வலை
தனது வாழ்க்கையை
எச்சிலாற் பின்னிக் கொண்டிக்கிறது சிலந்தி.
அது, கரைந்தழியும் ஒவ்வொரு பொழுதிலும்
தனது இரைகளுக்காகக் காத்திருக்கிறது.
சிலந்தியின் எச்சிற் கனவுகளில்
பூச்சிகளின் வண்ண வண்ணக் கனவுகள்
படபடக்கின்றன.
நீளமானதும் பேரச்சமூட்டக்கூடியதுமான
சிலந்தியின் கால்கள்
எச்சில் அடுக்குகளில் நீள்கின்றன
ஒரு ஆக்கிரமிப்பாளனின் கால்களைப் போல.
நாறிமணக்கும் சிலந்தியின் எச்சிலில்
உயிரற்றும் தலைகீழாகவும் தொங்குகின்றன
பூச்சிகள்
சிலந்தி பின்னிய கனவுகளில்
கருமையும் சாபமும் சூழ்கிறது:
கண்ணீரும் வேதனையும் துலங்குகிறது.
குழைந்துபோன அதன் சித்திரங்களை அழகுபடுத்த
எச்சிற் கனவுகளை வலிந்து வலிந்து சுரக்கிறது
சிலந்தி.
எச்சில் பின்னிய அதன் வாழ்க்கை
ஒளிமங்கி
தேவதைகள் சபித்துப்போன
நந்தவனமாயிருந்தது.
அழகும் இளமையும் ஒளிரும்
பூச்சிகளின் இறக்கைகள்
சிலந்தியின் கருமை மண்டிய வலையிலிருந்து
எப்போது காணாமற் போயின
09.10.98
எஸ்போஸ்
நன்றி: யுகம் மாறும் (தொகுப்பு 1999)
=
Chandrabose Suthakar (Esbose) was shot dead in Vavuniya last night. Radio reports have confirmed the death.
-நண்பரின் கடிதம்
ஏப்ரல் 17.2007


comments