Home > இதழியல் > முழக்கம்: எச்சரிக்கை! -2-

முழக்கம்: எச்சரிக்கை! -2-

முதலில் ஒரு பெட்டையின் அச்சத்தைச் சொன்னேன், ஆனால் இனித்தான் ஒரு மிகப்பெரிய சமூகப் அச்சத்தைப் பற்றி சொல்லப் போகிறேன் (பெண்களின் அச்சம் என்ன பெரிசு!!!)

ரொறன்றோ எனது பிரச்சினைக்குரிய நகரமாவதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. முக்கியமானவை அங்குள்ள தமிழர் கடைகள், கலை நிகழ்ச்சிகள், முக்கியமாக கோடைகால சாமத்திய மற்றும் திருமண விழாக்கள்… கோடை விடுமுறை ரொறன்ரோவிலேயே கழிந்தது.

ரோறன்ரோவிற்கே உரிய சிறப்பம்சமான ‘தமிழ்ப்’ பத்திரிகைகளை பார்க்கக்கூடாதென்று நினைத்தபோதும் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்தல் முடியாது எனவே சும்மா கிடந்த பத்திரிகைகளை தாகத்துடன் படித்தேன் அத்தனையும் இலவசப் பத்திரிகைகள்தான்.

விதிவிலக்காக, நான் உலகத் தமிழரையும் வாங்கத்தான் செய்தேன் (அது முஸ்லிம்களை -எதிரிகளிடமிருந்து- எச்சரிக்கையுடன் இருக்கும்படி முன்பக்கத்தில் அடிக்கடி சொல்லுகிறது). உலகத்தமிழர் என்றதும் ரஸ்யா பற்றிய அரசியல் நகைச்சுவைத் துணுக்கு (அதன் இணையத்தளத்தில் உள்ளது) ஒன்றுதான் மனதுள் வருகிறது. ருவினோச்சிடம் நண்பன் கேட்டானாம் “நீ கமியூனிஸ்ட் கட்சிப் பத்திரிகை படிக்கிறனியோ” எண்டு. அதற்கு அவன் சொன்னானாம் “ஓம், பின்ன?! இல்லாட்டி எனக்கெப்பிடித் தெரியும் நான் எவ்வளவு சந்தோசமான வாழ்க்கையை வாழ்றன் எண்டு!” அது ஸ்டாலின் கால நகைச்சுவை… அதுபோலத்தான் உலகத்தமிழரும்… அதல்ல விசயம்!

உதயன், தமிழர் செந்தாமரை, சுதந்திரன் (இதழ்: 50), முரசொலி, முழக்கம், ஈழமுரசு …ஒரே பால் திருமணம் நாளை பலதார மணத்துக்கு வழிவகுக்கும் அல்லவா, இடி அமீனும் பிடல் காஸ்ரோவும் இரண்டு சர்வாதிகாரிகள்… வகையறா செய்திகள். ஆனால் முரசொலி எல்லாவற்றையும் துாக்கி சாப்பிட்டுவிட்டது. அது நடிகை பிரதியுஸா நடிக்கிற புதுப் படம் ஒன்றைப்பற்றி அவவின்ர படமும்போட்டு செய்தி வெளியிட்டிருக்கு. வெகு விரைவில் வெளிவருமாம். சந்தோசம்தான்… ஆனா அந்த பெட்டை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலையும் செய்யப்பட்டு கடைசி ஒரு வருடமாவது இருக்கும். இப்பிடி முசுப்பாத்தி விட்டுக்கொண்டு இறந்தவர்களது ஆன்மாவையும் நிம்மதியா இருக்கவிடாம செய்துகொண்டு இப் பத்திரிகைகள் கிடக்க, இங்கால இன்னொரு பத்திரிகை புது ஸ்டன்டுகளோட வெளிக்கிட்டு நிக்குது.

தமிழ் சமூகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் சிறார்களுக்கு தமிழில் பெயர் வைப்பதிலும் ஓயாத பற்றுக் கொண்ட இப்பத்திரிக்கை (அப்பெயர்களாவன மனுநீதிகண்ட சோழன், சங்கிலியன், இளஞ்சேரலாதன், இளஞ்செட்சென்னி, இத்தியாதி) தினமுரசுட நகல் (வெளி தோற்றத்தில) எடுவையை சமீப காலங்களில் எடுக்க வெளிக்கிட்டிருக்கிறது. 2 வருடங்களுக்கு முன்பு அது கலராய் எல்லாம் வந்ததில்லை. அதெல்லாம் ஓக்கே.

இடிபோல பெட்டையிட நெஞ்ச துளைச்ச விசயம் முழக்கத்தில் வெளிவந்த “கனடாத்தமிழரை விழுங்கும் பரப்புரை வலைப்பின்னல்” என்கிற கட்டுரை.

“பொதுவாக யுத்த நிறுத்த காலத்தில் தமிழ்த் தேசிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது” என்று கவலைப்பட்டுக்கொண்டு, அதை முறியிடிக்கும் முகமான தமது வரலாற்றுக் கடமையை கூறிக்கொண்டுபோன அக்கட்டுரையாளர் (வானதி, பொறுப்பாசிரியர், முழக்கம்) துண்டுப் பிரசுரங்கள், எதிர்ச்செயற்பாடுகள் இவற்றின் நோக்கங்களை ஏழு (7) விதமாகப் பிரிக்கிறார். அவையாவன:

1. மொட்டைப் பிரசுரங்கள் மூலம் தமிழர்களின்

தலைமையாகத் திகழக்கூடியவர்களைக்

குறிவைத்துத் தாக்குதல்

2. ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள்

கொண்டு வந்து சோரம்போகும்

ஊடகவியலாளர்களைத் தமது கூட்டணிக்குள்

இணைத்துக்கொள்ளுதல்

3. காலத்தின் தேவையாக இருக்கக்கூடிய

முக்கியமான செயற்றிட்டங்கள், பணிகளில் இருந்து

மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்புதல்

4. தலைமை சரியில்லை என்ற கருத்தை நிறுவி,

புதியதொரு தலைமை இக்காலத்தின் தேவை என்று

வலியுறுத்தல்

5. தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான வணிக

நிறுவனங்களின் சேவை குறித்து அவதூறுகளைப்

பரப்புதல்

6. மதரீதியாகத் தமிழர்களைப் பிரித்து மோதவிட்டு

இரசித்தல்

7. இணையத்தளம் ஊடாக மின்னஞ்சல்கள்,

திரைப்பாதுகாப்பு (Screen Savers) மூலம்

வைரஸ்களைப் பரப்பி கணணிகளைத் தாக்குதல்

இத் தலைப்புகளுக்குக் கீழே அவர் எழுதியவைகள் அநேகம். அதில் ஒரு தலைப்பின்கீழ் கீழ்க்கண்ட வாக்கியங்களைத் தருகிறார்: “தலைமை சரியில்லை என்ற கருத்தை நிறுவி, புதியதொரு தலைமை இக்காலத்தின் தேவை என்று வலியுறுத்தல் வலைப்பின்னலின் முக்கிய அங்கமாகப் புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதைத் தமிழ்த்தேசிய விரோத சக்திகள் விரும்புகின்றன. அதற்காக இந்தக் கனேடிய மண்ணில் தமிழர்களது பிரதிநிதிகளாக, தலைமையாக இருப்பதற்கு உலகத் தமிழர் இயக்கம் தகுதியற்றது என்ற பரப்புரையை முன்வைத்து தனிநபர்கள், வணிகர்கள், ஊடகங்கள் இணைந்த புதிய கூட்டணியை உருவாக்குவதில் இந்த சக்திகள் முனைப்போடு

இருந்து வருகின்றன. அண்மையில் இக் கூட்டணியைஉருவாக்குவதற்கான முயற்சி

ரொறன்ரோவில் அரங்கேறியதைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

…உணர்ந்த தமிழ்த்தேசிய எதிர்ப்புப் பரப்புரை சூத்திரதாரிகள், இதற்கான ஆரம்ப நகர்வுகளை இன்று ரொறன்ரோவில் மேற்கொண்டுள்ளனர். இது விரிவுடையும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு இது குறித்த செய்திகள் கிடைக்குமிடத்து இன்று கனடாத் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய உலகத்தமிழர் இயக்கத்தினருடன் தொடர்புகொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகின்றது. எதிர்ப்புப் பரப்புரை விரிவடையும் இக் காலத்தில் உங்கள் தேசிய உணர்வைக் காட்டுவதற்கு தமிழ்த்தேசியத்

தொண்டு செய்தல் சிறந்ததொரு எதிர் நடவடிக்கையாகும்.”

உண்மையில் வேலையால வந்து பேப்பர ஒரு தட்டுத் தட்டிற களைச்சுப்போன தமிழர்களுக்கு அப் – பாவித் ரத்த்தில ஏதோ ஊடுருவலாம் இதைப் படிக்கையில். ‘ச்சா, நம்முள்ள ஊடுருவிறாங்கள்” என்று ஒரு எச்சரிக்கை கலந்த தலையாட்டல் நிகழலாம். எந்தக் கேள்விகளையும் எழவிடாது “துரோகி” என்கிற ஒலி மட்டுமே அவர்களுள் ஒலிக்கும். – ஆனால்

யார் சோரம்போனவர்கள்? அதை நிர்ணயிப்பது யார்?

இவற்றையெல்லாம் தமிழ் மக்களை அச்சப் படுத்துதல், அட துரோகிகளின் செயல்களுக்கு நான் மயங்கிவிட்டோமா என்கிற மனஉளைச்சலுக்குள் உண்டாக்குதல் எனவிட்டாலும், உண்மையில் இவர்கள் குறிப்பிடுகிற இந்த அச்சங்கள் தெளிவான, சுயசிந்தனை உடைய மக்களை உடைய இயக்கத்திற்கு அவசியமற்றவை (அது சரி!). ஆனால் அது எந்தக் காலத்திலும் அப்படி அல்லாதபடியால், இப்படியான தமது பயங்களை மக்களுடைய தலையில் போட்டு இவ் ஊடகங்கள் தமது பிழைப்பையும் ‘வரலாற்றுக் கடமையையும்’ செய்கின்றன. ஈழமுரசும் தன் தேவை கருதி அதை மறுபிரசுரமும் செய்கிறது.

எனது கேள்வியெல்லாம் இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து வருகிறது சமூகத்தைப் பற்றித் தாம் பேசலாம் என்கிற உரிமை, தமது கவலைகளை சமூகத்தின் தலைகளில் போடலாம் என்கிற உரிமை? துாயதமிழ் பேர் வரிசையில் இவர்கள் தொடராய் வெளியிடுகிற பெயர்களை இவர்கள்தான் வைக்கவேண்டும்! சத்தியமாய் சொல்கிறேன் என் பிள்ளைகளுக்கு இவர்களது ஆண்ட பரம்பரை பெயர்களான கரிகாலன், அவன் இவன் (ஆண்பெண்) பெயர்களை வைக்கமாட்டேன். இருப்பில் இருக்கிற பெட்டைகளது தினி, யினி, செல்வி, எச்சங்களைவிட வேறு மொழிப் பெயர்கள் மிச்சம் நல்லம். அழகான சில்வியா, துரியன் (துரியோதனின் சுருக்கம்) மிக அர்த்தம் நிறைந்தவையும்.

இதை அறிவிக்குமாறு தெரிவித்திருந்தது: இது எந்த பத்திரிகா தர்மத்துக்கும் பொருந்தியது அல்ல, சரி அந்தக் கர்மம்தான் இல்ல, ஒரு பொலிஸ் இலாகாவோ சட்ட நிறுவனம் (அல்லது அதன் சம்மதத்துடன்) எதுவோ தந்தாலேயொழிய மற்றப்படி இப்படி ஒரு விண்ணப்பம் தாங்கிய கட்டுரையை வெளியிடுவது தவறானதாகும். முழங்குபவர்கள் முழங்கட்டும். ஆனால் இப்படி ஒரு வேண்டுகோளை ஒரு பத்திரிகையில் பொறுப்பான ஆசிரியராய் இருக்கும் ஒருவர் எழுதுவது இந் நாட்டின் சட்டப்படி குற்றம் என்றும் அதை நன்று அறிந்த, பேச்சுரிமை பற்றி (பம்மாத்துக்குத்தான் என்றாலும்) பேசுகிற ஒரு நாட்டில் ஒளிந்திருந்து அவர்களது சட்டங்களையும் அறிந்தவளாகிய என்னை ஒற்றள் (informer) வேலை செய்யச் சொல்லாதீர்கள். அதனால் உங்களுடைய பிரச்சாரத்தை அதன் எல்லைகளுக்குள்ளாற நடத்துங்கள்.

“…உங்களுக்கு இது குறித்த

செய்திகள் கிடைக்குமிடத்து இன்று கனடாத்

தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய

உலகத்தமிழர் இயக்கத்தினருடன் தொடர்புகொள்ள

வேண்டியது இன்றியமையாதது ஆகின்றது. எதிர்ப்புப்

பரப்புரை விரிவடையும் இக்காலத்தில் உங்கள்

தேசிய உணர்வைக் காட்டுவதற்கு தமிழ்த்தேசியத்

தொண்டு செய்தல் சிறந்ததொரு எதிர்

நடவடிக்கையாகும்.”

அன்பர்களே உங்களுக்க யார் சொன்னார்கள் கனடாத்தமிழரின் பிரதிநிதிகள் இன்னார் என்று? அதை தாங்களே முடிவெடுத்து தகவல் தெரிவிக்குமாறு பரிந்துரைப்பது உங்களுக்கு அதிகமாய்ப் படவில்லையா?

நீங்கள் துரோகி என அழைக்க விரும்பினால் நானும் தமிழை தந்தைதாய் மொழியாய் கொண்டவள் ஆகையால் இந்த எச்சரிக்கைகளைத் தந்து எம்மை அச்சுறுத்த வேண்டாமென்று கண்டிக்கிறேன். எந்த மாடியால் குதிப்பதென எண்ணமிட்டிருக்கும் மக்கள் மனங்களில் நச்சாய் ஆண்ட பரம்பரைக் கதைகளைக் கூறி ரென்சன் படுத்தாதீர்கள். இன்னுமொன்று, அவர்களுக்கு(உலகத்தமிழருக்கு)த் தகவல் தந்தால் துரோகியில்லை சரி, ஆனால் அவர்கள் அத் தகவலை என்ன செய்வார்கள்? தகவல் தருமாறு கூறுகின்ற உள்ளர்த்தம் என்ன? கொலைக் கலாச்சாரம்தானே?

சுயபுத்திகொண்ட மக்கள் ஏன் துரோகிகளினதும், எதிரிகளினதும் கட்டுக் கதைகளை நம்பப் போகிறார்கள்? அது எந்த வலையில் வந்தால் என்ன? உங்களுக்கு எதிரிகளினைப்போலவே மக்களிலும் நம்பிக்கை இல்லையா?

(ஆனி 2003)

Advertisements
Categories: இதழியல்
 1. ilakkiyam
  November 22, 2004 at 1:28 pm

  மக்களே எல்லாம் தீர்மானிக்கக் கூடியவர்களென்றால் எதற்காக எழுத்துக்கள்? வெறும் செய்திளை அளிப்பது மட்டுமா பத்திரிகை, சஞ்சிகைகளின் கடமை? அப்படியானால் எதைப்பற்றியும் விமர்சிக்க எவருக்குமே உரிமையில்லையே. மாற்றுத் தலைமைக்காக யாரும் பிரச்சாரம் செய்யலாமென்றால், அதை எதிர்த்துப் பரப்புரை செய்யவும் உரிமையுண்டு தானே? (நீங்கள் சொல்லும் கருத்துச் சுதந்திர நாட்டில்). எங்கோ இருப்பவர்களை எப்படி தொடர்ச்சியான பரப்புரையில்லாமல் தக்க வைத்திருப்பது? (அதுவும் தமிழர்களை) இதுவே எதிர்ப்பரப்புரையாளருக்கும் பொருந்தும் தானே?
  அது சரி, குறிப்பிட்ட சில பெயர்களை வைப்பதில் தான் உங்களுக்குப் பிரச்சினையா? அல்லது தமிழ்ப் பெயர்களிலேயே விருப்பமில்லையா? ஒருவேளை தமிழ்ப்பெயர்களால் பெண் அடக்கப்படுகிறாள் என நீங்கள் நினைத்தால் அதைத் தெளிவுபடுத்த முடியுமா? தூய தமிழிற் பெயர் வைப்பது தேவையற்ற ஒன்று தானா?

 2. ilakkiyam
  November 22, 2004 at 1:31 pm

  மக்களே எல்லாம் தீர்மானிக்கக் கூடியவர்களென்றால் எதற்காக எழுத்துக்கள்? வெறும் செய்திளை அளிப்பது மட்டுமா பத்திரிகை, சஞ்சிகைகளின் கடமை? அப்படியானால் எதைப்பற்றியும் விமர்சிக்க எவருக்குமே உரிமையில்லையே. மாற்றுத் தலைமைக்காக யாரும் பிரச்சாரம் செய்யலாமென்றால், அதை எதிர்த்துப் பரப்புரை செய்யவும் உரிமையுண்டு தானே? (நீங்கள் சொல்லும் கருத்துச் சுதந்திர நாட்டில்). எங்கோ இருப்பவர்களை எப்படி தொடர்ச்சியான பரப்புரையில்லாமல் தக்க வைத்திருப்பது? (அதுவும் தமிழர்களை) இதுவே எதிர்ப்பரப்புரையாளருக்கும் பொருந்தும் தானே?
  அது சரி, குறிப்பிட்ட சில பெயர்களை வைப்பதில் தான் உங்களுக்குப் பிரச்சினையா? அல்லது தமிழ்ப் பெயர்களிலேயே விருப்பமில்லையா? ஒருவேளை தமிழ்ப்பெயர்களால் பெண் அடக்கப்படுகிறாள் என நீங்கள் நினைத்தால் அதைத் தெளிவுபடுத்த முடியுமா? தூய தமிழிற் பெயர் வைப்பது தேவையற்ற ஒன்று தானா?

 3. ஒரு பொடிச்சி
  November 23, 2004 at 8:51 am

  மாற்றுக் கருத்திற்கெதிராக பரப்புரை செய்ய உரிமை உண்டுதான், நான் சொல்ற கருத்துச் சுதந்திர நாட்டில் (அது அமெரிக்காவிற்கெதிராக, உலகமயமாதலுக்கெதிரான போராட்டமாக அல்லாத பட்சத்தில்!) ஆனால் அதற்காக யாருக்கோ தகவல் சொல்லச் சொல்வது கருத்துச் சுதந்திரம் அல்ல. அது வேறு. அதுதான் என்னோட எதிர்க் கருத்திற்கும், மக்களோட சுயபுத்திமேலான கருத்துக்கும் மூலம்.
  உங்களுக்கு நன்றி, இந்த தலைப்பிற்குக்கீழ் கருத்துள்ளிட்ட ஒரே ஒருவர் நீங்கள்தான். ‘முழக்கம்: எச்சரிக்கை’ இது எனது frustration. எனது கருத்துநிலைப்பட்ட விசனம்.. அந்தக் கட்டுரையை எழுதிய முழக்கத்தின் பொறுப்பாசிரியர் வானதிக்கும் அந்தக் கட்டுரை அவரது கருத்துக்காற்பட்ட -frustration- ஆய் இருக்கலாம். ஆனால் எனது எதிர்வினையை அங்கே எழுத முடியாது இல்லையா. அதொரு பிரச்சினை. அதோட இப்படி எழுதுகிறவர்களைப் பற்றி அறிவிக்க நான் ஒரு நிறுவனத்தை அழைக்க முடியாது (முன்பு இருந்த புலியெதிர்ப்பு நிறுவனங்கள்கூட அத்தகைய ‘அறிவிப்புக்களை’க் கொண்டிருந்தவை அல்ல). அந்த அடக்கப்பட்ட சூழலில் இப்படியான எதிர்வினைகளை ஆற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இதை எழுதுவதற்கு எழுதுபவர் ஒரு இயக்கஎதிர்ப்பாளர் ஆகக்கூட இருக்கவேண்டுமென்று தோன்றவில்லை. இன்னாருக்கு அறிவியுங்கள் என்றெழுதகிறவர்கள் அதன் -underlying meaning- ஐ புரியாமல் எழுதவில்லை, வாசிக்கிற மக்களும் அறியாதவர்கள் இல்லை. எனக்கு அது ஒரு disturbing ஆன factor ஆ இருக்கிறது.

  தமிழ்பெயர்களால் பெண் அடக்கப்படுவாள் என்ற ரீதியில் யோசித்ததில்லை. ஆனால் பிள்ளைகளிற்கு தேன்மொழி, சாந்தினி, யாழினி, நிர்மலா, தீபா இப்படி ஏற்கனவேஇருக்கிற பெயர்களை வைப்பதிலும், சங்ககாலத்திற்குப்போய் குழலினி, (வேறு பெயர்களுக்கு முழக்கத்தின் இணையத்தளத்திலேயே நீங்கள் போய்ப் பார்க்கலாம் http://www.muzhakkam.com/ ) என்றெல்லாம் வைப்பதில் ஆர்வமில்லை -அவை பெண்ணினுடைய குணங்களை வரையறுப்பனவும் (சாந்தம், தூய்மை, இனிமை இத்தியாதி) தானே?
  தூய தமிழ் பெயர், தூய தமிழ் வாதம் எல்லாமே அரசியல்வாதிகளாலேயே முன்வைக்கப்பட்டு மக்களுக்குச் சென்றிருக்கிறது, மணவை முஸ்தபாவால் அல்ல. ஆனால் அது மக்களின் உணர்வுதளத்தில் ஏதாவது உருப்படியாய் செய்திருந்தால் தமிழ்நாட்டிலோ இங்கையோ பிறமொழிமோகம் வந்திருக்காது. கருணாநிதியின் மகனின் பெயர்: ஸ்டாலின்! ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி. ஹிட்லரின் பெயரைக்கொண்ட பெயர்களைக் கொண்ட ஒரு தலைமுறையினர் ஜேர்மனியில் இருப்பார்கள்.
  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றவர்கள் தமிழர்கள். ஒரு புதிய மொழிக்குரிய நல்ல பெயர்களை இடுவதில் என்ன தவறு? ஆனால் தமிழர்கள் இடுகிற பெயர்களெல்லாம் ஓபேசன், உசாந்த் போன்ற உருப்படாத பெயர்கள்தான்.
  எனக்கு அத்தகைய பெயர்களைப்போலத்தான் இருக்கிறது தூயதமிழ்ப் பெயர்களும்.
  கற்பனையும் ரசனையும் அற்ற வெறும் பெயர்கள். இதில்கூட மாற்றமில்லாவிட்டால் எப்படி. சிறீ என்றிருப்பதை திரு என்று மாற்றினவுடன் தமிழ் வடமொழி ஆதிக்கத்தில் இருந்து தப்பிவிடுமா?
  நிர்மலாவை புனிதா என யாரோ எழுதியிருந்தார்கள். மிக அபத்தமாக இருந்தது.

 4. aathi
  December 11, 2004 at 6:34 pm

  ஈழ முரசு போன்ற பத்திாிகைகள் தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. மக்களை விழிப்புறசெய்வது அவர்கள் கடமை இல்லையா? வேலைக்குப்போய் கஸ்டப்படும் எமது மக்கள் எங்கே சுற்றி என்ன நடக்கிறது என அறியப்போகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையைச்செய்யட்டும் விட்டுவிடுங்கள். பெயர் வைக்க சொல்வது எல்லோருக்கும் அல்ல பிடித்தவர்கள் செய்யலாம். அவ்வளவுதான். பெயர் வைக்காதவர்கள் எல்லாம் எதிாிகள் என்றுல்ல. பிள்ளை பெறுபவள் பெண் அவளுக்கு பெயர்வைக்கும் முழு சுதந்திரம் உண்டு.

 5. sudarakan
  January 13, 2005 at 3:57 am

  நான் சற்று நாள்; எடுத்துக் கொண்டது ஏனென்றால் சட்டப்பிரச்சனைகள் பற்றி விரிவாக ஆராயத்தான். நான் ஆராய்ந்த மட்டில் கிடைத்த பதில். மக்ககளிடம் இருந்து தகவல் சேகரித்;தல் என்பதி;ல் எந்தத்தவறும் இல்லை. அதை யாருக்காக எதற்காக சேகரிக்கப்பட்டது என்பதையும் மற்றும். குறிப்பாக யாராவது ஒரு தரப்பை “தண்டனை தருவோம்” எனும் வகையில் அச்சுறுத்தினால் மட்டுமே குற்றமாகும். உலகத்தமிழர் இயக்கம் என்பது (தமிழீழச் சங்கத்தையும் சட்டப்படி தன்னகத்தே கொண்டயங்குவது) கனடியச் சட்டப்படி கனடியத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவது மட்டுமே. (மற்றும் படி உலகில் இயங்கும் எந்த பயங்கரவாத மற்றும் விடுதலை அமைப்புக்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்பது கனடிய சட்;டப்படி ஏற்றுக்கொள்ளப் பட்டது. பல தமிழர்களே தொடர்பு படுத்திக்காட்ட முற்பட்டு தோல்வி அடைந்துள்ளனர்) ஆகவே தமிழர்களிடையே நடைபெறும் சட்டவிரோத செயல்களை உலகத் தமிழரிடம் (தமிழர் பிரதிநிதிகளிடம்) தெரிவித்தால் அவர்கள் சட்ட மற்றும் காவல் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு உரியநடவடிக்கை எடுப்பார்கள்.

  அனாமதேய தொலைப்படிகளை மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அனுப்பல். மற்றும் கணணி வைரஸ் அனுப்பல் சட்டப்படி குற்றமானவை. மற்றும்படி தலமைபற்றிப் பேசுவது கனேடியச் சட்டப்படி ஒரு கொள்கைக்கு ஆதரவாக இருத்தல் என்ற வகையில் சரியானதே.(எ.கா: கெல் ஏஞ்சலுக்கு ஆதரவாக இருப்பது கூடத் தவறில்;லை.) ஆகவே நாம் ஆதரவாக இருந்தால் எதிராக இயங்குபவர்களைப் பற்றி அவர்களை நேரடியாக மிரட்டாமல் (தண்டிப்போமென) தகவல் திரட்டுவது மட்டும் தவறில்லை. அது எங்களைத்தயார்படுத்த மட்டுமே.

  பி.கு: நீங்கள் குறிபிட்ட முழக்கம் பொறுப்பாசிரியர் வானதி அவர்கள் சட்டக்கல்லூரி மாணவியாகும் தகுதி பெற்றவர். இதுவரை காலமும் (10 வருடம் வரை) பலரை நேரடியாக தாக்கி எழுதியும். ஒருவராலும் சட்ட நடவடிக்கையெடுக்க முடியவில்லை. ஏனெனில் வானதி அவர்களின் திட்டமிடலென்று அறிகிறேன்

  பி.கு2: பெயர் என்பது ஒரு மொழி அடையாளம் மட்டுமே. ஆனால் ஆங்கிலேயர் கூட தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் மதம்பரப்பி அதனூடு பெயர் மாற்றம் தான் செய்தார்கள். அடையாளங்கள் அழிக்கப்படுதல் மற்றும் காக்கப்படுதல் என்பன முக்கியமானவையே.

 6. நற்கீரன்
  May 26, 2005 at 5:19 pm

  உங்களை போய் உலகத்தமிழரிடம் முறையிடப்புபோகின்றேன்! 🙂

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: