Archive

Archive for the ‘பகடி’ Category

என்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!

April 30, 2007 1 comment

dali
ன்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!
ஏதாவது… ஒரு குறிப்பு, பட்டியலிடல்,
முன்னுரை, முக உரை, மதிப்புரை
இங்ஙனம் ஏதேனும்… ஏதாவது.

வளரும் எழுத்தாளர், வளர்ந்து விட்டவர்
வளர்ந்து கொண்டு வருபவர்
முக்கியமானவர்,
இப்படி ஏதாவது

குறிப்பெழுத சிரமமெனில்
நானே எழுதித் தருகிறேன்
பேட்டிக் கேள்விகளும் பதில்களும்
நானே தயாரித்து வழங்குவேன்
நீங்கள் எழுதுகிறபோதெல்லாம்
மகிழ்ந்து கொண்டிருப்பேன்,
இன்னும் நான் field இலே இருக்கிறேன் என!

என்னைப் போற்றி எழுதாத பேராசிரியர்கள்
பேராசிரியர்களே அல்ல.
என்னை ஏற்றி எழுதுபவர்களோ
எல்லாவற்றுக்கும் மேலே.

நான் அவர்களைக் காவித் திரிவேன்
தரப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
நானும் அவர்களைக் குறிப்பிடுவேன்,
பட்டியலிடுவேன்..
யாரோ எனக்கு குருவாவதும்
எனக்கு யாரோ சிஷ்யன் ஆவதும்
என் பாதிப்பில் பலரும் உலவுவதும்
என்றென்றும் என் இருப்பை
நிலைக்கும். ஆதலால்
எழுதுங்கள். தயவுசெய்து எழுதுங்கள்.
ஏதாவது… என்னைப் பற்றி.

(2003)
எழுதியவர்: ஆப்ஸ்ரஸ்க்கா ;-)
குறிப்பு:
வலைப்பதிய ஆரம்பித்தபோது அரைகுறையாய்ப் பதிந்த –இன்னும் முழுமையாய் வலையேற்றப்படாத– “கண்ணன்கள் – கவிஞன்கள் – நித்திய காதலன்கள்” விமர்சனத்தின் ஒரு பகுதியின் தேவை கருதி எழுதப்பட்டது இந்த “மாதிரி”க் கவிதை. போராளிக் கவிஞர் வானதி எழுதிய “எழுது நான் எழுதாது போகும் கவிதையை” என்பதான வரிகளை ‘மாதிரி’யாய் வைத்து எழுதப்பட்டது. இந்த வலைப்பதிவிலிருந்து தற்காலிகமாக நீங்கிப் போகுமுன், எங்கள் காலத்தில் -field இலே இருக்கிற – அத்தனை குருக்களிற்கும் அவர்தம் சிஷ்யன்களிற்கும் இதனை சமர்பிக்கிறேன். தொடர்ந்தும் ‘எழுதுங்கள்.’
Image: “Dali Atomicus” by Philippe Halsman

Follow

Get every new post delivered to your Inbox.