**நன்றி நண்பர்களே….
இந்தத் தமிழ்மண நட்சத்திர வாரத்திற்காக சிலதை எழுதலாம் என யோசித்திருந்தேன். “மகிழ்ச்சியான” எதையும் எழுதவில்லை என்பது தவிர, எழுதியது வரை திருப்தியாவே இருக்கிறது.ஒரு புத்தாண்டையே உலகின் மிகக் கேவலமான, காட்டுமிராண்டித்தனமான தண்டனை முறைமையான மரண தண்டனை ஒன்றுடன் ஆரம்பித்து வைத்திருக்கிறது உலகை ஆள்கிற ஜனநாயகம். சாதாரணமான மனிதர்களாக நாம், உலகத்தில் நடக்கின்ற எல்லா மனித அழிவுகள் குறித்தும் வருத்தங்களை உணர்கிறோம்; அவை ஆத்திரத்தையும் இயலாமையையும் தருகின்றன. என்றபோது என்னுடன் தொடர்புடையதான ஒரு நிலத்தின் தொடர்ச்சியான இழப்புகளும் துயரமும் ஏதோ ஒரு வகையில் இன்னும் நெருக்கமாய் அதிரவே செய்கின்றன.
இந்தப் பதிவுகள் “போர்”-இன் இன்னொரு பக்கத்தைப் பற்றி பேச முயல்கின்றன. வேறு கருத்துக்கள் உண்டுதானாயினும், யுத்தத்தின் மற்றைய பக்கங்களும் அதன் வலிகளும் பேசப்பட வேண்டியவை என்று நான் நம்புகிறேன்.. கடந்த இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக அதன் சுமைகள் உள்ளன. இது குறித்து வேறும் சந்தர்ப்பங்களில் தொடரலாம், பேசலாம்.
இந்த நட்சத்திர வாரம் இருந்திராவிட்டால் “போர்” சிறுகதையை இப்போதைக்கு மொழிபெயர்த்திருக்க முடியாது – தமிழ்மணத்திற்கும், தமிழ்மண – நட்சத்திர மேலாண்மையாளரிற்கும்….
இந்த பதிவுகளைப் படித்த, படிக்காத, படிக்க முயன்றும் “விளங்கவில்லை” என்ற எல்லோருக்கும் நன்றிகளும் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்களும்…
விடைபெறுவதற்கு முன்னர், ஈழத்தில், யுத்த புலத்தில் வாழ நேருகிற பெற்றோரை இழந்த சிறுவர்கள் குறித்த பதிவை குறிப்பிட விரும்புகிறேன். தமது அன்றாட வாழ்விற்கான போதிய நிதியுதவி பெறாத சிறுவர் இல்லங்களில் வசிக்கிற இந்தப் பிள்ளைகளிற்கு உங்களில் உதவ இயலுமானவர்கள் உதவலாம்!
குறிப்பிட்ட பதிவிற்கான சுட்டி: பிள்ளைகள்… பிள்ளைகள்…
மீண்டும் வேறும் உரையாடல்களில் சந்திக்கலாம். எல்லோருக்கும் நன்றி நண்பர்களே!


comments