என்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!

என்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!
ஏதாவது… ஒரு குறிப்பு, பட்டியலிடல்,
முன்னுரை, முக உரை, மதிப்புரை
இங்ஙனம் ஏதேனும்… ஏதாவது.
வளரும் எழுத்தாளர், வளர்ந்து விட்டவர்
வளர்ந்து கொண்டு வருபவர்
முக்கியமானவர்,
இப்படி ஏதாவது
குறிப்பெழுத சிரமமெனில்
நானே எழுதித் தருகிறேன்
பேட்டிக் கேள்விகளும் பதில்களும்
நானே தயாரித்து வழங்குவேன்
நீங்கள் எழுதுகிறபோதெல்லாம்
மகிழ்ந்து கொண்டிருப்பேன்,
இன்னும் நான் field இலே இருக்கிறேன் என!
என்னைப் போற்றி எழுதாத பேராசிரியர்கள்
பேராசிரியர்களே அல்ல.
என்னை ஏற்றி எழுதுபவர்களோ
எல்லாவற்றுக்கும் மேலே.
நான் அவர்களைக் காவித் திரிவேன்
தரப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
நானும் அவர்களைக் குறிப்பிடுவேன்,
பட்டியலிடுவேன்..
யாரோ எனக்கு குருவாவதும்
எனக்கு யாரோ சிஷ்யன் ஆவதும்
என் பாதிப்பில் பலரும் உலவுவதும்
என்றென்றும் என் இருப்பை
நிலைக்கும். ஆதலால்
எழுதுங்கள். தயவுசெய்து எழுதுங்கள்.
ஏதாவது… என்னைப் பற்றி.
(2003)
எழுதியவர்: ஆப்ஸ்ரஸ்க்கா ![]()
குறிப்பு:
வலைப்பதிய ஆரம்பித்தபோது அரைகுறையாய்ப் பதிந்த –இன்னும் முழுமையாய் வலையேற்றப்படாத– “கண்ணன்கள் – கவிஞன்கள் – நித்திய காதலன்கள்” விமர்சனத்தின் ஒரு பகுதியின் தேவை கருதி எழுதப்பட்டது இந்த “மாதிரி”க் கவிதை. போராளிக் கவிஞர் வானதி எழுதிய “எழுது நான் எழுதாது போகும் கவிதையை” என்பதான வரிகளை ‘மாதிரி’யாய் வைத்து எழுதப்பட்டது. இந்த வலைப்பதிவிலிருந்து தற்காலிகமாக நீங்கிப் போகுமுன், எங்கள் காலத்தில் -field இலே இருக்கிற – அத்தனை குருக்களிற்கும் அவர்தம் சிஷ்யன்களிற்கும் இதனை சமர்பிக்கிறேன். தொடர்ந்தும் ‘எழுதுங்கள்.’
Image: “Dali Atomicus” by Philippe Halsman


5 Responses to “என்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்!”
1. Oorodi Bage Says:
June 17th, 2007 at 2:35 am
இதனை ஏன் நகைச்சுவை நையாண்டிக்குள் சேர்த்திருக்கின்றீர்கள். நிச்சயமாக இதற்கான இடம் இதுவல்ல
2. ஒரு பொடிச்சி Says:
August 26th, 2007 at 11:13 am
நன்றி பகீ!

நகைச்சுவை நையாண்டி ஒன்றும் மோசமான விசயம் இல்ல என்றதால் அதிற் சேர்த்தேன்.
நகைச்சுவையாய் “சீரியஸான’ விசயத்தச் சொல்லலாம் தானே…
வருகைக்கு நன்றி!
3. மஞ்சூர் ராசா Says:
August 26th, 2007 at 12:32 pm
மிகவும் அழுத்தமான ஒரு விசயத்தை நகைச்சுவைக்குள் போட்டிருக்கிறீர்கள்.
ஆனால் இது நகைச்சுவைக்கு அப்பாற்பட்டது
4. வசந்தன் Says:
August 26th, 2007 at 6:59 pm
சரி.
நீங்கள் சொன்னபடியால் இனி எழுதிறம்.
//நகைச்சுவையாய் “சீரியஸான’ விசயத்தச் சொல்லலாம் தானே…//
அது!!!!
5. ஒரு பொடிச்சி Says:
September 2nd, 2007 at 12:32 pm
நன்றி மஞ்சூர் ராசா,
வசந்தன்:
4 மாசமா ஆளக் காணேல்ல, என்ன ஏதெண்டு தேடிக் கீடி எழுதுவம் எண்டில்ல (எழுதச் சொல்லி போட்டிட்டு வேற போயிருக்கிறன்). பறையாம இருந்திற்று, பிறகு இப்ப வந்து ‘இனி’ எழுதிறமா?
இதுதானே வேணாமெண்டிறது…