Home > Uncategorized > பெட்டை அலசல் (2003) -1-

பெட்டை அலசல் (2003) -1-

ஒலியின் அடிப்படையிலும் சரி சுயமதிப்பின் அடிப்படையிலும் சரி பெட்டை என்கிற சொல் மகிழ்ச்சிகரமான சொல் இல்லை: பெட்டை என சொல்லுகிறவரோடு நான் நல்ல உறவைப் பேணியதில்லை- ஒரு குட்டிச் சாத்தனைத் தவிர! ஒரு நாள் இந்த குட்டிச் சாத்தான் “உங்களுக்கு எந்தப் பவர்ர்ர் றேஞ்சர் புடிக்கும்” என ஆரம்பித்தான். அவனது தொடர் அறுவையைக் கேட்க விருப்பமின்றி “blue” என்றேன்.

அவன் மிகவும் அப்சற் ஆகி “இல்ல, அது பெட்டக் கலர் இல்லையே. ஏன் உங்களுக்கு யெல்லோ பவர் றேஞ்சரும் பிங்க் பவர் றேஞ்சரும் பிடிக்காதா” என எதிர்க்கேள்வி கேட்டான்.

“ஏன்டா உனக்குப் பிடிக்குமா”

“சீய்ய்ய்…! அது பெட்டைக் கலர்! எனக்குப் பிடிக்காது”

உடனே நான் அப்சற் ஆகி கையை ஆட்டி ஆட்டி என்ர வயதால உறுக்கினேன்: “டேய் அடி வாங்கப் போற, பெட்டை கலர் எண்டு ஒண்டில்ல, அதென்ன பெட்டை எண்டிறது? நீ இனி பெட்டை எண்டு சொல்லக் கூடாது சரியா, கே(G)ள் (girl) எண்டுதான் சொல்லோணும், விளங்குதா”

“ம்? கே(G)ள் (girl) எண்டா பெட்டைதானே?” என்றொரு பொடிப்புள்ளையற்ற சிரிப்பு வேற…

இப்படி முடிந்த உரையாடலின் பிறகு பெட்டை பற்றிய என் கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்: அது கடுமையானதாக, ‘பொம்பிளைப் பிள்ளை’யைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்றாலும் girl என்கிற ஆங்கில சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லாக (பேச்சு மொழியில்) எனக்கு அதுதான் படுகிறது.



இந்தப் பெட்டைக்குப் பட்டவை என்கிற சுவாரசியமான பத்தியில் எத்தனையோ விசயங்களை எழுத நினைத்தாலும் பெட்டைக்கு என்ன பட்டிருக்கும் என்கிற இன்னும் சுவாரசியமான ஈடுபாட்டில் ஆண்கள் இருப்பர் என்பதால் அதையும் கொஞ்சம் சொல்லிவிடவேண்டும்.

பெட்டைக்கு படக் கூடியது பற்றிய ஒரு ஆணின் உடனடியான ஊகம் ஒரு ஆண் குறி!

இதை எமது ஆண்கள் நினைப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. மேற்கில் பொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் முதல் ஹிற் பாடல்: ஹிற் மீ பேபி வன் மோர் ரைம் (Hit me baby one more time) இன் அர்த்தமே இந்த ரியூப்் லைற் பெட்டைக்கு தெரியவந்து கொஞ்சக் காலம்தான்.

ஹிற் என்கிற ஆங்கில சொல் அடித்தல் என்று மொழிபெயர்க்கப்பட்டால் இந்தப் பாடகி தன் ஆண் நண்பனிடம் கேட்பது தனக்கு இன்னுமொருமுறை அடி என்றுதான்.

உடலுறவு என்பது ஆணின் குறி பெண்ணுக்கு அடிப்பதான ஒரு போர்னோகிராபிக் Vs. ஆணாதிக்க கருத்தோட்டதினடிப்படையில் ஹோலிவூட் தருகிற இந்த வியாபார சினிமா, இசை உலகம், என்பன இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மாதிரி ஊடகங்களால் ஈர்க்கப்பட்டுள்ளவர்கள் இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தம் மரணம் ஆக்கிரமிப்பு பற்றி அறிந்துகொள்ள இயலாதளவுக்கு பாலியல் அவஸ்தையுள் (Sexual tension) மூழ்கியுள்ளார்கள்.

இந்தப் பிரபல பொப் பாடகியின் முதல் ஹிற் பாடலான இது தொடக்கம் மிக சமீபத்தைய ‘நான் உனக்கொரு அடிமையாக இருப்பேன்’ (I am a slave for you) பாடல் வரை, 6, 7 வயது சிறுவர்களும் இவற்றின் இரசிகர்களாய் இருக்கிறார்கள். ஐந்தாறு வயதிலேயே தமது பிருஸ்டங்களை TV celebrities போலவே பின்னே தள்ளி நடக்கத் தொடங்கிவிட்ட இந்தக் குழந்தைகளே 11, 12 வயதுகளில் குழந்தைகளை பெறுகிறார்கள். பதின்ம பருவத்தில் கர்ப்பமாதல் (Teen Pregnancy), சீக்கிரம் முதிர்தல் -உதாரணம் 8 அல்லது பத்து வயதிலேயே மாதவிலக்கு தொடங்குதல்- (Aging Early) போன்றன மேற்கின் இன்றைய பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. குழந்தைகளின் முதிர்ச்சிக்கும் கர்ப்பமாதலுக்கும் ஊக்கிகளாய் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அல்லாதுவிடில், மிக இளவயதிலேயே ஆணுறை மற்றும் பாலியல் பற்றி பாடத்திட்டத்தில் இணைத்துள்ள நாடுகளில் குழந்தைகள் ஏன் குழந்தைகள் பெற வேண்டும்? ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளான சக மாணவன்கள் உடலுறவின்போது ஏன் ஆணுறையைப் போடாமல் பெண்குழந்தைகளே மாத்திரைகள் பாவிக்கிறார்கள், கருச்சிதைவு பல தடவைகள் செய்து உடல் நலத்தைக் கெடுக்கிறார்கள், முடியாதபட்சத்தில் இளவயதிலேயே பிள்ளை பெற்றுக் கொள்கிறார்கள்?

இது இன்றைய தொழில்நுட்ப மற்றும் முன்னேற்றங்களின் பாலான எதிர்மறையான/நிலை நோக்கு அல்ல. எறிக்கா யோங் (Erica jong) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “பதினொரு அல்லது பன்ரெண்டு வயதுக் சிறுமிகள்் (ஆண்களுக்கு) Oral sex செய்வது ஒன்றும் பெண்களின் பாலியல் சுதந்திரம் அல்ல” என்றார். உண்மையில் இக் காலமும் எக் காலமும் போல ஆணுக்குரிய பாலியல் சுதந்திரத்தையே பேசுகிறது.

கொசுறு: அடித்தல் என்பது ஒரு வன்முறை. அதிலும் ஆண்குறியால் அடித்தல் என்பது வன்முறையின் உச்சம்! சமீபத்தில் அளவெட்டி. சிறீசுகந்தராசாவின் கதைத்தொகுப்பொன்று வாசிக்கக் கிடைத்தது. அதில் பெண்ணெனப்படுபவள் என்கிற ஒரு சிறுகதையில் ஒரு கிழவர் தனது காதலிகளை கொட்டிலுக்குத் துாக்கிச் சென்ற தன் இளமைக் காலத்து கதைகளை சிறுவர்களுக்குச் சொல்லுவார், சிறுவர்கள், கொண்டுபோய் என்ன செய்தீர்கள் என கேட்க அவர் சொல்லுவார்: “…பிறகென்ன குத்து குத்தெண்டு குத்தினதுதான்.”

உண்மையில் இப்படி யோசித்துக்கொண்டும் வாசித்துக்கொண்டும் வளர்கிற பெட்டைகளுக்கு இந்த எழுத்துக்களை விட அச்சம் தருவதாய் வேறொன்றும் இருக்க முடியாது.

Categories: Uncategorized
  1. Chandramukhi
    October 12, 2004 at 3:29 am

    As part of fairer-sex, do you have anything to say about GW Bush’s ABC policy?

  2. அன்பு
    October 12, 2004 at 4:55 am

    உங்களின் இந்தப் பதிவில் என்ன சொல்ல முற்படுகிறீர்கள் என்பதை தயவுசெய்து இந்த மரமண்டைக்குப் புரியும் தமிழில் சொல்வீர்களா?

    பெட்டை என்பதைச் கேட்கவே பிடிக்காத நீங்கள் ஏன், பெட்டை என்றே உங்கள் வலைப்பதிவுக்குப் பெயரிட்டிருக்கின்றீர்கள்? நான் பெரும்பாலும் பெண்கோழியை மட்டும்தான் பெட்டைக்கோழி என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்களுக்கே பிடிக்காத ஒரு சொல்வழங்களை ஒரு பதிவுக்கே பெயராக வைத்துக்கொண்டு என்னைப்போன்று பலருக்கும் பெட்டை என்ற சொல்லைப் பொதுப் படுத்துகின்றீர்கள்.

    நான் பெரும்பாலும் ஆங்கிலப்பாடல் கேட்பதில்லை, படங்கள் பார்ப்பதில்லை. அவர்களுடைய கலாச்சாரம், நடை, உடை பிட்ப்பதில்லை. ஆனால் நீங்கள் ஏன் ‘Hit me baby one more time’ என்ற ஒரு கேவலாமான பாட்டை (நீங்கள் கூறிய விளக்கங்களினால்…) விளக்கி இங்கே உங்கள் வலைப்பதிவைப் பாழ்படுத்துகின்றீர்கள்?

    இதன்மூலம் நீங்கள் என்ன சொல்லவிழைக்கிறீர்கள்? கொஞ்சம் சொல்வீர்களா?

    என்றென்றும அன்புடன்,
    அன்பு

  3. Badri
    October 12, 2004 at 6:21 am

    அன்பு: அவர் சொல்வதில் என்ன புரியவில்லை என நினைக்கிறீர்கள்?

    வார்த்தைகளின் பாலியல் வன்முறையைப் பற்றிப் பேசுகிறார். ஆண் பெண்ணுடன் உடலுறவு கொள்வதை ‘hit’, ‘குத்து’ போன்ற சொற்களால் விளக்கும்போதே ஆண் பெண் மீது செலுத்தும் ஆதிக்கமும், வன்முறையும் வெளியாகிறது.

    பிரதியின் கட்டுடைப்பு (deconstruction of the text) பற்றி ழாக் தெரிதா (போன வெள்ளிக்கிழமை செத்துப்போய் விட்டார்) என்னும் தத்துவ வாதி நிறையப் பேசியுள்ளார்.

  4. ஒரு பொடிச்சி
    October 12, 2004 at 8:36 pm

    அன்பு: நான் பெரிதாய் ஒன்றையும் சொல்ல வரவில்லை. பெட்டை என்று பாவிப்பதற்குக் காரணம், எம்மை தாழ்த்தி பாவிக்கிற ஒரு சொல்லையே எதிர்ச்சொல்லாக முன்னிறித்தும் ஒரு தந்திரமாகத்தான். தலித்துகள், கறுப்பர்கள் போல. இப்போது அறிவுமட்டத்தில் எந்தச் சாதிப் பேரும் “இழிவு” இல்லை – அது சொல்கிறவர்க்கெதிரான ஆயுதம். அதேபோல பெண்குறித்த எல்லா இழிசொல்களும் மாற்றப்படணும். பெட்டை உண்மையில் ஒரு நல்ல வார்த்தைதான்…
    மற்றப்படி கலாசாரம் தொடர்பான உங்களது கருத்துக்கள் உங்களுடையவை, எனக்கு உடன்பாடில்லை. பிரிட்னி ஸ்பியர்ஸ் வந்ததற்குக் காரணம் மேற்கிலேயேஇப்படி ஒரு கண்ணோக்குத்தான் உள்ளது, பிறகு நாம் நம்மிடையே மட்டும்தான் என சொல்வதில் (தாக்குவதில்) ஒரு அர்த்தம் இல்லை என்பதாற்தான். பொதுவாக அதிகாரம் ‘உலகப் பொதுமறை’ 😉
    அதுபற்றிய எனது (உங்களுக்கப் பிடிக்காவிட்டால் “தனிப்பட்ட” என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்) கருத்துக்கள் இவை. அதனாற்தானே முதலே இது எனக்கொரு ‘வசதி’ என எழுதினேன்.

  5. அன்பு
    October 15, 2004 at 6:30 am

    உங்கள் விளக்கத்துக்கு நன்றி. உங்களுடைய பதிவுகளை இப்போது தொடர்ந்து படித்து வருகிறேன், மேலே தொடருங்கள், வாழ்த்துக்கள்.

    இது தொடர்பாக நண்பர் பத்ரியும், நானும் பரிமாறிக்கொண்ட கருத்துக்கள் (அது தனிப்பட்டமுறையிலமைந்தாலும், தனிப்பட்டவிஷயமில்லை என்பதாலும், உங்களுடைய மின்ஞ்சல் இல்லாததாலும் இங்கே உங்கள் பார்வைக்கு: (பத்ரியும் இதை தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில்:)

    அன்பு டு பத்ரி:
    ————–

    பத்ரி உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ஒருவேளை சொல்லவரும் கருத்து தத்துவார்த்தமாக இருப்பதால் புரியவில்லை என நினைக்கின்றேன்.

    அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ‘hit’ என்ற சொல்லைப்பயன்படுத்திப் பாடியிருக்கும் பாடலே பெண்ணொருவர் அவரே விரும்பிப்ப பாடியததுதானே(எழுதியதும் அவரா!?)… அது எப்படி “ஆண் பெண் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும், வன்முறையையும்
    வெளிப்படுத்துவதாக” சொல்கின்றீர்கள்.

    நன்றியுடன்,
    அன்பு

    பத்ரி டு அன்பு:
    ————–
    ஒரு பெண் விரும்பிப் பாடியிருக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்? நுகர்வுக் கலாச்சாரத்தில் நுகர்வோருக்குப் பிடித்தமானதை விற்றால்தான் வாங்குவார்கள் என்பதனால் ஒரு பெண் அப்படிப் பாடுவதும், அதேபோல காசுக்காக
    (வயிற்றுப் பிழைப்பிற்காக) பெண் தன் உடலை ஆண்களுக்கு விற்பதும் – ஆணாதிக்கச் சமுதாயத்தின் நிகழ்வுகளே.

    பெண் தன் உடலை – மொழியாலும், நேரடியாகவும் – விற்குமாறு செய்வது ஆண் மையச் சமுதாயத்தின் கூறுகளில் ஒன்று.

    பெட்டை வலைப்பதிவு தமிழ் வலைப்பதிவுகளில் முக்கியமான பதிவு. அதனால் முடிந்தவரை கூர்மையாகப் படிக்க முனையுங்கள். அவசர, ஆத்திரப் படாமல் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். அவர் எழுதியுள்ள பிற கட்டுரைகளையும் படியுங்கள்.

    –பத்ரி

    அன்பு டு பத்ரி:
    ————–
    பெரியவங்க சொன்னா பெருமாள் சொல்ற மாதிரி…
    சரி தலைவா, தொடர்ந்து கேள்வியேதும் கேட்காமல் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

    அறிவுறுத்தலுக்கு நன்றி, தவறேதுமிருந்தால் மன்னிக்கவும்.

    என்றென்றும் அன்புடன்,
    அன்பு

  6. ஒரு பொடிச்சி
    October 16, 2004 at 1:16 am

    இருவருக்கும் நன்றி. என்னுடையதைக் கேள் என நான் பிரச்சாரம் செய்ய முடியாது. அதற்கு வேறு வழிகள்தான் பார்க்கவேண்டும், செயற்பாடுகள் சாத்தியமான இடம். தற்போது நான் ஒரு மாணவி – அரசியல், பெண்ணியம் எல்லாவற்றிலும் மனிதர்கள்சார் நிலைப்பாடுகளை தேடுபவள். எனக்கு சரியென்ற படுகிற ஒன்றுக்கெதிராக நடக்க முடியாது. அதேநேரம் ஒரு தவறான விடயத்தை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்த சங்கோயமுமில்லை. அதனால் உங்களுடைய கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன். தொடர்ந்து கருத்துக்கள் ஊடே பேசலாம். உங்கள் பதிவுக்கு நன்றி!

  7. ilakkiyam
    November 22, 2004 at 10:12 pm

    பெட்டை என்பது பொதுவாக ஈழத்தில் தான் பசைடள ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, (அங்கிருந்து புலம் பெயர்ந்தவர்களிடமும்).
    பெடியன் என்ற சொல்லை யாரும் கேவலமானதாகவோ தரக்குறைவானதாகவோ நினைப்பதி;ல்லை. அப்படியிருக்க அதனது நேரடி எதிர்ப்பாற் சொல்லான பெட்டையை மட்டும் ஏனப்படி நினைக்க வேண்டு;ம்?
    பொடிச்சி சொன்னது போல் எதிர்சொல்லாய்ப் பாவிப்பது (பெருமையாகவே கருதுவது) வரவேற்கத்தக்கது தான். இது ஒரு கலகம் தான். எப்போது தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் தனது சாதிக்காகப் பெருமைப்படுகிறானோ (தான் இன்ன சாதியென பெருமையாகச் சொல்ல முடிகிறதோ) அன்றுதான் சாதிப்பாகுபாடு ஒழியும் (பெரியார் சொன்னது) என்பது போல் தான் இக்கலக வழிமுறையும். முலைக்கவிதைகள் கூட இவ்வழியைச் சார்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில் ஆணாதிக்கத்தை நிறையவே கோபமடையவும் உசுப்பேற்றவும் செய்துள்ளது. தமக்குரிய இச்சைப் பொருளை, தாம் மட்டுமே அனுபவிக்கும் அங்கத்தை (எழுத்திலும் கூட) எப்படி பெண்கள் கையாளலாம் அல்லது அதைப்பற்றி எழுதலாம்? என்பதே அவர்கள் பிரச்சினை. மேலும் ஒரு போகப் பொருளாய் மட்டுமே கருதி, எழுதி வந்த ஒன்றை, ஒரு கலக வடிவமாய். போராட்டக் கருவியாய்ப் பயன்படுத்தியது மட்டுமில்லாமல், அவர்களது கற்பனை விம்பத்தைச் சிதைத்ததுமே அவர்களின் ஆத்திரத்திற்கான காரணம். அக்கவிதையைக்கூட ஆண்களின் இச்சை வடிவமாய்த் தந்திருந்தால், ஒருவேளை பாரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் (பெட்டையொருத்தியே அப்படி எழுதினால்). இவ்வளவு துணிவாய் எழுதும் பொடிச்சிக்கு வாழ்த்துக்கள்.

  8. ஒரு பொடிச்சி
    November 23, 2004 at 8:59 am

    முலைக்கவிதைகள் கூட இவ்வழியைச் சார்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில் ஆணாதிக்கத்தை நிறையவே கோபமடையவும் உசுப்பேற்றவும் செய்துள்ளது. தமக்குரிய இச்சைப் பொருளை, தாம் மட்டுமே அனுபவிக்கும் அங்கத்தை (எழுத்திலும் கூட) எப்படி பெண்கள் கையாளலாம் அல்லது அதைப்பற்றி எழுதலாம்? என்பதே அவர்கள் பிரச்சினை. மேலும் ஒரு போகப் பொருளாய் மட்டுமே கருதி, எழுதி வந்த ஒன்றை, ஒரு கலக வடிவமாய். போராட்டக் கருவியாய்ப் பயன்படுத்தியது மட்டுமில்லாமல், அவர்களது கற்பனை விம்பத்தைச் சிதைத்ததுமே அவர்களின் ஆத்திரத்திற்கான காரணம். அக்கவிதையைக்கூட ஆண்களின் இச்சை வடிவமாய்த் தந்திருந்தால், ஒருவேளை பாரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் (பெட்டையொருத்தியே அப்படி எழுதினால்).
    -Elakkiyam

    உண்மை. மிகச் சாதாரணமான தொகுப்ப அது. அதற்கு வந்த விமர்சனங்களை பார்க்கும்போதே எவ்வளவு இறுக்கமாக வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. ‘உயிர்மை’ இதழில் நாஞ்சில் நாடன் அருமையான ஒரு கட்டுரை எழுதியிருந்தார் “முலைகள்’ பற்றித்தான். அடுத்த இதழில் வாசகர் கடிதம் வருகிறது: “ஐயோ, ஐயகோ, இப்படி ஒரு கட்டுரையை ஏன் பிரசுரித்தீர்கள், நாஞ்சில் நாடனுக்கு என்ன நடந்தது?’ என்ற ரேஞ்சில!
    இப்படித்தான் இருக்கிறது.

  9. aathi
    December 11, 2004 at 6:36 pm

    பெட்டை என்ற சொல் இலங்கையைப்பொறுத்த மட்டில் பெரிதாக மதிப்பு கொண்ட சொல் இல்லை. எனது அக்காவுடன் நிறையப்பெட்டையள் படித்ததார்கள் அவர்கள் வீட்டிற்கு வந்தா அக்கா உன்னட்டை அந்த கோண்டாவில் பெட்டை வந்திருக்கு என்று சொல்வது வழக்கம். அம்மா கூட அந்தப்பெட்டை யாரோடை துணையும் இல்லாம படிக்குது எனக்கு என்ன என்று அக்காவை படிக்காததற்கு பேசுவா. இது அங்கு சகஜம். இந்தியாவில் பெட்டை என்று ஆண்களைத்தான் திட்டுகிறார்கள். எதுவும் செய்த்தொியாத ஒரு ஆணை பெட்டை என்று திட்டுவார்கள். அதற்காக ஆண்கள் தான் கோபப்படவேண்டும்.

  10. ஒரு பொடிச்சி
    December 14, 2004 at 12:29 am

    🙂
    ஆண்கள்தான் கோபப்படவேண்டும், படலாம்!
    அதுகூட ஆணாதிக்கந்தானே ஆதிபன் சிவா! 😦
    பெட்டை என்று சொல்வது ஒரு ஆணை ஏன் கேவலப்படுத்தவேண்டும்?

  11. லிவிங் ஸ்மைல்
    June 21, 2006 at 7:55 am

    மக்களே, பெட்டை என்பது இலக்கியத்தில் வழங்கும் பேதை, மடந்தை, மங்கை வகையறாக்களைப் போல பேச்சு நடையில் பெண் இனத்தைக் குறிக்கும் ஒரு தட்டையான சொல் மட்டுமே… தட்டையாக மட்டுமே இருந்திருந்தால் இங்கே விவாதத்திற்கு அவசியமில்லாதிருந்திருக்கும். ஆனால், பெண்ணை material ஆக பார்க்கும் ஆண் உலகம், பெண்ணை கேலிப் பொருளாகப் பார்க்கப் பழகிய பின்.. மேற்கொண்டு கேலி செய்வதற்கும் பெண்ணையே உபயோகப்படுத்தும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி(?!)யை அடைந்து விட்டான்.

    கண்ணெதிரே உள்ள பொருளை அடையாளம் காணதவனை – கண் தெரியாத கபோதி என்று நையாண்டி செய்வதைப் போல … சக ஆணின் ஆண்மையை கேள்வியாக்குகிற இடத்தில் பெட்டை / பொட்டை என்ற சொல்லாடலை பயன்படுத்துகின்றனர்..

    இந்த வரிசையில் தான் எங்களை (உங்கள் அலிகளை)யும் தொடர்ந்து இழிவு படுத்தி வருகின்றனர்..

    தங்களையும் ஆணாதிக்கத்தின் வாரிசுகளாக தக்கவைத்துக் கொள்கின்றனர்…

    நிற்க…

    aathi said // எதுவும் செய்த்தரியாத ஒரு ஆணை பெட்டை என்று திட்டுவார்கள். அதற்காக ஆண்கள் தான் கோபப்படவேண்டும். //

    சரி… அப்ப பெட்டை/பொட்டப் பிள்ளைகளுக்கு எதும் செய்யத் தெரியாதா?.. (அல்லது) எதும் செய்யத் தெரியாதவர்களா பெட்டைகளும் பேடிகளும்…?!

    ******

    நியாமப் பார்த்த இந்த கலகத்தை நான் செய்திருக்கனும்., இருந்தாலும் கலந்து கொள்கிறேன்…

    பொடிச்சிக்கு என் வாழ்த்துக்கள்…

  1. No trackbacks yet.

Leave a reply to அன்பு Cancel reply