம், அரபாத்தின் நோயாளி முகந் தந்த அருட்டலில், பெருந் தலைவர்களின் முதுமை, அவர்களுக்குத் தருகிற விநோத முகத்தைப் பற்றி எழுதத் எண்ணியிருந்தேன். இறுதிக் காலங்களில் அரபாத்தின் முகத்தில் தெரிந்தது வீரம் அல்ல. களைப்பாற ஒரு இடம். அந்த இடம் ஜெருசலேம் என்கிறார்கள்:

இணைய செய்தி ஒன்று இவ்வாறு சொல்கிறது:

வியாழன் இரவு அரபாத்தின் மரணத்தை இஸ்ரேல் ஊடகங்கள் அறிவித்தபிற்பாடு, பழமைவாத யூத இளைஞர்கள் சிலர் ஜெருசலேத்தில் பாடி, ஆடி, இனிப்பு விநியோகித்து அறிவித்துக்கொண்டார்களாம் ‘எமது மிகப்பெரும் எதிரிகளில் ஒருவர் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்” என்று!

அரபாத்தோ இறுதிப் பயணத்தில் மிகவும் களைப்புடன் கையசைக்கிறார்.

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: